நினைவுத் தூபி


 

 

யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த கந்தையா நடேசு (தை 06, 1942 – வைகாசி 22, 2022) காலமாகிவிட்டாரென்பது ஒரு சாதாரணனைப் பொறுத்தவரை ஒரு செய்தி மட்டுமே. ஆனால் இலங்கைத் தமிழ்ப் புலமெங்கும் அறியப்பட்ட ஓர் இலக்கியவாதியான தெணியானின் மரணமென்பது ஒரு வாசகனுக்கும் ஒரு சக படைப்பாளிக்கும் அதற்கும் மேலானது.

தெணியானின் மறைவு அவரது உறவினர் நண்பர்களை மட்டுமில்லை, சகபடைப்பாளிகளையும் அதிரவைத்தது. பருத்தித்துறையிலுள்ள நண்பனான பாஸ்கரனின்மூலமாய் வட்ஸ் அப் குறுஞ்செய்தியில் விபரம் ஓர் அதிகாலை என்னை வந்தடைந்தபோது நானுமே அதிர்ந்தேன்.

அவர் விட்டுச்சென்ற இருபதளவான படைப்புக்களில் சிலவேனும் அவரது ஞாபக தூபிகளாய் நிலைக்கக் கூடியவையென்பது ஆறுதலான விஷயம். ஓர் இலக்கியவாதியைப் பொறுத்தவரை அவையே அவரது சிறந்த ஞாபக தூபிகளாகவும் ஆகவேண்டும்.

அவற்றை அடையாளப்படுத்த எடுக்கும் முயற்சியின் இத்தருணமானது, கௌரவ மதிப்பீடாய்க் கணிக்கப்படக்கூடிய ஆபத்துக்கொண்டது. அந்த அவதானத்துடனேயே சிலவற்றை இங்கு பதிவிட முயல்கிறேன்.

1964இல் ‘காணிக்கை’ சிறுகதையுடன் ஆரம்பிக்கும் தெணியானின் படைப்புலகில் அடையாளப் படுத்தப்படக்கூடிய முயற்சிகள் நாவல்களிலேயே இருந்திருக்கின்றன. ‘விடிவை நோக்கி’ (வீரகேசரி வெளியீடு, 1973), ‘கழுகுகள்’ (நர்மதா பதிப்பகம், 1981), ‘மரக்கொக்கு’ (நான்காவது பரிமாணம், 1994) ஆகியவற்றை முக்கியமான நாவல்களாய் அடையாளப்படுத்த முடியுமாயினும், என் வாசிப்பின் ரசனையும், சமூக அக்கறையும் தேர்வாக்குவது ‘குடிமைகள்’ நாவலையே.

அந் நாவல் 2014இல் ஜீவநதி வெளியீடாக ஒரு பதிப்பும், 2016இல் கருப்புப் பிரதிகள் பதிப்பாக ஒன்றுமாய் குறுகிய காலத்திலேயே இரண்டு பதிப்புக்களைக் கண்டது. சமூகத்தின் மிகவும் புரையோடிப்போன சாதி அடக்குமுறையின் இன்னொரு வடிவமான குடிமை முறைபற்றிப் பேசுகிற நாவலிது. 

சாதிப் பிரச்னையென்னும்போது அது முரண்கொண்ட இரு சமூகப் பிரிவினரிடையே மூர்க்கமாகக் கிளர்வதான தோற்றம் காட்டுவதாய் இருக்கும். ஆனால் குடிமை முறையென்பது மிக்க நொய்மையுடன் தானே விலங்கணிந்து வந்து, தானே விலங்கைக் கழற்றிவிட்டு தொழிலை முடித்த பின், மறுபடி தானே விலங்கைப் போட்டுக்கொண்டு அமைந்துவிடும் தன்மை வாய்ந்தது. ஓர் தூண்டுதல், கிளர்ச்சிக்கான ஒரு தருணம் இல்லையேல் சாந்துணையும் அந்த அடிமை நிலைக்கு முடிவிருக்காது.

அவ்வகையில் பறை முழக்குவோர், சவரம் செய்வோர், துணி வெளுப்போரென பல வகையினர் குடிமைகளாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தொழில் முடிந்தவுடன் கூலிகூடக் கிடைப்பதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையான கூலிகள்தான். அதுவும் பணமாகக் கிடைப்பது அரிது.

இவ்வாறு வலுவான ஒரு பொருளைப் பேசத்தான் ‘குடிமைகள்’ நாவல் முயன்றிருந்தது.  ஆரம்ப கால இந்திய தலித் நாவல்களான லட்சுமண் மானேவின் ‘உபாரா’, லட்சுமண் கெய்க்வாடின் ‘உச்சாலியா’, கிஷோர் சாந்தாபாய் காலேவின் ‘குலாத்தி’ ஆகிய நாவல்கள் பேசிய பொருட் தீவிரம் இதனிலும் இருந்திருந்தது.

ஆனால் நாவல் அந்தளவு கட்டுமான, மொழி, நடை வன்மைகள் கொண்டிருந்ததாகச் சொல்ல முடியாவிடினும், தமிழின் சிறந்த தலித் இலக்கிய நாவல்களில் ஒன்றாக ‘குடிமைக’ளைக் கொள்ளமுடியும். இலங்கைத் தமிழிலும் செ.கணேசலிங்கனின் ‘நீண்ட பயணம்’, டானியலின் ‘கானல்’, ‘தண்ணீர்’போன்ற நாவல்களுக்கு இணையாக இது நிற்கக்கூடியதே.

தெணியானின் சற்றொப்ப ஐம்பது வருஷ கால இலக்கிய முயற்சி இலங்கையில் சரி, பிற தமிழ்ப் புலங்களில் சரி பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை என்பது புதிர். ‘மரக்கொக்கு’ ஒரு குறுநாவலளவு தேங்கிப் போனதென்றாலும், அது சொற்செட்டுடன் விரித்த களம் சிறப்பு. அதை ஓரளவு விஞ்சியதாய் ‘குடிமைகள்’ படைப்பாகியிருக்கிறதென்பது மெய்.

எடுத்துக்கொண்ட பொருளினை தெளிவுடன் பதிவுசெய்ய முந்திய நாவல்களில் கையாளாத ஒரு நடையை படைப்பாளி இந்நாவலில் தேர்ந்தெடுத்திருப்பதாகவே தெரிகிறது. அதேவேளை தனது கருதுகோளுக்கு மாறின்றி, அதுவரை பயில்விலிருக்கும் யதார்த்த இலக்கிய  முறைமையிலும்  பரீட்சார்த்தமான ஓர் தலையீட்டினை அவர் இந்த நாவலில் செய்திருக்கிறாரென்று எண்ண முடியும்.

கடந்த ஆண்டு காலச்சுவடு பதிப்பாக வெளிவந்த ‘இலங்கைத் தமிழ்நாவல் இலக்கியம்’ என்ற எனது நூலில் புலத்தின் படைப்புக்கள் என்ற அதிகாரத்தில் தேர்வாகிய சில நாவல்களுடன் ‘குடிமைகள்’ நாவலையும் குறிப்பிட்டிருக்கிறேன், இதே காரணங்களுக்காகவே.

முத்தன் என்கிற சவரத் தொழிலாளியின் தம்பி மணியன் பதுளைக்கு சலூன் ஒன்றிலே வேலைசெய்யப் புறப்படுவதிலிருந்து தொடங்கும் நாவல், இரண்டு உடன்பிறப்புக்களை சாதிவெறிக்குப் பறிகொடுப்பதோடு, தனது சவரக் கடையை முதலிலும், தனது வீட்டைப் பின்னாலும் இழந்துபோகின்ற முத்தன் தனது மனைவி வள்ளிக்கொடியுடன் குடிமை முறையை ஊரிலே செய்ய மறுத்து தனக்கு வீடுமில்லை, ஊருமில்லை என்பதுபோல் கொழும்புக்கு புகைவண்டி ஏறுவதுடன் நிறைவடைகிறது.

ஒரு குடும்பத்தின் உணர்வுமயமான கதைதான் இது. எனினும் சொல்லப்படுவது ஒரு கிராமத்தின் கதையாகவும் விரிகிறது. கிராமத்தின் கதையாகவன்றி, பிரதேசத்தினது சமூக ஏற்றத் தாழ்வுகளின் வரலாறாகவும் நாவல் பதிவாகிப்போவது முக்கியம்.

சமூக வரலாற்றைப் பதிவுசெய்த இலக்கியமாய் இறுமாந்து நிற்கும் ‘குடிமைகள்’, தெணியானின் பேரை காலத்துக்கும் சொல்லிக்கொண்டிருக்குமென நம்பலாம்.

***

 

 நன்றி: தாய்வீடு, 2022

 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்