‘விஜயநகரம்’ நாவலை முன்வைத்து…

வரலாற்றுக் களத்தில் யதார்த்த – புனைவுப் பாத்திரங்களின் மோதுகை சல்மான் ருஷ்டியின் ‘விஜயநகரம்’ நாவலை முன்வைத்து… சல்மான் ருஷ்டியின் Victory City (2023) என்ற ஆங்கில நாவல், ‘விஜயநகரம்’ என்கிற தலைப்பில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஜுலை 2024இல் வெளிவந்திருக்கிறது. ஆர்.சிவகுமார் மொழிபெயர்த்திருக்கிறார். என் வாசிப்பின் கவனத்தில் பதியும் எந்தவொரு நூலும் இதழ்களிலோ இணையதளங்களிலோ பெரும்பாலும் பதிவுபெற்றே வந்துள்ளது. ஆனால் வெளிவந்த இரண்டொரு மாதங்களில் கைவசமான இந்த நாவலை இரண்டு தடவைகள் வாசித்திருந்தும், என்னைப் பாதித்துள்ள நோய்க் கூறின் பக்கவிளைவான எழுதமுடியாமை அதுபற்றிய ஒரு பதிவிடுதலை கடந்த ஓராண்டாகவும் தடுத்திருந்துவிட்டது. இப்போது நோயின் வீச்சு குறைந்துவரும் இத் தருணத்தை நான் தவறவிட்டுவிடக் கூடாது. இந் நாவல்பற்றி அறிந்தபோதே, அதன் ஆங்கிலத் தலைப்பானது, வெகுகாலத்தின் முன் வாசித்திருந்த அகிலனின் ‘வெற்றித் திருநகர்’ நாவலை நினைவுபடுத்தியது. அதன் முக்கியமான கதாபாத்திரங்களான கிருஷ்ணதேவராயரும், நாமக நாயக்கரும், விசுவநாதனும்கூட என் மனக் கண்ணில் அசைவியக்கம் காட்டினார்கள்...