Wednesday, August 24, 2016

இறங்கி வந்த கடவுள்


(சிறுகதை)
இறங்கி வந்த கடவுள்


அவரது கையில் அந்த ஜன சமூகத்தின் மூலக்கனலின் பாத்திரம் இருந்தது. அவர்களது இறைச்சியைச் சுடுவதற்கான தீயை அவர்கள் அதிலிருந்தே பெற்றுக்கொண்டார்கள். கனலை உடைய அவர் தன்னைக் கடவுளென்றார்.

கையில் கனலும், தலையில் சடாமுடியுமாய் இருந்த அவரது ரூபம் பலபேரை ஆகர்ஷம் கொண்டது. பக்தர்கள் பெருகிவந்தவேளையில் ஜனசமூகமும் தனக்கான தீயை கடைகோல்களில் கடைந்தெடுக்க கற்றுக்கொண்டிருந்தது. ஆனாலும் காலகாலமாய் தன் கையில் மூலக்கனலேந்தி வாழ்வாதாரம் தந்தவரை நன்றியோடும், அவரது வல்லமையில் பெரும் நம்பிக்கையோடும் பாடிப் பரவசப்பட்டு நின்றது அது.

ஒருநாள் உலகத்தின் மிகவுயரமான மலைச்சிகரத்தில் ஏறிய அந்தக் கடவுள் சூழவும் நோக்கினார். வேறு கடவுளெவரையும் அவரால் கண்டிருக்க முடியவில்லை. உடனே தானே முழுமுதற் கடவுளென பிரசித்தம் செய்தார்.

அவருக்கு நிறைய பக்த கோடிகள் இருந்தார்கள். வேண்டுபவர் வேண்டியதை ஈபவராக இருந்தாலும், பெரும்பாலும் அனைவரும் அவரையே வேண்டுபவர்களாக இருந்தார்கள். அது அந்தக் கடவுளுக்கு பேருவகையாக இருந்தது. அப்பேருவகையில் கனல்கொண்ட கையோடு அவர் நிருத்தம் செய்தார்.

அவரது தோற்றமே பரவசம் செய்ததில் காட்சியை யாசித்த பக்தர்கள் மிகவதிகமாக இருந்தார்கள்.  தரிசன இன்பத்தில் திளைக்க, வரக்கூடிய சிரமங்களையெல்லாம் தாங்கத் தயாராகி, மலைகளுக்கும், வனங்களுக்கும் சென்று சித்தமொடுங்கி தவமியற்ற பலபேர் முயன்றார்கள். கடவுள் அவர்களுக்கு அவரவர் தவத்தின் உறுதிப்பாட்டுக்கேற்ப தர்ஷன வரமளித்தார். அவர்கள் முனிவர்களெனப் பெயர் பெற்றார்கள்.
காலம் தன் கதியிலிருந்து உலகின்  இயக்கத்தை மாற்றியது.

தபசிகள் அருகினார்கள்.

அக்காலத்தில் சிலர் வனங்களுக்கும், மலை முழைஞ்சில்களுக்கும் சென்று உலக இயக்கத்தின் மூலம் தெரிந்து சித்தம் தெளிந்தனர். அவர்களைச் சித்தர்கள் என்றார்கள்.

காலப்போக்கில் சித்தர்களும் அருகினர்.

அப்போது காலம் உலகத்தின் இயக்க வேகத்தை இன்னுமின்னுமாய் வெகுப்பித்திருந்தது.

கடவுள் அப்போது பக்தர்களும் அருகியிருப்பதைக் கண்டார்.
கடவுளுக்காக பக்தர்களே தவிர, பக்தர்களுக்காக கடவுள் இல்லையே! கடவுள் ஏதும் நினையாமலிருந்தார்.

உலகம் இன்னும் பேரியக்கம் பெற்றது.

இப்போது கடவுள் ஐயமுறலானார், வேறு கடவுளரும் உளரோவென. அவர்கள் பக்தரை நாடிச்சென்று வரமளிப்பவர்களாய் இருந்தார்களென்பதை பக்தர்கள் சொல்ல அறிந்தார். ஜனசமூகம் கடவுளிடம் யாசித்துப் பெற்ற காலம்போய், காணிக்கை கொடுத்து சௌக்கியங்ளும், சௌபாக்கியங்களும் பெறும் நவீன உலகம் தோன்றியிருப்பதையும் அவர்கள் அவருக்குச் சொன்னார்கள்.

கடவுள் மலையிலிருந்து இவை காண இறங்கி வந்தார்.

சிலர் காணிக்கைகளின்மூலம் நோய்களிலிருந்து தவிர்ந்துகொண்டிருப்பதைக் கடவுள் கண்டார். அவர்களெல்லாம் பல வர்ணங்களில் கையிலும், கழுத்திலும் அவர்போல் பாம்புகளைக் கட்டியிருந்தார்கள். பாம்புகளின் நிறங்கள் அவர்களின் கடவுளர் யாரென்று அடையாளப்படுத்துவனவாய் இருந்தன.

கடவுளுக்கு அது புதுமையாகவிருந்தது.

எந்தப் பக்தனும் அந்தளவு வலிமையுள்ள வரத்தினை தன்னிடமிருந்து பெற்றிருக்காத நிலையில், எவ்வாறு செல்வ வளம் பெருகவும்,  பிணியற்று வாழவுமான ஆசீர்வாதத்தை அளிக்க  அவர்களால் முடிகிறதென்று முழுமுதல் கடவுள் உண்மையாகவே ஆச்சரியப்பட்டார்.
அப்போதுதான் தெரிந்தது, அவர்கள் தன்னைவிட மிகுந்த காட்சிப் பரவசத்தை தம் பக்தர்களுக்கு அளிக்கக்கூடியவர்களாய் இருந்தார்களென்று. அவர் கோலம் அப்போது அவருக்கே பிடித்திருக்கவில்லை.

நிறைந்த பக்தர்கள் சூழ்ந்து நிற்க, அதியற்புதங்கள் நிகழ்த்தும் ஒருவரை நெருங்கி மறைந்துநின்று முழுமுதல் கடவுள் பார்த்தார். அவர்கள் வரங்களை தம்முள் ஊற்றுக்கொண்டு கடவுளர்களாயே இருப்பது தெரிந்தார் முழுமுதல் கடவுள்.

அப்படியானால் தன்போல் வேறு கடவுளர் உண்டென்பதை அவர் நிச்சயப்பட்டார். அப்போது அவருக்கு ஒரு விஷயம் புரியவந்தது, தான் தன்னை முழுமுதல் கடவுளென அறிவித்ததுபோல், அவர்கள் தம்மை கடவுளராகவும் அறிவிக்கவில்லையென்பதை.

கடவுளுக்குக் குழப்பமாகவிருந்தது.

இனி கேட்காமல் ஒன்றுமாகாதென எண்ணி, தம் கடவுளுரு மறைத்து வேறுருத் தாங்கி, அங்கே பணிசெய்யும்  ஊழியர் ஒருவரை அணுகி, அவ்வாறு அருள்பாலிக்கும் அந்தக் கடவுள் யாரெனக் கேட்டார்.
ஊழியர் அக்கம்பக்கம் பார்த்தார். வேறுருத் தாங்கிய கடவுளின் காதோடு நெருங்கிச் சொன்னார், ‘யாருக்கும் சொல்லிவிடாதீர். அவர் கடவுளல்ல, சாத்தான்’ என்று.

கடவுள் சாத்தானை அதுவரை அறியாதிருந்தார். ஊழியர் சாத்தானென்று சொன்னதை அவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
‘பேயா?’ என்று கேட்டார்.

‘பேயையும் சொல்லலாம்.’

‘பூதத்தை?’

‘அதையும் சொல்லலாம்.’

‘ஆயினும் உண்மையான சாத்தான்தான் யார்?’

‘சாத்தான் கடவுளைப்போலவே.’

‘என்ன சொல்கிறீர்?’

‘அவரும் அநாதியானவர். எங்குமுள்ளவர். எல்லாம் அறிபவர். எல்லாம் வல்லவர்.’

‘கடவுளுக்கு நிகரானவரோ?’

‘சந்தேகமில்லாமல்.’

‘கடவுளும் சாத்தானும் ஒரே தன்மைத்தவர் என்கிறீரா?’

‘இல்லை. கடவுள் நல்லவர்க்கு அருள்பாலிக்கிறார். சாத்தான் அல்லாதவர்களுக்கு அருள்பாலிக்கிறார்.’

‘ஏன் அவ்வாறு?’

‘ஏனெனில், கடவுளின் இன்னொரு புறமே சாத்தான். ஆனாலும் அவர் கடவுளோடு மாறுபட்டிருக்கிறார். கடவுள் யாரை விரும்புகிறாரோ, கடவுளை யார் விரும்புகிறார்களோ அவர்களையெல்லாம் சாத்தான் திரஸ்காரம் பண்ணுகிறார். கடவுளுக்கெதிரான யுத்தத்தையே சாத்தான் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறார். கடவுளின் கட்டளைக்குப் புறம்பாக நடப்பவர்கள்  செல்வர்களாகவும், வல்லவர்களாகவும் ஆவது ஏனென்று நினைக்கிறீர்? அதனால்தான்.’

‘இது எப்போது மாறும்?’

‘காலம் மாறும்போது. அதோ புரியமுடியாத வேகத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறதே காலக்குரல், அது அவசரமறும்போது புரிவதாய் அதனொலி இழையும். அப்போது எல்லாம் மாறும்.’

‘இந்த லோகத்தின் அவசரமே எல்லாவற்றிற்கும் காரணமென்கிறீர்?’

‘ஆம்.’

‘மாயையல்ல?’

‘மாயையிலிருந்து தோன்றியதே அவசரம்.’

‘அதுசரி, இந்த விஷயம் முழுமுதல் கடவுளுக்குத் தெரியாதா?’

‘தெரியாது. ஏனெனில்  அவர் பெரும்பாலும் மலையைவிட்டு இறங்கி வருவதேயில்லை.’

‘எல்லாம் தெரிந்திருந்திருக்கிறீர். பூலோகத்தில் பல கடவுள்கள்?’ 

‘அப்படித்தான். மேற்கே தேவன் இருக்கிறார்…’

‘இங்கே மகாதேவன்.’

‘இடையிலே அல்லாஹ் இருக்கிறார்.’

‘எல்லோரும் ஒன்றையே சொல்கிறார்கள்?’

‘ஆம். அன்பையே சொல்கிறார்கள். ஒரு கடவுள் பல்வேறு நாமாவளிகளிலிருந்து அந்த அன்பைச் சொல்லவில்லை. பல்வேறு கடவுள்களும் அன்பு என்ற அந்த ஒற்றை நாமாவளியையே உச்சரிக்கிறார்கள்.’

‘ம்…’ என்று முனகிய கடவுள், தான் அவர்கள்போல் அந்த அன்பை அழுத்தினோனா என்று ஒருமுறை யோசித்தார். பின், ‘நீர் யார்?’ என்றார்.
‘போம்… போம்…!’

‘சும்மா சொல்லும். சொல்வதில் என்ன இருக்கிறது?’

‘சஞ்சாரி. லோக சஞ்சாரி. நாளை நான் இங்கே இருக்கமாட்டேன்’ என்றுவிட்டு ஊழியர் அப்புறமாய் நகர்ந்து மறைந்தார்.

கடவுளுக்கு அது வித்தியாசமான உரைப்பாக இருந்தது. ஆனாலும் அதை சரியென்று புரிந்தார்.

தன்னைவிடவும் சரிகள் பல தெரிந்தவர்களின் தளத்திலிருந்துகொண்டு முழுமுதல் கடவுள் நிமிர்ந்து மலையைப் பார்த்தார்.

அவர் மறுபடி மலைமேல் ஏறவில்லை.
000


 மலைகள்.காம், ஆனி 2016 

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...