தமிழ் வென்ற கடலும் கலை தந்த மழையும்!



தமிழ் வென்ற கடலும்
கலை தந்த மழையும்!


நாட்டிய கலாலயத்தின் பொன்விழாவையொட்டி 'தமிழ்: வென்றெழும் தொன்மொழி' (Thamizh: Resilience of the oldest Language) என்ற நிகழ்வு மார்க்கம் தியேட்டரில் கடந்த 14ஆம் திகதி (ஆடி 2018) மாலை 6.30 மணிக்கு மேடையேறியிருந்தது. மனத்தைச் சிலிர்க்கவைத்த ஒன்றரை மணிநேர நிகழ்வு அது. அதன் பிரதியாக்க(Script)த்திலும் பொருண்மை(Concept)யின் தேர்விலும் நடன அமைப்(Choreograph)பிலுமென நுண்ணிய சில அம்சங்களை கவனமாக முடிந்திருந்தது.
      தமிழ் என்ற சொல்லிலிருந்து வியாபித்தெழுந்த அதன் வென்றெழுதலின் தீர்க்கம் நிகழ்வு முழுக்கப் பரந்திருந்தது. காட்சிகளின் சிறப்புக்கு ஓவியர் மருதுவினது கைத்திறனும் பின்னணியில் இருந்திருக்கிறது. தொல்காப்பியன், இளங்கோவடிகள், சிவனும் விஷ்ணுவும், சோழப் பேரரசன் ஆகிய ஓவியங்கள் நிகழ்வையும், சிறுவிவரணைநூ(Brochure)லையும் மிகவும் அழகும் அர்த்தமும் படுத்தியிருந்தன. காட்சிகளின் பிரமாண்டத்துக்கும் மிக்க உறுதுணையாயிருந்தன அவை.
      இசை நாட்டியத்தின் எழுத்துப் பிரதியின் சில இடங்களிலான சரிவுகளையும் சரிசெய்யும் விதத்தில் நாட்டிய கலாலய மாணவிகளின் தேர்ச்சியையும் திறமையையும் காட்சிப்படுத்தியிருந்தார் நாட்டிய அமைப்பாளரான வசந்தா டானியல்.
      இசைநாட்டிய எழுத்துப் பிரதியானது மொழியின் தொடக்க காலம், தொல்காப்பியர் காலம்,  சங்க காலம், அறநெறிக் காலம், பக்திநெறிக் காலம், சோழராட்சி-காப்பிய காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் ஆகிய எட்டு அங்கங்களாய் வகுக்கப்பெற்றிருந்தது. மரபார்ந்த பகுப்புகளை மீறியதாய் இப்பகுப்பு அமைந்திருப்பினும் கலாநேர்த்திக்கான இடைவெளிகளை அளித்திருந்ததில் பிரதியை வரவேற்க முடியும். ஆயினும் நாயக்கர் காலம் தவிறிப்போனமை முக்கியமான ஓரம்சத்தின் அவதானிப்புக்கு ஊக்கம் செய்யவில்லை. தமிழ் கண்ட கடலினதும், வடமொழியினதும் பேரிடர்கள்போல் நாயக்கர் காலத்தில் தெலுங்கு மொழியின் கீதங்கள் கீர்த்தனங்களாலும் அது பேரிடர் கொண்டிருந்தது. பிற்கால அரசியலில் வெகு பாதிப்பான தாக்கத்தைச் செய்திருந்த அக்காலத்தை பிரதி அடக்கியிருந்தால் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்க முடியும்.
      நிகழ்வு ஆரம்பத்திலிருந்தே ஒளி, ஒளிப்பட, மற்றும் ஒலி ஊடகங்களின் தொழில்நுட்ப அனுசரணையை அழகாகப் பயன்படுத்தியிருந்தது. பாவங்களாலும், அபிநயங்களாலும் காட்சிப்படுத்த முடியாத புவித் தோற்ற காலத்தின் காட்சி வெளிப்படுத்துகைக்கு அதுவொரு நல்ல உத்தியாக இருந்தது. ஆயினும் நிகழ்வில் அந்தப் பிரயோகம் அளவுமீறி இருக்கவில்லை.
      'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமி'ழென்ற உணர்ச்சிகரமான அரசியலோடு தொடங்கியிருப்பினும் விரைவிலேயே அதை மிக இலாவகமாக பிரதி கடந்து ஓரளவு ஆய்வுரீதியாகச் சென்றிருந்தது. தொல்காப்பியர் காலத்தை சங்ககாலமாகவே நாம் உள்வாங்கவேண்டும். கடற்பெரும் புரள்வுகள் தமிழரையும் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் தமிழ் மண்ணையுமே மீண்டும் மீண்டும் பெருகிவந்து அக்காலத்திலேயே அழிக்க முடிந்திருந்தன.
      அவ்வாறான கடற்பெரும் புரள்வுளின்போது முதல் சங்கம் அழிகிறது. ஐந்நூற்றுக்கு மேற்பட்ட புலவர்களிருந்து தமிழால் ஆட்சிசெய்த சபை அது. அதுவிருந்த தமிழ் நிலத்தையும் தன் கொடிய நாவுகொண்டு சுருட்டி கடல் விழுங்குகிறது.
      அடுத்து கபாடபுரத்தில் எழுவது இடைச் சங்கம். அதுவுமே அவ்வாறாக கடலால் கொள்ளப்பட மூன்றாவதாகவும் எழுகிறது ஒரு கடைச் சங்கம். அதுவும் கடல்கோளால் அழிவுண்டு போகிறது. 'பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல்' கொண்ட இந்தக் கதைகளை இலக்கியம் எடுத்தியம்புகின்றது.
      ஆயினும் இத்தகைய அழிப்பிலிருந்தும் எஞ்சிய இலக்கிய இலக்கணங்களுடன் தமிழ் மீண்டெழுகிறது. எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் எத்தனை இடர்கள் தாண்டி நமக்குக் கிடைத்தன என்பதை வரலாறு சொல்லிநிற்கிறது.
      சங்கம் தமிழ் வளர்ந்த காலம் மட்டுமில்லை, தமிழை அழிக்க கடல் எழுந்த காலமுமாகும். ஆயினும் தமிழ் கடலை வென்றது. அதை சிறப்புற கவனத்தில் எடுத்திருந்தது எழுத்துப் பிரதி. அதற்காக பொன்னையா விவேகானந்தனை நாம் பாராட்டலாம்.
      சங்க காலத்தைத் தொடர்வது சங்க மருவிய காலம். அதுவே அற இலக்கிய காலமென தமிழ் வரலாறு உரைக்கிறது. அக்காலத்திலேயே அது சிலப்பதிகாரம், மணிமேகலை ஆதிய அரும்பெறல் காவியங்களையும், திருக்குறள்போன்ற உலகப் பொதுமறையையும் தன்னில் அணியாய்ச் சூடிக்கொள்கிறது.
      இங்கிருந்து சடைத்தெழுகிறது நாட்டிய அமைப்(Choreograph)பின் ஆதிக்கம். சங்ககாலத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானிலங்களும் கிராமிய நடனத்தில் காட்டப்படுகின்றன. அதற்கான பாடல் வரிகளும் நிறைவாக அமைந்திருந்தன என்பதும் இங்கே கவனம் கொள்ளப்படலாம். ஆனால் எனக்கொரு ஆதங்கமெழுந்தது காட்சியைக் கண்டுகொண்டிருந்த பொழுதில். பாலை சேர்ந்த ஐந்நிலங்களின் காட்சிப்படுத்தலோடு அவற்றின் அகவொழுக்கங்கள் ஐந்தும் அவ்வவ் நிலங்களது மக்களின் வாழ்நிலைகளைப் புலப்படுத்தும் வகையில் அமைத்திருந்தால் காட்சி இன்னும் விகாசம்பெற்று சிறப்பாக இருந்திருக்க முடியும்.
      நான்காவது அங்கமான பக்திநெறிக் காலமும் தமிழ் மீண்டெழுந்த வரலாற்றில் முக்கியமான காலப்பகுதிதான். இதுவரை இருந்த இடர்கள் இயற்கையினால் ஆனதாக, குறிப்பாக கடலால் ஆனதாக இருக்க, இனி காலத்தின் சூட்சுமத்தாலானதாக வரவே விதியிருந்தது. வடமொழியின் ஆதிக்கம் அளப்பரியதாயிருந்தது இக்காலத்தில்தான். இக்காலத்தில் தமிழகத்தை ஆண்டவர்கள் மூவேந்தர்களாயுமிருக்கவில்லை. அவர்கள் பல்லவர்கள் எனப்பட்டார்கள். அந்த இனத்து அரசர்கள் அந்நியர்களாயிருந்தாலும் சைவத்தை வளர்த்தார்கள். சைவம் வேறொரு வகையில் தமிழை உறுதிப்பாடடைய வைத்தது.
      இதனால் வடமொழியின் ஆதிக்கத்தை அளவு மீறாத ஓர் எல்லையில் வைத்து தமிழால் தடுக்கக் கூடுமாயிருந்தது. அப்பரும் சம்பந்தரும் நாவுக்கரசரும் மணிவாசகரும் தமிழால் இறைவனைத் துதிக்கத் தொடங்கினர். தங்கள் தொண்டினை அவர்கள் தமிழிசையில் சுமந்து சென்றனர். ஓரளவு தன்னை ஒரு தெய்வபாஷையாய் நிலைநிறுத்தி வந்த வடமொழி தன் பலம் குறைந்தது தமிழ் நாட்டில். அது தமிழகத்தைவிட்டு நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டதுபோல் ஓடவில்லை; ஒரு அச்சுறுத்தலாய் தொடர்ந்தும் தமிழகத்தில் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆயினும் சமய நால்வரின் பாடல்கள், குறிப்பாக மாணிக்கவாசகரின் திருவாசகம், இக்காலத்தில் தோன்றி தமிழின் உள்ளங்களை நெக்குருக்கும் தன்மையைக் காட்டிற்று. மூவரின் தேவாரங்கள் பட்டிதொட்டிகளுக்கெல்லாம் இசைத் தமிழாய்ப் பரவிச்சென்று அங்கெல்லாம் தமிழை அரியாசனம் ஏற்றின. இதனாலேயே வடமொழியின் ஆதிக்கம் பெருமளவு குறைந்தது என்பர் ஆய்வாளர்.
      அடுத்து வந்த காவியகாலமானது தமிழ்மொழியினதும் தமிழரின் வாழ்நிலைமையினதும்  முக்கியமான ஒரு காலகட்டமாகும். இந்தக் காலத்திலேதான் தமிழுக்கு கதியாகும் இருவரில் ஒருவரான கம்பனின் இராமாயணம் உருவானது; சபையேறியது. காப்பிய காலத்தின் நாட்டிய அமைப்பு வெகுசிறப்பாய் இக்காலத்தின் தன்மையை பார்வையாளருக்கு விளக்கமாய் அளித்திருந்தது.
      தொடர்ந்து வந்திருக்கவேண்டிய நாயக்கர் காலத்தை ஒரு பாய்ச்சலாய் பிரதி கடந்து ஐரோப்பியர் காலத்துக்குள் நுழைகிறது. ஐரோப்பியர் காலத்தில் தமிழுக்கு அச்சுறுத்தலேதும் இருந்திருக்கவில்லை. ஆனால் மதம் சார்ந்த அழுத்தம் இருந்தது. அது உண்மையில் தமிழை மேலும் வளம்பெறத்தான் வைத்தது. கிறித்துவத்தின் வருகையே தமிழின் உரைநடையினை வளமாக்கியது. முறைமை சார்ந்த அகராதிகளினதும், நவீன இலக்கிய அச்சாக்கங்களினதும் வளங்களைச் சேர்ப்பித்தது. ஆனால் மக்கள் அக்காலத்தில் அரசியல் அடிமைகளாயிருந்தனர். அவர்களின் அடிமை விலங்கொடிக்க பாடியவன்தான் பாட்டுக்கொரு புலவனான பாரதி.
      பாரதியின் பாடல்கள் தமிழ்க் கவிதையுலகில் பெரும்மாற்றத்துக்கான வாசலைத் திறந்து விட்டதாயினும், அவற்றை அவனது வசன கவிதை, சுயசரிதை, பாஞ்சாலி சபதம் மற்றும் கண்ணன்-கண்ணம்மா பாடல்களேதான் செய்திருந்தன. அவ்வகையினத்துள் பாரதியின் தனிப்பாடல்களுள் ஒரு பாடலாக வருகிறது 'மழை'ப் பாட்டு.
'திக்குகள் எட்டும் சிதறி-தக்கத் \ தீம்தரிகிட…' எனத் தொடங்கி
'கொட்டி அடிக்குது மின்னல்- கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் –கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று  
சட்டச்சட சட்டச்சட டட்டா- என்று
தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்  
எட்டுத் திசையும் இடிய – மழை  
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா' என வீச்சுப் பெற்றுத் தொடர்கிறது அது.
      இந்த இடத்தில் இசைக்காக ஜெயதேவன் நாயரையும், குரலுக்காக அருண் கோபிநாத்தையும் பாராட்டவேண்டும். காட்சியை உன்னதமென்னும் அளவுக்கு உயர்த்தியதில் நாட்டிய அமைப்பாளரினதும் அக்காட்சியில் பங்கேற்றவருமான வசந்தா டானியலின் பங்கு முக்கியமானது.
      இசைமூலம் மழை வருவிக்கப்பட்டது என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கின்றோம். ஆனால் அன்று மார்க்கம் தியேட்டரில் வசந்தா டானியலினதும், கூட நாட்டியப் பங்களிப்பாற்றிய மாணவிகளது அபிநயத்திலும் மழை பெய்ததை நான் உணர்ந்தேன்.
      சில்லிட்டு பொலபொலவென நீர்த் தாரைகள் என் மேலும் உதிர்ந்தன. பக்கத்தில் அமர்ந்திருந்த வில்லா அனந்தராமிலும் அது பட்டிருக்கலாம். சூழவிருந்த பார்வையாளரெல்லாரும்கூட சிலிர்த்ததை நான் கண்டேன்; உணர்ச்சிபூர்வமான ஹஉங்காரங்களை கேட்டேன்.
      அத்தனை பரவசம் அடைந்திராவிட்டால் இந்தப் பதிவையே நான் எழுத முன்வந்திருக்க முடியாதென்றே நினைக்கின்றேன். காட்சி ரூபமாய் நான் தரிசித்த மிக உயர்ந்த உணர்வுக் கணம் அது.
      அடுத்த எட்டாவது அங்கம் மிக்க குதூகலமான மனநிலையைத் தந்தது. சுதந்திரத்தின் பின் இலங்கையிலும் சரி தமிழகத்திலும் சரி தமிழுக்காக நடந்த அத்தனை போராட்டங்களும் தோற்கவே செய்திருந்தன. ஆனாலும் தமிழ் நிலத்தின் இருப்பும் தமிழர் வாழ்வும் நிலைபெறும்படி தமிழ் சர்வதேச அரங்கில் செம்மொழியாக உலா வரத் தொடங்கியது முக்கியமானது. உலகெலாம் தமிழ் ஒலிக்கக் கேட்கக்கூடியதாகவும் இருந்தது. இக் குதூகலத்தின் காட்சிப் பதிவில் நாட்டிய கலாலயத்தின் பன்னிரண்டு மாணவிகள் பங்கேற்றிருந்தனர். பயிற்சி முதுநிலையிலுள்ள மாணவிகளாய் இருக்கவேண்டும், பாவங்களும் அசைவுகளும் இயங்குதல் வேகமும் எல்லாம் மனங்களை துள்ளச் செய்தன.
      பங்குபற்றிய மாணவியரும், பிரதியாக்ககாரரும், இசையமைப்புச் செய்த குரல் வளம்கொடுத்த அனைவரும் இவ்விடத்தில் ஞாபகமாகவேண்டியவர்கள். குறிப்பாக நாட்டிய நிகழ்வின் அமைப்பாளர்.
      பெரும்பாலும் மேடைகளில் காணக்கிடைக்காத அனுபவம் 'தமிழ்: வென்றெழும் தொன்மொழி' மூலம் கிடைத்ததென்பது மிகையான கூற்றல்ல.

000 

விளம்பரம் ஆக. 01, 2018

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்