மனம்



‘நிக்கலஸ் ஏன் அவ்வாறு செய்தான்?’

விடை தேடிக்கொண்டு ஏற்கனவே கிடந்த கேள்விகளோடு, அப்போது இன்னொரு கேள்வியும் இராஜலிங்கத்தின் மனத்துள் சேர்ந்துகொண்டது.
‘அதெல்லாம் கள்ளக் கூட்டம். கறுவல்களோடெல்லாம் சேர்ந்து நீ இனிமேல் விளையாடப் போகவேண்டாம்’ என மகன் அனூஷனுக்கு கண்டிப்புச் சொன்ன ஆனந்தி, கூடத்துள்ளிருந்து எல்லாம் கண்டுகொண்டிருந்த தந்தையிடம் திரும்பி, ‘பாத்தியளேயப்பா, அதுகள் செய்த வேலையை? நாளைக்கு ஸ்கூலுக்குப் போய் இதைப்பற்றி கொம்பிளெய்ன் பண்ணியிட்டு வந்திடுங்கோ. எல்லாத்தையும் இப்பிடியே சும்மா விட்டிடேலாது’ என்றுவிட்டு மேலே போய்விட்டாள்.

மூன்று நாட்களுக்கு முதல் பள்ளி லொக்கரில் வைத்த அனூஷனின் ஜாக்கெற் அன்றைக்கு திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியை அவள் கொஞ்சம்கூட பட்டுக்கொள்ளவில்லையென அவருக்குத் தெரிந்தது. அதில் சிறிது நியாயமிருப்பதாக இராஜலிங்கம் எண்ணினார். அந்த ஆண்டில்மட்டும் அனூஷனின் இரண்டு ஜாக்கெற்றுக்கள் காணாமல் போயிருக்கின்றன. திரும்பக் கிடைத்திருந்தாலும் அது மூன்றாவது சம்பவம்.

அனூஷனுக்கு இட்ட கட்டளையின் பின்னாலிருந்த ஆனந்தியின் தீர்மானத்தையா அவரும் அது விஷயத்தில் கொண்டுவிடப் போகிறார்? ‘கறுவல்களெல்லாம் கள்ளக் கூட்டம்!’

அவருக்கு யோசிக்கவேண்டி இருந்தது.

ஜுலையில் கிடைத்த விடுமுறைப் பணத்தில் ஆனந்தி அனூஷனுக்கு விலை சிறிது கூடிய ஜாக்கெற் ஒன்று வாங்கிக் கொடுத்திருந்தாள்.
செப்ரெம்பரில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியபோது, காலம் கோடையெனினும் காலத்துக்கு முன்னதாகவே அந்த ஆண்டில் கோடையும் பனியும் இடைமாறும் காலமான இலையுதிர் காலத்தின் குளிர் ஆரம்பித்திருந்தது. வடதுருவத்திலிருந்து அடித்து வந்த காற்றால் குளிர் மண்டிப்போனது. கதகதத்துக்கொண்டிருந்த கட்டிடங்கள், தருக்கள், வீதிகள், நீர்நிலைகளெல்லாம் குளிரேறத் தொடங்கிவிட்டிருந்தன. பல வீடுகளில் கணப்பிகளை போடத் துவங்கிவிட்டிருந்தார்கள்.

அனூஷன் அந்த புதிய ஜாக்கெற்றை போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போயிருந்தான்.

வீட்டிலிருந்து பள்ளிக்கு பத்து நிமிஷ நடைதான்.

மூன்றரை மணிக்கு விடுகிற பள்ளியிலிருந்து ஆனந்தி வேலை முடிந்து நான்கு மணியளவில் திரும்பியிருந்தும், அனூஷன் வரவில்லை. அப்போதும் ஆனந்தி வழக்கம்போல் தந்தையிடம்தான் கேட்டாள், ‘அப்பா, ஒருக்கா அனூஷனைப் போய்ப் பாத்துக்கொண்டு வந்திடுங்கோவன்’ என்று.

இராஜலிங்கம் வெளிக்கிட்டுக்கொண்டிருக்க அனூஷன் வீடு வந்துசேர்ந்தான். ஆனந்தி தாமதத்துக்கு காரணம் கேட்டபோது, அனூஷன் கண்கலங்க நின்று ஜாக்கெற் தொலைந்துபோன விஷயத்தைக் கூறினான்.
‘காலங்காத்தால அஞ்சு மணிக்கு எழும்பி ஓடி நான் பக்டரியில முறிஞ்சு உழைச்ச காசு…’ என்று ஆனந்தி வயிறெரிந்ததோடு அன்றைக்கு விஷயம் முடிந்திருந்தது.

சனி, ஞாயிறான பள்ளியற்ற நாட்கள் கழிய திங்கட்கிழமை காலையில் அனூஷனும் தன் பழைய ஜாக்கெற்றை போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போனான்.

அன்றைக்குத்தான் புதிய ஜாக்கெற் திரும்பக் கிடைத்திருந்தது. அவர் திருப்தியும், அனூஷன் மகிழ்ச்சியும்பட்ட வேளை, ஆனந்திக்கு கோபம் வந்திருக்கிறது. பள்ளியில் முறையிடவும் அவரிடம் சொல்லிவிட்டாள்.
அதையா அவரும் செய்யப்போகிறார்?  

உண்மையில் ஜாக்கெற் தொலைந்த அன்றைக்கேதான் தன் வயிற்றெரிச்சலோடு ஆனந்தி அவருக்குச் சொல்லியிருக்கவேண்டும், பள்ளியிலே சென்று முறைப்பாடு செய்வதுபற்றி.

அந்தத் தொலைவில் ஆனந்தி வயிறெரிய மட்டும்தான் செய்திருக்க முடியுமென்றும் இராஜலிங்கத்துக்கு தெரிந்தது. ஏனெனில் கோபத்தை எறிவதற்கும் ஒருவர் அல்லது ஒன்று தேவைதானே? ஒருவேளை அது நிக்கலஸென்று தெரிந்ததால்தான் அந்தக் கோபமே அவளிடம் வந்ததோவென்றும் அவருக்கு யோசனை தோன்றியது. பொதுவாக கறுப்பின மக்களைப்பற்றி கனடிய ஆசியர்களிடம் அவ்வாறான ஒரு மனநிலை, குழப்பகாரர் கள்ளர்கள் என்பதாக, இருந்து வருவதை அவர் அறிவார்.

இராஜலிங்கத்துக்கு அவ்வாறான எண்ணம் இல்லாவிட்டாலும், நிக்கலஸ் ஏன் அவ்வாறு செய்தானென்ற கேள்விமட்டும் விடைதேடி அவரிடத்தில் நின்றுகொண்டிருந்தது.

அனூஷன் சாப்பிட்டு வர, இராஜலிங்கம் அவனை அழைத்து ஜாக்கெற் கிடைத்த விபரத்தை விசாரித்தார்.

கைகளை ஆட்டியும், கேலியாய் சிரித்தும் கொண்டான அபிநயத்தோடு அன்று மாலையில் நடந்ததைச் சொன்னான் அனூஷன்.

பள்ளி முடிய லொக்கருக்கு வந்து தன்னுடைய பையையும் பழைய ஜாக்கெற்றையும் எடுத்துக்கொண்டு அனூஷன் வெளியே வர, முன்னால் போய்க்கொண்டிருக்கிறான் நிக்கலஸ், எந்த ஜாக்கெற்றை அனூஷன் தொலைத்தானோ, அதேபோன்ற ஒன்றை அணிந்துகொண்டு.
அனூஷனுக்கு நெஞ்சு திக்கென்றது. கொஞ்சம் கோபம்கூட வந்தது.
விரைந்து அவனிடம் போய், ‘நிக்கோ, இந்த ஜாக்கெற்றை நீ எப்போது வாங்கினாய்?’ எனக் கேட்டான்.

நிக்கோ கலகலவெனச் சிரித்துவிட்டு, ‘இது நான் வாங்கியதில்லை. இங்கேதான் எறிந்துகிடந்து எடுத்தேன்’ என்றான்.

‘போன வெள்ளிக்கிழமை எனது புதிய ஜாக்கெற் லொக்கரில் வைத்திருந்த இடத்தில் காணாமல் போனது.’

‘இதுமாதிரியானதா அது?’

‘இதுமாதிரியானதேதான்.’

‘இதுவேயா அது?’

கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘இதுவேதான்’ என்றான் அனூஷன்.

நிக்கலஸ் நின்றான். அனூஷனும் நிற்க, அவனது முகத்தை ஏறிட்டு நோக்கினான். அனூஷன் உண்மைதான் சொல்கிறானா என்பதை அறியப்போல் அவனது கண்களை கூர்ந்து கூர்ந்து கவனித்தான்.
தனது இலவசத்தை தட்டிப்பறிக்க அனூஷன் செய்கிற சூழ்ச்சியில்லை அது என்பதைக் கண்டிருப்பான்போல. சிறிதுநேரத்தில் ஜாக்கெற்றைக் கழற்றி அனூஷனிடம் கொடுத்துவிட்டு விறுவிறுவென நடந்தான்.

பின்னால் அனூஷன், ‘நன்றி’ என்றான்.

திரும்பிப் பாராமலே அதெல்லாம் ஒன்றுமில்லை என்பதுபோல் கையைத் தூக்கிக் காட்டிவிட்டு சர்வசாதாரணமாய் போய்க்கொண்டிருந்தான் நிக்கலஸ்.

பள்ளியில் நிகழ்ந்ததைச் சொல்லிவிட்டு அனூஷன் கணினி மேசையில் சென்று அமர்ந்துகொண்டான்.

அனூஷன் விளக்கிய சம்பவத்திலிருந்து நிக்கலஸ் ஒரு வாழ்வியல் உண்மையாய் அவருள் உருவம் கொண்டபடியிருந்தான்.
நிக்கலஸை அவருக்குத் தெரியும். அந்தப் பகுதியிலே குடியிருக்கிற பையன்தான். நல்ல உயரமான கறுப்பு பையன். ஒட்ட வெட்டிய புலுட்டை முடி. எப்போதும் சிரித்தபடியிருக்கிற முகம். பற்கள், கதைக்கும்போதும் பளீரென்று ஒளியடிக்கும். அனூஷனோடு அவரைக் காணுகிறவேளைகளில் ‘ஹாய், தாத்தா’ என்பான். அனூஷனின் வயதுதானிருப்பான். அவனது தாயைக்கூட பள்ளி வருகிற தருணங்களின் அவர் கண்டிருக்கிறார்.
ஒரு நீண்ட ஐந்து வருஷ காலத்தில் கறுப்பின மக்களோடு ஆசிரியப் பணி நிமித்தம் அவர் நைஜீரியாவில் வாழ்ந்திருக்கிறார். அவர்களது வாழ்வும், மனப்போக்குகளும் அதனால் ஓரளவு அவருக்குத் தெரிந்திருந்தன.

மனப்போக்கு என எண்ணியபோது நைஜீரியாவில் ஏறக்குறைய இதற்கு நிகராக நடந்த சம்பவமொன்று அவருக்கு உடடனடியாக ஞாபகம்வந்தது.
குரூமி என்கிற ஒரு கட்டையான அகன்ற தோற்றமுடைய ஒரு நடுத்தர வயது விதவைப் பெண், சனி ஞாயிறுகளில் வீட்டு வேலைகள் செய்வதற்காக அவரதிடத்துக்கு வந்துகொண்டிருந்தாள்.

ஒருநாள் அவரது இரண்டு நீலநிற சேர்ட்டுகளில் ஒன்று காணாமலாகியிருப்பது அவரது கவனத்தில் வந்தது. களவு போவதற்கான வாய்ப்புகள் குறைந்த இடம் அது. அவரது உடுப்புகள், படுக்கை விரிப்பு முதலியவற்றை தோய்த்துக்கொடுப்பவள் குரூமிதான். ஆனால் அவளிடம் கேட்க அவருக்குத் தயக்கமாக இருந்தது. அதனால் நேரடியாக அவளிடம் கேட்காமல், அவள் அங்கே நிற்கிறபோது எதையோ தேடுவதுபோல் பாவனை செய்தபடியிருந்தார்.

அதைக் கண்ட குரூமி கேட்டாள்: ‘என்ன தேடுகிறீர்கள்?’

‘இல்லை, எனது நீலச் சேர்ட்டுகளில் ஒன்றைக் காணவில்லை, அதைத்தான் தேடுகிறேன்’ என்றார் அவர்.

‘நீலச் சேர்ட்தானே? அதை நான் எடுத்துக்கொண்டு போய்விட்டேன்.’

‘ஏன்?’

‘எனது மகனுக்கு போடுவதற்கு சேர்ட் இல்லை. உங்களிடம் நீலச் சேர்ட்டிலும் இன்னொன்று இருக்கிறதுதானே? அதனால் கொண்டுபோனேன்.’

‘அப்போ, உனக்குத் தேவையானால் எதையும் நீ எடுத்துக்கொண்டு போய்விடுவாயா?’

‘அதெப்படி முடியும்? உன்னிடம் அது இரண்டாக இருக்கவேண்டும். அப்போதும் எனக்கு அது தேவையானதாக இருக்கவேண்டும்.’

குரூமி சிரித்துக்கொண்டு நின்றிருந்தாள், தான் நியாயமெதையும் மீறி நடந்துவிடுபவளில்லை என்பதுபோல்.

இராஜலிங்கம் யோசித்தார், நிக்கலஸ்கூட அப்போது குரூமிபோல்தான் சிரித்துக்கொண்டு நின்றிருப்பானா என்று.

அவரால் தன் அப்போதைய கேள்விக்கு விடையொன்றை அடைய முடிந்தது.

குளித்துவிட்டு கீழே வந்த ஆனந்தி, மறுநாள் பள்ளிசென்று நடந்த சம்பவம்பற்றிய முறைப்பாட்டைச் செய்ய மறுபடி அவரிடம் ஞாபகப்படுத்தினாள்.

மௌனமாயிருந்த இராஜலிங்கம் சிறிதுநேரத்தில், “வேண்டாம், இந்த விஷயத்தை அப்பிடியே விட்டிடுவம், ஆனந்தி. இதில களவெண்டு எதுவுமிருக்கிறமாதிரி எனக்குத் தெரியேல்லை” என்றார்.

“அப்ப?”

“மனம்தான். அது ஒவ்வொரு மனிசருக்கும் ஒவ்வொரு வடிவமாய் இருக்கு. வடிவத்துக்கேற்றதாய் அது சிந்திக்குது. நிக்கலஸின்ர மனம் என்ன வடிவங்கொண்டு இருந்துதோ?”

ஆனந்தி சிறிதுநேரம் தந்தையைப் பார்த்தபடியே நின்றுவிட்டு எதுவும் சொல்லாமல் மேலே போனாள்.

தான் சொன்னதை அவள் புரிந்துகொள்ளவில்லை என்பது அவருக்குத் தெரிந்தது.

அவள் நின்ற இடத்தில் அப்போதும் அவள் விட்டுச்சென்ற அதிருப்தியை அவர் கண்டார்.

000


 நம் நற்றிணை - முதலாம் இதழ் 2017

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்