நினைவுக் குளியல் 3
நினைவுக்
குளியல்: 3
பஞ்சாங்க
ஐயர்
அவரது பெயர் சுப்பிரமணிய ஐயர். ஆனால் அவரை பஞ்சாங்க ஐயரென்றுதான்
ஊர் அறிந்திருந்தது. திருக்கணித பஞ்சாங்கத்தை ஆண்டுதோறும் உருவாக்கி, அச்சடித்து, வெளியிட்டவர்
அவர். அதற்காக வீட்டிலே ரெடில் எனப்படுகிற கை அச்சு யந்திரமொன்றை வைத்திருந்தார்.
ஊரில் சகலருமே பஞ்சாங்க ஐயரைத் தெரிந்திருந்தவேளை, ஐயர் வெகுசிலரையே
அங்கே தெரிந்திருந்தாரென்பது விசித்திரமானதல்ல. அவரின் போக்கு அப்படி.
அவர் வெளிப் பிரக்ஞைகள் இல்லாதவராக, தானும் தன் திருக்கணிதத்துக்கான
காலக் கணிப்பும் அதன் அச்சாக்க வேலைகளுமாகயிருந்தார். அவரது மனத்தை, மனிதர்களையும்
தினசரிச் சம்பவங்களையும்விட, சூரியன் சந்திரன் ராகு கேது ஆகிய நவக்கிரகங்களே கூடுதலாக
ஆக்ரமித்திருக்க முடியும்.
ஐயருக்கு அப்போது நாற்பது / நாற்பத்தைந்து வயதிருக்கலாம்.
போந்த பொலிந்த வெள்ளை உடம்பு அவருக்கு. அதில் ஆரோக்கியம் பளீரிட்டது. ஆயினும் ஐயர் கலகலப்பாக இருந்ததை யாரும் கண்டதில்லை.
அவர் மகிழ்வோடு எதிர்கொண்டவர்களாய் யாருமில்லைப்போல், அவரை
மகிழ்வோடு எதிர்கொண்டவர்களாயும் அதிகம் பேர் இருக்கவில்லை. ஒருவித வெறுப்போடும், பயத்தோடும்
அவரை ஊர் விலகிப் போனது. அவரது முசுறுக் குணம்தான்
அதன் காரணமென அக்கம்பக்கத்தில் சனங்கள் பேசியதுண்டு. சிலர் அவருக்கு மூலவியாதி என்றும்
சொன்னார்கள். ஆனால் ஐயர் அவைபற்றி எந்தக் கரிசனையும் கொண்டதில்லை.
வீட்டு வாசலில் பெரும்பாலான மாலை நேரங்களில் கதிரையைப் போட்டுக்கொண்டு
வாகனங்கள் அதிகமோடாத தெருவுக்கு அப்பாலிருக்கும் வயல்வெளியை, அதிலுள்ள தாமரைக் குளத்தை,
ஓரத்தில் சடைத்து நின்ற மருத மரத்தை, அதற்குமப்பாலுள்ள தரைவை நீர் செம்மையடித்து மின்னுவதைப்
பார்த்தபடியிருப்பார். தெருவில் சிலவாக இருக்கும் மனித சஞ்சாரத்தை அவர் கண்டுகொண்டதாகவே
இருக்காது.
வெளியில் எங்காவது போய்விட்டு வரும் சந்தர்ப்பங்களிலும் எதிர்வரும்
எவரையும் தெரிந்த பாவனை காட்டி ஒரு புன்னகைகூட அவர் செய்வதில்லை. தீர்க்கமாக கண்களை
ஊடறுத்துப் பார்த்தபடி நடப்பார்.
என் தாய் தந்தையரோடு நல்ல அறிமுகமிருந்ததில் என்னை ஐயர் அறிந்திருந்தார்.
ஆனாலும் ஒரு வார்த்தை பேசவோ, ஒரு முறுவல் காட்டவோ என்றும் அவர் முனைந்ததாக எனக்கு நினைவில்லை.
நானும் அப்படியே. அதற்கான காரணம், ஓர் இளகிய முகபாவத்தை ஐயரில் நான் என்றும் காணாததேயாகும்.
அதனால் ஐயரில் எனக்கு பயமிருக்காததுபோல், அவரில் எனக்கு விருப்பமும் இல்லாது போய்விட்டது.
அப்போது எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம்.
ஆண்டு 1955 என நினைக்கிறேன்.
ஒரு மாலை நேரம்.
தெருப் பக்கமாகக் கூக்குரல்.
குரல் திசையில் கரும் புகை சுருண்டு சுருண்டு மேலே எழுந்துகொண்டிருக்கிறது.
‘ஐயற்ர வீடு நெருப்புப் பிடிச்சிட்டுது.’ ஊரெங்கும் செய்தி
பரவிற்று.
சனங்கள் தெருவை நோக்கி ஓடினார்கள். நானும், கூட ஓடினேன்.
எங்கும் புகையும், சாம்பர் துணிக்கைகளுமாயிருந்தது காற்றில்.
ஐயரின் வீட்டை சமீபிக்க முடியவில்லை. எட்டத்தில் நின்றபடியே
சனங்களை ஊடறுத்துப் பார்த்தேன்.
வெளியே, கிடுகு வேலி எரிந்திருந்தது.
உள்ளே, சீமெந்துக் கட்டிடத்துக்கு கீற்றுக் கூரை போட்டிருந்த
வீடு எரிந்திருந்தது.
பின்னாலிருந்த அச்சுக்கூடம் எரிந்திருந்தது.
எரியக்கூடியனவெல்லாம் எரிந்து முடிந்து, அவற்றின் நெருப்புத்
துண்டங்கள்மட்டும் எச்சமாய்க் கனன்றுகொண்டு கிடந்தன.
ஐயர் வீட்டில் இல்லாதபோது நடந்த தீவிபத்தென சனம் பேசியது.
ஐயர் இருந்திருந்தால்தான் என்ன செய்துவிட்டிருப்பார்?
ஒரு தனிமை வலயத்துள் வாழ்ந்ததால் மட்டுமில்லை, தனித்த சூழமைவையும்
ஏற்படுத்தியிருந்ததில் தீயை அணைக்கிற வசதிகளும் ஆளுதவியும்கூட இல்லாது போனது. கூட,
காலமும் ஐயருக்கு எதிரணியில் சேர்ந்துகொண்டது. அது, ஊரில் அதிகமானவர்களும் அருவி வெட்டுக்காக
வன்னி போயிருந்த சமயம்.
பார்க்கப்போனால் அது பெரிய சம்பவமில்லைத்தான்.
ஊரில் அக் கோடை காலத்தில் குடிசைகளே அதிகமுள்ள அக் கிராமத்தில்
அங்கிங்கொன்றாக வீடுகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடப்பதுதான்.
அடுத்த நாளில், அதற்கடுத்த நாளில், மூன்றாம் நாளில் ஐயர்
வீடு எரிந்துபோன சம்பவத்தை ஊர் மறந்துவிட்டது.
இச் சம்பவம் நடந்து ஒரு வாரமோ பத்து நாட்களோ கழித்து, ஐயர்
வீட்டுப் பக்கமாக நான் போகநேர்ந்த வேளையில் பாதி எரிந்த, முக்கால் வாசி எரிந்த, ஓரம்
எரிந்த, கருகிப்போன புத்தக மலையொன்றை ஐயர் வீட்டு வாசலுக்கு அருகே தெருக் கானில் கண்டபோது
அதிர்ந்துபோனேன்.
தயங்கித் தயங்கி கிட்டவாகச் சென்றேன். தடித்த மட்டைப் புத்தகங்களில்
குறைவாக எரிந்த ஒன்றினை எடுத்து பிரித்துப் பார்த்தேன். சூரியனைச் சுற்றி பூமி ஓடியது
கண்டேன். இன்னொரு பக்கத்தைப் புரட்ட தத்தம் ஓடு பாதைகளில் பூமியும் சனியும் ராகுவும்
கேதுவும் சுழன்று பறந்துகொண்டிருந்தன.
திருக்கணிதத்தை ஐயர் கணித்த விஞ்ஞானபூர்வத்தை அந்த வயதில்
மட்டுமல்ல, எந்த வயதிலுமே என்னால் புரிந்திருக்க முடியாதென்றாலும், அதுவோர் இயற்கையின்
பிரமாண்ட ரகசியத்தை உள்ளடக்கிய விவகாரமென்பதை உணர்ந்து உடல் பதற நின்றேன்.
எத்தனை நூல்கள்? ஒரு … ஆயிரம்… ரண்டாயிரம்… ஐயாயிரம் இருக்குமா?
மனம் இன்னும் அடங்காத பதற்றத்தில் இருந்தது.
ஒருவாறு தெளிந்து, புத்தகத்தை புத்தக மலைமேல் வீசினேன்.
மேலே நடக்க, வாசலில் ஐயர் கதிரைபோட்டு அமர்ந்திருப்பதைக்
கண்டேன்.
நன்றாகப் பார்த்தேன்.
அவ்வாறான கோலத்தில் அவரை என்றும் நான் கண்டிருக்கவில்லை.
தன் தொழிலின் மதிப்பும், அதன் அறிவார்த்தத்தில் கம்பீரமும் கொண்டிருந்த ஐயர் முற்றாக மாறியிருந்தார்.
தன் வீட்டை இழந்தாரே, அதனாலா அந்த அழிவுக் கோலம்?
தன் அச்சுக்கூடத்தை இழந்தாரே, அதனாலா அந்த விரக்திக் கோலம்?
எனக்குத் தெரியவில்லை.
நான் ஐயரைப் பார்த்தபடி அவரைக் கடந்து நடந்தேன்.
என்றைக்குமில்லாதவாறு ஐயர் அன்றைக்கு என்னைப் பார்த்தார்.
அதில் ஏதோ ஒரு புதிய உணர்வு… மெல்ல புன்னகைப்பதுபோல சில மின்னல்கள்…
அழுகையின் கணநேர வெடிப்புப்போலவும் அது தோன்றிற்று எனக்கு.
அதிசயமாக என் கண்ணில் நீர் கசிந்தது.
எதையுமே அன்று நான் விளங்கியிருக்கவில்லைத்தான். ஆனால் அந்தப்
படத்தை வெகுகாலம் என் மனத்தில் பாதுகாத்தேன்.
காலம் உருண்டது.
ஐயரின் வீடு ஓட்டு வீடாக மறுபடி எழுந்துவிட்டது. வேலி, மதிலாக
மாறிவிட்டது. ஆனால் ஐயர்… மாறாமலே இருந்தார்.
என் மனத்தில் புதைத்துவைத்திருந்த படத்தை மீட்டொருநாள் பார்த்தபோது
ஐயரை நான் அறிந்தேன்.
அவர் எதனை இழந்ததாலுமில்லை, தன் நூல்களை இழந்ததாலேயே அந்தமாதிரி
நொருங்கிப்போயிருந்தார் என்பதை உணர்ந்தேன்.
நூல்… புத்தகம்… என்னுள் அன்றுதான் அர்த்த பிரமாண்டம் கொண்டது.
அப்போது முன் பக்கங்கள் சில இல்லாத ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’,
ஆசிரியர் பெயர் மறந்துபோன ‘வடிவாம்பாளின் உயில்’, மு.வ.வின் சில நூல்களென ஐந்தாறு நூல்கள்
என் சேகரத்தில் இருந்திருந்தன.
000
Comments