சாம்பரில் திரண்ட சொற்கள் – 9

 


9

 

காலை பத்து மணியளவில் தான் வெளியே போய்வருவதாக தனக்கேபோல் சொல்லிக்கொண்டு சுந்தரம் போவதை மலர் கேட்டிருந்தார். சாப்பாட்டு நேரத்துக்கு முன்னம் வந்துவிடுமென்று தெரியும். அனுமானம்தான். வாழ்க்கை கடந்த சில வருஷங்களாக அவ்வாறுதான் அவருக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.

சலிப்பு என்பதன் முழு அர்த்தத்தோடு தன் வாழ்க்கை அவ்வாறு அடங்கிக்போனதேனென்று அவருக்குத் தெரிந்திருந்தும் விடுபடும் வழியைத்தான் காணாதிருந்தார். உடல் வாதை, பெருவுடம்பின் அசைவிறுக்கம், மனவீறலெல்லாம்தான் அதற்குக் காரணம்.

தன் பார்வையின் கடூரங்களும், தெறிக்கும் வார்த்தைகளின் வெம்மையும் அப்போதெல்லாம் அதிகமோவென சிலவேளை எண்ணினாலும், ஏதோ சுந்தரம்தான் அதற்கான காரணஸ்தரென அவர் கொதித்துவிடுகிறார். அதற்காக சுந்தரத்திற்காக வருத்தமேதும் கொள்ளவும் மாட்டார். தன் தோழி சிவத்திக்கு இரங்குமளவுகூட அவர் சுந்தரத்திற்கு இரங்கிவிடுவதில்லை.

அவளோடான நட்பு மிஞ்சிப்போனால் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு மேலேயில்லை. சுந்தரத்தோடான பந்தமோ சற்றொப்ப அரை நூற்றாண்டு. எனினும் இப்போது ஒட்டு  விட்டுப்போன உறவாகிவிட்டது அது அவரளவில்.

அந்த ஒட்டுவிட்ட ஸ்திதியில் இருந்துகொண்டுதான் அவரிடமிருந்து அவ்வளவு சேவைகளையும் தான் தேவைப்பட்டுக்கொண்டு இருக்கிறார். அது நினைப்பில்கூட அவருக்கு வருவதில்லை. படலையில நிண்டு என்ர குண்டியை இல்லாமல் கேற்றடிச் சிதம்பரத்தம் பூவையே பாத்ததாய் இருக்கட்டும், ஆனா தானாய்த்தான் அந்தாள் என்னைத் தேடி வந்திது, நானாய்த் தேடிப் போகேல்லை என எண்ணியெண்ணி தன் முடிவை மேலும் அவர் தக்கவைத்துக்கொள்கிறார்.

எல்லாம் எண்ணுகையில் மனதில் சிரித்தபடி முகம் காட்டும் தோழிகூட மறைந்துபோகிறாள்.

அவளை முதலில் எப்போது பார்த்தேன்?

 

 

வீட்டிலே தொட்டாட்டு வேலைகள் செய்வதற்கு ஆளில்லையென்று அன்னபூரணத்துக்கு பெரிய குறை. சிவயோகமலருக்கு இளைய குழந்தை அழாத நேரமில்லை. எடுக்கி இடுப்பில் வைத்து உலாத்திக்கொண்டிருந்தால் மாயமாகிவிடுகிற அழுகையோடான குழந்தையாய் இருந்தது அது. பிள்ளையைப் பிராக்காட்ட நான் முந்தி நீ முந்தியென்று அயலில் வர ஆட்களிருக்கிறார்கள். அன்னபூரணத்துக்கு உள்வீட்டில் வந்துபோபவர்களாய் வேலைக்காரி வேணுமென்றால் யார் வரப்போகிறார்கள்? தங்கள் பிள்ளையைக் கவனிக்க நேரமின்றி தோட்டம் துரவென அலைகிற மனிதர் அவர்கள்.

ஒருநாள் அடிவளவு போன அன்னபூரணத்துக்கு குதிக்காலில் முள் தைத்து, தைத்த முள் பாதியோடு முறிந்தும் போனது. அன்னபூரணமும் கெந்திக் கெந்தி வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்க, மூன்றாம் நாளில் முள் குத்திய இடம் மனைந்து சீழ் கட்டிவிட்டது. கெந்திக் கெந்தியும் அவளால் நடக்க முடியாதுபோனது. இனி வேறு வழி இல்லையென்று வித்துவான் வீரகத்தி துன்னாலைத் தங்கம்மாவுக்கு ஆளனுப்பினார், தான் சொன்னதாகக் கூறி கையோடு கூட்டிவரும்படி.

தங்கம்மாவைக் கண்டுபிடிப்பதும், கையோடு கூட்டிவருவதும் லேசான காரியமில்லை. வாத்தியார் கூப்பிட்டதாகச் சொல்ல தட்டாமல் வெளிக்கிட்டாள் தங்கம்மா. விஷயம் விசாரித்து ஒரு புதிய சட்டை ஊசியும், கண்ணாடியில் தீட்டி கூராக்கி வைத்திருந்த பாதி பிளேட்டும் எடுத்துச்செல்ல அவள் மறக்கவில்லை.

திண்ணையில் அன்னபூரணத்தை கொள்ள அமரச் சொன்ன தங்கம்மா படியில் அமர்ந்துகொண்டு அவளது காலைக் கழுவி, ஒழுகும் வியர்வையை ஒற்றிக்கொண்டு இருந்தவளிடமிருந்து முந்தானையை வாங்கி பதனமாகத் துடைத்து, மனைந்து சீழ் கூட்டியிருந்த இடத்தை வெகு அவதானமாக ஆராய்ந்தாள்.

சத்திர சிகிச்சை செய்யப்போகும் வைத்தியரின் அவதானம் அது. அவளளவில் மட்டுமில்லை, அன்னபூரணமளவிலும், சுற்றி நின்றோரளவிலும்கூட, அது ஒரு சத்திர சிகிச்சைதான். மலர், வீரகத்தி, சண்முகராசாவின் மனைவி, பக்கத்துவீட்டு லட்சுமி எல்லோரும் சுற்றிநின்று அவளைக் கவனிக்கிறார்கள்.   கூர்ந்து முள் குத்திய இடத்தைப் பார்த்தபடியிருந்த தங்கம்மாவின் முகத்திலிருந்து உணர்வெதனையும் கிரகிக்க முடியவில்லை. பார்வையாளர்களின் முகத்தில் லேசான பதட்டம் படர்கிறது.

சட்டென தங்கம்மாவின் முகத்தினிருள் கிழித்து முறிந்த முள்ளின் கரு முனையைக் கண்டுகொண்டதின் பிரகாசம் வெடிக்கிறது. எல்லோரும் ஆசுவாசம் கொள்கிறார்கள்.

தங்கம்மா அனாயாசமாய் பின்னால் நிற்பவர்களை ஒதுங்கிநிற்கக் கையசைத்தாள். அதை விளங்கிக்கொண்ட வித்துவான், ‘எல்லாரும் இஞ்சால வாருங்கோ, தங்கம்மாவுக்கு வெளிச்சம் வரட்டும்’ என்றார். எல்லோரும் பாய்ந்து விலகினர். தங்கம்மாவின் சிகிச்சை ஆரம்பித்தது.

மடித்து இடுப்பில் வைத்திருந்த சரையைப் பிரித்து ஊசியையும் பாதி பிளேட்டையும் வெளியே எடுத்து கைக்கெட்டிய தூரத்தில் திண்ணையில் வைத்தாள். அன்னபூரணத்தின் காலைத் தூக்கி தன் மடியில் வைத்தாள். நிமிர்ந்து அன்னபூரணத்தின் முகத்தைப் பார்த்தாள். வியர்வை சல சலவென வழிந்துகொண்டிருப்பதையும், கண்கள் அச்சத்தில் விரிந்திருப்பதையும் கண்டு, ‘என்ன பிள்ளை, பயமாய் இருக்கோ? முள்ளைக் கண்டிட்டனெல்லோ, இனியேன் பயம்? தெம்பாயிரும்.  முதல்ல உந்த வேர்வையைத் துடைச்சிட்டு, கொஞ்சநேரம் றோட்டில பிராக்குப் பாரும். கண்முடித் திறக்கிற நேரத்துக்குள்ளை முள்ளை வெளியில வரப்பண்ணிக் காட்டிறன். நான் சொன்னா முள்ளே வெளிய வந்து தானாய் விழும், பிள்ளை’ என காதுக்குள் மெதுவாய் முனகினாள்.

வெய்யில் பட்டு மின்னிக்கொண்டிருந்த புது ஊசியை எடுத்து, மஞ்சளாய்ப் பழுத்துக்கிடந்த தோலைப் புட்டு சீழை மெதுவாகப் பிதுக்கியெடுத்தாள். கையிலிருந்த பேப்பர்த் துண்டினால் நிதானமாக ஊனத்தை ஒற்றியெடுத்தாள். தோல் வெளிறிய நிறம் காட்டிற்று. அதற்குள்ளாகவே நூறு தரம் ஆ… ஆ… ஸ்ஸ்…ஸென சீறிவிட்டாள் அன்னபூரணம்.

பிறகு பிளேட்டை எடுத்த தங்கம்மா வெளிறின தோலை, கரும்புள்ளியைச் சுற்றி, சீவியெடுத்தாள். பின் பிளெடை வைத்துவிட்டு ஊசியைக் கையிலெடுத்தாள். மறுபடி கூர்ந்து முள் குத்திய இடத்தைப் பார்த்தாள். தனது இடது கையின் பெருவிரலினாலும் சுட்டு விரலினாலும் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு மெதுமெதுவாக நெரிக்கத் துவங்கினாள். ஒருபோது அன்னபூரணம் ‘ஆ’வென்றாள். டக்கென வலது கையின் கட்டை, சுட்டு விரல்களால் பிதுங்கிவந்த முள்ளின் முனையைப் பற்றி இழுத்துக்கொண்டு, ‘முள்ளு வந்திட்டிது’ என்றாள் தங்கம்மா.

எல்லோரும் தங்கம்மாவின் கையைப் பார்த்தார்கள். அவளது வலது கரத்தில் அரை இஞ்சிக்கும் மேலான நீளக் கருமுள்ளொன்று இருந்துகொண்டிருந்தது.

அன்னபூரணத்தின் கையைப் பிடித்து அவளது உள்ளங்கையில் முள்ளை வைத்து, ‘பாரும், இந்தளவு பெரிய முள்ளை எத்தினை நாளாய் காலுக்குள்ள வைச்சுக்கொண்டிருந்திரெண்டு’ என்றுவிட்டு சிரித்தாள்.

அப்போது அன்னபூரணமும் சிரித்தாள்.

‘தங்கம்மாவெண்டாச் சும்மாயே!’ என்றபடி அப்பால் நகர்ந்தார் வித்துவான். உடனடியாகவே அவரது விசாரணையும் துவங்கியது. ‘உந்தக் கரும்பயன் முள்ளு என்னண்டு கருப்பஞ் செடி இல்லாத எங்கட வளவுக்க வந்திது?’

இனி ஒருத்தரும் அந்த இடத்தில் நிற்கமாட்டார்கள். ஒவ்வொருத்தராய் கழன்றனர்.

தங்கம்மாவும் அன்னபூரணமும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தங்கம்மா படியிலும், அன்னபூரணம் திண்ணையிலும் இருந்தாலென்ன, இருவருக்கும் நன்றாக ஒத்துப்போனது. உள்வீட்டு வேலைக்காரி தேவையென்றிருந்தவள் வெளிவேலை செய்தாலும் தங்கம்மா வந்தால் போதுமென்று சொல்லிவிட்டாள். தனக்கு அது தோதுப்படாதென்றும் வேணுமென்றால் அவ்வப்போது வந்து நெல் குத்த, மா இடிக்க, வளவு கூட்டச் செய்வதாகவும் சொல்லி அன்னபூரணத்தைச் சம்மதிக்க வைத்துவிட்டாள் தங்கம்மா.

அன்னபூரணம் வித்துவானைச் சம்மதிக்கவைத்தாள்.

 

 

ஒரு நிறை மாரியில் பயிரெல்லாம் நீரில் மூழ்கி அழுகத் தொடங்கிவிட்டதாக வயல்கூலி கந்தன் வந்து சொல்ல, சேதாரம் பார்க்கப் போன வித்துவான். வரம்பில் சறுக்கி விழுந்துபோனார். கணுக்கால் பிரண்டு சுளுக்கிப்போனது. அவரால் நடக்கமுடியவில்லை.

ஊர் வைத்தியரிடம் போகத்தான் செய்தார். அவரின் மருந்துப் பூச்சில் இரண்டு வாரங்களை கொஞ்சங்கூட சுகம் காணாமல் கழித்த பிறகு, ஊராக்களின் வற்புறுத்தலில் ஒட்டகப்புலத்தானிடம் சாவகச்சேரி போய் புக்கை கட்டுவித்தார். ஒரு மாத பரிகாரத்தில் நோவு சிறிது குறைந்து, வீக்கமும் கணிசமாய்த் தணிந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வீடு வந்த தங்கம்மா இன்னும் குணமாகாமல் வாத்தியார் தாங்கித் தாங்கி நடப்பதைக் கண்டு, ‘உவருக்கு இன்னும் உந்தக் கால் சுகமாகேல்லையோ?’ என்று இளக்காரமாய்க் கேட்டாள். ‘உதுக்குச் சரியான மருந்து வேற இருக்கு; அனுபவத்தில சொல்லுறன்.’

‘என்ன மருந்தது?’வென்றாள் அன்னபூரணம்.

‘அந்த மருந்து என்னிட்ட இருக்கு. ஆனா… நீங்களதைப் பாவிப்பியளோ எண்டதுதான்….’

எல்லாம் கேட்டிருந்த வாத்தியார் விபரம் கேட்க தங்கம்மா விளக்கினாள். ‘சிங்களவன் தெருவில கத்திக் கத்தி வித்துக்கொண்டு போனான். முறிவு நோவு பிடிப்பு எல்லாத்துக்கும் சொல்லின மருந்தெண்டான். ரண்டு நாளில சுகம் தெரியுமெண்டான். அந்த நேரம் எனக்கும் கழுத்துப் பிடிப்பாயிருந்திது. கையில காசுமிருந்திது. அஞ்சு ரூவாதான, வாங்குவமெண்டு ஒரு சீசா வாங்கினன். தயிலத்தில லேசாய்த் தொட்டு ரண்டு நாள் போட்டு உரஞ்சி விட்டதுதான். கழுத்துப் பிடிப்பு போன இடம் தெரியேல்ல. அது மலைப்பாம்பில எடுத்த தயிலம், வாத்தியார். நீங்கள் சைவக்காறர், பூசுவியளோவெண்டு யோசிச்சன்….’

‘நீயேன் உதை யோசிக்கிறாய்? நானென்ன சோத்தில விட்டு தின்னவேபோறன்? சும்மா மேலால பூசத்தான. அது பாதகமில்லை. நீ போய் முதல்ல தைலத்தை எடுத்துவா’ என நின்றுகொண்டார் வித்துவான்.

‘நான் போய் சிவத்தியிட்ட குடுத்துவிடுற’னென்றாள் தங்கம்மா.

தங்கம்மாவின் வாயிலிருந்து பிறந்த ‘மலேப் பாம்புத் தைல’மென்ற தைல வியாபாரியின் கூவல் நீண்டநேரம் ‘விண்’போல் கூவியபடி நின்றிருந்தது மலரின் செவிகளில். தங்கம்மா அங்கிருந்து கிளம்பிய பின்னரும் அவளிடத்தில் அந்த ஒலியடங்கிப் போகவில்லை.

அன்று மாலை மலைப்பாம்புத் தைல சீசாவைக் கொடுக்க சிவத்தி வந்போதுதான் அவளை முதன் முதலாகப் பார்த்தாள் மலர்.

முழுப் பாவாடையும் சட்டையும் அணிந்திருந்தாள். தலைமயிர் செம்பட்டையாக, சுருள் சுருளாகக் கிடந்தது; அதையும் நடு உச்சி பிரித்து படிய வாரி இரட்டைப் பின்னல் போட்டிருந்தாள். பாதம் மறைத்த பாவாடைக்கு நெஞ்சை இறுக்கிய சட்டை சிறிதாகத் தெரிந்தது. ஒருவேளை சட்டை அளவாயிருந்து வட்டமாய் இறுகிக் கிடந்த நெஞ்சுத் தசைப் புட்டிகள் இரண்டும்தான் பெரிதாயிருந்தனவாயம் இருக்கலாம்.

நெஞ்சை மலர் கண்கள் உற்றுநோக்கியபோது சிவத்தியின் சிரிப்பு வெட்கத்தில் இன்னும் அதிகமாயிற்று.

அது சிரிப்பல்ல ஜன்னல்; ஒருவரின் அகம் காட்டும் வாசலென எண்ணினாள் மலர்.

அப்போது தந்தை வீட்டிலில்லாததால் தாயும் உள்கட்டில் அலுவலாயிருக்க மலரே சீசாவை வாங்க வந்தாள்.

‘பேரென்ன?’

‘செவ்வந்தி. சிவத்தியெண்டு வீட்டில கூப்பிடுவினம்.’

‘எத்தினையாம் வகுப்பு?’

‘படிப்பு நிப்பாட்டியிட்டன்.’

‘ஏன்?’

‘வேலைக்குப் போறதுக்காண்டி.’

‘வேலயோ? என்ன வேல?’

‘எல்லா வேலயும் செய்வன். தோட்ட வேலைதான் கனக்க.’

‘தோட்டத்தில என்ன வேலை செய்யேலும் உம்மால?’

‘தண்ணியிறைப்பன்; துலா மிதிப்பன்; தண்ணி கட்டுவன்; கொத்துவன்… சாறுவன்… பசளை தாப்பன்…’

தன்னைவிட வயசு குறைந்தவளென்பது பார்வையிலே தெரியக்கூடியதாய் இருந்தும், தன்னளவு பெண்ணாக மனம் திறந்து அவள் பேசியதும், இன்னும் முகம்விட்டு அகலாச் சிரிப்பும் மலரின் நெஞ்சில் ஆழமாய்ப் பட்டிருந்தன.

தொடக்கூடாத பொருளொன்றுபோல கையிலே மலர் சீசாவைப் பிடித்திருந்ததை அவதானித்த சிவத்தி, ‘கொண்டுபோய் சீசாவை பக்குவமாய் வைச்சிட்டு வாருமன். கையில எண்ணெய் படக்கூடாது’ என்றாள்.

‘ஏன், பட்டா என்ன செய்யும்?’

‘ஒண்டும் செய்யாது. ஆனா ராவில மலைப்பாம்புக் கனவு வரும்.’

‘அய்யோ…! நீர் பொய் சொல்லுறீர்…’

‘உண்ணாணத்தான்.’

கையை உதறிக்கொண்டு துள்ளத் துவங்கிவிட்டாள் மலர். கைமாற்றிக் கைமாற்றி சீசாவைப் பிடித்துக்கொண்டு கையை மணந்து பார்க்கவும் செய்தாள்.

அவளது பதபில் தன் சிரிப்பை மேலும் அகலித்த சிவத்தி, ‘பயப்பிடாதயும், அது கிடைச்சிக் கட்டையால நல்லா அடைச்சிருக்கு’ என்றாள்.’

‘இல்லை, கையில மணக்கிறமாதிரிக் கிடக்கு.’

‘அப்பிடியெண்டாலும் பயப்பிடத் தேவையில்லை. நான் சும்மா கதைதான் விட்டனான். கனவில பாம்பு வராது.’

‘ஏன் பயப்பிடுத்தினீர் என்னை?’யென சிணுங்கத் தொடங்கினாள் மலர். அவளைத் தணிவிப்பது சிவத்திக்கு பெரும்பாடாய்விட்டது. கடைசியில் அவள் தெளிந்து சிவத்தி வீடுபோய்ச் சேர வெகுநேரமாகிவிட்டது.

அன்றிரவு தன்னறையில் படுத்திருந்த மலருக்கு கனவிலே பாம்பு வந்தது. மலைப்பாம்பு. நூறு முழ நீளமிருக்கும். கட்டிப்பிடிக்க முடியாதளவு பெருப்பம். மலைப்பாம்பு வாயைத் திறந்துகொண்டு அவளைநோக்கி சினத்தோடு வருகிறது.

அவளுக்கு கத்தவும் வரவில்லை. வாயைத் திறக்க முடிந்ததே தவிர சத்தத்தப் பிப்பிக்க முடியவில்லை. பாம்பு அவள் வாயைப் பார்த்து தன் வாயை மூடிக்கொண்டு அவளை முழிசிப் பார்த்தது. மலரின் பார்வையில் யாரும் தென்படக்கூடவில்லை. தூரத்தில் சிவத்திமட்டும் நின்று, ‘பயப்பிடாதயும்… அது இனி ஒண்டுஞ்செய்யாது… வாயை மூடியிட்டுதெல்லோ… இஞ்சால, இந்தப் பக்கமாய் ஓடியாரும்’ என கத்தி அழைக்கிறாள்.

மலைப்பாம்பு வாயை மூடினாலும்  அவளுக்கு கிட்டக் கிட்டவாய் வந்துவிட்டது. இனி அது வாயைத் திறக்கும். ஆவென்று அப்படியே அது அவளை விழுங்க நொடிகளே இருக்கின்றன.    

‘பாம்பு…ஐயோ மலைப்பாம்பு வந்திட்டுது… ஓடியாருங்கோ… அம்மா!’வென அவள் அலறுகிறாள்.

சிறிதுநேரத்தில் அம்மாவின் அருட்டுதல் கேட்டது. ‘மலர்… மலர்… என்ன, கனவு கண்டியோ? பாம்பு… பாம்பெண்டு கத்தினியே’ என்றாள். மலர் கண்விழிக்க பக்கத்தில் இருந்துகொண்ட அம்மா, ‘பயப்பிடாத, மலர். கனவுதான் கண்டிட்டாய்போல….’ என விசாரித்தாள். பின் என்ன குற்றமோவென எண்ணி நாகதம்பிரானுக்கு நேர்த்திவைத்துக்கொண்டாள்.

மலர் கண் விழித்து சுற்றுமுற்றும் பார்த்து சிறிதுநேரம் மிலாந்தி பின் அம்மாவைக் கண்டுகொண்டு கனவைச் சிரித்தபடி சொன்னாள்.

‘சிரிக்கிறியே, உனக்கு பயம்வரேல்ல? பிறகேன் உந்தமாதிரிக் கத்தினனீ?’எனக் கேட்டாள் அம்மா.

‘அது கனவுதான, அம்மா. அதுவும் மலைப்பாம்புக் கனவு. சிவத்தி அப்பவே சொன்னா, அது ஸ்பீட்டாய் ஓடாதெண்டு.’

கனவிரவின் பின்னாக மலருக்கு சிவத்தியின் ஞாபகம் அதிகமாய்ப் போனது. வாறனெண்டு சொன்னவள், தான் வராமல் பாம்பை ஏன் அனுப்பினாளென்று அவளிட்ட கேக்கவேணும், வரட்டுக்குமெனக் காத்திருந்தாள்.

மேலும் ஒரு கிழமை கழிய சிவத்தி வந்தாள். மலர் கேட்டதாலல்ல, மாவிடிக்கவென தாய் அனுப்பி வந்தாள்.

அவள் போகும்போது இருட்டிவிட்டது. மலர் கேட்டாள், ‘ராவில தனிய போக பயமில்லையோ?’வென.

‘நானெங்க தனியப் போறன்? அம்புலி கூடவரும்தான. நான் மேல பாத்திட்டு பிடிச்சனெண்டா ஒரே ஓட்டத்தில வீட்டை போயிடுவன்’ என்றாள் சிவத்தி.

பருத்தித்துறைச் சிவன் கோயில் வித்துவான் வீரகத்தி குடும்பத்தின் வழிபடு தெய்வம். பெரும்பாலும் வெள்ளிக் கிழமைப் பூஜைகளை மலர் தவறவிடுவதில்லை. சிவத்தியுடன் ரகசியம் கதைக்கவும் போய் வரும் வேளைகள் வாய்ப்பான தருணத்தைத் தரும். கோயில் வழிபாடு முடித்து நடந்தே அவர்கள் வீடு வரும் வழியில் குசு… குசுவென எவ்வளவு ரகசியங்களைப் பேசியிருக்கிறார்கள்!

வீடு வந்ததும் தொடரப்போகும் திருவிளையாடற் புராண படனம்கூட அவளுக்கு பிடித்தமானது.

அவ்வாறாகத் தொடங்கிய பழக்கம் நெருக்கமாகி மூன்று நான்காண்டுகளாய், மலர் தஞ்சாவூர்ப் பயணம் புறப்படும்வரை தொடர்ந்தது.

ஆனால் மலர் இப்போதும் எண்ணுகிறார் அவளை. ஒரு காலத்தில் அவள் மலரின் ஆதாரம் கோயிலுக்குச் செல்ல, கடைக்குப் போக, ரகசியம் கதைக்க.

இப்ப கோயில் இல்லை, கடைக்குப் போற தேவையில்லை, கதைக்க ரகசியமுமில்லை.

வாழ்க்கை எவ்வளவு தூரம் அவருக்கு உறைந்துபோய்விட்டது!

(தொடரும்)

 

 

 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்