ஒரு முதுபெண் உரைத்த வாழ்வுபற்றிய பாடம்

ஒரு முதுபெண் உரைத்த  வாழ்வுபற்றிய பாடம்



வாழ்வின் சஞ்சரிப்பு எல்லைகள் விசாலித்துக்கொண்டே இருக்கின்றன. புவிசார் அறிவுப் புல வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சிகளை இதன் காரணங்களாகக் கொள்ளலாம். வண்டி மாட்டுப் பயணத்திலிருந்து கார், பஸ் பயணங்களாகியமை இதன் ஒரு வெளிப்பாடு. பின்னால் ரயில், விமானப் பயணங்களாக அவை மாற்றங்களைக் கண்டன. சரீரார்த்தமான இச் சஞ்சரிப்புகளும் மாறி, இருந்த இடத்திலிருந்தே பொறிகள் நினைத்த இடமெல்லாம் சஞ்சரித்து வரும் மிகு தொழில்நுட்ப வளர்ச்சிக் காலகட்டத்தை இன்று நாம் வந்தடைந்திருக்கிறோம். பத்தாயிரம் மைல் தொலைவிலுள்ளவருடன் முகம் பார்த்துப் பேச சுலபமாக இன்று முடிந்துவிடுகிறது.
இவ் அகலுலகச் சஞ்சரிப்பில் எதிர்ப்படும் சம்பவங்கள் கணக்கற்றவை. ஆயினும் வாழ்வின் ஆரம்பம் முதல், கனதிபெற்று அகல மறுத்ததாய் மனத்தில் உறைந்துபோக சில சம்பவங்களேனும் இருக்கவே செய்கின்றன. இவ்வாறு நினைவினடுக்கில் படைபடையாய் நிறைந்து கிடக்கும் சம்பவங்கள் ஒரு கோடி இருக்குமோ? இருக்கலாம்.

சம்பவங்கள் நடந்த கணத்தோடு முடிந்து போபவைதாம். ஆனாலும் நினைவுக் குழிக்குள் போய்விடுகிற சம்பவங்கள் தம்முள் மீட்கப்பட்டுக்கொண்டே கிடக்கின்றன. அவை உயிர்த்துக்கொண்டிருக்கின்றன. உயிர்ப்போடிருப்பது மட்டுமில்லை, அவை அசையவும் செய்கின்றன. தம் அடிப் படுகையிலிருந்து நுளுந்தி நுளுந்தி தம் வலுவுக்குத் தக அவை மேலே மேலேயாய் வந்துகொண்டேயிருக்கின்றன.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றவராக இருக்க முடியும். தான் பிறந்த நாட்டின் குடியுரிமையை நீங்கி வேறொரு நாட்டின் குடியுரிமையைப் புதிதாய் அடைந்திருக்க முடியும். ஆனாலும் அவரே தான் பிறந்து, வளர்ந்து, கணிசமான ஒரு காலம்வரை வாழ்ந்த மண்ணின் தொடர்பை அத்தனை சுலபத்தில் மாற்றிக்கொண்டுவிட முடியாது. அவரது வாழ்வு அந்த மண்ணிலிருந்தே நினைவுச் சுழிப்புகள்மூலம் தன் ஆதாரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறது.

எத்தனை அடுக்குகள் தன் மேல் அடுக்குப்பட்டுக்கொண்டு போனாலும், நினைவுப் படுகையில் கிடக்கும் ஒரு சம்பவம் வாழ்வுக்கு ஆதாரமாகும் அர்த்தத்தை என்றும் இழந்து போவதில்லை. என்றோ ஒரு தருணத்தில் நிலம் கிழித்துக் கிளரும் புல்போல் தன்னின் இருப்புக்காட்டி மேலெழும்பவே செய்கின்றது.

கழிந்தன எத்தனை ஆண்டுகள்! படர்ந்தவை எத்தனை நாடுகள்! இருந்தும் ஏன் இன்னும்தான் இந்த அமைதியின்மை? ஏன் இந்த வாழ்வில் இத்தனை அவசரம்? இன்னும்தான் ஏன் வாழ்க்கையின் இத்தனை நோவு நொம்பலங்கள்? வாழ்க்கையை விற்று சுகங்கள் வாங்கியதின் அபலங்கள்தானா இவை?

கேள்விகள் என்னுள்ளாய்க் கிளரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வப்போது வந்து யோசனைகளில் குறுக்கிடுகின்றன. விடை இலகுவில் கிடைத்துவிடக்கூடிய கேள்விகள் இல்லையெனினும் மனம் ஓர் அசுர முயற்சியில் இவற்றுக்கான விடைக்காய் உந்திக்கொண்டே இருக்கிறது.

அப்படியான ஒரு நாளில் என் ஞாபக அடுக்குகளிலிருந்;து மேலே நுளுந்தி வந்த சம்பவமொன்று முக்கியமானது. என் உந்துதலின் விசை சட்டென அறுந்தது. தொடர்ந்து பத்தாய், நூறாய் ஞாபக அலைகள். அத் திரை விரிப்பில் தன் சிரித்த முகம் காட்டி வெளிவந்தாள் கடலையாச்சி.

திடுக்காட்டத்தோடுதான் அந்த நினைவை என்னால் அசைபோட முடிந்தது. என் ஆறு அல்லது ஏழு வயதிலிருந்து தொடர்ந்தேர்ச்சியாக ஓரிரு வரு~ங்களில் மட்டுமே நான் கண்டிருந்த அந்த முதுபெண், இத்தனை காலம் என் நினைவடுக்கில் இருந்ததையே நான் தெரிந்திருக்கவில்லை. அவள் என் நினைவடுக்கில் போக எந்த முகாந்திரமும்தான் இல்லை. ஒரு கடலைக்காரியின் நடையும், இருப்பும், அசைவும், சிரிப்பும் ஒரு தேச சஞ்சாரியின் நினைவடுக்கில் இத்தனை காலமாய் இருந்திருப்பது சாத்தியமா என்ற கேள்விகூட என்னுள் விடைத்தெழுந்து நின்றது.
அவள் பெயர் அரசம்மா என்பதாக ஒரு ஞாபகம். எங்கள் பள்ளிக்கூட வாசலிலிருந்து கடலை விற்றுக்கொண்டிருந்த ஒரு கடலைக்காரியாகத்தான் அவளை நான் முதன்முதலில் பார்த்தேன். அதற்குப் பிறகும் அதற்குமேல் அவள் இல்லைத்தான்.

எங்கள் பள்ளிக்கூட வளவு ஒரு தலைகீழ் முக்கோண வடிவில் இருந்திருந்தது. அதன் முன்முனையில் ஒரு நெடுந்தெரு. மாட்டுவண்டிகளும், சைக்கிள்களும், எப்போதாவது இருந்துவிட்டு ஓரிரு லொறிகளும் ஓடும் அதில். கடசார்க் கற்கள் பாவியிருந்தன. முன்முனையிலிருந்து வலதுகைக் கோணத்தை ஒட்டியதாக ஒரு வாய்க்கால். அதில் மாரி வெள்ளம் அடித்தோடும் வேளை, அதைத்தான் நான் ஆறு என நினைத்திருந்தேன் அந்தக் காலத்தில். இடதுகைக் கோணமாக ஒரு மண் தெரு. மண்தெருப் பக்கமாக பள்ளிக்கூட வாசல்.

வாசலில் ஒரு பாலைமரம் இருந்தது. தினமும் அந்த இடத்தில்தான் எனது தந்தை என்னை சைக்கிளில் ஏற்றி வந்து இறக்கிவிடுவதும், மறுபடி ஏற்றிச் செல்வதும்.
பாலை மரம் பெரிதாக என்ன நிழலைச் செய்துவிடும்? அந்த நிழல் தரா உயர் பாலை மரத்தின் கீழ் கடலை விற்றுக்கொண்டிருப்பாள் அரசம்மா. கொளுத்தும் வெய்யிலுக்கு தலையில் முக்காடு போட்டுக்கொண்டு விரித்த சாக்கில் கால்நீட்டி அமர்ந்தபடி ஒரு வட்டச் சுளகு, சிறிய ஓலைக் கடகம், சில கடதாசிகள் மட்டுமுடனாக வியாபாரத்தை நடத்திக்கொண்டிருப்பாள்.

சின்ன லீசர் எனப்படும் பத்தரை மணி இடைவேளையிலிருந்து அவளை அந்த இடத்தில் பார்க்கமுடியும். மத்தியான இடைவேளைக்கு தும்பு முட்டாசுக்;காரன், பம்பாய் மிட்டாய் விற்பவன், கொய்யாப்பழம் பச்சை மாங்காய்க் கீறுகள் விற்பவள் என்று வேறுசிலரையும் பார்க்கமுடியும்தான். ஆனாலும், யார் வந்தாலும் வராவிட்டாலும் திங்கள் முதல் வெள்ளிவரை காலை பத்தரை மணியிலிருந்து மதியம் இரண்டு மணிவரை அரசம்மாவை அந்த இடத்தில் பார்க்கத் தவறமுடியாது.

மேசன் வேலையில் நிறைந்த சுயாதீனம் இருந்தது. அதனால் காலையில் வேலைக்குச் செல்லுகையில் கொண்டுவந்து விட்டுச் செல்லும் தந்தைக்கு, பள்ளி முடிந்ததும் வந்து என்னைக் கூட்டிப்போய் மறுபடி வீட்டில்விட வசதியிருந்தது. நான் முதலாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் அரிவரி வகுப்புக்கு பன்னிரண்டு மணியோடு பள்ளி முடியும். முதலாம் வகுப்பிலிருந்து அய்ந்தாம் வகுப்புவரை அது ஒன்றரை மணியாகவிருந்தது. எட்டாம் வகுப்புவரை மட்டுமேயிருந்த எமது பள்ளிக்கூடம் மாலை மூன்றே முக்காலுக்கு முடிந்தது.

ஒன்றரை மணிக்கு எனக்கு பள்ளி முடிகிறபோது அதிகமாக எனது தந்தை சைக்கிளோடு பள்ளி வாசலில் நின்றுகொண்டிருப்பார். சிலவேளைகளில் பள்ளி முடிந்து நான் வெளியே வருகிறவேளை வேகமாக சைக்கிளை உழக்கிக்கொண்டு வந்து சேர்வார். சிலவேளைகளில்தான் தாமதமாவது. நான் அந்த நேரங்களில் அவதிப்பட்டுப்போவேன். பிள்ளை பிடிக்கிற காப்பிலிகள் ஊரிலே அங்கங்கு அலைவதாகப் பேச்சிருந்த அந்தநாளில், ஒரு காப்பிலியைக் கண்ணாலே கண்டிராதபோதும்தான், காப்பிலியை எண்ணி நான் அதீத பயங்கொண்டிருந்தேன். பேயையே கண்டிராதபோதும் பேய்ப் பயம் கொண்டிருப்பதுபோல அது.
அந்த சிலவேளைகளின் தாமதத்தில் எழும் எனது அச்சங்களைத் தவிர்ப்பதற்காகவே, கடலையாச்சியிடம் என்னைப் பார்த்துக்கொள்ள தந்தை சொல்லிவைத்திருந்தார். தினமும் அதிலே இருக்கிற ஒரு பெண் என்றில்லாமல், அவர்களுக்கு குடும்பரீதியாகவே அறிமுகமிருந்ததை அவர்களது பேச்சில் நான் அறியமுடிந்திருந்தது. அதனால் தந்தை என்னைக் கூட்டிச்செல்லத் தாமதமாகும் நாட்களில் கடலையாச்சி என்னை அழைத்து பக்கத்தில் இருக்க வைத்துக்கொள்வாள்.

அவளிடம் ஒரு அடுக்குப் பெட்டியிருந்தது. அதன் மேல் தட்டில் பிஞ்சுப் பாக்கு, நாறல் பாக்கு, பச்சையம் இன்னும் அழியாத சில வெற்றிலைக் கீறுகள், சிறிய சுண்ணாம்புப் போத்தலொன்று இத்தியாதிகள். கீழ் அடுக்குகளில்தான் அவள் காசு போட்டு வைப்பாள். ஒரு அடுக்கில் அரைச் சதம், இன்னொன்றில் ஒரு சதம், மற்ற அடுக்கில் இரண்டு சதம், கடைசியாக ஐந்து சதம். ஐந்து சத கையாளலுக்குமேல் அவளது வியாபரம் இருப்பதில்லை. பத்துச் சதம் பெரிய காசு. எந்தப் பள்ளிக்கூடப் பிள்ளையும் பத்துச் சதத்தைக் கொண்டு கடலை வாங்க வந்துவிட முடியாது.

அருகிலிருக்கும்போது அவள் வியாபாரம் செய்யும் முறையையும், அவளது ஆகிருதியையும் நான் ஆவலாதியோடு கண்டுகளித்திருக்கிறேன்.

அவள் ஒரு சின்ன மனிதி. இன்று நினைத்துப் பார்க்கிறபோது அவள் நாலடிக்கு மேல் இருந்திருக்க முடியாதென்றே தெரிகிறது. உருவமும் சிறிய வார்ப்புத்தான். அவள் குறுக்குக் கட்டு கட்டியிருப்பாள், ஊரிலுள்ள அநேகமான ஆச்சிகளையும்போலவே. அவளது தோல் மெல்லிய சுருக்கங்கள் கண்டிருந்தது. தலைமயிர் நரையிழைகள் பறந்துகொண்டிருந்தாலும், கருமையாகத்தான் இருந்ததாகவே இப்போது நினைவில் படர்கிறது. அவள் கால்நீட்டி சிறிது முன்வளைந்து இருப்பது பார்க்க நன்றாக இருக்கும். எவரையும் அணுகத் தயாராய் இருப்பதான ஸ்திதி அது.

சொல்லப்போனால் அந்த உருவத்தில் நான் அருவருப்பே அடைந்திருக்கவேண்டும். ‘எல்லாத்திலையும் நுணுக்கம் பார்த்துக்கொண்டிரு’ என்று அம்மாவிடம் திட்டுவாங்குகிற எனக்கு, அந்த உணர்வுதான் இயல்பானது. ஆனாலும் அதை நான் அடைந்துவிடாதபடி அவளிடமிருந்த ஏதோவொன்று செய்துகொண்டிருந்தது. அவளது எந்தநேரமும் சிரிப்பதுபோல் தோன்றிக்கொண்டிருக்கும் முகமா, அல்லது அரைச் சதமும் இல்லாமல் வந்து சுளகில் கொட்டிவைத்திருக்கும் கச்சான், சோழம், கொண்டல் இவைகளின் சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறக் கும்பங்களைப் பார்த்து ஏங்கிநிற்கும் சிறுவர்களைக் கண்டு அவ்வப்போது கொஞ்ச சோழன் பொரிகளை எடுத்துக் கொடுக்கும் அந்தக் கருணையா, அல்லது ‘நாளைக்குத் தாறன், ஆச்சி. ஒருசாத்துக்கு கடலை தா’ என்று வரும் சிறுவர்களைக்கூட நோகாமல் ‘போ, நாளைக்கு ஒருசாத்தைக் கொண்டுவா, தாறன்’ என்கையில் கோபம் வெறுப்பு அலுப்பு என எதுவுமே தோன்றாதிருக்கும் குரலிலா என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. இவை எல்லாமேதான் அதற்குக் காரணமாக இருந்திருக்குமென்று இப்போது தோன்றுகிறது.

ஒருநாளில் சராசரியாக அவளுக்கு இருபத்தைந்து சதத்துக்கு வியாபாரம் நடக்கக்கூடும். மிக அதிகமாக ஏதாவது விசே~மான நாளில் அரை ரூபாவுக்கு நடக்கலாம். இருந்தும் அவ்வளவு நிறைவோடு தன் அந்திமகாலத்தை அப்படிச் சிரித்துக்கொண்டே கழிக்க அவளால் எப்படி முடிந்தது? நோயென்று ஒருநாள் அவள் பாயிலே படுத்திருப்பாளாவென்று எனக்குச் சந்தேகம். இயங்குகையிலும் தண்டுதரமாய்த்தான் நடந்து திரிந்திருக்கிறாள். இவையெல்லாம் எந்த மூலத்திலிருந்து சுழிப்பெடுத்தன?

அவள் அறிந்த உலகம் கிழமைக்கு ஒருமுறை சந்தையென்றும், எப்போதாவது கோயிலென்றும், திங்கள் முதல் வெள்ளிவரை பள்ளிக்ககூட வாசலென்றும் மட்டுமே இருந்திருக்க முடியும். நாடுகள் கண்டு, நாட்டுக் குடியுரிமைகள் மாறி நவீன தொழில் நுட்பம் தந்திருக்கும் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கும் எனக்கு அவளது சிரிப்பு, கருணை, நிறைவுகள் ஏன் எட்டாது போயின? எண்பது வயதில் அரசம்மா செத்துப்போனதாக அம்மா அப்போது பேசிக்கொண்டாள். அந்த வயதுவரை அவள் கொண்டிருந்த தண்டுதரம் என்ன, அவள் வயதினை எட்ட இன்னும் சில சகாப்தங்களைக் கடக்க வேண்டியிருக்கும் நான் ரத்தக் கொதிப்பு என்றும், சர்க்கரை வியாதியென்றும் அலைந்துகொண்டிருக்கும் மர்மம் என்ன?
அவள் சோர்ந்திருந்து நான் கண்டதில்லை. சிரிப்பற்ற அவள் முகத்தை நான் கற்பனைகூடச் செய்ய முடியாது. அவள் தன் காதின் பொன்னிலோ வெள்ளியிலோ பொதிந்த சிவப்புக் கல்லுத் தோட்டினை எந்த நாளும் விளக்கித்தான் அணிவாளோ? எந்நேரமும் ஜொலித்துக்கொண்டேயிருக்கும் கல்லுகள் அவை. அவைபோலவேதான் எந்நாளும் சிரிக்கும் முகமுடையவளாய் இருந்தாள் அவள். அந்தச் சிரிப்பை நான் இன்று ஏக்கத்தோடு நினைத்துக்கொண்டிருக்கிறேன். நான் காணமட்டும் செய்து, அனுபவித்திராத சிரிப்பாக இருந்தது அது.

பள்ளி வாசலின் பாலை மரத்தையே ஒரு போதி மரமாகக்கொண்டு, புத்தனாயோ சித்தனாயோ இல்லாமல் சம்சாரியாக இருந்துகொண்டே எனக்கு ஞானபோதம் செய்துவிட்டுப் போயிருக்கிறாள் அரசம்மா. ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றிருக்கிறான் புத்தன். ‘ஒருவன் எந்த ஆசையிலிருந்து விடுபடுகிறானோ அவன் அதிலிருந்து அடையக்கூடிய துன்பங்களிலிருந்தும் நீங்குகிறான்’ என்கிறது திருக்குறள்.
எல்லாம் படித்ததுதான். என்ன பிரயோசனம்? யோசிக்க வைக்கவில்லையே. ஆனால் கடலையாச்சி தன் நிறைவினதும் சிரிப்பினதும் அர்த்தத்தை நினைவிலிருந்து கிளம்பியெழுந்து வந்து சொன்ன பிறகுதான் உணர முடிந்திருக்கிறது என்னால்.

அவசரமான இந்த உலகத்தில் நாம் அவதியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தேவைகளுடனன்றி ஆசைகளுடன் வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம். நாம் மயங்கத் தயாரென்று பச்சைக்கொடி காட்டியாகி விட்டது. இந்த மயக்கத்தின் பலஹீனத்திலிருந்தே அரசியல், பொருளாதார, சமூக, இலக்கியக் கொள்கை சித்தாந்தங்கள் எல்லாம் பிறப்பெடுத்திருக்கின்றன.

நம் வாழ்வின் அழுத்தங்கள் மையங்கொண்டிருக்கின்ற இடம் இதுதான்.

( நாளை – மே )

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்