‘கவிஞராக இல்லாவிட்டாலும் அவரிடம் ஒரு கவி மனது இருந்தது’



பேரா. செல்வா கனகநாயகத்தின் ஆய்வுலகுபற்றிய                         ஒரு கண்ணோட்டம்

 தேவகாந்தன்

காலம் தன்னை உன்னதப்படுத்துவதற்கான மாந்தரைத் தேர்ந்து வைத்திருந்து அவரை உரிய தருணத்தில் பிரசன்னப்படுத்துகிறது என்று தோன்றுகிறது. அதனாலேயே ஒவ்வொரு கலை இலக்கிய காலகட்டமும் வரலாற்றில் தன் சுவடுகளை ஆழப்பதித்துச் செல்கின்றது. இலங்கையில் நல்லை நகர் ஆறுமுக நாவல(1822-1879)ரின் தோற்றம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதித் தமிழிலக்கிய வரலாற்றில் பெருஞ்சாதனை படைத்ததாய் இருந்தது. காலத்தின் தேவையுணர்ந்து தமிழுரைநடைக்கு சிறப்பான தொடக்கத்தைச் சமைத்தார் அவர். அதுபோல் இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தங்கள் தமிழ்க் கவிதை சார்ந்து முக்கியமானவை. எளிய நடை… எளிய பதம்… என எளிமையைக் கூவியழைத்த தமிழின் ஈடிணையற்ற நவீன கவிஞன் மகாகவி பாரதி (1882-1921) தோன்றிய காலமது. ஆயினும் நாவலரும் பாரதியும் தோன்றி அவ்வொப்பற்ற காலத்தை உருவாக்கினார்கள் என்றல்ல, காலம் தன்னை வரலாற்றில் பதிக்க நாவலரையும் பாரதியையும் தோற்றிற்று என்பதே சரியாகவிருக்கும்.

இருபதாம் நூற்றாண்டில் எண்பதுகளிலிருந்து பூப்பரப்பெங்கும் திசைகெட்டலையத் தொடங்கிய இலங்கைத் தமிழ்ச் சமூகம், வாய்த்த இடங்களில் நிலைபெற்று வேறுவேறு தேசிய இனங்களுடன் வாழத் தொடங்கிய பின்னால், இழந்தவற்றில் பெரும்பாலானவற்றை அதனால் மீளப் பெற முடிந்திருந்தது. ஆனால் அதன் வரலாற்று முதிர்ச்சியின் பெருமையையும், ஆயிரமாயிரம் ஆண்டுகளான அதன் இலக்கிய மேன்மையையும்  தொடர்தல் சாத்தியமற்றுப் போயிற்று. அவற்றின் வெளிகளை அதனால் திரும்பக் கண்டடைய முடியாதபடி ஓர் இருள்வெளி அதனைச் சூழ இருந்துவிட்டது.

படைப்பாக்கங்களினாலும் வெளியீடுகளைச் செய்வதினாலும் அதை நிரவிவிட முடிவதில்லை. படைப்பின் கனம் தன் அங்கீகாரத்தை, தன் மதிப்பு என்கிற வெகுமானத்தை வேண்டியே எப்போதும் நின்றிருக்கும். அதை மிக இலேசுவில் நிவர்த்தி செய்துவிட முடியாது. அது அதன் பெருந் துக்கமாகயிருக்கிறது. காலத்தைத் தவிர வேறெவரும்  தீர்த்துவிட முடியாத அம்சம் அது. அதை நிறைவேற்ற இருபதாம் நூற்றாண்டின் பிந்திய  தசாப்தங்களிலிருந்து தமிழின் ஆகச் சிறந்த ஆய்வறிஞர்களையும், இரு மொழி வல்லாரையும் காலம் களமிறக்கியது. இக் கால எல்லையில் அவ்வாறு பிரசன்னமான கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஜேரர்ஜ் எல்.ஹார்ட் மற்றும்  ஏ.கே.ராமானுஜன், லட்சுமி ஹோம்ஸ்ரோங்க், பேராசிரியர் செல்வா கனகநாயகம் போன்றோர் தமிழின் பண்டைய, நவீன இலக்கியங்களை உலக இலக்கிய மன்றில் வைத்தனர். கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (1856) தோன்றிய காலத்தில் தமிழ் இதயமெல்லாம் தம் மொழியின் தொன்மையறிந்து உவகைபெற்றன. அதுபோல் மேற்கண்ட அறிஞர்களின் ஆய்வு வெளிப்பாடுகளாலும் அவர் தம்  மொழிபெயர்ப்புகளாலும் அகமும் புறமுமான தொல்லிலக்கியத்தின் செழுமையும் நவீன தமிழிலக்கியத்தின் வீறும் உலக அரங்கில் பிரகாசித்தது கண்டு தமிழ் நெஞ்சு இறும்பூது அடைந்தது. இலங்கைத் தமிழர் பொறுத்து இச் சாதனையை நிறைவேற்றித் தந்தவர்களுள் முக்கியமானவராய் விளங்கினார் பேரா. செல்வா கனகநாயகம் (1952-2014).

நவீன இலங்கைக் கவிதையை  உலக இலக்கிய அரங்கில் பிரசன்னப்படுத்தியதோடு பண்டைத் தமிழின் ஆய்வடங்கலாகவும், நவீன இலக்கியம் பொறுத்த அறிமுகங்களாகவும் அவர் எழுதியவை அதிகம்.  பின்காலனித்துவ கருதுகோள்களை விளக்கிய அவரது பங்களிப்பு  தமிழிலக்கியத்தை வைத்து நோக்குகையிலும் மறக்கப்பட முடியாதது. அன்னாரின் மறைவு புலம்பெயர் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு, குறிப்பாக கனடா தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் ஆய்வறிஞர்களுக்கும், மிகப் பெரும் இழப்பாகும். பேரா. செல்வா கனகநாயகத்தை  இங்கே நினைவுகொள்வதென்பது, அவரது திறமைகளை நினைவு கொள்வது மட்டுமல்ல, அவரது வெற்றிடத்தை நினைவுகொள்வதுமாகும். அது நம்மை ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு வழிநடத்தும். அதனால் அவர்பற்றிய நினைவுகளையும், அவரது ஆய்வின் பரப்பினையும், அவர் முன்னெடுத்த  தமிழூழியத்தின் அலகுகளையும் ஓரளவு சுருக்கமாகக் காண்பதே இவ்வுரைக்கட்டின் நோக்கம்.

பேராசிரியர் வி.செல்வநாயகம் – கமலாம்பிகை தம்பதியர்க்கு நவம்பர் 07, 1952இல் பிறந்த செல்வா கனகநாயகத்தின் மரணம், நவம்பர் 22, 2014இல் கியூபெக் நகரில் சம்பவித்தது. ஒரு மகள், ஒரு மகன், மனைவி திருமகளுடன் அவரது வாழ்வு இனிமையும் சிறப்பும் கொண்டதாகவே அமைந்திருந்தது. கனடா றோயல் சொஷைற்றியின்  நவம்பர் 22, 2014 ஆம் ஆண்டு நிகழ்ந்த உறுப்புரிமை வழங்குதல் வைபவத்தின் இரவுப் போஜன விருந்து முடிவதன் முன்னரே அவருக்கேற்பட்ட இருதய பாதிப்பில் விளைந்த திடீர் மரணம் தமிழுலகின் அறிஞர்களையும் சக பேராசிரியர்களையும் நண்பர்களையும் உறவினர்களையும் ஒருசேர அதிரவைத்தது. அறிவுலக பிரவேசத்திற்கு அடையா நெடுங்கதவங்கள் கொண்டதாய் அவரது இல்லம் இருந்ததை அன்னாரின் இறுதிச் சடங்கின் துயர் பகிர்வு நிகழ்வில் நண்பர்கள் குறிப்பிட்டார்கள். ‘உண்மையான மகத்துவமும் இனிமையும் கொண்டிருந்த ஓர் ஆத்மாவை இந்த உலகம் இழந்துவிட்ட’தென அவரது நண்பர்களுள் ஒருவரான பேராசிரியர் லிண்டா ஹற்சியொன் தனிச் செய்தியில் துயர் பகிர்ந்தார்.

அவரது இழப்பின் செய்தி ஒரு துக்கமாய்ப் பதிந்தபோது அவரற்ற வெறுமையின் இருள் ஏக்கமாக உணரவைத்தது.

தமிழ்த்துறைத் தலைவராகவிருந்த  பேராசிரியர் வி.செல்வநாயகத்தின் மகனாக அவரது பிறப்பு இலங்கையில் கல்வி சார் அனுகூலங்களை நிச்சயமாக அவருக்கு வழங்கியிருக்க முடியும். ஆனால் அவரது ஆய்வுத்துறையின் செல்திசை அவரது ஆன்மாவினால் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில மொழி இளங்கலைமாணிப் பட்டத்தை 1976இல் பெற்றுக்கொண்ட செல்வா கனகநாயகம், ஆங்கிலத் துறை விரிவுரையாளராக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சிறிதுகாலம் கடமையாற்றிய பின், பாகிஸ்தானிய அமெரிக்கர் சுல்பிகார் கோஷ் (Zulfikar Ghose)இன் படைப்புகள் மீதான ஆய்வின்மூலம் தமது கலாநிதிப் பட்டத்தை பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பெற்றுக்கொண்டார். சுல்பிகார் கோஷின் படைப்புகள்மீதான அவரது ஆய்வு  சிறந்த தேர்வாகயிருந்தது. அது மேலே அவர் செல்லவேண்டிய திசையைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.  ‘பிணங்களுக்கு எதிரான அறிக்கை’ (சிறுகதைத் தொகுப்பு), ‘அஸிஸ் கானின் கொலை’ (நாவல்) மற்றும் ‘த இன்கிறெடிபிள் பிரேஸிலியன்’ என்ற முந்நாவல் தொகையின் மூலம் சுல்பிகார் உலக இலக்கிய அரங்கில் கவனம் பெற்றிருந்தவர். தமது புனைவிலக்கியங்களிலும் கவிதைகளிலும்  மாயா யதார்த்தவாதத்தின் தடங்களை ஆழமாகப் பதித்தவர். அதனால் சுல்பிகாரின் படைப்புகள் உலக இலக்கியத்தில் மிகவும் கவனம்பெற்றிருந்தன. விமர்சனத்தின் சமூகப் பரிமாற்றம், பின்காலனித்தும் போன்ற இலக்கியக் கருதுகோள்கள் குறித்து தான் மேலே செல்ல வேண்டிய திசையைத் தீர்மானிக்கும் உந்துவிசைகளாக அவை செல்வா கனகநாயகத்துக்கு அமைந்துபோயின.

கலாநிதிப் பட்ட பெறுகையின் பின் 1989இல் ரொறன்ரோ பல்கலைக் கழக ஆங்கிலத் துறை விரிவுரையாளராக இணையும் செல்வா கனகநாயகம், 2002இல் ஆங்கிலத் துறையின் பேராசிரியரும் ஆகினார். தென்னிந்திய கற்கைநெறி அமையத்தின் பிரிவான மங்க் உலக நடப்பியல் ஆய்வுப் பள்ளியின் இயக்குநராகவும், அதேவேளை ட்றினிற்றி கல்லூரியின் சுயாதீன ஆய்வுக் கற்கைகளின் திட்ட மையத்தின் நெறிப்படுத்துநராகவும் அவர் பல பொறுப்புக்களை வகித்திருந்தார். இவற்றினுள் கவனமாக வேண்டியது கனடா இலக்கியத் தோட்டத்தினதும், ரொறன்ரோ தமிழ் ஆய்வுக்கற்கை மாநாட்டினதும் ஸ்தாபக உறுப்பினராகவிருந்து அவ்வவற்றின் மேம்பாட்டுக்கு  அவராற்றிய பங்களிப்பு ஆகும்.

இவை அவரது துறை சார்ந்த நேரடியான செயற்பாட்டுக் களன்களாக இருந்தபோது, தமிழ்ப் படைப்புலகினதும் தமிழ் ஆய்வுலகினதும் மேன்மைக்கான கல்வி, மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த கூறுகள் அவரின் ஆக்கச் செயற்பாட்டினுக்கான வெளிகளாக விளங்கின.

அந்த இனிய சுபாவமும் ஆய்வடங்கற் பண்பும்கொண்ட  சிறந்த  மனிதரை 2004இல் கனடா வந்த சில மாதங்களிலேயே எனக்குச் சந்தித்து அறிமுகமாகும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த அறிவாளுமை எனக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் 2008இல் வெளிவந்த கனடா கூர் கலை இலக்கியத்தின் முதலாவது தொகுப்பில் அவரது நேர்கணலை வேண்டிப் பெற்று வெளியிட்டேன். அவரை நேர்காண்பதொன்றும் இலகுவாக இருக்கவில்லை. அவர் பங்குகொண்டதும், ஈடுபட்டிருந்ததுமான பல விஷயங்களையும் விழுமியங்களையும் நான் நேர்காணலின் முன்னதாக தேடவும் கற்கவும் வேண்டியிருந்தது. அது அவரின் மனவியல்பையும் அறிவின் விசாலத்தையும்  வெளிப்படுத்தும் சிறந்த நேர்காணல்களில் ஒன்றாக அமைந்தது.

1)     Structures of Negation: The Writing of Zulfikar Ghose (1993)

2)     Configurations of Exile: South Asian Writers and their World (1995)

3)     Dark Antonyms in Paradise: The Poetry of Reinzie Cruze (1997)

4)     Counter Realism and Indo- Anglian Fiction (2002)

5)     A History of South Asian Writings in English (2014)

6)     Wilting Laughter: Three Tamil Poets (2009)

7)     Nedunalvaadai (2010)

8)     You Can not Turn Away(2010)

9)     Rituals (2011)

10)  Lutesong and Lament: Tamil Writing from SriLanka (2001)

11)  Moveable Margins: The Shifting Spaces of Canadian Literature (2005)

12)  In Our Translated World: Contemporary Global Tamil Poetry (2013)

13)  Uprooting the Pumpkin: Selections from SriLankan Tamil Literature 1950 – 2012

14)  History and Imaginations: Tamil Culture in the Global Context (2007)

15)  World Without Walls: Being Human, Being Tamil (2011)

16)  New Demarcations: Essays in Tamil Studies (2009)

மேற்கண்ட பேரா. செல்வா கனகநாயகத்தின் பதினாறு நூல்களில் முதல் ஐந்தும் அவரது ஆய்வுக் கட்டுரைகளினதும், சில ஆளுமைகளின் படைப்புகள்மீதான திறனாய்வுகளினதும், பட்ட ஆய்வேட்டினதும்  தொகுப்புகளாகும். அடுத்த நான்கும் அவர் மொழிபெயர்த்தவை. தொடர்ந்து வரும் நான்கு நூல்களும் அவரது  தேர்வில் மொழிபெயர்ப்பாகிய தொகுப்புக்கள். இறுதியான மூன்று தொகுப்புகளும் உ.சேரன், த.அம்பலவாணர் ஆகியோருடன் சேர்ந்து அவர் யாத்தவை. பட்டியலிலுள்ள ஒவ்வொரு பகுப்புமே தனித்தனியான முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆயினும் இங்கே அவரது ஆளுமை வெளிப்பாட்டுக்கான நூல்கள் சிலபற்றியே விரித்துரைக்கப்பட இருக்கிறது.  அதற்கு முன்பாகக் கவனம் பெறுவது, இவ்வளவற்றையும் ஒன்றிணைக்கக் கூடியதும், 2015இல் தொகுப்பாக வெளிவந்ததுமான அவரது தமிழ்க் கட்டுரைகளின் ‘இலக்கிய வரலாறும் திறனாய்வும்: பின்காலனித்துவ அணுகுமுறை’ என்ற நூல் ஆகும்.

இந்தத் தமிழ்நூல் தொகுப்பு ஒருவகையில் செல்வா கனகநாயகத்தின் முக்கியமான ஆய்வுத் துறைகளின் வகைமைப்பாட்டினை அறிந்துகொள்ள உதவக்கூடியது. அவரது புலமைத் துறைகளை முக்கியமான மூன்று நான்கு வகைமைப்பாடுகளுள் அடக்கமுடியும். பின்காலனித்துவம், ஒப்பிலக்கியம், திறனாய்வு மற்றும் மொழிபெயர்ப்பு என்பவையே அவை. இவற்றைவிட அவர் அதிகமும் ஈடுபாடு கொண்டிருந்ததாக கவிதைத் துறையையும் சேர்த்துக்கொள்ளலாம். அது புலம்பெயர்ந்தோர் அல்லது இலங்கைத் தமிழ்ப் படைப்புகளை உலக அரங்கில் பிற மொழியார் பார்வைக்கு முன்வைத்தது.

தானே கவிஞராக இல்லாவிட்டாலும்  செல்வா கனகநாயகத்திடம் இயங்கிய கவிமனத்தை காணக்கூடியதான நேர்காணலொன்று அவர் செய்த நேர்காணல் தொகுப்பான Configurations of Exile இல் வெளியாகியிருந்தது. அது தென்னாசியாவின் அரசியல் பொருளாதாரம் இலக்கியம் ஆகிய துறைகளில் மிகுந்த ஆளுமைகொண்ட பன்னிருவரை  செல்வா கனகநாயகம் செய்த நேர்காணல்களின்  தொகுப்பு நூல். கவிஞர் ஜீன் அரசநாயகத்தின் சிறப்பான நேர்காணலொன்று அதில்தான் வெளிவந்திருந்தது. ஜீன் அரசநாயகத்தின் கவிமனத்தை, கவிதை இயங்கும் தளத்தையென கவிதையின் உள்ளோடியிருக்கும் பல அம்சங்களையும் அவர் நுட்பமாக வெளிப்படுத்தியிருந்தார் அதில்.

கட்டுரைகளின் தொகுப்பிலுள்ள திருமாவளவனின் ‘முதுவேனில் பதிகம்’ கவிதை நூலுக்கான மதிப்பீட்டுக் கட்டுரையும், ‘சோ.பத்மநாதனும் புனை கவிதையும்’ என்ற கட்டுரையும் அதற்கு  மேலும் சான்று பகர்வன. Dark Antonyms in Paradise: The Poetry of Reinzie Cruze என்ற நூலும், உ.சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், புதுவை இரத்தினதுரை ஆகிய சமகால மூன்று இலங்கைத் தமிழ்க் கவிஞர்களது எழுபத்தைந்து கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான  Wilting Laughter: Three Tamil Poets என்ற நூலும் மட்டுமன்றி, Lutesong Lament நூலிலுள்ள மஹாகவி, மு.பொ., சோலைக்கிளி, சிவரமணி, செல்வி ஆகியோரின் கவிதைத் தெரிவும் மொழிபெயர்ப்பும் அவரது இத் தன்மைகளை திறம்பட வெளிக்காட்;டி நிற்பன. கவிதை மொழிமாற்றச் செயற்பாட்டில் அதிலுள்ள இடர்ப்பாடுகளே அதன் சிறந்த அனுபவமுமாகின்றது. அந்தவகையில் கவிதை அனுபவங்களைச் சிதறவிடாத மொழிபெயர்ப்புக்களால் செல்வா கனகநாயகம் தனித்துவமானவராய் நிற்கிறார்.

மொழிபெயர்ப்பென்பது ஒரு மொழியிலுள்ள சொற்களுக்கிணையான பெயர்ப்பு மொழிச் சொற்களால் இயைவதென்பது மிகவும் பாமரத் தனமான விளக்கம். அதன் தொழிற்பாடே ஒரு படைப்பின் திறம்கொண்டிருக்கிறது.  இவ்வளவும்கூட மொழிபெயர்ப்புச் செயற்பாங்கின் மொத்தத்துவத்திலுள்ள அர்த்தத்தை முழுவதும் வெளிப்படுத்துவதாகாது. அது உண்மையில் ஓர் அரசியற் செயற்பாட்டோடு இணைந்தது. இன்னும் கூடுதலாக அழகியல் மற்றும் சமூகப் பொறுப்புள்ள தன்மைகளும் சேர்ந்தது. இதுவே பேராசிரியர் செல்வா கனகநாயகத்தின் மொழிபெயர்ப்புச் சார்ந்த முக்கியமான கருதுகோள் என்கிறார் பேராசிரியர் வீ.அரசு. தமிழ்க் கட்டுரைகளின் தொகுப்புக்கான முன்னுரையில் அவர் கூறுகிறார், ‘பண்பாட்டு மேலாதிக்கத்துக்கும் மொழிபெயர்ப்பு அரசியலுக்கும் உள்ள உறவை எளிதில் புறக்கணிக்க முடியாது என்பதை செல்வா மொழிபெயர்ப்பு குறித்து முன்வைக்கும் உரையாடல்களின் மூலமாக உணரமுடிகிறது’ என.

‘நெடுநல்வாடை மொழிபெயர்ப்பும் அழகியலும்’ என்ற கட்டுரையில், ஏற்கனவே இருவரால் மொழிபெயர்ப்பாகியிருந்த  சங்க இலக்கியமான நெடுநல்வாடையை தான் மொழிபெயர்க்க நேர்ந்த  காரணத்தை விளக்குகையிலும், மொழிபெயர்ப்பில் உள்ளோடியுள்ள முக்கியமான அம்சங்களையே அவர் முன்வைக்கிறார் எனல் வேண்டும். அதில் ஒரு தொடர்ச்சியின் அனுபவப் பகிர்வு இருந்தது. ஜோர்ஜ் ஹார்ட், ஏ.கே.ராமானுஜன், கமில் ஸ்வெலபில், மற்றும் ரகுநாதன், கந்தசுவாமி முதலியார், ஜே.வி.செல்லையா போன்றோரின் எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆதியாம் நூல்களின் மொழிபெயர்ப்பின் அனுபவங்களூடான அறுவடை அது.

அடுத்து திறனாய்வும் ஒப்பிலக்கியமும் ஆகிய துறைகளை எடுத்துக்கொண்டால், தொகுப்பிலுள்ள ‘நவீன ஈழமும் அச்சிபியின் கலையும் கட்டமைப்பும்’, ‘மதங்க சூளாமணி: நூலும் பின்னணியும்’, ‘சியாம் செல்வதுரை: ஒரு மதிப்பீடு’ ஆகியவை இவற்றின் அலகுகளை ஆழமாக அதேவேளை சுருக்கமாக எடுத்தாய்கின்ற திறனாய்வுக் கட்டுரைகளெனச் சொல்லலாம்.

1960களின் பின்னான இலங்கை இலக்கியமானது கிராமம் சார்ந்த - மண் வாசனை சார்ந்த, எழுத்துக்களின் வேகம் தொடங்கிய காலமாயிருந்தது. சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளின் படைப்பிலக்கியத்தை வைத்து நோக்கினாலும் இது புரிந்துகொள்ளப்படலாகும். சிங்கள நாவல் வரலாற்றில் மார்டின் விக்கிரமசிங்ஹவின் ‘கிராமப் பிறழ்வு’ நாவல் ஒரு முக்கியமான வரவு. அதுபோல ‘மண் வாசனை’ என்ற கோஷத்தை முன்வைத்து முகிழ்த்த முற்போக்கு தமிழிலக்கியமும் தன் முன்னெடுப்பை நிகழ்த்தியது.

சின்னுவா அச்செபெயின் ‘கலையும் கட்டமைப்பு’ என்ற நாவலை முன்வைத்து அவர் நைஜீரியா இலங்கை ஆகிய நாடுகளின் இலக்கியப் போக்கினை ஒப்பாய்வு செய்தார். அவரது தமிழ்த் தொகுப்பிலுள்ள ‘நவீன ஈழமும் ‘கலையும் கட்டமைப்பு’ம்’ என்ற கட்டுரை சுருக்கமாகவெனினும் இதையே ஆழமாகப் பேசியது. பின்காலனித்துவ கருதுகோள் பொறுத்து ஈழ இலக்கியங்கள் அதை எவ்வாறு எதிர்கொண்டன என்ற அவருடைய ஆய்வும் இக் கட்டுரையில் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை இலக்கியங்களின் பொதுத் தன்மையில்  அதுகுறித்த ஆழமான அனுபவம் காணப்படவில்லை என்பதே அவரது முடிவாக இருந்தது. ‘கலையும் கட்டமைப்பு’க்கு நிகரான நூல் சிங்களத்திலோ தமிழிலோ தோன்றவில்லை என்பதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால் லியனார்ட் வுல்ஃபின் ‘A Village in the Jungle’(1915) என்ற ஆங்கில நாவல் மட்டும் ஒரு மாதிரிக்கானதாய் இருந்தது என்றார் பேராசிரியர்.         

சேக்ஸ்பியர் நாடகங்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்பான  விபுலாநந்தரின் ‘மதங்கசூளாமணி’ பற்றிய கட்டுரை, நாடக நூல் வகைமைத் திறனாய்வுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ‘இன்றுவரையில் ஆசிரியரின் மொழிபெயர்ப்புகளை விஞ்சும்வகையில் யாரும் தமிழாக்கம் செய்ததாகத் தெரியவில்லை’ எனப் பாராட்டும்வேளையில், ‘ஆசிரியரின் மொழிபெயர்ப்பு ஆங்கிலப் பண்பாட்டின் சில முக்கியமான அம்சங்களைத் தமிழில் கொண்டுவரத் தவறியுள்ளது’ என அதிலுள்ள குறைபாட்டினைத் தெரிவிக்கவும் செல்வா கனகநாயகம் தயங்கவில்லை.

இலங்கைத் தமிழ் இலக்கியவுலகு திறனாய்வில் உச்சம் பெற்றிருந்த காலமொன்றிருந்தது. தமிழகத்திலும் க.நா.சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதன், தி.சு.நடராசன் போன்ற திறம்  வாய்ந்த திறனாய்வாளர்கள் வெகுவாக இருந்திருக்கிறார்கள். நூல்கள் குறித்த, சித்தாந்தங்கள் குறித்த இவர்களின் திறனாய்வுகள் இன்றைய திறனாய்வுலகுக்கு நிச்சயம் வழிகாட்டக் கூடியன. என் வாசிப்பின் வெளியில் நான் பிரமித்த திறனாய்வு சார்ந்த பத்து நூல்களையோ கட்டுரைகளையோ  குறிப்பிட நான் பணிக்கப்பட்டால் பேராசிரியர் செல்வா கனகநாயகத்தின் தமிழ்த் தொகுப்பிலுள்ள ‘சியாம் செல்வதுரை: ஒரு மதிப்பீடு’ என்ற கட்டுரை நிச்சயமாக அவற்றுள் ஒன்றாக இடம்பெறுமென என்னால் துணிந்து சொல்லமுடியும்.

தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் மிக நீண்ட கட்டுரை இது. சரியாக இருபத்தைந்து பக்கங்களை எடுத்திருக்கிறது. எடுத்துக்கொண்ட பொருளை விளக்க ஒரு சிறிய நூலே தேவைப்பட்டிருந்த நிலையில், இருபத்தைந்து பக்கங்கள் அதிகமில்லையென்றாலும், மொழிச் சிக்கனமும் வடிவ கட்டிறுக்கமும் நிச்சயமாகத் தேவைப்பட்டேயிருக்கும். வேறொரு ஆங்கிலத் தொகுப்பில் இடம்பெற்ற  பேரா. செல்வா கனகநாயகத்தின் ஆங்கிலக் கட்டுரையை இந்தத் தமிழ்த் தொகுப்பிற்காக மொழிபெயர்த்த சென் மேரிஸ் கல்லூரி ஆங்கிலத் துறை துணைப் பேராசிரியர் க.லதா அவர்களையும் இந்த இடத்தில் நினைத்துக்கொள்ளல் தகும்.

கட்டுரையின் இத் தலைப்பு சியாம் செல்வதுரையின் அனைத்துப் படைப்புகளினதும் பெறுமதி காண்பதென்ற அர்த்தமே கொள்ளும். என்றாலும், இது Funny Boy (1994) என்ற  சியாம் செல்வதுரையின் ஒற்றை நூலைப்பற்றியே அதிகம் பேசுகிறது. ஆனால் வாசகன் அதில் ஏமாற்றமடைவதில்லை. ஏனெனில் Funny Boyயை  மதிப்பீடு செய்கையில் சியாம் செல்வதுரையின் இன்னொரு நாவலான Cinnamon Garden ஐயும் (1998) மதிப்பீடு செய்கிறார் பேராசிரியர். வட அமெரிக்காவில் மதிப்புவாய்ந்த கல்விப் பீடமொன்றின் இருக்கை பேரா. செல்வா கனகநாயகத்துக்கு பின்அமைப்பியல் பினநவீனம் பின்காலனியங்களின்  சமகால இலக்கியப் போக்குகளை அறியவும், சித்தாந்தங்களின் மீதான ஐயத்தின் மேலான உரையாடல்களை அவ்வவ் ஆசிரியர்களுடன் நிகழ்த்தவும்  வாய்ப்பாக இருந்திருக்கிறது. அதனால்தான் சியாம் செல்வதுரையின் Funny Boy மதிப்பீடு தகர்ப்பமைப்பு வாதத்தின் அலகுகள்மேல் சிறப்பாக நிகழ்த்தப்பட சாத்தியமானதாய்ச் சொல்லமுடியும்.

 திறனாய்வாகத் தொடங்கிய அக்கட்டுரை பிரதிகளின் உள்நின்று உடற்றிய அர்த்தங்களைத் தேடிக் கண்டடைய முனைந்தது. பிரதிகளின் தரத்தையல்ல, வெளிப்பட நின்ற அவற்றின் அர்த்தங்களை அழித்து அவற்றின் உள் நின் அர்த்தங்களை அது தேடியது. மேலும் தன் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதிகளை மிக்கேல் ஒண்டாற்ஜி, யஸ்மின் குணசேகர, ரொமேஷ் குணசேகர, ராஜீவ் விஜேசிங்ஹ, ஜீன் அரசநாயகம் ஆகியோரின் பிரதிகளோடு ஒப்பீடும் செய்தது. இவை திறனாய்வுத் துறைக்கு வளம் சேர்த்தன என்பதில் வேறு அபிப்பிராயமில்லை.

பேராசிரியர் கனகநாயகத்தின் முக்கியமான துறை பின்காலனித்துவம் ஆகும். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மேலைநாடுகளில் முக்கியமான அறிவுத்துறையாக இருந்தாலும், தோன்றி ஐம்பது ஆண்டுகளாகியுள்ள இப் பின்காலனித்துவம்பற்றி கீழ்த்திசையில் துறைசார்ந்தவர்கள் தவிர்ந்த இலக்கியவாதிகள் பெரிதாக கவனம்கொள்ளவில்லை. தீவிர வாசகரிடையேயும் பெரிதான அறிமுகம் இருப்பதாகக் கொள்வதற்கில்லை. எட்வேர்ட் செயித்தின் Orientalism (1978) அதற்கொரு சித்தாந்தரீதியான அமைப்பை முதன்முதலில் வகுத்துக்கொடுத்தது எனலாம். காயத்திரி ஸ்பீவக், ஹோமி பாபா, அஜாஸ் அஹமத் போன்றோர் இத்துறையில் ஆழமான பங்களிப்பைச் செய்திருந்தாலும்,  செல்வா கனகநாயகத்தின் பங்கும் அதில் கணிசமானதென்பதை மறந்துவிடக் கூடாது. இங்கிலாந்தைச் சேர்ந்த சச்சிதானந்தன் சுகிர்தராஜாவும் இதில் நினைக்கப்பட வேண்டியவரே.

விசாரணை, மறுவாசிப்பு, எதிர்ப்பு ஆகிய தளங்களில் ஐரோப்பிய ஏகாதிபத்திய சிந்தனை மரபை மறுதலித்து, அமெரிக்காவில் குடியேறிய முன்னாள் மேற்குலகின் காலனிய இலக்கியவாதிகளும் சிந்தனாவாதிகளும் ஓர் எதிர்ப்புச் சிந்தனையை முன்னெடுத்து வளர்க்க ஒன்றிணைந்தார்கள். அன்றிலிருந்து மேற்குலகின் படைப்பு மற்றும் கல்விப் புலங்களில் கவனம்கூடிய ஒரு சிந்தனைத் துறையாக இது வளர்ந்தது.

சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’ (2010)என்ற நூல் பின்காலனித்துவம் சார்ந்த கட்டுரைகளைக்கொண்டு கல்விப் புலத்துக்கு வெளியேயான தீவிர வாசகர்களைக் கருத்தில்வைத்து வெளிவந்த நூல். அதில், பின்காலனிய கருதுகோளானது ஏறக்குறைய பின்நவீனத்துவம்போலவே விளக்குவதற்குச் சிரமமானதென்றும், தேய்ந்து வரும் பின்நவீனத்துவத்தின் இடத்தை பின்காலனியம் காலத்தில் மூடி செல்வாக்குப் பெறுமென்றும் அவர் கூறியிருக்கிறார். பேராசிரியர் செல்வா கனகநாயகமும் தனது தமிழ்த் தொகுப்பில், ‘எனது ஆய்வுப் பரப்பின் பின்காலனித்துவம் மற்றும் ஒப்பியல் ஆய்வு ஆகியவற்றினூடாக திறனாய்வை அணுக விரும்புகிறேன்’ எனத் தெரிவித்தபடி, அவரது தொகுப்புக் கட்டுரைகள் பின்காலனித்துவத்தை முன்னிறுத்தியும் அதை அடிப்படையாகக்கொண்டும் படைக்கப்பட்டவையே ஆகும்.

தமிழ்த் தொகுப்பிலுள்ள இரண்டாவது கட்டுரை, ‘பின்காலனித்துவ இலக்கியப் போக்குகள்’ என்பது. அதிலுள்ள தெளிவும் தீவிரமும் வாசித்து அனுபவிக்கவேண்டியவை. தென்னாசிய ஆங்கில இலக்கியத்தை பின்காலனியமூடு இனங்கண்டார் செல்வா. மேற்குலகினுக்கும் கீழ்த்திசை உலகினுக்குமிடையே பின்காலனித்துவம்பற்றிய புரிதல் உணர்தற்பாங்கில் வித்தியாசமானது. அதனாலேயே பேரா. செல்வாவின் இலங்கை – தமிழ்நாடு குறித்த அதிகமான தமிழிலக்கிய ஆய்வின் முடிவுகள் வித்தியாசமானவையாக இருந்தன. இந்த வித்தியாசத்தின் தன்மையை மிகத் துல்லியமாகக் கண்டு பேராசிரியரின் தமிழ்த் தொகுப்பு முன்னுரையில், ‘அடிப்படையில்லாத முரண்களோடு ஒரு மொழி பேசும் இரு நாட்டினர் இடம் எனும் கருத்தாக்கத்தை மீறி மொழியில் இணையும் தருணங்கள் வரலாற்றில் தொடர்ந்து வருவது நாம் அறிந்த ஒன்று; ஆனால் செல்வாவின் இக் கட்டுரைகளை வாசிக்கும்போது தமிழகச் சூழலும் இலங்கைத் தமிழ்ச் சூழலும் அப்படையில் வேறுபட்டிருப்பதைக் காணமுடிகிறது’ எனக் கூறுகிறார் பேராசிரியர் வீ.அரசு. இதில் எவர் தரப்பின் சரி பிழைகளையும் மீறி கொள்ளவேண்டிய ஓர் அவதானம் இருக்கிறது. அது, பேரா. செல்வா கனகநாயகம் தன் காய்தல் உவத்தலுக்கப்பால் தன் ஆய்வுகளைச் செய்திருக்கிறார் என்பதே அது.  

மொத்தத்தில் கல்விப் புலத் துறைகளாகிய பின்காலனியம், ஒப்பிலக்கிய ஆய்வு, திறனாய்வு ஆகியவற்றினூடான பேராசிரியர் செல்வா கனகநாயகத்தின் பங்களிப்பு தமிழிலக்கியம், கனடா இலக்கியம், தென்னாசிய இலக்கியம் பொறுத்து, காலத்துக்கும் நின்று நிலைக்குமென துணிந்து சொல்லலாம். அவர் மறைந்துபோனாலும் எங்கள் இலக்கிய, அறிவுலக ஞாபகத்தில் அமரராய் இருப்பாரென நிச்சயமாக நம்புகிறேன்.

0

 

                            தமிழர் தகவல், ஆண்டு மலர் , ஓகஸ்ற் 2022

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்