சாம்பரில் திரண்ட சொற்கள் - 11

 21


எவ்வளவோ மாற்றங்கள் சூழலில்போல் தனி மனித வாழ்வுகளிலும். அண்மையில் பிரான்ஸிலிருந்து வந்த கரவெட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு முதியவர் நெல்லியடி பஸ் நிலையத்தில் கொழும்பு செல்ல சொகுசு பஸ்சுக்கு காத்துநிற்கையில் ‘நெல்லியடி கரவெட்டியை விழுங்கியிட்டுது’ என்றிருந்தாராம். அந்த சத்தத்தை புவனேஸ்வரி கேட்டிருக்கவில்லை. ஆனாலும் அது ஆட்களில் ஏறியேறி வெளி கடந்து சென்று அவரை அடைந்திருந்தது. அது உண்மையென அப்போது அவர் எண்ணித் தலையசைத்தார்.

‘கரவை வேலன் கோவை’ பிரபந்தம் பாடப்பட்ட காலத்து கரவெட்டியைவிட ஊர் எவ்வளவோ மாறிவிட்டதுதான். ஒரு நூற்றாண்டு சீரிய வளர்ச்சியுடன் இன்று இறுதி யுத்தம் முடிந்த பின்னான கட்டுமானமும் அது கொண்டிருக்கிறது. கோவில்கள் வர்ண வர்ண மயமாக புனருத்தாரணம் கொண்டிருந்தன. வீடுகள் புதுக்கியும் திருத்தியும் கட்டப்பட்டதாகயிருந்தன. மனிதர்களிலும் முந்திய வறுமையும் வசதியீனங்களும் பெருமளவு கடந்து போய்விட்டதாய்த் தெரிந்தது.

ஆனால் வாழ்வியல்…? மக்களின் கலாச்சாரம்…?

காலத்தில் எல்லாம் மாறுபவைதான். அப்போது அது வளர்ச்சியின் ஊற்றம் கொண்டதாகயிருக்கும். அன்றைய வளர்ச்சி நிலையை அவர், வீக்கமென உணர்ந்திருந்தார்.

உயர்ந்த திண்ணையில் உயர நின்றிருந்த ‘கந்தப்பு மனை’ யென முகப்பில் பித்தளைத் தகட்டில் எழுத்துக்கள் கொண்டிருந்த வித்துவான் வீரகத்தியின் வீடு பாழ்படத் தொடங்கியிருந்தது. வேல்க் கம்பு பொதிந்த வேலி இடிக்கப்பட்டு மதிலாய்க் கட்டியிருந்தார் அந்த வீடு வளவை சீதனமாய்ப் பெற்றிருந்த சுவிஸிலிருக்கும் மலரின் தங்கை. வெளி அச்சறுக்கைக்கு அது போதும்தான். அத்துடன் புவனேஸ்வரியின் ‘ஒரு கண்’ கவனிப்பும் இருக்கிறது. ஆனால் உள்ளுடனை கறையான் அரித்துக்கொண்டிருந்தது; சுவர்கள் மக்கிக்கொண்டிருந்தன.

இப்போது அங்கே வித்துவான் இல்லை. அவர் மனைவி அன்னபூரணம் இல்லை.  பக்கத்து வீட்டில் புவனேஸ்வரியின் அம்மா அன்னலட்சுமி இல்லை.  எதிர்ப்பக்கத்தில் தகரப் படலை வீட்டில் குடியிருந்த செல்;லம்மா இல்லை ; அவளது பெரியம்மா பவளமாச்சி எப்போதோ இல்லாமல் போயிருந்தார். அந்தக் கூரை வீட்டில் நடனசுந்தரத்தின் உறவினருக்கு அறிமுகமான தென்மராட்சிக் குடும்பமொன்று அப்போது இருந்துகொண்டிருந்தது.

கல்யாணமாகி மூன்று குழந்தைகளைப் பெற்று ஒன்றை இயக்கத்துக்குக் கொடுத்துவிட்டு, மற்ற இரண்டை வெளிநாட்டுக்கு அ;னுப்பிவிட்டு கணவன் இறந்துபோக தனியனாகிவிட்ட புவனேஸ்வரி, பௌதிகத்தின் மாற்றம்போல் குடும்பங்களில் விழுந்த சிதைவுகளையும் தன் வீட்டு சாய்மனையில் கிடந்து எண்ணியபடி அரை நூற்றாண்டுக் காலவெளியில் மீள மீளப் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

குடும்ப விவகாரங்களைப் பேசவும், மனத்து உள்ளின் வலிகளை பரிமாறித் தணிக்கவும் மனிதரற்ற தனிமை அது. கரவெட்டி மனிதரால் நிறைந்து போய்த்தான் கிடக்கிறது. ஆனால் உறவுகள்…? அதனால் தானே ஒன்றினை நினைக்கவும், தனக்குள்ளாக ஓரவலத்தைப் புறுபுறுத்துத் தணியவும் செய்தவண்ணமாய் காலத்தைக் கடத்திக்கொண்டு இருக்கிறார். நினைப்பதைத் தவிர மனத்துக்கும் வேறு வேலை என்னதான் இருக்கிறது?

இந்தச் சராசரி இயங்குதலை விசைப்படுத்தியிருக்கிறது இரண்டு நாட்களின் முன்னர் அவர் தம்பி மயில்வாகனத்தடன் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.

முன்பானால் கடிதங்கள் வரும். இப்போது அதன் சிரமமும் நேரமின்மையும் கருதி யாரும் கடிதமெழுதுவதில்லை. வாழ்த்து அட்டைகள்கூட அனுப்புவதில்லை. கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் எல்லாம் மாறிப்போயிற்று. இப்போது ஆளை ஆள் பார்த்து கதைக்கிற வசதி வந்திருக்கிறது. கதைத்து முடிய எந்த உணர்வும் கருத்தும் உருப்படியாய் எஞ்சுவதில்லை. கடிதமானால் இரண்டாவது மூன்றாவது வாசிப்புகளுக்கும் வாய்ப்பிருக்கும். அதில் சொற்களின் உள்ளே உள்ளொன்று வைத்துப் புறமொன்று சொன்ன, கனவுகளை மறைத்துவைத்த கூறுகளையும் அகழ்ந்தெடுக்கும் சிலாக்கியம் இருந்தது.

ஆனாலும் மயில்வாகனத்தின் பேச்சு புவனேஸ்வரியின் நினைவுகளைக் கீழ் மேலாகப் புரட்டிப் போட்டுத்தான் விட்டிருக்கிறது. சிவயோகமலர் ரொறன்ரோவில் இருப்பது வேறு விஷயமாக அங்கு சென்றவேளை தெரியவந்ததாகவும், வீடறிந்து காணச் சென்றபோது அவரும் கணவரும் ஆஸ்பத்திரி போயிருந்ததாக வீட்டுக்காரர் சொன்னதும் அவர் சொல்லியிருந்தார். மலரின் உடல்நிலை சர்க்கரை வியாதியால் மிகவும் சீர்கெட்டிருப்பதும், மனநிலையும் ஆரோக்கியமாக இல்லையென்பதும் அவர் தெரிவித்ததுதான்.

கேட்டுத் துடித்துப்போனார் புவனேஸ்வரி. எப்படி இருந்தாள், இப்படி ஆகிவிட்டாளேயென்று மனம் பதறினார்.

சிவயோகமலர் இலங்கையிலிருந்த காலம்வரை, இடையிட்ட ஒரு மூன்று நான்கு ஆண்டுகள் தவிர, அவர்களுக்குள் மிகுந்த நெருக்கம் இருந்திருந்தது. மிகுந்த வாரப்பாடான விசாரிப்புகள் இருந்திருந்தன. ஆனால் வெளிநாட்டிலிருந்த மகனிடம் சிவயோகமலர் ஓடிப்போனதிலிருந்து அவர் புவனேஸ்வரிக்கு தொலைந்தவரானார். ஊரில் அப்போதும் ஆசிரியராகக் கடமையாற்றியபடியிருந்த அவரது கணவர் நடனசுந்தரத்தை ஒருபோது வழியில் கண்டபோதுதான் அந்தச் சிறிய உரையாடலில் மலரின் நலத்தை அவர் அறிந்தார்.

அப்போது நடந்த உரையாடலின் ஒரு கீறு அவரால் எப்போதும் மறக்காதபடி நெஞ்சில் ஆழப் பதிந்திருந்தது. புவனேஸ்வரி கேட்டார்: ‘நாடிருக்கிற நிலையில, இஞ்சயிருந்து  கஷ்ரப்படாமல் நீங்களும்  மலரோட போயிருக்கலாம், அண்ணை.'

'ரண்டு பேரும் போறதெண்டா… அந்தளவு காசுக்கு எங்க போறது? மலர் வில்லங்கப்படுத்தினாதான், காணியொண்டை வித்திட்டாவது வெளிக்கிடலாமெண்டு. நான்தான் வேண்டாமெண்டிட்டன். பென்சனெடுக்க இன்னும் மூண்டு வரியமிருக்கு. அதுக்குள்ள வேலையை விட்டிட்டு ஓடுதெண்டா, என்னெண்டு?’ என்றார் அவர்.

பின்பு நடனசுந்தரமும் முன்புபோல் அவ்வப்போதேனும் காணப்படவில்லை.

யுத்தம் எல்லா இயல்பு நிலைகளையும் தலைகீழாய் மாற்றியிருந்த வகையில் ஒருவரின் இருப்புபற்றிய முழுமையான தகவல்கள் எவரையும் அடையும்  சாத்தியமாயிருக்கவில்லை. விரைந்து தத்தமது வீடுகளுக்குள் ஓடிப்போய் புகல்கொண்டுவிடவே  எவரும் செய்துகொண்டிருந்தனர்.

புவனேஸ்வரிக்கு தனக்கும் மலருக்குமிடையில் ஏற்பட்டிருந்த விலகலின் காலம், உறவுக் காலத்தை மனத்தில் முந்திக்கொண்டு எழுந்தது.

அது முழுமையாக தன்னை விரித்தெடுத்து காட்சிகளானது.      

 

 

மலர் வீட்டு வாசல்புறத்தில் தூங்கு செம்பரத்தைகள் நிறையப் பூத்து பனியில் நனைந்தபடி தொங்கிக்கொண்டு இருக் கின்றன. மெதுவாய்க் கண் பரத்தி அவற்றின் அழகை அனுபவிப்பவளாக புவனேஸ்வரி அப்போது இல்லை.

அவளுக்கும் மலருக்கும் இடையிலான நெருக்கத்தில் ஒரு கோடு விழுந்திருக்கிறது. அது அவளை எரிச்சலடைய வைக்கிறது; கோபிக்க வைக்கிறது; முகத்தை இருண்டுபோகவும், சிலவேளை அவளை அழவும் செய்விக்கிறது. அவள் அதிலிருந்து தெளிய உக்கிரமாய் முயல்கிறாள். அவ்வப்போது தெளியவும் செய்கிறாள். ஆனால் மறுபடி இழந்த நட்பின் நினவு மேலெழுந்து அவளை வதையின் வட்டத்துள் இழுத்து மூழ்கச்செய்துவிடுகிறது.

செவ்வந்தி அங்கே வரத் தொடங்கிய பிறகுதான் மலர் அந்தமாதிரி மாறிப்போனாளென்ற எண்ணத்தை புவனேஸ்வரியால் லேசுவில் மனத்திலிருந்து விலக்க முடியவில்லை. அவளுக்கும் மலருக்குமிடையே எவ்வளவோ இருந்தன. செவ்வந்தி வந்ததோடுதான் ஒரு புள்ளியில்போல எல்லாம் கலைந்துபோயிற்று. தன் வாழ்வின் சமநிலையே குலைந்ததுபோல் அவள் தடுமாறிப்போனாள்.

மிகச் சின்ன வயதில் சம்பவித்த தன் தகப்பனின் மரணத்தை அவள் எப்போதாவது நினைப்பதுண்டு. அந்த யோசனை  மலரின் ஒதுக்கத்தின் பின்னால் அடிக்கடி வந்தது கண்டாள். பத்து வயதுப் பாலகியாயிருந்தவளுக்கு தன் குடும்பத்தின் பொறுப்புணர்தல் அவள் தந்தையின் மரணத்துடன் அவளில் ஏறியது.

நல்லாம்பியென்று ஊரில் அறியப்பட்டிருந்த அவள் தந்தையின் மரணம் கண்மூடித் திறப்பதற்குள்போன்ற ஒரு மாயப்பொழுதில் சம்பவித்தது. ஒன்றுக்கிருக்க உள்வேலியோரம் போனவர் திரும்பிவர அந்தளவு நேரமாகிறதாவென எட்டிப் பார்த்த அன்னலட்சுமியின் கண்களில் கோவணம் தெரிய வேட்டி ஒதுங்கிப் போய் அந்த வெய்யிலில் அவர் மல்லாந்து கிடக்கக் காணப்பட்டார். அவள் வாயிலிருந்து எழுந்த ஓலத்தில் தெருவில் போனவர்கள்தான் ஓடிவந்து அவரது மரணத்தை அறிவித்தார்கள்.

நல்லாம்பிக்கு இயல்பிலேயே பலவீனமான சரீரம். அந்தச் சரீரத்தோடுதான் வெய்யில் மழை பாராமல் தன் பழைய சைக்கிளில் அவர் ஊரெங்கும் திரிந்தார். காற்றுப் போயோ, செயின் அறுந்தோ அந்த ஓட்டைச் சைக்கிளை நல்லாம்பி தள்ளிக்கொண்டு போனதைத்தான் அவர் அதில் ஏறி ஓடிச்சென்றதைவிட கன தடவைகள் அந்த ஊர் மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

அவருக்கு காணி உறுதி எழுதுகிற வேலை. வயல் நிலம், குடியிருப்புக் காணிகளின் ஈடு, விற்பனை, உரித்து மாற்றங்களை எழுதி காணிக் கந்தோரில் பதிந்து அதற்கான உறுதிகளைப் பெற்றுக் கொடுப்பது சிரமமான வேலை. காலால் ‘எட்டு” வைத்து அளந்த காணிகளை பரப்பு, குழியென ‘நாடா’ பிடித்து துல்லியமான அளவுக்குள் கொண்டுவரும்போது அளவைகள் பக்கத்துக் காணிகளின் எல்லைகளோடு மோதிக்கொண்டும் நிற்கும். மாற்றாந்தாய்ப் பிள்ளைகளென உரிமை கோரிக்கொண்டு உறுதிகளில் குறிப்பிடப்படாத புதிய உரித்தாளிகள் வருவார்கள். அவ்வாறான பிரச்னைகளில் கச்சிதமாகக் காரியமாற்றத் தெரிந்திருந்ததில் நல்லாம்பிக்கு அந்த ஊரில் மட்டுமில்லை, அடுத்தடுத்த ஊர்களிலும் வலு கியாதி. இதைவிட அந்தக் கியாதிக்கு இன்னோர் அம்சமும்  காரணமாக இருந்தது.

அக் கால காணி உறுதிகளின் எழுத்துக்கள் ஓலைச் சுவடிகளினதை நிகர்த்தனவாய் இருந்தன. அவற்றின் சொற்பாவனைகள் புழங்கு தமிழ்போல் விஸ்தாரம் கொண்டவை. காணி உறுதித் தமிழ் தனிவகையான தமிழாக கற்றவராலேயே சொல்லுவதாகிவிட்டிருந்தது. பாட்டெழுதும் வல்லபம்கொண்ட புலவருக்குக்கூட உறுதித் தமிழ் இலகுவாயிருக்கவில்லை. அதன் சவாலில் பலபேர் தோற்றார்கள். ஆனால் சின்ன வயதிலிருந்து நல்லாம்பிக்கு அந்த மொழி தகப்பன் பாட்டனின் தொழிலாகவும் உறுதி எழுதுதல் இருந்தவகையில் பழக்கமாகிப்போயிருந்தது. அத்துடன் கோணல் காணிகளின் பரப்பு அளவீட்டில் ஆள் சரியான விண்ணன்.

அத் திறமைகள் கணிசமான வரும்படியை அவருக்கு அளித்தவேளை, பிள்ளையார் குளத்துப் பக்கமாய் பத்துப் பரப்பு வயலின் காலபோக வேளாண்மை அவரைச் சிரமமின்றி குடும்பத்தை நடாத்தவும் முடிந்தவராக்கிற்று.

வியாதியென்று படுக்கையில் கிடந்தறியார் நல்லாம்பி. ஆயினும் இறுதி நோயென ஒன்று வந்திருக்கிறது. சிலர் கிறுதி தூக்கியெறிந்தது என்றார்கள்; வேறு சிலர் சுவாதக் குத்துத்தான் வந்திருக்கும் என்றார்கள். ‘எதுவானாலும் புண்ணியாத்மா, பொசுக்கென்று மரண துன்பமின்றி போய்ச் சேர்ந்தது’ என்பது உறவினர் சிலரின் அபிப்பிராயம்.

ஏதொன்றையும் எண்ணும் நிலையில் இல்லாதிருந்திருந்தார் அன்னலட்சுமி. தினசரிக் கடமைபோல நாலு அயல் வீடுகள் போய் ஊர்த் துளவாரம் பிடுங்காமல் தூக்கம் பிடிக்காதவர், அயல் மறந்தார்; ஊர்க் கதைகள் மறந்தார்; மயில்வாகனத்தையும் புவனேஸ்வரியையும்கூட மறந்தார். அந்த அவலத்திலிருந்து மீள அவருக்கு ஓராண்டுக்கு மேலே பிடித்தது. அப்போதும் நினைவு தெளிந்த அளவுக்கு அவரது உடல்நிலை தேறவில்லை. அதனால் பொறுப்பு முழுவதும் புவனேஸ்வரியின் சின்னத் தோள்களில் ஏறுவது தவிர்க்க முடியாததாயிற்று.

அப்போதுதான் வித்துவான் வீட்டில் வசித்த ஆச்சியிடம், தான் பள்ளிக்கூடம்விட்டு நின்றுவிட்டால் கோழி ஆடென வளர்த்து வீட்டுப் பிரச்னைகளை பெருமளவு சமாளிக்கலாமென்ற தன் எண்ணத்தைப் பிரேரித்தாள் புவனேஸ்வரி.

வெகுநேரம் யோசித்த ஆச்சி கடைசியில், ‘இதுக்கு வேற வழியும் இல்லைத்தா’னென அந்த முடிவை அனுவதித்தார். மேலே வித்துவான் வீரகத்தி சொல்ல எதுவுமிருக்கவில்லை.

நல்ல தலைமையாசிரியர், நல்ல உபாத்தியாயர்கள், நல்ல சங்கீத ஆசிரியையென எட்டாம் வகுப்புவரையிருந்த அந்த தமிழ்க் கலவன் பாடசாலையில் எட்டாம் வகுப்புவரை படித்துவிட எண்ணியிருந்தவளுக்கு ஆறாவதோடு நின்றுவிடுவததை மனம் ஒப்ப மறுத்தது. ஆனால் நாளடைவில் தன்னொத்த வயதுப் பிள்ளைகளுடன் விளையாடி, தனக்கு மூத்த பிள்ளைகளுடன் உரையாடி, மூத்த முதிர்ந்த பெண்களின் கதையாடல்களில் கவனமாகி தன் இழப்பின் வலியை ஈடுசெய்யப் பயின்றுகொண்டாள்.

அவளுக்கு வேறோர் உலகத்தை அது காட்டியது. சின்ன மனத்தில் பெரிய விஷயங்களை எண்ண அவள் பழகினாள்.

செவ்வந்தியின் வருகையால் சம்பவித்த மலரின் விலக்கம்  தந்தையின் மரணத்தாலும், தாயின் மனக் குழப்பத்தினாலும் ஏற்பட்ட தனிமையை மறுபடி அவளிடத்தில் கொண்டுவந்து கொடுத்ததுபோல் ஆயிற்று. தன் அன்பு இளக்காரமாய்ப் போன எரிச்சல், அதற்குக் காரணமான தன் சுய ஆளுமையின் பலஹீனம் எல்லாம் அவளை தன்னுள் குமையச் செய்தன. அவளே எரிச்சல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஜென்மமானாள்.

தன் கோபம் மலரிலா செவ்வந்தியிலா யாரிலென அவளுக்கே தெரிந்திருக்கவில்லை. தாயில், தம்பியில், சிலவேளை அன்னபூரணம் மாமியில்கூட அவளுக்கு எரிச்சல் வந்தது.

மலரும் செவ்வந்தியும் கடைகளுக்கு, கோயிலுக்கு சேர்ந்து செல்லுகையில் மணியும் பிறேக்கும் இல்லாத சைக்கிள் வந்து மோதியோ, பின்வளவு மாமரத்து ஊஞ்சலில் அவர்கள் ஆடி விளையாடும் பொழுதுகளில் ஊஞ்சல் கயிறறுந்து விழுந்தோ சிறு விபத்துகள் நடக்க புவனேஸ்வரியின் மனம் சாபமிட்டுக்கொண்டு இருந்தது. அவர்களை எதிர்கொள்ளும் வெறுப்பில், வெள்ளிக் கிழமைகளில் சிவன் தரிசனம் முடிய வீட்டுக் கூடத்தில் வித்துவான் நிகழ்த்தும் திருவிளையாடற் புராண கதைகூறல் கேட்கச் செல்வதையும் தவறவிடலானாள்.

ஆனாலும் நடுவேலிக் கடவைக்கூடாக மிகுந்த சுவாதீனத்துடன் அவளது மாமன் வீடு போய்வருகை இருந்தது. மலர் வீட்டில் நிற்கிற வேளைகளில் அந்தச் சுவாதீனம் இன்னும் அழுத்தமாய்த் தொழிற்பட்டதுபோல் இருந்தது. தேவையில்லாத விஷயங்களுக்கும் சிரித்துச் சிரித்து மாமிக்குப் பதில் சொன்னாள். சிலவேளை கேள்விகளுக்கும் பதில்சொல்லாமல் சிரித்துக்கொண்டு நிற்கச்செய்தாள். ஆச்சியே அவளது அகண்ட புதுச் சிரிப்புகளில் ஆச்சரியப்பட்டார். மலருடன் திட்டமாய்ப் பேசுவதை புவனேஸ்வரி ஒதுக்கி அனுபவித்த சுகமானது, உண்மையில் சுகமில்லையென்பதை அவள்மட்டுமே அறிந்திருக்க முடியும்.

காலம் ஓடியது.

மூன்றாண்டுகள் விரைந்து கடந்தன.

அது மலருக்கு இறுதிப் பரீட்சைக்கு சிறிது முன்னான காலம்.

மயில்வாகனம் தனக்குப் பின்னால் ஊசியைத் தொடரும் நூல்போல மாமன் வீடு இழுபட்டுக்கொண்டு வருவதின் காரணத்தை புவனேஸ்வரி அறியாமலில்லை. ஆனால் அதற்காக அவளால் வருத்தப்படத்தான் முடிந்தது.

வசீகரன் மேலான அவளது ஈடுபாட்டின் ரகசியத்தை எப்படியோ அவளால் அறிந்துகொள்ள முடிந்திருந்தது. அது ஒரு நுட்பமான மூதறிவு.

ஒரு முழுப் போயா நாளில் பவளமாச்சியின் கதைகூறல் நிகழ்வுக்கு போன இடத்தில் ஆச்சியே கூறிவிட்டார், ‘ஊர் ஞாயம் புறிக்கிறதில கொம்மாவை மிஞ்சியிட்டாய்போல…?’ என.

‘ஞாயம் புறித்த’லில் ஓர் ஒற்றைச் சொல்லிலிருந்தும் அதன் பருவரையை வடித்தெடுக்க அவளால் முடிந்திருந்ததுதான்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி விடுதியில் நின்று படிக்கும் நடனம், வாரா வாரம் வெள்ளி சனி ஞாயிறுகளில் வீட்டுக்கு ஓடிவந்துவிடுகிற ஒரு காலமிருந்தது. அதுபற்றி நாத்து நட, புல்லுப் புடுங்க போகிற பெண்களிடத்திலும், கூப்பன் கடைக்கு போய்வருகிற பெட்டைகளிடத்திலும் ஐமிச்சப் பேச்சுக்கள் எழுந்திருந்தன. ‘ஆரோ நாசம் புடிச்சவளின்ர பேச்சது’ என்ற யாரோவின் பேச்சில் அது நசித்துப்போகப் பார்த்தது. ஆனால் புவனேஸ்வரிதக்குத் தெரிந்தது, அதில் எதுவோவோர் உண்மை இருக்கிறதென.

காலை மாலை வேளகளில் படலையில் நடனம் தொங்கிநிற்பது தெரு விடுப்புப் பார்க்கவல்ல, மலரைக் காணவேயென்பதை அவளால் தெரிய முடிந்திருந்தது. மலரும் அவ்வப்போது புத்தகமும் கையுமாகவோ இல்லாமலோ விறாந்தையில் அவன் பக்கமே திரும்பாமல், எப்போதும்  சிரிக்காத அந்த முகத்தில் இன்னும் கொஞ்சம் கடுகடுப்பை அப்பிக்கொண்டு வந்து வந்து போவதும் உண்மையில் வெறுப்பின் அடையாளமில்லை என்பதும் அவளுக்கு நிச்சயமாயிற்று.

இந்த நிலையிலேதான் வசீகரன் கடிதம் கொடுக்கிற இரகசியத்தை   செவ்வந்தியின் இன்னொரு கூட்டாளி வெள்ளைச்சியிடமிருந்து உருவியெடுத்தாள் புவனேஸ்வரி. அவளுக்கு பெரிய வேதனையாகப் போய்விட்டது. நடனத்துக்காகவும் அவள் இரக்கப்பட்டாள். அதுபோலவே அவளது இரக்கம் இப்போது தம்பி மயிலுக்காகச் சுரந்துகொண்டிருந்தது.

வசீகரன் மேலான மலரின் உறவு இன்னும் முதிரவேண்டும் என்பதே அவ்வுறவுபற்றி அறிந்த கணத்தில் அவளிடத்தில் எழுந்த ரகசிய  ஆசை. அதனால் செவ்வந்தியின் கூட்டுறவு மலரின் ஒழுக்கத்தைச் சீரழித்ததென வித்துவான் அவளை ‘வீட்டுப் பக்கமே வரக்குடாது’ எனக் கலைத்துவிடவேண்டுமென அவள் விரும்பினாள்.

ஆனால் செவ்வந்தியில் குறைசொல்ல முடியாத வேறோர் இடர் இடையில் குதித்தேறியது.

மலரின் எதிர்பார்ப்புக்கு, வித்துவான் அன்னபூரணம் ஆகியோரது எதிர்பார்ப்புக்கும் மாறாகத்தான், மலரின் பரீட்சைப் பேறுகள் அமைந்தபோது உண்மையில் புனேஸ்வரி அவளில் அனுதாபப்பட்டாள். அந்த அலை ஓய்வதற்கு முன்னால் வீட்டில் ஒரே புகைமூட்டம். உணர்வுகள் உராய்ந்து தீப்பற்றாமல் புகைந்துகொண்டிருந்தன. வசீகரனின் விஷயம் வீட்டில் தெரிந்துவிட்டதென்பது புவனேஸ்வரிக்குப் புலனாகியது. அதை யோசித்து முடிப்பதற்குள், மலரை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் செல்ல வித்துவான் கொழும்புக்கு பயணப்பட்டுவிட்டார்.

அதிர்ச்சியென்பதன் முழு தாற்பரியமும் அந்தச் சொல்லில் புவனேஸ்வரி அன்று உணர்ந்தாள்.

 

 

 

22

அறுபதுகளின் மேல் இலங்கை அரசியல் நிலைமைகளில் அழுத்தம் திரள ஆரம்பித்துவிட்டதெனலாம். தென்னிலங்கையிலிருந்து வடவிலங்கைவரையான மக்களின் வாழ்வுப் புலமே பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியது. ஆயினும் பெரும்புயலை எதிர்பார்த்த கரைபோல தேசம் நெருக்குண்டிருந்தும்,  காலத்தின் இயங்குதற் சீரில் பெருமாற்றமேதும் வெளிப்படக் காணப்படவில்லை. அது மலரின் தஞ்சாவூரிலிருந்தான திரும்புகைக்கு ஏற்ற ஒரு காலமாகத்தான் இருந்தது.

தஞ்சாவூரிலிருந்து மலர் திரும்பியதும், கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலுமாய் கச்சேரிகளுக்கு வீணை வாசிக்க ஆயத்தம் பண்ணியபடி அவள் இரண்டிடங்களிலும் மாறி மாறித் தங்கியிருந்தாள்.

வழக்கம்போல் திடுதிப்பென்று கொழும்பு துறைமுகப் பிரிவில் அதிகாரியாய்க் கடமையாற்றிய ஒருவருக்கு அவளை பெண்பார்க்க ஏற்பாடுசெய்தார் வித்துவான் வீரகத்தி. பெண் பார்க்கிற வைபவம் கொழும்பில் நடந்தது.

அந்த மண ஏற்பாட்டை மலரும் மனப்பூர்வமாகத்தான் ஏற்றுக்கொண்டாளென்று அன்னபூரணம் மாமியின் பேச்சில் அறிந்தபோது அவள் ஆச்சரியம் மேவினாள்.

ஒருமுறை ஊருக்கு வந்த மலரிடமே அவள் அதுபற்றிக்  கேட்டாள். மாப்பிள்ளையும் குடும்பத்தாரும் தான் வீணை வாசிப்பதை கல்யாணத்தின் பின்னரும் அனுமதிப்பதால் தனக்கு அந்தத் திருமணம் சம்மதமே என்றாள் மலர்.

‘மழை வா! வெய்யில் போ!’ பாட்டுப் பாடிய காலத்திலிருந்து முளைவிட்டு வந்த நடனத்தின்மீதான உள்ளார்ந்த ஆதர்ஷத்தினை அதன்மூலம் முடிவுக்குக் கொண்டுவருகிறாளா சிவயோகமலர்? புவனேஸ்வரி கேட்க மனமுந்தினாலும் ஒரு சிரமத்தில் அடக்கிக்கொண்டாள்.

அவ்வாறாக ஏற்பாடான அந்தத் திருமணம் மணமகன் குடும்பத்தில் நேர்ந்த ஒரு விபத்து மரணத்தால் ஓராண்டுக்கு தாமதித்து, மேலும் ஆறு மாதத்திற்குள்ளாக திருமணமே காரணம் எதுவும் வெளித் தெரியாதபடி குழம்பிப்போனது. எல்லோரும்போல் புவனேஸ்வரியும் திகைத்தாள். அந்தளவு திகைப்பைக்கூட மலரின் முகத்தில் காணாதபோது அதை அவள் பெரிய ஆச்சரியமாகக் கருதினாள். அதன் காரணமும் அவள் மலரிடம் கேட்க மனமுந்தி பின்னர் தவிர்த்துக்கொண்டாள்.

ஆனால் மாமன் வீரகத்தி தன் சகோதரியிடம் மயிலைக் கேட்க அவள் புவனேஸ்வரியின் முகத்தை விடைக்காக ஏறிட்டபோது அவளிடத்தில் ஒரேயொரு கேள்விதான் நின்றிருந்தது.  மலருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நின்றுபோனதற்கு அவளைத் தஞ்சாவூர் அனுப்பவைத்த அதே காரணமா அல்லது இன்னொன்றா காரணமாயிருந்தது?

அதை அவள் மாமனிடமே கேட்க முடியாததில் மலர் – மயில் இருவருக்கிடையில் ஒரு மயிரளவிலிருந்த ஜாதகப் பொருத்தமின்மையை அழுத்தமாக வற்புறுத்தினாள். மயிலும் இயக்கக் கூட்டங்களுக்கென்றும் நோட்டீசு ஒட்டவென்றும் போய்வந்துகொண்டிருந்தமை அந்தளவில் ரகசியமாய்த் தெரியவர மாமனும் வேறு சாட்டின்றி அந்த முயற்சியைக் கைவிட்டார்.

மலரோ எதுவும் நடவாததுபோல் தஞ்சாவூரில் பழகிய தன் முகத்தில் லேசாயேனும் சிரிப்பை ஒட்டும் விந்தையைச் செய்தபடி நிர்விகற்பமற்று இருந்திருந்தாள்.

அந்த நிலை ஒரு வாரம் நீடிக்கவில்லை. மலருக்கு நடனசுந்தரத்துடன் கல்யாணம் நிச்சயமாகிவிட்ட விஷயத்தை வித்துவானே எதிர்ப்படும் ஊர் முக்கியத்தர்களை வலிய அணுகி தெரிவித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் முகத்தில் விளங்கிய கலகலப்பைக் கண்டிருக்கவேண்டுமே!

உள்ளுக்குள்ளாயேனும் சில சொந்தங்கள் மலரினதும் நடனத்தினதும் பொருத்தமின்மையைப் பேசியபோது, புவனேஸ்வரிமட்டும் எண்ணினாள், நீண்டகால உள்மன விருப்பங்களினதும், ஒற்றைப்போக்கான மனநிலைகளதும் அளவீட்டில் அது வலு பொருத்தமான இணையென.

பலரும் கவனமுறாத இன்னோர் அம்சத்தையும் அந்தத் தொடர்பில் புவனேஸ்வரி கண்டிருந்தாள்.

நடனசுந்தரத்தின் பள்ளிக் கால கல்வித் திறமைகள் பள்ளிகள் அளவிலேயே பெயரீட்டி அவனுக்குக் கொடுத்தன. அதில் ஏதாவது மனக்குறுக்கத்தை மலர் அடைந்ததற்கான வெளிப்பாடான அம்சமேதும் அவளில் புவனேஸ்வரி கண்டிருக்கவில்லை. ஆனால் அவள் மனக் குறுக்கமடைந்ததும், அதை வெளியாகவே சொல்லிக்கொண்டதுமான ஓரம்சம் இருந்தது. அது இலங்கை ஓவியக் கண்காட்சிகளில் நடனசுந்தரத்தின் ஓவியத் திறமை போற்றப்பட்டமை.

‘பேப்பர் வாங்க காசிருக்குமோ தெரியா, என்னத்தில கீறி அந்தத் திறமையை நடனம் வளத்திருக்கும்?’

அந்த மனவெக்கை தஞ்சாவூர் சென்று பெரும் கலைஞர் சபேஸய்யரிடம் வீணை கற்றதோடு அவள் அழிந்துபோனாள். அப்போது அவளும் பலரறிந்த வீணைக் கலைஞர். மேடைகள் அவ்வப்போதுதான் கிடைத்தாலும் சங்கீத வித்துவமுள்ளவர்களுக்கு வாசிக்க அவளால் முடிந்திருந்தது. அது அவளை அவனுக்குச் சமாந்தரமாக நிமிர வைத்தது.

நடனம் – மலர் திருமணம் முடிய, வித்துவானே முன்னின்று புவனேஸ்வரியின் திருமண ஏற்பாட்டையும் செய்துமுடித்தார்.

1983 ஆடி வந்தது. கலவர காலத்தின் பின் மயிலை வீட்டுள் பொத்திப் பொத்தி வைத்துக் காப்பாற்றும் நிலைமையாகிவிட்டது புவனேஸ்வரிக்கும் அன்னலட்சுமிக்கும்.

மயிலின் அத்தான் சுந்தரமூர்த்தி மிகவும் சாந்தமானவராக, அதேவேளை நடைமுறை விவகாரங்களில் கூர்மையான அவதானமுள்ளவராக இருந்தார். அவர் புவனேஸ்வரியிடம் கூறினார்: ‘நீங்கள் இந்தமாதிரி மயிலை வெளியில விடாமல் வீட்டில பூட்டிவைச்சுக் காப்பாத்தியிடேலாது, புவனா. பெடியள் வெளிநாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கிறாங்கள்; கனபேர் ஈரோப்புக்குப் போய்ச் சேந்திட்டாங்கள். மயிலையும் அனுப்புங்கோ. அதுதான் சரியான பாதுகாப்பாயிருக்கும்.’

புவனேஸ்வரி அவருடைய ஆலோசனையைச் சந்தேகப்படவில்லை. அவளுக்கும் ஊர் நிலபரம் தெரிந்திருந்தது.

சுந்தரமூர்த்தியே தேவையான பணத்துக்கு ஒழுங்குசெய்து கொடுத்தார். கரவெட்டியிலிருந்து கிளம்பி ஆண்டு ஒன்றாகிறவரையில் பிரான்ஸ் போய்விட்ட செய்தியைத் தாங்கி மயிலின் கடிதம் ஒருநாள் புவனேஸ்வரிக்கு வந்தது.

அன்று வீட்டில் ஒரு கொண்டாட்ட நாளாய் இருந்தது.

சுந்தரமூர்த்திக்கும் சில காலத்தின் பின் கொழும்புக்கு மாற்றலாகியது.

அம்மா அதற்குள் தவறிப்போயிருந்தார். சுந்தரமூர்த்தியும் புவனேஸ்வரியும் இரண்டு பிள்ளைகளும் வெள்ளவத்தையென்கிற தென்னிலங்கையின் பிரசித்திபெற்ற தமிழ்ப் பகுதியில் வந்து குடியேறினார்கள்.

அது பூகம்ப பூமியில் குடியேறிவிட்ட மனநிலையை அவர்களுக்குக் கொடுத்தாலும் அதிலிருந்து அவர்கள் விரைவில் மீண்டார்கள்.

அங்கே அவளுக்கு கிடைத்த அனுபவங்கள் அளப்பரியவை; ஒருவகையில் பயங்கரமானவை. அவற்றையும் தாங்கி உடைக்க முடியா நெஞ்சுரத்துடன் ஏறக்குறைய சுந்தரமூர்த்தி இல்லாமல் போனபிறகும் முப்பது ஆண்டுகளை அங்கே புவனேஸ்வரி கழித்தாள்.

அங்கேதான் மலருடனான இரண்டாம் கட்ட சந்திப்பை கைபிடித்து நடத்திச்சென்று  மிஸ் ஆசீர்வாதத்தின் தொடர்பு புவனேஸ்வரிக்கு ஏற்படுத்துகிறது. அதுதான் தனிமனித வாழ்வின் காலடிகள் எவ்வளவு அவதானமாக வைக்கப்படவேண்டியன என்பதும், அவை தவறும்பட்சத்தில் எவ்வளவு பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேர்கிறதென்பதும் புவனேஸ்வரி தெரிந்தாள்.

அவளொரு அழிவின் தரிசன சாட்சியம்.

மயிலிடமிருந்து வந்த தொலைபேசி உரையாடலில் விரைவு விரைவாக நாற்பது ஐம்பது ஆண்டுகளை மனத்தில் மீட்டுப் பார்க்க புவனேஸ்வரிக்கு வேளை இருந்தது. இனிமேல் அவற்றை விரித்தெண்ண வாய்ப்பு வரலாம், வராமலும் போகலாம். யாருக்கு எதுதான் நினைத்தபடி நடந்திருக்கிறது அந்தக் காலகட்டத்தில், இவருக்கு நடக்குமென நிச்சயமாய்ச் சொல்ல? மேலும் அவரே ஓர் அழிவின் சாட்சியாக இருக்கிறவகையில் அநாயாசமாய் அதைச் செய்துவிடவும்கூடாது.

அது கூண்டேறக்கூடாத சாட்சி.

ஆனால் அவரில்லையேல் யாரேனும் நினைக்கவும்வேண்டும்.

அதுவே தொடுப்புகளின் இணைப்பாக , உறவுகளின் தொடுப்பாக பலபேருக்கு இருந்துகொண்டிருக்கிறது.

புவனேஸ்வரி தன் இருப்பின் விறைப்பைப் போக்க சாய்மனையிலிருந்து எழுந்தார்.

அல்வாய் சிவனாலயத்தில் கண்டாமணி ஒலித்துக்கேட்டது.

 

 -தாய்வீடு மார்ச் 2023

 

 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்