காந்தப் புலம் - நாவல்- மதிப்புரை
- கேள்விகளாய் அமைந்த பிரதி – மெலிஞ்சி முத்தனின் ‘காந்தப் புலம்’ நாவல் குறித்து 166 பக்கங்களில் தன் கதை விரிப்பை நிகழ்த்தும் இப் பிரதியை வித்தியாசமான நாவலாகக் கருதமுடியும். இது, பிரதி மரபார்ந்த நாவல் அல்லவென்பதைச் சொல்லிவிடுகிறது. அதனால், அதன்மீது செலுத்தும் விமர்சனப் பார்வையை அதற்கான இலக்கியக் கோட்பாடுகளிலிருந்து கண்டடையவேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவ்வாறான மிகு நவீனக் கோட்பாடுகள் தமிழில் தொகுப்பாய் இல்லை. பயணத்தின் மனக் குறிப்புகள், மனத்தின் பயணக் குறிப்புகளென இதன் கதைகூறு முறைகொண்டு பிரதியை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப்பார்க்க முடியுமெனத் தோன்றுகிறது. தன்னிலைப் பாத்திரக் கதைசொல்லலுடன் 11ஆம் பக்கத்தில் துவங்கி மூப்பர் மரிசலின், அருட் தந்தை மரிசலின் சகாயநாதன், போதகரின் சமையலாள் கிறிஸ்தோத்திரம், ‘எழும்புங்கள்’ சுவாமி, கொத்தண்ணர், ஜசிந்தா, மாணங்கி ஆகிய பாத்திரங்களின் கதைகூறலாய் 73ஆம் பக்கத்துடன் இதன் முதலாம் கதைப் பகுதி முடிவுறுகின்றது. இதில் இடம்பெறும் நாகாத்தை பாத்திரம் முக்கியமானது. பிறரின் எண்ண அலைகளைக் கிளப்புவத...