எஸ்.பொ: தன்னேரில்லாத் தலைவன்
எஸ்.பொ: ஈழத்து இலக்கியத்தின்
தன்னேரிலாத் தலைவன்
ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொ. என்றழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரைக்கு 2010ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தன் வாணாள் தமிழ்ச் சேவைக்கான இயல் விருதை வழங்கிக் கௌரவித்திருக்கிறது கனடா இலக்கியத் தோட்டம். எந்த அமைப்பினது பரிசுகள் குறித்தும், வழக்கமாக எழும் சர்ச்சைகள்போல் இம்முறை வழங்கப்பட்ட இயல்விருது குறித்து வாதப்பிரதிவாதங்கள் தோன்றவில்லையென்பது இவ்விருது சரியான ஆளுமைக்குச் சென்று சேர்ந்திருக்கிறது என்பதன் ஓர் அடையாளமாக எடுக்கப்பட முடியும்.
1932இல் பிறந்த எஸ்.பொ.வுக்கு ஆறு தசாப்த கால எழுத்தின் வரலாறுண்டு. இதுவேதான் எஸ்.பொ.வுக்கு இயல்விருது கிடைத்ததை அனுக்கமின்றி தமிழ்ப் பரப்பு ஒப்புக்கொண்டதன் காரணமாக இருக்கமுடியுமா? இது ஒன்றேதான் வெகுஜன எழுத்தின் உபாசகர்களதும் தீவிர இலக்கிய வாசகர்களதும் சம்மதிப்புகளை சேர்ந்த நேரத்தில் பெற்றிருப்பது சாத்தியமா?
எஸ்.பொ.வின் அறுபதாண்டு எழுத்துலக வாழ்வு இரண்டு கட்டங்களைக்கொண்டது. வேலை நிமித்தமான அவரது ஆபிரிக்கப் பயணத்தின் முன்னான ஒரு கட்டம். இதை இலங்கையில் அவர் முழுவதும் வதிந்த காலமாகக் கொள்ளலாம்.
இரண்டாவது, அவுஸ்திரேலியாவிலிருந்து அவர் தமிழகத்தில் தங்கவந்த காலத்திலிருந்து இன்றுவரையானது. இந்த இரண்டில் முதலாவது காலகட்டமே இலக்கியத் தகைமை அதிகமும் சார்ந்தது.
அறுபதுகள் ஈழத்து இலக்கிய வரலாற்றினைப் பொறுத்து, அவரது சகாப்தமாகவே இருந்திருக்கிறது. ‘தீ’யும், ‘சடங்கு’ம், ‘வீ’ சிறுகதைத் தொகுப்பிலுள்ள பல சிறுகதைகளும் ஈழத்து இலக்கியச் செல்நெறியையே தீர்மானகரம் செய்கிற மூர்த்தண்யத்தோடு படைப்பாக்கமாகி வெளிவந்தது இந்த அறுபதுகளில்தான்.
எஸ்.பொ.வின் இலக்கிய ஆளுமை எவ்வாறு விவாதத்துக்கு இடமில்லாது இருக்கின்றதோ, அதேபோல் அவரது அ-இலக்கிய எழுத்துக்கள் மிகமிக விவாதத்துக்குரியவை என்பதும் முக்கியமான விஷயம். அவரது இன்றைய அரசியல் குறித்து ஒரு புலத்தில் வாழும் வாசகனுக்கு மிகத் தீவிரமான கேள்விகள் எழ மிகுந்த நியாயங்கள் இருக்கின்றன. அவரது பின்னாளைய படைப்புக்கள் முதலாம் காலகட்ட எழுத்துக்களினை நிகர்த்தில்லையென ஒரு நடுநிலைசார் வாசகனே முடிவுகட்டிவிடுவான். அவரது சில விவாதங்கள், சில கருதுகோள்கள் கூர்மையற்றவை. இருந்தும்தான் எஸ்.பொ.வுக்கான இயல் விருது மிகப்பொருத்தமானதென சகல தரப்பாராலும் ஒப்புமை தரப்படுகிறது. இதன் காரணமென்ன? இந்த உரைக்கட்டு இந்த விஷயத்தை மையப்படுத்துகிறது.
பல்வேறு தருணங்களில் (‘தாய்வீ’ட்டின் சில கட்டுரைகள் உட்பட தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் ‘தேவகாந்தன் பக்க’த்திலும்) நான் குறிப்பிட்டிருந்ததுபோல, என் சிறுவயதுக் காலத்தில் அவரது எழுத்தின் வசீகரத்தில் வசியப்பட்டிருந்தவன் நான். இலங்கையில் வெளிவந்த சஞ்சிகையொன்றில் (பெயர் மறந்துபோனது) எஸ்.பொ. எழுதிய ‘குளிர்’ என்ற கதையை இப்போதும் என்னால் ஞாபகப்படுத்த முடியும். அன்றிலிருந்து எஸ்.பொ.வின் சகல எழுத்துக்களையும் தேடி வாசிக்கும் வெறிபிடித்து அலைந்த பதின்ம வயதுக் காலம் என்னது. இன்றுவரைகூட ஒரு தேவை கருதியேனும் விருப்பத்துடனேயே அவரது சகல எழுத்துக்களையும் நான் வாசித்து வருகிறேன்.
என் வாசிப்பு என்றும் என்னைக் கைவிட்டதில்லை. படைப்புபற்றிய எனது முடிவுகள் பெரும்பாலும் ஆய்வு முடிவுகளுக்கு இணையாகவே முற்றிலுமாய்ச் சென்றிருக்கின்றன.
நாவுக்கும் பேனைக்கும் அஞ்சப்பட்ட இரண்டு ஆளுமைகளை ஈழத்து இலக்கிய வரலாறு இதுவரை சந்தித்திருக்கிறது. ஒன்று, நல்லை ஆறுமுக நாவலர். இன்னொன்று, எஸ்.பொ. அதனால்தான் காலாண்டிதழாக ‘இலக்கு’ சிற்றிதழை 1994இல் நான் தொடங்கியபோது அதன் முதல் இதழிலேயே எஸ்.பொ.வைச் சந்தித்து அவரது நேர்காணலை வெளியிட்டேன். அதன் அறிமுகவுரையில் இவ்வாறு எழுதியிருப்பேன்: ‘ஆறுமுக நாவலருக்குப் பிறகு மிகப்பெரும் கண்டனகாரர் என்று பெயரெடுத்தவர்தான் இன்று எஸ்.பொ. என்ற இரண்டு எழுத்துக்களால் குறிக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை.’
ஆதலால் இலக்கிய ஆளுமையாக இருந்ததோடு ‘மிகப் பெரும் கண்டனகார’ராயும் இருந்ததிலிருந்து இந்த விசாரணையைத் தொடங்குகிற எண்ணம்.
ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்தென்பது மிகவும் முக்கியமான ஓரம்சம். எதிர்க்கட்சியானது இம் மாற்றுக்; கருத்தின் மறுவடிவமே. இலக்கிய உலகிலும் இது அரசியலுலகுபோலவே தவிர்க்கவியலா அலகு ஆகும். ஆறுமுக நாவலருடைய கண்டனங்கள் மாற்றின் வடிவங்களுக்கான கண்டனங்களாய் இருந்ததாய் பொத்தம்பொதுவாய்ச் சொல்லமுடியும். இதையே வேறு மொழியில் சொன்னால், புதுமையை அதன் பிறப்பு வாயிலிலேயே தடுத்துவைத்துவிட்டு பழைமையை மேலும் தவிசிலிருத்துகிறதான விருப்புணர்வின் செயற்பாடாக ஆறுமுக நாவலருடைய செயற்பாங்குகளும் கருத்துக்கோவைகளும் இருந்திருக்கின்றன.
‘வசனநடை கைவந்த வல்லாளர்’ எனப்பட்டவர் நாவலர். சைவ சமயத்தினது நெடும்பயணத்திலே வேற்றுநாட்டாரின் ஆட்சியினால் பழைமைச் சமுதாய இயக்கத்துக்குத் தோன்றிய தடைக்கற்களை அகற்ற நாவலருக்குத் தேவையாக இருந்தது வசனநடைதான். சிறுபடிப்போடு இருக்கும் மத்தியதரத்தாரும் வாசித்து இலகுவில் விளங்கிக்கொள்ளவேண்டிய தேவை அவருக்கு இருந்திருக்கிறது. உரைநடை வரலாற்றிலேயே முக்கியமான ஒரு மைல் கல்லாக இருந்தது இத் தவிர்க்கமுடியாமையை உணர்ந்து செயற்பட்டதனாலேயே நிகழ்ந்தது. எஸ்.பொ. எழுதியதும், நான் எழுதியதும், நீங்கள் எழுதுவதும்கூட நாவலரது வசனநடையின் மேற்கட்டுமானத்திலேதான் என்பதை எவராலும் மறுத்துவிட முடியாது. இந்தவகையில் தமிழிலக்கிய வரலாற்றில் நாவலரது இடம் சாசுவதமானது. அதுபற்றி எனக்கு எந்தவிதமான மாற்றபிப்பிராயமும் இல்லை.
ஆனால் எஸ்.பொ. ஒரு கண்டனகாரராய் இருந்தாரென்பதில் அவரது கண்டனங்கள் புதுமையை ஆதரித்தனவாய் இருந்தன என்பதுதான் இந்த இருவர் கண்டனங்களிலும் இருந்த வேறுபாடு. ஒருவகையில் இலங்கையில் ‘மறுமலர்ச்சி’ பத்திரிகையின் காலத்துக்கு முன்னால் இலக்கியத்தில் இருந்தது ஒருவகையான ‘பண்டித’ ஆதிபத்தியமே எனச் சொல்லமுடியும். சமூகரீதியாக இந்த ஆதிபத்தியத்தை மேனிலைச் சமூகத்தினது எனக் கூறுவதில் தவறில்லை. அதை நொருக்கித் தள்ளியது இலங்கை முற்போக்கு வாதத்தின் சாதனையெனில், அந்தத் தகர்வுகளின் மேல் சாதாரணர்களின் ஆதிபத்தியத்தை நிறுவியது எஸ்.பொ.தான்.
பழைமைக்கும் வந்த புதுமைக்கும் ஓர் இணைப்புப் பாலமாய் இருந்தவராக இரசிகமணி கனக. செந்திநாதனைச் சொல்ல முடியுமெனில், பழைமையை உரமாகக்கொண்டு புதுமையை வளர்த்தெடுக்க முனைந்தவர் எஸ்.பொ. இதை நற்போக்கு என்ற கருதுகோளாக்கி அலகுகள் வகுத்தார் அவர். நற்போக்கு அதன் பிறப்புக் காலத்திலிருந்தே பல எதிர்ப்புக்களைச் சந்தித்தது. பின்னால் சுவடு இன்றி மறைந்தது.
பின்னாளில், அவரது இரண்டாவது இலக்கியப் பிரவேசத்தில் ‘தமிழிலக்கியத்தை வரும் புத்தாயிரத்திலிருந்து முன்னெடுக்கப்போவது புலம்பெயர்ந்தோர் இலக்கியமே’ என்ற கருத்தோடு எஸ்.பொ. சொன்ன ‘தமிழ்த்துவ’ கருதுகோள் அதையே திரும்பச் சொன்னது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வெகுஜன இலக்கியம் என்ற சுலோகம், உள்ளோட்டத்தில் அதனது படைப்பாளிகளின் மலினமான எழுத்துக்களால் வீச்சுப்பெறாமல் விட்டிருந்தபோது, இமுஎச’வுக்கும் எதிரான எஸ்.பொ.வின் எழுத்துக்களினால்தான் பண்டித சாம்ராஜ்யம் கவிழ்ந்து வெகுஜன எழுத்துக்கான வெளி பிறந்தது. இதை தன் படைப்பிலக்கியத்தின் ஊடாகவும், கண்டன எழுத்துக்களின் மூலமாகவும் சாதித்து முடித்தார் எஸ்.பொ.
‘நாரதர் கலகம் நன்மையில் முடியு’மென்பது வெகுஜன வாக்கு. நாரதன் ஒரு கலகக்காரன். பிற்காலத்திய சித்தனின் முற்கால வடிவம் அவன். அவனே சமயச் சாயம் பூசப்பட்ட பாணனும் ஆவான். இந்தத் தொடுப்போடு பார்த்தால், நாரதன் ஒரு கலகக்காரனே. சித்தர்களும் கலகமே செய்தார்கள். இதன்மூலம் பெறப்படும் பெறுபேறு கலகங்களால் நன்மை பிறந்தது என்பதுதான். இதை வேறுவார்த்தைகளில் சொன்னால், கலகத்திலிருந்து நன்மை பிறக்கிறது என்பதே அது. எஸ்.பொ.வின் கலகங்களிலிருந்தும் நன்மை பிறந்தது.
எழுத்து மாச்சரியங்களுக்கும், தன்மேலான அவதூறுகளுக்கும், எழுத்தின் புனிதங்களுக்கும் எதிரான அவரது யுத்தம், மிக முக்கியமான சங்கதி. ஈழ இலக்கியத்தின் வாசகனொருவன், எஸ்.பொ.வின் கண்டனங்களை முற்போக்கு வாதத்திற்கெதிரானதாய், குறிப்பாக கலாநிதிகள் கைலாசபதிக்கும் சிவத்தம்பிக்கும் எதிரானதாய் இருந்ததை, சுலபமாகவே கண்டுகொள்வான். மார்க்ஸீய வாசகனொருவன் இந்த எழுத்துக்களில் முகச் சுளிப்புக்கொள்வது தவிர்க்கவியலாதபடி நிகழ்ந்திருக்கிறது. நான் முகச்சுளிப்பு அடைந்திருக்கிறேன்.
ஆனால் மிகப் பின்னாளில், மற்றவரும் அவருமே கூறியது போலில்லாமல், அவரது யுத்தமனைத்தும் படைப்பவனுக்கும் படிப்பவனுக்குமில்லாமல் இலக்கியத்தைப் படிப்பிப்பவனுக்கு அதன் தராதரத்தை நிர்ணயிக்கிற அதிகாரம் குவிந்தபோது, தனிநபர்கள்மீதானதாயன்றி அத் தனிநபர்களின் கொள்கலங்களான பல்கலைக்கழகங்கள் என்ற நிறுவனங்களுக்கெதிராயே அவரது யுத்தம் இருந்ததாய் நான் புரிந்திருக்கிறேன்.
இலக்கியப் படைப்புகள்பற்றிய கருத்துக்கள் சரியாக இருந்து, தேர்வுகள் தவறாக இருந்த கதையே கலாநிதிகள் கைலாசபதியினதும், சிவத்தம்பியினதுமாகும். இதற்கெதிரானதாயே எஸ்.பொ.வின் கலகங்கள் இருந்திருக்கின்றன. இது ஆரோக்கியமான விஷயமே.
கலகக் குரல்களுக்கு மிகப் பெயர் பெற்றவராய் படைப்பாளிகளில் இரண்டு முக்கிய ஆளுமைகளைத் தமிழுலகம் அறியும். ஒருவர், ஜெயகாந்தன். மற்றவர் எஸ்.பொ. தனது கலகத்தின் வடிவங்களாக தனது மேடைப் பேச்சுக்களையும், தனது நூல்களுக்கான தன் முன்னுரைகளையும் அமைத்துக்கொண்டார் ஜெயகாந்தன். எஸ்.பொ.வின் கலகங்களது வடிவங்களாக அதே மேடைப் பேச்சும் அவரது முன்னீடுகளும் இருந்தன.
இமுஎச எழுத்தாளர்கள் ‘இழிசனர் மொழி’யென அதுகாலவரை ஒதுக்கப்பட்டிருந்த கீழ்த்தட்டு மக்கள் மொழியை அரியாசனம் ஏற்ற முயன்ற வேளையில், நவீன எழுத்துக்களிலும் புனிதங்கள் என்று கருதப்பட்டனவற்றைத் தகர்க்கும் மேலான முயற்சியில் ஈடுபட்டிருந்தார் எஸ்.பொ.
1961இல் வெளிவந்த ‘தீ’ நாவல் ஈழத்திலக்கியப் பரப்பில் இடிமின்னலோடு வந்த மாமழை. தமிழகத்தைப் பொறுத்தவரை சிதம்பர ரகுநாதன் போன்றோரது சில சிறுகதைகளையும் இவ்வாறு எழுத்துப் புனிதங்களை அழித்தெழுந்த எழுத்துக்களாய்ச் சொல்ல முடியும். மராத்திய எழுத்தாளர் வி.ஸ.காண்டேகரது சில தமிழ் மொழிபெயர்ப்புக்களில் எழுத்துப் புனித அழிப்புக்களின் செயற்பாட்டை நாவல்தளத்தில் காணமுடிந்தது. ஆனால் ஈழத்தில் எழுத்துப் புனிதங்களை ஆழமும் அகலமுமாய் அழிக்க எழுந்ததுதான் எஸ்.பொ.வின் ‘தீ’ நாவல். எடுத்துக்கொண்ட பொருளால் மட்டுமில்லை, அதன் பாத்திரங்களது சமுதாய அந்தஸ்தினது இருப்பு காரணமாயும் ஒரு பாய்ச்சலை ஈழத்திலக்கியத்துக்கு மட்டுமில்லை, தமிழிலக்கியத்துக்கே அது வழங்கியது.
மட்டுமில்லை. இந்நாவல் குறித்து பிரமிளுக்கும் எஸ்.பொ.வுக்குமிடையே ‘எழுத்து’ சஞ்சிகையில் நடைபெற்ற வாத-பிதரிவாதங்கள் ஓர் இலக்கியவாதியைப் பொறுத்தவரை முக்கியமானவை. இவ் விவாதங்கள் குறித்த மு.தளையசிங்கத்தின் முடிவுகள் அதே ‘எழுத்து’ இதழில் வெளிவந்தன. இவையெல்லாம் தமிழ் விமர்சனத்தின் வீச்சுக்கு உரமூட்டுபவை.
இதேவகையான எழுத்தின் புனித அழிப்பு அவரது ‘சடங்கு’ நாவலிலும் இருக்கும். ‘சடங்கு’ நாவலின் மொழி அலாதியானது. அந்தளவு இறுக்கமற்றதெனினும் தமிழகத்தில் லா.ச.ராமாமிர்தத்தின் நடைக்கு மொழிவழியாக நிகர்த்தது. ஆனால் நாவலாகாமல் வெறுமனே ஒரு நெடுங்கதையாய் தேக்கமடைந்தது அது. ‘தீ’யோ ஈழத்து நாவல் வரலாற்றில் தனியான ஓரிடத்தைப் பெற்றுக்கொண்ட நாவலாகும்.
‘தீ’ நாவலாக, ‘வீ’ சிறுகதைத் தெகுப்பாக, ‘முறுவல்’ நாடகமாக தனிக் கவனங்கள் பெறுவன. இவற்றின் மொழி தனித்துவமானது. இதுவே இந்தப் பாத்திரத்தின் பேச்சுமொழி என எஸ்.பொ. கருதிவிட்டால், அதை எந்த வாசக பிரக்ஞையுமின்றி கையாளும் ஓர்மம் அவருக்கேயானது.
‘மத்தாப்பூ’, மற்றும் ‘சதுரங்கம்’ போன்ற நாவல்களை பல எழுத்தாளர்களின் மூலம் உருவாக்கி இலக்கியப் பரப்பில் பரிசோதனை முயற்சிகளை முன்னெடுத்தரும் ஈழத்தில் எஸ்.பொ.தான். மேலும் ஒன்றை இங்கே ஞாபகப்படுத்த வேண்டும். இவரின் இலக்கியப் போக்கினுக்கு மாறான இலக்கியக் கொள்கையினை உடையவர் கனக.செந்திநாதன். ஆனாலும் இருவருமே இலக்கிய நாகரிகமுடையவர்கள். அதனால்தான் எஸ்.பொ.வின் ‘வீ’ சிறுகதைத் தொகுப்புக்கு கனக.செந்திநாதனும், கனக.செந்திநாதனின் ‘வெண்சங்கு’ சிறுகதைத் தொகுப்புக்கு எஸ்.பொ.வும் முன்னுரை எழுத முடிந்திருந்தது.
முன்னர் சுட்டிக்காட்டிய படைப்புக்களின் பின்னால் வரும் எஸ்.பொ. அவரது இரண்டாம் கட்டத்துக்குரியவர். தன்வரலாற்று நூலொன்று இலக்கிய வரலாறாகவும் வளர்ந்திருக்கும் விந்தையை அதிகமாகவும் ஆங்கிலத்திலேதான் காணமுடியும். தமிழில் அவ்வாறாக வெளிவந்திருப்பது எஸ்.பொ.வின் ‘வரலாற்றில் வாழ்தல்’. இரண்டு பாகங்களாக சுமார் ஆயிரத்து நானூறு பக்கங்களில் அது. யுnநெ குசயமெ: வுhந னுயைசல ழக ய லுழரபெ புசைட என்ற ஆன் பிராங்கின் தன்வரலாறு வெளியிட்ட அவரின் இரண்டாண்டு வரலாறு செய்த வாசக பாதிப்பை எஸ்.பொ.வின் ‘வரலாற்றில் வாழ்தல்’ செய்தது. அதனால்தான் கோவை ஞானி அதை ‘நோபல் பரிசுக்குத் தகுதியான தமிழ்நூல்’ எனக் குறிப்பிட்டார் ஒரு நேர்காணலில்.
அடுத்ததாய்க் குறிப்பிடப்படக்கூடிய இன்னொரு படைப்பு ‘மாயினி’ என்ற அரசியல் நாவல். அது இலங்கையின் புதுவரலாலொன்றை வரைய முனைந்த முயற்சியின் பெறுபேறு. நாவலாய் அது பெரிதும் பேசப்படாவிட்டாலும் அதன் கட்டுமானத்தால் தமிழ் அரசியல் நாவலுக்கு ஈழமாயினும் தமிழகமாயினும் வழிகாட்டும் சாங்கியம் கொண்டது.
இப்படியாக சற்றொப்ப முப்பது நூல்களின் ஆசிரியராக இருக்கும் எஸ்.பொ., விட்டுக்கொடுப்பின்றி தன் தனிப்போக்கில் தொடர்ந்துகொண்டிருக்கும் ஓர் ஈழத்து இலக்கியவாதி. இன்று புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பதத்தை எஸ்.பொ. பாவிப்பதில்லை. மாறாக, இதை நவ ஈழத்து இலக்கியம் என்கிறார்.
எஸ்.பொ.வுக்கு இணையான இலக்கிய ஆளுமையோடிருந்தவர் மு.த. ஆனாலும் அவர் நீண்டகாலம் வாழ ஈழத்து இலக்கியத்துக்கு கொடுப்பனவு இல்லாமல் போய்விட்டது. பிரமிள் இன்னோர் ஆளுமை. அவரை நிலங்கடந்த படைப்பாளியாகவே தமிழ் இலக்கிய உலகம் கருதிக்கொண்டிருக்கிறது. அதனால் ஈழத்து இலக்கியத்தின் தன்னேரில்லாத் தலைவனாக எஸ்.பொ. இருக்கிறார் என்பது ஒரு சரியான கணிப்பீடாகவே எனக்குத் தென்படுகிறது.
இந்த நவ ஈழத்து இலக்கியரை, சிலர் ‘பாணன்’ என்கிறார்கள். அவரே தன்னை ‘காட்டான்’ என்கிறார். பொருத்தமான அடைகள்தான். ஆனாலும் எனக்கு அவரது குணவியல்புகளினூடான சித்திரம் காட்டுவது ஒரு சித்தனாக - இலக்கியச் சித்தனாக மட்டுமே.
0
தாய்வீடு, பெப்.2011
Comments