நாகமணி (சிறுகதை)
திண்ணையில் கிடந்திருந்த நல்லதம்பி கண்விழித்தான். கிழக்கு மூலையில் இருட்டு மங்கத் துவங்கியிருந்தது, மறைப்புத் தட்டி மேலாகத் தெரிந்தது. வீட்டுக்குள் சென்று பயணத்தில் கொண்டுசெல்லும் மருந்துப் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். சங்கமத்தில் கலைந்த கோலத்துடன், இன்னும் உடம்பலுப்புத் தீராதவளாய் திண்ணையிலே சாரல் கிடந்திருந்தாள். அவளை அருட்டி தான் புறப்படுவதைச் சொல்லிக்கொண்டு முற்றத்தில் இறங்கினான். பின்னால் சாரலின் குரல் எழுந்தது. ‘இனி எப்ப? ரண்டு மாசம் கழிச்சா, நாலு மாசம் கழிச்சா?’ அவன் திரும்பி இருட்டில் அவள் வெளிர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். ‘இடைத்தூரம் பெரிசில்லை; நடைத்தூரந்தான். அங்க மினக்கெடுறது ரண்டாளுக்கு வைத்தியம் பாத்தா நாலு காசு கிடைக்குமெண்டுதான.’ ‘வேறயொண்டுக்குமில்லையே?’ அவளுக்கு அவனது முதல் சம்சாரம்பற்றித் தெரியும். அவன் அவளது காதோரம் வளைந்து இன்னும் லேசாய்க் கூந்தலில் இழைந்த பயறு வெந்தயம் எலுமிச்சைகளின் வாசத்தை முகர்ந்தபடி, ‘கெதியில வருவ’னென்றுவிட்டு நடக்கத் துவங்கினான். அந்த நேரத்துக்கு அங்கிருந்து புறப்பட்டால்தான் தொட்டம் தொட்டமாய் இருக்கும் க...