இனியும், தமிழர் அரசியலும்




வரலாற்றிலிருந்து எவரும் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான் தொடரும் வரலாற்றுப் போக்குகளிலிருந்து நாம் அறிந்துகொண்டிருப்பது என்ற பிரபலமான கருதுகோள் ஒன்றுண்டு. வராலாறு திரும்பத் திரும்ப ‘போல’ வருவதின் காரணம் அதன் இயங்கு திசையின் காரணமாயுமிருக்கலாம் என்பது சரியானதாகவே தோன்றுகிறது. இலங்கைத் தமிழரின் வரலாறும் திரும்பத் திரும்ப ஏமாற்றத்தோடும், 2009இல் பெரிய அழிவோடும், முடிந்திருப்பதனையும் இந்தத் தடத்தில் வைத்துப் பார்க்கமுடியும்.

சற்றொப்ப இரண்டரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் தடைமுகாங்களில் படும் அவஸ்த்தைகளை தினமும்தான் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்துகொண்டிருக்கிறது. இதற்கும் மேலாக ஐம்பதினாயிரம் தமிழர்கள் குழந்தைகள், பெண்கள், ஆண்களாக கொலைப்பட்டிருக்கிறார்கள் என்பது அதற்கும் மேலான துயரத்தை விளைப்பது. மட்டுமா? ஒரு நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட முடியாத பொருளாதார, கல்விப்புல, ஆள்புல இழப்புக்கள் நேர்ந்துள்ளதை எந்த இழப்புக் களத்தில் வைத்துப் புரிந்துகொள்வது என்பது புரிபடவேயில்லை.

ஆக, திரும்பத் திரும்ப வரும் இந்த அழிச்சாட்டியங்களுக்;கான ஒரு தவறு தமிழர் அரசியலில் ஆரம்ப காலம்தொட்டு இருந்து வந்திருப்பதையே சுட்டிநிற்கிறது. எமக்கு அரசியல் தீர்க்கதரிசனம் வேண்டாம், ஆனால் அரசியலில் கடந்த காலங்களில் நடந்தவற்றை ஒரு மறுஆலோசனைக்கு உட்படுத்தி புதிய ஒரு மார்க்கத்தைக் கண்டடையும் சாதாரணமான புத்திசாலித்தனமாவது இருந்திருக்கவேண்டும். தமிழர், தமிழ்மொழி, தமிழ்மண் என்று சிந்திப்பதற்கான உணர்ச்சித் தடம், அந்த மிகச் சிறிய புத்திசாலித்தனத்தை அடையத் தடையாக இருந்திருக்கிறதோ என நினைத்தால் அதில் தப்பில்லை.

ஒரு பெரும் அழிச்சாட்டியத்தின் பின் முடிவடைந்திருக்கிற இலங்கைத் தமிழரின் அரசியற் போராட்டம் சொல்லிக்கொண்டிருக்கிற பாடம், அது தன் அழிவுக்கான ஒரு கூறினை மூலத்திலேயே கொண்டிருந்தது என்பதுதான். அதை இனங்காணுவதன் மூலமாகவே ‘இனி’ என்ற காலத்தில் தமிழரின் வாழ்வு தக்கவைக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

வரலாற்றை மாமனிதர்கள் உருவாக்குகிறார்கள் என்ற கருதுகோள் நவீன காலத்துக்கு முற்பட்டுக் கிடந்த மனித சிந்தனையில் இருந்தது. அப்போதும் வரலாறு தனிமனிதர்களாலல்ல, சில சமகால உந்துசக்திகளின் விசையைப் புரிந்துகொள்ளக்கூடிய தனிமனிதர்களாலேயே மாறுதடத்தில் செல்லவைக்கப்படுகிறது என்ற மாற்றுக் கருத்துக்கள் இருந்தே வந்தன. சமூக அமைப்பே அரசியலைத் தீர்மானிக்கிறது என்ற முடிவை கார்ல் மார்க்ஸ் முடிவை விஞ்ஞான ரீதியாக முன்வைப்பதன் முன், இந்தக் கருத்தை மேலோட்டமாகவேனும் கூறியவர்கள் இருந்திருக்கிறார்கள். ஹெகல் சொன்னவற்றிலிருந்தான ஆதாரத்திலிருந்து கண்டடையப்பட்டதே மார்க்சியம் என்பது இதற்குச் சரியான உதாரணமாக அமையும்.

மார்க்ஸ் ஒருமுறை சொன்னார்: ‘மனிதர்கள் தமது வரலாற்றை தாமே உருவாக்குகிறார்கள் என்பது சரிதான். ஆனால் தமது விருப்பத்திற்கேற்றபடி அது அமையக் காண்பதில்லை. அது அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட சூழலிலேயே அமைகிறது. கடந்த காலத்திலிருந்து வந்துசேர்ந்ததும், கொடுக்கப்பட்டதும், கடத்தப்பட்டதுமான சூழல் அதை அமைக்கிறது.’

ஒரு வரலாற்று மாற்றத்திற்கான போராட்டத்தில் சூழல் பெறும் முக்கியத்துவத்தை இது ஆணித்தரமாகக் கூறுகிறது. தமிழருக்கு ஒரு கட்டத்தின்மேல் கொடுக்கப்பட்டிருந்தது ஆயுதப் போராட்டத்துக்கான சூழலல்ல. ஆனால் அந்தச் சூழலிலேதான் விடுதலைப் புலிகளால் விமானப்படைப் பிரிவு உருவாக்கப்படுகிறது என்பது மிகமோசமான அரசியல் சூழலை சாதகமானதென்று பிழையாகப் புரிந்துகொண்டதன் செயற்பாடாகக் காணக்கிடக்கிறது.

இலங்கையில் தமிழர் ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சர்வதேசமும் மௌனியாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தது என்ற பிரலாபம் எம்மவரில் பலபேரிடத்தில் உண்டு. ஆனால் இது தவிர்த்திருக்கப்பட முடியாதது என்பதுதான் கொஞ்சம் வரலாற்றை உற்றுநோக்குகிறபோது தெரியவருகிற உண்மை.

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதுதான் மனித இனம் இறுதியாக அடைந்திருக்கிற அரசியல் கட்டமைப்பு. இது யாருக்குச் சேவகம் செய்கிறது என்பது வேறு விஷயம். அது சமூகத்தின் ஒரு பகுதியாரிடம், மூலதனம் கையிலிருக்கிற ஒரு வர்க்கத்திடமே சென்று சேர்ந்து அடிமையாயிருக்கிறது என்பது மெய். ஆனாலும் அது முந்திய பிரபுக்கள் வமிச, அரச வமிச ஆட்சிகளைவிட உன்னதமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்கு மாறான எந்த அரசியல் அமைவையும் சர்வதேசம் தீர்க்கமாக எதிர்க்கிறது. நாடாளுமன்றங்களின் தாய் என விதந்துரைக்கப்படும் பிரித்தானியாவில் இந்த ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டம் ஒரு நூற்றாண்டாக நடந்ததாய்க் கொள்ள முடியும். மிகப்பெரும் பலிகளற்று நடந்த இந்தப் போராட்டத்தின் பின் அடையப்பட்ட நாடாளுமன்ற அரசியல் முறையை அது இலேசுவில் மாற அனுமதித்துவிடாது என்பதுதான் இலங்கை விவகாரத்தில் நடந்திருப்பது. அதற்கு மாற்றான எதுவும் தன் மூலதனப் பலத்தை அசைக்கும் அரசியலாகும் வாய்ப்பிருப்பதை அது சரியாகவே புரிந்துகொண்டிருக்கிறது. சர்வதேசத்தின் மௌனத்தை நான் இந்த வகையிலேதான் விளங்கிக்கொள்கிறேன்.

இலங்கை அரசின் ஒப்பறேசன் லிபரேசன் ராணுவ முன்னெடுப்பில் யாழ்ப்பாணத்தை இழந்து வன்னி மண்ணை அடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பு, அந்த மண்ணகப் பகுதியைத் தமிழீழம் என்றும், தமது அரசியற் செயற்பாட்டுக்கான உள்ளக கட்டமைப்பை உருவாக்கி, தமிழீழ நீதிமன்றம், தமிழீழ வங்கி, தமிழீழ காவற்படையென இயங்கியும் கொண்டிருந்ததொன்றும் ஜனநாயகத் தன்மை வாய்ந்ததல்ல என்பது எல்லோருக்குமே ஒப்பக்கூடியது. கடற்படை, வான்படையெல்லாம் மிகமிகவதிகமான ஜனநாயக மீறல்கள். உண்மையாகவே சுதந்திரம், உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு மக்களினத்தின் மீது அதன் போராட்டக் காலகட்டத்தில் சர்வதேசத்தினால் காட்டப்பட்டிருக்க்கக் கூடிய அனுதாபம், ஆதரவுகளை தமிழ்மக்கள் இழந்து நின்றதற்கு வேறு காரணமில்லை. அது சிங்களத்தின் ராஜதந்திரத்தில் கதிர்காமர்மூலமோ, அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் மிகஅதிகாரம் வாய்ந்த பதவிகளில் அமரக்கூடிய செல்வாக்குடையோரின் உறவுக்காரர்களான ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள்மூலமோ அடையப்பட்ட நிலைமையில்லை. மாறாக, தமிழினம் ஜனநாயக கட்டுமானத்தை சர்வதேசமளாவிய ரீதியில் உடைத்துநின்றதே காரணமாகின்றது.

தமிழினத்தின் உரிமைக்கான ஒரு போராட்டம் அவசியமாக இருந்தது என்பதில் எனக்கு அபிப்பிராயபேதமில்லை. ஆனால் அதைக்கூட சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை, அக்கிரமங்களின் காரணமானதாயே எனக்கு ஏற்றுக்கொள்ளப்பட முடிந்திருக்கிறது.

போராட்டம்பற்றிய எனது கருத்து, அதுவே சிங்கள பேரினவாதத்தை பேச்சுவார்த்தை மேசைக்கு வரவைப்பதற்கான உபாயமென்றே நான் கருதியிருந்தேன். அதுவே தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்பதற்கான பல்வேறு வலுவான காரணங்கள் இருந்தபோதும், போராட்டத்தை உளவளவிலேனும் நான் அங்கீகரித்ததின் உண்மையான காரணம். இன்னொரு வகையில் சொல்லப்போனால், எனது போராட்டத்தை அல்லது எனது போராட்டத்தின் ஒரு பகுதியை விடுதலைப் புலிகள் செய்துகொண்டிருந்தார்கள் என்றே நான் கருதியிருந்தேன் என்றுகூடக் கூறலாம். இதுவே பலரது நிலைப்பாடாக இருந்தது என்பதையும் நான் அறிவேன்.

மக்கள் புலிகளின் பலத்தை பூதாகாரமாக நம்பவைக்கப்பட்டிருந்தார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்த தமிழ் மக்களிடம் வந்தடைந்த ஒலிஒளிப் பேழைகள் அதையே சூட்சுமத்தில் செய்துகொண்டிருந்தன. ஆனையிறவு, முல்லைத்தீவுக் களங்களில் புலிகள் அடைந்த வெற்றி அவர்களது வீரதீரங்களை தமிழ் மக்களுக்குக் காட்டிநின்ற அதேவேளையில், எதிரிகளுக்கு அவர்களது யுத்த முறைகளைக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்ததை யாருமே உள்வாங்கிக்கொள்ளவில்லை.

மட்டுமில்லை. வன்னி உண்மையில் அவர்களது பதுங்குகுழியாகவே இருந்தது. அதை உணர முடியாததே விளைவுகளை இன அழிவுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சொந்த அழிவுக்குமே இட்டுச்சென்றிருக்கிறது. இந்தத் தோல்வியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆயும் தேவை இன்று இலங்கைத் தமிழருக்கு உண்டு. தமிழர்தம் தோல்விகளை சிங்களப் பேரினவாதத்தின் மூர்க்கத்தின் விளைவாகக் காணாமல், சூழலுக்கான, அதாவது சர்வதேச அரசியல் போக்கின் சூழலுக்கான, விசைகளுடன் பொருந்திப் போகாததின் விளைவாகப் பார்ப்பதே சரியான மார்க்கமாக எனக்குத் தெரிகிறது.

இலங்கைத் தமிழர் என்கிறபோது, இலங்கையிலுள்ள தமிழர்களே முதன்மையாகக் கருதப்படவேண்டுமென்கிற விதி முதன்மையானது. அவர்களது அபிலாசைகள், தேவைகள், பலங்கள், சாத்தியங்கள் என்பவற்றிலிருந்து மார்க்கம் கண்டடையப்பட வேண்டும்.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் முடிவில் நேசதேசப் படைகள், குறிப்பாக ரஷ்ய படைகள், ஜேர்மனிக்குள் நுழைந்தபோது அங்கே ஸ்வஸ்திகா கொடி பறந்துகொண்டிருந்த பல வீடுகளிலும் அவை அப்புறப்படுத்தப்பட்டிருந்ததோடு சிலவீடுகளில் நேசதேசக் கொடிகளே  பறக்க விடப்பட்டிருந்தனவாம். இன்னும் சில நாஜி ஆதரவாளர்களது வீடுகளில் நேசதேசப்படைகளை வரவேற்கும் வாசகங்களைத் தாங்கிய பதாகைகள் பறக்கவிடப்பட்டிருந்தனவாம். அதேபோல இன்று எழும் புலிகளுடனான மாறுபாட்டுக் கருத்துக்கள் புலத்திலும் சரி, புலம்பெயரந்த இடத்திலும் சரி பொய்மையின் பிரதிமைகளாக உதாசீனப்படுத்தப்பட வேண்டுமென்பதை மிக வற்புறுத்தலாக இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இன்னுமொன்று. புலிகள் பலஹீனமடையவேண்டுமே தவிர அவர்கள் தோற்கடிக்கப்படக் கூடாது, அது தமிழ் மக்களின் போராட்டத்தின் தோல்வியாக ஆகக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று மெய்யாலுமே வருந்தியவர்கள் சிலரை எனக்குத் தெரியும். புலிகளை முற்றுமுழுதாக எதிர்த்த ஷோபா சக்தி போன்றவர்களோடுகூட எனக்கு பல விஷயங்களில் மாறுபாடில்லை. அவர்களது எதிர்ப்பும் நிலைப்பாடும் சத்தியமானது. ஆனால் இன்று அரசாங்க ஆதரவு என்கிற கோஷத்தை முன்னெடுக்கும் மோகவிலை போனவர்களிடம் எனக்கு நிறைய வழக்குகள் உண்டு.

இலங்கையை தன் சொந்த நாடாக அதன் தேசிய கீதத்தை இசைக்க சுகனுக்கு எல்லா உரிமைகளும் உண்டு என்பதை உணர ஒரு பக்குவம் வேண்டும். நான் உணர்கிறேன். என் போராட்டம் விடுதலைப் புலிகளின் அழிப்போடு முடிந்துவிடவில்லையாயினும் அத்தகு மனநிலை எனக்கு உடன்பாடானதுதான். ஆனால் தம் நெற்றிகளில் தமது எதிர்ப்பின் அளவுக்கான அல்லது அதற்கும் அப்பாலான ஒரு தொகையை மர்மமாய் எழுதிவைத்துக்கொண்டு அரசாங்கத்துடனான இணைவுக் கோஷம் போடுகிற பேர்வழிகளோடு எனக்குப் பொருதுகிற மனநிலைதான் ஏற்பட்டிருக்கிறது. அதை வெளிவெளியாக நான் செய்யப்போவதில்லையாயினும் அந்த மனநிலை என்னிடத்தில் இலகுவில் மாறிவிடாது. அவர்கள் கருத்துத் தளமற்றவர்கள். அவர்களோடு கருத்துத் தளத்தில் மோதுவதென்பது அர்த்தமற்றது. அவர்களின் பலம் தம் தொண்டைகளில்  மட்டுமே.

நாம் உண்மையைக் கண்டடையவேண்டுமென்பது முக்கியமானது. எந்த விலையிலும். பலபேரின் முகச்சுழிப்பை எதிர்கொண்டாலும் இலங்கைத்; தமிழினத்தின் எதிர்காலத்துக்கான ஒரு மார்க்கம், அல்லது புலிகளின் இயங்குமுறைச் செயற்பாட்டின் குறைகளை ஆராய்தல் என்பது செய்யப்பட்டே ஆகவேண்டும்.

இனி என்பது ஆயுதப் போராட்டத்திலல்ல, புலம்பெயர் தேசத்தில் தமிழீழத்தை உருவாக்குவற்கான முயற்சிகளிலுமல்ல என்பது என் நிலைப்பாடு. என் உத்தேசத்தை, கருத்தை நான் எதற்காகவும் மூடிவைக்கவேண்டியதில்லை. நேரடி அரசியலுக்குள் இல்லாத, மார்க்சிய சித்தாந்தத்தை அதன் அரசியல் கட்டமைப்புத் தோல்விகளுக்குப் பின்னரும் நம்புகிற அளவுக்கு லோகாயத லாபம் கருதாத, ஓர் இலங்கைத் தமிழன் என்றகிற வகையில் எனக்கு இலங்கை அரசியலின் எதிர்காலத்துக்கான கருத்தை வெளியிடுகிற தார்மீக உரிமை உண்டு. அப்போதும் எனது பிரக்ஞை இலங்கை அரசியலில் தமிழ்மக்களின் நிலை குறித்த, அவர்களது எதிர்காலம் குறித்த விவரணங்களில் முடிவெடுப்பதற்கான உரிமை இலங்கையில் தங்கியுள்ள தமிழ்மக்களுக்கே முற்றுமுழுதாக உண்டு என்ற தளத்திலிருந்தே ஆரம்பமாகிறது.

‘ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உடையப்பராகிவிட்டால் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி
ஓப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ’

என்பது புரட்சிக் கவி என்ற அடைநாமம் பெற்ற பாரதிதாசன் என்று புனைபெயர் கொண்ட கனக.சுப்புரத்தினத்தின் பாடலின் சில வரிகள். அந்த மாதிரியெல்லாம் இனி சாத்தியமில்லை. விஞ்ஞான யுகத்தின் வளர்ச்சி, அதாவது தொழிற்நுட்ப விவகாரங்கள் வியாபாரார்த்தமான கட்டத்தை அடைந்திருக்கின்றன. அதாவது ஒரு தொழில்நுட்பம் என்பது எப்போதும் விலைபோய்க்கொண்டிருக்கிறது என்பது இதன் அர்த்தம். இதை லாபகரமாக்குவதற்கான முயற்சியே இன்றைய வர்த்தகம். இதுவே இன்றைய மனித சமூகத்தின் தேவையாக இருக்கிறது. இதற்கு மாற்றான ஒரு சமுதாய அமைப்பு ஜனநாயக முறைமைகளின் மீதாகவே இனி சாத்தியம்.

இந்த யதார்த்த நிலைமையிலிருந்து நிஜமாகிலுமே ஒரு சரியான அரசியல் நிலைமைக்கு இலங்கைத் தமிழினம் திரும்புமா? அப்படியானால் நடைமுறையிலிருக்கும் ஒரு யதார்த்த நிலைமையை அது உள்வாங்கியே ஆகவேண்டும். அதுதான் சர்வதேச ரீதியிலான அமைவுகளுக்கு அமைவாக தனது திட்டங்களை அது அமைத்துக்கொள்வது.

அதாவது, இலங்கை எப்போதுமே பலகட்சி முறையான அரசியலாகவே இருந்துவந்திருப்பினும், இரண்டு கட்சிகளே ஆட்சியதிகாரம் பெறும் வலு கொண்டிருக்கின்றன. ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி, அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சி. இன்றைய நிலைமையில் இந்த இரு கட்சிகளில் எதை ஆட்சிபீடத்தில் அமர்த்துவதென்னும் அதிகாரம் மூன்றாவது சக்தியான ஜனதா விமுக்தி பெரமுன என்ற கட்சிக்கே இருக்கின்றது. கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் இருந்தது அதுதான். ஒட்டுமொத்தமான இலங்கைத் தமிழரும் ஓர் அணியில் ஓர் அரசியல் வலுவாக ஒன்றிணைவதன் மூலம் இலங்கைத் தமிழினம் மூன்றாவது அரசியல் வலுவாக ஆகமுடியும். அதன்மூலமே சிறுகச் சிறுக தமிழினத்தின் நியாயமான உரிமையை வென்றெடுக்க முடியும்.

இதைத் தவிர மேலே, கீழே இல்லை. மொத்த இலங்கைத் தமிழரும் ஒன்றிணைவதன் மூலம் ஒரு மூன்றாவது வலுவாகும் நிலை நிச்சயமானதும், சாத்தியமானதும்தான். இதை நாம் கவனத்திலெடுத்து சிந்தித்தே ஆகவேண்டும்.

இது சாத்தியமானது ஒன்றே தவிர, சுலபமானதொன்றில்லை என்பதை யாவரும் உணரவேண்டும். மூட்டையாக இருக்கும் தனித்தனியான காய்களின் பாதுகாப்பு, தனித்தனியாக இல்லை. ஒரு விறகை உடைக்கின்ற சுலபம், ஒரு கட்டு விறகை முறிப்பதில் இல்லை என்ற பாலர்பாடக் கதை இன்றைக்கு இந்தமாதிரி உதவ முடியும். பாலர் பாடத்திலிருந்து நாம் திரும்பவும் ஆரம்பிப்போம். ஒன்றுபட்ட தமிழினத்தின் ஏகக் குரல் அந்த இனத்தின் சுதந்திரத்தினை, சுயஉரிமையினை, இருத்தலின் சாத்தியத்தைப் பெற்றுத்தரும். இதை நான் நிச்சயமாக நம்புகிறேன்.

0

வைகறை, டிச. 2009

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்