Sunday, May 09, 2010

கலாபன் கதை: 11
இருந்தால் மனைவி!
போனால் பரத்தை!
1985இல் வீடு திரும்பிய கலாபன் மறுபடி கப்பலெடுப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. ஒரு புதிய கார் வாங்கி, அதை யாழ்ப்பாணம் முழுக்க முழுவேகத்தில் ஓடித்திரிந்து, ஒருமுறை பருத்தித்;துறை செல்லும் வழியில் ஒரு மினிவானுடன் விபத்துக்குள்ளாகி, இரண்டு மாதங்களாக கராஜ்ஜுக்கு அலைந்து திருத்தியெடுத்து, அடுத்த ஆறாவது மாதம் வந்த விலைக்கு அதை விற்று என்று பல சீரழிவுகளையும் அனுபவித்த பின்னர்தான் அதுவும் முடிந்திருந்தது.

கலாபன் எங்கோ அடிபட்டிருந்தான் என்பதை சிலகாலமாகவே நான் புரிந்துகொண்;டிருந்தேன். மெல்லவோ விழுங்கவோ முடியாத ஓர் மனவலியின் விளைவே அந்த அவனது வரம்புமீறிய குடியென்று ஊகிக்க பெரிய அனுபவமொன்றும் வேண்டியிருக்கவில்லை. ஆனாலும் வெளிப்படப் பேசி அவனை ஆறுதல்படுத்த அந்த ஊகத்தில் தெரிந்த காரணம்மட்டும் போதுமாயிருக்கவில்லை.

மனமென்பதுதான் என்ன? உடலின் எந்தவிதமான உறுப்பாக இல்லாதும், உணர்வுகளின் ஊற்றாய் முழு மனித வாழ்வியக்கத்துக்குக் காரணமாயுமிருக்கிற ஒரு புள்ளிதானே! அது பலருக்கு நீராலானதாய் அமைந்திருப்பது விந்தைகளின் உச்சம். நீர் சிறிய காற்றினலைவுக்கும் சலனமாகிவிடுகிறது. மனிதனும்தான் அப்படி. சின்னச் சின்னக் கோபங்கள், சின்னச் சின்ன ஐமிச்சங்கள், சின்னச் சின்ன அடிபிடிகள், சின்னச் சின்னச் சண்டைகள், சின்னச் சின்னக் கொலைகள்…அந்த அசைவியக்கத்தின் விளைச்சல் ஆகுபவை. கலாபனின் மனம் எவ்வாறு சலனப்பட்டது? காட்சியினாலுமல்ல. வதந்திகளாலும்கூட அல்ல. வெறும் ஊகங்களைமட்டும் வைத்துக்கொண்டு நிம்மதியற்றவனாகி தன்னையே அழித்துக்கொண்டிருந்தான் அவன்.

கலாபன் கப்பலிலிருந்து வந்து ஊரிலே நின்றபோதுதான் எனக்குத் திருமணமானது. மனைவியை ஊரிலே விட்டுவிட்டு நான் மட்டும் வேலைக்காக திருகோணமலைக்குச் சென்று வந்துகொண்டிருந்தேன். அதனால் என் வடபகுதி வருகை மாதத்துக்கு இரண்டு மூன்று தடவைகள் தவறாமலே இருந்துகொண்டிருந்தது.

விபத்துக்குள்ளான பொழுதில் கலாபனின் காரில் நானும்தான் இருந்திருந்தேன். நல்லவேளையாக காயம் எதுவும் ஏற்படவில்லை. யாருக்குமே ஏற்படவில்லை. எனினும் கலாபன் குடித்துவிட்டு ஓடியிருப்பான், அதுதான் விபத்து நேர்ந்திருக்கிறது, அவன் தன்னையும் அழித்து என்னையும் அழித்துவிடுவானென்று வீட்டிலே அம்மாவும் கமலியும் ஒரே ஒப்பாரி. அதனால் சிறிதுகாலம் அவனைப் பார்த்தால் பேசுவதை மட்டும் வைத்துக்கொண்டு கூடியலைவதை நிறுத்தியிருந்தேன்.

இவ்வாறான நிலைமையில்தான் ஒருநாள் கலாபனின் மனைவி பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு தாய்வீடு போய்விட்டாள் என்ற செய்தி தெரியவந்தது. அவன் அடித்துத் துரத்தினானோ, அல்லது அவளேதான் இவனோடு வாழ்ந்ததுபோதுமென்று கோபித்துக்கொண்டு போனாளோ தெரியாது. குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு அழுதபடி அவள் சென்றதைக் கண்டதாக கமலி சொன்னாள்.

இரண்டு மூன்று மாதங்களாகியும் அவள் திரும்பிவரவில்லை. இவனும் போய்க் கூப்பிடவில்லை. ஒருநாள் சந்தித்தவேளை இவனைப் போய்க் கூட்டிவந்தாலென்ன என்று கேட்டுப்பார்த்தேன். போனவளுக்கு வாற பாதை தெரியும்தானேயென்று தட்டிக்கழித்துவிட்டான். பிள்ளைகளைக்கூட யோசிக்கவில்லை. கடைசியில் இவன்தான் போய்க் கூட்டிவந்தான். அவனது கடைக்குட்டி பிறந்தது அதற்கும் பிறகுதான்.
கலாபன் இனி கப்பலே எடுக்கமாட்டான் என்றுதான் அக்கம்பக்கத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அம்மாகூட சொன்னாள், காசுமில்லை, இப்பிடி நிறைகுடிகாறனாயும் திரிஞ்சுகொண்டிருக்கிறான், இவனெங்கை இனி கப்பலெடுக்கிறதென்று. தண்ணியிலை உழைச்ச காசு, தண்ணியிலைதான் போகும் என்று ஊரிலே சொல்வார்கள். அதற்கு கலாபன் அச்சொட்டான எடுத்துக்காட்டாயிருந்தான்.

ஆனால் திடீரென்று ஒருநாள் கொழும்பு போவதாகச் சொல்லிக்கொண்டு சென்றுவிட்டானாம் கலாபன். ஊர் வந்தபோது கமலி சொன்னாள். நல்லதுதான், ஆனாலும் விரைவில் ஏதாவது கப்பலில் ஏறவேண்டுமே என்று நான் நினைத்துக்கொண்டேன்.
ஒரு மாதமாகவில்லை, எனது திருகோணமலை முகவரிக்கு கலாபனிடமிருந்து கடிதம் வந்தது.

கலாபன் கப்பலேறிவிட்டான்.

000

மூன்றாவது கப்பல் பொறியாளனாகவே சேர முடிந்திருப்பினும், சம்பளமொன்றும் முந்திய கப்பல் கொம்பனியினதுபோல் இருக்கவில்லை. எம்.வி.இப்கோ-1 என்ற அந்தக் கப்பல் தென்னாசியாவிலும், தூர கிழக்கிலும், அராபியக் கடலிலும், பர்ஸிய வளைகுடாவிலுமாக மாறிமாறி அலைந்துகொண்டிருந்தது.

செலவுசெய்ய நிறைய பணமும் இருக்கவில்லை, செலவழிக்கக்கூடிய இடங்களுக்கு கப்பலும் செல்லவில்லை.

கலாபன் கப்பலில் சேர்ந்து ஆறு மாதங்களாகியிருந்தன. துபாயென்றும் கராச்சியென்றும் சவூதி அரேபியாவென்றும் குஜராத் மாநிலத்தின் கண்டிலா என்றுமாய் ஒரே வெப்ப வலயப் பிரதேசங்களில் கப்பல் பயணமாகிக்கொண்டிருந்ததில், உடம்புகள் கொதியேறியிருந்தன. காமம் ஒரு சுமைபோல அமுக்கிக்கொண்டிருந்தது ஒவ்வொருவர் பேச்சிலும் மூச்சிலும் தெரிந்தது.

ஓர் ஆனி மாதத்தில் சவூதிஅரேபியாவின் றியாட் துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்;டபோது தூரகிழக்குக்கு, அனேகமாக சிங்கப்பூருக்கு, என்றுதான் எல்லோரும் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யாருக்கும் அந்தப் பயணம் பிடித்திருக்கவில்லை.
தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று கப்பலை ஊதிப் பறக்கவைத்துவிடும்போல் இருந்தது. திடீரென தெரியவந்தது கப்பல் தாய்லாந்தின் பாங்கொக் துறைமுகத்துக்குச் செல்கிறதாக. ஐந்து மாதங்களுக்கு முன்னர் அதே கப்பல் பாங்கொக் சென்றிருந்தபோது, ஒரு கிழமையாக கப்பலில் மிதந்த சந்தோ~த்தின் சங்கீதம் அப்போதே கேட்கத் துவங்கிவிட்டது பலருக்கும். அத்தனைக்கு தாய்லாந்து அழகிய பெண்களின் வாசஸ்தலமாக இருந்தது.

சரீர சுகங்களுக்கு உலகத்துக்கே தலைநகராய் இருக்கக்கூடியது அது. ஆசியாவின் பாவத் தலைநகர் என்றும் அதற்கு ஒரு பெயர் இருக்கிறது. தாய்லாந்தே சரீர சுகங்களின் அபரிமிதத்தில் தன் வாழ்வனுபவங்களைக் காலகாலமாய்க் கொண்டிருந்த ஒரு நாடுதான். ஆனாலும் அதன் காம உழற்சி வியட்நாம் போரின் பின்னணியில் உருவானதுதான். வியட்நாம் போரில் நேரடியாகவே ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படைகளின் ஏழு தளங்கள் தாய்லாந்தில் இருந்திருக்கின்றன. படைத் தளங்களின் அருகில் அவர்களது சரீர தேவைகளுக்காக உருவாகிய இடம்தான் பாரங் என்னும் விலைமாதர் தரிப்பிடங்கள்.

1970 களில் அமெரிக்கப் படைகள் தாய்லாந்தை விட்டகன்றிருந்தாலும், விபச்சாரத் தொழில் அழியாது நிலைபெற்று இருந்தது மட்டுமில்லை, மேலும் மேலுமாய்ப் பெருகவே ஆரம்பித்துவிட்டது. தாய்லாந்து செல்வம் கொழிக்கும் நாடுதான். அங்கேதான் வறியவர்களும் அதிகமாக இருந்தார்கள். குறிப்பாக வடக்கு, வடகிழக்கு தாய்லாந்தில் வறுமையின் அழுங்குப் பிடி அதிகம். நுளம்புக்காக வீட்டைவிட்டு ஓடுபவர்கள் அந்தப் பகுதியிலே இருந்தார்கள்.

முடியின் அதிகாரத்தில் இருந்த தாய்லாந்து, எந்தெந்தத் துறைகளிலோ கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், அங்கே கட்டற்று இருந்தவை உணவு, மது, விபச்சாரம் ஆகியனதான். இவை அங்கே மலிவாகவும் பெருவாரியாகவும் இருந்தவளவுக்கு உலகின் வேறெந்த நாட்டிலுமே இருந்துவிட முடியாதென்று கலாபனே அதிசயப்பட்டிருக்கிறான்.

1960களிலிருந்து விபச்சாரம் சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டிருந்தபோதும், அது வாழ்வியல் நீரோட்டத்தில் கலந்து தடையின்றி ஓடிக்கொண்டே இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அங்கேதான் கலாபனுக்கு சென்ற தடைவையில் லேக் என்ற பெண் கிடைத்திருந்தாள். தாய் மொழியில் லேக் என்பதற்கு ‘சின்ன’ என்று அர்த்தமாகுமாம். அவள்தான் சொல்லியிருந்தாள். கப்பல் அந்தமான் கடலுக்குள்ளாகச் சென்று தாய்லாந்தின் ஓர் ஆற்றில் புகுந்து துறைமுகத்தைநோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், இளநீர் விற்பதற்காக வருவதுபோல் சிறிய படகில் இளநீர்க் குலைகள் சகிதமாக கப்பலைத் துரத்தியபடி வாடிக்கையாளர் பிடிக்கவந்த இரண்டு மூன்று பெண்களில் அந்த லேக் காணப்பட்டாள். இளநீரைச் சீவி அவனைநோக்கி நீட்டிய தினுசிலேயே கலாபனுக்கு அவள்மீது பிரியமாகிப்போனது. கப்பல் தாய்லாந்தைவிட்டு நீங்கும்வரை அவள் கலாபனுடன் அவனது அறையிலேயேதான் தங்கியிருந்தாள்.

சிறியதானாலும் அந்த நடுத்தரப் பழைய கப்பலின் எந்திர அறையில் எப்போதும் திருத்த வேலைகள் இருந்துகொண்டே இருந்தன. அது ஓரளவு சுகங்கள்பற்றிய நினைவுகளை கலாபன் மனத்தில் அறுக்கச் செய்துகொண்டிருந்தன. மறுபடி தாய்லாந்துப் பயணம் என்றதும் சுக நினைப்புகள் மனத்தில் சுரக்கத் தொடங்கிவிட்டன. ஆனாலும் முந்திய பயணத்தில் ஏறக்குறைய ஆறுநாட்கள் அதே அறையிலேயே தங்கியிருந்து அறையைச் சுத்தப்படுத்தி, அவனது ஊத்தை உடுப்புகளைத் தோய்த்து, அவற்றைக் காயவைத்து மடித்து, அவனது உணவினை எடுத்துவைத்து, அருகேயிருந்து சாப்பிட வைத்து, அவன் அதிகமாகக் குடித்து மயங்கிக் கிடந்த வேளைகளில் தாதியாய்ப் பராமரித்து, காதலையும் காமத்தையும் தாராளமாய் வழங்கியிருந்தும், அதுவரை பிரிவுகளை ஒரு வேதனையாய் உணரவைத்த எந்தப் பெண்ணும்போல் அவனது நினைவுகளில் தெறித்து ஆசைகளைக் கிளரவைக்காதிருந்த அந்தப் பெண் லேக் அப்போது நினைவுகளில் வரத் தொடங்கினாள்.

ஆனாலும் போனதடவை அவர்கள் சென்றது, தாய்லாந்தில் பாங்கொக்கிற்குத் தொலைவிலுள்ள தென்பகுதித் துறைமுகமொன்று. அதன் பேர்கூட அவனுக்கு ஞாபகமில்லை. இப்போதோ கப்பல் பாங்கொக்கிற்குச் செல்கிறது. பாங்கொக், தாய்லாந்தின் தலைநகர்த் துறைமுகம். முந்தியதைவிட அங்கே பார்க்கவும், ரசிக்கவும், அனுபவிக்கவும் நிறைய இருக்கின்றன. முந்திய தாய்ப் பெண்ணைவிட அழகான, இன்னும் சரசங்கள் தெரிந்த ஒரு பெண்ணை அவன் கண்டடையவும் கூடும். கலாபன் கட்டிலில் படுத்திருந்தபடி சுவரைத் திரும்பி ஒரு பார்வையெறிந்தான். சுவரில் பிளேபோய் ப்ளோ-அப் நிர்வாணப் பெண் இருட்டில் இச்சைதெறிக்க அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

வெகுநேரமாகியது அன்று கலாபனுக்குத் தூக்கம் பிடிக்க.

எதிர்பாராதவிதமாக தாய்லாந்து வளைகுடாவுள் கப்பல் புகுவதன் முன்னர் எந்திரக் கோளாறு ஏற்பட்டு, அலையாடும் கடலில் ஆடியபடியே நங்கூரமிட்டு நின்றிருந்து, திருத்த வேலைகள் முடித்து மறுபடி புறப்பட ஒருநாள் முடிந்துவிட்டது.

மொத்தமாக காலநிலை, எந்திரக் கோளாறுகளால் தாய்லாந்தை அடையவேண்டிய கப்பல் மூன்று நாட்கள் தாமதம்.

ஒரு மதிய உணவு வேளை முடிந்திருந்த தருணத்தில் கப்பல் பாங்கொக் துறைமுகத்தை அடைந்தது. அந்த நேரம் எந்திர அறைக்குப் பொறுப்பாக இருந்த கலாபன் மேலே வந்தபொழுது மாலை இரண்டரை மணி. 8-12 மணி நேர வேலை முடிந்திருந்த இந்தோனி~pய நண்பன் சுனாரின் அறையில் சிறிதுநேரம் சம்பா~ணையிலும், சிறிது மது அருந்துகையிலுமாகக் கழித்துவிட்டு, அவன் மேலே தனது அறைக்கு வந்தான்.
கப்பல்களில் பெண்களை அறைகளுள் அனுமதிக்க சில கப்ரின்கள் அனுமதிப்பதில்லை. அவன் வேலைசெய்த இரண்டு கப்பல்களில் அவ்வாறான தடை இருந்தது. அதே எம்.வி.இப்கோ-1 கப்பலிலும் அவ்வாறான தடை இருந்ததாக அவன் அறிந்திருக்கிறான். பெண்களை உள்ளே விடவில்லையென்றதும் வேலைசெய்ய வந்த துறைமுகத் தொழிலாளர்கள் சரக்கேற்றுவற்கு பெரிய இழுபறிசெய்தனர் என்றும், பின்னர் பெண்கள் உள்ளே அறைகளுக்குச் செல்லலாம் என கப்ரின் அனுமதி வழங்கியபின்தான் அவர்கள் வேலைசெய்யத் தொடங்கினார்களென்றும், முந்திய தடவை தாய்லாந்து வந்திருந்தவேளை ஒரு தாய்க்காரன் சொல்லி கலாபனுக்குச் சொல்லியிருக்கிறான்.

அவன் வந்தபோது அவனது அறைக்கு முன்னால் குந்தியிருந்தாள் ஒரு நடுத்தர வயது மாது. அவளருகே கப்பலைப் பராக்குப் பார்த்தபடி சிகரெட் புகைத்தவண்ணம் ஓர் இளம்பெண் நின்றிருந்தாள். கலாபனுக்கு காரணம் புரிந்தது. ஆனாலும் அவனுக்கு உடனடியான தேர்வில் ஆர்வம் இருக்கவில்லை. அதனால் அப்படியே சாப்பாட்டுக் கூடத்துக்குச் சென்றுவிட்டான். திரும்பிவந்த வேளை அவர்கள் இல்லை. யாருடனாவது போய் ஒட்டிக்கொள்ளட்டும். அவனுக்கு தேர்வு முக்கியம். அதுவும் பாங்கொக்கிலேயே தேர்வு இல்லாவிட்டால் எப்படி?
குளித்து வெளிக்கிட்டு தரைமட்டத் தளத்துக்கு அவன் வந்தபோது சரக்கு ஏற்றும் தொழிலாளர் சம்பந்தப்பட்ட முகவர்கள், ஓரிரு பொலிஸ்காரர், பிரைட் றைஸ், சூப் போன்ற உணவுவகை தயாரித்து விற்கும் வியாபாரிகள், சில பெண்கள் என ஒரு கூட்டமே நிறைந்திருந்தது வாசலில். துறைமுக மேடையில் ராக்சிகள் வருவதும் போவதுமாய் இருந்தன.

கலாபன் சிகரெட் எடுத்துப் புகைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான். அப்போது அக் கூட்டத்தில் நின்றிருந்த ஓராள் அவனிடம் வந்து மிகவும் தண்மையாக அவனுக்கு மசாஜ் செய்துகொள்ள விருப்பமாய் இருக்கிறதா என்று கேட்டு தாய் மசாஜ்ஜின் பெருமைகளை மிக இயல்பான ஆங்கிலத்தில் சொல்ல ஆரம்பித்தான்.

கலாபன் கேள்வியில் அறிந்திருக்கிறான். தாய் மசாஜ் என்பது மற்றைய மசாஜ்களைவிட தனித்துவமானது. அது இந்திய ஆயுர்வேத மருத்துவ முறையை ஒட்டிய ஓர் உடல் உளைவுத் தளர்ச்சி முறை. எந்தவொரு உடல் தளர்ச்சியும், மனஇறுக்கமும் உடலின் சில பாகங்களில் ஏற்படும் சக்தித் தடைகளின் விளைவெனக் கருதியமை, அந்த மருத்துவ முறையின் விசே~ம். அதை நீக்கும் முறையை ஆங்கிலத்தில் யுஉர-pசநளளரசந ளவலடந என்று சொல்வார்கள். பாதம், குதி, முழங்கால், முழங்கை, கைகளாகிய அங்கங்களால் அந்தந்த இடங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி சக்தித் தடையை நீக்குவது தாய்லாந்துக்கான தனித்துவமான முறை.

கலாபனின் மெல்லிய போதை அந்த மசாஜ்ஜை செய்துபார்த்தால் என்ன என எண்ணவைத்தது.
அமுலிலிருந்த விபச்சார தடைச் சட்டம் காரணமாக, விலைமாதர் மசாஜ் செய்பவர், இளநீர் விற்பவர் போர்வையில் வருவர் என்று தெரிந்திருந்தாலும், அவன் அதற்குச் சம்மதித்தது உண்மையில் ஒரு தாய் மசாஜ்ஜை அனுபவிப்பதற்காகத்தான்.

அவன் சம்மதித்தாலும், அதற்கு அது நேரமல்லவென்றும், எட்டு மணிக்கு மேலே பார்க்கலாமென்றும் சொல்லிவிட்டான். அதற்கு அந்த தாய்மனிதன் இலங்கையில் கிராமியச் சிங்களப் பெண்கள் உடுத்தும் மாதிரியில் சாரம் கட்டி ஒரு சட்டையும் அணிந்திருந்த ஒரு பெண்ணைச் சுட்டிக்காட்டி, அவள் அவனது அறைக்கு வருவாள் எள்றுவிட்டுப் போய்விட்டான். அங்கிருந்தே அவன் ஜாடை காட்டிய மாதிரியில் நீ செல்ல வேண்டிய மனிதன் இவன்தான் என அவளுக்கு அவன் உணர்த்தியதை கலாபனால் தெரிய முடிந்திருந்தது.

கலாபன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். உயர்ந்து வளர்ந்திருந்தாள் அவள். தாய்க்காரரில் மாநிறமானவர்களும் உண்டு. லேக் அந்த நிறம்தான். ஆனால் அவள் வெண்மஞ்சளாக இருந்தாள். அவளது உடல்வாகே காமத்தின் அம்சங்களை இவைதானெனச் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனாலும் அந்த விநாடிவரை மசாஜ்பற்றிய விருப்பம்தவிர வேறு எதுவும் இயல்புக்கு மாறாகவே அவனிடம் விளைந்திருக்கவில்லை.

எட்டு மணிக்கு சுனார் வேலைக்குத் தயாராகி கீழே செல்லும்வரை அவனது அறையிலேயே இருந்து குடியும், கசெற் கேட்புகையுமாக நேரத்தைக் கடத்திய கலாபன் அறைக்கு வர, அவனையே எதிர்பார்த்துக்கொண்டு நின்றிருந்தவள்போல அந்த உயர்ந்த பெண் படிக்கட்டோரமிருந்து அவனைநோக்கி வந்தாள்.

அவன் உள்ளே கூட்டிச் சென்றான் அவளை. தாய் மசாஜ் என்பது தனித்துவமானது என்று அறிந்திருந்தவகையில் அந்த உயர்ந்த மேனியின் அழகிய கால் கை பகுதிகள் அவனது உடலெங்கும் பதியப்போகும் ஒருவித கிளுகிளுப்போடு உடையைக் களைந்துவிட்டு அவள் சுட்;டிக்காட்டியபடி கீழே படுத்தான் அவன்.

அவள் முதலில் தன் கைகளை சவர்க்காரம்போட்டுக் கழுவினாள். பின் அரை நிர்வாணம் ஆனாள். பிறகு தன் பையிலிருந்த போத்தல்களை எடுத்து, தன் கைநிறைய அவைகளைக் கலந்து அவனது மேனியெங்கும் பூசினாள். மேலே அவளது சிட்சை ஆரம்பித்தது. கால்களா அவை! அவை வாளிப்பில் செய்து இன்பத் தேன் தடவியவையாய் இருந்தன கலாபனுக்கு.
அவனது உடல் காலகாலமாய்த் தேக்கிவைத்திருந்த நோவு, இறுக்கம், பிடிப்பு எல்லாமே ஒவ்வொன்றாய்க் கழன்று ஓடிக்கொண்டிருந்தன. அது உண்மையிலேயே ஒரு சுகமான தருணம்தான். உடம்பு காற்றாகி மேலே மேலேயென எழும்புவதுபோன்ற உணர்கை. திடீரென அவளது கை ஓர் உயிர்நிலையத்தில் புரள ஆரம்பித்தது. திடுக்கிட்டு நிலைமையை உணர்ந்துகொண்டாலும் அந்தச் சுகத்தைத் தடுக்கும் சக்தியற்றுப் போனான் கலாபன்.
உயிர் உருகிக்கொண்டிருந்தது.

அப்போது தட..தடவென்று தட்டப்பட்டது கதவு. திடுக்கிட்டு பிரக்ஞைக்கு மீண்ட கலாபன், யாராயிருக்கலாமென்று ஓர் எரிச்சலோடேயே எண்ணிக்கொண்டு, துவாயை எடுத்துக் கட்டியபடி வந்து கதவைத் திறந்தான்.

ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்.

அடையாளம் காண்பதற்கே சிறிது நேரமாகிப்போனது அவனுக்கு. கலாபன் அதிர்ந்துபோனான்.
மிக அழகாக, மிக இயல்பாக, அவனைக் காணமுடிந்த ஆனந்தம் மிளிரச் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தது லேக். அவன் முந்தியமுறை தாய்லாந்து வந்திருந்தபோது ஆறு நாட்கள் அவனது மனைவி, தாசி, வேலைக்காரியென எல்லாமுமாக இருந்த அதே பெண்.
உள்ளை மறைப்பதுபோல் வாசலிலேயே கலாபன் நின்றுகொண்டிருந்தாலும், இடுக்களினூடாக உள்ளே ஒரு பெண் இருப்பதைக் கண்டுகொண்டாள் லேக். அவளது புன்சிரிப்பெல்லாம் மறைந்தன. தான் கைவிடப்பட்டு திக்கற்ற ஒரு வெளியில் நிற்பதான கலக்கம் சூழப்பெற்றாள். மெல்லமெல்ல அவளது கண்கள் சிவக்கத் தொடங்கின. உடம்பு பதறியது.

மறுகணம் அவனை மோதி விலக்கிக்கொண்டு உள்ளே பாய்ந்தாள் லேக்.

‘யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்?’ அலறினாள் அவள்.

தாய் மொழியானாலும், அவள் கொண்டிருந்த உணர்வுகளின்மூலம் அர்த்தத்தைப் புரிய முடிந்திருந்தது கலாபனால்.

லேக் பாய்ந்துவந்த மாதிரியில் திடுக்கிட்டுப்போனாள் அந்தப் பெண். ‘நீ யார்? நீயெல்லாம் இதைப்பற்றி ஏன் கேட்கவேண்டும்?’ என்று ஒரு போட்டி வியாபாரியாகக் கேட்கக்கூடிய கேள்விகளையே அவள் மறந்துபோனாள். பயமெழுந்திருந்தது. ஏதோ அவனது சொந்த மனைவி ஒரு தவறு நடக்கவிருந்த சமயத்தில் வீட்டில் நுழைந்துவிட்டதுபோல் அவள் ஆடிப்போய் விறுவிறென களைந்த ஆடைகளை அணிந்தவாறு நின்று, ‘நான்…நான் மசாஜ்செய்கிற பெண். கூப்பிட்டார், வந்தேன்’ என்றாள்.

‘மசாஜ்ஜா?’ ஏளனமாகச் சிரித்தாள் லேக். ‘இவனுக்கு வேண்டிய மசாஜ்ஜுக்கு நான் இருக்கிறேன். நீ போ வெளியே. இப்போதே. நில்! உனக்குச் சேரவேண்டியது இதுதானே? இந்தா’ என்றபடி, தன் கைப்பையைத் திறந்து ஐந்து டொலர் நோட்டொன்றை எடுத்து அவளது கையைப் பிடித்து திணித்தாள்.

ஐந்து அமெரிக்க டொலர் நோட்டு! கலாபன் திகைத்தான். அது லேக்கிடம் வந்தவாறை அவனால் யூகிக்க முடிந்தது. அவள் நேற்றோ, முன்தினமோ, அல்லது அன்றைக்கோகூட அந்தக் காசுக்காக ஒரு கப்பல்காரனிடம் தேகம் விற்றிருக்கமுடியும். ஆனாலும் அவனது அறையில் ஒரு பெண்ணைக் கண்டதில் என்ன உக்கிரம்! என்ன தார்மீகக் கோபம்! அவன் அவளுடன் உடலுறவுகொண்டால்கூட இவள் யார் அதைக் கேட்க? சொந்த மனைவியைப் போல என்ன பாத்தியதை? ஆனாலும் இவளில் ஒரு மெய்ம்மை இருக்கிறது. எண்ணி முடித்து கலாபன் நிமிர்ந்தபோது, மசாஜ் செய்வதாக வந்த பெண் அங்கே இல்லை.

கைப்பையை மேசைமேல் போட்டபின், அருகேயிருந்த அவனது பைக்கற்றிலிருந்து ஒரு சிகரெட்டை உருவியெடுத்து மூட்டியபடி குண்டிபொறுக்கச் சாய்ந்து நின்றபடி அவனைநோக்கித் திரும்பினாள் லேக்.

கலாபன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவள் களைத்திருந்தது தெரிந்தது. நீண்ட தூரம் பிரயாணம் செய்திருப்பவள்போல் தோன்றினாள். அவளது ஊர் வட தாய்லாந்தில் இருந்தது. ஒருவேளை அங்கேயிருந்துகூட வந்திருக்கலாம்.

அவளது கண்கள் கலங்கி வந்துகொண்டிருந்தன.

ஏய், அழுதுவிடாதே! எதற்காக இப்போது அழ ஆரம்பிக்கிறாய்? எனக் கேட்க நினைத்தான் அவன். ஆனாலும் ஏதோ தடையில் வார்த்தைகள் வறிதாகி நின்றுகொண்டிருந்தான்.

‘போனமுறை வந்திருந்தபோது, நீ அடுத்த மாதம் மறுபடி வருவேன் என்றுவிட்டுப் போயிருந்தாய்?’

அவன் தலையை மட்டும் ஆட்டினான். காமம் எகிறும் தருணத்தில் காதல்மாதிரி ஒரு வார்த்தை! அவன் சொன்னான்தான்.

‘அதை நம்பிக்கொண்டு நீ வேலைசெய்யிற கப்பல் துறைமுகத்துக்கு வாற தகவலை அறிய துறைமுகக் கப்பல் பட்டியல்களைப் பார்த்தபடி ஒரு மாதம் வீட்டிலே காத்திருந்தேன். நீ வரவில்லை. அதற்கு அடுத்த மாதமும் காத்திருந்தேன். கடைசியில் பிள்ளை பசித்து அழ ஆரம்பித்த பிறகுதான், நமக்கு இதுதான் விதிபோலும் என்றுவிட்டு பழையபடி தொழிலுக்குச் செல்ல ஆரம்பித்தேன்.’

அவளது தொண்டைக் குழியிலிருந்து ஒரு பசியின் குரல் எழுந்துகொண்டிருப்பதை அவன் உணர்ந்துகொண்டிருந்தான்.

அவள் அந்த மண்ணின் பூர்வீக புத்திரி. அங்கே சீனர்கள் உண்டு. மொன் எனப்படும் மொங்கோலிய இனத்தவர் உண்டு. இன்னும் பல்வேறு இனக் குழுக்கள் உண்டு. ஆனால் அவள் தாய்லாந்து மண்ணின் பூர்வீகி. இருந்தும் காலகாலமாகவும் வறுமையிலும், பசியிலுமே வாழ்ந்தவள். அதனால்தான் மிங் நொய் என்று தாய் மொழியில் சொல்லப்படும் வைப்பாட்டியாக ஒன்பது வயதிலேயே ஒரு பணக்காரக் கிழவனுக்கு அடிமையானவள். அவள் தன் இருபதாம் வயதில்தான் அந்த வளையிலிருந்து விடுபட்டாள். பின்னால் காதலனென்று சுற்றிவந்தவனுக்கு அவள் கொண்ட கர்ப்பம்தான் அப்போது அவள் காக்க இருந்த உறவு. அவளே எல்லாம் அந்த ஆறு நாள் வாழ்க்கையின்போது சொல்லியிருக்கிறாள்.
நம்புகிறவனுக்காகவே வாழ அவர்கள் தயாராகிறார்கள். நம்பிக்கைகள் தகர்கிறபோது அவர்கள் எப்படியும் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுவிடுகிறார்கள்.

நம்பியவன் கைகொடுக்கும்வரை அவள் மனைவிதான். கைவிடும்போதுதான் பரத்தையாகிறாள்.

கலாபன் கணவனாக இல்லாதபோதும் அவள் மனைவியாக வாழத்தான் செய்திருக்கிறாள். அவன் இல்லாதபோதுதான் அவள் பரத்தையாகினாள்.

பரத்தைமை உணர்ச்சிகளின் வெளிப்பாட்டுக் களமல்ல. வாழ்வின் ஆதாரம் பலருக்கும் அதிலிருந்துதான் பிறக்கிறது. வறுமையின் நிறம் சிகப்பு என்கிறார்கள். அப்படியானால் வறுமையின் வடிவம் என்ன? பெண்தானா?

அவள் தாய் உச்சரிப்பில் ஆங்கில வார்த்தைகளைத் தெளித்துக்கொண்டிருந்தாள். வார்த்தைகளற்றும் இனி அவளை அவனால் தெரிந்துகொள்ள முடியும்.

திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது வெளியே. மறுநாள் சாமான் ஏற்றல் சந்தேகம்தான். மழைக் காலம்தான் அது. மழைதான் பிந்தி வந்திருக்கிறது. பத்து நாளில் முடியவேண்டிய சாமான் ஏற்றும் வேலைக்கு இனி இருபது நாளாகலாம். அந்த இருபது நாளில் அவனுக்கு ஒரு மனைவி, அவளுக்கு ஒரு கணவன்.

வாழ்க்கை அங்கே இருக்கும், அதன் பின்னணியில் ஒரு கருமை படிந்திருந்தபோதும்.
காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது. விதி, மாற்றுவானற்ற இறுமாப்பில் சிரித்தபடி.

000

தாய்வீடு – மே

No comments:

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...