Saturday, December 10, 2011

நேர்காணல்: தேவகாந்தன் 1


‘அகதிகளிலிருந்து படைப்பாளிகள் உருவாவதைத் தடுக்கும் அக-புற காரணிகள் வலிமையானவை’

(நேர்காணல்: தேவகாந்தன்
இன்தாம்(வானவில் -2002) இணைய தளத்துக்காக நேர்கண்டவர்: சூரியசந்திரன்)


‘போர் எந்த நிலையில், எத்தகைய நியாயத்தின் பின்னணியில் இருப்பினும் கொடுமையானதுதான்’ என்று கூறும் தேவகாந்தன், ஈழத்து எடுத்தாளர்களில் முக்கியமானவர். இப்போது சென்னையில் வசித்துவருகிறார்.
போர்ச்சூழலில் அவதியுறும் ஈழத்தமிழர்களின் துயரமும் சோகமும் நிறைந்த வாழ்வை இவரது பெரும்பாலான கதைகள் பேசுகின்றன. அகிலமெங்கும் பரவியிருக்கும் தமிழ் அகதித் தன்மையை விவரித்து ஐந்து பாகங்களைக் கொண்ட மாபெரும் நாவலை எழுதியுள்ளார். இந்நாவல், புலம்பெயர் இலக்கிய வகையில் முக்கியமான படைப்பாக உள்ளது. சில கவிதைகளையும் எழுதியுள்ளார். ‘இலக்கு’ எனும் இலக்கிய இதழையும் நடத்தி வருகிறார். அவருடன்…0 தமிழ் நாட்டிலுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்க்கை எந்த அளவுக்கு இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது?

சே.யோகநாதனின் ‘இரவல் தாய்நாடு’ நாவல், ‘அகதியின் முகம்’ குறுநாவல் போன்றவையும் , எனது ‘விதி’ நாவலும், ;மனுதர்மம்’ குறுநாவலும், இன்னும் சில சிறுகதைகளும் தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளை மையமாகக் கொண்டு புனைவு பெற்றவையே. ஆனாலும் இவை போதுமைவையல்லதான். அகதிகளுக்குள்ளிருந்தே படைப்பாளிகள் உருவாகாததை இதன் பிரதான காரணமாகச் சொல்லலாம். அகதிகளுக்குள்ளிருந்து படைப்பாளிகள் உருவாவதைத் தடுக்கும் அக-புற காரணிகள் வலிமையானவை. அகதித் தனத்துக்குள்ளிருக்கும் அதன் பயங்கரமான உள்முகம் லேசுவில் வெளியே தெரிந்துவிடாது. இந்த மண்ணில் அவர்களுக்கிருக்கும் நிரந்தரமற்ற வாழ்க்கை நிலை, வாழ்நிலைக் கஷ்டங்கள் யாவும் படைப்பிலக்கிய முயற்சிகளுக்குச் சாதகமானவையல்ல. இந்தக் கடினங்ளைப் பிளந்துகொண்டே நாங்கள் இலக்கியம் செய்தோம்.


0 இலங்கைப் போராட்டச் சூழல் ஈழத்தமிழ் கலை இலக்கியப் படைப்புகளை எந்தளவு பாதித்திருக்கிறது?
ஈழத்தில் கவிதையானது எப்போதும் ஒரு வலிமையான இலக்கிய ஊடமாகவே இருந்து வந்திருக்கிறது. அதை உச்சத்துக்கு இழுத்துச் சென்றது போராட்டச் சூழ்நிலை. சிறுகதையும் ஓரளவு பாதிப்பைப் பெற்றதென்று சொல்லலாம். ஆனால், பிற இலக்கிய ஊடகங்கள்- குறிப்பாக, நாவல் இலக்கியம் -போதுமான ஊக்குவிசை பெற்றதாய்க் கொள்ளமுடியாது. நாடக அரங்கக் கலை, வீதிநாடகம் போன்றவை மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளதைச் சொல்ல வேண்டும். ஆரம்ப கால கட்டத்தில் இனக்கொடுமைகளைப் பேசிய இலக்கியச் சூழ்நிலை, பின்னால் யுத்தத்தின் நியாயங்களைப் பேசிற்று. அடுத்த காலகட்டத்தில் அது அதிகமாக மனிதத்துவத்தையே பேசியது. இரு தரப்பாரிடத்திலும் ஏற்பட்ட யுத்த அவலம் மனிதத்துவத்தைப் பேசுவதைத் தவிர்க்கவியலாததாக்கிற்று. பொருள் மாற்றம், தர மாற்றத்துக்குக் காரணமான கதை இதுதான்.


0 இந்தியா தவிர வேறு தேசங்களுக்கு அகதியாய்ச் சென்றுள்ள ஈழ அகதிகளின் சூழலில் இலக்கிய முயற்சிகள் எப்படி இருக்கின்றன?

சிற்றிதழ்கள் தமிழில் அதிகமாய்த் தோன்றிய காலப் பகுதியாக இதைச் சொல்லலாம். இது அவர்களாலேயே நிழ்ந்தது. மொழியின் செழுமையும், கனதியான இலக்கியப் படைப்பாக்கமும் இதனால் கவனமாகிற்று. சிறுகதை, கவிதைகள் மூலமாக மேற்குலகின் அகதி நிலைமைகள் பதிவாகின். கலாமோகனின் ‘நிஷ்டை’ சிறுகதைத் தொகுப்பு, கி.பி.அரவிந்தனின் ‘கனவின் மீதி’ கவிதைத் தொகுப்பு, விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியதாயினும் ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ நாவல் யாவும் மேற்குலகில் புலம்பெயர்ந்தோர் மத்தியில் வீச்சாக எழுந்த இலக்கியங்களின் சாட்சியங்கள். ‘பனியும் பனையும்’ என்ற சிறுகதைத் தொகுப்பும், அதற்கு முன்னர் வந்த ‘மண்ணைத் தேடும் மனங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இந்த வரிசையில் குறிப்பிடப்படக்கூடிய தொகுப்புகளாகும். பெண்ணியம் சார்ந்த கருத்துகளின் வெளிப்பாடும் படைப்புகளும்கூட இக்கட்டத்தில் தீவிரமாய்த் தோன்றின.


0 உங்களின் ‘கனவுச் சிறை’ நாவல், ஈழத்தில் தொடங்கி, தமிழ்நாடு ஊடாக ஐரோப்பாவரை சென்று அகதிகளின் கதையைப் பேசுகிறதல்லவா?

ஆம். 1981 தொடங்கி 2001 வரை விரியும் இருபத்தோராண்டுக் காலக் களத்தில் கண்டங்கள் அளாவிப் புனைவுபெற்ற நாவல் அது. அதை இருபத்தொரு ஆண்டுகளில் இருப்த்தொரு நூற்றாண்டுகளின் சரித்திர ஆதாரங்களை- அடிப்பமைகளை- ஒருவகையில் கேள்விக்குள்ளாக்குகிற நாவலென்றும் சொல்லலாம். சர்வதேச தமிழ் அகதித்தனத்தை வீரியமான வார்தைகளில் அது பேசுகிறது. சுமார் 1300 பக்கங்களில் 5 பாகங்களில் சமகால அரசிலின் எரியும் பிரச்னை ஒன்றை மையமாக்ககொண்டு வெளிவந்த மகாநால் தமிழில் இது ஒன்றுதான் என்று கூறுகிறார்கள், பல்கலைக்கழக, எழுத்துலக நண்பர்கள். என் மனத்துக்குத் திருப்தி அளித்த படைப்புத்தான் இதுவும்.


0 ‘கனவுச் சிறை’ எழுத்துவகை பற்றி…?

தமிழில் பின்-அமைப்பியல், பின்-நவீனத்துவம் சார்ந்த படைப்புக்கள் வெற்றிபெற்றனவாய்ச்
சொல்லமுடியாது. இந்தவகை எழுத்துக்களிலும் படைப்புகளிலும் கவனம் காட்டியவர்கள் தமிழவன், பிரேம்-ரமேஷ் ஆகியோர் மட்டுமே. அதனதன் அளவில் இவர்களின் படைப்புகள் காத்திரத்தைக் கொண்;டிருந்தாலும் இவை தமிழைப் பொறுத்தவரை படைப்பின் பயில்வுகளாகவே கொள்ளப்படக்கூடியன. ஆனாலும் தமிழின் மொண்ணைத்தனத்தை இப்புதிய வகையினங்கள் உடைத்தன. வியாபாரத்தனமான எழுத்துக்களுக்கும் தீவிரமான எழுத்துக்களுக்குமிடையே ஆழமான கோட்டை-எல்லையை- இவை கிழித்தன. அந்தவகையில் நவீனத்துவங்களின் சில கூறுகளை உள்வாங்கி யதார்த்தமான வகை எழுத்துமுறையில் அதிகபட்ச படைப்புச் சாத்தியங்களை அடைய முனைந்த படைப்பாகவே ‘கனவுச் சிறை’ நாவலைக் கொள்ளவேண்டும்.


0 ‘கனவுச் சிறை’ நாவல்பற்றி…

முழுக்க முழுக்க இலக்கியார்த்தமான காரணங்களுக்காக படைப்பாக்கம் பெற்றதே இந்த நாவல். இனக் கொடுமைகளை, அகதித் தனங்களின் அவலங்களை ஈழத் தமிழரின் விசேஷித்த வாழ்வுமுறைகளின் பின்னணியில் வைத்து புனைவாக்கம் பெற்றிருக்கிறது இந்த நாவல். ஈழத்திலிருந்து இந்தியா நகரும் கதை, இங்கிருந்து கிழக்கு, மேற்கு என விரிந்து செல்கிறது. ஐந்து பாகங்களானாலும் ஒவ்வொரு பாகமும் ஒரு முழுமையைக் கொண்டு விளங்குகின்றன. இதையே இதன் விசேஷமாய்ச் சொல்லமுடியும். ஒருவகையில் காலமே இந்நாவலின் மைய பாத்திரம். திருப்படை ஆட்சி, வினாக் காலம், அக்கினித் திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் என்பன பாகங்களின் தலைப்புகள்.


0 இ;வ்வாறு ஒரு பெரிய நாவலை எழுதவேண்டுமென்ற எண்ணம் …உந்துதல்… எப்படித் தோன்றியது?

சுமார் மூன்றாண்டுகள் சுகவீனம் காரணமாய் ஒரு நிர்ப்பந்தப் படுக்கையில் விழுந்தபோது என் கனவும் நினைவும் எல்லாமே என் மண்ணைநோக்கியே ஓடிக்கொண்டிருந்தன. பல நிஜ, கற்பனை மனிதர்கள் வந்து போனார்கள் மனத்திரையில். ஆவர்கள் தங்கள் தங்கள் கதையை என்னோடு பேசினார்கள். கால மாற்றத்தில் கதா மாந்தர்களின் போக்குகள், லட்சியங்கள் எல்லாம்கூட மாறுகின்றன. அதற்கு மேலே கற்பனையின் சிறகுவிரிப்பு என் வசத்தில் இல்லை. மூன்றாண்டுகளில் சுமார் 2000 பக்கங்கள் கையெழுத்தில் வந்தன. 1998ல் முதல் பாகமான திருப்படை ஆட்சி வெளிவந்தது. 2001 டிசம்பரில் நான்காம் பாகமும் இறுதிப் பாகமும் வெளிவந்தன.


0 உங்கள் ‘விதி’ நாவலில் முக்கிய கதாபாத்திரங்களாக மலைநாட்டு தமிழ்க் கதாபாத்திரங்களே வருகின்றனவே…?

படைப்பு மனத்தை எந்த நிகழ்வு, எண்ணம் பாதிக்கின்றதோ, அந்த நிகழ்வு…எண்ணமே படைப்பாக்கத்துக்குரிய விஷயமாகிறது. ஆந்தவகையில் என் மலையக நண்பன் ஒருவனுக்கேற்பட்ட அனுபவப் பகிர்வின் விளைவே அந்த நாவல்.
1983ஆம் ஆண்டு மலையக மக்கள் குடியேற்றமும் இனக் கொடுமைக்காளானது. பல மலையக மக்கள் அத்தருணத்தில் நாட்டைவிட்டு நீங்கி இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு வந்தவர்களில் ஒருவனதும் ஒருத்தியதும் கதையே ‘விதி’ நாவலாகியது.


0 ‘அந்தச் சில கணங்கள்’ சிறுகதை ‘இலக்கு’ இதழில் வெளிவந்தது. அதில் காந்தியை இந்துத்துவவாதியாகச் சித்திரித்திருக்கிறீர்களே…?

காந்திஜி அதிலே வருவார்தான். ஆனாலும் அந்தக் கதையிலே எனது அக்கறை நாதுராம் கோட்ஸேதான். அவனது பார்வையூடாகவே காந்தி பார்க்கப்படுகிறார். மடிவதற்கு முன்பகாக காந்திஜியின் வாயிலிருந்து பிறக்கும் ‘ஹே ராம்’ என்ற வார்த்தைகள் கோட்ஸேயையே அதிரவைத்துவிடுகின்றன. இஸ்லாமியருக்கு ஆதரவு காட்டுவதினால்தான் கோட்ஸேயின் மனத்திலே காந்திமீதான வெறுப்பு பிறந்தது. ஆனால், காந்திஜியின் கடைசிநேர உச்சரிப்பு வார்த்தைகள் அவரை ஒரு சரியான இந்துவாய்… அவனைவிடவுமே சிறந்த இந்துவாய்… அவனுக்கு அந்தக் கடைசிக் கணங்கள் காட்டிவிடுகின்றன.


0 ‘நெருப்பு’ சிறுகதை ஈழப் போர்ச் சூழலின் அவலச் சித்திரிப்பாகக் காள்ளலாம் இல்லையா?

கொள்ளலாம். பல பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்ற கதை அது. உருவ, உள்ளடக்க, நடை, உத்திகள் அதில் விசேஷமாகவே இருக்கின்றன. போர் எந்த நிலையிலும், எத்தகைய நியாயத்தின் பின்னணியில் இருப்பினும், கொடுமையானதுதான். அதைச் சிறப்பாக வெளிப்படுத்திய கதை அது.


0 ‘இலக்கு’ சிறுபத்திரிகையில் உங்கள் அனுபவம்…?

அது பலத்த பொருள் நஷ்டங்களிடையே மூன்று ஆண்டுகளாக வெளிவந்த பத்திரிகை. எவ்வளவுதான் பொருள் நஷ்டம் அடைந்தாலும், என் எழுத்திலும் சிந்தனையிலும் பலத்த மாற்றங்களை அது ஏற்படுத்தியது. வெகுஜன எழுத்தாக அடையாளம் காணப்படக்கூடிய ஒரு பெரிய ஆபத்திலிருந்து என்னை, என் எழுத்தை அது காபாப்பாற்றியதாகவும் சொல்லலாம்.


0 ‘இடதுசாரி இலக்கிய விமர்சகர்கள் சிலர் கட்சி நிலைப்பாட்டின் காரணமாய் தராதரமற்ற இலக்கியங்களை முன்னிலைப்படுத்தினார்கள்’ என்று சொல்லப்படுவது குறித்து…?

கலைநேர்த்தியைக் கவனமெடுக்காமல், படைப்புகளின் உள்ளடக்கத்தை…வர்க்க சார்புகளை… வைத்து சில எழுத்தாளர்களின் படைப்புகள் சற்று மிகையாகப் புகழப்பட்ட ஒரு நிஜம் இருக்கிறதுதான். அதைச் சாக்காக வைத்துக்கொண்டு இலக்கிய லாபம் சம்பாதிக்கப் பார்த்த சிலரின் கூக்குரல் அது. அக் காலகட்டத்தில் வெளியான சகல படைப்புகளோடும் வாசக ரீதியான அனுபவம் எனக்கு இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு சொல்கிறேன், மார்க்சிய விமர்சகர்களால் கனதியற்ற இலக்கியங்கள் சில எடுத்துப் பேசப்பட்ட ஒரு குற்றம் நடந்ததே தவிர, எந்த நல்ல இலக்கியமும் கிடங்கு வெட்டிப் புதைக்கப்பட்டதாக நான் அறியவில்லை. அப்படி, ஒரு நல்ல இலக்கியத்தைச் செய்துவிடவும் முடியாது. அதைத்தான் புதுமைப்பித்தன் அன்று சொன்னார், எத்தனை நந்தி வந்து தடுத்தாலும் நல்ல எழுத்து வாழும் என்று.


0 இலக்கு, நிழல், சுந்தர சுகன் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கவிதை முயற்சி பற்றி…?

இதுவரை சுமார் பத்து கவிதைகளுக்கு மேலே நான் எழுதவில்லை. சில விசயங்களே உரைநடைக்குள் அடங்க மறுத்துக்கொண்டு கவிதை வாகனம் கேட்கும். அந்த விசயங்களே என்வரையில் கவிதைக்கானவையாக நான் கருதி வந்திருக்கிறேன். அந்த விசயங்களும் சிலவேளைகளிலேயே கவிதையாகின்றன. கவிதையில் பெரிய முயற்சி ஏதுமில்லை. அதேவேளை கவிதை வருகிறபோது தடுத்து வைத்துவிடுவதும் இல்லை.


0 ஈழத்து மொழியின் புரிதல் குறித்து சாதகமான அபிப்பிராயங்கள் தமிழகத்தில் ஒரு காலத்தில் இருக்கவில்லை. இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?

ஈழத்து மொழிக்கு அடிக்குறிப்பு போடவேண்டுமென்று கி.வ.ஜகந்நாதன் போன்றவர்கள் கூறியிருக்கிறார்கள் முன்பு. ஆனால் பழகப் பழக எதுவும் வசமாகிவிடும். ஈழத்து தமிழ் இப்போது தமிழக வாசகர்களுக்கு வசமாகியிருக்கிறது என்றே நினைக்கிறேன். புரிதல் என்ற காரணத்தில் எவ்வித விட்டுக்கொடுப்புமின்றியே பேச்சு மொழியை நான் என் படைப்புகளிலே கையாளுகின்றேன். துமிழக வாசகர்கள் அம்மொழியின் புதுமைச் சுவையை அனுபவித்தே வாசிக்கிறார்கள். இதனை அவர்களே கூறியிருக்கிறார்கள்.


0 இறுதியாக ஓர் அரசியல் சார்ந்த கேள்வி. புதிய அரசு இனப் பிரச்னையைத் தீர்த்து வைக்குமா?

பலபேரிடத்தில் அதுமாதிரி ஒரு நம்பிக்கை இருப்பதை நான் அறிவேன். ஆனால் எங்கள் அனுபவங்கள் அம்மாதிரி ஒரு முடிவெடுப்பதனை ஆக்ரோஷமாய் மறுக்கின்றன. ஒரு காரணம், சந்திரிகா குமாரதுங்கவே இன்னும் செயலதிகாரம் மிக்க ஜனாதிபதியாக அங்கே இருக்கிறார் என்பது. பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவினால் என்ன செய்யமுடியுமென்பது, போர் நிலைமையின் இன்னல்களையும் அழிவுகளையும் நோக்கி பௌத்த பீடங்கள் எடுக்கப் போகின்ற முடிவிலேயே தங்கியிருக்கிறது. என்றாலும் நல்லன நடக்குமென்று நாம் ஏன் நம்பக்கூடாது? தடை செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் இப்போது யாழ்ப்பாணத்துக்குள் அனுமதிக்கப்படவில்லையா? யுத்த சத்தத்தில் செவிபறை அதிர்வது குறைந்து மக்கள் ஆசுவாசம் அடையவில்லையா? இன்னுமொன்று. இப்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் யுத்தநிறுத்தம் வரும் தை 24வுடன் முடிவடைகிறது. அதற்கு மேலே என்ன நடக்குமோ, அதை வைத்துக்கொண்டு இலங்கையின் தலையெழுத்தை நாம் நிர்ணயம் செய்யலாம். நோர்வே குழு சமாதான பேச்சுவார்ததைக்காக அழைக்கப்பட்டிருப்பதாய் ஒரு செய்தி கூறுகிறது. அது உண்மையாகவே இருக்கட்டும். நல்லதே நடக்கட்டும்.

-இன்தாம் (வானவில்) 2002
(இந்நேர்காணல் சூரியசந்திரன் தொகுத்த ‘கதைகதையாம் காரணமாம்’ என்ற தொகுப்பில் நூல் வடிவிலும் வெளிவந்துள்ளது.)

No comments:

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...