சாம்பரில் திரண்ட சொற்கள் 16

இலையுதிர் காலத்தின் ஒரு விசேஷம், சட்சட்டென சுழற் காற்றுகள் கிளம்பி பிரபஞ்சத்தை தூசு மண்டலமாக்குவது. எங்கிருந்தோ விசையுடன் கிளம்பிவரும் காற்று, ஏதோவொரு புள்ளியில் திடம்போல் உருப்பெற்று நின்று சுழற்பெடுக்கும். அந்நேரம் புளுதியும் தும்பும் காய்ந்த இலை சருகுகளும் அதன் வலிய கரங்களால் அள்ளுப்பட்டு மரங்களின் உயரங்கள் கடந்தும் நெடுக்கும். வெளியே நடக்கும் சூறையின் அட்டகாசத்தை பின்முற்றத்தில் இருந்த சுந்தரம் கண்டுகொண்டிருந்தார். இடவசதியாலும், அயல்மனிதர்களாலும் அப்போது குடியிருக்கும் அந்த வாடகை மனை, சொந்த மனைபோல் ஆகியிருந்தது சுந்தரம் சிவயோகமலர் இருவருக்கும். ஆரம்பத்தில் நிலக்கீழ் வீட்டின் குடியிருப்பில் சிவயோகமலருக்கு விருப்பம் இருந்திருக்கவில்லை. அவ்வப்போது தன்னதிருப்தியின் புறுபுறுத்தல்களை அவர் செய்துகொண்டேயிருந்தார். அப்போதெல்லாம் தன் மெலிந்த குரலில், ‘பேஸ்மென்ரில் குடியிருக்கிறது பெரிய பாக்கியம்’ என தனக்கேபோல் வகுப்பெடுக்க ஆரம்பிப்பார் சுந்தரம். ‘அது மரங்களின்ர வேருக்குச் சமாந்திரமாய் இருக்கிது; அவையின்ர கதையள் பேச்சுகள் சுவரில மோதேக்க, எங்கட உட்புலனில அதெல்லாம் ...