Posts

Showing posts from 2025

(கதை) அவனது தம்பி இன்னும் கீழே இறங்கவில்லை

    அவன் அதை எதிர்பார்க்கவில்லை. அவளது தொண்டைக் குழியிலிருந்து   விடுபட்ட சொற்களில் அவன் சிதறிப்போனான். அவை நுழைந்து சென்ற செவிவழியெங்கும் பொசுங்குண்டதுபோல் இன்னும் எரி செய்துகொண்டிருந்தன. அம்மாவா சொன்னாள்? அத்தகைய வார்த்தைகள் அவளுக்கும் தெரிந்திருந்தனவா? அவனால் நம்பமுடியவில்லை. ஆனால் அது நடந்துதானிருந்தது. அவனுக்கே நடந்திருந்ததில் அவன் அய்மிச்சப்பட அதில் ஏதுமில்லை. அவனுக்குள் நீண்டகாலமாக ஒரு ஆசை இருந்திருந்தது. நியாயமான ஆசைதான். அதை வெளியிட ஒரு சமயம் வாய்த்தபோது அவன் தயக்கம் காட்டவில்லை; அல்லது வார்த்தைகளே அவனுள்ளிருந்து படீரென வெடித்துக் கிளம்பிவிட்டன. அது இரவுச் சாட்டின் பின்னான நேரம். அநேகமாக, விஷயங்கள் கரடுமுரடாக வந்து விழுந்தாலும், கனதிகொண்டு உறைந்திருப்பதில்லை அந்த நேரத்தில். தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருக்கும் செய்தி, சினிமா, கார்ட்டூன், சீரியலென எதுவும் அதைத் சடுதியாகவே அய்தாக்கிவிடுகிறது. நடந்தது இதுதான். கூடத்துள் அம்மா, அவனது வளர்ப்புத் தந்தை தோமா, குண்டுத் தம்பி மிஷேல், தாத்தா எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள். அவரவர் காரியங்களில் கருத்தூன்றி அன...