துக்கத்தின் வடிவம்





இதுவரை இருந்த ஈழத்தின் யுத்த நிறுத்தமும் சமாதானப் பேச்சு வார்த்தைகளும் சம்பந்தமான பத்திரிகைப் பரபரப்புகள் ஓரளவு இங்கே - இந்தியாவில்- ஓய்ந்துவிட்டிருக்கின்றனபோல்தான் தெரிகின்றன. ஈழ அரசியலைவிட கிரிக்கெட் நல்ல வியாபாரம்தான். இந்துத்துவாவுக்கான அபரிமித ஆளும் வர்க்கத்தின் ஊக்குவிப்பு, எதிர்காலத்தில் மத நல்லிணக்கத்துக்கும், மனித நேயத்துக்குமே ஆப்பு வைப்பதாய் அமையக் கூடுமென்ற பயம் மனிதாயத நலம்விரும்பிகள் அனைவரிடமும் எழுந்துள்ளது. இதுவும் பத்திரிகைகளுக்கு இரண்டாம் பட்சம்தான்.

முன்பெல்லாம் , 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்' என்கிற வாதம் மேற்கொள்ளப்படும். பிறரின் சரிகளை - அதாவது பெரும்பான்மையின் சரிகளை - ஒப்புக்கொள்ள மறுக்கும் விவாதம் அது. 'தான் பிடித்த முயலுக்குத்தான் நான்கு கால்கள்' என்பதே இப்போது கவனமாகிற விவாதம். ஆட்சியாளர்கள் இதையே செய்கிறார்கள். அமெரிக்காவிலும், இந்தியாவிலும், இலங்கையிலும், இஸ்ரேலிலும் , ஏன் , ஆப்கானத்திலும் ஈராக்கிலும்கூட,  ஆட்சியாளர்கள் 'தாம் பிடித்த முயலுக்குத்தான் நான்கு கால்கள் ' என்ற மாதிரியிலேயே சொல்லிக்கொள்கிறார்கள். இது இன்றைய கால கொயபல்ஸ் பிரச்சாரமுறை . இது தான் சொல்வதே சரியென்ற , சரியென்பதால் பெரும்பான்மையாகி அதுவே நியாயம் என்கிற விவாதம்.

இந்த வார 'இந்தியா டுடே' (12.03.03 ) யில் விருந்தினர் பக்கத்துக்கு ரவிக்குமார் எழுதிய ' தமிழ் பிராண்டு மதவாதம் ' என்கிற கட்டுரை முக்கியமானது. இது ஏற்கனவே வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு விதமாய் வெவ்வேறு பேரால் சொல்லப்பட்டதுதான் என்றாலும், நிறுதிட்டமாய் அதைத் திரட்டி பின்விளைவுகள் குறித்த அதிக எச்சரிக்கை செய்து காட்டியிருப்பது விஷேசம். ஆனாலும் , 'தமிழ் சினிமா ஏற்படுத்தியுள்ள மந்தை மனோபாவம் ' என்று அவர் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மந்தை மனோபாவத்தை தமிழ்ச் சினிமா பாவித்துக்கொள்கிறது என்பதுதான் சரி. சங்க காலம் தவிர்ந்து பிற காலங்களினூடாகப் பார்த்தாலே, தமிழன் மனத்தில் வளரத்தொடங்கிய வழிபாட்டு மனப்பான்மையை சுலபமாக ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். சோழர் காலத்தில் இருந்த அதே ராஜபக்தி , பல்லவர் காலத்திலும் இருந்தது. பக்தி இலக்கிய காலமொன்று உருவாக்கம்பெற்றதை அங்கிருந்துதான் காணவேண்டும். பின்னால் விஜய நகர மன்னரின் அரசாட்சிக் காலத்திலும் நிகழ்ந்தது அதுவே. தனக்கு எஜமானன் இல்லாமல், இந்த சாடிஸ்ட் மனோபாவமின்றி , தமிழனால் வாழ முடியாதென்கிற நிலை இன்று உருவாகியிருக்கிறது. இக் கருத்து சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த தமிழனின் அரிப்புக்கு தமிழ் சினிமா தீனி போடுகிறது; அவ்வளவுதான். இது ரவிக்குமார் எழுதியுள்ளதுபோல் 'தமிழ் பிராண்டு' தான். அதுவே இன்றைய சூழலில் 'தமிழ் பிராண்டு மதவாத' மாகிறது. இது உள்ளிருந்து எழும் எரிசக்தியில் எரியப்போகிறது. அதனால் பாதிப்புக்களும் பயங்கரமாகவே இருக்கும். அணைப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கப்போகிறது.

இப்போது வலு வீச்சாகியிருக்கும் அயோத்திப் பிரச்னை அடங்க , மறுபடி ஈழப் பிரச்னை இங்கே கவனமாகலாம். ஆனால் நாம் கவனியாது விட்டுவிட முடியாதல்லவா? தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்குப் படக்கென்று அடிக்குமாம். அது சரிதான். அவரவருக்கும் அவரவர் துக்கத்தின் வடிவம்தானே பெரிதாயிருக்கும்? அங்கே கட்சி அரசியலினதும், தலைமையின் கர்வங்களினதும் ஒரு பாரிய பாதிப்பை இப்போது ஈழ சமாதான முயற்சிகள் சந்தித்துக்கொண்டிருக்கின்றன எனத் தெரிகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடனான ஜனதா விமுக்தி பெரமுனவின் அண்மைய கூட்டெதிர்ப்பு முடிவு அபாயத்தின் அறிகுறி. ஆனாலும் செய்ய எதுவுமில்லை. மக்களை நம்புவதுதான் ஒரே வழி. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் நாட்டை இன்னுமின்னும் யுத்த அழிவுக்குட்படுத்துவதில்லையெனவும், அதற்கான எந்த நடவடிக்கையையும் எதிர்ப்போமெனவும் உறுதி பூணாதவரை , அழிவை எப்படித் தடுக்க முடியும்?

நல்ல சூழ்நிலை வருவதாய்க் கருதி பல்வேறிடங்களில் புலம்பெயர்ந்திருந்த என் உறவினர் சிலரும், நண்பர்கள் சிலரும் வடபகுதியிலுள்ள தத்தம் வீடுகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள். கடிதமெழுதினார்கள். பதிலெழுதினேன். இரண்டு மாதங்களுக்கு மேலே ஆயிற்று. பதிலுக்குப் பதில் வரவேயில்லை. மறுபடி எழுதிய கடிதத்துக்கும் பதிலில்லை. அங்கிருந்து பல்வேறு முகாந்திரங்களில் போய் வருகிறவர்களிடம்தான் ஓடியோடிப்போய் விசாரித்தேன். ' யுத்த நிறுத்தம் தொடர்கிறதுதான். ஆனாலும் மனதில் ஒரு நிம்மதியின்மை. சமாதான வழிக்கான எதிர்ப்புகளின் குரல் வலுப்படும்போதெல்லாம் பயம் எழவே செய்கிறது. அதுவும் யுத்த காலத்தைவிட அதிகமாயும், ஒரு பூடகத்திலாயும் எழுவதுதான் பெரிய துக்கம்' என்று சலித்தார் ஒரு நண்பர்.

நான் மனிதனாய் இருக்கிறபடியால் தமிழனாகவும், அதனூடாய் இலங்கையனாகவும் உணர்ந்து கொள்கிறேன். இது இருக்கும்வரை என் நண்பர்களின், உறவினர்களின், என் மக்களின் அவலத்தை என்னால் உணரமுடியும்தான். இவை எனக்கு மிக்க கரிசனமானவை.

உறக்கம் வராது இந் நினைவுகள் எழுந்து அலைக்கழித்த ஒரு இரவில் என் துக்கம் இப்படி வடிந்தது:


எனினும்
இருந்துகொண்டுதான் இருக்கிறது
இன்னும் ஓர் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்
எங்கோ ஓர் மூலையில்
வாழ்வு குறித்து.

கொஞ்சம் அமைதிக்கும்
கொஞ்சம் நிம்மதிக்கும்
கொஞ்சம் உணர்விறுக்கம் தளர்ந்து வாழ்வதற்கும்
ஆசைகளின் பெருந்தவிப்பு.

ஆனாலும்
மீறி எழுகிறது
மனவெளியில் பய நிழல்களின்
கருமூட்டம்.

முந்திய காலங்களில்
மரணம் புதைந்திருந்த குழிகள்
எங்கே இருந்தன என்றாவது தெரிந்திருந்தது.
ஆனால் இப்போது...?
அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள்
எதுவுமற்ற இந்தப் போரின்
மவுனமும் நிச்சலனமுமே
பயங்கரம் விளைக்கின்றன.
எங்கே வெடித்துச் சிதறும்
எங்கே அவலம் குலைந்தெழும் என்று
தெரியாதிருப்பதே பெரும் பதைப்பாய் இருக்கிறது.

மரணத்தின் திசைவழி தெரிந்திருத்தல்
மரண பயத்தின் பாதியைத் தின்றுவிடுகிறது.

இப்போதெல்லாம்
தூக்கம் அறுந்த இரவுகளும்
ஏக்கம் நிறைந்த பகல்களுமாயே
காலத்தின் நகர்ச்சி இருக்கிறது.
அதிர்வுகள் பரபரப்புக்கள் கூக்குரல்கள்
எதுவுமற்ற இந்தப் போரின்
மவுனமும் நிச்சலனமுமே
பயங்கரம் விளைக்கின்றன.


0

(பதிவுகள் இணையதளத்தில் வெளியான தேவகாந்தன் பக்கம்
என்ற பகுதியில் 2000-2004 இல் நான் சென்னையிலும் பின்  கொழும்பிலும் இருந்த காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இது.)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்