காந்தப் புலம் - நாவல்- மதிப்புரை

 

 -      


 

கேள்விகளாய் அமைந்த பிரதி –

மெலிஞ்சி முத்தனின் ‘காந்தப் புலம்’ நாவல் குறித்து

 

166 பக்கங்களில் தன் கதை விரிப்பை நிகழ்த்தும் இப் பிரதியை வித்தியாசமான நாவலாகக் கருதமுடியும். இது, பிரதி மரபார்ந்த நாவல் அல்லவென்பதைச் சொல்லிவிடுகிறது. அதனால், அதன்மீது செலுத்தும் விமர்சனப் பார்வையை அதற்கான இலக்கியக் கோட்பாடுகளிலிருந்து கண்டடையவேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவ்வாறான மிகு நவீனக் கோட்பாடுகள் தமிழில் தொகுப்பாய் இல்லை.

பயணத்தின் மனக் குறிப்புகள், மனத்தின் பயணக் குறிப்புகளென இதன் கதைகூறு முறைகொண்டு பிரதியை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப்பார்க்க முடியுமெனத் தோன்றுகிறது. தன்னிலைப் பாத்திரக் கதைசொல்லலுடன் 11ஆம் பக்கத்தில் துவங்கி மூப்பர் மரிசலின், அருட் தந்தை மரிசலின் சகாயநாதன், போதகரின் சமையலாள் கிறிஸ்தோத்திரம், ‘எழும்புங்கள்’ சுவாமி, கொத்தண்ணர், ஜசிந்தா, மாணங்கி ஆகிய பாத்திரங்களின் கதைகூறலாய்  73ஆம் பக்கத்துடன் இதன் முதலாம் கதைப் பகுதி முடிவுறுகின்றது.

இதில் இடம்பெறும் நாகாத்தை பாத்திரம் முக்கியமானது. பிறரின் எண்ண அலைகளைக் கிளப்புவதோடு, நாட்டார் வழக்காற்றிலுள்ள ஐதீகங்களோடும் ஊர் நம்பிக்கைகளோடும் செவிவழிக் கதைகளோடும் தானுணராமலே பெருமளவில் தொடர்புகொண்ட பாத்திரமாய் இருக்கிறாள் இவள்.

இரண்டாம் பகுதியில் சடையன் பிரதம பாத்திரமாய் எழுந்துவருகின்றான். தொடர்ந்து  சாமித்தம்பி, சடையனின் மனைவி இயனி, இயனியின் தேப்பன், மாரீசன் போன்ற சூழற் பிரக்ஞையுள்ள பாத்திரங்களின் செயற்பாடுகள் நாவலை நகர்த்திச் செல்கின்றன. 

இந்த இரண்டு பகுதிக் கதைகளையும், மரிசலின் தாத்தா, கொத்தண்ணர் ஆகிய பாத்திரங்கள் அவ்வப்போது தோன்றி, அது அவசியமில்லாதபோதும், தொடர்புபடுத்தி நிற்கின்றன.

இடப்பெயர்வு ஒன்றுடன் துவங்கும் நூல், சுமார் இருபத்தைந்து வருஷ கால யுத்த அவலங்களையும், காணாமல் ஆக்கப்படுதல்களையும், ஷெல் அடிகளையும், புலம்பெயர்ந்தவர்களின் அரசியற் செயற்பாட்டு மையமான நாடு கடந்த தமிழீழ அரசையும்பற்றி இறுதிக்குச் சற்று முன்பாகவரை ஆங்காங்கே குறிப்பிட்டுச் சென்று முடிவடைகிறது. என்றாலும் அவற்றில் அது அவ்வளவு தீவிரம் காட்டுவதில்லை. அவைபற்றி விபரித்து தன்னையோர் அரசியல் நாவலாக நாமகரணிப்பதிலிருந்து அது திட்டமாய் விலகியிருக்கிறது.

ஏனெனில் இதன் வகைதுறை வேறானது.

73ஆம் பக்கம்வரையான நாவலின் கதைகூறலில் பெருமளவான யதார்த்தபூர்வ நிகழ்வுகளும் சமூகமயமான சிந்தனைப் போக்குகளும் கவனப்படுகின்ற வேளை, ஐயப்பாடுகளும் வினாக்களும் குறைவாகயிருப்பதையும் ஒரு வாசகரால் அவதானிக்க முடியும். ஆனால் இரண்டாம் கட்டத்தில் இது நேர்மாறாகிவிடுகிறது. கற்பனா வாத நிகழ்வுகளும் உரையாடல்களுமாக அது உருக்கொண்டுவிடுகிறது. தன் அகத்தையே இன்னொரு பிரதியாய்க் காணும் விநோதம் சம்பவிக்கிறது. விளைவாய் நாவல் எதன்மீதும் ஐயம் கொள்கிறது; கேள்விகளை எழுப்புகிறது. கேள்விகளாய்ச் சமைந்த நூலாக பிரதியை வாசகன் கருதநேர்வது இந்த அம்சத்தால்தான்.

பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம், சிலரின் இலக்கிய வித்தைகள், பெண்ணியம், நாடு கடந்த தமிழீழ அரசு என அனைத்தையும் ஆரம்ப கால தமிழ் இலட்சியவாத நாவல்கள்போல் பிரதி சந்தேகிக்கிறது; கேள்விகள் கேட்கிறது. அது அனுசரணையாக அவ்வத் துறைகளுக்கு வலு சேர்க்கிறது அல்லது மறுதலையாக வலுவிழக்க வைக்கிறது. அதேவேளை கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லாதும் விட்டுவிடுகிறது. அது வாசகரின் வேலையென அழுத்தமாய்க் கூறிநிற்கிறது. செங்கல்களால் அடுக்கப்பட்டதுபோன்ற ஒரு நவ வடிவத்தை கதைகளினூடாக முன்னனுமானமின்றி  படைப்பாளி உருவாக்குவது இவ் வண்ணமே நிகழ்கிறது.

நாவலின் முதற் கட்டத்தில் அருட் தந்தை சகாயநாதன் மரிசலினின் கதையைச் சொல்லும் விதத்தைவிட, இரண்டாம் கட்டத்தில் சடையனதும் மாரீசனதும் கதைகூறுமிடத்தில் அடர்த்தியும், புத்துருவாக்கச் சொற்களுமாக படைப்பாளியின் மொழிப் பாவனை அற்புதத்தைச் செய்கிறது. நடை கனதி கொள்கிறபோதும் புரிதலின் சாத்தியத்தை அது குறைத்துவிடுவதில்லை. கலாபூர்வமான உயரத்தை பிரதி அடைய இவையெல்லாம் துணைபுரிந்துள்ளன.

அரசியல், சமூகம், இயற்கை, நாட்டார் கலைகள் குறிப்பாக கூத்துக் கலையும் ‘வங்கை’, ‘சங்கை’போன்ற அதன் பன்னிலை ஆடல் வடிவங்களும்பற்றி ‘காந்தப் புலம்’ அதிகமாகவும் ஆழமாகவுமே உரையாடுகிறது. அதுபோல் மூலிகைகள்பற்றியும். அதுவே அதன் தனித்தன்மையாகவும் தென்படுகிறது.

படைப்பாளியிடத்தில் படைப்புந்துதல் காரணமாய்த் தோன்றும் இவ்வகை ஐயங்களும் வினாக்களும் இந்தப் பிரதியில் மட்டுமல்ல,  ‘வேருலகு’ (2009), ‘பிரண்டையாறு’ (2011), ‘அத்தாங்கு’ (2012), ‘உடக்கு’ (2018) ஆகிய அவரது அனைத்து பிரதிகளிலுமே தொடர்ந்து கிளர்ந்தவண்ணம் இருப்பவைதான். என்னவொன்று, இதிலே கொஞ்சம் அதிகமாக இருக்கின்றன. இவ்வாறான சிந்தனை கொண்டவர்கள் தமிழ்ப் படைப்புலகில் பலபேரில்லை. காலால் சிந்தித்து, தலையால் நடப்பதாய் வௌிப்படுத்திய தருணத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்போல்  நானும் ஒரு மாயத்தின் ஆரோக்கியமான அம்சமாய்  படைப்பாளியின் இச் சிந்தனைமுறைமையைக் கண்டிருந்தேன்.

அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இந்தச் சிந்தனை, தீர்கமாய் ஒன்றிலிருந்துமட்டும் ஒதுங்கியிருந்தது. அது அவரின் மெய்ஞ்ஞானத் தேடல். அந்த ஆன்மீகம் சார்ந்த தேடலின் உத்வேகத்தை பிரதியின் அதிகமான பக்கங்களிலும் எதிர்கொள்ள முடிந்திருந்தது.

‘அச்சம், குற்ற உணர்வு, நன்றியுணர்வு எனும்வகையிலான மரங்களைச் சீவி, பக்தி என்ற கயிற்றைக்கொண்டு சேர்த்துக் கட்டிய கட்டுமரமொன்றில் அமர்ந்தபடி நதியில் ஒரு முதியவன் மிதந்துவரக் கண்டான்’ என பக்கம் 82இல் வரும் காட்சிப் படிமத்தை ஒரு வாசகர் ஜோன் பன்யனின் ‘இரட்சணிய யாத்திரிகம்’ நூலில் கிறிஸ்ரியனின் பயணக் காட்சிகளுக்கு சமாந்தரமாய் நிறுத்தக்கூடும். ஏனெனில் ‘மரபு நதி’, ‘பேரன்பு மரம்’, ‘மறதி மலை’ ஆகிய தொடர்கள்மூலம் வாசக மனம் அத் திசைச் சிந்தனைக்கேற்ப ஏற்கனவே கட்டமைக்கப்பட்டு விடுகிறது. ஆனாலும் அதற்கு முன்பாகவே பிரதி சுதாரித்து அதிலிருந்து மீண்டு வாசக எதிர்பார்ப்பைப் பொய்யாக்குகிறது.

தன்னை ஒரு யதார்த்தப் பிரதியாகக் கொள்ளாமல் இருப்பதற்கான சகல வாயில்களையும் அது மூடியே வைத்திருந்தது. அதனால் மிகுவுணர்ச்சிபூர்வமான பாதிப்பை பிரதி செய்ய முயலவில்லை. வலிந்து மன அவலத்தைத் தூண்டும், கண்ணீர் ஒழுகவைக்கும் உத்தியேதும்  காதலர் பிரியும் தருணங்களில்கூட எழுப்பப்படவில்லை. படைப்பாளி பிரதியை உணர்வுரீதியாக அணுகவில்லையென்பதுதான் இதன் பொருளாகிறது.

இயனியை ஒரு குண்டு வெடிப்பு விபத்தில் இழக்கும் சடையன், அவள் கடைசியாக அணிந்திருந்த ஆடைகளும், அவளைப் புதைத்த இடமும் நண்பரொருவரால் காட்டப்படும்போதுகூட, அவள் இன்னும் உயிர் தரித்திருத்தலை நம்பியவனாய் மீண்டும் வனமேகுதல் நாவலில் முக்கியமான இடம். காதலின் மகத்துவத்தை ‘பாடி’த் தீர்க்க வெகு பொருத்தமான சந்தர்ப்பம். ஆயினும் படைப்பாளி பிரக்ஞைபூர்வமாக அந்த இடத்தை அர்த்தப்பாடான சொற்களை வீசுவதோடு அநாயாசமாய்க் கடந்து போய்விடுகிறார்.

அப்போதும், எஸ்.பொன்னுத்துரையின் ‘மாயினி’ நாவலில், கடந்த காலத்தின் நினைவு மீட்பைத் தரும் ஞாபக மூலிகையான முகிலி தேடி நந்தன் அலைவதுபோலும் சடையனின் செயற்பாடு அமைவதில்லை. சடையன் தேடலின் இறுதியில் தன் வன மரங்களுக்கிடையே இயனியைக் கண்டடையவே செய்கிறான். காதலின் உந்நதத்தைக் காட்டுவதோடு நாவலும் நிறைவெய்துகிறது.

யதார்த்தவாதமும் கற்பனாவாதமும் சேர்ந்தவோர் அமைப்பிலும், சிறு சிறு கதைகள்மூலமும் தம் நாவல்களைக் கட்டமைத்து அவற்றை வெற்றிபெறச் செய்த படைப்பாளிகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிறையப் பேர் இல்லை. தன் ‘நினைவுப் பாதை’ வழி மரணத்தை விசாரணைப் படுத்திய நகுலன்; சிறு சம்பவங்களைக் கதைகளாக்கி அவற்றின் தொகுப்புமூலம் மர்மத்தை உருவாக்கியும் கலைக்தும் போட்ட ‘ஒற்றன்’ நாவலின் படைப்பாளி அசோகமித்திரன்; அதேமாதிரியான வழியை தன் ‘உண்மை கலந்த நாட்குறிப்புக’ளில் சாதனையாக்கிய அ.முத்துலிங்கம்; கற்பனாவாத உத்தியில் நந்தனை கங்கைக் கரையெங்கும் இறந்த காலத்தை நினைவுகொள்ளவைக்கும் சித்த வைத்திய மூலிகையை தன் ‘மாயினி’ நாவலில் தேடவைத்த எஸ்.பொன்னுத்துரை ; இவ்வாறு தொடரும் இவ் வழியில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளும் காலத்தில் இணைவார்கள் என்பதற்கு நம்பிக்கை தந்திருக்கிறது ‘காந்தப் புலம்’.  

‘காந்தப் புலம்’ என்ற நூல் தலைப்புக்கான அர்த்தம் வெளிப்படையாய் இல்லை. சில பிரதிகளில்போல் பூடகமாயுமில்லை. வாசகரின் சிந்தனைப் போக்கினுக்கும் திறத்தினுக்குமேற்ப பொருள் விரித்துப் பார்க்க இங்கே இடமிருக்கிறது. ‘வனத்தில், நாட்டிலென எங்கேயும் உண்மையின் திசை ஒன்றாகவே இருக்கிறது, காந்தத்தின் நாக்கு எப்போதும் வடதிசையைக் காட்;டியிருப்பதுபோல்’ என்பதாக தலைப்பின் பொருளை நான் கட்டமைத்துக்கொண்டேன்.

குறையும் நிறையுமான அபிப்பிராயங்களே மேலேயுள்ள எல்லாம். இருந்தும் குறையாக குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுண்டு. நிறைந்த நிறுத்தக் குறியீட்டுப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும், பிழை எழுத்துக்களும் நூலில் உள்ளன. ஒரு சொடுக்கில் மாயங்களை நிகழ்த்தும் கணினி யுகத்தில் இப் பிழைகளின் காரணத்தை உள்வாங்குவது சிரமமாக இருக்கின்றது.

ஒரு வெகுஜன நூலை வாசிக்கும் வேகத்தில் இந்தப் பிரதியுள் வாசகர் பிரவேசித்துவிடக் கூடாது. அப்போது ரசனை ஊற்றெடாதும், அர்த்தம் பிடிபடாதுமிருக்க வாய்ப்பிருக்கிறது. பிரதியே தன் வேகத்துக்கிணங்க வாசகரை அழைத்துச் செல்லும் வலிமை கொண்டிருக்கிறதுதான். என்றாலும்  ஒரு முன்னெச்சரிக்கையாக இதைச் சொல்லிவைப்பது நல்லது.

 

0000

ஆதிரை வௌியீடு,

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்,

இலங்கை.

பதிப்பு: ஜனவரி 2023

0

வெட்சி, சித். 2023

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்