சாம்பரில் திரண்ட சொற்கள் 16

 



இலையுதிர் காலத்தின் ஒரு விசேஷம், சட்சட்டென சுழற் காற்றுகள் கிளம்பி பிரபஞ்சத்தை தூசு மண்டலமாக்குவது. எங்கிருந்தோ விசையுடன் கிளம்பிவரும் காற்று, ஏதோவொரு புள்ளியில் திடம்போல் உருப்பெற்று நின்று சுழற்பெடுக்கும். அந்நேரம் புளுதியும் தும்பும் காய்ந்த இலை சருகுகளும் அதன் வலிய கரங்களால் அள்ளுப்பட்டு மரங்களின் உயரங்கள் கடந்தும் நெடுக்கும்.

வெளியே நடக்கும் சூறையின் அட்டகாசத்தை பின்முற்றத்தில் இருந்த சுந்தரம் கண்டுகொண்டிருந்தார்.

இடவசதியாலும், அயல்மனிதர்களாலும் அப்போது குடியிருக்கும் அந்த வாடகை மனை, சொந்த மனைபோல் ஆகியிருந்தது சுந்தரம் சிவயோகமலர் இருவருக்கும்.

ஆரம்பத்தில் நிலக்கீழ் வீட்டின் குடியிருப்பில் சிவயோகமலருக்கு விருப்பம் இருந்திருக்கவில்லை. அவ்வப்போது தன்னதிருப்தியின் புறுபுறுத்தல்களை அவர் செய்துகொண்டேயிருந்தார்.

அப்போதெல்லாம் தன் மெலிந்த குரலில், ‘பேஸ்மென்ரில் குடியிருக்கிறது பெரிய பாக்கியம்’ என தனக்கேபோல் வகுப்பெடுக்க ஆரம்பிப்பார் சுந்தரம். ‘அது   மரங்களின்ர வேருக்குச் சமாந்திரமாய் இருக்கிது; அவையின்ர கதையள் பேச்சுகள் சுவரில மோதேக்க, எங்கட உட்புலனில அதெல்லாம் எதிரொக்கிது. இந்தப் பக்கத்தில செந்நதியும், அதுக்கு அங்காலயிருக்கிற டொன் ஆறும்கூட கதை சொல்லுற ஆறுகள்தான். ஆயிரமாயிரம் வருஷக் கதையள அவை தங்களுக்க பொதிஞ்சு வைச்சிருக்கின. கதைகேட்டு வளந்த ஆக்கள் நாங்கள். அந்த வாய்ப்புக்களையெல்லாம் தவற விட்டிடக்குடா.’

கேட்டு அட்டகாசமாய் சிரிப்பார் சிவயோகமலர். ‘ஐரோப்பாவிலயிருந்து வந்த வெள்ளைக்காறர் இஞ்சயிருந்த  செவ்விந்தியரை லட்சக் கணக்கில சாக்கொல்லி இந்த மண்ணுக்குள்ளதான் தாட்டிருக்கிறதாயும் சொல்லுகின. செவ்விந்தியற்ர ஆவியள் சொல்லுற அந்தக் கதையளயும் பேஸ்மென்ரில இருந்தாக் கேக்கலாம்போல.’

சுந்தரம் வாயடங்கிப்போவார்.

அத்தனைக்கு கூரிய விவேகமிருந்தது சிவயோகமலரிடத்தில். இன்று பெரும்பாலும் எல்லாம் பின்தள்ளப்பட்டுவிட்டன. நோயின் உத்தரிப்பில் அவை தறிகெட்டுப்போயின.

அவருக்கு முதலில் டயாலிஸிசும், பின்னர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் தவிர்க்க முடியாதவையென மருத்துவர்கள் கூறியிருந்தனர். அவற்றினைத் தாங்கும் மனவலியோடு அவர்தான் இருந்திருக்கவில்லை. அவசர சிகிச்சைக்கு ஆஸ்பத்திரி சென்றுவந்த பின்னர், அந்த மனத்திடம் அவருக்கு வந்திருந்ததாய்ப்பட்டது. அவரது பேச்சில் அது தொனித்தது. அக் காலத்தில் அவரது உடலுபாதைகளும் கணிசமானவளவு குறைந்திருந்தனவாய்த் தோன்றின. உடலுபாதையின் குறைச்சல், அவரது மனவுலைச்சல்களைத் தளர்த்தின. அதனால் அவர்கள் இருவரிடையிலுமான இழுபறிகள் மங்குதசை கொண்டன.

ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பிய கையோடு போனெடுத்து  நலம் விசாரித்த புவனேஸ்வரி, சமீபத்தில் மறுபடியும் போனெடுத்திருந்தார். ஆர் போன் நம்பர் தந்ததுபோன்ற மலரின் வழக்கமான கெடுபிடிகளின்றி உரையாடல் நடந்து முடிந்திருந்தது. என்றாலும் நீண்டதென்று சொல்லிவிட முடியாத உரையாடல்தான் அதுவும்.

எல்லாம் கவனித்தபடி சுந்தரம் தானும் தன்பாடுமான பாவனையில் இருந்துகொண்டிருந்தார்.

இளவேனில் தொடக்கம் கோடைவரை செழிப்புடனிருந்த அவரது பின்முற்றத்து சிறுபூந்தோட்டம், தன் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்தது. அவரது தொட்டி ரோஜாக்கள் கடைசி மொட்டுக்களை மலர்த்தி நின்று  விடைசொல்லிக்கொண்டு இருந்தன. அவரது பெருவிருப்பத்துக்குரிய வைல்ட் ஜஸ்மின் செடி காலநிலை ஏதொன்றையும் பொருள் செய்யாது கிளைவிட்ட புதுக்கரத்தால் ஆதாரத்தைப் பற்ற காற்றில் துளாவிக்கொண்டிருந்தது. 

இனி நீர் ஊற்றுதலில்லை, பராமரிப்பில்லை. அந்த இடத்துக்கு அழகுமில்லை.

சுந்தரம் கூடத்துக்கு வந்தார்.

வாசலைக் கடந்தபோது வீசிய பார்வையில் அறைக்குள் மலர் தெரிந்தார். அவர் முகம் ஏன் இருண்டு கிடக்கிறது? சுந்தரம் திடுக்கிட்டார். பின்முற்றம் அவர் செல்லுமுன் கண்ட முகத்தின் சாந்தத்தை எந்த அரூப முகம் அல்லது மாயவொலி வந்து தின்றுவிட்டுப் போனதென ஏங்கினார்.

சிவயோகமலர் தன்பாட்டில் எதையெதையோ புலம்பி கைகளைக் காற்றில் எறிந்துகொண்டு இருந்தார். கடந்த மூன்று நான்கு மாதங்களில் தோற்றப்படாத காட்சியது. அன்றிரவு மலர் தன் அக உலகத்தின் ரகசியக் கதவுகளில் காட்சி தெரியும்படியான நீக்கல் தெரியுமெ ன அவருக்கு நிச்சயமானது.

 

தமிழ்க் கடையிலிருந்து அன்று பகல் எடுத்துவந்திருந்த பத்திரிகைகளில் மேலான கண்ணோட்டத்தில் சோபாவில் அமர்ந்திருந்த சுந்தரத்திற்கு நேரம் சிறிது கழிந்தது. எதையெதையோ யோசித்தார். நேரத்தை அவர் விருப்பத்துக்கு மாறாய் காலம் மிக மெதுவாக உருட்டிக்கொண்டிருந்தது அப்போது.

சிவயோகமலரின் அறையுள் CP24 செய்திச் சனல் தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்ததுபோலும். பளீர்… பளீரென்று பாய்ந்த வெளிச்சங்கள் அதைத் தெளிவுறுத்திதன.  நள்ளிரவை நேரம் அண்மித்திருந்தது. அவரெழுந்திருக்க நேரம் இன்னும் அதிகமில்லை.

பொழுது சிறிது கழிய அறையுள் சோபா நெரிந்து விரிந்த கிரீச் சத்தமெழுந்தது. வேறு சத்தமில்லை. நேரம் ஊர்ந்துகொண்டிருந்தது. மனத்திலெழுந்த எண்ணவோட்டங்களை உருப்படுத்தியெடுக்க அல்லது உருவோட்டங்களை எண்ணங்களாய் மாற்றியெடுக்க சிவயோகமலருக்கு அந்த நேரம் தேவைப்பட்டிருக்கலாம்.

மெய்யாகவே அகவுலகும் புறவுலகும் மயங்கிய ஒரு தடுமாற்றமான தருணத்திலேயே அவரும் இருந்திருந்தார். அவர் அந்நிலைகளிலொன்று உறுதியாய்ப் பற்றியவேளை, அவர் வெள்ளவத்தையிலுள்ள மாடிவீடொன்றில் தான் இருக்கநேர்ந்த மர்மத்தை விளக்கம்கொள்ள முடியாமையின் புதிரில் அகப்பட்டுப்போயிருந்தார். முந்திய யோசிப்புக்களிலும் அதுபற்றிய நினைப்பை தான் தவறவிட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. ஆனால் இப் போது அந்தச் சிக்கல் காரணம் தெளிவற்று நின்றுகொண்டிருந்தது.

அவர் மீண்டும் சிந்தையை ஒழுங்குபடுத்த முயன்றார்.

பாணந்துறை பஸ் நிலையத்துக்குச் சமீபமிருந்த அந்த வீட்டை அடைந்தபோது, அந்த புதுவீட்டின் பிரமாண்டமும், சூழலும் அவரைத் திகிலடையவே செய்கின்றன. அவர், ‘இப்பிடியான நேரத்தில, ரண்டொரு நாளெண்டாலும், இஞ்ச நிக்கிறது பயமில்லையோ, மாமா?’ எனக் கேட்கிறார்.

மாமா அதிரச் சிரிக்கிறார். ‘ஒரு இன்போமரின்ர வீட்டை சோதினைபோட ஒரு ஆமியோ பொலிஸோ இப்ப சிறிலங்காவில இல்லை, மலர். நீ அதொண்டயும் யோசிக்காத.’

அன்று மதியம் மழைபெய்யத் துவங்குகிறது.  வெளியே போயிருந்த மாமா பார்சல் சாப்பாடு கொண்டுவந்து தருகிறார். நிலைமையை அவதானிக்க, தான் தெரியாத இடமொன்றில் அகப்பட்டுக்கொண்டதான உணர்வொன்று மனத்தே கிளர்கிறது சிவயோகமலருக்கு. புவனேஸ்வரியிடமாவது நிலைமையைத் தெரிவிக்க எண்ணமிடுகிறார். பின் இகழ்ச்சியோடு அந்த நினைப்பை ஒதுக்குகிறார். சாப்பிடப் பிடிக்கவில்லை. தண்ணீர்மட்டும் குடித்துவிட்டு கதிரையில் சாய்கிறார். தூக்கக் கிறக்கமா, பிரக்ஞையிழப்பாவென்று தெரியாத ஒரு மயக்கம் ஆட்கொள்கிறது.

எவ்வளவு நேரம் அவ்வாறிருந்தாரோ, எழுந்தபோது பகல் இன்னும் முடிந்திராத ஒரு பொழுதாகயிருக்கிறது. அது அன்றைய நாளின் பகலா, அடுத்த நாளின் பகலாவென்பதுதான் அவரறியாதிருந்தது. அவருக்கு பயமெழுகிறது. சற்றுநேரத்தில் திடுக்காட்டத்துடன் உணர்கிறார், அவர் தூங்கியிருந்த பாணந்துறை வீடாக அது  இருக்கவில்லையென. அதில் சந்தேகமிருக்கவில்லை. ஏனெனில் அவர் அப்பொழுது கண்விழித்த வீடு ஒரு மாடிவீடாகயிருந்தது. தஞ்சக்கேட்டுடன் ஓடிவந்து பல்கணியிலிருந்து வீதியை எட்டிப்பார்த்தார். வலதுபுறத்தில் கடல் தெரிந்தது. இடதுபுறத்தில் இரைந்தபடி காலி வீதி கிடந்தது. இடையே பழக்கமானதுபோல் தோன்றிய ஒரு குறுந்தெரு.

‘எப்படி வந்தன் இஞ்ச? ஆர் கொண்டுவந்தது? எப்ப வந்தன்? வயிறு காந்திறமாதிரியில பாத்தா, அஞ்சாறு நாள் ஆனமாதிரித் தெரியுதே! என்ர கடவுளே!’ என புலம்பியபடியிருக்க, கீழே தெருவில் ஒரு தனித்த உருவம் போய்க்கொண்டிருப்பதைக் காண்கிறார்

மயில்வாகனம்? அவனா? உயரம், பெருப்பமெல்லாம் அதேயளவுகளில். அவனது முள்ளம்பன்றித் தலைமுடி சரியான அடையாளமாகலாம். ஆனால் அவ்வுருவம் மொட்டை போட்டிருந்ததில் ஊர்ஜிதம் நிலைகொள்ளவில்லை. இருந்தும் மயில்வாகனமென்றே நிச்சயப்படுகிறார். அவனே தனது நிலைமையின் காரணவாளியென ஏனோ உறுதி மூள்கிறது அவரில்.

பார்த்துக்கொண்டிருக்கையில் வலதுபுறத்தின் செம்மை செறிந்த கடல் திசையில் நடந்து அவன் காணாமலாகிறான். ‘அவன்தான்… அவனேதான்… தமக்கை வீட்டிலிருந்து போறான்போல… எளிய நாய்…’

சிவயோகமலரின் நெறுமிய பற்களுக்கிடையில் ‘எளிய நா’யென்ற சொற்கள் காதில் விழுந்த சுந்தரம் எழுந்தார். தலையை இங்குமங்குமாய் அசைத்தார். அவரால் அந்த சத்தங்களை, அந்த அர்த்தங்களை மேற்கொண்டும் காதில் தாங்கமுடியாது. அவை சாம்பலில் திரண்டவை.

அவர் பின்புறப் புல்வெளியை நோக்கி நடந்தார்.

காற்றடங்கியிருந்ததில் குளிர் உறைப்பாயில்லை. வாங்கிலே அமர்ந்தார். வெகு நிதானமாக சிகரெட் எடுத்துப் புகைத்தார். மனம், அம் மென்குளிர் காற்றிலேறி பறப்பதான உணர்வெழுந்தது. முகத்தில் நட்சத்;திர ஜொலிப்பு.  விடுதலை வெளியின் வெளிச்சப் புள்ளிகளாய் கண்கள் மின்னின.

அவருக்கு நன்கு தெரியும், அப்போது… அக் கணத்தில்… அவரது மனைவி சிவயோகமலர் தன் சுயமழிந்த வரலாற்றினைச் சுயமிழந்து சொல்லிக்கொண்டிருக்கிறாரென. சற்றொப்ப பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முந்தி நடந்ததும், தான் மூன்றாண்டுகளாய் அறியக் காத்திருப்பதுமான சம்பவம்  சொற்களில் ஏறியிருக்கிறது. அத் தருணத்தை உதறி அவர் அவள் குரலெட்டாத் தூரத்தில் வந்தமர்ந்திருக்கிறார்.

விடுதலையின் பரிபூரண அனுபவம்!

அவர், அத்தகையபொழுதில் சிவயோகமலர் வெளியிடும் உணர்வுத் தீவிரத்தை சொற்களிலும் கண் புரட்டல்களிலும் கண்டிருப்பவர். அண்மையில்  மூச்செடுக்கப் பட்ட சிரமத்தில் அவர்பட்ட உடல்வாதனை தன்னையுமே அதை அனுபவிப்பவர்போல் துடிக்கவைத்ததாயினும், அதைவிட அவரது அவ்வெளிப்படுத்துகை பன்மடங்கு அதிகமென்பதை அவர் உணர்ந்திருந்தார். அச் சம்பவம் அபாண்டம், பொய், கனவு, கற்பிதமென எதுவாயிருப்பினும், அந்த 2007 மார்ச் 07இலிலிருந்து அவர் தினம் தினம் தன்னை எரித்துக்கொண்டிருக்கிறார். அவ்வாறு தினம் தினம் தன்னை எரிக்கும்படியான எந்தப் பாவமும் இம்மானுடப் பரப்பிலில்லை.

அதுவொரு பாவாத்மா; பாதிக்கப்பட்ட ஆத்மா, பொய்யால் அல்லது நிஜத்தால். அதன் வலியடங்கலே அந்த  இரவுகளின் அவரது உணர்ச்சி வெடிப்புகளெனில், அதன்மேலான ஒரு வேவு பார்த்தலும், தீர்ப்பளித்தலும் ஜென்ம ஜென்மமாய்த் தொடரக்கூடிய பாவத்தின் தடமாகிவிடும்.

அதனால் சுந்தரம் சிவயோகநாயகியின் குரலெட்டாத் தொலைவுக்கு ஓடினார்.

அச் செயல்மூலம் ஒரு கணவராய் வென்றாரோ தோற்றாரோ, ஒரு மனிதனாய் அவர் வென்றிருக்கும் கணம் அது..

அவர் வென்றிருக்கிறார். பழைய தோல்வியின் பள்ளங்களை நிரவிவிடும்படியான மகத்தான வெற்றிதானது.

அடிக்கடி நினைத்ததில்லை. ஆனாலும் அந்தப் பள்ளம், அநாதி காலமான பள்ளம் இருந்தேயிருந்தது அவர் மனத்தில். எப்போதாவது நினைப்பதுண்டு. நினைத்து தகனக்குள்ளாகவே குறண்டிப்போவதுண்டு. ஒரு சீணிப்பு, மூன்று பிள்ளைகளின் பின்னரேகூட அவர் அடைந்ததாயிருந்திருக்கிறது. குறண்டிக் குறண்டி ஒரு பூச்சியாய் மாறும் கேவலமாய் அது வடிவங்கொள்ளவில்லையே தவிர, அதனிருப்பு நிஜமானதே.

அதை அவர் ஒருமுறை நினைக்கலாம். இப்போதில்லாவிட்டால் இனி எப்போது? இதுவோர் அருமையான தருணம்.

பெரிய தாய்க்கு வசதியாயிருக்குமென்பதால் தங்கள் வீட்;டில்தான் பந்தல் போட்டு, மணவறையமைத்து தாலிகட்டுவென நடனசுந்தரத்தின் தாயார் செல்லம்மா கண்டிப்பாய் சொல்லிவிட்டார்.

சொற்களின் வலிதுணர்ந்து ஓர் எதிர்ப்பேச்சு சொல்லவில்லை வித்துவான் வீரகத்தியும்.

அதன்படி முகூர்த்த நாளன்று தாலிகட்டு ஒரு காலையில் முடிவுற, அன்று மாலையே கோயிலுக்குப் போய்விட்டு அப்படியே மணமக்கள் கால்மாற்றி மணப்பெண் வீடு வருவதென்றும், மேலே விருந்துபசாரமென்றும் ஏற்பாடு செய்திருந்தனர் பெண்வீட்டுக்காரர்.

காலையில் தாலிகட்டின் பின் மதியப் பந்தி முடிந்ததுமே, கோயில் சென்றானது; மாலையில் கால்மாற்றி முடிந்தானது; மணப்பெண் வீட்டில் விருந்துபசாரம் முடிந்தானது. இசைக் கலைஞர் சிலரும், பள்ளியாசிரியர் சிலரும் மணமக்களின் விசேஷ அழைப்பில் வந்திருந்தவர்கள் சொல்லலிக்கொண்டு கிளம்ப, ‘கந்தப்பு  மனை’யின் கிழக்குப் பார்த்த தனியறையில்  மணமக்களை பிரவேசிக்கவைக்கின்றனர் உற்றார்.

வெளியே நாகசின்ன வாசிப்பு முடிந்து ஒலிபெருக்கியில் இசைத்தட்டுப் பாடல்கள் போட்டிருந்தார்கள்.

வெளியே நூறு உறவினர்களும் போட்ட இரைச்சல், ஒலிபெருக்கியின் அலறல் யாவும் உள்ளின் ரகசிய சத்தங்களை மூடியிருந்தன.

ஆயினும் விழுந்திருந்த மௌனத்தின் இதழுடைத்து இருவரிடமிருந்தும் ஒரு வார்த்தை பிறந்திருக்கவில்லை.

பாயில் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அதை அணைத்திருக்கிறாள் சிவயோகமலர். அருகே சுவரோடு சாய்ந்தபடி கால்நீட்டி நடனசுந்தரம்.

வெளியில் இருந்திருந்த சுமுகம்கூட உள்ளே வந்ததும் அவர்களிடத்தில் அற்றுப்போயிருந்தது.

அந்த விசேஷம் அன்று நடந்தாகவேண்டும்.

அந்த விசேஷம்பற்றி உரைக்க, ஊரிலிருந்துகூட வரவேண்டியதில்லை, அந்த வீட்டிலேயே கிழவிகள் இருந்திருந்தார்கள். ஒருவேளை இதுவரை சொல்லிக்கொடுத்திருக்கவில்லையோ? ஆயின், சொல்லித் தெரிவதில்லை மன்மதன் கலை என்பதுதானென்ன?

நேரம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

நடனசுந்தரம் அவ்வப்போது அவளைப் பார்க்கிறான்தான் திரும்பித் திரும்பி.

ஆனால் பார்வையில்கூட ஓர் இணக்கம் அவள் முகத்தில் காணக்கிடக்கவில்லை.

அவனது மன உடல் உந்துதல்களை அதுவே விலகி நிற்க வைக்கிறது. அதை உடைக்க வலிந்த ஒரு சிரிப்போடு, ‘விளக்கை இனி நூப்ப’மென்று எழுந்துபோய் சாமிப் படத்து ஐந்து நாக்கு குத்துவிளக்கின் நான்கு திரிகளை நசுக்கி அணைத்துவிட்டு அவன் வர, அவள் பாயிலே படுத்திருந்துகொண்டிருக்கிறாள்.

அவன் அருகே தன்னைச் சரிக்கிறான். சரிந்து கிடந்து மஞ்சள் ஒளியில் மினுமினுக்கும் அவள் முகத்தைப் பார்க்கிறான்.

அந்த முகத்தில் அழைப்பு இல்லை. ஆயினும் எதுவுமில்லாமல் போய்விடவில்லை என்பதுபோல் இமைகள்மட்டும் அவ்வப்போது வெட்டியடிக்கின்றது மின்னலாய்.

நேரம் மேலே தன் கழிதலைத் துவங்குகிறது.

இப்போது அவனுக்குள் பயம் வந்து விழுந்தது.

அது நடக்காவிட்டால் கல்யாணம் முடிந்ததாக ஆகாதே.

அவன் பார்வை தாவணி நசிந்து ஒதுங்கிய நெஞ்சில் படிகிறது. மென்வெளிச்சத்தில் பட்டுத் துணியின் அந்த பச்சைச் சட்டைக்குள் விம்மிக் கிடந்தது ஒருபக்க முலை, அவன் பார்வையை நகர்த்த முடியாதவனானான்.

அவன் நிதானம் சரிந்தது. ‘மல’ரென கரகரத்தபடி அவள் தோளில் கைவைத்தான்.

ஓர் அசைவுமின்மை, அங்கே தடையில்லையென்பதாய்க் கருதவைக்கிறது. விரும்பினாலெடுவென்ற தாட்சண்யமா?

அவனது மோகவாசலின் கதவினை யாரோ உடைத்தனர். மேலே மணித்துளி ஆகவில்லை.

அவனுள் பிரபஞ்சங்கள் கிடுகிடுத்தன.

மறுகணம், அவன் வெட்கப்பட்டு ஒதுங்கினான்.

அவளேங்கி அவனை தீட்சண்யமாய்ப் பார்த்து தாபம் துடிக்க  அந்த இருட்டுள் கிடந்தாள்.

தூரத்தே சிவன்கோவில் உதயப் பூஜை மணி அலுப்போடு அசைந்து டாண்… டாண்…. என்றது.

 

அன்று… அந்த இரவில்… எல்லாவறறிற்கும் ஒரு முடிவு வந்தது.

அவர் எழுந்து கூடத்துக்கு நடந்தார். திறந்த வாசல் கதவை அகாலமான நேரத்தையும் அசட்டைசெய்து, சற்று பலமாகவே   மூடினார். பிணைச்சல்கள் எண்ணெய்ப் பசையற்று கீச்சென்ற ஒலியெழுப்பின. காலையில் அதற்கு எண்ணெய் விடவேண்டுமென எண்ணியபடி கூடத்துக்கு வந்தார்.

சுவர்க் கடிகாரம் 1.15ஐக் காட்டியபடியிருந்தது. அவர் தடுமாற்றம் கொள்ளவில்லை. பற்றறி முடிந்திருக்குமென எண்ணினார். மதியத்தில்தான் நின்றிருக்கிறது. அடுத்த முறை கடைக்குச் செல்லும்போது பற்றறி வாங்கவேண்டுமென ஞாபகத்தில் பதித்தார்.

சிவயோகமலரின் குரல் ஓய்ந்திருந்தது. இரவு விளக்கு தொலைக்காட்சி நிறுத்தப்பட்டிருந்ததில் பிரகாசமாய் எரிந்தது. மனைவி தூங்கியிருக்கக்கூடுமென நினைத்தார்.

வெளிச்ச விளக்கை அணைத்துவிட்டு இரவு விளக்கைப் போட்டார்.

ஜன்னலினூடு தெரிந்தது விகாசித்துக் கிடந்த வானம்.

அப்பாடா!

எல்லாம் வென்றாயிற்று.

(முற்றும்)

 

 நன்றி: தாய்வீடு ,  ஓக. 2023

 

 

 

 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்