மரணித்த பின்னும்


1971 ஆவணி 31இல் பிறந்த நிர்மலதா என்கிற ஒரு பெண்ணின் மரணம், செப்டெம்பர் 10, 2014இல் நிகழ்ந்தது.

எல்லோர்வரையிலும் நாள்தோறும் யுத்தங்களினாலும், பட்டினியாலும், நோயினாலும் சம்பவிக்கும் லட்சோப லட்சம் மரணங்கள்;போல் இதுவும் ஒன்றாயினும், அவளது தந்தைக்கு அது அவனது சொந்த மரணமேபோல் சுயத்தின்; இழப்பாயிற்று.

தாய் தந்தையர், கணவன் மனைவி, சகோதரங்கள், மேலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடையேகூட இவ்வளவு பாதிப்போடு ஒரு மரணம் நிகழ்ந்திருக்க முடியும். அன்பினது ஆழமான வேரூன்றல் என்பதிலிருந்து இந்தப் பாதிப்பு கூடியும் குறைந்துமாய் விளைகிறது. ஒரு நெருங்கிய உறவின் மரணத்தில் கண்ணீரே சிந்தாமல், ஒரு வாய்ச் சொல் அரற்றிப் புலம்பாமல் நொருங்கிப்போனவர்கள் இருக்கிறார்கள். போலவே, அழுது விழுந்து புரண்டு கதறிய பின், சுடலையிலிருந்து அல்லது மின்தகன ‘தோட்ட’த்தினின்று திரும்பிய நாளின் பொழுது விடிந்ததிலிருந்து காதலும் காமமும் இலௌகீகத் தேடல்களுமாய் பிரிவுகளை மறந்துபோனவர்களும் நிறையவே யதார்த்தத்தில் உண்டு. 

தந்தையானவன் உடைந்து நொறுங்கியது பெற்ற மகளென்ற பாசத்தில் மட்டும் உருவானதில்லை. தான் தவறவிட்ட அடைவுகளை அவளே தன் சுயபலத்தில் நிறைவேற்றிக்கொண்டிருந்தாள் என்பதனாலுமாகும்.
2014 செப்டெம்பர் 10இல் நிகழ்ந்த நிர்மலதாவின் மரணம் ஒருவகையில் முப்பத்தைந்து வரு~ங்களுக்கு முன்னரே விளைந்திருந்ததென்ற ஒரு சரீர சாஸ்திர நியதியிருக்கிறது.

சாதாரண காய்ச்சலில் தொடங்கிய வருத்தம் கடுமையாகி யாழ் பொதுமருத்துவ மனையில் கிடந்தபோது, இரண்டு ஓட்டைகள் (hole in the heart) இருதயத்தின் அறைக் கதவுகளில் இருப்பதால் அவசர சத்திர சிகிச்சைக்கு மருத்துவர் பரிந்துரைத்தபோது, இருதய அறுவைச் சிகிச்சையில் அபூர்வமாகவே வெற்றிகளைக் கண்டிருந்த யாழ் மருத்துவமனையில் அதை நிறைவேற்ற பெற்றோர் தயங்க, இறுதியில் மருந்துமூலமாகவே குணமாக்க முயன்றதில், குழந்தையின் மரணத்தின்மீதான வெற்றி அபூர்வமாகச் சாத்தியமாயிற்று.


அந்த ஆறு அல்லது ஏழு வயதிலிருந்து அவ்வப்போதான ஒரு போராட்டத்துடனேயே அவளது வாழ்வு தொடர்ந்துகொண்டிருந்தது.
மரணத்தின் சூதுகளையெல்லாம் அடக்கி மடியில் கட்டி வைத்துக்கொண்டுதான் பருவமடைந்த பின் அவள் திருமணமும் செய்தாள். இருசார் பெற்றோரின் சம்மதத்துடனெனினும் அது காதல் திருமணம்தான். அவளது உடல்நிலை காரணமாகவே சம்மதமளிக்க அவள் தந்தை தயங்கிக்கொண்டிருந்தான். தன் வாழ்வின் தவிர்க்க முடியாத அந்தத் தேவையையொட்டிய அவளது கெஞ்சுதல் அவன் மனத்தை இறுதியாக மாற்றியது. தன் பெற்றோருடனேனும் அவள் தன் காதலை போராடி வென்ற தருணம் அது.

சில ஆண்டுகளாயின அளவில், அவள் தந்தை கனடாவுக்கு வதிவிடவுரிமை பெற்று தமிழகத்திலிருந்து சென்றுசேர்ந்தான்.
மேலும்   ஓரிரு ஆண்டுகளாயின. நிர்மலா கர்ப்பம் தரித்தாள். சந்தோ~மான வி~யமாகவே இருந்திருப்பினும் அத் தந்தைக்கு உள்மனத்தில் ஓர் அச்ச உறுத்தல்.

பேறு காலத்துக்கு சுமாராய் ஒரு மாதம் இருந்தவளவில் நிர்மலாவுக்கு வயிற்று வலியும் இதய வலியும் சேர்ந்தே ஏற்பட்டன. உடனடியாக சென்னை மகப்பெற்று மருத்துவமனையில் அவள் சேர்க்கப்பட்டாள். செய்தியறிந்து துடித்துப்போன அத் தந்தை தமிழ்நாட்டில் தனக்குத் தெரிந்த நண்பர்களையெல்லாம் தொடர்புகொண்டு நிலைமை தெளிய சகல முயற்சிகளும் செய்தான்.

 அவனது நண்பர் ஒருவர் மூலம் ஏற்கனவே அறிமுகமாகியிருந்த மருத்துவப் பேராசிரியர் செ.நெ.தெய்வநாயகத்தின் உதவியினால், மகப்பேற்று மருத்துவமனைப் பொறுப்பு வைத்தியர் தொடர்பு கொள்ளப்பட்டு ஆகக்கூடுதலான கவனிப்புக்கான முயற்சிகள் செய்யப்பட்டன.

பின்னதாக மகளுடன் தொடர்புகொண்ட அவளின் தந்தை உடல்நல விசாரிப்பின் பின் வைத்தியர் என்ன சொன்னார் எனக் கேட்டபோது, அவனுக்குத் தெரியவந்தது, வைத்தியர் கேட்ட முதல் கேள்வியே, ‘உங்களுக்கு இதய வருத்தம் இருப்பது தெரிந்தும் உங்களது பெற்றோர் எவ்வாறு உங்களைத் திருமணம்செய்ய அனுமதித்தார்கள்?’ என்பதாக இருந்ததாய்.

நிர்மலாவுக்கு இதய வலி அதிகமானால் குழந்தையை சத்திர சிகிச்சைமூலம் வெளியே எடுக்கிறதாக ஒரு வல்லுநர்க் குழு வைத்தியர்களின் திட்டமிருந்தது. அதை அறிந்தபோது அவள் மருத்துவர்களுக்குச் சொன்ன ஒரே வார்த்தை: ‘என்னால் சுகப் பிரசவம் செய்யமுடியும்’.

அந்த முடிவு அவளது கையிலில்லையென்றாலும் அது அதிர்ச்சியாகவிருந்ததாம் வைத்தியர்களுக்கு. அது அவள் தந்தைக்கும்தான்.
எப்படியோ இதயவலி மேலும் அதிகமாகாமல், வயிற்றுநோயும் அடங்கி அவளுக்குச் சுகப்பிரசவமாயிற்று.

காலம் பார்த்திருக்க நாள்கள் நகர்ந்தன. நான்கு, ஐந்து ஆண்டுகளுமாயின. நிர்மலாவுக்கு இதய சத்திர சிகிச்சை நடந்தது. அந்த 2005ஆம் ஆண்டிலிருந்து மெதுமெதுவாக அவள் தேறித்தான் வந்தாள். உடம்பும் ஒரு பூரிப்பில்போல் பொலிந்துவந்தது. அவளுக்கு இதய சத்திர சிகிச்சை நடந்ததென்பதே எல்லாருக்கும், அவளுட்பட, நினைவிலிருந்து அகன்றேபோனது.

தனக்கு இன்னவின்ன நூல்களை யார்மூலமாகவாவது வாங்கிவித்து அனுப்பிவையென தந்தை இ-கடிதம் அனுப்புவான். அனுப்புகிறேனென்ற பதிலை அனுப்பிவிட்டு எல்லாவற்றையும் அவளேதான் செய்வாள்.
நூல் விற்பனை நிலையங்கள், பதிப்பகங்கள் யாவும் அவள் வீட்டு முற்றங்களாயின. அவளது தந்தை தேவகாந்தனை நேரிலோ, பெயர்மூலமாகவோ அவர்கள் அறிந்திருந்தவகையில் அந்த சௌஜன்யம்; சாத்தியமாயிற்று. கேட்ட நூல்களோடு புதிதாக வந்திருக்கும் அதே தரத்திலான அவன் கேட்டிராத நூல்களும் அவ்வப்போது வரும்போது, அவளது தந்தைக்கு வியப்பு மேவும்.

கூர் கனடா கலை இலக்கியத் தொகுப்பு ஆரம்பித்த காலத்தில் 2008க்கான அதன் முதல் இதழை மித்ர பதிப்பகம் அச்சாக்கிக் கொடுத்தது. இரண்டாவதன் அச்சாக்கத்தை வடலி பதிப்பகம் நிறைவேற்றியது. அத்தனையிலும் அவளது பங்களிப்பு கணிசமாகவிருந்தது.

மூன்றாவது இதழுக்கான வேலை பொருள்வயின் காரணமாய் தாமதமாக, ஒரு சனியினதோ ஞாயிற்றினதோ காலையில் அவளது தந்தை கனடாவிலிருந்து தொலைத் தொடர்பு கொண்டபோது, ‘கூர் அடிக்காததுக்கு உண்மையில பணப் பிரச்சினைதான் காரணமோ?’ என ஒருசமயத்தில் வினவினாள்.

அதற்கு அவள் தந்தை, ‘அதுதான். வேறென்ன பிரச்சினை’ என்றான். பின்வந்த சமயங்களிலெல்லாம் அவன் நினைத்து நினைத்து இறும்பூதடைந்த வாசகத்தை அப்போது அவள் சொன்னாள்: ‘ஏலுமான காசை அனுப்புங்கோ, அப்பா. நான் அதுக்குள்ளயே எல்லாத்தையும் முடிச்சுத் தாறன்.’
‘எப்பிடியெணை?’

‘ஏலுமப்பா. நாங்கள் எல்லா வேலையளயும் பிறசிலை குடுக்காமல் ரைப்பிங், லே அவுட்டுகளை அங்கங்க செய்விச்சிட்டு, நாங்களே பேப்பரையும் வாங்கி பிறசில குடுத்து, தெரிஞ்ச பைண்டர் ஒராள் இருக்கிறார், அவரைப் பிடிச்சு பைண்டிங்கையும் செய்திட்டா, கொஞ்சம் கூடக் குறைய வந்தாலும், முந்தி முடிஞ்ச பாதிக் காசில இப்ப முடிச்சிடலாம்.’

அவளே லே அவுட் செய்து, அவளே படங்களும் தேர்வுசெய்து உருவாக்கியதுதான் சய(-) எட்டாவது கூர் தொகுப்பான ‘எங்கும் ஒலிக்கிறது காற்று’.

தந்தை ஒருநாள் கேட்டான், எவ்வாறு ஆர்வம்மட்டுமே அவளுக்கு கணினிவகையான அறிவைத் தந்தது என.

‘விஜயகாந்த் கட்சியிலயிருந்து வசதியில்லாத பொம்பிளயளுக்கு கம்ப்யூட்டர் வகுப்பு நடத்துகினம். நான் அதுக்குப்; போறனான்.’

அந்தத் துணிவிலேதான் ‘லங்காபுரம்’ நாவல் அச்சாக்கும் முழுப் பொறுப்பையும் அவளிடத்தில் கொடுத்தான் அவன். அழிந்த ராவண நகரான லங்காபுரத்தின் படமொன்றை கணினியிலே தேடி நாவலின் அட்டையையே வடிவமைத்தவள் அவள்தான்.

தந்தை ஒருநாள் இந்தியாவிலிருந்து ஆகவேண்டிய ஒரு வேலையைச் செய்துமுடித்துத்தரக் கேட்டபோது, இரண்டு மாதங்கள் பொறுக்கச் சொன்னாள். காரணம் கேட்டபோதுதான் தந்தையானவனுக்குத் தெரிந்தது, அவள் பி.ஏ. முதலாமாண்டுப் பரீட்சை எழுதவிருப்பது.

எழுபதுகளின் பின்பகுதியில் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பில் தேறிய அவளப்பன், ஏதோ காரணத்தால் பல்கலைக் கழகம் செல்ல முடியாதுபோக, அவன் தனியார் அகடமி ஒன்றில் சேர்ந்துதான் பி,ஏ. முதலாமாண்டை முடித்திருந்தான். அதற்கு மேலே அவனால் நகரவே முடியவில்லை. அவனது மகள் இறந்தபோது மார்கழியில் வரவிருந்த பி.ஏ. இறுதியாண்டுத் தேர்வுக்காக அவள் படித்துக்கொண்டிருந்தாள்.

காலம் இவ்வளவு கொடூரமாக இருந்திருக்கக்கூடாது.
அவளது திடீர் மரணம் கேட்டு நெஞ்சுவெடிக்கும் சோகத்தோடு கனடாவிலிருந்து தந்தை தமிழகம் சேர்ந்தபோது ராமச்சந்திரா மருத்துவமனையில் அவளது சடலம் வைக்கப்பட்டிருந்தது. வரவேண்டிய உறவினர்களுக்காக இறுதிக் கிரியைகள் நான்கு நாட்கள் கழித்து ஞாயிற்றுக் கிழமை நடாத்த ஏற்பாடாகியிருந்தது.

சனிக்கிழமை இரவில் மொட்;டை மாடியில் தன் மனம் கனக்க தந்தை நின்றிருந்த வேளையில் முற்றத்துச் சாடியில் வைத்திருந்த ஒரு செடி உறுத்துவதுபோல் அவன் கண்ணில் பட்டது. பொறாமை, கண்ணூறு என்பன ஒரு குடும்பத்தைத் தாக்காமல் கிராமங்களிலே காணி  எல்லையோரங்களில் அச்செடி வளர்க்கப்படுவதுதான். அதன் பெயர் சதுரக் கள்ளி. முந்திய தடைவை வந்திருந்தபோது எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அது வளர்க்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், கிராம மக்களின் அந்த நம்பிக்கையின் இன்னொரு பகுதியை அவன் தன் மகளுக்கு அறிவுறுத்தியிருந்தான். அதாவது வளர்க்கப்படும் சதுரக் கள்ளி அந்த வீட்டு மனிதர்களின் உயரத்துக்கு மேல் எந்தக் காரணம்கொண்டும் வளர விட்டுவிடக்கூடாது. ஆயின் அது அந்த வீட்டு மனிதர்களில் யாரையேனும் பலி வாங்கக்கூடும் என்பதுதான் அந்த கள்ளி வளர்க்கும் சுபபட்சத்துக்கு பின்புறத்திலுள்ள அபரபட்சம்.

நிம்மி அந்தக் கள்ளிச் செடியை வெட்டியிருந்தாள். ஆனாலும் ஏறுக்குமாறாகவே எல்லாம் நடந்துவிட்டிருந்தது.

எண்ணியபோது நெஞ்சு பொருமி அழுதான் அந்த இருளுக்குள்ளும் தனிமைக்குள்ளுமாய் நின்றிருந்து.

காலம் நியதிக்குட்படாதது என்பது அவனுக்குப் புரிதலாயிற்று.
வளர்க்கப்படும் சதுரக் கள்ளி ஆளுயரத்துக்கு மேலே வளர்ந்தாலென்ன, வெட்டி கட்டையாக விட்டிருந்தாலென்ன நடப்பது நடந்தே தீருகிறது. காலம் கொடியதானது என்பது அங்கிருந்தேதான் முளைவிடுகிறது.

நிம்மியின் உடல் தகனத்தின் பின்னொருநாள் தன் மனக்குமுறல்களை வீட்டில் தங்கியிருந்த உறவினர்களோடு பகிர்ந்துகொள்கையில் அவளது கணவர் புலம்பிச் சொன்னார்: ‘போகாத கோயிலில்லை, பிடிக்காத விரதமில்லை. அவளுக்கு கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி. கடவுளெல்லாம் பொய்யுங்க. அது உண்மையாயிருந்தா அவளுக்கு ஒரு சான்ஸாவது குடுத்திருக்கலாம். ஒரேயொரு சான்ஸ். எத்தினைபேருக்கு ரண்டு மூணு அட்டாக்கூட வந்திருக்கு,’

அவளது தந்தை குலுங்கினார். விக்கல்போல சில விம்மல்கள்.
பக்கத்து வீட்டுப் பெண், மகள் உடனிருக்க தான் வளர்த்த அந்தப் பூஞ்செடிகளின் முன்;னால் முற்றத்தில் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவளுக்கு வந்த இதயத் தாக்கு மூன்றே விநாடிகளில் அவளைக் கொண்டுபோயிருந்தது.

மரணம், அவளது இறுக்கிய பிடியிலிருந்துதான் தன்னை விடுவித்துக்கொண்டு ஓடியிருக்கும்.

அவளது கடவுள் நம்பிக்கையினால்தான் தகனத்திலன்று கடலிலே அஸ்தியைக் கரைத்த பின்னும், ஒரு பகுதியை காசி சென்று கங்கையில் கரைக்க அனுப்பிய பிறகும், மீதியை எடுத்துச் சென்று இராமேஸ்வரம் கடலில் தானே கரைத்தான் அத் தந்தை.

அவள் தன் தந்தையாக இருந்து இயங்கியவள். அது அவளில்லாவிட்டால் அவள் தந்தையும் இல்லையென்றேயாகும். வாழ்ந்துவிடுவானோ தெரியாது, இப்போதைக்கு அவன் ஜீவிக்கமட்டும் செய்துகொண்டிருக்கிறான்.

‘ஐம்பத்தைந்து வரு~ங்களுக்கு முன் உன் தந்தை இறந்தார். அப்போதும் இதைத்தான் சொன்னாய். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்  உன் தாயின் இறப்பின்போதும் இவ்வண்ணமே நீ எண்ணியிருந்தாய். இன்று உன் மகளின் இறப்புக்கும் உன்னிடத்திலிருந்து வருவது அதே வார்த்தைகள்தான். இரண்டு பெருமரணங்களின் பின்னும் நீ வாழ்ந்திருந்தாயல்லவா?’ என நகுந்து கூறி காலம் அவன் கண்ணெதிரிலே நகர்ந்து சென்றது.

‘கர்த்தரால் மனிதவினத்தின் மேல் வீசப்பட்ட சாபம்தான் மரணம் என்கிறது விவிலியம். அதை மட்டும் அறிந்த உன்னால் இடையிட்டு மனித ஜாதியின்மேலாக வீழ்ந்த பலவாகிய சாபங்களின் மரண பலன்களை கருதக்கூட முடியுமா?’ என தன்னுள் எண்ணியபடி காலத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான் அவள் தந்தை. 

0

 தாய்வீடு, அக்டோபர் 2014 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்