ஒரு முதுபெண் உரைத்த வாழ்வுபற்றிய பாடம்
ஒரு முதுபெண் உரைத்த வாழ்வுபற்றிய பாடம் வாழ்வின் சஞ்சரிப்பு எல்லைகள் விசாலித்துக்கொண்டே இருக்கின்றன. புவிசார் அறிவுப் புல வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சிகளை இதன் காரணங்களாகக் கொள்ளலாம். வண்டி மாட்டுப் பயணத்திலிருந்து கார், பஸ் பயணங்களாகியமை இதன் ஒரு வெளிப்பாடு. பின்னால் ரயில், விமானப் பயணங்களாக அவை மாற்றங்களைக் கண்டன. சரீரார்த்தமான இச் சஞ்சரிப்புகளும் மாறி, இருந்த இடத்திலிருந்தே பொறிகள் நினைத்த இடமெல்லாம் சஞ்சரித்து வரும் மிகு தொழில்நுட்ப வளர்ச்சிக் காலகட்டத்தை இன்று நாம் வந்தடைந்திருக்கிறோம். பத்தாயிரம் மைல் தொலைவிலுள்ளவருடன் முகம் பார்த்துப் பேச சுலபமாக இன்று முடிந்துவிடுகிறது. இவ் அகலுலகச் சஞ்சரிப்பில் எதிர்ப்படும் சம்பவங்கள் கணக்கற்றவை. ஆயினும் வாழ்வின் ஆரம்பம் முதல், கனதிபெற்று அகல மறுத்ததாய் மனத்தில் உறைந்துபோக சில சம்பவங்களேனும் இருக்கவே செய்கின்றன. இவ்வாறு நினைவினடுக்கில் படைபடையாய் நிறைந்து கிடக்கும் சம்பவங்கள் ஒரு கோடி இருக்குமோ? இருக்கலாம். சம்பவங்கள் நடந்த கணத்தோடு முடிந்து போபவைதாம். ஆனாலும் நினைவுக் குழிக்குள் போய்விடுகிற சம்பவங்கள் தம்முள் மீட்கப்பட்டுக்கொண்ட...