சபானா கதை




சபானா: 
விண்ணில் வாழ்ந்துவிட்டு 
மண்ணகம் வந்த பெண்


அண்மையில் வெளிவரவிருக்கும் ‘எங்கும் ஒலிக்கிறது காற்று’ என்ற தலைப்பிலான கூர் 2011 க்காக செங்குடி இன மக்களின் புராணிக, கிராமிய கதைகளில் ஒன்றை மாதிரிக்காக மொழிபெயர்ப்புச் செய்து பதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டபோது, அதற்காக நிறைய இத்தகு  கதைகளை வாசிக்க நேர்ந்தது.

அவற்றுள் சபானாவின் கதை தனித்துவமானதாக விளங்கியது. கூரில் அக் கதையை மொழிபெயர்ப்புச் செய்து போடாது விட்டிருந்தாலும், அக் கதைபற்றி எங்காவது சொல்லுகின்ற எண்ணம் திண்ணமாகியிருந்தது என்னிடத்தில். ஆதற்கான களமாக இம்மாதத்துக்கான தாய்வீட்டின் இந்தப் பக்கம் ஆகியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

கதை மிக மாயத்தன்மை வாய்ந்ததில்லை. மாறாக, மாயத்தை நீக்கிக்கொண்டு வந்த கதையாக எனக்குப் பட்டது. உங்களுக்கு எப்படியோ? கதை இதுதான்.

பேரழகின் உறைவிடமான சபானா தன் இனக் குழுமத்தின் குடில்கள் நிறைந்த உறைவிடத்திலிருந்து ஒரு நாள் தோழியரோடு அன்றாடத் தேவைகளுக்கான விறகினைச் சேகரிக்க, அயலிலுள்ள காட்டினுக்குச் செல்கிறாள். வழி நடந்துகொண்டிருக்கும் சபானாவின் செவிகளில் திடீரென விழுகிறது அலைஅலையாக எழுந்துவந்த பெருஞ்சிறகுகளின் சப்தமொன்று.

சபானா திரும்பிப் பார்க்கிறாள். ஒரு முதிர் இலவ மரத்தின் அடியில் உட்கார்ந்து அவளையே பார்த்தபடி இருக்கிறான் பன்றிபோன்ற முகவமைப்பும், உடலமைப்பும் கொண்டு மனிதச் செயற்பாங்குடனிருந்த ஒரு மனிதன்.

அம் மனிதனின் உடலிலிருந்த பெருஞ்சிறகுகளன் அழகு சபானாவைக் கவர்கின்றது. தமது பாதணிகளை அலங்கரிக்க மின்னும் அவ்விறகுகள் சிறப்பாயிருக்குமேயென எண்ணும் சபானா, அப் பன்றி மனிதனைக் கொன்று அச் சிறகுகளை எடுக்க தன் தோழியருடன் முனைகிறாள்.
பிடிக்குள் அகப்படாமல் அவளைப் போக்குக் காட்டி அலையவைக்கும் பன்றி மனிதன், கடைசியாக ஒரு நெடிய இலவ மரத்தின்மேல் ஏறத் துவங்குகிறான். சபானாவும் விடாமல் அவனைத் துரத்துகிறாள். இலவமரம் மேலும் மேலுமாய் வளர, சபானாவும் அவன் பின்னாலேயே அவனைப் பிடித்துவிட முடியுமென்ற நம்பிக்கையோடு தொடர்கிறாள்.

ஒருபோது தோழியரின் திரும்பி வந்துவிடுமாறான அழைப்பொலி கேட்டு கீழே பார்க்கும் சபானா அதிசயித்துப் போகிறாள். அவளது தோழியர் சிறு புள்ளிகளாய்த் தெரிகின்றனர். அவளது ஊர் ஒரு பொட்டாய்த் தெரிகின்றது. ஆனாலும் பிடித்துவிடும் தூரத்திலிருக்கும் பன்றி மனிதனை விட்டுவிட மனதின்றி இலவ மரத்தில் சபானா மேலும் மேலும் ஏறி உயரே சென்றுகொண்டிருக்கிறாள்.

ஒருபோது ஒரு பளிச்சிடும் சுவரொன்று தெரிகிறது. அதில் ஒரு துவாரம் தெரிகிறது. இனி திரும்புகையும் சாத்தியமில்லையெனக் கருதும் சபானா, அத் துவாரத்தினுள் செல்லும் பன்றி மனிதனைப் பின்தொடர்கிறாள்.

உள்ளே சென்றதும் ஒரு கிழ மனிதனாய் உருமாறும் அப்பன்றி மனிதன், அவளது அழகையும் அவளது கடின உழைப்பையும் கண்டு அவளைத் திருமணம் செய்யவே தான் அப் பன்றி மனிதனின் உருவில் வந்ததாகக் கூறி, அவளின் சம்மதத்தை நிர்ப்பந்திக்கிறான்.

சபானாவுக்கு வேறு வழியில்லை. திருமணம் நடக்கிறது. திருமணத்தின் பின் சபானாவுக்கான பணிகள் சொல்லப்படுகின்றன. அவர்கள் கொன்றுவரும் காட்டெருமைகளின் தோல்களில் ஆடைகள் தயாரிப்பதே சபானாவின் வேலை. சிலவேளைகளில் அவள் தேவையான கயிறுகளைத் திரிப்பதற்காக செம் முள்ளங்கி வேர்கள் சேகரிக்க காட்டுக்கும் அனுப்பப்படுவதுண்டு. அவ்வாறான வேளைகளில் அவள் மிக ஆழமாக செம் முள்ளங்கிகளின் அடிகளைக் கிண்டிவிடக்கூடாதென எச்சரிக்கப்படுவாள்.

ஒருபோது ஒரு உயர்ந்த செம்முள்ளங்கியை சபானா ஆழமாகக் கிண்டிவிடுகிறாள். அம் மரமும் வேரோடு அவளது கைகளில் வந்துவிடுகிறது. வேரோடு வந்த அம்மரத்தின் அடியில் ஒரு துளை. துளைவழியே கீழே பார்க்கிறாள். மண்ணகம் தெரிகிறது.

தன் தாய் தந்தையரதும், தோழியரதும், தன் ஊரினதும் தவனம் அவ்வேளையில் மிகவதிகம் பெற்றிருந்தாள் சபானா. தன் அழகையும், உழைப்பையும் கொடுத்து வாழ்தலுக்கான சாத்தியத்தைக் கொண்டிருப்பதில் அவளுக்கு வெறுப்பு பிறந்திருந்தது. அதனால், தனது திரும்புகைக்கான வாசல் அதுவாகவே இருக்கலாம் எனக் கருதி மீண்டும் அந்தச் செம்முள்ளங்கியை அதன் துளையில் வைத்து மூடிவிட்டு வீடு திரும்புகிறாள் சபானா.
ஆடை தைக்கும் வேலையோடு களவாக செம்முள்ளங்கியின் வேரெடுத்து கயிறு திரித்து மறைத்துவைத்து வரும் அவள், ஒருநாள் போதுமான கயிறு சேர்ந்திருக்குமென எண்ணி அக் கயிற்றுடன் ஏற்கனவே தான் கண்டுவைத்திருந்த விண்ணகத் துவாரத்துக்கு வருகிறாள். செம்முள்ளங்கியை அகற்றி துவாரத்தின் வழியே இறங்கத் தொடங்குகிறாள்.

கயிற்றில் இறங்குவது மிகுந்த சிரமமாக இருக்கிறது. சபானா களைத்துப் போனாள். ஆயினும் தன் விடுதலையை முடிவாக விரும்பியிருந்தவள் தொடர்ந்து அச் சிரமங்களைத் தாங்கிக்கொண்டு தொடர்ந்து இறங்குகிறாள். ஆ! என்ன துரதிர்ஷ்டம்! கயிறு போதுமானதாயில்லை. சபானா செய்வதறியாது நுனிக் கயிற்றில் தொங்கியபடி.

அப்போது அவ்வழியே வரும் ஒரு கழுகு அவளைத் தன் சிறகுகளில் ஏந்திவர முயல்கிறது. அவளை அணுகவும் முடியாது போய்விடுகிறது அதனால். மேலே நின்று, ‘திரும்பி வா, இல்லையேல் கயிற்றை உதறி உன்னைக் கீழே விழுந்துவிடச் செய்துவிடுவேன்’ என்று உறுமியபடி நிற்கிறான் அவளது கிழக் கணவன்.

இந்த நிலையில் ஒரு பெரும் ராஜாளி, தான் அவளைச் சுமந்து வருவதாகக் கூறி அவளை தன் மின்னும் சிறகுகளில் கீழே எடுத்து வருகிறது.

இறுதியாக தன் சிற்றூரில் வந்து இறங்குகிறாள் சபானா.

000
ஓஜிப்வே என்ற செங்குடி இனத்தவரின் மத்தியில் பரந்து வந்த கதை இது. எதற்காக பழங்குடி இன மக்கள் இறைத் தன்மையுள்ளனவாக காகம், பருந்து போன்ற பறவைகளை மதித்து வருகிறார்கள் என்பதற்கான காரணத்தை உய்த்தறிய இக் கதை எனக்கு பெரும் துணையாக இருந்தது.

தமது இனத்தைச் சார்ந்த சபானா ஆசை வயப்பாட்டில் விண்ணகம் சென்றிருந்தாலும், அவளுக்கு அந்த வாழ்க்கை மீதான மாயத்தன்மை விலகி மண்ணகம் வர விரும்பியபோது, அவள் அடையவிருந்த ஆபத்திலிருந்து அவளைக் காப்பாற்றியபடியாலேயே அப் பறவைகள் தெய்வத் தன்மை வாய்ந்தனவாகக் கருதப்படுகின்றன என்ற சேதியை அறிதல் சபானாவின் கதையின் மூலம் புரிந்துகொள்ளப்படக் கூடியது.

இன்றும் அமெரிந்தியர்களின் இனக் குழுக்களின் வேட்டைக்குப் பின்னர், வேட்டையாடப்பட்ட காட்டெருமையின் இறைச்சியின் ஒரு சிறு பங்கு இப் பறவைகளுக்கு நன்றிக்கடனின் அடையாளமாய்ப் படைக்கப்படுகிறது.

கதை புனைவுகளின் காலம் அனாதியானது. இலக்கிய மொழி பிறப்பதற்கும், எழுத்து பிறப்பதற்கு முன்பேயும்கூட கதைகள் புனைவதும், கூறுவதும், கேட்பதும் நடந்தே வந்திருக்கின்றன என்று நம்ப நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.

சபானாவினது போன்ற கதைகள் புராணத் தன்மை வாய்ந்தனவாக ( Mythology சுருக்கமாக (Myth ) கருதப்படுகின்றன. ஆனாலும் கிராமியக் கதைகளுக்கும் இவற்றுக்கும் நிறையவே வேற்றுமைகள் இருந்தாலும் இவை ஒரே திசையில் பயணிப்பவை.

கிராமியக் கதைகள் அனேகமானவற்றில் பாலுணர்வு அதிகமாகவிருக்கும். ‘வயதுவந்தவர்களுக்கான கதைகள்’ என்ற மகுடத்தில் கி.ராஜநாராயணனால் தொகுப்பட்ட கதைகள் தமிழ்க் கிராமியக் கதைகள்தான். அவை பெரும்பாலும் படைப்பினதும், கதை சொல்லும் ஆற்றலினதும் அடையாளமாக இருப்பவை. ஆனால் புராணிகமான கதைகள் புராதனமான ஓர் இனக் குழுவினது நம்பிக்கைகளும், கலாச்சாரமும் சார்ந்தவையாக இருக்கின்றன.

கிராமியமான கதைகளோ, புராணிகமான கதைகளோ எதுவானாலும் அவை அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிச் சாட்சியமாய் படைப்பாளியிடமிருந்து வெளிப்பாடடைந்தவையே என வரையறை செய்கிறார் பிராய்ட். புராணிகமான கதைகள், தனிமனிதனின் உள்ளகமான பயணத்தின் சாட்சியங்கள் என்பார் கார்ல்  ஜங். பாலுணர்வு சார்ந்த கூறுகள் புராணிகமான கதைகளில் இருந்தாலும், இவை கிராமியம் சார்ந்த கதைகளின் பாலுணர்வுக்குச் சமமானவையல்ல எனவும் அபிப்பிராயங்கள் இத் துறைகள் குறித்த ஆய்வாளர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

கீழ்த் திசையின், குறிப்பாக தமிழ்நாட்டில், இவை குறித்த ஆய்வுகள் அண்மைக்காலமாகத்தான் பெருமளவில் முன்னெடுக்கப்படத் தொடங்கியுள்ளன. ஆயினும் நிலவுகையிலுள்ள பகுதிவாரியான, கிராமம்வாரியான, தொல்குடிகள், பழங்குடியின மக்கள்வாரியான கிராமியமான, புராணிகமான கதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன எனச் சொல்லப்பட முடியாத நிலையில், இவ்வாய்வுகளின் பூராணப்பாடு சந்தேகமானதே.

0

தாய்வீடு, மே 2011

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்