மக்கள் கவிஞன்
இப்போதெல்லாம் கார்களில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகியிருக்கிறது இசை. வானொலியில், குறுந் தகட்டிலென்று பலவாறாக அவை. சிலவற்றை அவற்றின் அர்த்தத்துக்காக, சிலவற்றை அவற்றின் இசைக்காகவென்று ரசிக்கவும் முடிகிறதுதான். ஆனாலும் இவற்றின் சமூகப் பொறுப்புப்பற்றி யோசிக்கையில் வெறுமைதான் எஞ்சுகிறது. பழையனவெல்லாம் நல்லனவுமல்ல, புதியனவெல்லாம் கெட்டனவுமல்ல என்ற புரிதல் எனக்கிருக்கிறது. ஆயினும் சில பழைய ஆளுமைகள்போல் புதியனவான ஆளுமைகள் தோன்றவில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொண்டேதான் ஆகவேண்டும். தம் கொள்கைகளைக் கடைசிவரை காத்திருந்து, அவற்றோடு தம் வாழ்வை இணைத்துக்கொண்டவர்கள்தான் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களில், திரைப்படப் பாடலாசிரியர்களைப் பொறுத்தவரை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இடம் முதன்மையானது. அவருக்குப் பின் இன்று நூற்றுக்கு மேற்பட்ட பாடலாசிரியர்கள் தமிழ்த் திரைப்படத் துறையிலே தோன்றியிருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் பட்டுக்கோட்டையாரின் இடம் வெறுமையாகவே இருக்கிறது. இளையராஜாவுக்கு இருக்கும் சிறப்புகளில் ஒன்று அவர் கிராமிய இசையை திரைப்படத் துறைக்குள் அதிகமாகவும் புகுத்தியவ...