மதிப்புரை:விமர்சனத் தமிழ்
விமர்சனத் தமிழ் தி.க.சி. 1959-92 காலப் பகுதியில் தி.க.சி. அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிய முப்பாத்தாறு கட்டுரைகளின் தொகுப்பு இது. மாநாடுகளில், கருத்தரங்குகளில் வாசித்து பத்திரிகைகளிலும், நூல்களிலும் இடம்பெற்ற ஆய்வுரைகளும் இதில் அடங்கும். நூல் பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது. அப்படி அது பேசவேண்டும். சுமார் கால் நூற்றாண்டுக் காலத்திய பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள், வேறுவேறு இலக்கியப் போக்குகள், இலக்கியவாதிகளின் மறைவுகள் யாவும் சமகால விமர்சகனின் பார்வையில் பட்டு தாக்கங்களை ஏற்படுத்துவது தவிர்க்கக்கூடியதல்ல. செஸ்டார்டன் குறிப்பிட்ட ‘Good bad literature’ என்ற எழுத்துவகைகளையும், இன்னும் கீழ்த்தர எழுத்துக்களையும் நோக்கி தீவிரமான எதிர்ப்புக் கணைகளைச் செலுத்தும் தி.க.சி.யை நூலின் முற்பகுதிக் கட்டுரைகளில் காணமுடிகிறது. தி.மு.க.வின் பிரிவினை வாதம், அதன் இலக்கியப் போக்குகளுக்கு எதிராக காரமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார் ஆசிரியர். ‘அறிஞர்-கலைஞர் கூட்டம் சிருஷ்டித்த இலக்கியங்கள் அனைத்தும் நச்சு இலக்கியங்களே’(பக்:35). ‘வேலைக்காரி’ சினிமாவுக்காக அண்ணா கல்கியில் பாராட்டப் பெற்றதைக்கூட கண...