மதிப்புரை:விமர்சனத் தமிழ்


விமர்சனத் தமிழ்
தி.க.சி.


1959-92 காலப் பகுதியில் தி.க.சி. அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிய முப்பாத்தாறு கட்டுரைகளின் தொகுப்பு  இது. மாநாடுகளில், கருத்தரங்குகளில் வாசித்து பத்திரிகைகளிலும், நூல்களிலும் இடம்பெற்ற ஆய்வுரைகளும் இதில் அடங்கும்.

நூல் பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது. அப்படி அது பேசவேண்டும். சுமார் கால் நூற்றாண்டுக் காலத்திய பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள், வேறுவேறு இலக்கியப் போக்குகள், இலக்கியவாதிகளின் மறைவுகள் யாவும் சமகால விமர்சகனின் பார்வையில் பட்டு தாக்கங்களை ஏற்படுத்துவது தவிர்க்கக்கூடியதல்ல.

செஸ்டார்டன் குறிப்பிட்ட ‘Good bad literature’ என்ற எழுத்துவகைகளையும், இன்னும் கீழ்த்தர எழுத்துக்களையும் நோக்கி தீவிரமான எதிர்ப்புக் கணைகளைச் செலுத்தும் தி.க.சி.யை நூலின் முற்பகுதிக் கட்டுரைகளில் காணமுடிகிறது.

தி.மு.க.வின் பிரிவினை வாதம், அதன் இலக்கியப் போக்குகளுக்கு எதிராக காரமான கருத்துக்களைத் தெரிவிக்கிறார் ஆசிரியர். ‘அறிஞர்-கலைஞர் கூட்டம் சிருஷ்டித்த இலக்கியங்கள் அனைத்தும் நச்சு இலக்கியங்களே’(பக்:35). ‘வேலைக்காரி’ சினிமாவுக்காக அண்ணா கல்கியில் பாராட்டப் பெற்றதைக்கூட கண்டிக்கிறார். ஒரு கோபங்கொண்ட தி.க.சி.யை இந்தப் பகுதியிலே காணமுடிகிறது. அதனால், சில இடங்களில் சமச்சீர்
மீறியும் கருத்து தெரிவித்துவிடுகிறார்.

விமர்சகனுக்கு மாறுபாடான கருத்து இருக்கலாம். கோபம் கூடாது. கல்கி, குமுதம், விகடன் பத்திரிகை எழுத்துக்களின்மேல் தி.க.சி. தொடுத்த இந்த சொல்யுத்தம், மணிக்கொடிக் காலம் தொட்டது. இன்றுவரை தொடர்வது. வரலாறு அதைச் செம்மையாகப் பதிவு  செய்திருக்கிறது. ஆனால், இங்கே தி.க.சி.யின் தீவிரம் நம்மைத் திகைக்கவைக்கிறது.

விந்தனும், ஜெயகாந்தனும் தி.க.சி. போர் தொடுத்த இந்த வியாபாரப் பத்திரிகைகள் வாயிலாகத்தான் தமது சிறந்த படைப்புக்களைப் படைத்தார்கள் என்பதை இலகுவில் ஒதுக்கிவிட்டு, ஜனரஞ்சக எழுத்தின் மேல் அத்தனை காட்டமான ஒரு அபிப்பிராயத்தைச் சொல்லிவிட முடியாது.
திராவிட இயக்கம் சார்ந்த கலை இயக்கங்கள் பற்றியும் தி.க.சி.யிடமிருந்து சரியான விமர்சனம் கிடைக்கவில்லை.

திராவிட இயக்கம் அன்றைக்கு ஒரு கால தேவை. அது மதிப்பிறக்கம் பெற்று வெறும் வார்தைகளளவில் மட்டுமே வாழவேண்டிய இன்றைய நிலையும் அதே காலதேவை விதிப்பட்டதுதான். ஆனால், சமூகத்தின் ஒரு சாரார் சொத்துப்போல் இருந்த கலை இலக்கியங்களை, அதன் இறுகிய கூண்டை உடைத்து வெளிக்கொண்டுவந்த பெருமை திராவிட இயக்கத்துக்கு உண்டு. நாடகத்திலும், சினிமாவிலும் அதன் பாதிப்பு மிப் பாரியது. அவர்கள் கலை இலக்கியச் சிருஷ்டிகளில் பெரிதாக எதையும் செய்துவிடவில்லைதான். ஆனால் பின்வந்த சாதனையாளர்களுக்கான தளத்தை அமைத்து வைத்திருந்ததே அவர்களின் மகத்தான சாதனையாகக் கருதப்பட முடியும். திராவிட இயக்கம் இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டமாகும்.

இதில் பொன்னீலன் ஒப்புக்கொள்கிற அளவுகூட (ஆதார நூல்: தற்காலத் தமிழ் இலக்கியமும் திராவிட இயக்க சித்தாந்தங்களும்) தி.க.சி. ஒப்புக்கொள்ளவில்லையென்றாலும், தற்பொழுது அவரது அணுகுமுறை சிறிதே மாறியிருக்கிறது என்பதை, அண்மையில் ‘புதிய பார்வை’ (16.08.1993) நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துக்கள் நமக்குத் தெளிவாக்குகின்றன.

‘பதினேழு ஆண்டில் இலக்கியம்’, ‘1971ஆம் ஆண்டில் கசடதபற’, ‘வாசக நோக்கில் தமிழ்ச் சிறுகதைகள்’, ‘தமிழ்ச் சிறுகதைகள்- ஓர் உரத்த சிந்தனை’, ‘பன்னிரண்டு கதைகள்- ஒரு மதிப்பீடு’ ஆகிய கட்டுரைகள் செய்திறன் நேர்த்தி மிக்கவை. ஆய்வு நெறிமுறைப்பட்ட போக்கினை இவற்றில் காணமுடிகிறது.
‘தமிழ்ப் பத்திரிகைத்துறையில் சித்தாந்தப் போராட்டம்’, ‘படைப்புலகில் சித்தாந்தப் போராட்டம்’, ‘இலக்கிய விமர்சனத்துறையில் தற்காலப் படைப்புகளும் போக்குகளும்’ போன்ற கட்டுரைகள் மார்க்சிய சித்தாந்தம்பற்றி, விமர்சனமுறைபற்றி, புதுமை இலக்கியம் படைப்பதுபற்றிப் பேசுகின்றன. 
‘கண்ணில் தெரியுது வானம்’, ‘நாகம்மாள்’, ‘வெளிச்சத்தை நோக்கி…’ ஆகிய நாவல்களின் மதிப்புரைகள் இந்நூலுக்கு இன்னும் ‘அழகு’ சேர்க்கின்றன. தி.க.சி.யின் முழு ஆளுமையும் இதுமாதிரியான ரசனைமுறைத் திறனாய்விலேயே தென்படுகின்றன என்பது நிஜமான வார்த்தைகள்.

‘புதுமையிலும், தனித் தன்மையிலும், சோதனையிலும் ஈடுபாடுகொண்ட சிறுகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பெருகி வருகிறது. இவர்களின் சாதனைகளில் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. இவர்களது தத்துவக் கண்ணோட்டத்திலும் மாறுபாடுகள் உள்ளன. எனினும் இவர்களும், இவர்களைப் போன்ற இளம் படைப்பாளிகளும் என்னைக் கவர்கிறார்கள்’ (பக்: 129).

இதுதான் தி.க.சி.

பாரம் இருக்கிற இடத்தில் பட்சம் வைக்கிற க.நா.சு.வின் பண்பும் இதுதான்.
வெங்கட் சாமிநாதனைவிட க.நா.சு.வை அணித்தான சக விமர்சகராக தி.க.சி. கொள்வதற்கும் இந்தப் பண்பின் அடிப்படையிலான ஆய்வு ஒற்றுமையே காரணமாகி நிற்கிறதோ என்றும் யோசிக்க இடமுண்டு.

தனது விமர்சன முறைமைக்கு மார்க்சீய சித்தாந்தமே அடிப்படை என்று தி.க.சி. பிரகடனப் படுத்துகிறார் (‘நான் விஞ்ஞான சோசலிசத்தில் அசைக்க முடியா நம்பிக்கையுள்ளவன்’, பக்: 103). ஆயினும் அவரது விமர்சன அழகு அவர் தனது சுயரசனையில் தன் சித்தாந்தத்தை வைத்துப்  பார்ப்பதும், சித்தாந்தத்தை ஒரு எல்லையோடு நிறுத்திக்கொண்டு படைப்பை மட்டும் எடைபோடுவதும்தான். இதை நூலின் பிற்பகுதி முழுக்க பரக்கக் காணலாம். இந்த அம்சம் பிற மார்க்சிய விமர்சகர்களான க.கைலாசபதியிடமோ, கா.சிவத்தம்பியிடமோ, நா.வானமாமலையிடமோ காண முடியாதது. அதனால்தான் சிறுகதைத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய புதுமைப்பித்தனைவிட கு.ப.ரா.வை தி.க.சி.க்குப் பிடித்துப்போகிறது (ஆதார நூல்: தி.க.சி.யின் திறனாய்வுகள்).

விமர்சன ஆழமும், ஆரவாரமின்மையும், நிதானமும், சகிப்புத் தன்மையும் பிற்காலத்திய கட்டுரைகளின் பொதுப்பண்பு. இவர் உபயோகித்த நடை, மொழி, இன்னொரு சிறப்பம்சம். விமர்சனத் தமிழுக்கான ஒரு சிறந்த நடை தி.க.சி.யினுடையது. மொழிகூட அப்படித்தான். இவரின் நடையையும், விமர்சன முறையையும் கொண்டே, தலைப்பும் ஆசிரியர் பெயருமற்ற சில நூல்களிலிருந்து தி.க.சி.யின் நூலை ஒருவரால் சுலபமாக தெரிந்தெடுத்துவிட முடியும். அத்தனைக்கு தி.க.சி.யினுடைய நடையில் ஒரு முத்திரை இருக்கிறது. இது இலகுவானது, தெளிவானது.

கட்டுரைகள் பல தரத்தன. ஆயினும், அவற்றுள் சிறந்த, மிகச் சிறந்த கட்டுரைகளின் தன்மை இதுதான்.

மேலும் சில கட்டுரைகள் விமர்சனத் துறையில் ஒரு தனிப்போக்கையே கைக்கொள்கின்றன என்றும் துணிந்து சொல்லலாம். இது க.நா.சு.விடம் இல்லாதது. கைலாசபதியிடமும்தான். புனைகதையின் கதையை மிகச் சுருக்கமாகச் சொல்லல், இயல்பில் அதன் நெறியை ஆராய்தல், கட்டுக்கோப்பைக் கவனித்தல், பின் நடையை விமர்சித்தல் என தி.க.சி. பாணி விமர்சனம் செல்லும். கடைசியில் முத்தாய்பாய் புனைகதையின் மொத்தப் பெறுமதி கூறப்படும். ‘இந்த அற்புதமான தமிழ் நாவல்’ (நாகம்மாள், பக்:96) என்றோ, ‘காந்தி யுகத்தைப் பிரதிபலிக்கும் தலைசிறந்த நாவல் இனிமேல்தான் தமிழில் எழுதப்படவேண்டும்’ (மண்ணில் தெரியுது வானம், பக்: 104) என்றோ தன் கருத்தை முன்வைப்பார் தி.க.சி.

இது ஒரு வெற்றிகரமான விமர்சன முறையா என்பது எனக்குச் சந்தேகம். ஏனெனில், சற்றே சமன் தவறினாலும் இந்த விமர்சன முறை விமர்சகனைப் பக்கம் சார்வதாய் சந்தேகப்பட வைத்துவிடக்கூடியது. ஆயினும், தி.க.சி.யின் பலம் இந்த விமர்சன முறையில்தான் இருக்கிறது.

இவ்வாண்டில் வெளிவந்திருக்கிற தி.க.சி.யின் இரண்டாவது விமர்சன நூல் இது. அன்னம் வெளியிட்டிருக்கிறது. நூலின் பன்முகப் பார்வை, விவரணம், முடிவுக்குக் காரணம் சொல்லும் நேர்த்தி, விஷயத்தை நழுவவிடாது பற்றி ஆழ்ந்துசெல்லும் சிறப்பு என்பவற்றால் தமிழ் விமர்சனத்துறைக்கு மேலும் மெருகுசேர்க்கிறது இந்நூல்.

00000

 புதிய நம்பிக்கை, 55வது இதழ், அக்டோபர் 1993

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்