சாம்பரில் திரண்ட சொற்கள் - 11

21 எவ்வளவோ மாற்றங்கள் சூழலில்போல் தனி மனித வாழ்வுகளிலும். அண்மையில் பிரான்ஸிலிருந்து வந்த கரவெட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு முதியவர் நெல்லியடி பஸ் நிலையத்தில் கொழும்பு செல்ல சொகுசு பஸ்சுக்கு காத்துநிற்கையில் ‘நெல்லியடி கரவெட்டியை விழுங்கியிட்டுது’ என்றிருந்தாராம். அந்த சத்தத்தை புவனேஸ்வரி கேட்டிருக்கவில்லை. ஆனாலும் அது ஆட்களில் ஏறியேறி வெளி கடந்து சென்று அவரை அடைந்திருந்தது. அது உண்மையென அப்போது அவர் எண்ணித் தலையசைத்தார். ‘கரவை வேலன் கோவை’ பிரபந்தம் பாடப்பட்ட காலத்து கரவெட்டியைவிட ஊர் எவ்வளவோ மாறிவிட்டதுதான். ஒரு நூற்றாண்டு சீரிய வளர்ச்சியுடன் இன்று இறுதி யுத்தம் முடிந்த பின்னான கட்டுமானமும் அது கொண்டிருக்கிறது. கோவில்கள் வர்ண வர்ண மயமாக புனருத்தாரணம் கொண்டிருந்தன. வீடுகள் புதுக்கியும் திருத்தியும் கட்டப்பட்டதாகயிருந்தன. மனிதர்களிலும் முந்திய வறுமையும் வசதியீனங்களும் பெருமளவு கடந்து போய்விட்டதாய்த் தெரிந்தது. ஆனால் வாழ்வியல்…? மக்களின் கலாச்சாரம்…? காலத்தில் எல்லாம் மாறுபவைதான். அப்போது அது வளர்ச்சியின் ஊற்றம் கொண்டதாகயிருக்கும். அன்றைய வளர்ச்சி நிலையை அவர், வீக்கமென உணர்...