சொல்லில் மறைந்தவள் - சிறுகதை


 

யாழ் பல்கலைக் கழக கலைப் பீடத்திலிருந்து 2000இல் வெளியேறி, அப்போது வெளிநாடுகளில் அகதிகளாகவும் குடியுரிமை பெற்றவர்களாகவும் வசித்தவர்களில் பன்னிரண்டு குடும்பங்கள் தமது  ஐந்தாவது ஒன்றுகூடலுக்காக  அந்த 2018 ஓகஸ்ற் 11 சனிக்கிழமை மாலை  டென்மார்க்கிலுள்ள சிவநேசன் வீட்டில்  கூடியிருந்தன. அதன் உறுபயன் அவர்களால் உணரப்பட்டதோ இல்லையோ, அந்த இடம் மட்டும் வெகு கலகலப்பிலும், மகிழ்ச்சியிலும் இருந்துகொண்டிருந்தது. வெடிச் சிரிப்பு, கிணுகிணுச் சிரிப்பென பலவகைச் சிரிப்புகளும் அங்கே பொங்கிக்கொண்டிருந்தன.

இறுதி யுத்தத்தின் உடனடிப் பின்னாக இலங்கை சென்ற சர்வேஸ்வரன், பல்கலைக் கழகத்தில்  தன்னுடன் படித்தவனும், அப்போது ஜேர்மனியில் குடியிருந்தவனுமான மூனா. கனகசபையை கொழும்பு செட்டித் தெருவில் எதிர்பாராதவிதமாகச் சந்தித்தபோது நிகழ்த்திய உரையாடலில்தான் அந்த ஒன்றுகூடலுக்கான திட்டம் விழுந்தது. மூனா.கனகசபையும் அதை ஆதரிக்க, செட்டித்தெரு தேநீர்ச்சாலையொன்றில் அதற்கான நடைமுறைத் திட்டங்கள் உடனடியாக இருவரிடத்திலும் விரிவுபெற்றன.

சர்வேஸ்வரன் பிரான்சுக்கும், மூனா.கனகசபை ஜேர்மனிக்கும் திரும்பிய பின்னரும் ஆறு மாதங்களாயிற்று தம்மோடு படித்தவர்களைத் தொடர்புகொண்டு அத் திட்டத்தைக் காரிய சாத்தியமாக்க. அதுவொன்றும் உண்மையில் சுலபமான காரியமாக இருக்கவில்லை. மிகுந்த பிரயாசையில் போன் நம்பர்களை எடுத்துத் தொடர்புகொண்டபோது, தமக்கெல்லாம் அந்தமாதிரி நேரத்தைச் செலவிட வாய்ப்பில்லையென பலபேர் வெளிப்படையாகவே அவர்களது மனம் சோரும்படி அந்தத் திட்டத்தைத் தட்டிக்கழித்தார்கள். மூனா.கனகசபை முற்றாகச் சோர்ந்துவிட்டபோது, சர்வேஸ்வரனே மூச்சாக நின்று 2011 ஓகஸ்ட் மாதம் பிரான்சில் ஐந்து நண்பர்களின் ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடுசெய்தான். அவர்களும் மனைவி பிள்ளைகள் சகிதம் வந்து தத்தம் உறவினர்களதோ நண்பர்களதோ வீட்டில் தங்கிக்கொண்டு மாலைகளில் சர்வேஸ்வரன்  வீட்டில் நான்கு சந்திப்புகளைச் செய்தனர். மூனா.கனகசபையின் மகள் ரூபிணி பரத நாட்டியமாடி ஒன்றுகூடலின் முதல் கலை நிகழ்ச்சியை நிகழ்த்தியது அப்போதுதான்.

 அடுத்த ஆண்டுச் சந்திப்பு  மேலும் சில நண்பர்களின் அதிகரிப்போடு நோர்வேயில் நடந்தது. சர்வேஸ்வரன் எவ்வளவுதான் உற்சாகமாக அந்த ஒன்றுகூடல்களை ஒழுங்கமைக்க உழைத்திருந்தாலும் 2013இல் ஒரு சந்திப்பை ஏற்பாடுசெய்ய முடியாதுபோனான். அதிலிருந்து இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சந்திப்பதென முடிவானது. அதன்படி 2014இல் லண்டனிலும், 2016இல் சுவிஸிலும் அவை நடைபெற்றன.  டென்மார்க்கில் அப்போது நடந்துகொண்டிருக்கிற அந்தச் சந்திப்பு ஐந்தாவதாக இருந்தது. சிறியவர்களின் மிருதங்கம் வயலின் வீணையென இசைக் கருவிகளின் தனித்தனி வாசிப்பும் அந்த மாலைகளில் நடைபெற்றன. அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக அடுத்த தலைமுறையினரின் கூடுதலான கலைப் பங்களிப்புடன்  நடக்குமென்பதற்கு அவர்களிடத்தில் நம்பிக்கையையும் அது ஏற்படுத்தியது.

            பிள்ளைகளும் பெண்களும் உள்ளே இரவுச் சாப்பாட்டு மும்முரத்திலிருக்க, ஆறு நண்பர்கள் தனியாக பின்புற புல்தரையில் உற்சாக பானம் அருந்திக்கொண்டு இருந்தனர். மூனா.கனகசபையென்ற  பெயரின் விசித்திர அமைவை  யாரோ குறிப்பிட, அதற்கான விளக்கத்தின் பின்னால் அங்கே தானா.கனகசபையின் பிரஸ்தாபம் வந்தது. தொடர்ந்து ஆனா.கனகசபையை யாரோ குறிப்பிட்டார்கள். அவன் அப்போது வெள்ளவத்தையில் ட்ரவல்ஸ் நடத்துவதான தகவலை வசீகரன் சொன்னான்.  பின் அவனே பல்கலை வளாகத்துச் சூழலில் குடியிருந்த  அமரசுந்தரி ஆனா.கனகசபையின் ட்ரவல்ஸில் அப்போது வேலைசெய்கிற விபரத்தையும் தெரிவித்தான். உண்மையில், கூடிப் படித்த அத்தனை பெண்களைவிடவும் ஓ.எல். படித்துவிட்டு வீட்டிலிருந்த அமரசுந்தரி அப்போது கம்பஸ் மாணவர்களுக்கிடையே பெரும்  ஆதர்ஷம் பெற்றிருந்தாள். அதற்கு அவளது கனத்த தனங்களும், தடிப்பமான கீழுதடுமே காரணமென்று அவரவரும் தமக்கிஷ்டப்படி போதையில் வர்ணித்தனர்.

அவர்களது கொச்சையான ரசனை சர்வேஸ்வரனுக்குப்  பிடிக்கவில்லை. அமரசுந்தரிக்கு அப்போது முப்பத்தைந்து வயதாவது இருக்கும், கல்யாணமாகி இரண்டொரு பிள்ளைகளுக்கு தாயாகவும் இருக்கக்கூடும், அவர்களது ரசனை அவளது நடத்தைமீதான கேள்வியாகவும் தொனிக்குமென எச்சரித்தும்  அவர்களது உற்சாகம்  நின்றுவிடவில்லை. அவ்வாறான ஒன்றுகூடல்களை பண்பாட்டின் வேர்களைத் தேடுவதற்கும், அவற்றை தம் அடுத்த சந்ததியினரிடத்தில் கடத்துவதற்குமான நடவடிக்கையாக அவன் எப்போதும் கருதிவந்திருந்தான். ஆனாலும் பழைய நண்பர்களின் ஒன்றுகூடல் வேளைகளில் யாரையும் நேரடியாகப்  பாதிக்காத அவ்வகைப் பேச்சுக்களை தடைசெய்துவிட முடிவதில்லை என்பதும் அவனுக்குத் தெரியும்.

அவன் தெளிவுகொண்டபோது ராஜலிங்கம் அந்தப் பேச்சுக்களை உதாசீனப்படுத்துவதுபோல் அடிக்கடி அங்காலே போய் சிகரெட் புகைத்தபடி நின்றுகொண்டிருந்தான்.   

சர்வேஸ்வரன் அதை ஏற்கனவே கவனித்திருந்தான்.  அவ்வாறு மூன்றாவது முறை செய்கிறபோது அவனும் பின்னால் எழுந்து சென்றான். ‘எல்லாம் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன்’ என்று மெல்ல பேச்சைத் துவக்கினான். ‘நீயேன் எழும்பியெழும்பி இஞ்சால வந்து நிக்கிறாய்? அமரசுந்தரிபற்றிப் பேசுறது பிடிக்கேல்லையோ…?’

தன் முன்னால் நின்றவனை ராஜலிங்கம் தீர்க்கமாய்ப் பார்த்தான். அந்த ஆர்வம் சிறிது எரிச்சலைக் கொடுத்தாலும், சர்வேஸ்வரனுக்குச் சொல்வதில் எந்தப் பாதிப்பும் வந்துவிடாதென அவனுக்குத் தெரியும். அவன் நீண்ட கால நண்பன் மட்டுமில்லை, தூரத்து உறவினனும். ஆனால் பிரச்னை என்னவெனில், விஷயம் மிகவும் நுண்மையாக இருந்ததில் அதைப் புரிந்துகொள்ள  சர்வேஸ்வரனால் முடியுமா என்பதுதான்.  ஒரு நுண்மையான மனவுணர்வு  ஓர் அபவாதமாக உருமாறக்கூடிய அபாயம் அதில் இருக்கிறது. அதுவொரு மனித சபலத்தின் பலஹீனமான ஒரு தருணத்தில் நினைவுகளுள் அடித்த அலைகள் மட்டுமே.  அவை சம்பவங்களாக விரிவதன் முன்னால் ஒரு சொல்லில் அவிந்துபோய்விட்ட கனவுகளும். அதனால் அந்த விஷயத்தை மூடிவைத்துவிடுவதே சிலாக்கியமானதென எண்ணினான் ராஜலிங்கம்.  

இரவுணவு முடிந்து பத்து மணிக்கு மேல் அவரவரும் தாங்கள் தங்கியிருந்த நண்பர்களதோ உறவினர்களதோ வீடுகளுக்குச் செல்ல, சிவநேசனும் படுக்க உள்ளே போனான். தான் படுக்க நேரமாகுமென்று சொல்லிவிட்டு ராஜலிங்கம் கூடத்துள் வந்தமர்ந்தான்.  

அவன் யோசிக்க நிறைய இருந்தது. அமரசுந்தரியை ஒருமுறை யோசிக்கலாம். கூட, ஆனா.கனகசபையையும் கொஞ்சம்.  சபலத்திற்கும் பண்பாட்டிற்கும் இடையிலான வெளி ஒரு விந்தையால்போல் கடக்கப்பட்டதையும் அவன் எண்ணவேண்டும். ஒழுக்கத்திலிருந்து ஆசைக்கும், ஆசையிலிருந்து ஒழுக்கத்திற்கும் சறுக்கிச் செல்லும் தந்திரம் அவன் அறிந்தானாயினும், அதைச் செய்வதில் அறத்தைக் கடந்துசெல்லும் தருணங்களை அவன் எப்போதும் விலக்கியே வந்திருக்கிறான். அதில் அமரசுந்தரி கதை ஒன்று. நேற்றைய அனுபவத்தை அவனுக்கு இன்றும் நாளையும்கூட தேவை. அதற்காக அந்த யோசிப்பு அவனுக்கு அவசியமாகப் பட்டது.  

மகரகம ஆஸ்பத்திரியில் இருந்த தனது சின்னம்மாவைப் பார்க்க ராஜலிங்கம்  நோர்வேயிலிருந்து கொழும்பு சென்றிருந்த வேளையில், அவனது சின்னம்மாவின் நிலைமை மோசமாகத்தான் இருந்தது. தாய்க்குத் தாயாகவிருந்து வளர்த்தவளின்  நிலைமையைப் பார்த்துத்தான் ஊர் வரமுடியுமென வீட்டுக்கு அறிவித்துவிட்டு அவன் காத்திருந்தான்.

கொழும்பு செட்டியார் தெருவில் அப்படியென்ன விஷேசமிருக்கிறதோ? ஒரு முருகன் கோவில், சற்றுத் தள்ளி ஒரு பிள்ளையார் கோவில், இன்னும் தள்ளி கதிரேசன் தெரு வந்து சேருகிற அரசமரச் சந்தியில் ஒரு சிவன் கோவிலும் எதிர்ப்பக்கத்தில் ஒரு பாரும் சமீபமாய் பூபாலசிங்கம் புத்தகசாலையும் இருக்கின்றன. இருந்தும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பெரும்பாலான சந்திப்புக்கள் அந்தத் தெருவிலேயே நிகழ்ந்துவிடுகின்றன. ஜேர்மனியிலிருந்து வந்திருந்த  ரமணனை செட்டியார் தெருவில்தான் ராஜலிங்கமும் சந்தித்திருந்தான். அவன்தான் ஆனா.கனகசபையென்கிற தன்னூர் நண்பன் ட்ரவல்ஸ் நடத்துகிற விபரம் சொல்லி பயணத் திகதி மாற்றங்களுக்கு, உள்ளூர் வெளியூர் வாகனத் தேவைகளுக்கு அவனை அணுகலாமென்று ஆலோசனை கூறியது.

 ஒருநாள் மாலை  வெள்ளவத்தை சென்றிருந்த இடத்தில் ஆனா.கனகசபையின் ட்ரவல்ஸை தேடினான் ராஜலிங்கம். ஒரு நீலக் கட்டிடத்தின் முதலாம் மாடியில் கே.அழகரட்னம் ட்ரவல்ஸ் இருப்பதாய் ரமணன் சொன்னது அவனது ஞாபகத்தில் இருந்தது.  அவன் மேலே சென்றபோது ட்ரவல்ஸ் திறந்திருந்தது. ஆனா.கனகசபை ட்ரவல்ஸில் இருந்திருந்தான். அங்கேதான் அமரசுந்தரியையும்  ராஜலிங்கம்  முதன்முதலாக நேரில் சந்தித்தான்.     

‘இதுதான் அமரசுந்தரி, ஞாபகமிருக்கெல்லோ?’ என்று  கேட்டு கண்சிமிட்டினான் ஆனா.கனகசபை.  

அதிகமாகப் பேசவோ, கலகலவென வாய் திறந்து சிரிக்கவோ தெரியாத அமரசுந்தரியிடத்தில் ஒரு அம்சம் சிறப்பாயிருந்தது. கழுத்தைச் சாய்த்து அவள் வீசுகின்ற பார்வையில் அவளது கண்களில் தோன்றும் வசீகரம் அற்புதமாயிருக்கும். அவள் மூக்குமின்னி அணிந்திருந்தாள். மிகச் சாதாரணமானதாய்த்தான் இருந்திருக்கும். ஆனாலும்  அவள் கழுத்தை  ஒருக்களித்துச் சாய்த்து நோக்குகையில் அது பளீர் பளீரென முகமே மின்னலடிப்பதுபோல் தோன்றச் செய்தது. அந்த முகத்தில் இயல்பாய்ச் சிவந்திருந்தன இதழ்கள்.  அதில் கொஞ்சம் பெருத்த கீழுதடு. அதுதான் காமத்தை அந்த ஒல்லித்த உடம்பில் அழுத்தமாய் எழுதியிருந்ததோ?

ஒருநாள் அவளது குடும்ப நிலைபற்றி விசாரித்தான் ராஜலிங்கம். சொல்லும்போது ஒரு கணம் கண்கலங்கினாள். ‘யாழ்ப்பாணம் போட்டு வாறனெண்டு போனவர்தான். என்ன நடந்ததெண்டு தெரியா. இப்ப நாலு வரியமாச்சு. ரண்டு வருஷமா தேடாத இடமில்லை. பிறகு… மூண்டு வாய்க்கு சாப்பாடு தேடுற தேவையிருக்கே, வேலை… அலைச்சல்… இப்பிடியே காலம் போய்க்கொண்டிருக்கு.’

 கணவனைக் காணாமல் ஆகியவளென்பது பச்சாத்தாபம் மட்டுமில்லை,  ஒருவகைச் சபல எண்ணம் உள்நுழையும் வாசலாகவும் இருந்துவிடுகிறது. ராஜலிங்கமும் அந்தச் சலனத்துக்குத் தப்பவில்லையென்று முதல் பார்வையிலேயே தெரிந்தது. இரவுகளிலே அமரசுந்தரியின் நினைவேற்றிய உடலின் தகிப்புகளினால் அவன் வதங்கத் தொடங்கினான்.

நோர்வே திரும்பி ஓராண்டுக்குள்ளாக மறுபடி கொழும்புக்கு வந்தான். வரும் வழியெங்கும் அமரசுந்தரியின் நினைவுகளே அவனை உடற்றிக்கொண்டிருந்தன. அவளின் நினைவுகளே அவனை அங்கே விரட்டினவென்றும் சொல்லலாம்.  ட்ரவல்ஸ் பூட்டிவிடப் போகிறதேயென்று அந்தரப்பட்டு சென்றான். அங்கே அமரசுந்தரி இருந்திருந்தாள்.  அப்போதுதான், ஆனா.கனகசபையின்  வீட்டிலே தான் தங்கியிருப்பதை அவள் சொன்னாள். அது தனக்கு  பாணந்துறையிலிருந்து வந்துபோகும் மூன்று மணி நேரத்தையும் அதன் அலைச்சலையும் மிச்சப்படுத்துவதாகக் கூறினாள். கொட்டாஞ்சேனை, மருதானைப் பகுதிகளில் சிறிய வீடொன்றுக்கு ஏஜன்ரிடம் சொல்லிவைத்திருப்பதைச் சொன்னபோது அது நல்லதென்றான் அவன்.  அவனது அழுத்தத்தின் புள்ளியில் தன் கவனம் பட்டதுபோல் தலையைச் சாய்த்து இயல்பானதும்  கவர்ச்சிகரமானதுமான தன் பார்வையை விசிறினாள் அமரசுந்தரி.

ஒருநாள் மாலையில் தன்னோடு விமானத்தில் வந்திருந்த ஒரு நோர்வே வெள்ளைப் பயணக் குழுவினரை ராஜலிங்கம்  வீதியில் சந்தித்தான்.  போர் நடந்த இடமெல்லாம் சென்று பார்க்க அவர்களுக்கு வேனொன்று வேண்டியிருந்தது. அவர்களைக் கூட்டிவந்து அறிமுகமாக்கியதில் ஆனா.கனகசபை வெகு உற்சாகமாகிப் போனான். அன்று எப்படியும் ‘தண்ணி’ அடிக்கவேண்டுமென்று ட்ரவல்ஸை பூட்டிவிட்டுச் செல்லும்போது அமரசுந்தரியுடன் வீட்டுக்குப் போகும்படி அவனிடம் சொல்லிவிட்டு ஆனா.கனகசபை வேறு வேலையாகக் கிளம்பிவிட்டான்.

அமரசுந்தரியோடு கூடிக்கொண்டு ராஜலிங்கம் கடற்கரைப் பக்கமிருந்த ஆனா.கனகசபையின் வீட்டிற்குச் சென்றான். பழைமை பொருந்திய உயரமான மதில்களுக்குள்ளே இருந்தது அந்த வீடு. பழைய வீடானாலும், பெரிதாக இருந்தது. பெரிய பெரிய காட்டுக் கற்களில் பொழிந்துவைத்த படிகள் தேய்மானத்தின் மினுப்புக் காட்டியபடி இருந்தன.

உள்ளே குமிழ் பல்புகள் இரண்டு முழு வீச்சில் வெளிச்சத்தைப் பிரவாகித்தபோதும் கூடத்துள் ஈர வாசனையோடு கூடிய இருளே நிறைந்திருந்ததாய்ப் பட்டது ராஜலிங்கத்திற்கு. சமையலறைக்கு அப்பாலிருந்த இரண்டு சின்ன அறைகளுள் ஒன்றிலிருந்து பழைய பாடல்களை ரேப் ரிக்கோடரொன்று சத்தமாக இரைந்துகொண்டிருந்தது. அத்தனையும் பிரிவுச் சோகத்தின் இறுக்கம்கொண்ட சினிமாப் பாடல்களாக இருந்தன

பாடலொலித்த அறையிலிருந்து அவ்வப்போது வந்து கூடத்துள் காலாற நடக்கும் பாவனையில் எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தாள் ஒரு முதியவள். அவளை சாந்தகுமாரியென்றும், ஆனா.கனகசபையின் உறவினளென்றும் அமரசுந்தரி  சொன்னாள்.

ஆனா.கனகசபை பத்து மணிக்கு மேலே வந்தான். அவர்கள் குடித்து, சாப்பிட்டு முடித்தபோது இரவு பன்னிரண்டு மணி ஆகியிருக்க, அந்தநேரத்தில்  ஹோட்டலுக்கு போகவேண்டாமென்று அவனை அங்கேயே படுக்கச்சொல்லிவிட்டான் ஆனா.கனகசபை.

அது பெரும்பாலும்  அடிக்கடி நடவடிக்கையாக ஆகிவந்திருந்தும், அவளோடான அந்தரங்க உரையாடல் ஒன்றுக்கான வசதியை அங்கே ராஜலிங்கம் காணவில்லை. எட்டு மணியளவில்   அமரசுந்தரியோடு ஆனா.கனகசபையின் வீடு செல்கிறான்; தொங்கல் அறையிலிருந்து சோகம் திணிந்த சினிமாப் பாட்டொலி கிளர்ந்துகொண்டிருக்கிறது; கேட்கும் மனங்களையும் அது தன் சோகத்துள் இழுத்து ஆழ்த்துகிறது; அவர்கள் கூடத்துள் அமர்ந்ததும் அவ்வப்போது வெளியே வந்து காலாற நடப்பதுபோல் வேவு செய்கிறாள் சாந்தகுமாரி;  அவளது அறையிலிருந்து  றேடியோப் பாடலும் தன்னிச்சாபூர்வமாய் அவ்வப்போது வெளியே வந்து வேவின் மாயம் புரிகிறது; அது அவனை நினைவெல்லாம் உறைந்துபோக வைக்கிறது; அவன் எப்போதும் எதையும் பேச எண்ணியதில்லைப்போல் வெறுமை பூணுகிறான்; ஒரு நாளா, இரண்டு நாட்களா… போகிற நாளெல்லாம் நிலைமை அதுவாகவே அவனுக்கு அமைந்துவிடுகிறது.

ஒருநாளிரவு வெகுநேரமாய் ஆனா.கனகசபைக்காக காத்திருந்துவிட்டு அமரசுந்தரியும்  ராஜலிங்கமுமாகச் சாப்பிட்டு முடிய அவன்  ஹோட்டலுக்கு கிளம்பினான். ‘றோட்டில ஆமியும் பொலிசுமாயிருந்திது பின்னேரம் முழுக்க.  வீண் கரைச்சல் என்னத்துக்கு, காலமை போங்கோவன்’ என்றாள் அமரசுந்தரி. அவள் சொல்வதன் நியாயம் அவனுக்குப் புரிந்தது.

ஏறுவெய்யில் ஜன்னலூடாய் சுளீரென்று அடித்து எழும்ப, சமையலறையில் ஆனா.கனகசபையும்  அமரசுந்தரியும் கதைவழிப்பட்ட சத்தம் கேட்டது.  அவன் கதவைத் திறந்து வெளியே வர, சந்தடியில் திரும்பிய ஆனா.கனகசபை அவனைக் கண்டுகொண்டு, ‘ரா முழுக்க நித்திரை முழிச்சு வான் ஓடினது. படுக்கப்போறன்’ என்றுவிட்டு போய்ப் படுத்துவிட்டான். ராஜலிங்கம் வெளிக்கிட்டுக்கொண்டு கிளம்பினான்.

மனதின் கனதியில் அவனது நடைகூட வழமையான வேகம் குன்றியிருந்தாய்த் தோன்றியது, பின்னால் அவனையே பார்த்தபடி நின்றிருந்த அமரசுந்தரிக்கு. திரும்பிய அவன் அவளைக்  கண்டான். தன்போல் அவளுக்குள்ளும் நினைவின் சுமைகளாக அந்த விருப்பங்களின் முடிவின்மைக்கான அவலம் இருந்திருக்குமா? அவன் எண்ணினான்.

ஆனால் ராஜலிங்கத்தின் ஏக்கம் கடைசிவரை தீராமலே இருந்துவிட்டது. அவன் அவசரமாக நோர்வே திரும்ப நேர்ந்தது.

வாரங்கள் சில கழிந்து மனத் தவனத்தின் அருட்டல் மிகுந்த ஒருபொழுதில் கே.அழகரட்னம் ட்ரவல்சுக்கு ராஜலிங்கம் போனெடுத்தான். அமரசுந்தரியே பேசினாள். ‘போனதுக்கு இப்பதான்  நினைப்பு வந்துதோ?’ என்றாள். பின்னால் கிணுகிணுப்பைத் தொடர்ந்தாள்.

‘நினைப்பு வந்திது. ஆனா என்ன பேசுறதெண்டுதான்  தெரியேல்ல…’

‘முந்தி நீங்கள் பேசுறதுக்கு கன விஷயம் இருந்திது. இப்ப ஒண்டுமில்லைப்போல.’

அவள் தன்னின் மனத்தை வாசித்திருப்பதைப் புரிந்தான் ராஜலிங்கம். பேச்சில் உற்சாகமும் நம்பிக்கையும் ஏறிற்று. ‘மனத்தில எவ்வளவோ விஷயம் இருந்திதுதான். அப்ப நேரில பேசேலாதத, இப்ப…’

‘தெரியும். அந்த மனிசி உங்களைப் பேச விடேல்லை. மனசி… பாட்டு… வெளிச்சம் குறைஞ்ச வீடு… எல்லாம் எந்த விஷயத்தைப் பேசுறதுக்கும் ஏற்ற மனநிலையை அங்க தந்திடாது. எனக்கிருந்த அதே தடையள்தான் உங்களுக்கிருந்ததும்.’

அதுபோதுமே! அவள் பேச நினைத்திருந்தாள் என்பதே ஒரு பதில்தானே. அவன் எண்ணிக் களித்திருக்கையில், ‘இப்ப நான் மருதானையில வீடெடுத்து இருக்கிறன்’ என்றாள் அவள். அவனது மெய் சிலிர்த்தது. அதுவொரு அழைப்பு சிறிதாகவோ, பெரிதாகவோ.

‘அது நல்லது. ம்…. இன்னொரு விஷயம் சொல்லவேணும். நான் அங்க பேசுறதுக்கு எனக்கு இன்னொரு தடையிருந்திது’ என்றான் ராஜலிங்கம். ‘ஆனா.கனகசபை என்னை முழுதுமாய் நம்பியிருந்தான். அது என்னைப் பேசவிடேல்லை. காவலெண்டா மீறியிருப்பன். ஆனா… அந்த நம்பிக்கை… உங்களுக்கு விளங்குதா?’

சிறிதுநேர மௌனத்தின் பின் அவள் சொன்னாள்: ‘எனக்கொண்டும் விளங்கேல்லை. நான் நானாய்த்தான் அங்க இருந்தன். ஆற்றையும் சொத்தாயில்லை. என்னை வைச்சு ஆரும் தங்கட நம்பிக்கையை வளர்த்திருக்கத் தேவையில்லை.’

‘இல்லை…. அவன்ர வீட்டில இருக்கிறமட்டும்  நீங்கள் அவன்ர பாதுகாப்பில இருக்கிற சொத்துத்தான? அதை நான் மதிக்கவேணும்.’

‘அப்ப… என்னையும் ஒரு ஜடமாய்த்தான் பாத்திருக்கிறியள், இல்லையே? சரி, எப்பிடியெண்டான்ன நினைச்சிட்டுப் போங்கோ. இப்ப என்ன பேச எடுத்தியள்… அதைச் சொல்லுங்கோ…’  அவள் சிறிது கோபம் அடைந்திருந்தாள்போல் ராஜலிங்கத்துக்குத்  தோன்றியது. நிலைமையை சரியாகவேதான் அவள் கணித்திருக்கிறாள் என்றும் அவன் எண்ணினான். ஆனால் அவளும் தன்போல் அடங்கிப்போனவள் என்பதையும் அவனால் அப்போது நினைக்காமிலிருக்க முடியவில்லை. அவன் சடுதியில் கேட்டான்: ‘அவன்ர நம்பிக்கையை அழிச்சிடக்குடாதெண்ட  பயம் உங்களுக்கு இருக்கேல்லையோ, அமரசுந்தரி?’

அவள் சிரித்தாள். ‘அது நம்பிக்கை சார்ந்த விஷயமில்லை. உண்மையில அது என்ர அன்றாடச் சீவியம் சம்பந்தமானது. ஒரு வேலை… ஒரு தங்கிற இடம்… இப்ப கொழும்பு இருக்கிற நிலைமையில இதையெல்லாம் கவனிக்காம இருந்திடேலாதெல்லோ? இப்ப பாருங்கோ…’

சொல்லிவருகையில்  புதிய காட்சிக்கான பின்னணியிசை மாற்றம்போல் அவளது பேச்சின் தொனி மாறியது. சொற்கள் இடறுப்பட்டன. ‘ஓமண்ணை… ஓமண்ணை… நல்லாயிருக்கிறன்… இஞ்ச… சேரும் வந்திட்டார், குடுக்கிறன், கதையுங்கோ’ என்றாள் அமுதசுந்தரி அவசரமாக.

‘யாரை அண்ணையென்று விளித்தாள்? என்னையா, முன்னால் நின்ற யாராவது வாடிக்கையாளரையா? அல்லது வேறொரு சொல்தான்  அந்தமாதிரி எனக்குக் கேட்டுதோ?’ அவன் ஒன்றும் விளங்காமல் போனை காதோடு வைத்தபடி விறைத்து நின்றிருந்தான். சிறிதுநேரத்தில் ஆனா.கனகசபையின் குரல் வந்தது.  சுகம் விசாரித்தான்… அடுத்த கொழும்புப் பயணம் எப்போதென கேட்டான்… பின் அவசரமாய் மட்டக்கிளப்பு பயணமாவதாகச் சொல்லி ரிஸீவரை அவளிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான்.

அவள் தெளிந்து கிணுகிணுத்தபடி எதுஎதுவோ பேசிக்கொண்டிருந்தாள். அவன் செவித் துளைகளில் அவை விழுந்திருக்கவில்லை. அவள் அவசரத்தில் உதிர்த்த அந்த ஒற்றைச் சொல் இன்னும் அவன் காதுகளில் ஓர் அடைப்பாயிருந்து சப்த வெளியையே தடுத்துக்கொண்டிருந்தது.  அது அவனை அவளிலிருந்து வேறாக்கியது; எட்டத்தில் தள்ளியது. ஒரு வார்த்தையே அந்த  ரசவாதத்தை நிகழ்த்தியதெனில் அதுவொரு மந்திரச் சொல்.

தன் உள்ளை ஆனா.கனகசபையிடம் மறைக்க அமரசுந்தரி எடுத்த சொல்,  அதன் மாயத்தின் வழி அவளையே ராஜலிங்கத்திலிருந்து மறைத்துவிட்டதை அவனது மௌனத்தில் உணராதவள், ‘ஹலோ… ஹலோ…!’ என்றுகொண்டிருந்தாள்.

ஆண்டுகள்  சிலவாய் அமரசுந்தரி அவன் மனத்தில் மறதியாகியிருந்தாள். அன்றைக்கு அந்த ஒன்றுகூடலில் அவளை மறுபடி ஞாபகமாகும் நிலை நேர்ந்துவிட்டது. அதை அவன் அஞ்சவில்லை. அந்தச் சொல் இன்னும் அவன் காதில் ஒலித்துக்கொண்டிருந்து அவளை  அணுகக்கூடாதவளாய் அவனிடத்தில் செய்துகொண்டு இருக்கும்.  ஏனெனில் அச் சொல் பண்பாட்டின் இருசில் வேர் கொண்டிருக்கிறது.

0

 

தாய்வீடு, நவ. 2020

 

 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்