Sunday, March 15, 2009

தேவதைக் கதைபோல

இந்தியக் களத்தில் ஒரு சினிமா:ஸ்லம்டோக் மில்லியனெர் (Slumdog Millionaire) குறித்து…கடந்த ஓரிரு மாதங்களாகவே ‘ஸ்லம்டோக் மில்லியனர்’ சினிமாபற்றி பத்திரிகை, சஞ்சிகை, இணைய தளங்கள் மூலமாக சிற்சில கருத்துக்கள் வெளியாகிக்கொண்டிருந்தும், சினிமாவைப் பார்க்கும்வரை எந்தவோர் அபிப்பிராயத்தையும் கொள்வதில்லையென்று பிடிவாதத்தோடிருந்தேன். எல்லா நல்ல சினிமாக்கள் குறித்தும் இதுவே என் வழிமுறையாக இருப்பினும், இந்தச் சினிமாவைப் பார்ப்பதற்கான ஆவல் ஓர் அவதியாக என் மனத்தில் அலைந்துகொண்டிருந்தது. ஆனாலும் ஒஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் நல்ல பிரதியொன்று கிடைத்து இதைப் பார்க்க முடிந்திருந்தது.

இது என்னுள் எழுப்பிய கேள்விகள், உணர்வுகளையே தாய்வீடு வாசகர்களோடு இங்கு பகிரந்துகொள்ளப் போகின்றேன்.

ஒரு சிறந்த சினிமாவைப் பார்த்த முழு அனுபவமாய் அது இருந்தது. ஆனாலும் சினிமா முடிந்த பின்னர் மனத்தில் அடங்க மறுத்து அலையலையாய் எழுந்த உணர்வுகள், இன்னும் உள்ளத்தில் கிளர்ந்து மனத்தை பரவசநிலையடைய வைத்துக்கொண்டே இருக்கின்றன.

எப்போதும் நல்ல சினிமா குறித்து உரையாடுவதற்கு அரிதாகவேனும் சில நல்ல படைப்பார்த்தமான சினிமாக்கள் வெளிவந்துகொண்டிருக்கத்தான் செய்கின்றன. அந்த வரிசையில் இப்போது வந்திருப்பது ‘ஸ்லம்டோக் மில்லியனெர்’.

இச் சினிமா உன்னதம் பெறுகிற இடம், இது சினிமாவாகவும், அதே நேரத்தில் ஒரு விவரணப் படமாகவும் உருவாகியிருப்பதுதான். சுமார் இரண்டு கோடி மக்களைக் கொண்ட மும்பை நகர ஜனத்தொகையில், ஏறக்குறைய ஒரு கோடியளவான பேர் மும்பையின் இவ்வாறான ஒதுக்கப்பட்ட இடங்களில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பொலிவுட்டினதும், பெரும்பெரும் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக மய்யங்களினதும் அழகுகளின் பின்னால் இந்த அழகின்மையும், அருவருப்பும், நோயும், அங்கவீனங்களும், அநாதரவானவர்களும் கொண்ட ஒரு புறம் இருப்பது பரவலாக அறியவந்திருப்பதுதான். ஆனாலும் அதை இச் சினிமாவில் காண்கிறபோது மனச்சாட்சியை உலுக்குமளவுக்கு யதார்த்தம் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

மதக் கலவரம், வறுமையினதும் அறியாமையினதும் விளைவுகளான விபச்சாரம், சிறுவர்களை முடமாக்கியும் குருடாக்கியும் பிச்சையெடுக்க வைத்தல், திருட்டு, மோசடி, அடிபிடி, கொலையெல்லாம் இந்த மாதிரியான இடங்களில் சாதாரணமாகவே காணக்கிடப்பன. கடந்த காலங்களில் ஏற்பட்ட மதக் கலவரங்களைக் கவனித்தால், மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஒளிபொருந்திய மும்பையின் இதுபோன்ற இருட்டுப்பகுதிகளில் வாழும் குடிசைவாசிகளே என்பது இலகுவாகப் புரிய வரும். இந்த ஒழுக்காசாரங்களை அந்த மக்களின் வாழ்முறையாக இல்லாமல், அவர்கள் மீது சமுதாயம் சுமத்திய பாரங்களாக, கொடுமைகளாகக் காண வெகுசிலராலேயே முடிவதாயிருந்திருக்கிறது காலகாலமாகவும். ஆனால் மும்பையின் இருட்டுப்புறத்தை இச் சினிமா சர்வதேசமளவில் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. காட்டுவதான எண்ணம், நோக்கம் எதுவுமின்றி இது இயல்பாய் கதைப்போக்கில் நிகழ்கிறது என்பதுதான் இதிலுள்ள விசேடம்.

இது இந்தியாவின் அழுக்குத்தான். இந்தியாவின் நாற்றமேதான். அதைக் காண மனச்சாட்சியுள்ள மனங்கள் தேவை. அவற்றினால்தான் அவை ஒரு தீர்வுக்கான வழியைநோக்கி நகர்த்தப்படமுடியும். ஆனால் எப்போதும் இந்துத்துவவாதிகள், மேலாண்மைவாதிகளுக்கு இந்த அழுக்குகள் பகிரங்கமாக்கப்படுவது பொறுக்கமுடியாததாகவே இருந்துவந்திருக்கிறது.

‘வாட்டர்’ (Water) சினிமாவின் படப்பிடிப்பை இந்தியாவிலேதான் தொடங்கினார் அதன் தயாரிப்பாளரும் இயக்குநருமான தீபா மேத்தா. ஆனால் இந்துத்துவ வாதிகளின் தீவிர எதிர்ப்புக் காரணமாக, தொடக்கப்பட்ட படப்பிடிப்பு முற்றுமாய் நிறுத்தப்பட்டு, கதைக்குத் தோதான சூழல் இலங்கையில் காணப்பெற்று வேறொரு சமயத்தில படம் எடுத்து முடிக்கப்பட்டிருந்தது. அவரது ‘பயர்’ (Fire) சினிமாவுக்கும் ஏறக்குறைய இதேயளவு ஆக்ரோ~மான எதிர்ப்புகள் கிளர்ந்தன. அதிர்~;டவசமாக ‘ஸ்லம்டோக் மில்லியனெ’ருக்கு அதுபோன்ற தடையேதும் நேராவிட்டாலும், இந்தியின் பழைய சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனாலும், இன்னும் பல தீவிர இந்துத்துவ வாதிகளாலும் இச் சினிமா தீவிரமான கண்டனத்துக்காளானது.

மலக்குழியில் மூழ்கியெழுந்தேனும் அன்றைய சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனைக் காண, அன்றைக்குச் சிறுவனாக இருந்த ஒரு ரசிகன் ஓடுவதாக சினிமா காட்டுகிறது. சினிமா இந்தியாவின் வறுமை சூழ்ந்த குடிசைகளிலிருப்போரையும் எவ்வாறு பாதித்திருந்தது என்பதை சொல்லாமல் சொல்லிச்செல்கிறது சினிமா. ஆனால் இந்த அழகிழந்த பகுதிகளின் அவலத்தைக் காட்டுவதே இயக்குநரின் நோக்கமாக இருக்கவில்லை. அவர் மிக உயர்ந்த ஒரு கனவோடு தன் பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் குரல்கள் எழுகின்றன, இந்தியாவின் வறுமையையும், அழுக்கையும் நியாயமற்ற முறையில் இயக்குநர் டானி பொய்ல் (Danny Boyle) சினிமாவாக்கியிருப்பதாக. இதில் மிகப் பெரிய குரல் அமிதாப் பச்சனது.

மும்பையில் மதக்கலவரங்களுக்கு, வெளிமாநிலத்தார் மீதான தாக்குதல்களுக்கு என்றேனும் குறைவிருந்ததுண்டா? அதை கதையோடு ஒட்டி, தேவைக்கு அதிகமாக ஒரு காட்சிகூட சேர்க்காமல் சினிமா முடிவடைந்துவிடுகிறபோதே ஓலங்கள் எழுகின்றன, இந்தியாவின் அழுக்கையும் வறுமையையும் பகிரங்கப்படுத்துவதாக.

கதையோடு ஒட்டிய காட்சிகளேயெனினும், பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பம்பாயாக அது இருந்தபோது எப்படியிருந்தது என்பதை மிக்க துல்லியத்தோடு ‘ஸ்லம்டோக் மில்லியனெர்’ காட்டியிருந்தது. இது பம்பாயின் விவரணக் காட்சிகள்தான். இவையே ஒரு விவரணப்படமளவாக விரிந்திருந்தன.

இந்தப் பின்னணிக்கு உள்ளேதான் சினிமா வளர்கிறது. சொல்லப்Nபுhனால் இது ஜமால் மாலிக் என்ற பதினெட்டு வயதான ஒரு குடிசைவாழ் வாலிபன் ஒரே இரவில் எவ்வாறு கோடீஸ்வரன் ஆகிறான் என்பதைக் கூறுகிற கதை. இந்த அதியற்புதத்துக்குச் சிறிதும் குறைவற்ற முக்கியத்துவத்துடன், காதல் டூயட், கடிதம், அலைக்கழிவுகள் இன்றி வறுமையின் வசதியீனங்கள் காரணமாய் ஒரு சிறுவனுக்கும் ஒரு சிறுமிக்கும் இடையே வளரும் அன்பு எவ்வாறு காதலாய் மலர்கிறது என்பதும் கூறப்படுகிறது.

சாதாரண சினிமா ரசிகனுக்கு இந்தக் காதல் கண்டுகொள்ளப்பட முடியாததாகவே இருக்கும். பணம், ஜாதி, மதம் போன்ற எல்லைகளுக்குள் வாழும் தீவிர ரசிகர்களால் இக்காதல் கண்டுகொள்ளப்பட்டாலும், ஒத்துக்கொள்ளப்படக் கூடியதாய் நிச்சயமாய் இருக்காது. ஏனெனில் ஒரு காதலுறவில், அல்லது மணவுறவில் எவையெவை அவசியமாகவும் புனிதமானவையாகவும் அவர்களால் கொண்டிருக்கப்படுகிறதோ அத்தனை அம்சங்களையும் அந்தப் பெண் இழந்தவளாகவே கதாபாத்திரம் ஆக்கப்பட்டிருப்பாள். அவனும் அவற்றை அறிந்தவனாகவே இருப்பதும், அந்நிலையிலேயே காதலை மலர வைப்பதும் அபூர்வமான விடயங்கள். இவற்றை ‘ஸ்லம்டோக் மில்லியனெர்’ கூச்சமில்லாமல் காட்டுகிறது. அதன் வல்லாண்மையின் உச்சம் இதுதான்.

ஆனாலும் இது ஒரு நவீன தேவதைக் கதையாகவும் அதே சமயத்தில் விளங்குகிறது. தேநீர்க் கடையில் வேலைசெய்யும் ஜமால் மாலிக், கோடிக்கணக்கில் பரிசு கிடைக்கும் ‘நீங்களும் ஏன் கோடீஸ்வர் ஆகக்கூடாது?’ என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துகொள்கிறான். நிகழ்ச்சி நடத்துநரின் பொறாமையைத் தூண்டும்விதமாக நிகழ்ச்சி மாறிப்போவதும், அவர் கொள்ளும் பொறாமை சூழ்ச்சியாக மாறுவதும், அதையும் ஜமால் வென்று ஒற்றை இரவில், சரியாக இரண்டு இரவுகளில், கோடீஸ்வரன் ஆவதும் உண்மையில் தேவதைக்கதைக்கு நிகரானதுதான். தேவதைக்கதை, காதல் கதை, பம்பாய் விவரணம் என இச் சினிமாவில் பலபடைகள். ஆண்மைக்காலத்தில் ஒரு நிகரற்ற சினிமாவாக இதை ஆக்கியிருப்பது இத்தனையும்தான். அதனால்தான் எண்பத்தோராவது ஒஸ்கார் விழாவில் சிறந்த சினிமாவுக்கான விருது உட்பட எட்டு விருதுகளை இது சுவீகரித்துக்கொண்டு போயிருக்கிறது. இசையமைப்புக்கும், பாடலுக்குமாக இரண்டு விருதுகளை ஏ.ஆர்.ரகுமானுக்குப் பெற்றுத்தந்து இருப்பதும் இந்தச் சினிமாதான்.

இப்படியான ஒரு சிறந்த சினிமா டானி பொய்லினால் எப்படி முடிந்திருக்கும்? கொஞ்சம் யோசித்துப் பார்ப்போமா? சைமன் வோபோயின் (Simon Beaufoy) மிகச் சிறந்த ஒரு சினிமாப் பிரதியோடு இவர் சினிமா எடுக்கப் புறப்பட்டதே இதன் முதன்மைக் காரணமாக இருக்கமுடியுமா? அப்படித்தான் எனக்குத் தெரிகிறது. ஏனெனில் எந்தச் சிறந்த சினிமாவுமே தன் பாதி வெற்றிக்கு தன் பிரதியையே காரணமாகக் கொண்டிருக்கிறது. ‘ஸ்லம்டோக் மில்லியனெர்’ சினிமாவின் பிரதியாக்ககாரர் சைமன்போய், ஏற்கனவே கோல்டன் குளோப் போன்ற பல சினிமா விருதுகள் பெற்றவர். அதுபோலவே இதன் இயக்குநர் டானி பொய்லும் பல சிறந்த சினிமா விருதுகள் பெற்றவர். குறைந்த பட்ஜெட்டில் மிகச் சிறந்த சினிமாக்களைத் தந்தவர் இவர். Shallow Grave (1994)Train Spotting (1996 A Life Less Ordinary (1997) The Beech(2000)28 Days Later (2002) போன்ற புகழ்பெற்ற சினிமாக்களை ஆக்கியவர் இவர். அதிகமான இப்படங்கள் சிறந்த நாவல்களை மையமாக வைத்து எழுதப்பட்டவை. அதுபோல் ‘ஸ்லம்டோக் மில்லியனெ’ரும் விகாஸ் ஸ்வாரப்பின் ‘A&Q’ என்ற நாவலை முன்வைத்து எழுதப்பெற்ற சினிமாவே.

ஏ.ஆர். ரகுமானுக்கு இரட்டைப் பரிசு கிடைத்தது சந்தோ~ம். இந்தியாவுக்கு முதன்முதலில் ஒஸ்கார் பரிசு கிடைத்தது… ம்…அதுவும் சந்தோ~ம்தான். ஆனால் ஒரு கேள்வி.

இயக்குநர் டானி பொய்ல், ஒரு பிரிட்டி~;காரர். ஐரிஸிலிருந்து புலம்பெயர்ந்து வந்து லண்டனில் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர். அதுபோல் இச்சினிமாப் பிரதியை ஆக்கியவர் சைமன் வோபோய். அவரும் பிரிட்டி~;காரர். அப்படியானால் இந்தியப் படத்துக்கு ஒஸ்கார் பரிசென்று பெரிய தடல்புடலாய் இருக்கிறதே அங்கே, அதன் அர்த்தம் என்ன?

(தாய்வீடு, பங்குனி 2009)

0000
No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...