‘விஜயநகரம்’ நாவலை முன்வைத்து…
வரலாற்றுக்
களத்தில்
யதார்த்த
– புனைவுப் பாத்திரங்களின் மோதுகை
சல்மான்
ருஷ்டியின் ‘விஜயநகரம்’ நாவலை முன்வைத்து…
சல்மான் ருஷ்டியின் Victory City (2023) என்ற ஆங்கில நாவல்,
‘விஜயநகரம்’ என்கிற தலைப்பில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஜுலை 2024இல் வெளிவந்திருக்கிறது.
ஆர்.சிவகுமார் மொழிபெயர்த்திருக்கிறார்.
என் வாசிப்பின் கவனத்தில் பதியும் எந்தவொரு நூலும் இதழ்களிலோ
இணையதளங்களிலோ பெரும்பாலும் பதிவுபெற்றே வந்துள்ளது. ஆனால் வெளிவந்த இரண்டொரு மாதங்களில்
கைவசமான இந்த நாவலை இரண்டு தடவைகள் வாசித்திருந்தும், என்னைப் பாதித்துள்ள நோய்க் கூறின்
பக்கவிளைவான எழுதமுடியாமை அதுபற்றிய ஒரு பதிவிடுதலை கடந்த ஓராண்டாகவும் தடுத்திருந்துவிட்டது.
இப்போது நோயின் வீச்சு குறைந்துவரும் இத் தருணத்தை நான் தவறவிட்டுவிடக் கூடாது.
இந் நாவல்பற்றி அறிந்தபோதே, அதன் ஆங்கிலத் தலைப்பானது, வெகுகாலத்தின்
முன் வாசித்திருந்த அகிலனின் ‘வெற்றித் திருநகர்’ நாவலை நினைவுபடுத்தியது. அதன் முக்கியமான
கதாபாத்திரங்களான கிருஷ்ணதேவராயரும், நாமக நாயக்கரும், விசுவநாதனும்கூட என் மனக் கண்ணில்
அசைவியக்கம் காட்டினார்கள். ஆனாலும் ‘விஜயநகரம்’ வேறு சங்கதிதான். அது தொடர்கதைப் பாங்கானது;
இது நாவல். அது வெகுஜன வாசிப்புக்கானது; இது வெகு குறைவான தீவிர வாசகர்களுக்கானது.
பொதுவாக விமர்சனமென்பது சமூகத்துக்கும் தனிமனிதருக்குமிடையிலானதும்,
சமூகத்துக்கும் சமூகத்துக்கும் தனிமனிதருக்கும் தனிமனிதருக்கும் இடையிலானதுமான அக புற
சிக்கல்களை ஆய்வுரீதியாக வெளிப்படுத்தும் ஒரு இலக்கியத் துறையெனச் சொல்லப்படுகிறது.
ஒரு நூலின் தர வெளிப்பாடு
இரண்டு தளங்களில் தொழிற்படுகிறது. ஒன்று, அதை அதுவாகக் கண்டு முன்வைக்கும் மதிப்புரை.
மற்றது, விமர்சகனின் வாசிப்பு அனுபவங்களை ஆதாரமாய்க் கொண்ட ஓர் ஒப்பீட்டினடியான தர
நிர்ணம். அதை விமர்சனமென்று சுருக்கமாகச் சொல்லலாம்.
விமர்சனங்களில், ஒரு மொழிபெயர்ப்பு நாவலின் விமர்சனமானது
கூடுதலான சிரமத்தையும் உழைப்பையும் வேண்டுவதாக இருக்கிறது. ஏனெனில் அங்கே இரண்டு படைப்பாளிகளின்
இருப்பு இயங்குகிறது. அதனால் மூலவாசிரியனின் நடை, மொழி வீச்சு, கலா உத்தி, சமத்காரம்
ஆகியனவற்றின் பரிச்சயம் ஒரு விமர்சகனுக்கு அவசியமாய் இருந்துவிடுகிறது. போலவே, மொழிபெயர்ப்பாசிரியனின்
விபரங்களும் முதன்மைத் தேவையாக ஆகிவிடுகின்றன.
சல்மான் ருஷ்டியின் Midnight’s Children 1981இல் வெளிவந்தது. அதற்குப்போல் எந்தவொரு இந்தியப் படைப்பாளியின் நாவலும்
அந்தளவு விமர்சனங்களை எதிர்கொண்டதில்லை. அது இந்திய ஆங்கில இலக்கியத்தின் முக்கியமான
வரவு. கீழ்த் திசை வாசக, விமர்சன தளங்களை அது அசைத்துப் போட்டதென்றாலும் மிகையில்லை.
1988இல் வெளிவந்தது ருஷ்டிக்கு பட்வா (Patwa) விதிக்கப்படக் காரணமான Satanic
Verses நாவல். The Moor’s Last Sigh (1995) என்பது ருஷ்டியின் இன்னொரு முக்கியமான நாவல்.
அவரது பதினைந்து நாவல்களில் இந்த மூன்றும் முக்கியமானவையென விமர்சகர்களால் கருதப்படுகின்றது.
ருஷ்டியின் கலாபூர்வமான வெளிப்பாடுகளுக்காக மட்டுமில்லை, அவற்றின் சமரசமற்ற அரசியல்
கருத்துக்களின் இருப்புக்காகவும்தான்.
சல்மான் ருஷ்டியின் மாயா யதார்த்தவாத எழுத்துக்களுக்கு ஆங்கில
இலக்கிய உலகில் தனித்த கவனம் உண்டு. கார்ஸியா மார்க்வெய்ஸ்போன்ற தென்னமெரிக்க எழுத்தாளர்களின்
மறைவுக்குப் பின்னால் அவர்களது இலக்கியப் பாணியை தொடர்ந்துகொண்டிருப்பவர் சல்மான் ருஷ்டியாக
இருக்கிறார். வரலாற்றுத் தளத்தில் கதைகளை மாயமூட்டி நகர்த்திச் செல்லும் அவரது பாணிக்கு
உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் ருஷ்டியின் ஆரம்ப கால மூன்று நாவல்களுக்கு இணையானது
அவரின் பதினாறாவது நாவலான இந்த ‘விஜயநகரம்’ என்றே தோன்றுகிறது.
விஜயநகரப் பேரரசு (1336-1646) இந்திய உபகண்டத்தின் பிற்காலச்
சரித்திரத்தில் சுமார் மூன்று நூற்றாண்டுகள் நீடித்திருந்த ஒரு தாராண்மைவாத அதிகார
நிறுவனமாகும். பல்வேறு வம்ச அரசர்கள் அதை ஆட்சிசெய்திருந்தார்கள். போரும் சூழ்ச்சியும்
பொறாமையும் துவேஷங்களும் உள்ளோடியிருந்த அதன் நிஜ வரலாறு மிக்க பயங்கரங்களைக் கொண்டது.
ஆனால் கலை இலக்கியங்களின் வீச்சும், வர்த்தக விருத்தியும், செல்வச் செழிப்பும், மத
நல்லிணக்கமும் அவற்றை ஒரு திரையாகப் போர்த்தி மூடிவிட்டிருந்தன.
பாரதத்தின் தென்பகுதி முழுக்கவும், இலங்கையும் அடங்கிய பேரரசாய்
வளர்ச்சி பெற்றிருந்தாலும், அது சிதறுவதற்கான ஒரு பொழுது, உலகின் எல்லா பேரரசுகளுக்கும்போல
இருக்கவே செய்தது.
விஜயநகரத்தின் இந்த வரலாற்றைத் தெரிந்துகொண்டுதான் வாசகன் நாவலுக்குள் பிரவேசிக்கவேண்டியவனாக இருக்கிறான்.
ஏனெனில் சரித்திர நிகழ்வுகளின் அகன்ற திரையில் தன் கதையை நாவல் அநாயாசமாக விரித்துச்
செல்கிறதே தவிர, சரித்திரத்தின் ஒர் இடைவெளியை நிரப்பவோ, ஒரு நிகழ்வை மறுவாசிப்பு செய்யவோகூட
அது முயல்வதில்லை. கிருஷ்ணதேவராயர் வருகிறார், ஏற்கனவே தெரிந்த ஒரு மனிதராக; அச்சுததேவராயர்
வருகிறார், அவரும் ஏற்கனவே பரிச்சயப்பட்டவராக. நாவல் இந்த பாத்திர வார்ப்பென்ற விஷயத்தில்
பெரிதாக மினைக்கெட்டு நிற்கவில்லை. புனைவுப் பாத்திரங்கள் இந்த வரலாற்றுப் பின்னணியில்
யதார்த்தப் பாத்திரங்களுடன் மோதியும் பணிந்தும் விட்டுவிலகியுமாக அநாயாசமாய் நடந்து
சென்றுவிடுகின்றன.
நாவலின் தொடக்கமே மாயப் புனைவின் வழிதான் விரிந்து செல்கிறது.
கம்பிலி ராயரின் சிறிய அரசின்மேல் வடவிந்தியப் படை தொடுத்த போரில் அரசு மொத்தமுமே அழிந்துபோகிறது.
இறந்த போர் வீரரின் மனைவிகள் பம்பா நதிக்கரையில் தீமூட்டி உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.
அவையெல்லாம் கண்டுகொண்டு நதிக் கரையில் நிற்கிறாள் அவ்வாறு இறந்தவர்களில் ஒருத்தியின்
சிறிய மகள். அவள்தான் பம்பா கம்பானாவாக வளர்ந்து வருகிறாள். மந்தானா மடத் தலைவர் வித்யாசாகரின்
சிஷ்யையாக தன் பால்ய பருவத்தைக் கழிக்கும் அவள்மீது தெய்வத்தின் குரலாக ஒலிக்குமளவான
அதீத சக்திகள் இறங்குகின்றன. அவளே ஒரு மாயத்தின் அவதாரமாக ஆகிப்போகிறாள். இளமை அவள்மீது
சாசுவதம் பெறாவிடினும் நீண்டு நிலைத்திருந்து நகருகிறது.
ஒருபோது ஹுக்க சங்கம, புக்க
சங்கம என்ற இரண்டு இடைக்குல சகோதரர்களிடம் அவள் கொடுக்கும் விதைகளின் விதைப்பினூடாக கனவுலகம்போல் விரிந்தெழுகிறது
ஒரு நகர். அங்கே மரங்கள் முளைக்கின்றன; குளங்கள் தோன்றுகின்றன; நிலவடிக் கோயில் வடிவமைகிறது;
போலவே மனிதர்களும் குழந்தைகளாகவன்றி முழு மனிதர்களாக உருவெடுக்கிறார்கள். அவ்வாறு உருவாகும்
நாடு வெற்றித் திருநகர் – ‘விஜயநகரம்’, எனப் பெயர் பெறுகிறது. அதை ‘பிஸ்நகா’ என்கிறான்
போத்துக்கீசியப் பயணியான டொமிங்கோ நூனிஸ் .
தொடர்ந்து அரியணை ஏறும் இந்த இரண்டு சகோதரர்களில் மூத்தவனான
ஹுக்கராயரை மணக்கிறாள் பம்பா கம்பானா. அவளுக்கு,
டொமிங்கோ நூனிஸ்ஸின் காதலில் மூன்று பெண்பிள்ளைகள் பச்சைக் கண்களும் செந்தலையும் வெள்ளைத்
தோலுமாய்ப் பிறக்கின்றன. அவர்களுக்கு ஜோத்ஸ்னா, ஸெரால்டா, யுக்தஶ்ரீ என பெயரிடுகிறாள்.
அரசியாக இருபது வருஷங்கள் தொடரும் அவளது அந்த வாழ்க்கை ஹுக்கராயரின் மரணத்துடன் ஒரு முடிவுக்கு வருகிறது. தொடர்ந்து
டொமிங்கோ நூனிஸ்சும் காலமாகிறான். பம்பா கம்பானாவென்ற அந்த அழகி அடுத்து அரியணையேறும்
புக்கராயரை திருமணம் செய்கிறாள். அத் திருமணத்தில் அவளுக்கு மேலும் பகவத், எரபள்ளி,
குண்டப்பா என்ற மூன்று ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. அவர்கள் அரசுரிமை கேட்டு கலகம்
விளைக்காதவாறு இலங்கை யாழ்ப்பாணத்தில் விட்டு வளர்க்கப்படுகிறார்கள். புக்கராயருக்கு
இளைய மூன்று சகோதரங்களும்கூட அரசுரிமை கொண்டாடப்படுவதிலிருந்து தடுக்க பேரரசின் வடதிசையில்
தூரவாயுள்ள ஓரிடத்தில் சில அரசியல் கடமைகளைச் செய்து வாழ விடப்படுகிறார்கள்.
ஆனால் இவர்கள் கடைசியில் ஒன்று சேர்கிறார்கள். பம்பா கம்பானாவின் பெண் பிள்ளைகளுக்கு அரிசுரிமை
சேர்ந்துவிடக் கூடாதென கலகம்செய்து படையுடன் வருகிறார்கள். போர் நடக்கிறது. பெரும்
அழிவுகள் விளைகின்றன. அதன் வலிமையில் எதிர்நிற்க முடியாத பம்பா கம்பானா தன் மகள்களுடனும்,
ஹலேய கோட்டே மற்றும் ஆசான் லீ ஆகிய இரண்டு முதியவர்களுடனும் நகரைவிட்டோடுகிறாள்.
அந்தளவில் ‘பிறப்பு’ என்ற நாவலின் முதலாம் பகுதி முடிவடைகிறது.
மேலே அவள் வனமடைவதில் தொடங்கி, ஏற்கனவே பெற்றிருந்த தெய்வ வரங்களால் அதன் சகல இடையூறுகளையும்
கடந்து மிக நீண்டவொரு காலத்தை அங்கே கழிக்கையில், தகுந்த வேவு பார்த்தலின்மூலம் தான்
நாடு திரும்பவேண்டிய காலம் வந்துவிட்டதறிந்து அவள் பிஸ்நகா திரும்பும்வரையான நாவலின்
இரண்டாம் பகுதி ‘வனவாச’மென பெயர்பெறுகிறது.
மாயப் புனைவின் வழி இந்த இரண்டாம் பகுதியை ஆசிரியர் நடத்திச் சென்றிருந்தாலும், அதுவொன்றும்
பரவசத்தின் உச்சத்துக்கு வாசகனை எடுத்துச் செல்வதில்லை. வனவாசத்தில் இருக்கும்போது ஆசான் லீ தன் சொந்த தேசம்
திரும்புவதற்கான ஆயத்தங்களைச் செய்ய கோவா புறப்படத் தயாராகிறார். முதுமையின் எல்லையில்
நிற்கும் அவர்மீதுள்ள காதலால் தானும் வருவேனென பிடிவாதம்செய்து கூட பயணிக்கிறாள் ஜோத்ஸ்னா.
வனப் பெண்களுடன் கொண்ட தொடர்பில் யுக்தஶ்ரீ அவர்களுடனே தங்கிவிட முடிவு செய்கிறாள்.
ஸெரால்டாவை, அவளது ஹலேய கோட்டேயின் மேலான பிரியம் அவர் பம்பா கம்பானாவுக்குத் துணையாக
பிஸ்நகா சென்று திரும்பும்வரை வனத்தில் காத்திருக்க வைக்கிறது.
ஹலேய கோட்டேவுடன் பம்பா கம்பானா பிஸ்நகா வந்து சேர்கிறாள்.
மாதுரிதேவி என்ற ஜோஸ்யம் பார்க்கிறவள் வீட்டில் ரகசியமாய்த் தங்குகிறாள்.
கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கு வரும் காலம் இது. போர்கள் ஓய்ந்து
புகழ் ஓங்கிய காலமான இது ‘கீர்த்தி’ என்ற தலைப்பில் மூன்றாம் பாகமாகத் தொடர்கிறது.
ராயரின் அபிமானத்தைப் பெற்றவளாகயிருந்தாலும் அவர் திருமணம்
செய்யும் திருமலாதேவியதும் அவளது தாயாரதும் போட்டி பொறாமைகளால் பம்பா கம்பானாவுக்கு
நெருக்கடிகள் ஏற்படுகின்றன. ருஷ்டியின் மொழியும் நடையும் வீறுகொண்டெழும் பல நிகழ்வுகளைக்
கொண்டதாக இந்தப் பகுதியுள்ளது.
இதைத் தொடர்ந்து வருவது இறுதிப் பகுதியான ‘வீழ்ச்சி’. பேரரசின்
அழிவு கிருஷ்ணதேவராயரின் பிற்கால ஆட்சிப் பகுதியில் தொடங்கியிருந்தாலும், அவருக்குப்
பின்னால் மன்னனாக வரும் அச்சுததேவராயரின் காலத்திலும் தொடர்ந்து ஆலியா ராமராயர் காலத்துடன்
முழுமை பெறுகிறது.
ஆசான் லீ, ஹலேய கோட்டே, மாதுரிதேவி, மாதவாச்சாரியார், வித்தியாசாகர்,
ஜோத்ஸ்னா, ஸெரால்டா, யுக்தஶ்ரீ, பம்பா கம்பானா ஆகிய புனைவுப் பாத்திரங்களின் இயக்க
வழியில் மிக வலு பொருந்திய விஜயநகரப் பேரரசின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சிக் காலங்களை
உள்ளடக்கியதாய் ஒரு கதை சல்மான் ருஷ்டியால் இங்கே விரித்து விடப்பட்டிருக்கின்றது.
யதார்த்த பாத்திரங்களான ஹுக்கராயர், புக்கராயர், கிருஷ்ணதேவராயர்,
அச்சுததேவராயர், நரசிம்மா, ராமராயர் போன்றவை பேரரசின் எல்லை காப்பதற்காகவோ விரிப்பதற்காகவோ
அல்ல, தத்தம் அதிகாரங்களை நிலைநிறுத்த தம்முள் மோதிக்கொள்கின்றன. போலவே, புனைவுப் பாத்திரங்களான
பம்பா கம்பானா, மாதவாச்சாரியார் போன்றவற்றுடனும் இவர்கள் மோதிக்கொள்கிறார்கள். இது
அதிகாரத்தின் விருப்பினால் நிகழ்வதில்லை. மாறாக, ஆளுமைகளின் போட்டி பொறாமைகளினால் சம்பவிக்கின்றது.
இதில் வெற்றி யாருக்காகின்றது என்பதே நாவலின் நாலாம் பகுதியான ‘வீழ்ச்சி’யில் எடுத்துரைக்கப்படுகிற
விஷயம். அதைநோக்கியே முந்திய மூன்று பாகங்களின் கதையும் திட்டமுடன் நகர்த்தப்படுவதாய்ச்
சொல்லமுடியும்.
பம்பா கம்பானாவின் கதையை, விஜயநகரப் பேரரசின் வரலாற்றுப்
பின்னணியில் மாயங்களை நிறைத்து படைப்பாளி எழுதியிருக்கிறார் என்பது சரியான ஒரு தீர்ப்புத்தான்.
அதனால்தான் பம்பா கம்பானாவின் வாழ்நாட் காலத்தை இருநூற்று நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு
நீட்டிக்கும் தேவை அவருக்கு ஏற்படுகிறது. இது தன் சாபமென அவளும், சிலவேளை படைப்பாளியுமே,
எண்ணிக் கொண்டாலும், உண்மையில் அந்த அதிமானுட வாழ்வில் சோகம் அவளுக்குப் பின்தள்ளப்பட்டு
விடுகிறது. தன் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும்கூட தன்னைவிட முதியவர்களாய் மரணமடையும்
தருணங்களை பம்பா கம்பானா சந்திப்பது தவிர்க்கமுடியாதபடி துயர அலைகளை ஒரு தாயாய் அவளில்
கிளரச் செய்கின்றனதான். ஆனால் அவளுக்கான காமத்தின்
தீர்வைகளால் அனுபவங்கள் ஞானமாய்த் தெளியும் பலனடைவதையும் மறுப்பதற்கில்லை.
காமத்தின் திசைவழி அலையாவிட்டாலும், அவளுக்கு தன் வாழ்நாளின்
நீட்சி நிறைய உடலுறவுக்கான தொடர்புகளையும் திருமணங்களையும் அடைய வைத்துக்கொண்டே இருக்கின்றது.
கிருஷ்ணதேவராயர் காலத்தில், அவரின் சாத்திரப்படி மணஞ்செய்த மனைவிக்கிணையான அதிகாரம்
பெற்றவளாயும் பம்பா இருக்கிறாள். அதன்மூலம் தன் விருப்பத் திட்டங்களை அவளால் நிறைவேற்றவும்
முடிகிறது.
தன் கணவர்களது ஆட்சிக் காலத்தில் தானே போராளியாகி படையுடன்
நடந்த பம்பா கம்பானா, ஒருகாலத்தில் பதிலி அரசியாகவும் ஆகிக்கொள்கிறாள். ஆனால் அரசன்
போர்களத்தில் எதிரிகளோடு யுத்தம் செய்துகொண்டிருந்த காலத்தில் அரசுக்கெதிராக துரோகம்
செய்தாளென பம்பா கம்பானாமீது குற்றஞ்சாட்டப்படுகிறது. அதே குற்றம் அவளுக்கு அனுசரணையாகயிருந்த
அமைச்சர் திம்மராசுமீதும்தான்.
அரசன் அவர்கள் இருவரின் கண்களையும் பறிக்க ஆணையிடுகிறான்.
அவர்களது கண்கள் பறிக்கப்படுகின்றன.
பம்பா கம்பானாவுக்கு மந்தானா மடத்தில் தஞ்சம் கிடைக்கிறது.
அவளது எதிரியாகவும் பாதுகாவலராகவும் ஒரு காலத்தில்
விளங்கிய வித்யாசாகர் தலைமை வகித்த மடம் அது. அங்கிருந்த காலத்தில்தான் கல்வியும் கவிதை
புனைதலும் அவள் கற்றாள். ஜெயபராஜெய (வெற்றியும் தோல்வியும்) என்று அவள் பின்னால் எழுதவிருக்கும்
பெருங்கவிதைக்கான முன்னுரையை அவள் சிறுமியாக இருந்த காலத்தில் அங்கிருந்துதான் எழுதினாள்.
கண்களை இழந்த பின்னால் விஜயநகரத்தின் வரலாற்றை – ஜெயபராஜெயவை, தன் மனக் கண்ணில் கண்டு
கண்டு தன் வாழ்நாள் சாதனையாக எழுத தீர்மானம் கொள்கிறாள்.
ஆரம்ப பாரதக் கதையான ‘ஜெயகதா’ போல, விஜயநகரத்தின் வரலாற்றை
இருபத்து நாலாயிரம் பாடல்களில் புனைகிறாள். அதை எழுத கிருஷ்ணதேவராயரின் மகள் திருமலாம்பாள்
உதவிசெய்கிறாள். பம்பா கம்பானா சொல்ல திருமலாம்பாள் எழுத விஜயநகரத்தின் வரலாறு காவியமாகிறது.
பின்னால் திருமலாம்பாள் அங்கிருந்து அரண்மனை செல்ல நேர்கையில் தானே அதன் மீதியை எழுதி
முடித்து தன் இருப்பிடத்தில் குழிதோண்டி அவள் புதைத்து வைக்கிறாள்.
அந்த கையெழுத்துப் பிரதி சுமார் நாலரை நூற்றாண்டுகளுக்குப்
பிறகு கண்டெடுக்கப்படுகிறது. விஜயநகரத்தின் கதை அறியவருகிறது. அந்தப் பிரதியிலிருந்துதான்
சல்மான் ருஷ்டியின் ‘விக்டரி சிற்றி’ (வெற்றித் திருநகர்) படைப்பாக எழுகிறது.
கிருஷ்ணதேவராயரின் காலத்துடன் விஜயநகர பேரரசின் பொற்காலம்
இறங்குமுகம் கண்டாலும், அது அச்சுததேவராயரின் காலத்தில் மேலும் நலிவடைந்து, அவரின்
பின் அரசராக வரும் ஆலியா ராமராயரின் காலத்தில் முற்றாக அழிந்துபோகிறது.
எப்போதும் ஒரு பேரரசானது எதிரிகளால் சூழப்பட்டிருப்பதால்
போர்களையும் அதில் மாறி மாறி வெற்றி தோல்விகளையும் அடைந்துகொண்டிருக்கவே செய்கிறது. ஆனால் ராமராயர்
தன் சூழ்ச்சித் திறனால் வடக்கிலுள்ள எதிரிகளின்
அபாயத்தை அடக்கிவைக்கிறான்.
ஆனால் அவர்கள் எப்போது ராமராயரின் சூழ்ச்சியைப் புரியும்
கணத்திலிருந்து நிலைமை மாறிப்போகிறது. விஜயநகரத்தின் மேல் அவர்களது ஒன்றிணைந்த படையெடுப்பு
நிகழ்கின்றது. 1565இல் தலைக்கோட்டையில் நடைபெறும் அந்த யுத்தம்தான் விஜயநகரத்தின் அழிவாக
வந்து விழுகிறது. ராமராயரும் யுத்த முனையில் எதிரிகளால் கைது செய்யப்பட்டு சிரச்சேதம்
செய்யப்படுகிறான்.
ஒரு காலத்தில் எல்லாம் உடையதாகயிருந்தது விஜயநகரம். இப்போது
எதுவுமில்லையென ஆகிப்போனது. அதை பம்பா கம்பானா தன் வரலாற்று நூலின் முன்னுரையில் இவ்வாறு
எழுதிவைத்திருக்கிறாள்:
பம்பா
கம்பானாவாகிய நான் இந்த நூலின் ஆசிரியர்.
ஒரு பேரரசு எழுந்ததையும் வீழ்ந்ததையும்
காண நான் வாழ்ந்தேன்.
அவர்கள்
எவ்வாறு இப்போது நினைவுகூரப் படுகிறார்கள் இந்த
அரசர்களும் இந்த அரசிகளும்?
….. அவர்களை நினைவுகூர நான்
தேர்ந்தெடுத்த முறையிலேயே அவர்கள் நினைவுகூரப்படுவார்கள்.
….நானுமே இப்போது ஒன்றுமில்லை.
மீதமிருப்பது வார்த்தைகளின் இந்த நகரம் மட்டுமே.
வார்த்தைகள் மட்டுமே வெற்றியாளர்கள்.
மெய்தான். வார்த்தைகள் மட்டுமே வெற்றியாளர்கள். ஏனெனில் வென்றவர்களின்
வார்த்தைகளாக அவை இருக்கின்றன.
‘பேரரசின் தலைநகராக பிஸ்நகாவை ஆக்கியிருந்த அனைத்துமே கிட்டத்தட்ட
எரிக்கப்பட்டு இடிபாடுகளாக, ரத்தமாக, சாம்பலாக உருமாற்றப்பட்டன…
‘ஜெயபராஜெய’வைப் புதைத்த பின் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து
அவள் அழைத்துச் சொன்னாள்: ‘நான் அதைச் சொல்லி முடித்துவிட்டேன். என்னை விடுவி.’ பிறகு
காத்திருந்தாள்….
‘அவள் சதை உலர்ந்து சருகானது, அவள் எலும்புகள் நொறுங்கின,
சில கணங்கள் கழித்து அவளுடைய எளிமையான உடைகள் மட்டுமே தூசி நிரம்பி நிலத்தில் இருந்தன’
என நாவல் பம்பா கம்பானாவின் கதையை முடிக்கிறது.
அது மரணமில்லை ; காற்றில் ஒரு கரைவு.
வார்த்தைகளே இறுதியாக எஞ்சுகின்றனவெனில் ஜெயபராஜெயவில் எஞ்சும்
வார்த்தைகளும் அவளாகவே இருக்கமுடியும்.
ஆக, ஆளுமைக்கானதும், அதிகாரம் செலுத்துவதற்கானதுமான மோதுகைகள்
ஓய்ந்தன. பாத்திரங்கள் மறைந்தன. ஆனால் பம்பா கம்பானா மட்டும் வார்த்தைகளில் எஞ்சிநிற்கிறாள்.
மூல மொழியில் படைப்பை வாசிக்காமல் பெயர்ப்பு மொழியிலாகமட்டும்
அதை வாசித்துவிட்டு செய்யப்படும் எந்தவொரு மதிப்பீடும் பாதி திறனாய்வு வலுகொண்ட உபகரணத்தால்
அளவீடு செய்யப்பட்டதாகவே கொள்ளப்படவேண்டும்.
வாசகன் மொழிபெயர்ப்பாளன் மீதான நம்பிக்கையோடுதான் படைப்பினுள்
இறங்குகிறான். விமர்சகனும். அதை உடைத்துவிடாதபடி வாசிப்பு சென்று முடிந்திருந்தால்
அது நல்லவொரு மொழிபெயர்ப்பு நூல் என்றாகிவிடுகிறது. அந்தவகையில் ஆர்.சிவகுமாரின் ‘விஜய
நகரம்’ நீள வசனங்கள் பெரும்பாலும் கொள்ளும் இடிபாடுகளின்றியும், தர்க்க முரண்கள் தோன்றாதபடியான
தெளிவுடனும் இருந்தமைபற்றிக் குறிப்பாய்ச் சொல்லவேண்டும். ஆனாலும் இடைஞ்சலாக இருந்த
ஒரு விஷயம்பற்றி இங்கே குறிப்பிடுதலும் அவசியமாகப்படுகிறது.
நிறுத்தக் குறியீடுகள் (Punctuations), அவசியமானவை; அவை அர்த்த
பரிமாணம் காட்டுபவை. முற்றுப் புள்ளி (Full Stop), முக்காற் புள்ளி (Colon), அரைப்
புள்ளி (Semi Colon), காற் புள்ளி (Coma), இடையீடு (Suspension), இடைக்கோடு (Hyphen)
போன்றவை தகுந்த இடங்களில் வந்திருக்காவிட்டால் வாசிப்பை ரசனையுடன் செய்யமுடியாது. முக்காற்
புள்ளியும் முற்றுப் புள்ளியும் நூல் முழுக்க பலவிடங்களிலும் குழம்பி வந்திருக்கின்றது.
ஒருவருக்கு முற்றுப்புள்ளி வரவேண்டிய இடமாகத் தோன்றுவது, இன்னொருவருக்கு முக்காற் புள்ளி
வரவேண்டியதான இடமாய்த் தோன்றக்கூடும்தான். அவர் அர்த்தம்கொள்ளும் விதத்தை அது பொறுத்திருக்கிறது.
நூலிலுள்ள இந்தக் குறையை ஒரு பதிவுக்காக இங்கே சொல்லவேண்டி நேர்ந்திருக்கிறது. மற்றும்படி
சல்மான் ருஷ்டி நாவலை தமிழிலேயே எழுதியதுபோல் வாசிப்புச் சுகம் கிடைத்ததை நான் சொல்லவே
வேண்டும். ஜி.குப்புசாமி மொழிபெயர்த்த ஜோன் பான்விலின் ‘கடல்’, மற்றும் ஒரான் பாமுக்கின்
‘இஸ்தான்புல்’, கு.வெ.பாலசுப்பிரமணியன் மொழிபெயர்த்த க.கைலாசபதியின் ‘தமிழ் வீரநிலைக்
கவிதை’, எச்.பாலசுப்பிரமணியம் மொழிபெயர்த்த
கோபிசந்த் நாரங்க்கின் ‘அமைப்பு மையவாதம், பின்அமைப்பியல் மற்றும் கீழைக் காவியஇயல்’,
அசதாவின் மொழிபெயர்ப்பில் வந்த மார்க்வெய்ஸின் ‘முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்’
(புது எழுத்து) போன்றவை நான் மொழிபெயர்ப்புக்காகவே பல தடவைகள் ரசனையோடு வாசித்த நூல்களில்
சிலவாக இன்றும் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் ஆர்.சிவகுமாரின் சல்மான் ருஷ்டியது
இந்த நாவலின் மொழிபெயர்பையும் சேர்க்க எனக்குத் தடையில்லை.
000
தாய்வீடு. செப். 2025
Comments