சாம்பரில் திரண்ட சொற்கள் 7

 


7

பாட்டியின் கடந்துபோன காலத்தோடு பொருத்திப்பார்க்கையில் அவளை அதிகமும் அணுக மறுத்திருந்த முதுமை, அவள் சந்தை வியாபாரம் தொடங்கிய பின்னால் அவளில் ஆண்டுக்கு இரண்டிரண்டு வயதாக ஏறிக்கொண்டதுபோல் தென்பட்டது. அதனால் செம்பவளமாக இருந்தவள் விரைவிலேயே எவருக்கும் பவளமக்கா ஆகிப்போனாள். குழந்தை பிறக்காத உடம்பில் இளமை வலிமையாய்த் திரண்டதே தவிர மதர்ப்பாய் வீறுகொள்ளவில்லை. அது விரும்பத் தகுந்த ஓர் அற்புதத்தை அந்த உடம்பில் நிகழ்த்தியிருந்தது.

நடனசுந்தரம் அப்போது பிறந்தேயிருக்கவில்லை. அக் கதையெல்லாம் உறவினர் பேச்சுக்களில் அவனுக்கு அவதானமாகியிருந்தன. கொடிகாமம் சந்தையில் வியாபாரம் அவளைக் கைவிடாவிட்டாலும், வடமராட்சிக் காய்கறிகள் சாவகச்சேரிச் சந்தையில்தான் கியாதியாக விலைபோகின.

பருத்தித்துறை - சாவகச்சேரி முதல் பஸ்ஸில் சந்தைக்கு வந்து ஐந்தரை மணி கடைசி பஸ்ஸில் வீடு செல்வதை மூன்று சந்தைககளில் செய்தால்போதும், அவளுக்கென்று நாலு காசு கையிலேயிருக்க பலனுண்டாகிவிடும். பவளமக்காவாக வியாபாரத்தைத் தொடர்ந்தவள், பவளமாச்சியாகிய காலத்தில் அதையும் நிறுத்திக்கொண்டாள். யாருக்காக அவள் அதற்குமேல் பிரயாசைப்பட? அவளுக்கிருந்தது ஒரு வாய். அவளுக்கிருந்தது வாரப்பாடான ஒரு பேரன் நடனம். அவனும் ஆசிரிய பயிற்சி முடித்து ஒரு காலத்தில் அமெரிக்க மிஷன் பள்ளியாகயிருந்த நல்லவொரு கல்லூரியிலே பணியிலும் சேர்ந்துகொண்டான். தன் தோட்டத்திலே வெய்யில் எழும்வரையில் காலை இரண்டு மணிநேரமும், வெய்யில் சாய்கையில் இரண்டு மணி நேரமும் உழைத்ததில் தன் வயித்துப்பாட்டைப் பார்க்க அவளுக்குப் போதுமென்று ஆகிப்போனது.

அவளது உழைப்பில்தான் நடனசுந்தரமும் தன் ஆசிரிய பயிற்சியையும், கலா விழைச்சலையும், ஓவியக் கண்காட்சிகளுக்கான கொழும்புப் பயணங்களையும், அவ்வப்போதான நண்பர் குழாத்திடை நடந்த கோப்பாய் தென்னந் தோட்டக் குடில் புறாசலையும் சிரமமின்றிச் செய்யமுடிந்தான்.

ஒருபோது அவனது மது பாவனை கை நடுக்கமெழுவளவு நரம்புத் தளர்ச்சியாகியபோதும், அவனைத் திட்டினாலும் அவனது சமாதானத்தில் பிறகு அடங்கிக்கொண்டு செலவுக்குப் பணம்கொடுத்தவள் பவளமாச்சிதான்.

எல்லாம் ஞாபகமிருந்தும், தன் வாழ்வின் தற்போதைய அலைக்கழிப்புக்கு பாட்டியின் அசிரத்தையும் ஒரு காரணமென எண்ணி அவன் அவள்மீது மனக்கசப்பு அடைந்துகொண்டமை பொருத்தமாகப் படவில்லை. அவளை அல்லது எவரையும் அவன் எண்ணுவதன் முன்பாக தன்னைக் கருத்திலெடுத்திருக்க வேண்டும். வெளிப்படையாய்க் கண்ணில்பட்ட எத்தனை தடைகளை அவன் கொஞ்சமும் பொருட்படுத்தாது ஏறிமிதித்துக்கொண்டு அந்த நிலையை வந்தடைந்தான்?

கூடத்து சோபாவில் படுத்து, வழக்கம்போல் சிறிது உறங்கி விழித்த நிலையில் கிடந்தபடி கடந்துசென்ற காலத்தின் சுவடுகளை எண்ணியபடியிருந்த சுந்தரத்திற்கு கண்களில் கண்ணீர் திரண்டது. அவரது ஆச்சி அவரது உடம்புள், நரம்புகளுள் அவரது நலன் கருதியபடி இன்னுமே இருக்கிறாள்.

இளவேனில் கோடையாகி, வெளி வெப்ப வலயமாய் ஆகத் துவங்கியிருந்ததில் இருள் வியாபிக்கும் அந்நேரத்திலும் வியர்வையின் கசிவு அவரது முகத்தில் கண்டிருந்தது.

செந்நதி தன் ஆழ் தடத்துள் ஓடிய சிறுகாட்டுப் பெருமரங்களிலிருந்து குருவிகள் அடைதற்பொழுதில் கிளர்த்திய சத்தம் காதில் விழுந்தது.

கூட, ஒரு நதியிசைத்த மெல்லிய வீணையின் நாதமும் மனம் சிலிர்க்க எழுந்தது.

மிச்சம் மீதிப் பனியெல்லாம் உருகிய நீர் ஓடிச்சென்று செந்நதியுடன் கலந்து விசையெடுத்துப் பாய்கையில், காற்றும் அடங்கியபொழுதுகளில், ஒரு நாதவெள்ளமெழும்பும். அந்த நாத இசைவை கடந்த நள்ளிரவு தாண்டி விழித்த ஒரு பொழுதிலும் தான் கேட்டிருந்ததை அவர் அப்போது ஞாபகமானார்.

அவரது ஊரில் ஆறில்லை. தொண்டமானாறு என்று சற்றுத் தள்ளி ஓர் ஆறு உண்டு. அது ஐதீகத்தில் பரவிப் பாயும் ஆறு. அவர் அதை என்றும் கண்டதில்லை. அதனால் அவரது ஊர் அழகு பாழ்பட்ட ஊராகயிருந்தது. ‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்பது அவரறிந்த பழம்பாடல்.

 

ன்று, வருஷங்கள் பல முந்தி, தொண்டமானாறிலிருந்து  நடனசுந்தரத்தைக் காண வந்திருந்த தவபாலன்தான் அந்தச் செய்தியைக் கொண்டுவந்திருந்தான். பெரிய பாதிப்பெதனையும் செய்திராவிட்டாலும் மனத்திலிருந்து அகல நீண்டநேரம் அது பிடித்தது.

மாலையளவில் ஊர் முழுக்க அச்செய்தி அறிந்தாயிற்றென்று மக்கள் ஆங்காங்கே படலைகளிலும், தெருக்கள் ஒழுங்கைகளிலும், கடை முன்புகளிலும் நின்று பேசியதில் தெரியக்கூடியதாக இருந்தது. ‘வித்துவான்ர மோளின்ர கலியாணம் நிண்டுபோச்சுப்போல.’ அன்று அவரவர் செவிகளுள் ஒலித்த சொற்களாயிருந்தன அவை.

அவளெண்ணமே வேண்டாமென்றுதான் இருந்தான். அதுவாகவே அவனைத் தேடித் தேடி வருவதுபோல ஆகியிருக்கிறது நிலைமை. போன வாரம் பெரியகடை பஸ் நிலையத்தில் சந்தித்தபோது அடுத்த சனி வீடு வாறனென்று தானேயாகச் சொல்லி தவபாலன் அவசரமாய் விலகிச்சென்றான். தான் தேடாமலே அன்று தன்னையடைந்ததாய் தவபாலனது செய்தியை எண்ணினான் அவன்.

முதலில் அவர்களது உறவுக்குள் மயில்வாகனத்தைத்தான் பேசினார்கள். பேச்சிலிருக்கும்போதே அவனுக்கு அது தெரியும். மயில்வாகனத்தின் அக்காவும் தாயாரும் மணப் பொருத்தமில்லையென்று இரண்டாம் யோசனையொன்றுக்கு இடமற்றவிதத்தில் வெட்டொன்று துண்டிரண்டான பதிலைச் சொல்லிவிட்டார்கள். அன்றிலிருந்து அந்நியோன்ய போக்குவரத்துக்கிருந்த வேலிக் கடவையும் அடைபட்டுப் போயிற்று.

மயிலைக் கண்ட ஒருவேளை நடனசுந்தரம் காரணத்தை உசாவத்தான் செய்தான். ‘ஜாதகம் பொருத்தமில்லையாம் எண்டிறா, அக்கா’ என ஒரு முகத் தசைநார் அசைவின்றிக் கூறிவிட்டு அவன் நகர்ந்துவிட்டான்.

மலருக்கு நிச்சயதார்த்தம் நடந்து கல்யாணம் சமீபித்திருந்த ஒருவேளையில் கல்யாணம் தள்ளிப்போடப்பட்டதான ஒரு தகவல் கசிந்தது. மாப்பிள்ளை குடும்பத்தில் ஏற்பட்ட  நெருங்கிய உறவின் மரணத்தால் ஓராண்டு தள்ளி கல்யாணத்தை நடத்த எண்ணியிருந்ததான காரணம் சொல்லப்பட்டது.  

ஏற்கனவே யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த வீணை அரங்கேற்றத்தால் கணிசமான பெயர் இலங்கைச் சங்கீத உலகில் ஏற்பட்டதற்குப் பின்னால், பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் மற்றும் வெள்ளவத்தை ராமகிருஷ்ண மண்டபம்போன்ற இடங்களின் இசைக் கச்சேரிகளுக்கான வாய்ப்புகள் கருதி கொழும்பிலுள்ள ஓர் உறவினர் வீட்டில் அதிகமும் தங்கியிருக்கலானாள் மலர். சுய தொழில் திறமையுடன் தஞ்சாவூர்ப் பிரபல இசைக் கலைஞரின் சிஷ்யையென்ற பீடும் சேர்ந்துகொண்ட அவ் அகங்காரிக்கு காலம் வெகு நேர்த்தியாய்க் கழிந்துகொண்டிருப்பதை நடனசுந்தரமும் அறிந்துகொண்டுதான் இருந்தான்.

ஓவிய விற்பன்னம் அடையும் ஆவேசத்தில் ஓவியர் மாற்கு, சினிமா ஓவியர் மணியம் மற்றும் பணி சார்ந்த ஓவியர்களுடனான தொடர்பில் ‘முது கண்ணன் வேய்ங்குழல்’ போன்ற ஓவிய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கையில்தான் நடனசுந்தரத்திற்கு நரம்புத் தளர்ச்சி நோயின் அறிகுறிகள் வெளித் தெரியவாரம்பித்தன.

‘குடிச்சுக் குடிச்சு இப்பிடி ஆயிட்டியே, நடனம்’ என்று பவளமாச்சி தலையிலடித்து ஒப்பாரி வைத்தாள். வாரத்தில் ஒருநாள் இரண்டு நாள் குடித்ததில் அப்படியொன்றும் ஆகியிருக்காதென்று அவளைத் தணிவித்துவிட்டு குடியையும் நிறுத்திய பின் செய்த ஊர் வைத்தியத்தில், கைகளின் வெளிப்படு நடுக்கம் நீங்கிற்றெனினும், அவனது ஓவிய வேட்கையை முற்றும் முடிவுமாய்க் கொன்றுபோட்டுவிட்டது அந்நோய். தூரிகை நுட்பமாய் ஓவியத் திரையில் மிதக்கவேண்டிய தருணங்களில் அவனது கை விரல்களில் பலஹீனம் ஏற்பட்டது. அவை தூரிகையை உதறிவிட்டு நடுங்கின. ‘போகப் போகச் சரியாகிவிடு’மென்ற நண்பர்களின் நம்பிக்கை அவனுக்கிருக்கவில்லை. அதனால் ஓர் ஓவிய ஆசிரியனாய்மட்டும் தொடரும் முதற் தன் வாழ்வின் முதற் சறுக்கலை அவன் எதிர்கொண்டான். அது அவனை ஓரளவு ஸ்தம்பித நிலையில் நிறுத்தியது. மனமும் உடம்புமே அவன் சோர்ந்தான்..

 

 

காலையில் கலிகைச் சந்திவரை நடந்து சாவகச்சேரி பஸ்ஸெடுத்து கல்லூரி சென்று, மாலையில் பருத்தித்துறை பஸ்ஸெடுத்து வந்து கலிகைச் சந்தியில் இறங்கி வீடு வர நடனசுந்தரத்துக்கு பொழுதுபடுகிற நேரமாகிவிடும்.

ஒரு வெள்ளிக் கிழமை மாலை பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கையில், தேவாலய வாசலில் அவனுடன் பேச விரும்பியவர்போல நின்றுகொண்டிருந்தார் போதகர் எலியாஸ்.

நல விசாரிப்பின் பின்னான உரையாடலில் பேச்சுவாக்கில்போலத்தான் அண்மையில் நடைபெறவிருந்த மலரின் திருமணம் முறிந்துபோனதுபற்றி போதகர் பிரஸ்தாபித்தார்.

அது யாருக்கு நேர்ந்திருந்தாலும் நல்ல சமாச்சாரமில்லை. ஒரு தகவலாய் அறிந்து அனுதாபப்பட முடியுமே தவிர வேறு என்னதான் செய்துவிடல் கூடும்? அதை அவன் சொன்னான்.

அதற்கு போதகர், ‘எண்டாலும் அயல் குடியளான நாங்கள் அதை இன்னும் அணுக்கமான துக்கமாயெல்லோ உணரவேணும்?’ என்றார், அவனது கண்களை தீட்சண்யமாய் உற்று நோக்கியபடி.

போதகர் துக்கத்தைச் சொல்லமட்டும் அங்கே நின்றிருக்கவில்லையென நடனசுந்தரம் தெரிந்தான். அவனது நெற்றி நெரிந்தது.

‘இந்த விஷயத்தைப் பேசுறதுக்காண்டித்தான் நீர் வரக் கண்டு நான் இதில நிண்டது. சுத்தி வளைக்காமல் நேரடியாய் விஷயத்துக்கு வாறனே. இப்ப…. வித்துவான்ர பக்கத்தில உம்மைக் கேட்டாலென்ன எண்டு ஒரு பேச்சிருக்கு…’ என்று இழுத்தார் எலியாஸ். ‘நானும் ஒரு கடமையாய் நினைச்சுத்தான் இதை உம்மோட கதைக்கிறன்.’

நடனசுந்தரம் திகைத்துப்போனான். பின் தெளிந்துகொண்டு, தான்மட்டும் முடிவெடுக்கிற விஷயமல்ல அதுவென்றான். தாய், மூத்த மாமன் சுந்தரலிங்கம், சின்ன மாமா அழகரத்தினம்  மற்றும் நெருங்கிய உறவினர்களுடனும் பேசவேண்டும் என்றான். அந்தஸ்தின் அடி – முடி வித்தியாசம் குறித்து தானுமே அதில் நிறைய யோசிக்கவுண்ம் என்பதையும் மறைக்காமல் வெளிப்படுத்தினான். அதற்கு ஓரிரண்டு வார அவகாசம் வேண்டுமென்றும் கூறி அந்த விஷயத்தை முடித்துக்கொண்டு அவன் வீடு வந்துசேர்ந்தான்.

ஒருநாள் சுந்தரலிங்கம் மாமா உடன்வர வித்துவான் வீரகத்தியின் பிரசன்னம் வாசலில் தயக்கமாக எழுவதை ஒரு மெல்லிய திடுக்காட்டத்துடன் கண்டான் நடனசுந்தரம்.

இரண்டு வாரங்கள் காத்திருந்து போதகரின் போதகத்தில் விளைவேதும் அற்றுப்போக, களத்தில் தானிறங்காமல் எதுவும் ஆகாதென எண்ணி, துணைக்கு சுந்தரலிங்கத்தையும் அவர் இறைப்பு முடிந்து தோட்டத்திலிருந்து வரும்வரை வீட்டில் காத்திருந்து அழைத்துக்கொண்டு  வித்துவான் புறப்பட்டிருந்தார்.

அந்தப் படலை தாண்டி உள்ளே வித்துவான் வீரகத்தி காலடி வைத்ததாய் எந்த ஞாபகமும் நடனசுந்தரத்திற்கு இல்லை. அதனால் மட்டுமே தடிப்புப் பிடித்த மனிதரென்றெல்லாம் அவர்மீது அபாண்டம் சொல்லிவிடமாட்டான். அவனது ஐயாவோடு வழிதெருவில் கண்டவிடத்தில் நின்று பேசாமல் அவர் கடந்துபோனவரில்லை. ஆனாலும் அவரது அந்தத் திடீர் வரவை, இனியொரு தவணைக்கு இடங்கொடாது முடிவை அதுவும் தனக்குச் சாதகமாய் எடுத்துவிடுகிற, முனைப்பாய்க் காண அவன் சிறிது தடுமாறினான்.

கொஞ்சம் வன்முறையின் கூறும் அதிலிருப்பதாய் அவனுக்குப்பட்டது. தான் எச்சரிக்கையாய் நடந்துகொள்ளவேண்டுமென அவனை அது தீர்மானிக்க வைத்தது.

‘வாருங்கோ, ஐயா!’ அவன் மேசைக் கதிரையை எடுத்துவர ஓடினான். ‘வேண்டாம், தம்பி. எல்லாரும் திண்ணையிலிருந்தே பேசுவம்’ என்று மெழுகிய சாணியின் புதுமணத்துடனிருந்த நிலத்தில் அமரப்போனவரை, ‘ஐயா, பொறுங்கோ’ எனத் தடுத்தபடி பன்பாயுடன் ஓடிவந்த நடனசுந்தரத்தின் தாய் அதைக் கீழே விரித்துவிட்டாள்.

அண்மைக் காலமாய் நடனசுந்தரத்தைக் காண்கையில், தன்னுள் ஓடும் உள்ளார்ந்த நினைவுகளில் அலைப்புண்டிருந்த வித்துவானுக்கு யோசனையொன்று பிடித்தது. அதையே எண்ணியபடி சில நாட்களைக் கழித்த பின் அவரெடுத்த முடிவு அது. தனது மகளுக்கு ஒரு நல்ல வாழ்வு அமைவதானால் அதை அவளைக் குழந்தை மேனிகொண்டு கண்டிருந்த அவனால் மட்டுமே  முடியுமென்றொரு நம்பிக்கை ஏனோ அவர் மனத்தில் முளைகொண்டுவிட்டது. அவன் இரக்கப்படக்கூடியவன்; காரிய காரணங்களை அலசிப்பார்க்கக் கூடியவன்! அவர் அவனை நம்பினார்.

அவனது தாயாரை நோக்கியபடி சகலதும் விளக்கினார் வித்துவான். அவ்வப்போது வீட்டுக் குந்தோடு சாய்ந்து கிடந்திருந்த பவளமாச்சியையும் அவர் பார்க்கத் தவறவில்லை, அவளது சம்மதமும் அந்த விஷயத்திற்கு அவசியம் என்பதுபோல.

நடனசுந்தரத்தின் தாய் பேசவேண்டிய நேரமது. அவள் தன் மனத்தை அப்போது பேசியேயாகவேண்டும். மரியாதை செலுத்தும் வாத்தியார், மதிப்பளிக்கும் மூத்த சகோதரம் ஆகிய இவர்களுக்கிடையில் தன் கருத்தைச் சாதிக்கும் கடினமான சூழ்நிலையில் அவள் இருந்திருந்தாள். வேண்டாத சிரமங்களாய் அச் சூழலை எண்ணிய கோபத்தில் மகனை நோக்காமலே தன் மனதைச் சொல்லத் துவங்கினாள். ‘எளிய மனிசரையா நாங்கள். எங்களுக்கெல்லாம் உங்களைப்போல பெரிய குடும்பங்களோட சம்பந்தம் வைக்கிற எண்ணம் கனவிலயும் வராது.’

நடனசுந்தரத்தினது தாயாரின் பணிவானதானாலும் தீர்க்கமாயிருந்த குரலில் வித்துவான் அதிர்ந்துபோகாதது, அம்மாதிரியொரு பதிலை அவர் ஓரளவு எதிர்பார்த்திருந்தார் என்பதைக் காட்டியது. அதற்கான எதிர் வலுகொண்ட பதில் அவரிடம் தயாராகயிருந்தது. ‘எண்டாலும், நாங்கள் எண்டைக்கும் கதைவழியோ மனஸ்தாபமோ பட்டுக்கொண்ட மனிசரும் இல்லைத்தான, பாருங்கோ? நல்ல அயலாக்களாய்த்தான இருந்திருக்கிறம்? அந்தஸ்தெண்டு பாத்தாலும், இப்ப தம்பியயுமென்ன வாத்தியாராய்த்தான இருக்கிறார்.’

நடனசுந்தரம் நிமிர்ந்து தாயாரைப் பார்த்தான். இளக அவசியமற்றதாய் இன்னும் அவளது கண்கள் இறுகிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். அவனால் எதுவும் செய்துவிட முடியாது. வித்துவான் அல்லது அவனது மாமனில் யாரோ ஒருவர்தான் அந்தத் தடையுடைத்து சாத்தியப்பாடான ஓர் உரையாடல் வெளியை உருவாக்கவேண்டும்.

அப்போது வித்துவான் செருமினார்; பின் இரண்டு கைகளாலும் முகத்தை அழுத்தித் துடைத்தார். அவ்வேளை தன் கண்களை யாருமறியாமல் தேய்த்துக்கொண்டார். அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்ததா? அவன் திகைத்தான். பாவம், வாத்தியார்!

அவனுக்குள் விழுந்திருந்த விருப்பத்தின் விதை  ஈரம் கண்டதாய் வேர்விடத் தொடங்கிற்று. அதை மேலும் உயிர்ப்புள்ளதாக்கியது அவரது தொடர்ந்த பேச்சு. ‘இனசனமில்லாத ஆக்களில்லை நாங்கள். எண்டாலும் பாதிப்பெண்டு ஒண்டு வந்திட்டா, ஒருத்தரும் ஓடிவந்து கைகுடுக்கப்போறேல்லை. எங்கட படிப்பும் அனுபவமும் அப்பிடித்தான் சொல்லித் தந்திருக்குப் பாருங்கோ. நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும். இந்தா, வாற மாசம் கலியாணமெண்டிருந்த நிலையில அது நிண்டுபோயிருக்கு. அந்தப் பிள்ளையைச் சின்ன வயசிலயிருந்து கண்ட ஆள் நீங்கள். அதுகின்ர போக்கும் வரத்தும் நல்லதும் கெட்டதும் உங்களுக்குத் தெரியாமப் போயிராது. அது சிரிக்கத் தெரியாத பிள்ளை. அது இப்பிடியே அதுகின்ர அழுகையாய் காலம்பூரா ஆகியிடக்குடாது. நல்ல மனிசராய் இருந்தாப் போதுமெண்டு நினைச்சு இப்ப இஞ்ச ஓடிவந்திருக்கிறன். உங்கட  சம்மதம் கிடைச்சா வைச்ச நாளில, வைச்ச இடத்தில கலியாணத்தை நடத்தியிட்டு நானும் மனிசனாய் நாலுபேருக்கு முன்னால நடந்து திரிஞ்சிடுவன். இல்லாட்டி… அந்தப் பிள்ளையின்ர வாழ்க்கை எப்படியோ போய்ச் சீரழியட்டும்; நானும் எப்பிடியோ போய் என்ர வாழ்க்கையை முடிச்சிடுறன்.’

வித்துவானுக்கு முன்னால வெற்றிலைச் செல்லத்தை நகர்த்தி வைத்தார் சுந்தரலிங்கம். வித்துவானின் பேச்சு அவரைமட்டுமல்ல, மற்ற இருவரையும்கூட அசைத்துவிட்;டிருந்தது தெரிந்தது. எவ்வளவு ஒரு போந்த பொலிந்த கௌரவமான மனிதர் அவர்! அவரது பேச்சில்  ஒரு சொல் தொண்டைக் குழிக்குள் சிக்குப்பட்டதுபோல் உடைந்து நின்றதே! அதுவொரு முழுச் சரணாகதியன்றி வேறென்ன?

‘வாத்தியார், எப்பிடியிருந்தாலும் நீங்கள் கேட்டோடன ஒரு பதிலை எங்களுக்குச் சொல்லுறது கஷ்ரமெல்லோ? யோசிச்சுப் பாருங்கோ. என்ர தம்பியின்ர மோள் போன மாசம்தான் பெரியபிள்ளையானது. அடுத்த வரியமளவில அவளை நடனத்துக்குச் செய்யலாமெண்ட ஒரு பேச்சும் எங்களுக்க இருக்கு. நாங்கள் யோசிக்க கனக்க இருக்கு, வாத்தியார். அதால திடீரெண்டு ஒரு பதிலைச் சொல்லுறது எங்களுக்கு கஷ்ரமாய்க் கிடக்கும்தான? அதுக்குள்ள நீங்களாயேன் ஒரு முடிவுக்கு வந்து என்னென்னமோ பேசுறியள்?’ என்று சுந்தரலிங்கம் அவர் மனம் தெளியும்படியான நாலு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, ‘இப்ப, நாங்களென்ன வேண்டாமெண்டு சொல்லியிட்டமோ? எங்களுச் சம்மதம்தான்; தங்கச்சியின்ர முடிவைப் பாத்துக்கொண்டிருக்கிறம்’ என்றார். பின், ‘இல்லையே, நடனம்?’ என்று அந்த முடிவில் அவனையும் உள்ளிழுத்துவிடும் மாதிரியில் கேட்டார்.

பின் தங்கையின் பார்வையில் வெடித்த வெறுப்பினைக் காணாதவர்போல் நடித்தவராய், ‘நீ சொல்லு, செல்லம், உன்ர எண்ணம் என்ன? உன்ர முடிவுதான் எங்களுக்கு முக்கியம்’ என்றார்.

இப்போது திகைத்தது அவரது தங்கையாகயிருந்தது.  ஏதொன்றையும் யோசிக்காமல் தன் அண்ணன் அவ்வாறு பேசியதை உள்வாங்கப்பட்ட சிரமத்தில் அது சினமாய் வெடித்தது. தனது உள்ளோடிய எண்ணம், விருப்பமெல்லாம் தெரிந்தும் எவ்வளவு சாதுர்யமாய் அந்தப் பேச்சு அவரில் வெளிப்பட்டிருக்கிறது! அந்நிய மனிதர் ஒருவர் முன்னால் அது பிளக்கமுடியாத வியூகம். அந்த உணர்கையில் அவளுக்கு மேலும் கோபம்தான் சீறியது. அதை அடக்கிக்கொண்டு சொன்னாள்: ‘நீங்கள் தீர்மானிச்சிட்டியள்; பிறகென்ன என்னிட்டக் கேக்கிறது? நீங்களே ஒரு பதிலை வாத்தியாருக்குச் சொல்லி அனுப்புங்கோ. இனி நீங்களாச்சு, நடனமாச்சு.’

நடனத்தின் அம்மா செல்லம்மாவை அவ்வாறு விலகிச்செல்லவிட வீரகத்தி தயாராகயில்லை.  அவரது வியூகம் மேலும் விரிந்தது. ‘என்னயிருந்தாலும்… உங்கட விருப்பம்தான எங்களுக்கு முக்கியம். இப்பிடி பட்டும் படாமலும் சொன்னா…’

‘நடனத்துக்குச் சம்மதமெண்டா எனக்கும் சம்மதம்தான். படிச்ச பிள்ளை, எல்லாம் யோசியாமல் எழுந்தமானத்தில அது முடிவு சொல்லப்போகுதே?’

அப்போது அவள் பெரிய தாயாரை நோக்குவதை நடனசுந்தரம் கண்டான். அவளது இயலாமையை உணர்ந்ததிலோ, அவளது  பதிலை அவள் கண்களினூடாய்ப் பெற்றுக்கொண்டதிலோ அவள் தன் ஆவேசம் மேலுமடங்கித் திரும்பினாள்.

அவள் வெற்றிலைச் செல்லத்தை எட்டி இழுத்து இரண்டாவது முறையும் வெற்றிலை போட்டாள்.

அவளது அக்கறை நடனசுந்தரத்திற்குப் புரியும். அவளை அப்படியே விட்டுவிட முடியாது. போதகருடன் பேசிய அன்று மாலையே அந்த விஷயத்தை அவள் காதில் போட்டபோது, தன் விருப்பின்மையை தெளிவாய் வெளிப்படுத்தியவள் அவள். அங்கே அவள் அப்போது  கொட்டிய உணர்வு மெய்; வார்த்தைகள்தான் போலியானவை.

அவளது மறுப்பினை வாத்தியார் குடும்பத்துக்கு மேலான அபவாதத்தினதோ, மலரின் நடத்தையின் மீதான சந்தேகங்களினதோ  காரணமாய் எடுக்கவேண்டியதில்லை.  

வித்துவான் வீரகத்தி குடும்பத்தின் அடிமடியுள் கிடந்துள்ள எல்லா அவமானங்களையும் சகித்தாலும், அச்சுவேலி சங்கானை கொடிகாமம் மந்துவில் மட்டுவிலென சாதிப் பிரச்னை கலவரங்களாயும் கொலைகளாயும் வீச்சுப்பெற்றிருக்கிற அந்தச் சமயத்தில், அந்தக் குடும்பத்துப் பெண்ணுடனான சம்பந்தத்தை மட்டும்தான் வெறுத்தாள். சாதிப் பிரச்னை தலையெடுத்தாடும் இடங்களெல்லாம் தாண்டிப் பயணிக்கும் தன் மகனுக்கு அந்தச் சம்பந்தம் உசிதமாக மாட்டாதென்பதே அவளது நோக்கெல்லையில் இருந்தது.

அவள் முன்பே சொல்லியிருந்த அக் காரணங்களை தான் அப்போது நினைத்துப் பார்க்காததை குத்திக்காட்டுமாப்போலவே ‘படிச்ச பிள்ளை, எல்லாத்தையும் யோசிச்சுப் பாக்காமல் முடிவெடுக்கப் போகுதோ?’ என்ற வார்த்தைகளில் அவள் ஏற்றியிருக்கிறாள்.

அவனுள்ளும் மலர்பற்றிய விடையறியாக் கேள்விகள் இருந்துகொண்டிருக்கவும் செய்தன. ஆயினும் இறுதியில் வென்றது அவனது ஆசையாகவும், அவளது அப்பாவின் மேலான இரக்கமாகவும் இருந்தது.

அதனால் அவன் கேட்கயிருந்தது ஒரே கேள்வியாகயிருந்தது. அதை அவன் கேட்டான்: ‘இதில மலரின்ர விருப்பம் என்னமாதிரி?’

‘நாங்களெல்லாம் கதைக்கேக்க சந்தோஷமாய்த்தான் அவவும் கூடயிருந்தவ. வேறயென்ன அவ சொல்லேலும்?’

‘ஐயா, அதை சம்மதத்தின்ர அடையாளமாய்…’

‘அந்தமாதிரித் தவிர வேறமாதிரி தன்ர விருப்பத்தைத் தெரிவிக்கிற பிள்ளையில்லை அது. அம்மாவெண்டு வாய் திறந்து கூப்பிடவே அதுக்கு மூண்டு வயசாச்சு. பிறந்து ஆறு மாசம்மட்டும் பசிச்சா, எறும்பு கடிச்சாக்கூட அழாமக் கிடந்தது. எங்களுக்குத் தெரியும் அதுகின்ர விருப்பம், விருப்பமில்லாத சங்கதியள்…’

‘அப்ப…. எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்திட்டம்போல கிடக்கு…’ என்று தன் பிரசன்ன முக்கியத்துவத்தை உணர்ந்தவராய் தலையிட்டார் சுந்தரலிங்கம். ‘அப்பிடியெண்டா… மற்ற விசயங்களைப் பேசியிடுவம்…’ 

அது நினையாப்பிரகாரமான வேகத்துடன் அவனது தாயிடத்தில் வேலைசெய்தது. அவள் தன் மகனின் பெறுமதியைக் காணவிரும்புவதொன்றும் நடைமுறை உலகத்தில் விசித்திரமானதல்ல.

‘நீங்கள் அதையெல்லாம் அம்மாவோட பேசுங்கோ, மாமா’ என்றுவிட்டு நடனசுந்தரம் எழுந்தான்.

அப்போது அவன் கண்டான், பவளமாச்சியின் பார்வையில் தெரிந்த பரபரப்பும், வதங்கிக் கிடந்த கைகளிலும், கோணிக் கிடந்த வாயிலும் தெறித்த துடிப்பும். அவள் ஏதோ சொல்ல முனைகிறாளா? அவன் நின்றான். அவள் என்ன சொல்லிவிடுவாள்? எந்தளவோ எதிர்ப்புக்காட்டி நின்ற அம்மாவே இறங்கி வரவில்லையா? எந்த நம்பிக்கையிலோ அவற்றை அனுகூலமான மனநிலையின் பிரதிபலிப்பாய் எடுத்துக்கொண்டு அவளைநோக்கி மெல்லச் சிரித்தான். பின் அப்பால் நகர்ந்தான்.

 

சைக் கல்விக்கான அவளது தஞ்சாவூர்த் திடீர்ப் பயணம் குறித்தும்,  மயில்வாகனம் வீட்டாரின் மறுப்புக்கான, இருபாலைக் கனவானுடன் பேசிய கல்யாணம் நின்றுபோனதுக்கான புதிர்களும் கேள்விகளும் அப்போதும் அவரிடம் இருந்திருந்தன. ஆயினும் அவளது தந்தை வித்துவான் வீரகத்தி வீடுதேடி வந்து செய்த மன்றாட்டத்தில் அந்த வயதுக்கும், தமிழ்க் கல்வித் தகைமைக்கும் தான் வளைந்துகொடுத்ததை எவ்வாறு மலர் கீழ் மேலாய்ப் புரட்டிப் போட்டிருந்தாள் அன்று! அவருக்கு அது தினசரிச் சிந்தையாய் இருந்தது. அப்போதும்கூட.

அவரது விருப்பம்மட்டுமா அந்தக் கல்யாணத்தின் முழுக் காரணமுமாக இருந்ததாய் அவள் எண்ணுகிறாள்? ஒரு தமிழ்க் கல்வியாளரும், நடந்தால் புல்லுச் சாகாதளவு மெதுமைப்பட்டவரும், மிகநல்லவருமான அவள் தந்தையும்தானென்பதை அவளால் எப்படி மறக்க முடிந்தது? வாய் பேசாமலிருந்து எல்லாம் நடக்க அனுமதித்த அவள்மேல் எந்தப் குற்றமுமில்லையா?

அப்போது மலரின் அறைக்குள்ளிருந்து எழுந்த பேச்சுச் சத்தம் எல்லா நினைவுகளையும் மறக்கவைத்து அவரை அவற்றின் அர்த்தக் கிரகிப்பில் இறக்கியது.

 

(தொடரும்)

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்