Friday, September 16, 2016

சமகால தமிழிலக்கியத்தில்ஜெயகாந்தனின் நாவல்களது வகிபாகம்
ஜெயகாந்தனின் எழுத்துக்களில் கட்டுரை, சிறுகதைகள் தவிர்ந்த நாவல்கள், குறுநாவல்கள் குறித்து தீர்க்கமான பகுப்பேதும் செய்துவிட முடியாதே இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வகுக்கப்பட்ட அவற்றுக்கான இலக்கணங்களே இன்றளவும் கல்விப்புலத்தில் அளவைகளாக இருக்கின்றன. நவீன இலக்கிய விமர்சனம் தன் அளவைகளை இப்போது சொல்லிக்கொண்டிருப்பினும், அவை கல்விப்புலத்தில் இன்னும் உள்வாங்கிக்கொள்ளப்படவில்;லை. இருந்தாலும் அது இங்கே முக்கியமில்லை. எப்போதும் ஒரு அளவை இருந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு மேலே செல்லலாம்.

அளவைகளென்பது அனைவருக்கும் ஒப்ப முடிந்திருப்பினும், அவரவரின் அளவைகளால் ஒன்றுபோல் முடிவுகள் ஆகிவிடவில்லை. ஒருவரது கையால் அளக்கப்பட்டது மற்றவரின் கையளவுக்கு சமமாக இருக்கவில்லையென்பது அளவின் பிழையல்ல, அளவுகோலின் பிழையே. இது பிழைகூட இல்லை. ஒரு வித்தியாசமென்றும் இதனைக் கூறலாம். இலக்கியம் கலை சார்ந்த விஷயத்தில் மட்டுமே அளவைகள் ஒன்றாக இருந்தாலும் அளப்பவர் வேறாக இருக்கிறவரையில் முடிவுகள் வேறாக வருகின்றன. ஒருவகையில் இந்தப் பிழையோடும் கூடியதுதான் இங்கே சாத்தியமாகவும் இருக்கிறது.

கம்பன் கவிச்சக்கரவர்த்தியென்பது எந்த பொதுவாக்கெடுப்பிலும் உருவானதில்லை. இலக்கியத்துக்கான ஒரு வட்டம் அந்தத் தேர்வைச் செய்தது. அதை இலக்கிய உள்வட்டம் என்பார் க.நா.சுப்பிரமணியம். அப்படியொரு உள்வட்டம் இப்போது, இருபத்தோராம் நூற்றாண்டின் இந்த இரண்டாம் தசாப்தத்தில் இருக்கிறதா என்றால், முன்பிருந்ததுபோல இல்லையென்ற பதிலே கிடைக்கிறது.

மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்ட பதிப்பில் ‘கோகிலா என்ன செய்துவிட்டாள்’ என்பதும், ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்பதும் குறுநாவல்களாகவே தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தனது ‘தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற நூலில், ‘ஜெயகாந்தனின் கோகிலா என்ன செய்துவிட்டாள், சமூகம் என்பது நாலு பேர் முதலிய நாவல்களில்’ என இவற்றை நாவல்களாகச் சொல்வார் கலாநிதி க.கைலாசபதி. அதேநேரத்தில் நாம் நாவலாகக் கருதியிருந்த க.நா.சு.வின் ஒரு நாளை ‘பாரிஸுக்கு போ' என்ற நாவலை ஒப்பாய்விற்காக க.நா.சு.வின் குறுநாவலுடன் சேர்த்துப் படிப்பது பயனுள்ள அப்பியாசமாகவிருக்கும்’ என பேராசிரியர் கைலாசபதி சொல்லுகையில் ஒருநாள் குறுநாவலாக எடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஆக குறுநாவல், நாவல் என்பன அவரவர்க்குமான அளவைகளில் முடிவொற்றுமைகளை அடையவில்லை. அது இந்த இலக்கிய உள்வட்டச் செயற்பாட்டின் பலஹீனமான நிலையையே காட்டுகிறது.
இன்றைக்கு இந்த நாவல், குறுநாவல் வகைமையினை படைப்பாளி, பதிப்பகம், விமர்சகன், வாசகன் ஆகிய நாற்தரப்பும் தீர்மானிப்பதே நடைமுறையிலிருப்பதைக் காணமுடிகிறது. எவ்வாறு பகுக்கப்பட்டாலும் காலப்போக்கில் நிலைக்கப்போகிற இந்த உள்வட்ட அபிப்பிராயமே அதை அறுதியாக்கப் போகிறது. என்றாலும் இந்த அபிப்பிராய விஷயத்தில் ஒரு நம்பகமற்ற தன்மை இன்று நிலவுவதை சுட்டிச் சொல்லவேண்டும்.

வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியானது அவரவர்க்குமான வலைப்பூக்கள், அவரவர்க்குமான இணையதளங்கள், அவரவர்க்குமான சஞ்சிகைகள் பத்திரிகைகளை சாத்தியமாக்கியமாக்கியிருக்கிற வகையில் அவரவர்க்குமான இந்த அபிப்பிராயம் சணப்பித்த விவகாரமாகிவிடுகின்ற அபாயத்தை ஏற்கனவே இலக்கிய உலகு சந்தித்தாயிற்று. ஆக வாசக அபிப்பிராயமென்பதும் ஒரு ஆர்வக்கோளாறினால் உருவான அபிப்பிராயங்களாக ஆவதற்கு அதிகமான வாய்ப்புண்டு.
இந்தநிலையில் ஜெயகாந்தனின் நாவல்கள் என்ற தலைப்பில் ஒரு மதிப்பீடு அந்த மதிப்பீட்டைச் செய்யும் விமர்சனில் மட்டுமே தங்குவது தவிர்க்க முடியாதது.


ஒரு பொதுக் குறிப்பு ஜெயகாந்தனது நாவல்கள் பன்னிரண்டு என தலைப்புகளைக் குறிப்பிடாமல் சொல்கிறது. மீனாட்சி புத்தகநிலையத்தின் பதிப்பு அவரது குறுநாவல்களின் தொகையை முப்பத்தைந்தாகக் காட்டுகிறது. இவற்றிலிருந்து நாவல்களை நாங்கள் வகைமைப்படுத்தியாகவேண்டும். அது உடனடிக் காரிய சாத்தியமான விஷயமில்லை. அதனால் இதுவரை பெரும்பான்மை விமர்சகர்களால் ஜெயகாந்தன்  நாவல்களென ஒப்புக் கொள்ளப்பட்டவற்றில் இருந்தும், குறுநாவலெனக் குறிப்பிடப்பட்டவற்றில் நாவலென நான் கணித்தவற்றினையும் சேர்த்து இங்கே விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறேன்.

பேராசிரியர்கள் கைலாசபதியும் சரி, சிவத்தம்பியும் சரி ஜெயகாந்தன் நாவல்களைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்களே தவிர, தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சியில் ஜெயகாந்தனது பங்கு எத்தகையது என்பதை வரையறையாகக் கூறவில்லை. சமூகப் பங்களிப்பு குறித்தவரை ஜெயகாந்தனின் நாவல்களை விமர்சித்த அளவுக்கு, நாவலின் வளர்ச்சிப் பாதையில் அவைகளுக்கான முக்கியத்துவமும், நாவலாக அவை கொண்டிருக்கிற தரமும் அணுகப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால் ஜெயகாந்தனின் நாவல்கள் விந்தன், சிதம்பர ரகுநாதன், கே.டானியல், செ.கணேசலிங்கன் ஆகியோரது நாவல்களளவுக்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை. மார்க்சீய சார்புடைய இவ்விரு விமர்சகர்களையும் விட்டுப் பார்த்தாலும், மார்க்சீய எதிர்நிலையுடைய க.நா.சு.கூட ஜெயகாந்தனின் எழுத்துக்களை பெரிதாகக் கணிக்கவில்லையென்றே சொல்லமுடிகிறது. ‘தமிழ்ச் சிறுகதையில் வெற்றி கண்டவர்கள்’ என்ற கட்டுரையில் க.நா.சு. எழுதுவார், ‘ஐம்பதுகளில் உருவாகத் தொடங்கி எழுத்தளவில் கருகிவிட்டவர் என்று ஜெயகாந்தனையும், அதிகமாக எழுதாதனால்  தப்பியவர் என்று சுந்தர ராமஸ்வாமியையும் சொல்லுவேன்’ என்று. ஆனாலும் பின்;னர் க.நா.சு.வே ஜெயகாந்தனின் சில முக்கியமான சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறாரென்பது வேறு விஷயம். இந்த மார்க்சீய  - மார்க்சீய எதிர்நிலை கொண்ட விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பார்வையையே நான் மேற்கொண்டிருக்கிறேன். மார்க்சீயத்தை சமூக, அரசியல் நிலைமைகளின் பகுப்பாய்வுக்கான அலகுகளாகக் கொள்கையில், இலக்கியக் கணிப்பை மார்க்சீயம தாண்டிய, அதிலிருந்து மேன்மையடைந்த வேற அலகுகள்கொண்டு, அளவீடு செய்வதே சரியாக இருக்குமென நம்பினேன். அதை  அபிப்பிராயங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் இடைப்பட்ட நிலையென்றும் சொல்லலாம். இந்த அபிப்பிராயங்களும் எழுபதுகளுக்குப் பின்னால் உருவாகி இறுகிஇறுகி கோட்பாடுகளாக ஆனவைதாம்.

‘வாழ்க்கை அழைக்கிறது’ என்பது ஜெயகாந்தனின் முதல் நாவலாகக் கருதக்கிடக்கிறது. இது 1956-57ல் வெளிவந்திருக்கலாம். ராணி முத்து பதிப்பாக மீண்டும் இது வெகுஜன தளத்திலும் வெளிவந்திருக்கிறது. மாத நாவல்களை வெளியிடுவதற்காக இந்தப் பதிப்பகம் தோன்றியது.

ஜெயகாந்தனின் புனைவுப் படைப்பில் சிறுகதையைத் தொடர்ந்ததே அவரது நாவல், குறுநாவல் பிரவேசம். இது முதல் நாவலான ‘வாழ்க்கை அழைக்கிறது’ (1956-57) என்பதிலிருந்தும், குறுநாவலான கைவிலங்கில் (1962) இருந்தும் தொடங்குவதாகக் கொள்ளலாம். இந்த அறுபதுகளின் காலகட்டம் தமிழ் நாவல் பொறுத்தவரை, எழுத்து பொறுத்தவரை எப்படியிருந்தது? வெகுஜன பத்திரிகைகளில் வெகுஜனங்களுக்கான ஒரு எழுத்தும், அது சார்ந்த கதைசொல்லல் முறையுமே இருந்தது. ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, நா.பார்த்தசாரதி, அகிலன், ஜெகசிற்பியன், லட்சுமி போன்றேரே பிரபலமாகவிருந்தனர். அவை வெகுஜன எழுத்துக்களென தீவிர படைப்பாளிகளால், குறிப்பாக புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு.செல்லப்பா, வானமாமலை, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்களால் குறிக்கப்பட்டன.

இந்தக் காலத்திலேதான் ஜெயகாந்தனின் எழுத்துப் பிரவேசம் நிகழ்கிறது. சரியாக 1945இல். மேலும் இவரது படைப்புகள் ஹனுமான், சாந்தி, மனிதன் போன்ற சிற்றிதழ்களில்தான் வெளிவந்தன. இவரது எழுத்துப் பிரவேசக் காலம் இவரே மார்க்சீய ஈடுபாட்டாளராய் கம்யூனிஸ்டு கட்சியில் அங்கத்தவராயிருந்த காலம். விந்தனுக்கு போலன்றி ஜெயகாந்தனுக்கு கிடைத்த வாய்ப்பு மிகப்பெரியது. மிக்க ஜனரஞ்சகமான ஆனந்தவிகடன், கல்கி போன்ற பத்திரிகைகளிலேயே அவர் அதிகமும் எழுதினார்.  அப்போதும் வறுமைகண்டு இரக்கம், அதன் தாழ்நிலை கண்டு வெகுட்சி, பாலியல் தொழிலாளர்மீதான பரிவு என்பதாகவே அவரது எழுத்துக்கள் இருந்திருக்கின்றன. ஒருவகையில் இதற்கு ஆதர்ஷமாக பாரதி இருந்திருக்க முடியும். அவர் கவிதையில் காட்டியதை ஜெயகாந்தன் உரைநடையில் காட்டினார். ஆக உணர்நிலையில் ஜெயகாந்தனது சிறுகதைகள் புதியதாக அமைந்திருக்கவில்லை. அது ஏற்கனவே பல படைப்பாளிகளாலும் கைக்கொள்ளப்பட்ட பொருளாகவே இருந்திருக்கிறது. இருந்தும் பரந்த வெகுஜனத்தால் போலவே, பரந்த தீவிர வாசகர் வட்டத்தாலும் அவர் படிக்கப்பட்டார்.

பாரதியிலிருந்து அவரது வேகத்தையும் கருத்துநிலையையும் உள்வாங்கிய ஜெயகாந்தன், அவரது இந்தியப் பண்பாடு என்ற கருத்தாக்கத்தை இப்போது கவனிக்கிறார். இந்துப் பண்பாடென்ற ஒரு ஒற்றைப்படையான தன்மை சாத்தியமாக இல்லாதிருந்தபோதும், அதை ஒற்றைப்படையாக எடுத்துக்கொண்டு மிகத்தீவிரமாக அந்தத் தளத்தில் அவர் இயங்குகிற காலம் வருகிறபோது அவர் கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து விலகுகிறார். பின்னால் அவரது தொடர்பு காங்கிரக் கட்சியாக இருக்கிறது. ஒற்றைப்படையான இந்த இந்திய பண்பாட்டு விஷயத்துக்கு அவருக்கு வசதியாக இருந்தது காங்கிரஸ்தான். இந்தத் தளத்தில் வைத்தே பாரதியையும் ஜெகாந்தனையும் நான் பார்க்கிறேன். ‘சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்’ என இலங்கைத் தீவை சிங்களத் தீவாக்கியது பாரதியின் தற்செயல், அல்லது புரிவின்மை காரணமல்ல. இந்திய அரசியல் பண்பாட்டுக்கு மிக அண்மித்ததாக இருந்த மனநிலையின் வெளிப்பாடே அது. பரவலாக மேற்குலகிலும், கீழ்த்திசையிலும் அறியப்பட்டிருந்த பெயர் சிலோன். இலக்கியரீதியாகப் பார்த்தால் ஈழம். இலங்கைத்தீவினுக்கோர் பாலமமைப்போம் என்றிருந்தாலும் பெரும்பாலும் ஓசையும், கருத்தும் மாறியிருக்காது. இருந்தும் பாரதி இலங்கையை சிங்களத்தீவு என்றே குறிப்பிட்டான். ஆயினும் தன் மொழியை அவன் பாராட்டிய அளவு அதுவரையில் வேறு கவிஞர் பாராட்டவில்லை. சங்க இலக்கியங்களைப் பாராட்டிய அளவும் வேறு கவிஞர் பாராட்டவில்லை.

ஆனால் தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் மிக உதாசீனமாகத்தான் ஜெயகாந்தன் நோக்கியிருந்தார். இது அவரது படைப்புகளில் எங்கும் துல்யமாக வெளிப்படவில்லையென்பது மெய்யே. ஆனால் இலக்கியச் செயற்பாட்டில் அது மெல்ல வெளிப்பட ஆரம்பித்தது. இந்த இந்தியப் பண்பாடு என்ற தளத்திலிருந்துதான் அவரது நாவல்களதும், குறுநாவல்களதும் கரு உருவாகிறது. அது தனிமனிதரின் ஆசைகளிலிருந்தும், தனித்துவங்களிலிருந்தும், தனியுரிமைகளிலிருந்தும் வடிவம் கொள்கிறது. ‘சமூகமென்பது நாலு பே’ரும், ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன’வும் வெளிவந்து அவரது நிலைப்பாட்டை துல்லியமாக அறிவிக்கின்றன. அவர் தொடர்ந்தும் பொதுமைநிலை காண அவாவிய அரசியல் கொள்கை உடையவரல்ல, தனிமனிதத்துவத்தின் பிரதிநிதியாக ஆகிவிட்டார் என்பது அறுதியாகிறது.

அவர் பெரும்பாலும் சிறுகதைகளிலிருந்து ஓரளவு விலகி நாவலும், குறுநாவலும் படைக்க ஆரம்பித்த சமயம் அவர் தன் முந்திய அரசியல் சித்தாந்தத்தை முற்றாகக் கைவிட்டாரெனச் சொல்லலாம். இது இந்தியப் பண்பாட்டை ஆதாரமாகக் கொள்ளவும், அதனால் திராவிட இயக்கங்கள்மீது காட்டமான எதிர்ப்பைச் செலுத்தவும் செய்கிறது. அவருக்கு காங்கிரஸிடத்தில் ஒரு தாச மனப்பான்மையே இருந்தது. அதனால்தான் 1976இல் ஏற்பட்ட அவசரகால நிலைப் பிரகடனத்துக்கெதிராக ஒரு வார்த்தை அவர் சொல்லவில்லை. அவர் காங்கிரஸினதும், இந்திராவினதும் தாசனாக இருந்தார்.

இவை அவரது அரசியல், சமூக நிலைப்பாடுகளே. ஆனாலும் இவையே அவரது இலக்கியங்களிலும் அடியோட்டமாய் இருந்தன. சரியான தத்துவார்த்தத் தளத்தை அவர் அடையாமல் சறுக்கச்செய்த சந்தர்ப்பங்கள் இங்கேயே புடைத்துநின்றன. ஜெயகாந்தனின் நாவல், குறுநாவல், சிறுகதையென எடுத்துக்கொண்டு பார்ப்பதானாலும் இந்தப் பகுப்பைத் தாண்டி ஒரு அடி நடந்துவிட முடியாது.

அவரது முக்கியமான நாவல்களாக ‘பாரிஸுக்கு போ’, ‘சிலநேரங்களில் சில மனிதர்கள’;, ‘கங்கை எங்கே போகிறாள்', ‘சுந்தர காண்டம்’, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘ரிஷிமூலம்’, ‘ஜயஜய சங்கர’ ஆகியவற்றைச் சொல்லலாம். சிலநேரங்களில் சில மனிதர்கள் அது தொடராக வந்துபோதும், நூலாக வெளிவந்தபோதும் பரவலான வாசகர்களால் பேசப்பட்ட நாவல். சொல்லப்போனால் அந்தளவு வெகுஜன ஆர்வத்தைக் கிளப்பிய நாவல் இன்றுவரை வேறில்லை. அது காரணமாகவே அதன் தொடர்ச்சியாக கங்கை எங்கே போகிறாள் என்ற தொடரை எழுதியதாக படைப்பாளி அதன் முன்னுரையில் கூறுவார். இச்சைவாரியான பயணமாக தன் வாழ்க்கையை ஆக்கி ஒரு புதிய பயணத்தை நடத்தும் கங்காவுக்கு பிரெஞ்சு மொழியில் முன்னோடியுண்டு. ‘அடுத்தவர் ரத்தம்’ என்ற சிமொன் டி போவுவாவின் மிகக் காத்திரமான நாவலின் நாயகியான ஹெலனாகவே கங்கா எனக்குத் தெரிகிறாள். ழீன் புளொமார் தன் காதலை மறுதலிக்கும்போது தன்னிச்சையாக அலைந்து ஒருவனிடம் தன்னை இழக்கிறாள் ஹெலன். கர்ப்பமும் அடைகிறாள். ஏறக்குறைய அவளது நடத்தைகளினை ஒட்டியே கங்காவின் நடவடிக்கைகளும் அமைகின்றன. ஆனாலும் பரவலான வாசகர்களைச் சென்றடைந்ததைத் தவிர ‘கங்கை எங்கே போகிறாள’; தமிழ் நாவல் இலக்கியத்துக்கு எதுவித பங்களிப்பைச் செய்ததாகவும் சொல்லமுடியாது.

‘பாரிஸுக்கு போ’ நாவலாக வளர்ந்ததுதான். சேஷையாவினது இந்திய மரபிசைக்கும் மகன் சாரங்கனின் மேற்கத்திய இசைக்குமான முரணினை முன்னிறுத்தி விவாதங்களுடன் எழுந்த நாவல். இதில் முன்வைக்கப்படும் இசைக்குப் பதிலாக எந்தக் கலைத்துறையையும்தான் வைத்திருக்க முடியும். ஏனெனில் இந்தியாவினை எப்படி முன்னேற்றுவது என்பதற்கான வழியின் ஒரு குறியீடுதான் அது. இவர்கள் அதிகம் நேரில் பேசிக்கொள்ளாவிட்டாலும் இந்திய மரபிசை மேற்கத்திய இசை என்ற தளத்தில் மிக விரிவான விவாதம் நடக்கிறது நாவலில். இதைவிட சாரங்கனுக்கும் அவனது மனைவி ராதாவுக்குமிடையே நிலவும் முரணும் முக்கியமானது. அவரது மகள் பாலம்மாவுக்கும் கணவன் நரசய்யாவுக்குமிடையேயான பிணக்கும்கூட தனிக் கதையாய் விரிவுறக்கூடியது. இவ்வாறு விரிவுபெறும் பாரிஸ{க்கு போவுடன் தமிழின் இசை குறித்து வந்த சிதம்பர ந.சுப்பிரமணியனின் ‘இதயநாதம்’, தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ இரண்டையும் ஒரு முயற்சிக்காக ஒப்பிடுகிறபோது ‘பாரிஸுக்கு போ’ அவ்வளவு சாதனை செய்த நாவலாக ஒரு தீவிர வாசகனுக்குத் தென்படுவதில்லை.

அடுத்து பலராலும் சிறந்த நாவலாகப் பேசப்பட்ட ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவல்பற்றி பலவிதமான அபிப்பிராயங்களுண்டு. ஜெயகாந்தனின் ஏனைய நாவல்கள் குறுநாவல்களைப்போலன்றி, வித்தியாசமான போக்கும் நடையும் ஆக்ரோ~மான விவாதங்களை முன்வைத்து ஒரு முடிவைநோக்கி வாசகனை நடத்திச் செல்லவும் முனையாத நாவல் அது. அது அதனளவிலான குறைகளையும் கொண்டே இருக்கிறது. ஒரு சமூகத்தின் முழு இருப்பும் அதில் காட்டப்படுவதில்லையென்பதுடன், சமூகத்தின் கீழ் நிலையிலிருக்கும் தலித்துகள்பற்றி அது கொஞ்சங்கூட கவனமெடுக்காமல் விட்டிருக்கும். கிருஷ்ணராஜபுரம் ஒரு இந்திய மாதிரிக் கிராமமாக வர்ணிக்கப்படுகிறது. ‘இந்த நாவலின் கதை இடம்பெறுகிற கிராமம் இன்ன இடத்தில்தான் என்று என்னால் சொல்லமுடியாது’ என முன்னுரையில் ஜெயகாந்தனே கூறுவார். பல்வேறு பிரச்னைகளும் செயற்பாடுகளும் மேன்மையான மனநிலையில் ஒரு புரிந்துணர்வுடன் அங்கே தீர்க்கப்படுவதும், மிகப் பினதங்கிய கிராமமான அது ஓரளவு மின்சார வசதியும் நல்ல சாலைகளும் பெறும்படியான நிலைமைகள் உருவாக்கப்படவிருக்கும் நிலையில் அதில் வரும் பிரதான பாத்திரங்களில் ஒன்றான ஹென்றி ஒரு பழைய மாதிரிக் கிராமமாக அதை எடுத்துக்கொண்டு அங்கே வாழ நினைப்பதும் எல்லாம் இந்திய பண்பாட்டு அசைவியக்கத்தின் அடையாளங்களாக நாவலில் தென்படும். முதலியார், கவுண்டர், நாயக்கர், கிராமணி, தேசிகர், பிள்ளை ஆகிய உயர் வகுப்பு ஜாதிகளெல்லாம் வருகின்றன. ஆனால் தலித்தும் சேர்ந்த கிராமமாக அது இருப்பதில்லை. தலித்துகள் வரும்போது அந்த அமைதியான கிராமத்தில் ஏற்ற இறக்கமும், சண்டை சச்சரவுகளும், நீதி அநீதிகளும், போராட்டங்களும் தோன்றுவது தவிர்க்கமுடியாமலே இருந்திருக்கும். தன் இந்திய மாதிரிக் கிராமத்தில் ஜெயகாந்தனின் கனவு அப்போது சிதறிப்போகவே நேர்ந்திருக்கும். அவருக்கே அது நாவலா என்ற பிரச்னை இருந்திருக்கிறது. அதை ஒரு தொடர்கதையென்றே முன்னுரையின் பல இடங்களிலும் குறிப்பிடுவார் ஜெயகாந்தன். இருந்தும் அது அந்தக் காலகட்டத்தில் ஒரு நல்ல நாவலாகவே இருந்தது.

‘சுந்தர காண்டம்’ இன்னொரு முக்கியமான நாவல். சுகுமாரன் மனைவி சீதா. உறவுகள் கசந்துவிட்ட நிலையில் கணவனிடமிருந்து மணவிலக்கு கேட்கிறாள். அந்தப் பத்திரிகையின் உரிமையாளர் சர்மா ஒரு எழுத்தாளரும். பல கதைகளை அந்தப் பத்திரிகையிலேயே எழுதியிருக்கிறார். அத்தனையும் கிளுகிளுப்புக் கதைகளாகவே இருக்கும். அவரது மகளே சீதா. அவளையும் பத்திரிகை நிறுவனத்தையும் சுகுமாரனுக்கு கொடுத்தார் அவர். அவளுக்கு  கிரிதரனோடுள்ள தொடர்பு காரணமாகவும், தமக்கிடையிலான மணமுறிவு தன் அந்தஸ்தை பாதிக்கும் என்பதாலும் அதை மறுக்கிறான் சுகுமாரன். கிரிதரனுக்காகவும் சீதாவுக்காகவும் சுகுமாரனுக்காகவும்கூட ஜெயகாந்தனே வாதாடுகிறார். அவனது விருப்பத்தை அறமாக ஸ்தாபிக்கும் ஜெயகாந்தன் சீதாவுக்கும் நியாயம் செய்யவில்லை. கடைசியில் பத்திரிகை நிறுவனத்தை சீதாவிடம் ஒப்படைத்துவிட்டு வெளிக்கிடுகிறான் சுகுமாரன். பல இடங்களில் அறம்போல் தெரியும் வி~யங்களுக்காகவே படைப்பாளி கச்சை கட்டிக்கொண்டு வெளிக்கிட்டுவிடுவது படைப்பின் பலஹீனமாகிவிடுகிறது. ‘சுந்தரகாண்டம்’ அந்த பலஹீனத்திலிருந்து தவறவில்லை.

‘ஜய ஜய சங்கர’ தற்கால காஞ்சி சங்கரரை ஓரளவு மனதில் நிறுத்தி உருவாக்கப்பட்ட பாத்திரம். பல்வேறு எதிரிணைகள் ஒன்றுபடுவதுதான் நாவலின் சிறப்பம்சமாக இருக்கிறது. அநியாயத்துக்கு எல்லோருமே நல்லவர்களாயிருக்கிறார்கள். சமயத்தையும் அரசியலையும், காந்தியவாதியையும் புரட்சிக்காரனையும், ஹரிஜனனையும் பிராமணனையும், விஞ்ஞானப் பார்வையையும் சமயப் பார்வையையும் இணைப்பதில் இது சுமுகமான வெற்றியை அடைகிறது. 1980களின் ஆரம்பத்தில் வெளிவந்த கதை இது. மூன்று பாகங்களாய் தனித்தனிப் பிரசுரங்களாயும் இது உடனடிப் பின்னால் வெளிவந்தது. இது ஜெயகாந்தனின் இறுதிப் படைப்பாக இருக்கலாம்.

ஆக மொத்தம் 1945 தொடங்கி 1985 வரை ஒரு நாற்பதாண்டுக் காலம் தமிழிலக்கிய எழுத்துலகில் இருந்த ஜெயகாந்தன், அவரது மரணத்தின் பின் பேசப்படும் அளவிற்கு உன்னதமான படைப்பாளியாக இருந்தாராவென்று மீண்டும் அலசவேண்டிய தேவையொன்று இன்று ஏற்பட்டிருக்கிறது.
எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் தமிழின் முக்கியமான நூறு நாவல்களைப் பட்டியலிட்டபோது ஜெயகாந்தனின் நாவல்கள் அவற்றில் இடம்பெற்றிருந்தன. இன்று அவ்வாறாக தமிழின் முக்கியமான நூறு நாவல்களின் பட்டியலொன்று எவராலாவது தயாராகுமானால் ஜெயகாந்தனின் நாவல்கள் ஒன்று இரண்டு தவிர தேறுவது அரிதாகிவிடும். இந்த நிலை ஜெயகாந்தனது நாவல்களுக்கு மட்டுமல்ல, புதிதாகத் தோன்றியுள்ள பல நல்ல நாவல்கள் காரணமாய் பட்டியலிலிருக்கும் பல நாவல்களுக்கும் ஏற்பட நேரலாம்.

‘ஜெயகாந்தனின் படைப்புகள் உரத்தகுரல் கொண்டவை, வாதாடக் கூடியவை, பிரச்சார நெடி அடிப்பவை, நேரடியாக விரித்துப்போடும் தன்மை கொண்டவை. ஆகவே கலைத்தன்மை குன்றியவையென்பது வலுவாக உள்ள கருத்து’ என ஜெயமோகன் கூறினும் அதை மறுத்து அவை மட்டுமே நாவலை உருவாக்குவதில்லை என்பார் அவர். இவையெல்லாம்தான் முற்போக்கு எழுத்தாளர்களின் நாவல்களைப் புறந்தள்ளுவதற்கு தமிழகத்து நவீன விமர்சகர்கள் சொல்லிய காரணங்கள். ஆனாலும் அதற்காகவே அன்றி எனது நிராகரிப்பு அவை காலத்தில் நின்று நிலைக்கக்கூடிய அறம் சார்ந்தவையாக இருக்கவில்லை என்பதுதான்.

ஆனாலும் இன்றும் அதே முக்கியத்துவத்தை இழந்துவிடாமல் இருக்கும் ‘ரி~pமூல’த்தை மூலமான ஒரு பாலியல் விஷயத்தைப் பேசிய நாவலென்ற வகையில் முக்கிமானதென்று துணிந்து சொல்லமுடியும்.
ராஜாராமனின் பிறப்பும் வளர்ப்பும் அவனது நடத்தைகளின் மாற்றமும் அந்நாவலில் அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கும். தன் தாயினதும் தந்தையினதும் தாம்பத்திய வாழ்வு சலனமெதனையும் அவனிடத்தில் ஏற்படுத்திவிடுவதில்லை. தாயின் அந்தரங்க அறையாகவும் பெற்றோரின் சயன அறையாகவும் இருக்கும் அந்த இடத்தில் என்ன அவ்வளவு மர்மமான வி~யம் இருக்கிறது என்பதை அறியும் ஆவலே சின்ன ராஜாராமனிடம் இருக்கிறது. இது பதின்ம வயதடையாத ஒரு சிறுவனின் சாதாரண ஆவல்தான். அவன் தன் ஆவலைப் பூர்த்தி செய்யவே தாய் குளிக்கச் சென்றிருந்த சமயத்தில் அந்த அறைக்குள் இருக்கும் வாசனைத் திரவியங்களையும் அழகான திரைச்சேலைகளையும் அழகானதும் மெதுமையானதுமான கட்டிலையும் பார்க்க உள்ளே நுழைகிறான். கட்டிலின் மெதுமையால் கூடுதலான நேரம் அங்கே தங்கநேர்ந்துவிடும் ராஜாராமன் தாய் குளித்துவிட்டு வரும் அரவத்தில் கட்டிலுக்கடியில் ஒளித்துக்கொள்கிறான். அங்கேதான் உள்ளே வந்த தாய் நிர்வாணமாகுவதை அவனுக்குப் பார்க்க நேர்கிறது. இது அவனில் குற்றவுணர்ச்சியைத் தூண்டுகிறது. பூஜைகளால் விரதங்களால் தன்னை ஒடுக்குகிறான்.
இது ஒரு சந்தர்ப்பம். இன்னொரு சந்தர்ப்பம் ராஜாராமன் மேற்படிப்பு படிக்க தந்தையின் கும்பகோணத்துச் சிநேகிதர் வீட்டில் தங்கிப் படிக்கப் போயிருந்தபோது நிகழ்கிறது. மகனாக நினைத்து வளர்க்கும் மாமியில் ராஜாராமன் பேரன்பு வைத்திருக்கிறான். அவளுடன் அவனுக்கு சரீரத் தொடர்பே ஏற்பட்டுவிடுகிறது. அவன் குழந்தை, ஒன்றுமறியாதவன் என்றே மாமி நினைக்கிறாள். அது ஒரு உயர்ந்த பக்குவம். வளர்ந்த பிள்ளை தாயில் பால் குடித்ததுபோல பெரிய அதிர்வை அது அவளிடத்தில் உண்டாக்குவதில்லை. ஆனால் ராஜாராமன் சிதைந்து போகிறான். தந்தை இறந்ததுகூடத் தெரியாதவனாக ரிஷியாக அலைகிறான்.
கதை இவ்வளவோடு முடிந்துவிடாது. ஆனாலும் பரவலான ஒரு குறை இதன்மீது சொல்லப்பட்டதுண்டு. அது, நாவல் பரவலான சமூகத்தைக் காட்டவில்லையென்பது. என்னைப் பொறுத்தவரை இது இரண்டு பிராமண குடும்பங்களையும் சில உதிரிப் பாத்திரங்களையும் கொண்ட நாவல்தான். ஆனாலும் சமூகமென்கிற நீரோட்டத்தில்தான் பிரக்ஞையோடோ பிரக்ஞையின்றியோ அந்தக் கதை மிதந்தபடி நகர்ந்திருக்க முடியும். அது கிரு~;ணராஜபுரத்து கதைபோல இலலாவிட்;டாலும், அது சமூகமும் பங்குகொண்ட கதைதான் என்றே எனக்குத் தெரிகிறது. இல்லாவிட்டால் டானியல் டீபோவின் ரொபின்சன் குருசோவின் கதையாக இது இருக்க நேர்ந்திருக்கும்.

இவ்வளவும் ஜெயகாந்தனின் நாவல்களைப்பற்றி சொன்னாலும் ஜெயகாந்தனது எழுத்து இவ்வளவு இல்லையென்பதையும் நான் சொல்லியாகவேண்டும்.

ஜெயகாந்தன் காலத்தில் அதே ஜனரஞ்சக எழுத்தாளராய் இருந்த நா.பார்த்தசாரதியையும் ஜெயகாந்தனையும் கருத்திலெடுப்பது ஒரு நல்ல ஒப்பீடாக இருக்கமுடியும். காவியத்துக்கான ஒரு உரைநடையை நா.பா. உபயோகித்தாரெனில், நாவலுக்கான ஒரு உரைநடையை உபயோகித்தது ஜெயகாந்தன்தான். அவரது முன்னிருபது ஆண்டுக்கால படைப்பில் இந்த எழுத்து நடை வன்மையாக இருந்தது என்பதும் எனது அபிப்பிராயம். எழுபதுக்களில் மிக கட்டுப்பெட்;டி நடையாக இருந்த தமிழ் உரைநடையை அதன் கண்ணிகள் கழரும்படி புதிய தளத்துக்கு இழுத்து உயர்த்தியது ஜெயகாந்தன்தான். இதுவே பின்வந்த பூமணி, பிரபஞ்சன், ராஜேந்திரசோழன், வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்களின் பாதையை சரியானபடி வகுக்க முன்னோடியாகவும் இருந்திருக்கிறது. பின்வந்த இருபதாண்டுகளில் அவரது படைப்பின் ஆளுமை கர்ஜனையாக இருந்திருப்பினும் அது நாவலுக்கான மொழிநடையை வளப்படுத்தியது. நாவல் வளமாகாவிட்டாலும் நாவலுக்கான தமிழின் உரைநடை வளம்பெற்றது.

‘பாரிஸுக்கு போ’ 1966இல் வெளிவந்தது. ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம’ 1967இல் வெளிவந்தது. காலம் ஆக ஆக ஜெயகாந்தனின் படைப்புத்திறன் வாதமாகவும் தர்க்கமாகவும் சிதைந்துபோனது என்பதே மெய். இதற்கான காரணத்தை அவரது குறுநாவல்களை எடுத்து நோக்கினால் புரியும். அவரது ஏறக்குறைய முப்பத்தைந்து குறுநாவல்களுமே நாற்பத்தைந்து ஐம்பது பக்கங்களுக்கு உட்பட்டவை. ஒரு வார சஞ்சிகையில் நான்கு வாரங்களுக்கு வரும்படியான நீளமே அவை கொண்டிருந்தன. இருபத்தைந்து வாரங்களுக்கான ஒரு தொடர்கதையாகவே ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம’; ஆரம்பிக்கப்பட்டது. பின்னால்தான் அதன் வளர்ச்சி கருதி மேலும் பதினைந்து வாரங்களுக்கு நீட்ட ஆனந்தவிகடனின் அனுமதிபெற்றார் ஜெயகாந்தன். அதனாலேயே அது மற்றவைகளைவிட நாவல்தரம் கூடியிருப்பதற்கான காரணமாகவும் இருக்கலாம். அடக்கியிருந்தால் நாவலும் சிதைந்திருக்க வாய்ப்பாகியிருக்கும்.

ஆக தன் காலத்தில் மிக்க ஆளுமையான படைப்பாளியாக இருந்த ஜெயகாந்தனின் நாவல்கள் அறுபது எழுபதுகளுக்கிடையில் மிகவும் காத்திரமான பாத்திரத்தை வகித்ததென்றும், அவரது எழுத்துநடை ஒரு மாறுங்காலத்தின் தேவையாக இருந்து எழுபதுகளுக்குப் பின் வந்த நாவல்கள் சிறுகதைகளுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்ததென்றும்  அவர்பற்றிய ஒட்டுமொத்தமான கருத்தை முன்வைக்க முடியும்.

(முற்றும்)

(ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தில் 2015இல் நடைபெற்ற ஜெயகாந்தன் நினைவரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)


2 comments:

Amudhavan said...

\\வாழ்க்கை அழைக்கிறது’ என்பது ஜெயகாந்தனின் முதல் நாவலாகக் கருதக்கிடக்கிறது. இது 1956-57ல் வெளிவந்திருக்கலாம். ராணி முத்து பதிப்பாக இது வெளிவந்திருக்கிறது. மாத நாவல்களை வெளியிடுவதற்காக இந்தப் பதிப்பகம் தோன்றியது.\\

ராணிமுத்து 1969ல் துவங்கப்பட்டது என்று நினைக்கிறேன். அகிலனுடைய முதல் நாவலுடன் ஆரம்பித்தார்கள். உண்மையில் இந்தத் திட்டத்தை சி.பா.ஆதித்தனாரிடம் சொன்னவரே அகிலன்தான் என்பதும் செய்தி.
அந்த சமயத்தில் அண்ணா இறந்துவிடவும் அவரது நாவல் ஒன்றை உடனடியாக வெளியிட்டு லட்சக்கணக்கில் விற்பனை ஆயிற்று என்பதும் வரலாறு. ஆகவே ராணிமுத்துவில் வந்த நாவல் ஜெயகாந்தனின் முதல் நாவல் அல்ல என்பது மட்டும் நிச்சயம். தவிர அவரது கைவிலங்குதான் ராணிமுத்தில் முதன்முதலாக வந்த எழுத்து என்பது என் ஞாபகம்.

ஏற்கெனவே வெளியாகியிருந்த நாவல்களின் சுருக்கம்தான் ராணிமுத்துவில் வெளியிடப்பட்டனவே தவிர ஆரம்பத்தில் புதிய நாவல்களை அவர்கள் வெளியிடவே இல்லை. மிகவும் பிற்காலத்தில்தான் புதிதாக எழுதப்படும் எழுத்துக்களை அவர்கள் மாதந்தோறும் வெளியிட ஆரம்பித்தார்கள்.

Devakanthan said...

நன்றி. இத்தகவலை சரிபார்த்து வேண்டிய திருத்தங்களை கட்டுரையில் செய்வேன். மீண்டும் இத்தகவலுக்கு என் நன்றி. தேவகாந்தன்

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...