சாம்பரில் திரண்ட சொற்கள் (நாவல்)



 

1

சோபாவில்  இருந்தபடி கண்ணயர்ந்துபோன நடனசுந்தரம், ஒருபொழுதில் தன் அயர்வு தெறித்து விழித்தபோது, கூடம் இருளில் மூழ்கியிருப்பதைக் கண்டார்.

நேரம்பார்க்க, பழக்கத்தில் முன் சுவர்ப்புறம் நிமிர்ந்தபோது இருளின் குறைந்த அந்த வெளிச்சத்திலும், வெள்ளையில் கறுப்புக் கம்பிகளைக் கொண்டிருந்த சுவர்க் கடிகாரம் 01.16ஐக் காட்டியபடியிருப்பது அவதானமாகியது.

01.16? அவர் அந்தப் பொழுதறியா மயக்கத்துக்கு ஒரு கணம் வசமாகிப்போனார். கடந்த சில நாட்களாகவே அது அவ்வாறுதான் நின்றுகொண்டிருக்கிறது என்பதையுணர விநாடிகள் பிடித்தன.

கடிகாரத்தைப் பார்க்கும்போது AA சைஸ் பற்றறிகள் இரண்டு வாங்கவேண்டுமென்றெழும் நினைவு, கடையில் நிற்கிற சமயங்களில் எப்படியோ மறந்துவிடுகிறது. தனிமனிதராக எவ்வளவற்றையென்று அவர் செய்துவிடுவது?  அதுவும் இந்த வயதில்?

சிவயோகமலர், அவளின் அப்போதைய நிலையில் எதிலும் கணக்கில்லை.

நிழற்சாலைபோல் இருமருங்கிலும் வரிசைபட்டு நின்ற வீதி மரங்களில் நானாவித பறவைக் கூட்டங்களின் கலகல… சடசடப்புகள் இன்னும் ஓய்ந்து போகாததில் நேரம் அப்போது ஏழு மணிக்கு மேல் இருக்காதென்று கணிக்க அவரால் முடிந்தது.  ஆயினும் கடிகார முள்கள் 01.16ஐயே நின்றிருந்த எரிச்சல் அவரில் குறைந்துவிடவில்லை. தன் இறுகிப்போன, சலித்துப்போன வாழ்வின் காட்சி வெளிப்பாடாய் அதை எண்ண அவரில் ஆயாசம் முட்டியது.

அவரது பார்வையில், மேலும் பழகிய இருளில், நிமிஷ முள்ளின் மெல்லிய துடிப்பு கவனமாகியது. கட்டிவைக்கப்பட்டிருக்கும் காலம் தன் கட்டறுத்து ஓட டிக்… டிக்கென்ற உந்துவிசையுடன் முயற்சிப்பதுபோல் சட்டென அது அவரது மனத்தில் பதிவாயிற்று. அரூப காலத்தின் ரூபத் துடிப்பு! அந்த எண்ணம் அவருக்கு மிக்க ஆசுவாசமாயிருந்தது. அவரது  மேனியும் உள்ளமும் சிலிர்ப்படைந்தன.  

ஒருபோது காலம் தன் வேகம் தேய்ந்து மெதுவானதுபோலும், இன்னொருபோது இயல்பின் வேகமுடைத்து விரைய முனைவதுபோலுமான கற்பிதங்கள் அண்மைக் காலத்தில் அவரிடத்தில் அதிகம். காலத்தை, காலம் கடந்துநிற்கும் ஒரு வாழ்வின் தருணத்தில் அவ்வாறெல்லாம் உருப்படுத்திக்கொள்வது உயிரியற்கையோ? அது அவரோடு அதிகமும் பொருந்திப்போகும் ஓர் உத்தேசமாகவே இருந்தது.

இயல்பினின்று மாறுபடத் தோன்றும் அத்தகைய தோற்ற கணங்களின்  பதிவாக்கமே சித்திரத்தில் மிக உயர்ந்த தரத்தினை எட்டுகின்றதென அந்த முன்னாள் கல்லூரி ஓவிய ஆசிரியர் கருதிவந்திருக்கிறார். அது அவர் ஓவியம்பற்றி மிகத் தீவிரமாகச் சிந்தித்தும், செயலாற்றியும் வந்த காலமாகயிருந்தது. 

வட மாகாண ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்றபோது இலங்கையின் ஆன்மீக, அரசியல் தளங்களில் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் கிளர்த்திய  அவரது ‘வேய்ங்குழல் முதுகண்ணன்’ ஓவியம் அக் காலத்தில்தான் அவரிடத்தில் படைப்பானது. தனது ஆசிரியப் பதவியே கேள்விக்குள்ளாகுமெனத் தெரிந்திருந்தும்தான் அதை அவர் கண்காட்சியில் பிரசன்னப்படுத்தினார்.

அந்தக் காலத்திற்குப் பின்னாக அவர் படைப்புரீதியாக எந்த ஓவியத்தையும் உருவாக்கிவிடவில்லை. எனினும் அவர் தன் மனத் திரையில் வரைந்துகொண்டுதான் இருக்கிறார். இன்றும்கூட அவரது தனிப்பொழுதுகளின் பெரும்பகுதி, தனது மேசையில் ஒரு தூரிகையோ பென்சிலோதானும் கொண்டிராத அந்த ஓவிய ஆசிரியரால் வீட்டு உட்கூரையிலோ, விரிவானிலோ வரைதலின் உன்மத்தத்துடன்  செலவிடப் பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

எந்த வித்தியாசமான நிகழ்வுகளையும் காலத்தோடு மாற்றிசைவோ ஒத்திசைவோகொண்ட குறியாக அவர் பாவித்துக்கொள்கிறார். அவை நேருண்மைகள் அல்லவென்ற  தெளிவிருந்தபோதும், அவற்றை சூசகவுண்மைகளாக உள்மனத்தே அவர் கருதிக்கொள்கிறார்.

காலத்துக்குக் கதியமைத்து வாழ்வின் நிலைகளாய்க் கற்பித்துக்கொள்வதற்கு பல்வேறு கோணங்களிலும் சிதிலமடைந்த அவரது வாழ்க்கையின் அனுபவங்கள் காரணமாயிருக்க முடியும். மிகவும் பிற்பட்ட குடும்பச் சூழலிலிருந்து அதன் கடினங்களை முயற்சியால் மட்டுமே வெற்றிகொண்டு, முதலில் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற மாணவனாய், பின்னால் ஆசிரியப் பயிற்சி பெற்று வந்ததுமே பெரிய கல்லூரியொன்றில் ஓவிய ஆசிரியனாய், அவர் தரத்திலிருந்த பலரடைந்த இன்னல்களைத் தானடையாமல் விலக்கிக் கொண்டவருக்கு வாழ்வு சிதிலமாவது எங்ஙனம்? அது ஆச்சரியம். ஆனாலும் அவருக்கு அது நடந்தது.

அதை ஓர் ஒழுங்கில் விரித்துப் பார்ப்பதை ஏனோ அவர் பலகாலமாயும்  புறக்கணித்து வந்திருந்தார். அது தன்னை ஈடேற்றும் என்ற நம்பிக்கையோடு அண்மைக்காலத்தில் அக் காரியத்தில் ஈடுபட்டதற்கும் சுட்டிச்சொல்லும்படியான எந்தச் சம்பவமும் நிகழ்ந்துவிடவில்லை. வேளையுள்ள வேளைகளில் அவர் புரியும் நினைவுப் பயணமாக அது முன்னேறிக்கொண்டிருந்தது.

பார்வையைத் திருப்பி, சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு புதிதாக வந்திருந்த அந்த இரண்டு அறைகள்கொண்ட வோக் அவுட் பேஸ்மென் (Walkout basement)ரின் உள்ளோரத்தில் வோஸ்றூ (Washroom)முக்கு எதிரிலுள்ள சிவயோகமலரின் இலேசாய்த் திறந்திருந்த அறையில் கவனமாகினார்.

தொலைக்காட்சியில் CP24 செய்திச் சனல் போய்க்கொண்டிருந்ததுபோலும். தொலைக்காட்சித் திரையினை நான்கு சிறிய பெரிய பகுதிகளாகப் பகுத்துக்கொண்டு விளம்பரங்களை, செய்திகளை, வீதிப் போக்குவரத்து நிலபரங்களை, காலநிலை அறிவிப்புக்களையென அது காட்சிப்படுத்துவதில் எழுந்த வெளிச்சப் பளீரிடுகைகளில் அதை அவர் தெரிந்தார். அந்த நேரத்தில் அவள் பார்க்கிற சனலும் அதுவாகவேயிருந்தது.

கதவிடையூடாக வெளிப்பாய்ந்த மெல்லிய ஒளிக்கதிர் தவிர கூடத்திலும் வேறு வெளிச்சம் இருந்திருக்கவில்லை. அங்கிருந்து வெளியே கண்ணாடி ஜன்னல்களூடாய்த் தெரிந்த வான, வீதி வெளிச்ச மண்டலமே அதைவிடக் கூடிய பிரகாசம்கொண்டு தென்பட்டது.

மறுபடியும் கண்ணயர்ந்து வருவது தெரிய நடனசுந்தரம் எழுந்தார். செல்போனை அமுக்கி நேரத்தைப் பார்த்தார். எட்டு மணி ஆகியிருந்தது. விளக்குகளை எரியவைத்தார்.

மனைவிக்குச் சாப்பாடு கொடுத்து, சாப்பிட்டானதும் கை கழுவிய தண்ணீருடன் கோப்பையை எடுத்துவந்து சமையற் பகுதிக் கழுவுதொட்டிக்குள் வைத்துவிட்டு, தனது இரவுணவை முடித்த பின் கடந்த கால மெய் மன அலுப்புகளுடன்  வழக்கமான இடத்தில் வந்தமர்ந்தார். 

மறுபடி செல்போனை அழுத்தி நேரத்தைப் பார்த்தபோது மணி ஒன்பதரை. இன்னும் சிறிதுநேரத்தில் மனைவியின் அறை விளக்கு  அணையுமென்று வழமையான அவளது செயற்பாட்டு ஒழுங்கில் எதிர்பார்த்தார். அதன் பின் வெகுநேரமெடுக்காமல் சீரான குறட்டையொலி கிளம்புமென்ற நேரஅட்டவணையும் அவருக்குத் தெரிந்திருந்தது.

தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க, சோபாவில் அமர்ந்திருந்தபடியே நிறைதூக்கமென்று சொல்லும்படிக்கு அவளது அந்தத் தூக்கம் விரிந்துசெல்லும். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு அது தொடரும். அவர் காத்திருக்கும் தருணம் அதற்கானதல்ல. அது அதன் பின்னாலே வரக்கூடியது.

அதற்குள் வெளியில்போய் தன் நித்ததிய கருமத்தை அவர் முடித்துக்கொள்ளலாம். எழுந்து பேஸ்மென்ரின் பின்புறக் கதவை, பொருத்துகளில் எண்ணெய்ப் பசை வறண்டுபோயிருந்த அதன் பிணைச்சல்கள் சத்தம் எழுப்பியிடாதவாறு மெதுவாகத் திறந்து புல்தரைக்கு வந்தார். எப்போதும்போல் அப்போதும் மறுநாள் கண்டிப்பாக பிணைச்சல்களுக்கு எண்ணெய் விட்டுக்கொள்ள வேண்டுமென மனத்தில் பதித்துக்கொண்டு அங்கிருந்த வயர் நாற்காலியில் அமர்ந்து சிகரெட் ஒன்றெடுத்துப் புகைத்தார். ஏறக்குறைய ஆறு அல்லது ஏழு நிமிஷங்கள் எடுக்கும் அச் செயற்பாட்டை முடித்துக்கொண்டு மறுபடி அவதானமாகக் கதவைத் திறந்து உள்ளே வந்தார்.

அவர் நேரெதிரில் மணிக்கூடு அப்போதும் 01.16லேயே இருந்திருந்தது. அடுத்தமுறை கடைக்குச் செல்லும்போது மறக்காமல் பற்றறிகள் வாங்கவேண்டுமென மனத்தில் பதித்துக்கொண்டு திரும்பவும் சோபாவில் சென்றமர்ந்தார்.

சிவயோகமலரின் அறைக்குள்ளே இன்னும் தொலைக்காட்சி போய்க்கொண்டிருந்தது; குறட்டைச் சத்தம்  தொடர்ந்துகொண்டிருந்தது. அதன் அவ்வப்போதான சீரின் குலைவு, தூக்கத்திலிருந்து அவள் மீளும் கணம் நெருங்குவதை உணர்த்த அவர் உஷாரானார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

2

வெளியிலிருந்த சோபாச் செற்றோடு வந்த தனிச் சோபா ஒன்றுதான் சிவயோகமலரின் அறைக்குள் போடப்பட்டிருந்தது. அதில் தொப்பை மிதந்திருக்க கால்களைக் கீழே நீட்டியபடி  அவள்   படுத்து குறட்டை விட்டுக்கொண்டிருப்பதை உட்சென்று பார்க்காமலே மனத்திரையில் சுந்தரம் கீறிப்பார்த்தார்.

பத்து வருஷங்களுக்கு முன்பாக அவள் அவ்வாறிருந்திருக்கவில்லை. சர்க்கரை வியாதியில் சிறுநீரகங்கள் கெட்டுப் போயிருக்கின்றாள். மேலும் இரண்டாண்டுகளுக்கு முன் எங்கோ உறைபனியில் சறுக்கிவிழுந்து நாரியில் அடிபட்டும் போனாள். அதனால் தடியூன்றியன்றி நடக்கமுடியாத நிலை. நோயும், விபத்தும், வயதின் தளர்ச்சியுமாய் மிகவும் பலஹீனமானவளாக ஆகிவிட்ட அவளது தொண்ணூறு கிலோ எடை உடம்பின் மெல்லிய அசைவிலும் நசிபடும் எலியைப்போல் கீச்சொலி எழுப்பும் சோபா அடங்கிக் கிடந்தது. இன்னும் அவர் காத்திருக்கும் வேளை வராததின் அறிவிப்பு அது. பல சமயங்களிலும் அச் சித்திரம் அவரை இரக்கப்படவே செய்துகொண்டிருந்தது. மன, மண உறவுகள் எவ்வளவுதான் விரிசல்கண்டு போனாலும் ‘ஒரு சீவன்!’ என்றுதான் அவர் அப்போதெல்லாம் அனுதாபம் பட்டுக்கொண்டார்.

பெருஞ் சந்தடியற்ற ஓருலகத்துள் தன்னைப் பொதிந்துகொண்டு இயல்பிலெழும் அரவங்களைச் சகிப்பதும், பிறவற்றுக்கு வெடித்துச் சிதறுவதும் உடல்ரீதியான அவஸ்தைகளால் மட்டுமல்லாமல், அவளுள் ஏதோ அளவில் ஏற்பட்டிருந்த மனநிலைப் பாதிப்பும் காரணமாகலாமென அவர் ஏற்கனவே ஐயமுற்றிருந்தார். சமைக்கும் வேளையில் பாத்திரக் கடகடா, நீர்ச் சள சளாக்களைப் பொறுக்க முடிந்த அவளுக்கு, ஒழுங்கற்றதும் நியமமற்றதுமான  சத்தங்களே பொறுக்கமுடியாதவையாய் ஆகிவிடுகின்றன. அவை அவளைத் திடுக்கிடப் பண்ணின. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்திலிருந்து மகள் அபிநயவல்லியும் பிள்ளைகளும் வந்துபோனதன் பிற்பாடு, தன் சொந்தங்களையும் அயல் மனிதர்களையும் மிக மோசமாக  அவள் திட்டியது அந்த நிலைமை உருவானதன் புள்ளியாக அவர் கருதினார். தூஷண வார்த்தைகளால்கூட சிலரைத் திட்டியிருக்கிறாள். திட்டிவிட்டு வெட்கப்பட்டதுபோல் அடங்கிச் சிரித்தாள்.

இரத்தவழுத்த நோயினால் அவ்வப்போது தலைக் கிறுகிறுப்பு இருந்தபோதும் சிறப்பான தோற்றத்தோடுதான் இலங்கையில் தன் உடன்பிறப்பின் மகள் திருமணத்துக்கு 2004இல் போனாள். நாட்டில் போராளிக் குழுவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான அப்போதைய சமாதானம் திடீரெனக் குலைந்து  யுத்தக் கெடுபிடி சூழ்ந்தபோது நாட்டில் ஆறு மாதங்களைச் செலவழித்துவிட்டு வீடு திரும்பிய முதல் நாளின் நடுச்சாமத்தில் அவள் தூக்கத்தில் கூச்சலிட்டு விழித்தாள்.

தனக்கு படுக்க தனியறை வேண்டுமென்று மறுநாள் அவுஸ்திரேலியாவிலிருக்கும் மகன் நடராஜசிவத்திற்கு போனெடுத்துச் சொன்னாள். இலங்கையில் அத்தனை மாதங்களைக் கழித்துவிட்டு வந்த இரவு விடிந்தபோது, ஒரு தனியறையின் தேவையை வற்புறுத்துதல் அவரது ஒழுகாலாற்றை பாலினரீதியாய்க் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்குமென்ற எந்தவிதமான யோசனையும் அவள் கொள்ளவில்லை. இல்லையெனில் மற்றவர்கள் அவ்வாறு கொள்ளவேண்டுமென்ற குறியோடும் அவள் செயற்பட்டிருக்கலாம்.

அவசர அவசரமாக மகனின் அறிவிப்பில் இரண்டறை வீடொன்று பார்த்து குடிசெல்ல அவருக்கு நேர்ந்தது. அதிலுள்ள அனுகூலம் என்னவெனில் வீடு எடுப்பவர்கள் வீடெடுத்துக் கொடுக்கும் ஏஜென்ஸிக்கு கூலி கொடுக்கவேண்டி இருப்பதில்லை என்பதுதான். சாமான்கள் ஏற்றியிறக்கிற கூலியோடு எல்லாவற்றையும் முடித்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் எவ்வளவு பணத்தை அங்கே அவர் வீணாக இறைக்கவேண்டி நேர்ந்திருக்கும்!

அந்தத் தனியறை வீட்டிலும் அவள் நிலைமையில் மாற்றமேதும் விளையவில்லை. நள்ளிரவுக் கூச்சல்களும், தன்பாட்டிலான பேச்சுக்களும் இருந்ததைவிட இரண்டு மடங்காக அதிகரிக்கவே செய்தன.

நாட்களின் சில கழிவில் அவரும் நடராஜசிவத்துக்கு போனெடுத்து நிலைமையை விளக்கினார். அவ்வறிகுறிகளுக்குக் காரணமாகக்கூடிய தன் சந்தேகத்தையும் வெளிப்படுத்தினார். ‘அப்பிடியான பிரச்சினையெண்டா… அது உங்களாலதான் வந்திருக்கு’மென எடுத்த எடுப்பில் கத்தினான். பின் தணிந்துகொண்டு, ‘உந்தமாதிரியெல்லாம் வெளியில சொல்லிக்கொண்டு திரிஞ்சு எங்கட மானத்தை வாங்காதயுங்கோ. நான் மார்கழியில வரப் பாக்கிறன். அதுமட்டும் ஒருமாதிரிச் சமாளியுங்கோ. தொந்திரவு பண்ணாதயுங்கோ அவவை. அவ என்னவெண்டாலும் பேசட்டும், இல்லாட்டி செய்யட்டும்’ என்றான்.

அவர், தன் தாயின்நிலைமைக்கு தான் காரணமெனச் சொல்லிவிட்டானேயென்பதில் சாம்பிப் போனார். அவர் வாதாடுகிற மனிதரில்லை. தன் அபிப்பிராயத்தை அவசரப்பட்டு வெளியிட்டதற்காய் தன்னையே நொந்துகொண்டு அடங்கினார். ‘அம்மா சத்தம்போட்டா நான் தாங்குவன்; அக்கம்பக்க வீட்டுச் சனங்கள், அதுகும் வேற பாஷை பேசுற மனிசர், தாங்காயினம்’ என்று அவனிடம் கூறவிருந்த வார்த்தைகளை தனக்குள் அமுக்கிக்கொண்டார்.

தன்னிலிருந்து அவள் முற்றுமாய் வேறாகிய கணமாக அதை அவர் உணர்ந்தபோதும், வயதினால் படிப்படியாய் மிகுந்து வரும் இயலாமையின் கூறுகளும், மூன்று பிள்ளைகளுடனும் பேரப் பிள்ளைகளுடனும் கடைசிக் காலம்வரை சுமுகமாய் இருக்கவேண்டுமென்ற பிடிமானமும் அவரை அவளுடன் தக்கபடி இணங்கிப்போக வைத்தன. ஒட்டோவாவில் வசிக்கும் சின்ன மகன் முருகானந்தத்தின் ஏற்பாட்டில் வதிவிட உரிமையோடு வந்த அத்தனை ஆண்டுகளாக அந்தப் புரிதலை அவர் கொண்டேயிருக்கிறார். ஆனாலும் இடையில் அவர் கசப்படையும் சமயங்களில் கொதிப்பதும், மறுபடி தணிவதுமான ஈரடிநிலையிலேயே அவர் வாழ்வு பயணித்துக்கொண்டிருந்தது. புதிய புதிய நாடுகளைக் கண்டடையப் புறப்பட்ட பயணங்கள் தேச வரைபடத்தின் உதவியுடன்மட்டும் தொடங்கப்பட்டவையில்லை; மனத்தின்   திசைவழி நம்பிக்கையையும் கூடவே கொண்டிருந்தன.  அதன்படி நம்பிக்கையோடுதான் அவர் வாழ்வுப் பயணம் தொடர்ந்துகொண்டிருந்தது. அதனால் அவரடையும் அவலங்கள் அளப்பரியவையெனினும், அதுவேதான் தனக்கு  விதியாகியிருக்கிறதென எண்ணி அமைதிப்பட்டார். ஆனாலும் அவருக்கு அவளது மாற்றத்தின் மூலம், அவளேன் அவ்வாறானாளென்ற கேள்வியின் விடை, தெரியவேண்டியிருந்தது.

எப்போதும்  தன்னை கேள்விகளின் சுமையாளியாக்கி அவள் அலையவிட்டிருப்பதை எண்ணியபடியே வழி புலப்படாத இருளில் அழுந்திக்கொண்டிருந்தார். அதிலிருந்து மீளுவதற்கான  எவ்வகைச் சாத்தியமும் அவருக்கு சமீப காலம்வரை புலப்பட்டிருக்கவில்லை.

ஒரு  தீடீரெண்ணம் அவருக்கு அந்த விடைகாணலுக்கான வாசலைத் திறந்துவிட்டது. அது, தன் சுயத்துடன் நிகழ்த்தும் அவளின் உரையாடலாகயிருந்தது. அவள் தெளிவற்ற தன் சொல்லில் வடிக்கும் பல நூறு சம்பவங்களின் உரைச்சித்திரம் மட்டுமே, தான் தேடும் விடையை ஒருநாள் தனக்களிக்க முடியுமென அவர் மனதார நம்பினார். சம்பவத்தை அல்லது அதில் சம்பந்தப்பட்ட நபரை கோடிகாட்டும் ஓரிரு சொற்களையாவது அவர் அதில் எதிர்பார்த்தார். அவரது அந்தக் காத்திருப்பின் நதிமூலம் அதுதான்.

அவர் செய்வதை இன்னொரு மொழியில் சொன்னால்… அது வேவு.  யாரை? தன் மனைவியை. ஆனாலும்  அடையக்கூடியதின் பெறுமதியால் அவருக்கு அதன் உறைப்பு மனத்தில் படியவில்லை. ஏமாறக்கூடாத ஒரு புள்ளியில் தான் ஏமாந்துவிட்டோமென்ற  எண்ணம் எவரையும்தான் அலைக்கழியச் செய்கிறது. அத்தகைய எண்ணம், மிகவும் கொடூரமானது. அதனாலேயே அந்த மூலம் தேடலில் அவர் அத்தனை உக்கிரம் காட்டினார்.

அந்த உக்கிரம் அவரையும் எரிக்கும்.

ஆயினும் உண்மை வெளித்த மறுகணம் அவர் இருபது வருஷங்களை அநாயாசமாகக் கடப்பது நிச்சயம்.  கடந்த பத்தாண்டுக் காலமானது அவருக்குத் தீராத அவலத்தைக் கொடுத்துவிட்டது. அவரது உடலின் தளர்ச்சிக்கு அதுவொரு காரணமாகலாமெனினும், மனதளவில்தான் அவரது பாதிப்பு இருந்தது. தன்னிலை மீள்வதற்கான அந்தச் சமயத்தை அவர் தவறிவிடக்கூடாது. ஒருவேளை அதன் தெளிவில் இன்னுமே அவள்மேல் அன்புடையவராக, பராமரிப்பில் கூடிய கரிசனைகொண்டவராக அவர் மாறவும்கூடுமே.

விளக்கினை அணைத்துவிட்டு கூடத்தின் மெல்லிய ஒளியில் அவர் தன் காத்திருத்தலைச் செய்துகொண்டிருந்தபொழுதில்  தொம்… தொம்… என மேற்கூரை அதிர யாரோ மேலே நடந்து செல்லும் பாதச் சத்தம் கேட்டது. ரவீந்திரநாதன் அப்போதுதான் வெளியிலிருந்து வந்திருக்கிறானென எண்ணியவருக்கு, இரவிலே அவ்வாறு நடக்கவேண்டாமென சிவயோகமலரின் சுகவீனத்தைக் காரணம்காட்டி ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சொல்லியிருந்ததை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லையேயென அவருக்கு சிறிது ஆத்திரம்கூட வந்தது. 

ஆனால் சத்தம் மேலும் சில கடபுடாக்களோடு அடங்கிப்போக தானும் அடங்கி, அறுபதாண்டுகளுக்கு முற்பட்ட சிவயோகமலரின் பருவவாரியான அழகுகளை ஓவியங்களாய்க் கீறிப் பார்த்தார்.

(தொடரும்)

 

 -தாய்வீடு, மே 2022

 

 

 

 

 


Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்