சாம்பரில் திரண்ட சொற்கள் 4



 

வித்துவான் வீரகத்தியின் தம்பி சண்முகராசாவின் வீடு அரசடியில் இருந்ததென்றால், சந்திக்குப் பின்னால் விரிந்து கிடந்த வயல்வெளியின் மறுகரையில் பார்வை புள்ளியாய்ப்படும் தூரத்திலிருந்தது, பொன்னாத்தையென்று அவர்கள் வம்சத்தில் பெருந்தனக்காரியாய் இருந்த முப்பாட்டியின் ஞாபகத்துக்காய் பெயர் வைக்கப்பட்ட அவரது தங்கையின் வீடு.

அது வயற்கரைப் பிள்ளையார் கோயிலுக்குக் கிழக்காக நாற்பது பரப்பில் அமைந்திருந்தது. பராமரிப்புப் போதாமையால் சுவர்களில் கரும்பாசி ஏறிக்கொண்டும், அடுக்கு ஓடு போடப்பட்ட அதன் கூரைப் பகுதியில் சேதாரம் அதிகமாகியும் இருந்தாலும், அரண்மனைமாதிரி பொழிகல்லுகள் நிறைய வைத்துக் கட்டப்பட்ட பெரிய வீடுதான் அது.

அவளின் கல்யாணப் பேச்சின்போது, குளக்கரை வயலையும், அரண்மனையான வீட்டையும் சீதனமாகக் கொடுக்கவேண்டாம், அதற்கிணையாக தனது தென்னந்தோப்பு வளவையும், தோட்டக் காணியையும்,  இருபாலைச் சீதன வீட்டையும் கொடுக்கலாம், தனக்கு அந்த அரண்மனை வீடு வேண்டுமென நின்ற சண்முகராசாவின் எண்ணத்தை, தனக்கு அந்த வீடுதான் வேணுமென்று பிடிவாதம் பிடித்து சின்னாத்தை தனதாக்கிக் கொண்டாள்.

முரணின் முதல் முளை சின்னண்ணன் தங்கைக்குள் விழுந்தவிதத்தை சாந்தரூபிணி இவ்வாறாக அம்மாவின் குரலில் நினைவுபடுத்தினாள்.

தொடர்ந்த சம்பவங்கள் மேலும்  அந்த முரணை வலுக்கச் செய்தன.

சின்னாத்தை தன் முதல் பேற்றையும், சண்முகராசாவின் மனைவி தன் நான்காம் பேற்றையும் ஒரே மாதத்தில் எதிர்பார்த்திருந்தவேளை, தங்கை சின்னாத்தை வீரகத்தி அண்ணன் வீடு வந்திருந்தபோது, அவள் வலக்கையூன்றி எழும்பும் விதம்கண்ட வித்துவான் அவளுக்கு ஆண்குழந்தைதான் பிறக்குமென்று சந்தேகமறச் சொல்லிவிட்டார். பெரிதும் மகிழ்ந்துபோன சின்னாத்தை யோசிக்க அவகாசம்கூட கொடுக்காமல் அதற்கொரு பெயர் சொல்லும்படி நிற்க, மிக்க சிரமம்பட்டு ஒரு வாய் வெற்றிலை போடச் சுணங்கிய நேரத்தில் தன் நினைவுகளைத் குடைந்து கொன்றவேந்தனென்று ஒரு பெயர் தேர்ந்து சொன்னதை, அப்போது அங்கு எதற்காகவோ வந்திருந்த சண்முகராசாவும் கேட்க நேர்ந்ததை விதியென்றுதான் சொல்லவேண்டும்.

எப்படியோ காலம் அவரின் மனைவிக்கு முதலில் பேற்று வலியை உண்டாக்க, பிறந்த ஆண்பிள்ளைக்கு எதுவித தயக்கமோ தடுமாற்றமோ மனவுறுத்தலோவின்றி கொன்றைவேந்தனென்று பெயர் வைத்துவிட்டார் சண்முகராசா. அது சின்னாத்தைக்கு பெரிய மனவுடைவாகிப் போனது. அவளின் கணவன் சண்முகநாதனுக்கு தீயை நெஞ்சில் எழுப்பியது போலாகிவிட்டது. கீழ்க் கோர்ட்டில் கிளார்க்காய் இருக்கிற திமிரிலோ என் பிள்ளையின் பேரைத் தானெடுத்தானென அரசடிவரை கேட்க அவன் அரண்மனை வீட்டிலிருந்து சீறினான்.

அதற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு சின்னாத்தைக்கு நோக்காடெடுத்தது. ஊர் மருத்துவிச்சியால் ஆத்தாமல்போய்விட, நோவு நொம்பலத்தில் அலறிய சின்னாத்தையை வண்டில் கட்டி இணுவில் மகப்பேற்று ஆஸ்பத்தரிக்குக் கொண்டோடினார்கள். அங்கே அவளுக்கு பெண் குழந்தையொன்று பிறந்தது. அதற்கு சண்முகநாதன் தன் உறவுவட்டத்திலுள்ள பண்டிதர்களுடன் கலந்தாலோசித்து ஆத்திசூடியென்று ஓர் அருமையான பெயர் வைத்தான்.

சின்னாத்தைக்குப் பெண் குழந்தை பிறந்து கொன்றைவேந்தன் என்ற பெயர் தேவையில்லாது போயிருப்பினும், தன் பிள்ளைக்குச் சூடவிருந்த பெயரை களவாடிவிட்ட சண்முகராசாமேல் மட்டுமில்லை, அதனாலயென்ன, சின்னாத்தைக்கு ஆண் குழந்தை பிறக்கிறபோது அதற்கென்று வெற்றிவேந்தன் அல்லது வேல்வேந்தன் இல்லாட்டி தமிழ்வேந்தனென்று பெயர்சூட இடமிருக்கிறதுதானேயென்று தம்பிக்குப் பரிந்து பேசிய வித்துவான் வீரகத்திமேற்கூட பகையாகிப் போனான் சண்முகநாதன். குழந்தை பிறந்த முப்பத்தோராம் நாள் விசேஷத்திற்கும் அண்ணன் தம்பி இருவருக்குமே அழைப்பின்றி சடங்கை முடிப்பித்தான்.

தன் பிழையை உணர்ந்த வித்துவான், தங்கையோடும் மைத்துனரோடும் இயல்பாகவே நடந்துகொண்டார். சண்முகநாதனைச் சரி, தங்கை சின்னாத்தையைச் சரி வழி தெருவில், கோயில் குளத்தில் காண்கிறபோது நின்று, குசலம் விசாரிக்து, அவர்களது குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிச் செல்ல அவர் தயங்கியதில்லை. ஆனால் சண்முகராசாவினால் அப்படி வளைந்துகொடுத்து உறவுகளை அணைத்துப்போக முடியவில்லை. அது ஒரு ரகம்.

‘இப்பிடியாய் சண்முகராசா குடும்பத்துக்கும், தங்கச்சியார்  குடும்பத்துக்கும் இடையில தீராப்  பகை வந்து விழுந்திட்டுது’ என அந்தக் கதையை மேலும் விபரித்திருந்தாள் சாந்தரூபிணியின் அம்மா.

அந்த சின்னாத்தையின் மகள்தான் அல்வாய்ப் பெடியன் கந்தசாமியுடன் கூடிக்கொண்டோடியவளும், பின்னால் அதுவொரு சமூகப் பிரச்னையாய் வளரக் காரணமாயிருந்தவளுமான ஆத்திசூடி.

கந்தசாமி-ஆத்திசூடி கதையில் புதினமேதுமில்லை. கண்டார்கள்; விருப்பம் விழுந்தது; காதலித்தார்கள். மேலும் சிதிலமாகிப் போன அரண்மனை மாதிரியான பெரியவீடிருந்த நாற்பது பரப்புக் காணியில், சுற்றிவர தோட்டம் வயல்வெளிக்கென்றும் பிள்ளையார் கோவில் கிணற்று நல்ல தண்ணீருக்கென்றும் மக்களின் போக்குவரத்திருந்த நிலையிலும் யார் கவனமும் குவியாத இடமொன்றை ஆத்திசூடி கந்தசாமிக்குக் காட்டியிருந்தாள். பலவேளை பகலிலும், சிலவேளை இரவிலுமாய் நிகழ்த்திய அவர்களின் குறியிடச் சந்திப்புகள் ஆத்திசூடிக்கு பேற்றுப் பலனை உறுதியாக்கியபோது, ஓடுவதைத் தவிர அவர்கள் வேறு வழி காணாதவர் ஆயினர்.

நீண்ட திட்டத்தின் பின் அவளை அல்வாய்ச் சிவன் கோவிலுக்கு ஒரு மாலை வரச்சொன்ன கந்தசாமி, அவள் சாமியைக் கும்பிட்டுவர, வெகு நிதானமாக தனது சைக்கிளில்  ஏற்றிக்கொண்டு தன் வீடு கொண்டுசென்றான். ஆத்திசூடியுடன் கூடிச் சென்றிருந்த அன்னம்மாக் கிழவி செய்வதறியாது திகைத்துநின்று, கணங்கள் சில கழிய, ‘ஆத்திசூடியை கந்தசாமி தூக்கிக்கொண்டு ஓடியிட்டான்’ என்று கத்திய சத்தம் கரவெட்டி சென்றுசேர இருள்விழுந்தாகிவிட்டது.

அன்றிரவு நெல்லியடிச் சந்தியில் அந்த இரண்டு குடும்பத்தவர்களுக்குமிடையில் அடிபாடு நடந்தது. அங்கங்கே வேறுவேறிடங்களிலும் பிரச்னைகள் நடந்ததை முன்பக்கத்தில் மூன்று கல தலைப்பில் செய்தியாய் வெளியிட்டிருந்தன தினசரிகள்.

அரசியல் கட்சிகளால், சமூக ஆர்வலர்களால் இரண்டு குடும்பங்களின் தனிப்பட்ட அப் பிரச்னை சாதிப் பிரச்னையாகாமல் தடுப்பதற்காய் வெகு பிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது.

இருவேறு சமூகங்களைச் சேர்ந்த இருவரின் காதல் விவகாரத்தை சமூகப் பிரச்னையென்ற  பெருநெருப்பாய் தூண்டிக்கொண்டிருந்தான் ஆத்திசூடியின் தந்தை சண்முகநாதன். அவனது குடும்பத்தை இளக்காரமாய்ப் பேசி, அந்தளவு கடூரமாக எதிர்வினையாற்ற அவனை வைத்தது, தந்திரசாலியான மைத்துனர் சண்முகராசாவின் செயற்பாடாகயிருந்தது.

ஒரு பெரிய மௌனத்தோடு எதுவும் நடக்காதமாதிரி தானும் தன்பாடுமாய் இருந்துகொண்டார் வித்துவான் வீரகத்தி. அது அவரின் விவேகமல்ல, சுபாவம்.

விடுதலைப் போராட்ட இளைஞர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முற்றிவந்த முறுகல்நிலை, சாதிப் பிரச்னை தணிந்துபோக ஓர் உபகாரணமாய்த் தொழிற்பட்டதும் மெய்யே.

ரவீந்திரனின் பெரியப்பா சொன்னதுபோல் அதுவொன்றும் குடும்பரீதியான பிரச்னையென்ற வட்டத்தை விலகிச் சென்றிருக்கவில்லை சாந்தரூபிணியைப் பொறுத்தவரை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

டந்த இரண்டு வாரங்களாக நிலவிய பனிப் பொழிவும் குளிரும்  புதுவருஷத்தின் மேல் சட்டென அடங்கிவிட்டதான  மாயத்தில் சிலரேனும் கொஞ்சம் ஆச்சரியப்படச் செய்தார்கள். ஆனால் அது சுந்தரத்திற்கு இல்லை.

 

தொழிற்சாலைகளில், பஸ் பயணங்களில் செவியில் விழுந்து  மனத்தில் உறைந்துபோன மூன்று Wக்கள்பற்றிய ஞாபகம் இன்னும் அவர் மனத்தில் இருந்துகொண்டிருக்கிறது.

முதல் W, womanனின் முதலெழுத்தையும், அடுத்த W, workகின் முதலெழுத்தையும், மூன்றாவது W, weatherன் முதலெழுத்தையும்  குறித்துநின்று, இந்த மூன்று விஷயங்களும் நம்பமுடியாதவையென்று அது தமாஸ் செய்தது. அதனாலல்லாவிட்டாலும், காலநிலையின் அந்த மாற்றம் அவருக்கு அனுபவரீதியாகவே பழக்கமானது. 

தோளுயர நடுவேலிக்கு மேலாக பின்கொடியில் படுக்கை விரிப்புகள் காயப் போட்டுக்கொண்டு இருந்த பக்கத்து வீட்டு சீனப் பெண், திடீரென மாறிவந்த காலநிலைபற்றிய புளகமான அபிப்பிராயத்தைத் தெரிவித்தாள். பதிலை ஒரு புன்னகைமூலம் அளித்துவிட்டு, சுந்தரம் பின்புற புல்தரை பெஞ்சில் சென்றமர்ந்தார்.

இன்னும் பசுமை மாறாது ஆதாரத்தில் படர்ந்திருந்த வைல்ட் ஜஸ்மின் கொடி தன் பசிய நிற பற்றுக்கம்பிகளை தாழ்வாரத்தில் எறிந்து படர முனைந்துகொண்டிருக்கும் காட்சி கண்ணில் பட்டது.

அது அவர் வைத்துண்டாக்கிய செடியல்ல. அங்கு வந்த பின்னால் அவ்வப்போது நீரூற்றியது மட்டும்தான் அவர் செய்தார். இன்னும் சின்னாட்களில் தன் பசுமையழிந்து, உடலின் ஈரம் காய்ந்து, வேருக்குள் தன் உயிரைக் கொண்டுபோய் புதைத்துவிடும் குளிர்காலம் ஒத்துக்கொள்ளாத தாவர இனமது. ஓரிரு வாரங்கள் கழிந்தால், அதனிருப்பின் அடையாளம்கூட  அந்த இடத்தில் காணக்கிடைக்காது.  அதன் ஆனந்தமான தளிர் நடனம் காண, அது அடையப்போகும் குளிர்கால அவலம் மனத்தில் துக்கமாய் விரிந்தது.

ஏனோ அந்தச் செடியில் அவருக்கொரு பிரீதியிருந்தது. அவரது சொந்த வீடிருந்த காலத்தில் இரண்டு வைல்ட் ஜஸ்மின் செடிகள் அவர் வைத்திருந்தார். சாடியில் வைத்திருந்த அச் செடிகளை குளிர்காலத்தில் விட்டினுள்ளே கொண்டுபோய்விடுவார். அத்தனை பராமரிப்பு. அதன் வெண் சிறு பூக்கள் தன்னூர் மல்லிகைப் பூவாகவே நறுமணம் சிந்துவது அந்தப் பிரீதியின் மூலமாய் இருக்கமுடியும்.

அடுத்த மார்ச்வரையான மூன்று மாதங்களை ஒரு தவத்தில்போல் கழித்துவிட்டு, எங்கெங்கோ அடங்கிக் கிடக்கும் புள்ளினத்தின்  கலகலவென்ற முதல் இளவேனில் ஒலிப்பில், தன் காலம் விடிந்ததெனத் தெளிவுற்று முளை கிளர்த்தி, தளிர் விரித்து, கொடியெறிந்து பழையநிலை அடைந்துவிடும் வர மகிமை அது பெற்றுள்ளதையெண்ண அவருள் துக்கத்தின் தணிப்பு. 

தவிர்க்கமுடியாதபடி காலத்தின் விசித்திரத்தை நினைக்க அவரை அது செய்தது.

காலத்தின் மகா அற்புதத்தில் என்னென்னவோ விந்தைகள் நிகழ்கின்றன. மேலது கீழும், கீழது மேலுமாய் பிரபஞ்சமே மாறிப்போகிறது. ஆனால் அவரது வாழ்க்கைமட்டும் ஏன் அந்தமாதிரி மணலுள் சில்லுப் புதைந்த பாரவண்டிபோல் இயங்குதலற்றும், இயங்குமென்ற நம்பிக்கைகூட அற்றுமாய்க் கிடக்கிறது?

எப்போதிலிருந்து அவரது வாழ்க்கை அவ்வாறு ஆனதென அவருக்குத் தெரியவில்லை. அதற்கு யார் காரணம் என்பதற்கும் அவரிடத்தில் தெளிவான பதிலில்லை. ஆனால் தெளிவற்ற ஓவியம்போன்ற ஒரு காட்சி அவ் வினாக் காலப்பொழுதில் அவர் மனக்கண்ணில் வந்து பிரசன்னிக்கும். ஆம், அந்த அழகு…  அந்த அழகின்மேல்  தான் வைத்த ஆசையே, எல்லா வகை இடர்களதும் மூலமென ஆகியிருந்ததாவென அப்போது அவர் ஐயம் கொள்கிறார்.

திடீரென வந்த அக் கல்யாணப் பேச்சின்போது அம்மாவின் விருப்பத்தைக் கருத்தில் எடுத்திருந்தால்கூட அந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்க முடியும்.

அம்மாவும் தன் மனத்தை கேள்விகள் கோப்புண்ட ஒரு பூடகமாய்த்தான் வெளிப்படுத்தினாள். ஆனால் பவளமாச்சி…? கண்களால் ஏதோ சொல்ல முயன்றுகொண்டிருந்தாள். நாக்கு உள்ளிழுத்து பேச்சு வராத அவலம் மேவ குந்தோடு சாய்ந்தபடி எல்லாம் விதியென்ற அடக்கத்தில் இருந்திருந்தாள். முயன்றிருந்தால் அவளை நன்கு புரிந்திருந்த அவரால் அந்த சமிக்ஞைகளை விளங்கியிருக்க முடியும். அனர்த்தங்கள் விலக்கப்பட வாய்ப்பிருந்தது.

ஆனால் அவர் எல்லாவற்றையுமே தவறவிட்டார்.

அவரிடத்தில், அந்தக் கேள்விகளிலிருந்து மறுபடியும் சந்தேகங்களையல்ல, பதில்களைக் கண்டடைய முடியுமென்ற நம்பிக்கை இருக்கவே செய்கிறது.  

வழக்கம்போல் கிடைத்தவொரு நினைவுமுனையைப் பிடித்திழுத்தார். நினைவுத்திரையில் வெகுதொலைவின் கடந்தகாலமொன்று சித்திரமாய் நீண்டது.

 

 

டனம் அப்போது யாழ். மத்திய மகாவித்தியாலய விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறான். மாதத்தின் முதல் வெள்ளி மாலையில் வீடு வந்து, ஞாயிறு மாலையில் திரும்பிப் போகிறவனுக்கு  கலகலப்பாய்ப் பழக ஊரில் நண்பர்களும் இல்லையாய் இருக்கிறது. பெற்றோருக்குத் தனிப்பிள்ளை ஆகிப்போனதை யார் குற்றமாகவும் கொண்டுவிட முடியாது. வீட்டிலே பொழுது போகாத வேளை ஆடுகால் படலையில் தொங்கியபடி நின்று தெருவில் விடுப்புப் பார்ப்பதைத் தவிர செய்ய வேறு வேலையும் இல்லையாகிப் போகிறான்.

தெரு என்பதே எப்போதும் சுவாரஸ்யத்தின் இருப்பிடம்தான். மனிதர் சிலர் கதைகளாகவே நடந்துவருவர். சிலர் தம்முள் கதைகளைக் கதைத்துக்கொண்டு வந்தபடி இருப்பார்கள். சிலர் தம் பாடுகளை வாய்வழி தெளித்தபடி வருவர். தலையிலும் மனத்திலுமாய் சுமைகள்தான் மனிதருக்கு எத்தனை எத்தனை வகை!

ஒரு பழைய சைக்கிளின் வோக்குக்குள்ளால் காலை ஓட்டி பெடலில் வைத்துக்கொண்டு, தெத்தித் தெத்தி ஒரு சிறுவன் சைக்கிள்ச் சாரதியம் கற்றுக்கொண்டிருக்கிறான். அவனையும் சைக்கிளையும் துரத்திக்கொண்டு ஆறேழு சிறுவர்கள். அவர்களுக்கும் சைக்கிள் பழக ஆசையிருக்கிறது. குறைந்தபட்சம் அச் சாரதியத்தின் முதல் படியை அந்தமாதிரி தெத்தி ஓடியாவது கடந்துவிட அவர்களுக்கு அவா.

ஊரில் சில சிறுவர்கள் பாரிலிருந்துகூட சைக்கிள் ஓட குடும்பத்தில் யாரிடமும் சொந்தமாக சைக்கிள் இல்லாத நிலையிலும் கற்றிருக்கிறார்கள். ஆனால் நடனம் அந்தமாதிரியெல்லாம் ஆசைகூடப் பட்டதில்லை. சைக்கிளென்பது அவனளவில் உருட்டிப் பார்ப்பதற்குக்கூட அணுகமுடியாதது. ஆனால் தன்னொத்த சிறுவர்கள் சைக்கிள் பழகுவதையும், அவர்களில் சிலர் விழுந்தெழும்புவதையும், இன்னும் சிலர் விழுந்த நோவோடு எழும்பமுடியாது கிடந்து அழுவதையுமென அவர்களின் பல்வேறு உணர்வுத் தெறிப்புகளையும் கண்டபடியிருப்பான்.

எதிர்ப்புறத்திலுள்ள கல்வீட்டு மலரும் விறாந்தையில் அவ்வப்போது காணப்படுவாள். மதிலின் வேல் கம்பிவேலிக்கு மேலாக வெளியே தொங்கும் தூங்குசெம்பரத்தம் பூக்களும் அவனுக்குக் காட்சியின்பம் செய்பவை. சொல்லப்போனால் அவன் வரைந்த முதல் ஒவியம்கூட வேல்கம்பி மதிலுக்கு மேலாகத் தொங்கிய தூங்கு செம்பரத்தம் பூக்களாகவே இருந்தது.

அவன் எந்நேரமும் வாசலில் நிற்பதைக் காணும் மலர் என்ன எண்ணுவாளோ, ஒருநாள் வீட்டின் படிக்கட்டோரம் வந்துநின்று நெற்றிப்பொட்டில் விண்ணென்னும்படிக்கு அவனது கண்களைத் துளைத்துப் பார்த்தபடி நின்றுவிட்டு ‘நைக்காட்’டிவிட்டு உள்ளே ஓடுகிறாள். அவன் திகைத்து, தான் என்ன செய்தான் அந்தப் பழிப்பினை அவள் காட்டவென தன்னுள்ளாய்ப் புழுங்குகிறான்.

ஓட்டுக் கல்வீட்டிலுள்ளவர்களுக்கு குடிசைவாசிகளுடன் உள்ள ஒட்டுறவற்ற தன்மையைப் புரிகிற வயது நடனத்துக்கிருந்தும், அந்தச் சின்னப் பெண்ணின் பழிப்புக்கான காரணத்தைத்தான் புரிய முடியாதிருந்தான். தன் அந்தஸ்துயர்வினை புரிகிற வயதுதான் மலருக்கும். அது  பிறர்மீதான இளக்காரமாய் இருப்பதுதான் இயல்பான வெளிப்பாட்டு முறை. ஆனால் ஒரு வெறுப்பின் காட்டம் அதில் படிந்திருப்பது ஏன்? அவனால் அறியமுடியவில்லை. ஆனால் ஒரு சம்பவத்தை அது தொடர்பில் ஞாபகம்கொள்ள நடனத்தால் முடிந்திருந்தது.

ஒரு மார்கழி மாத விடுமுறைக்கு வீடு வந்திருந்த நடனம், கள்ளியங்காட்டில் கூடப் படிக்கும் நண்பனொருவனைச் சந்திக்கவென நன்றாக வெளிக்கிட்டுக்கொண்டு வந்து படலையைத் திறக்கிறான்.

வெளித்திருந்த வானத்தில் மேற்றிசைக் காற்று அள்ளிவந்து திடீரெனக் கொட்டியிருக்கிறது திணிந்த மேகங்களை. வானம் கறுத்திருக்கிறது. சூரியன் முகில்களுக்குள் மறைந்திருக்கிறது. மழை வரப்போகும் அறிகுறிகள்.  அதற்குமுன் பஸ்ஸேறிவிடும் அவசரத்தில் அவன் தெருவிலேற, ‘மழை வா… வெய்யில் போ…! மழை வா… வெய்யில் போ…!’ என ராகம் பாடுவது கேட்கிறது எதிர்ப்புறக் கல்வீட்டின் உயர்ந்த திண்ணையிலிருந்து.

நடனம் ஆச்சரியத்துடன் ஏறிட்டு நோக்குகிறான். வானம் பார்த்து அண்ணாந்தபடி இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி நின்று முகிலை மழையாய் வர்ஷிக்கச் செய்யும் மந்திர ஓதலின் பாவனை காட்டி மலர் கூவிக்கொண்டிருக்கிறாள். அவளொலி கேட்டு அயல் வீடுகள் இரண்டொன்றிலும் சிறிசுகளின் அதே மந்திரப் பிரவாகம். ‘மழை வா… வெய்யில் போ…!’

மழை சட சடத்து விழத் துவங்குகிறது. பின் தூறலாய் உதிர்கிறது. அவன் பஸ் நிறுத்தும் சந்தியைநோக்கி ஓட்டமெடுக்க, அவள் திண்ணைக்குத் தாவி அவன் ஓடும்திசை திரும்பிநின்று கலீரிட்டுச் சிரிக்கிறாள்.

பஸ்சுக்கான சில்லறை கொட்டுண்டுவிடாதபடி கழிசான் பொக்கற்றை ஒரு கையால் அமர்த்திப் பிடித்துக்கொண்டு சரளைக் கற்களை இடறியவண்ணம் ஓடிக்கொண்டிருக்கும் தன்னை மலரின் சிரிப்பொலி பின்னிருந்து துரத்துவதாய் நடனம் உணர்கிறான்.

அவனது கழிசானும் சேர்ட்டும் நனைந்து, எண்ணெய்வைத்து படிய வாரிய தலைமயிர் குழம்பி, அவனது முகப் பவுடர் கரைந்துபோகச் செய்வதில் அவளுக்கென்ன சந்தோஷம் இருக்கிறது? ஆனாலும் அவள் வெய்யில் நேரத்தில் ‘வெய்யில் போ… மழை வா’வென மழையையும், மழை நேரத்தில் ‘மழை போ… வெய்யில் வா’வென வெய்யிலையுமாய்க் கூவியழைத்துக்கொண்டுதான் இருந்தாள். 

அவள் காட்டுகின்ற வெறுப்பு, காண்கிறபோதே அவளில் உருவாகவில்லையென நடனம் எண்ணினான். அது வீட்டின் உள்ளே விளைந்து அவளில் தொற்றுகிறது. அவன் அந்த வீட்டுக்காரரால், அங்கு வரும் உறவினரால் கதைக்கப்படுகிறான். அவனது கல்விசார்ந்த திறன்பற்றியாக மட்டுமே அது இருக்கமுடியுமெனக் கருதமுடிகிறது நடனத்தால்.

எனில், இனி அவன் கோபங்கொள்ளமாட்டான்; அவள்மீதும், யார்மீதும்கூட. அது கோபப்படுவதற்கான காரணமேயல்ல. கமக்காரன் கணபதிப்பிள்ளையின் கல்வித் திறமைமிக்க மகனாய் அவன் பெருமைதான் படவேண்டும். அது அவளை மேலும் நெளிக்கவும் பழிக்கவுமே செய்யவைக்கும்.

ஏனெனில் அது ஆங்காரப்பூ.

அந்த இரண்டு துருவப் புள்ளிகளும் வாழ்வு பரியந்தம் தொடர்வதற்கான இணைப்பு எங்ஙனம் சம்பவித்ததென்று நினைத்தால் சந்தோஷமான மனநிலை தோன்றாவிடினும் சுவாரஸ்யமாக இருக்கமுடியும். 

சுந்தரத்திற்கு அது தொடர்பில் யோசிக்க இன்னும் எவ்வளவோ இருந்தது.

அவர் பிறிதொரு பொழுதில் அதைச் செய்துகொள்வார்.

(தொடரும்)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்