ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...




ஈழத்து இலக்கிய வரலாற்றில் அற்புதமேதும் நிகழ்ந்ததில்லை. அபாரமானது என்றோ, உலகத்தரம் வாய்ந்தது என்றோ சொல்லும்படிக்கு நாவலேதும் ஈழத்தில் தோன்றியதுமில்லை. இப்படிச் சொல்லுகிறபோது வாசகர்களும், நண்பர்களும் முணுமுணப்புக் காட்டுகிறார்கள். நாவலிலக்கியத்தின் வளமான வளர்ச்சிக்கான சூழ்நிலைமைகள் ஈழத்தில் நன்கமைந்திராததைக்கொண்டு இந்த முடிவுக்குத்தான் ஓர் அவதானியால் வந்துசேர முடியும்.

    நாவல் இலக்கியத்துக்கான சூழ்நிலைமைகள் குறித்து இலக்கியவரலாறு தெளிவாகவே பேசுகிறது. அச்சு யந்திர வசதி, வாசகர்களாய் அமையக்கூடிய பரந்துபட்ட மத்தியதர வர்க்கம் போன்றவை, நாவலிலக்கியத்தின் தோற்றத்துக்குப்போலவே வளர்ச்சிக்கும் முக்கியமானவை. இவை தமிழகத்தில்போல் ஈழத்தில் வாய்க்கவில்லையென்பது பெரிய நிஜம். அதனால் சில நல்ல நாவல்கள், சுமாரான நாவல்கள், குறிப்பிடத் தகுந்த நாவல்கள் என்கிற அளவில் குறுகியதுதான் ஈழத்தின் நாவலிலக்கியப் பரப்பு. அதன் வீச்சான காலம் இனிமேல்தான் தோன்றவேண்டும். அதற்கான அறிகுறியை இவ்வியாசத்தில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

    ஈழத்து நாவலிலக்கிய வரலாற்றை தோற்ற காலம், மறுமலர்ச்சிக் காலம், தேசியவாதக் காலம், 1975ம் ஆண்டளவில் தொடங்கும் பத்தாண்டுகள் வரையான தேக்க காலம், 1983ஆம் ஆண்டுக்குப் பின்னான வியாப்திக் காலம் என்று பிரித்து நோக்கவிருக்கின்றேன். பத்து பத்து ஆண்டுகளாய் பிரித்தாயும் மரபை மீறியுள்ளது இது. ஆனால் இதுதான் கொள்கைப் போக்குகளை ஒப்பிடவும், தரப்படுத்தவும் வாய்ப்பானது. இக் காலக் களங்கள் ஒவ்வொன்றுமே அரசியல் பொருளாதாரக் காரணிகளின் ஊடாட்டம் மிகுந்தவையென்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவசியமான விளக்கங்களை இதில் நான் சேர்த்திருக்கிறேன், இந்த நியாயம் கருதி.
ஈழத்து நாவலிலக்கியம்பற்றி புதிய தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டி மிக்க கனதியாக இல்லாமலும், அதேவேளை புதிய போக்குகளின் தரவுகள்பற்றிய துல்லியக் கணிப்புடனும் இந்த வியாசம் விரிந்து செல்லும். நூல்கள்பற்றிய விவரிப்புகளும், அவைபற்றிய மதிப்பீடுகளும் இலக்கியப்போக்குகளை விளங்கப்படுத்தவேண்டி அவசியமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.


தோற்ற காலம் (1891 முதல் அண்ணளவாக 1930வரை)

நாவல் அதிசயப்பட வைக்கிற உருவத்தோடுதான் ஐரோப்பாவில் வெளிவரத் தொடங்கியது. புதினம் என்ற அர்த்தத்தில் அதற்குப் பெயர் வைத்ததும் நினையாப்பிரகார நிகழ்வல்ல. காரணத்ததோடு சூட்டப்பட்டதுதான். தமிழ் உரைநடையின் முகிழ்ப்போடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலில் தோற்றம் பெறுகிறது இந்தியத் தமிழ் நாவல் இலக்கியம். அதன் முதல் நாவலை ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்றும், அந்த ஆண்டை 1879 என்றும் தெளிவாக அறியக்கிடக்கிறது.

    எந்தவொரு அரசியல் பொருளாதார நிகழ்வும், இந்திய உபகண்டத்தின் அரசியல் பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சி தேய்வுகளை அடியொட்டியே ஈழத்தில் நிகழ்ந்து வந்தன என்கிற நிஜத்தைப் பார்க்கிறபோது, தமிழகத்தில் தோன்றிய நாவலிலக்கிய அலை உடனடியாகவே ஈழத்தில் அடிக்க ஆரம்பித்துவிடுவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஈழத்தின் முதலாவது நாவல் 1885இல் தோன்றிய ‘அசன்பேயுடைய கதை’ என்பார் கலாநிதி நா.சுப்பிரமணியன். இந்நூல் சித்திலெவ்வை மரைக்கார் என்பவரால் எழுதி வெளியிடப்பெற்றது.

    நிலமான்ய சமுதாயத்தின் இலக்கிய உற்பத்தியான காவியங்களின் மரபுச் செல்வாக்கிலிருந்து முழுவதும் விடுபடாத ஒரு நிலைமாறுங் கால கலப்பினப் படைப்பாக இது இருப்பதாலும், ஈழத்தைக் களமாகவோ, ஈழத்து மாந்தர்களைப் பாத்திரமாகவோ கொண்டிராததாலும் இதை நாவலென்றோ, ஈழத்து நாவலென்றோ கொள்ளமுடியாது என்பாரும் உளர். அதற்கும் ஆறு ஆண்டுகள் கழித்து 1891ஆம் ஆண்டு திருகோணமலையைச் சேர்ந்த எஸ்.இன்னாசித்தம்பி என்பவரால் எழுதப்பெற்ற ‘ஊசோன் பாலந்தை கதை’யையே ஈழத்தின் முதல் நாவலென்பது வழக்கம். இதையும் மறுப்போர் உள்ளனர். அவர்கள் 1895ஆம் ஆண்டு திருகோணமலை தி.த.சரவணமுத்துப்பிள்ளை எழுதிய ‘மோகனாங்கி’யே ஈழத்தின் முதல் நாவல் எனக் கூறுகிறபோது, அது ஈழத்தவரால் எழுதப்பட்ட நாவலே தவிர ஈழத்து நாவல் தன்மைகளைக் கொண்டதல்ல என்பார் இலக்கிய விமர்சகர் சோ.சிவபாதசுந்தரம்.

    இவையெல்;லாம் இலக்கிய வாசகனுக்கு ஒரு விசயத்தைத் தெளிவாகச் சுட்டுகின்றன. ஆரம்ப கால நாவல்கள் யாவும் எழுத்தார்வத்தில் பிறந்து, தென்னிந்திய நூல்களைப் பிரதிபலித்து எழுதப்பட்டவை என்பதே அது. இந்தியத் தமிழ் நாவல் உருவெடுத்து பன்னிரண்டு ஆண்டுகளின் பின் 1891இல் எழுந்த ‘ஊசோன் பாலந்தை கதை’யே ஈழத்து முதல் நாவலென்று விமர்சகர்கள் சில்லையூர் செல்வராஜன், கலாநிதி க.கைலாசபதி ஆகியோர் நிறுவுவதை ஒப்புக்கொண்டு 1891 தொடங்கி 1930 வரை விரிந்த பெரும்காலப் பரப்பில் தோன்றிய முக்கிய நாவல்களை இனி கவனிக்கவேண்டும்.
இவை யாவுமே இந்திய தமிழ் நாவல் மரபினை ஒட்டிப் பிறந்த படைப்புக்களென தயங்காது சொல்லலாம்.  இவற்றின் தத்துவப் பரப்பு சமய எல்லைக்குள்ளேயே அடங்கிவிட்டிருந்தது.

    சமுதாயத்தை நன்னெறிப்படுத்தும் தூய எண்ணங்களே படைப்பாளிகளின் கருப்பொருளாய் இருந்தன. முக்கியமாக, இவை கிறித்தவ சமயப் போதனைகளை வெளியிட தோற்றம்பெற்ற நாவல்கள். தமிழகத்தின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திர’த்தை எழுதிய வேதநாயகம்பிள்ளை ஒரு கிறித்தவர். ஈழத்தின் முதல் நாவலான ‘ஊசோன் பாலந்தை கதை’யை எழுதிய இன்னாசித்தம்பி ஒரு கிறித்தவர். சுவாமி ஞானப்பிரகாசர், இவ்விரு நாடுகளிலும் தோன்றிய முதல் நாவல்களின் கர்த்தாக்கள் கிறித்தவர்களாய் அமைந்துபோன விந்தையைச் சொல்வார். அது யோசிப்புக்குரியதும்கூட. தமிழும் சைவமும் வளர்ந்து, நாவலர் அவர்களால் உரைநடையும் சீர்பெற்று விளங்கிய யாழ்ப்பாணத்திலே நவீன இலக்கிய வகையான நாவலினம் தோன்றாமல், அவ்வளவு தூரம் கடந்துபோய் திருகோணமலையில் தோன்றியதற்கான காரணமும் ஆராயப்படவேண்டும். மூடுண்டிருந்த ஒரு சமூகம் நாவலிலக்கியத்தை உடனடியாக உள்வாங்கத் தயாராக இருக்கவில்லையென்றே இது குறித்துத் தீர்மானிக்கமுடிகிறது. இது எப்படியிருப்பினும்,ஈழத்தின் தோற்ற கால நாவல்கள் தமிழகத்து நாவல்களின் போக்கு, பண்பு முதலியவைகளைப் பிரதிபலிப்பனவாய் இருந்தன என சுருக்கமாகக் கொள்ளலாம்.

    அஸன்பேயுடைய கதை: எகிப்தின் காயீர் நகரத்து யூசுப் பாட்சா என்கிற ராஜ குலத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பிறந்த மகன் சிறுவயதிலேயே கடத்தப்படுகிறான். பம்பாய் கொண்டுவரப்பட்டு அங்கே சிறிதுகாலம் வளர்க்கப்படுகிறான். அங்கும் சூழ்ச்சிக்காளாகும் அஸன் என்று பெயர் சூடட்டப்பட்டுள்ள இச்  சிறுவன், தன் பதினான்காவது வயதில் அதிலிருந்தும் தப்பி கல்கத்தாவுக்கு ஓடுகிறான். அங்கு ஆங்கிலத் தேசாதிபதியின் அணுக்கத்தையும் அபிமானத்தையும் பெற்று கல்வி கேள்விகளில் சிறப்புடையவனாகிறான். அணித்தாயுள்ள ஒரு பிரபுவின் மகளது காதலுக்குரியவனாகிறான். பின் தன் பெற்றோரைக் காணவேண்டி எகிப்து தேசம் செல்கிற அஸன், தேசத்துக்கெதிரானவர்களை அழிக்க பல வீரசாகசச் செயல்களில் ஈடுபடுகிறான். இதற்காக இவனுக்கு பே (Bay) என்னும் கௌரவ விருது வழங்கப்படுகிறது.

    காவியப் பண்பு சார்ந்து எழுதப்பட்ட நூல் இது. சித்திலெவ்வை என்கிற இதன் ஆசிரியர் ஈழத்தவரானாலும், நூல் முழுக்க முழுக்க அந்நிய தேசங்களையே களனாகக்கொண்டிருக்கிறது. பாத்திரங்களும் ஈழத்தவர் அல்லர். கூடதலான நாடகப் பண்பு அமைந்ததாய்க் காணப்படும் இந் நாவல், கலாம்ச வியாப்தி குறைந்தே இருக்கிறது. பின் வந்த ஈழத்து நாவல்களின் உரைநடைச் செழுமைக்கும், பாத்திர வார்ப்பின் சீர்மைக்கும், கதையாடலின் நேர்த்திக்குமான உரமாக அமைந்த்ததை இந் நாவலின் பயனாகக் கொள்ளல் தகும்.

    இந் நாவலை இஸ்லாமிய பண்பாட்டுத் தாக்கத்தால் பிறந்த நூலாகக் கருதவேண்டும். இஸ்லாமிய நாடுகளின் இலக்கியத் தாக்கம் இவ்வண்ணமாகவே ஈழத் தமிழிலக்கியத்தில் செறிந்தது. 1974இல் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் திருச்சியில் இந் நூலை மீள் பதிப்புச் செய்தது.


ஊசோன் பாலந்தை கதை: இந் நூல்மீது ஆக்க இலக்கியம் சார்ந்த எத்தகைய குறைகள் சொல்லப்பட்டிருப்பினும், நாவலின் கதையாடல் அற்புத மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதுமட்டும் நிஜம். தமிழ்க் கதையென்றே கருதும்படி பாத்திரங்களின் வார்ப்பு அமைந்திருக்கிறது. இன்னுமொன்று. காவியச் செல்வாக்கினின்றும் விடுபடாதிருப்பினும் ஈழப் பேச்சு வழக்குச் சொற்களுக்கு இலக்கிய அந்தஸ்து ஏற்றி பதிவுசெய்வதை முதன்மையாய்ச் சுட்டவேண்டும்.

    அலுவான்யா என்கிற கற்பனை தேசத்தைக் களமாக வைத்து ஆரம்பிக்கிறது கதை. சக்கரவர்த்தி அலெக்சாந்தருக்கும், அரசி தொன் வெலிசாந்த்துக்கும் பிறந்த ஊசோன், பாலந்தை என்னும் இரு சிறுவர்களின் கதையே இது. காலத்தின் கோலத்தால் பெற்றோரைப் பிரியும் இவ்விரு குழந்தைகளும் தனித்தனி இடங்களைச் சென்று சேர்கின்றன. காடு சேர்கிற ஊசோன் என்கிற சிறுவன் ஒரு கரடியால் வளர்க்கப்பட்டு பயங்கரமான காட்டு மனிதனாகிறான். இன்னொரு சிறுவனான பாலந்தை அதிர்ஷ்டவசம் பட்டவனாய் ஒரு அரண்மனையை அடைகிறான். அங்கு வளர்ந்து  அந்நாட்டின் படைத் தலைவனாகி ஒரு போரில் தன் சகோதரனை வென்று அடக்குகிறான். இன்னொரு போரில் தந்தையென்று தெரியாமலே தந்தையை வென்று அழிக்கிறான். பின் இந்த விடயம் தெரியவருகிறபோது தவமிருந்து உயிரை மாய்த்துக்கொள்கிறான்.

    ‘ஊசோன் பாலந்தை கதை’ இப்போது பதிப்பில் கிடைப்பதில்லையென்று சொல்லப்படுகிறது. இது Oraon and  Balantine என்கிற போர்த்துக்கீசிய நெடுங்கதையொன்றின் தழுவலாய்க் கொள்ள இடமிருக்கிறது என்ற அபிப்பிராயமும் உண்டு.

    ‘ஊசோன் பாலந்தை கதை’ முழுக்க முழுக்க கிறித்தவ பின்னணியில், தொண்ணூற்றாறு பக்கங்களுள் அடங்கிய சிறிய கதை. 1891லேயே இது 1500 பிரதிகள் அச்சிடப்பட்டடதாய்த் தெரிகிறது. 2001இல் இன்னமும் நாம் 1200 பிரதிகளே அச்சாக்கிக்கொண்டிருக்கிறோமென்று நினைக்கையில் அதிசயம் தெரிகிறது.


மோகனாங்கி: திருகோணமலை தி.த.சரவணமுத்துப் பிள்ளையின் நூல். 1895இல் வெளியாகியது. சென்னையில் இந்து யூனியன் அச்சுக்கூடத்தில் அச்சிட்டுப் பிரசுரிக்கபட்ட இந்நூல் சரித்திர சம்பந்தமான கதையைக் கொண்டது. நிகழ்வும், புனைவுமாக நாவல் அமைந்தது. 17ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய பிரதேசங்களை நாயக்க மன்ன்ர்கள் ஆட்சி புரிந்த காலத்தைக் களனாகக் கொண்டது. இரு நகரங்களுக்கிடையிலான போட்டி, பொறாமை, சூழ்ச்சிகளுக்கிடையே கதை வளர்த்துச் செல்லப்படுகிறது. கiதையின் நாயகனான சொக்கநாத நாயக்கனுக்கும் மோகனாங்கி என்பாளுக்குமிடையிலான காதலே நாவலின் மையம்.

    ஈழத்து நாவல்களுக்குள்ளே மிகுந்த செல்வாக்குப்பெபற்று இந்நூல் திகழ்ந்ததாய்த் தெரிகிறது. பள்ளிகளில் பாடநூலாக ஏற்கப்பட்டு 1919இல் இது சுருக்க நூலாக வெளிவந்தமை இது காரணமாயே இருக்கலாம். அப்போது இதன் தலைப்பு ‘சொக்கநாதன்’. ‘மோகனாங்கி’ தமிழின் முதல் சரித்திர நாவலென்று சொல்லப்படலாம். நாவலின் புனைவு பெருமைப்படத் தக்கவிதமாகவே அமைந்துள்ளது. நவீன இலக்கிய வகையான நாவலொன்று 1919 காலப் பகுதியிலேயே பள்ளிகளில் பாடநூலாக வைக்கப்பட்டிருந்தமையை ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

    ஏறக்குறைய நாற்பது ஆண்டு நீண்ட காலப் பரப்பைக்கொண்ட இப் பகுதியின் பிற்பகுதியில் அதிகமாகவும் தோன்றியவை தொடர்கதைகளே. இவற்றில் சிலவே குறிப்பிடத் தகுந்தன. ‘வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜெயம்’ இவற்றிலொன்று. இரசிகமணி கனக-செந்திநாதன் இதையே ஈழத்தின் முதலாவது சரித்திர நாவலென்பார். இது 1905இல் வெளிவந்தது. தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் ‘அழகவல்லி’ இன்னுமொரு குறிப்பிடத் தகுந்த நூல். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மழவர் குடும்பங்களுக்கிடையே நிலவிய ஏற்றத்தாழ்வுகளைப் பின்னணியில்கொண்டு நகர்கிறது இந் நாவல். கிராமிய பேச்சு வழக்கின் பயில்வையும், சமூக பழக்க வழக்கங்களின் பதிவையும் இதில் மிகுதியாகக் காணக்கிடக்கிறது.

    மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இதயம்’ என்ற நூலையும் இக் காலப் பகுதியின் முக்கிய நூலாகக் கருதவேண்டும். இது 1914இல் வெளிவந்தது. ‘நொறுங்குண்ட இதயம்-கதையும் கதைப் பண்பும்’ என்ற தலைப்பில் இந்நாவல்பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளார் கலாநிதி ஆ.சிவநேசச்செல்வன். ‘சமகால சமூகத்திற் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்த்துக் கண்டனக் குரல் கொடுப்பதாக அமையும் இந்த நாவலிலேதான் முதன்முதலில் ஈழத்து நடுத்தர வர்க்கத்தின் உயிரோட்டமுள்ள கதைமாந்தரைப் பார்க்கிறோம்…நடப்பியல்பு நாவலுக்கான இன்றியமையாத பண்பு இது’ என்கிறார் கலாநிதி நா.சுப்பிரமணியன். அற போதனை என்கிற நோக்கம் அழுத்தம் பெறாததாய் இந் நாவல் அமைந்திருப்பின் மிகச் சிறந்த நாவலொன்றின் கூர்த்த பண்புகள் அமைந்ததாய் இந்நாவல் இன்று பேசப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

    1925இல் வெளிவந்த ‘நீலகண்டன் ஓர் சாதி வேளான்’ என்ற இடைக்காடரின் நாவலை, அதுவரை காலம் நிலவிவந்த மரபான கதை சொல்லல் முறையினை முடிவுக்குக் கொண்டுவந்த நூலாகக் கொள்ளலாம். ‘புனித சீலி’ யோன் மேரி என்பாரால் பல பாகங்களாய் எழுதப் பெற்றது. கல்கியின் நீண்ட நாவல்களையும்விட நீளமானது.


மறுமலர்ச்சிக்; காலம் (1931-1956)

‘மறுமலர்ச்சி’இதழ், மறுமலர்ச்சிக் காலகட்டமான இக் காலப் பகுதியின் படைப்பிலக்கிய விமர்சன பிரசுரக் களனாயிருந்தது. பின்னால் ஈழகேசரி,வீரகேசரி, சுதந்திரன், தினகரன் போன்ற பத்திரிகைகளும் தோன்றி ஈழத்துப் பிரசுர களத்தை விரிவாக்கின. ‘கல்கி’ கிரு~;ணமூர்த்தி போலவும், அகிலன்போலவும் எழுதுபவர்களே உற்பத்தியாகிக்கொண்டிருந்தாலும், இலக்கிய வீச்சோடு எழுதியவர்களும் இக் காலப்பகுதியில் தோன்றவே செய்தார்கள்.

    தமிழகத்தைப்போலவேதான் இங்கும் அது நிகழ்ந்தது. கனதியான இலக்கியத்தை மணிக்கொடி தோன்றி வளர்த்ததுபோல்,ஈழத்தின் இலக்கியக் கனதிக்கு இடம்கொடுத்து வளர்த்தது மறுமலர்ச்சி இதழ்.
பத்திரிகைகள் வெகுத்த காலமாக இது இருந்தாலும், நாவல்கள் சிறந்தன தோன்றியதாய்ச் சொல்ல முடியவில்லை. தோன்றிய பலவும் தொடர்கதைகளாகவே இருந்தன. மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப்படுவோர்கூட தொடர்கதைகளோடு திருப்திகொண்டு இருந்துவிட்டனர்.

    அ.செ.முருகானந்தனின் ‘யாத்திரை’, வ.அ.இராசரத்தினத்தின் ‘கொழுகொம்பு’, கனக. செந்திநாதனின் ‘வெறும்பானை’, க.தி.சம்பந்தனின் ‘பாரம்’ போன்றவை நாவலாகவளராத தொடர்கதைகளாகவே கொள்ளப்பட முடியும்.

    இக்காலத்தின் முக்கியமான போக்கு ஈழத்து இலக்கியம் என்கிற பிரக்ஞை பெறாததாகவே இருந்தது. இப் பொதுப் போக்கை மீறி ஆக்க இலக்கியத்தில் சாதனைக்கான எதுவும் படைக்கப்படவில்லையென்பது வருத்தமான விசயமே. இக் காலப் பகுதியில் ஈழத்தில் நிறைய மொழிபெயர்ப்பு நாவல்கள் முகிழ்த்தன. இது, அடுத்த கட்ட இலக்கியத்தின் செறிவை அப்போதே உறுதிப்படுத்திக்கொண்டிருந்தது.


தேசியவாத காலம் (1955இன் மேல் தொடங்கி 1972வரை)

1956ஆம் ஆண்டுவரை ஐக்கிய தேசியக் கட்சிக்கெதிராக வல்லபத்தோடிருந்த ஒரே அணி இடதுசாரிக் கட்சிகளினதே ஆகும். ஐ.தே.க.விலிருந்து பிரிந்து எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க 1951இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைத் தாபித்துக்கொண்டாலும், அது ஒரு மூன்றாம் வலுவாகவே இருந்தது. இடதுசாரிகளின் வலு எதிர்க்கட்சி அளவில் மேலோங்கியே இருந்தது.

    1952இல் டி.எஸ்.சேனநாயக்க இறக்க, அதே ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சேனநாயக்கவின் அனுதாப அலையில் மீண்டும் ஐ.தே.க.யே டட்லி சேனநாயக்க தலைமையில் அரசபீடத்தில் அமர்கிறது. விதேச முதலாளித்துவப் போக்குடைய ஐ.தே.க. ஆட்சிபீடமேறிய சொற்ப காலத்திலேயே அத்தியாவசியப் பொருட்களின் விலை அபரிமிதமாக உயர்ந்துவிடுகிறது. பஸ், ரயில் கட்டணங்களும் உயர்ந்துவிடுகின்றன. முக்கியமாக அதுவரை இருபத்தைந்து சதமாக இருந்த கூப்பன் அரிசி, அளவும் குறைக்கப்பட்டு விலையும் எழுபது சதமாக ஏற்றப்படுகிறது.

    இந்நிலையில்தான் 1953 ஆகஸ்டு 12இல் வேலைநிறுத்தத்துக்கு, நாடு தழுவிய அழைப்பு விடுகின்றன இடதுசாரிக் கட்சிகள். அரசாங்கத்தின் சகல அச்சுறுத்தல்களையும் மீறி வேலைநிறுத்தம் அமோக வெற்றிபெறுகிறது. இக் கொந்தளிப்புபற்றி விரிவாகவே பார்க்கவேண்டும்.

    ஒரு பொதுப் பிரச்னையில் நாடு தழுவி பொதுமக்கள் எவ்வாறு ஒன்றிணைகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இக் காலகட்டத்தில் வடக்கிலும் இடதுசாரிகளின் வலுவே அதிகம். கொழும்பு மாநகர் ஸ்தம்பித்துப்போகிறது. துறைமுகம், போக்குவரத்து, தொழிற்சாலைகள் யாவிலும் வேலைநிறுத்தம். கொழும்புத் துறைமுகத்தில் ஒரு நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஐ.தே.க.வின் மந்திரிசபை கூடி அவசர ஆலோசனை நடத்துகிறது, மக்களின் பேரெழுச்சியைக் கண்டு அஞ்சி.
தென்பகுதிகள் இன்னும் கூடுதலான பாதிப்புக்களை அடைகின்றன. மரங்களை வெட்டிச் சாய்த்தும், தந்திக் கம்பங்களைச் சரித்தும் போக்குவரத்து முடக்கப்படுகிறது. தொலைபேசிச் சேவை தடுக்கப்படுகிறது. தண்டவாளங்கள் அகற்றப்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இன்னொரு கட்டத்தில் இவற்றின் உச்சபட்சமாக தென்பகுதி நோக்கிச் சென்ற ஒரு ரயிலைத்தடுத்து நிறுத்தி கையகப்படுத்தியது மக்கள் கூட்டம். அரசியல் வரலாற்றில் இது ‘மகா ஹர்த்தால்’ என்று அழைக்கப்படுகிறது.

    இது இலங்கையின் இலக்கிய, சமூகத் தளங்களில் மிக முக்கியமமான பாதிப்புக்களை விளைக்கிறது. இந்தியாவில் காந்திஜியின் தலைமையில் நடந்த 1930இன் உப்புச் சத்தியாக்கிரகம், எவ்வாறு அதன் இலக்கிய, சமூக நிலைமைகளைக் கட்டுடைத்துவிட்டதோ, அதற்கு நிகரான ஒரு அலையைக் கிளர்த்தியிருந்தது 1953இன் வேலைநிறுத்தம்.

    இந் நிலைமையில் 1956இல் நடந்த பொதுத் தேர்தலில் தேசிய முதலாளிகளின் அபிலாசைகளைப் பிரதிபலித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கவின் தலைமையில் அரசாங்கம் அமைக்கிறது. தேசிய முதலாளிகளின் கையில் ஆட்சியதிகாரம் கிடைக்கவே, எங்கும் எதிலும் தேசிய கோசம் எழலாயிற்று. தனிச் சிங்கள சட்டம் இந்நிலையில் கொண்டுவரப்பட தமிழ்த் தேசியம் விழித்தெழுகிறது. பிரிட்டிஷ் கடற்படை வசமிருந்த திருகோணமலையைச் சுவீகரிக்கும் பொருட்டு இலங்கையரசு நிறைவேற்றிய சட்டமானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அது தேசிய உணர்வை இன்னுமின்னும் பெருகிவிளைய வைத்தது. இடதுசாரிகளின் மூலம் இந்தக் கோஷம் தமிழர் மத்தியில் குறைவாக இருந்தாலும் வலுவாகப் பரவியது.

    ஏறக்குறைய 1950வரையும் தமிழகம் தாய்நாடு, ஈழம் சேய்நாடு எனவிருந்த மாயத்திரை 1956க்குப் பின்னால் முற்றாக விலகி இரு நாடுகளின் இறைமைகளும் இலக்கியார்த்தமாகவும் நிலைநிறுத்தப்பட்டன. இங்கிருந்துதான் ஈழத்து மண்வாசைன இலக்கியமென்ற குரல் ஓங்கியொலிக்கக் கேட்கின்றது. மண்வாசைன செறிந்த பல இலக்கியங்கள் இக் காலப் பகுதியில் முகிழ்த்தன. ஈழம் தனக்கான இலக்கியச் செல்நெறியை வகுத்துக்கொண்டாயிற்று.

    இக் காலத்திலெழுந்த தேசிய இலக்கிய கோஷத்தை ‘தேசிய இலக்கியம் என்கிற யுத்தக் குரல்’ என்பார் ஏ.ஜே.கனகரட்ன. தேசிய இலக்கியமென்பது ஒரு மனோபாவம் மட்டுமில்லை, ஒரு நாட்டின் தனித்தன்மையையும், பாணியையும், பிரகரணங்கள் முதலியவற்றையும் குறிக்குமென்பார் அவர். அது ஒரு தேசிய தனித்துவத்தை, தேசிய சுபாவத்தை, தேசிய வல்லபத்தைப் பிரதிபலிக்கத்தான் செய்யும் என்று அவரே மேலும் கூறுவார்.

    அமெரிக்கரும் ஆங்கிலேயரும் ஒரே மொழியைப் பேசுபவர்கள். 1818இல் சிட்னி ஸ்மித் எழுதுகிறார் எடின்பரோ மதிப்புரையில்,‘ஆறு வாரப் பயணத்தில் நமது மொழி, நமது உணவு, நமது விஞ்ஞானம், நமது வல்;லபம் முதலியவற்றைச் சிப்பங்களிலும் பீப்பாய்களிலும் அவர்களுக்கு நாம் அனுப்பிவைக்கும்போது ஏன் அமெரிக்கர்கள் புத்தகம் எழுதவேண்டும்?’ என்று. இருந்தும், சுதந்திரத்தின் பின் அமெரிக்க இலக்கியம் படைக்கப்பட்டது. ஒரு நாட்டுக்கு அதற்கென்று பிரத்தியேகமான உணர்வுண்டு. அதனால் அது தன் உணர்வின் வெளிப்பாட்டுக்கான இலக்கியத்தைப் படைத்தே தீரும். இதுவேஈழத்திலும் நிகழ்ந்தது. தொப்புள் கொடி துண்டிக்கப்பட்டது. தேசிய இலக்கிய கோ~த்தின் முன்வைப்புடன் பல்வேறு நவீனங்கள் வெளியாகின. அவை கற்பனா யதார்த்தவாதம், யதார்த்தவாதமென்றும், சோசலிச யதார்த்தவாதமென்றும் பல்வேறு முகங்கள்கொண்டு உருவாகின. முற்போக்கு, மெய்யுள், நற்போக்கு என அது எப்பெயர் பெற்றிருப்பினும், பொதுவில் அது தேசிய இலக்கியம்-ஈழத் தேசிய இலக்கியம்.

    தேசிய இலக்கிய காலப்பிரிவில் 1956-62ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் குறிப்பிடத் தகுந்தது. மண்வாசனை தோய்ந்து புதிய அனுபவங்கள் படைப்புகளாயின. இக் காலகட்ட இலக்கியம்பற்றி சில்லையூர் செல்வராசன் பின்வருமாறு கூறியுள்ளார்: ‘இந்தக் காலப் பிரிவில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பூரண உருவமும், தாக்கமும்,ஈழத்து நாவலென்ற அழுத்தமான முத்திரையும் பெற்றுப் பொலிகிறதென்பது மிகையல்ல.’

    இந்த ஆறாண்டுக் காலத்தினை இளங்கீரன் சகாப்தமென்றும் சொல்லலாம். 1951இல் எழுதத் தொடங்கிய சுபைர் இளங்கீரன் சுமார் பதினைந்தாண்டுக் காலத்தில் 23 நாவல்களை எழுதியிருக்கிறார். அவற்றுள் ‘நீதியே நீ கேள்’,‘இங்கிருந்து எங்கே?’ போன்றவை ஈழத்து இலக்கிய வரலாற்றில் அழுத்தமான முத்திரைகளைப் பதித்துள்ளன. இலங்கைச் சமூகத்தில், தொழிலாளர்களேயென்றாலும் கடைச் சிப்பந்திகள் என்றொரு பெரிய சமூகம் தனியாக உண்டு. இது இஸ்லாமிய சமூகத்திலே அதிகம். இந்த சிப்பந்திகள் சமூகத்தை தன் நாவல்களில் பிரதிநிதித்துவப் படுத்தியவர் இளங்கீரன். மேலே குறிப்பிட்ட இரு நாவல்களினதும் சமூக அக்கறை அல்ல, அவற்றின் கலாநேர்த்தியே அவற்றின் சிறப்புக்குப் காரணமென்பதுதான் பலரின் அபிப்பிராயமும். கதையை நடத்திச் செல்லும் லாவகம், பாத்திர வார்ப்பு, உரையாடல் என்று அத்தனையிலும் ஆசிரியரின் வெற்றி தெரிகிறது. ‘நீதியே நீ கேள்’ முதலில் தினகரன் வாரமலரில் தொடர்கதையாக வந்து பின்னரே நூல் வடிவு பெற்றது. நூலாக்கத்தின் முன், தொடர்கதையில் இயல்பாகக் கையாளப்பட்டிருக்கக்கூடிய இலக்கிய மலினங்கள் சரிசெய்யப்பட்டனவா என்று தெரியவில்லை. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய வாய்ப்பு மிக அருகியே இருக்கிறது. இவ்விரு நாவல்களும் உலகத் தரத்தன என்கிறார் சில்லையூர் செல்வராசன். கலாநிதி கைலாசபதியும் ‘நீதியே நீ கேள்’ நாவலை மிகவும் பாராட்டியிருக்கிறார். ‘ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம்;’ தந்த கலாநிதி நா. சுப்பிரமணியன் இந்நாவலின் செய்நேர்த்திக் குறையை முக்கியமாய் எடுத்துரைப்பார். ஒரு காலகட்டத்தின் முக்கியமான நாவல் என்பதைத்தவிர இக்கட்டுரையாளனுக்கு வேறு அபிப்பிராயம் கிடையாது.

    1962க்கு மேலே பெரும்பாலான நாவல்கள் முற்போக்கு இலக்கிய முத்திரை குத்திகொண்டன. சமூகத்தில் ஜாதி, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் ஒரு பகுதி மனித குலத்தை நசுக்கிக் கிடக்கிறபோது அவற்றுக்கெதிரான குரலும் இலக்கியத்திலேறுவது தவிர்க்கமுடியாதது. ஆனால் அதுவே இலக்கியத் தகைமையாகிவிடாது. இதை உறுதிபடுத்துவதுபோல், இக் காலகட்டத்தில் தோன்றிய பல நாவல்களும் அட்டவணைகளில் மட்டுமே அடங்கிக் கிடக்கின்றன. இவ்வகைப் பிரசார நெடில் கூடிய எழுத்துக்கள் விரையில் கலா ஈரமற்று வறட்சியடைந்து போயின. 1970க்குப் பின்னால் இலங்கை அரசியலில் ஏற்பட்ட இடதுசாரிகளின் தோல்வி, 1972க்குப் பின்னான பத்து வரு~ காலத்தை நாவல் வரட்சிக்காலமாக்கியது என்றாலும் இக் காலகட்டத்தில் நல்ல சில நாவல்கள் தோன்றாமலும் இல்லை.

    இக் காலகட்டத்தில் எழுந்த பல நாவல்களும் ஈழத்தின் மண்வாசனைக்கே முதலிடம் கொடுத்தன. அவற்றுள் முக்கியமானவையாய் பின்வருவனவற்றைக் கூறமுடியும். செ.கணேசலிங்களின் ‘நீண்ட பயணம்’, கே.டானியலின் ‘பஞ்சமர்’, நந்தியின் ‘மலைக்கொழுந்து’, தி.ஞானசேகரனின் ‘குருதிப் புனல்’, தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’, யோ.பெனடிக்ற் பாலனின் ‘சொந்தக்காரன்’, செங்கைஆழியானின் ‘காட்டாறு’ம் ‘வாடைக்காற்று’ம், கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப் பச்சை’, அ.பாலமனோகரனின் ‘நிலக்கிளி’ போன்றவை அவை.

    ‘நிலக்கிளி’ நாவல் இக் காலப்பகுதியில் தோன்றிய முக்கியமான நூல். மட்டுமில்லை. இதுவரையான இலக்கியக் காலபட்டங்களுக்குள்ளேயே முக்கியமான நாவல் என்றும் கூறமுடியும். 1972இல் நிறுவப்பட்ட வீரகேசரியின் மலிவு விலை நூல் வெளியீட்டுத் திட்டத்தில் வெளிவந்த விலைமதிப்பில்லாத நூல் இது.

    வட்டார வழக்கைப் பேசுகிற நாவல் இது. கதை நிகழ் களமாக அமைவது, இன்று அகதிகளால் நிறைந்துள்ள வன்னிப் பிரதேசமாகும். நாவலின் கள விஸ்தரிப்பு அபாரம். கதிர்காமன், அவனது மனைவி பதஞ்சலி, வஞ்சக எண்ணத்தோடு அவளுடன் பழகும் ஆசிரியன் சுந்தரலிங்கம் என பாத்திரங்கள் உயிர்கொண்டு உலவுகின்றன நாவலில். நிலக்கிளி ஒரு குறியீடு – பதஞ்சலிக்கான குறியீடு. அது ஒரு பறவை. மரப் பொந்துகளில் வாழும் இப் பறவையினால் உயரத்தில் எழும்பிப் பறந்துவிட முடியாது. மண் நோக்கியே இதன் சரிவு இருக்கும். இதனால் இது மக்களால் எழுதில் கையகப்படுத்திவிட முடிகிற பறவை. இதுபோலவே பதஞ்சலி இருக்கிறாள். நாவல் நிகழ்வுகள் மனவோட்டங்களைச் சொல்லியும் சொல்லாமலும் நகர்ந்து அற்புத வாசக அனுபவத்தை அளிக்கிறது.

    இக்காலகட்டத்தில் தோன்றிவை அதிகமாகவும் குறுநாவல்களே. 'இருளினுள்ளே’ (எஸ்.அகஸ்தியர்),‘காவியத்தின் மறுபக்கம்’,‘தோழமை என்றொரு சொல்’ (செ.யோகநான்),‘புகையில் தெரிந்த முகம்’ (அ.செ.முருகானந்தன்),‘குட்டி’ (யோ.பெனடிக்ற் பாலன்) என முக்கியமான பல குறுநாவல்கள் அவற்றில் உள்ளன. ஆயினும் இவற்றை நாவல் வரிசையில் சேர்த்து தராதரம் பார்க்க நான் முயலவில்லை. அதுபோல் பரீட்சார்த்த நாவல்களான எஸ்.பொன்னுத்துரையின் ‘தீ’, எழுத்தாளர் எண்மர் எழுதிய ‘வண்ணமலர்’,  ஐவரால் எழுதப்பெற்ற ‘மத்தாப்பு’ ஆகியவற்றையும் இங்கு நான் விசாரணைக்குட்படுத்தவில்லை. இவை ஒருவகையில் புதிய விஷயங்களையோ,விஷயங்களைப் புதிய முறையிலோ சொல்லிப்பார்க்க வந்தவை மட்டுமே. அவற்றின் பிரஸ்தாபம் இவ்வளவு போதுமானது.

    இலங்கையில் அரசியல் பொருளாதாரச் செழிபின்மையினதும், இலக்கியச் செழிப்பின்மையினதும் பத்தாண்டுகள் உளவெனில் அவை 1972க்கும் 1983க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளேயாகும். இதையே இலக்கிய வரலாற்றில் தேக்க காலம் என்று குறிப்பிட்டேன். முற்போக்கு இலக்கிய நெறி தன் முன்னால் எழுப்பப்பட்டிருந்த கேள்விச் சுவர்களைப் பார்த்து திகைத்து நின்றது. இடதுசாரிச் சிந்தனைகளின் சரிவு தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்திருந்தது. எங்கும் ஒரே குழப்பம். சிந்தனைக் குழப்பம், வாழ்வுக் குழப்பம்…இப்படி பல குழப்பங்கள். இக் குழப்ப காலம் நாவலுக்குரிய காலமல்ல என்று கூறுவார்கள். இது சிறுகதைக்கும், கவிதைக்குமான காலம். ஓர் உணர்வுத் துண்டை கதையாக அல்லது கவிதையாக மாற்றிவிடுவது சுலபம்தான். நாவலோ பூரணத்துவத்தை அவாவி விரிவது. ஒன்றிலிருந்து கிளைத்துப் படர்வது. அது தெளிவு பெற்ற ஒரு காலப் பகுதியிலேயே தன் தர்க்கங்களின்மூலம் சித்தாந்தங்களை நிறுவிக்கொண்டு போகும்.


வியாப்திக் காலம்(1983-2000)

அவசியங்கள் மூலம் மாற்றம் பெறாதவரையில் இக்காலகட்டத்தின் நீட்சி சென்றுகொண்டேதான் இருக்கும். ஈழத் தமிழர் தாயகம்விட்டு புவிப் பரப்பெங்கும் தஞ்சம் கேட்டு ஓடினார்கள். லட்சக்கணக்கில் இந்த ஓட்டம் நிகழ்ந்தது. வௌ;வேறு காலநிலை, கலாச்சாரங்கள் கொண்ட நாடுகளிலே தமிழர் வாழ்வு தொடங்கிற்று. வாழத் துவங்கிய மண்ணோடு பொருந்திப்போக முடியாத நிலைமையும் ஏற்பட்டது. அப்போதெல்லாம் இலக்க்கியமே பலரதும் உணர்ச்சிக்கு வடிகாலாக ஆயிற்று. அப்போதும் சிறுகதை, கவிதை ஆகிய வடிவங்களே தேர்ந்தெடுக்கப்பட்டன. நாவலிலக்கிய சிரு~;டிக்கு காலம் மிகவும் பிரதானமானது. புகலிட நாடுகளில் இடையறாத உழைப்பை மேற்கொண்டுள்ள தமிழர் நாவலைப் பொறுத்தவரை வாசகர்களாகவே ஆகியிருக்கிறார்கள். பின்அமைப்பியல், பின்நவீனத்துவம் சார்ந்த இலக்கிய வகைமைகளில் படைப்பு இங்குள்ளவர்களிடத்திலேயே முதன்மையாக முடியக்கூடியது. ஆனாலும் வாசகர்களாக மட்டுமே அவர்கள் தங்கிக்கொண்டது ஒருவகையான இழப்பாகவே எனக்குத் தெரிகிறது.

    புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்துகொண்டும் முல்லைஅமுதன், மாத்தளை சோமு, தியாகலிங்கம் போன்றோர் நாவலுருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இக் காலகட்டத்தில் மாத்தளை சோமு வெளியிட்ட ‘மூலஸ்தானம்’ விமரசன ரீதியாக பலத்த கவனத்தைப் பெற்ற நாவலாகும். யதார்த்தப் பாணியில் ஆற்றொழுக்காய்ச் செல்லும் இந்த நாவல்.

    இந்திய மண்ணில் அகதிகளாய் வந்து சேர்ந்தவர்தான் அதிக நாவல்களை படைத்திருக்கிறார்கள். இவற்றுள் சிலவேனும் குறிப்பிடத் தகுந்த நாவல்களாகலாம். ‘நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே’ (செ.யோகநாதன்),‘அயலவர்கள்’ (செ.கணேசலிங்கன்),‘விதி’ மற்றும் ‘நிலாச் சமுத்திரம்’ (இக்கட்டுரையாளனது) போன்றவை தக்க விமர்சனங்களை இந்திய மண்ணிலே எதிர்கொண்டவை.

    200க்கு சற்று முன்னாலிருந்து நாவலிலக்கியத்தின் போக்கு, அதன் பேசுபொருளெல்லாம் அதற்கு முன்னர் நிலவிய எந்தக் காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றமடையத் துவங்கியுள்ளன. அது குறித்த வாசக பரப்பு குறுகிக் குறுகிச் சென்றுகொண்டிருப்பதை கவனத்திலெடுக்கவேண்டும். ஜனரஞ்சகமான எழுத்தும் இலக்கிய மொழியும் ஒன்றல்ல. ஆனாலும் நாயக்கர் காலத்தில் தோன்றிய செய்யுளினங்களான யமகம், மடக்கு, திரிபு, சித்திரக்கவி போன்றதாக வசனமும் ஆகிவிடக்கூடாதென்ற கரிசனம் தேவை. அந்தப் பேரழிவை நிவர்த்தி பண்ண பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரதி தோன்றும்வரை தமிழ் காத்திருக்கவேண்டியதாயிற்று. பாரதி கவிதையிலே காட்டியதை அவன் காலத்துக்கு முன்பே வசனத்தில் காட்டியவர் ஆறுமுக நாவலர். அன்னநடை, பிடியினடை அழகுநடை அல்ல’வென அன்றே தெரிந்திருந்தவர் அவர். அதனால்தான்,    ‘தமிழ்ப் பாவையாட்கு வன்னநடை, வழங்குநடை வசனநடை எனப் பயிற்றி வைத்த ஆசான்’ ஆனார். நவீன இலக்கியத்தில் புனைகதை வாகனம் வசனமாகவே இருக்கமுடியும்.நாவலை வசனநடையின் குழந்தையென்றும் கூறலாம். அதுபோல் நாவலும் வசனநடையைச் செழுமைப்படுத்தியிருக்கிறது. இலக்கிய மொழி இறுக்கிய மொழியாகாது பார்த்துக்கொள்வது அவசியம்.

    நவீன யதார்த்தம் என்றொரு இலக்கிய வகையினம் இப்போது பேசப்படுகிறது. மொழிப் பிரக்ஞை, கட்டிறுக்கம் என்று வாசிப்பு, சிந்தனைக் களங்களில் செல்வாக்குச்; செலுத்தத் தொடங்கியுள்ளது இது. இதுவே வருங்காலத்தின் இலக்கிப் பிரக்ஞையை நிர்ணயிக்கிற வகையினமாகவும் ஆகக்கூடும். இதற்கு உதாரணமாக, சென்ற ஆண்டில் வெளிவந்திருக்கிற ஈழத்து நாவலான மு.பொன்னம்பலத்தின் ‘நோயிலிருத்தல்’ நாவலைச் சொல்லலாம். வருங்காலம்தான் இப்போது தோன்றுகிற நாவல்களின் தாரதம்மியத்தைச் செய்யும்.அதுவே சரியாகவும் இருக்கும்.

0

(குமுதம்.காம்’மில் யாழ்மணம் பகுதியில் ஆடி 2001இல் பகுதிபகுதியாக வெளிவந்த கட்டுரை இது.)

Comments

Anaya Patel said…
For people who simply love driving experiences, car games are always enjoyable. From smooth controls to exciting challenges, they offer entertainment, relaxation, and thrill all in one place. Perfect for anyone who loves speed and fun gameplay.

Popular posts from this blog

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்