மதிப்புரை:: ‘மக்கத்துச் சால்வை’


 

 எஸ்.எல்.எம்.ஹனீபாவின் 

‘மக்கத்துச் சால்வை’


1967 தொடங்கி 1991வரை பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு பத்திரிகைகளில் வெளியான பதினைந்து சிறுகதைகளைத் தொகுத்து ஒரு நூலாகத் தந்திருக்கிறார் அதன் ஆசிரியர் எஸ்.எல்.எம்.ஹனீபா. 1992இல் வெளிவந்திருக்கும் இந்நூல் ஈழத்தில் வெளியான சிறுகதைத் தொகுதிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒன்றென துணிந்து கூறலாம்.

‘மக்கத்துச் சால்வை’ என்பது ஈழத்து வட்டாரச் சொல். மட்டக்கிளப்பில் முஸ்லீம் மக்களிடையே வழக்கில் இருக்கிறது. இந்த தொகுப்பிலுள்ள ஒரு கதையின் தலைப்பையே நூலின் தலைப்பாக இட்டிருக்கிறார் ஆசிரியர். ‘இந்தப் பெயர் என் மரபையும் சம்பிரதாயங்களையும் பேணுவதாக அமையும்’ என்பதால் ஆசிரியர் நூற்பெயருக்கான சிறுகதையைத் தெரிந்திருப்பாரானால், அதுபற்றிச் சொல்ல ஏதுமில்லை. ஆனால் ‘மக்கத்துச் சால்வை’யை விட ‘வேலி’, ‘சலனம்’, ‘மருமக்கள்’, ‘நாயம்’, ‘மருத்துவம்’ போன்ற கதைகள் கலைநேர்த்தியும், சமுதாயப் பார்வைத் தீட்சண்யமும்  கூடியவை என்பதும், தலைப்புக்கதையாகச் சிறக்கக்கூடியவை என்பதுமே என்னளவிலான முடிவு.

தமிழகத்தின் சிறந்த திறனாய்வாளர்களில் ஒருவரான தி.க.சி. பாணியில் கதைகளைத் தனித்தனியாக சுருங்கக் கூறி விமர்சனம் செய்வது இந்நூலைப் பொறுத்தவரை அவசியமில்லை. ஆயினும் மக்கத்துச் சால்வைபற்றி சில வார்த்தைகள்.

 மிக மரபு சார்ந்த, மண் வாசைன கூடிய கதை இது. பழைய ‘மத்திச் செம்’ போய், புதிய தலைமுறையின் மத்தியஸ்துவத்தில் ஜும்மா தொழுகை நாளில் ஒரு சிலம்பப் போட்டி நடக்கிறது. முப்பது வருஷங்களுக்கு முன்னால் ஒரு சூழ்ச்சியின் மூலம் வெற்றிபெற்ற அகமது லெவ்வை அண்ணாவியாருக்குக்கும், அப்போட்டியில் தோற்றதாக முடிவு செய்யப்பட்ட நூகுத்தம்பி மஸ்தானுக்கும் இடையிலான போட்டி அது. அதில் அண்ணாவியார் வெல்லப்படவிருக்கிற அந்தக் கடைசித் தருணத்தில், தன் மனிதத் தன்மையைக் காட்டி, அவரைக் கட்டித் தழுவுகிறார் நூகுத்தம்பி. முப்பது வருஷங்களாக தன் வெற்றியின் அடையாளமாக தரித்திருந்த மக்கத்துச் சால்வையை - பொன்னாடையை, அண்ணாவியார் நூகுத்தம்பிக்கு அணிவிக்கிறார். இதுதான் கதை. மக்கத்துச் சால்வை என்பதன் அர்த்தமும் இதுதான்.

அதிகமான கதைகளில் மனிதநேயம்-மானுஷிகம், அதிகம். மக்கத்துச் சால்வை என்ற கதையில் இவ்வுணர்வு சற்றே தூக்கல்தான். ஆயினும், மனிதநேயம் பேசும் கதைகளே நல்ல சிறுகதைகளாகும் தகுதியுடையன என்பதில் எனக்கு அபிப்பிராய பேதம்  உண்டு.

தோசை என்பது வட்டமாகவும் இருக்கவேண்டும். அதுவே இயல்பும், இலகுவும் ஆகும். அதுபோல் சிறுகதையென்பது அதன் லட்சணத்தோடும் விளங்கவேண்டும்.

அவ்வாறு சிறுகதை லட்சணத்தோடுள்ள கதைகள் தொகுப்பிற்குப் பெருமையளிக்கின்றன.

சொல் உபாசனை நடையில் தெரிகிறது. ‘லா.ச.ரா.வை துரோணாச்சாரியராய்ச் சம்பாவனை செய்யும் ஒருவனுக்கு’ என்கிறார் எஸ்.பொ. அப்படியாயின் சொல் உபாசனை-வார்த்தை வளக் கணக்கெடுப்பு- தவிர்த்தல் எங்ஙனம்? இருந்தும் கருத்தைக் கொல்லாத, பாத்திரங்களின் கழுத்தை நெரிக்காத அவதானம் ஆசிரியரிடத்தில் இருந்துள்ளது என்பதும் உண்மையே.

‘வேலி’யின் ராஹிலா, ‘சன்மார்கம்’ கதையில் பேசுகிற நான், ‘மக்கத்துச் சால்வை’யில் வரும் நூகுத்தம்பி மஸ்தான், ‘கடுகு’ கதையில் வரும் மன்சூர், ‘வேட்டை’யின் பரிதாப நாயகன் காதன் யாவருமே நூலை வாசித்த பின்னால் நெஞ்சத் தவிசில் இடம்பெற்றுவிடுகிறார்கள். இது ஆசிரியரின் கதா வெற்றி.

எஸ்.பொ.வின் முன்னுரை கண்டதும் நெய்த நூலினும் தைத்த நூல் வலிதாகிவிடுமோ? காகத்தின்  தலையில் பனம்பழத்தை வைத்ததுபோல் பாரமாகிவிடுமோ?  என்று நினைத்தேன். ஆயினும், எஸ்.பொ.வின்; முன்னீட்டைத் தாங்கக்கூடிய அளவுக்கு தொகுப்பு பலமாகவே உள்ளது.
முன்னீட்டில் எஸ்.பொ.வின் கருத்துக்கள் மறுபரிசீலனைக்கு உரியவை. ஆனால் ஒன்றைமட்டும் தன் பதினாறு பக்க நீண்ட முன்னீட்டில் விவாதமற்று ஏற்றுக்கொள்ளும் வண்ணம் சொல்லியிருக்கிறார் அவர். ‘மட்டக்கிளப்பு மாநிலத்தின் வாழ்க்கையை முழுமையாக அல்லாவிட்டாலும் வலு நேர்மையாக தரிசிக்க விழையும் முதலாவது சிறுகதைத் தொகுதி இதுதான்’ என்ற எஸ்.பொ.வின் கூற்று மிகையல்ல.

உருவம், உத்தி, நடை, கருத்து என்ற பல அம்சங்களிலும் சிறந்த சில கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. நிகழ்கால அரசியல் பின்னணியில் சில அவலங்களை சில கதைகளில் மிக அழகாக விழுத்தியிருக்கிறார் ஹனீபா.
இலங்கையர்கோனின் ‘வெள்ளிப் பாதரசம்’, டானியலின் ‘டானியல் சிறுகதைகள்’, நீர்வை பொன்னையனின் ‘மேடும் பள்ளமும்’, டொமினிக் ஜீவாவின் ‘தண்ணீரும் கண்ணீரும்’ எப்படி வடபகுதிச் சமூக வாழ்வை சிறப்பாக சித்தரித்துக் காட்டுகின்றனவோ, எஸ்.பொ.வின் ‘வீ’ எப்படி கிழக்கும் வடக்கும்பற்றி சிறப்பாகப் பேசுகின்றதோ, அதுபோல் ஹனீபாவின் இந்த ‘மக்கத்துச் சால்வை’ கிழக்கிலங்கை முஸ்லீம் மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை நிதர்சனத்தில் வைக்கிறது.



0


புதியநம்பிக்கை,  53வது இதழ், ஜுன் 1998 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்