Monday, February 16, 2009

இன்னும் ஒருமுறை

இன்னும் ஒருமுறை
எண்ணிப்பார்க்க வேண்டியதிருக்கிறது


 பிரெஞ்சுப் புரட்சி சொல்லிக்கொண்டிருக்கும்
பாடங்கள் மறக்கப்பட முடியாதன


-தேவகாந்தன்


பதினெட்டாம் நூற்றாண்டு இங்கிலாந்தைப் பொறுத்தவரை பாரினை ஆண்டுகொண்டிருந்த மன்றத்துக்கு (பாராளுமன்றத்துக்கு) கூடுதலான ஆட்சியதிகாரங்களைக் கொடுத்துவிடுகின்ற தேவையை, மன்னராட்சிக்கு ஏற்படுத்திய கேடுகாலமாகக் கொள்ளலாம். ஏனைய நாடுகளின் முடிகளுக்கும் இதுவே பொதுநியதியாக இருந்ததென்று சுருக்கமாகக் குறிப்பிட முடியும்.
பிரபுக்கள், செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் பிரநிதிகள் அடங்கிய இந்த மன்றத்துக்கு படிப்படியாகச் சேர்ந்த அதிகாரம், மன்னராட்சியுடனான எந்தப் போராட்டங்களினதும், புரட்சிகளினதும் காரணமாய் வந்துசேர்ந்ததில்லையென்ற உண்மையை இங்கே வலுவாகப் பதிந்துகொள்வது முக்கியம். அப்போதுதான், நாடாளுமன்றத்தின் தன்மையை நாம் முழுமையாகப் விளங்கிக்கொள்ள முடியும்.

அறிவுலகில் ஏற்பட்டுக்கொண்டிருந்த மாற்றங்களும், விஞ்ஞான வளர்ச்சியும், கல்விப் பரம்பலும் முடிசார்ந்த வர்க்கத்துக்கு ஓர் அச்சுறுக்கையாக இருந்தன என்பது ஓரளவுக்குத்தான் நடந்தது. அதை மிக்க சாதுர்யமாக மன்னராட்சி, தன் உரிமைகளைப் பகிர்வதன் மூலம் தீர்த்துக்கொண்டது என்பதே உண்மை. ஆனாலும் அதிகாரங்கள் முடியிலேயே நிலைத்திருந்தன.

அதனால்தான் பாராளுமன்றங்களின் தாய் எனப்படும் இங்கிலாந்து நாட்டிலே இருபத்தோராம் நூற்றாண்டிலும் கூட முடியே தலைமை வகித்துக்கொண்டிருக்கிறது. வடஅமெரிக்க நாடான கனடாவில் நாட்டின் தலைவர், தேசாதிகாரி (Governor  General ) ஆவார். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல. முடி அல்லது முடியின் பிரதிநிதித்துவம் அதிகாரமற்ற தலைமையென்று சொல்லப்படுவதின் மூலம் பல உண்மைகள் மறைக்கப்பட்டன என்பதுதான் வரலாற்றில் நிகழ்ந்திருப்பது.

ஓர் அதிகார வர்க்கம் தன் அதிகாரங்களைப் படிப்படியாக குடிமக்கள் மன்றுக்கு விட்டுக்கொடுக்கச் சம்மதிக்கின்றதெனில், அது நடைமுறை அமைப்பைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறது என்பதுதான் அர்த்தம். முடியிடமிருந்து அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு இன்று முடியானது அதிகாரமற்றதாய் இருக்கிறதென்பது நம்ப வைக்கப்பட்டிருக்கிற ஒரு கருத்தாக்கம். ஆனால் அங்கேதான் ஒருவருக்கு கூடுதலான சந்தேகங்கள் எழ வாய்ப்பிருக்கிறது. ஓருவேளை இதை தனியொரு நபரிடமிருந்த அதிகாரங்கள் பிரித்தெடுக்கப்பட்டன என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அந்த ஏதேச்சாதிகாரம் மிகுந்த தனிமனிதனிடமிருந்து அதிகாரங்கள் ஒரு வர்க்கத்துக்கு - ஒரு குழுவுக்கு - ஆனதென்பதுதான் உண்மை.

இன்றைய ஜனநாயகமென்பது பெரும்பான்மை ஆட்சியதிகாரத்தை மய்யமாகக் கொண்டது. அதுவும் பெரும்பான்மை ஆட்சியென்பதைவிட நாடாளுமன்ற ஆட்சிமுறையென்று ஆகியிருப்பதாகத்தான் சொல்லமுடியும். இந் நாடாளுமன்ற ஆட்சி முறைமுறை மூலம் பல்கட்சி இயங்கும் ஒரு நாட்டில் சிறுபான்மையாட்சி ஏற்படவும் வழியிருக்கிறது.

‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பதெல்லாம் ஏமாற்றுவதற்காக இடப்பட்ட கோஷங்களே. எந்தக் குடிமகனும் எந்த நாட்டினதும் மன்னனாகிவிடுவதில்லை. மாறாக, ஒரு வர்க்கமே ஆட்சியதிகாரம் பெற்றுக்கொண்டிருக்கும்படியான நிலைமையினைத் தக்கவைப்பதற்கான அமைப்பே நாடாளுமன்ற ஆட்சிமுறையென்பது.

இந்தத் தெளிவோடு பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு ஒருமுறை சென்றுவருவோமா?

ஸ்பெயின், பிரஷ் யா, அவுஸ்திரியா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலும் இடையாறாத யுத்தம்போலவே, தொடர்ந்தேர்ச்சியான மணவினைகளும் இருந்துகொண்டிருந்தன. மணவினை உறவுகளுக்காக மறைமுகத்திலும், அதிகார வரிப்புக்காக வெளிப்பாட்டிலும் இவைகளுக்கிடையே நடைபெற்றுவந்த யுத்தமே மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பின்னான உலக சரித்திரமாக விரிவுபெறுகிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஆயினும் ஒரு நாட்டுக்கு தாம் தவிர்ந்த வேறொரு நாட்டின் மூலமாகவோ அல்லது வேறொரு கலக சக்தியின்மூலமோ அச்சுறுத்தல் ஏற்படுமாயின், இந்த நாடுகள் கூடியவரை ஒன்றுக்கொன்று உதவிக்கு ஓடிவந்து ஆயுதமாக, பணமாக, படையாக நல்குதல் செய்ய முந்தியே வந்திருக்கின்றன. இது, உறவுகளுக்கு உதவிசெய்ய வேண்டுமென்ற எண்ணத்தினால் இல்லை. மாறாக, அப்போது நடைமுறையிலிருக்கும் அமைப்பு தக்கவைக்கப்பட வேண்டுமென்ற எண்ணத்தினாலேயே ஆகும்.

பதினெட்டாம் நூற்றாண்டின் எண்பதுகளின் ஆரம்பத்தில் பிரான்ஸ் தேசம் இருந்த நிலை சொல்லும் தரத்ததல்ல. செல்வம் ஓரிடத்தில் குவிந்துபோயும், வறுமை பசி பட்டினிகள் நாடெங்கும் மலிந்துபோயுமிருந்த காலமாகவிருந்தது அது. முடி சகல அதிகாரங்களையும் கொண்டிருக்க, முடிசார்ந்தவர்கள் சகல சௌபாக்கியங்களையும் அனுபவித்துக்கொண்டிருந்தனர். நாடு உப்புக்கும், பாணுக்கும் கூட வறுமைப்பட்டுப்போயிருந்த நேரத்தில், கேக்கும் வைனும் ஊனும் தேனும் செல்வந்தர் மாளிகைகளிலும் அரண்மனையிலும் மிதமிஞ்சிக் கிடந்தன. ஆட்சி பீடத்திலிருந்தோருக்கு பசியென்பதே என்னவென்று தெரியாதிருந்தது. அதனால்தான் பசிக்கொடுமை மேவி உணவு கேட்டு அரண்மனை வெளியில் கூடிநின்று மக்கள் குரலெடுத்தபோது, அரசி கேட்கிறாள் தன் பணிப்பெண்ணிடம், ‘ஏன் அவர்கள் இவ்வாறு கூப்பாடு போடுகிறார்கள்?’ என்று. அதற்கு பணிப்பெண் அவர்கள் பசிக்கு பாண் வேண்டுமென்று கேட்கிறார்கள் என்கிறாள். அப்போது அரசி பதிலிறுக்கிறாள், ‘பாண் இல்லாவிட்டால் என்ன, கேக் சாப்பிடலாம்தானே?’ என்று. அவ்வளவுக்கு ஆட்சிபீடத்திலுள்ளோர் பசியென்பதையே என்னவென்று அறியாதிருந்ததைக் காட்ட இவ்வாறான ஒரு கதை நிலவுகிறது. சம்பவம் உண்மையோ பொய்யோ, ஆனால் அரசகுலத்தின் இந்த மனநிலை உண்மையானதுதான்.

பிரான்ஸ் தேசம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. பசியினால் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள். இளம் மன்னன் பதினாறாம் லூயி வேட்டையாடச் சென்றிருக்கிறான் வழக்கம்போல. புரட்சியின் தொடக்கக் கொந்தளிப்பு எழுகிறது. ஓடிப்போய் முதல் தகவலறிக்கையைக் காவலன் அரசனிடம் சொல்லுகிறான். ‘ஓ, கலகம் தொடங்கியிருக்கிறதா?’ என மிகச் சாதாரணமாகக் கேட்கிறானாம் மன்னன். ‘இல்லை அரசே, எழுந்திருப்பது புரட்சி’ என்று பதிலளித்தானாம் காவலாளி. அந்தளவுக்கு நாட்டு நிலைமையை அறிந்திராத முடியாகவிருந்தது அன்றைய பிரான்ஸ் தேசத்து இறைமை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று சுலோகங்களின் மீது கட்டியெழுப்பப்பட்ட புரட்சியின் பாதை பின்னால் மாறிப்போனதுதான்.
அதற்குக் காரணமும் அண்டைநாடுகளின் மறைமுகத் தலையீடுதான் என்கிறது வரலாறு. சட்டப்படியான இறைமை முடிதானென்பதே அன்றைய அரசியல் வேதமாக இருந்தது. இன்று சட்டப்படியான இறைமையுள்ளது நாடாளுமன்றமே என்கிறது அந்த வேதம். ஆக, சரியானதோ தவறானதோ, நாடாளுமன்றத்தின் முடிவு இறுதியானது என்பதுதான் சர்வதேச அரங்கின் தீர்மானம். சட்டபூர்வமான இறைமை என்று சொல்லிக்கொண்டு என்ன பேய்க்கூத்து ஆடினாலும் அது வெறுமனே பார்த்துக்கொண்டு செயலடங்கி இருந்துவிடும்.

ஏனெனில் நாடாளுமன்றம் என்பதுதான் இன்றிருக்கும் அமைப்பின் வேர். முந்திய காலங்களில் எப்படி முடியானது இந்த அமைப்பின் மய்யமாக இருந்ததோ, அதுபோல இது. முடிமன்னர் காலம்போலவேதான் நாடாளுமன்றக் காலத்திலும் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிலரின் அதிகாரம்கொண்டதாக ஆட்சி இருக்கும். வாக்குரிமை என்பது ஒரு கண்கட்டு. ‘அ’ கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ‘ஆ’ கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அதிகாரமானது அந்த ஒருசில பேர்களின் கைகளிலேயே இருக்கிறது என்பதுதான் நிஜம். அந்த ஒருசில பேர்களே அமைப்பாக இருக்கிறார்கள். ஜோர்ஜ் டபிள்யு புஷ்  போனாலும், பராக் ஒபாமா வந்தாலும் இந்த அமைப்பிடமே முழு அதிகாரமும் இருக்கிறது என்பதுதான் மெய்யாக நடப்பது. ரணில் போனாலும் மகிந்த வந்தாலும் இந்த அமைப்பின்படியேதான் ஆடவேண்டியிருக்கிறது. ஒருவேளை அவர்களின் தீவிரம் கூடிக் குறைந்து இருப்பது மட்டும்தான் வித்தியாசமாக இருக்கமுடியும். இதையே ‘managerical Revolution ’ என அரசியல் சாஸ்திரம் கூறுகிறது.

ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’ போன்ற கருத்தாங்கங்களால் மக்கள் விழிப்புணர்வு பெற்றிருப்பினும், ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் ஒரு தராசில் வைத்து ஒப்பநோக்கி அடங்கிவிடுவதுதான் அவர்கள் இயல்பாக தொடர்ந்துவந்திருக்கிறது.

ஆடி 12, 1789 இல் ஆரம்பிக்கும் பிரான்சுப் புரட்சி (ஆடி 14, 1789இல் பாஸ்ரில் சிறையின் வீழ்ச்சியோடு இந்தக் காலம் வரையறுக்கப்படுவதுமுண்டு) மிகக் கூடுதாலாக இரண்டு ஆண்டுகள்கூட உயிர்வாழவில்லையென்ற மெய்மையை இங்கே பொருத்திப்பார்ப்பது நல்லது. புரட்சியின் சில உயர்ந்த கொள்கைகளைச் சாதனையாக்க 1790இல் ஓர் இரண்டாம் கட்ட புரட்சியை நிகழ்த்தவேண்டி ஏற்பட்டது எவ்வளவு ஆச்சரியகரமான விஷயம்! ஆயினும் தன் ஆயுட்காலத்தில் அது பல முற்போக்கான கொள்கைகளை முன்மொழிந்து நடைமுறைப்படுத்தியது.

புரட்சி தொடங்கி அரசன் கைதானதும் புரட்சியாளருக்கு முழு ஒத்துழைப்புத் தருவதற்கும், விரைவில் முன்மொழியப்படவிருந்த புதிய அரசியல்சட்டத்தை அங்கீகரிப்பதற்கும்கூட, ஆதரவு தருவதாக ஒப்புக்கொள்ளுகிறான் அவன். மாசி 04, 1790 இல் நிகழ்த்திய அவனது பேச்சு அதையே தெளிவாக்குகிறது. ஆனால் ஆனி 20-21, 1791இல் வேற்றுநாட்டுக்குத் தப்பிச்செல்ல முயலுமுன்னர் தன் கைப்பட எழுதிவைத்த கடிதத்தில் புரட்சியை மறுதலித்தே கருத்தை வெளியிட்டுவைக்கிறான். அதிகார மய்யம் இந்தப் புதிய கருத்துக்கு அடங்கமறுத்து கடைசிவரை, மன்னன் மரண தண்டனை விதிக்கப்பட்டு தை 21, 1793இல் கொல்லப்படும்வரை, தன் மறுதலிப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

அத்துடன் நின்றுவிடவில்லை எதிர்ப்புரட்சிகர சக்திகளின் திமிறல். ஏற்கனவே பிரான்ஸைவிட்டு வெளியேறியிருந்த ஆளும் வர்க்கத்தினால் பெரிய நெருக்கடிகளைச் சந்திக்கிறது புரட்சியரசாங்கம். பதினாறாம் லூயியே பிரஷ்ய அரசன் பிரடெரிக் வில்லியம் 2 க்கு கடிதம் எழுதுகிறான். மேரி அன்ரொனெற் தன் சகோதரனை பிரான்ஸின்மீது யுத்தம் செய்ய ஊக்குவிக்கின்றாள். பெல்ஜியம் எல்லைவரையில் படைகள் வந்துநின்று புரட்சியரசாங்கத்தை அச்சுறுத்திக்கொண்டு நிற்கின்றன. அவுஸ்திரியா, பிரஷ்யா போன்ற எல்லை நாடுகளின் இந்த முஸ்தீபுதான் புரட்சியரசாங்கத்தின் தடுமாற்றத்துக்கும், பின்னால் அதன் அழிவுக்குமே காரணமாகின்றன. 1792 ஆம் ஆண்டு செப்.20இல் பிரஷ்யாமீதும், நவ.6இல் அவுஸ்திரியாமீதும் புரட்சியரசாங்கம் யுத்த வெற்றிகளைப் பெற்றிருந்தபோதிலும்தான்.

மனித குலத்தின் மிகஉன்னதமான கொள்கைகளைப் பிரகடனப்படுத்திக்கொண்டு தோன்றியதாயினும், அப்போதைய அமைப்புக்கு வெளியில் அதிகாரத்தை இட்டுச்செல்லும் எந்த அரசும்தான் வெளிநாடுகளின், சர்வதேச நாடுகளின் வலிந்த தாக்குதலைச் சந்தித்தாகவேண்டும்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளைச் சொல்லிக்கொண்டு அவர்கள் ஆட்சிசெய்ய வரலாம். ஏனெனில் அமைப்புக்கு வெளியே அவர்களது அதிகாரம் கைவிட்டுச் சென்றுவிடாது. ஆனால் அதையே வேறு சிந்தனைகள் செய்ய முன்வந்துவிடக்கூடாது. அது அமைப்புக்கு வெளியே அதிகாரத்தை இட்டுச்செல்வதாகிவிடும்.

சோசலிசப் புரட்சியின் பின் ரஷ்ய மன்னன் அலெக்ஸாண்டர் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டபோதும், இதேமாதிரியான நிலைமைதான் தோன்றியது. ஏனெனில் தமக்கு வெளியே அதிகாரத்தை இட்டுச்செல்வதை எந்த அமைப்பும்தான் விரும்புவதில்லை.

இப்போது இலங்கையில் தமிழ் மக்கள் மீதான கட்டற்ற யுத்தத்துக்கு அனுசரணை வழங்கும் நாடுகளைப் பொறுத்தும் இதே தரவில்தான் நாம் புரிதலைச் செய்யவேண்டியதிருக்கிறது.

‘நாடாளுமன்றங்கள் கள்ளர்களின் கூடாரங்கள்’ என்று ஒருபோது மாஓ சொன்னதன் விளக்கத்தையும் நாம் இங்கிருந்து பார்க்கமுடியும்.

00000
 தாய்வீடு ,பெப்  2009 

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...