சாம்பரில் திரண்ட சொற்;கள் 12

 

 


செங்கறுப்பாயிருந்த வானம் கருஞ்சிவப்பாகி இருளாகும் மாயத்தைத் துவங்குவதை அண்ணாந்த பார்வையில் ஜன்னலூடு கண்டபடியிருந்த சுந்தரத்திற்கு, உட்படிகளில் இறங்கி பாதி வழியிலிருந்து சாந்தரூபிணி, ‘அங்கிள்…!’ என குரலெடுத்தபோதே தெரிந்துவிடட்டது, முக்கியமான செய்தியொன்று பாதி தூரம் கடந்து நிலக் கீழ் வீட்டுள் இறங்கிவிட்டதென.

கீழ், மேல் வீட்டுக் குடும்பங்கள் அந்தவகையாக பழக்கத்தின் தத்தம் இடைவெளிகளை வகுத்துக்கொண்டிருந்தமை, விரும்பத்தக்கதாக இருக்கவில்லைத்தான், ஆனால் நன்மை விளைத்தது. வீட்டினுள்ளே அந்தளவு  சுமுகம் போதும் என்பதை சில மாதங்களின் முன் கீழ் வீட்டுக்கும் மேல் வீட்டிற்குமிடையிலான ஊடாட்டத்தில் ஒரு பிரச்னையிலிருந்து வெடித்தெழுந்த ஒரு பிரச்னைமூலம் சந்தரம் புரிந்துகொண்டிருந்தார்.

ஒருநாள் காலையில் அவர் ஏதோ தேவைகருதி வெளியே சென்றிருந்தவேளை, ‘அன்ரீ….!’யென அழைத்தபடி வெகு சுயாதீனமாக சாந்தரூபிணி கீழே வந்திருந்தாள். பதிலில்லாததில், படியேறமுடியாத அன்ரி வேறெங்கே வாஷ் றூம் தவிர போகப்போகிறாரென உடனடியாகத் திரும்பிவிடாமல் காத்திருக்கக் கருதி கூடத்துள் அமர்ந்தாள்.

வெளியே வந்து சாந்தரூபிணியை கூடத்துள் அமர்ந்திருக்கக் கண்ட மலர் திடுக்கிட்டுப்போனார். திடீரென ஒருவரை அவ்வாறு எதிர்ப்படும் எவருக்கும் ஒரு திடுக்காட்டம் ஏற்படுமாயினும், மலர் கொண்டதோ அவ்வாறு கொண்டிருக்கவேண்டியதாய் இல்லாதிருந்தது. அது, சுமுகமாய் இருந்திருக்கவேண்டிய உரையாடலை முதலில் வீட்டு வாடகைதாரரிடத்திலும், பின்னர் வீட்டு உரிமையாளரிடத்திலும் உடைத்துப்போட்டது.

‘என்னவேணும்? இந்த மாச வாடைக் காசு தந்திட்டம்தான?’ என்றார் மலர்.

அவரின் பார்வையிலேயே தனது திடும் பிரவேசத்தின் அவரது விருப்பமின்மையைத் தெரிந்ததோடு தனது செயற்பாட்டையும் வீட்டுச் சொந்தக்காரரென்ற எண்ணத்தின் அத்துமீறலாய் உணரத் துவங்கியிருந்த சாந்தரூபிணி நிலைமையைச் சமாளிக்க முயன்றாள். ‘அதுக்காண்டியில்லை, அன்ரி, நான் சும்மாதான் வந்தனான். நீங்களும் தனிய இருப்பியள்… கொஞ்சநேரம்மெண்டான்ன ஒரு பேச்சுத் தணையாய் இருக்குமேயெண்டு…’

‘நான் கேட்டனானோ…?’

சிதறிப்போனாள் சாந்தரூபிணி. பின் ஒருவாறு தன் சிதறல்களை ஒன்றுகூட்டி, ‘இல்லை… மன்னிச்சிடுங்கோ…’ என்று நாக்குழறிவிட்டு நாலு தாவலில் படிகளைக் கடந்து மேலே சென்றாள்.

‘அன்ரியாம்… அன்ரி… என்னண்டு உந்த முறை வந்ததெண்டு எனக்கெண்டா விளங்கேல்ல…’ என மலர் வெடித்துதிர்த்த வார்த்தைகள் படிகளைத் தாண்டி சாந்தரூபிணியை அடைந்து, அவரது வெடிப்பின் முதன்மைக் காரணத்தைப் புலப்படுத்த தாமதமாகிவிட்டிருந்தன. அதற்கு முன்னரே அவள் கதவினைச் சாத்திவிட்டிருந்தாள்.

காலம் அந்த மனப் பாதிப்பை ஓரளவேனும் ஆற்றியதில் தேவைகள் கருதி அவ்வாறான பாதி அணுகுகைகள் நடைமுறைப்பட்டிருந்தன.

அதை நினைத்துக்கொண்டே, ‘வாறன்’ என்றபடி கூடத்திலிருந்து சுந்தரம் படிக்கட்டை அணுகி மேலே நோக்க சாந்தரூபிணி அங்கே நின்றிருந்தாள்.

‘மயில்வாகனமெண்டு, ஆரோ, உங்கட சொந்தக்காறராம்… மொன்றியல்லயிருந்து உங்களைப் பாக்க மத்தியானம்போல இஞ்ச வந்தவர்... நீங்ளில்லையெண்டு சொன்னம்… ரெலிபோன் நம்பர் தந்திட்டுப் போயிருக்கிறார்… கூப்பிடட்டாம்’ என நின்றவாறே தொலைபேசி எண் எழுதிய துண்டை நீட்டினாள். பாதிப் படிகளை ஏறி சுந்தரம் அதை வாங்கினார்.

அவள் திரும்பி மேற்றளம் அடைவதற்குள், ‘கேளுங்கோ, எங்கட நம்பர் எதாவது குடுத்ததோண்டு’ என கீழே அறையிலிருந்து மலர் கத்தியது கேட்டது. ‘எந்த நம்பரும் ஒருத்தருக்கும் குடுக்கப்படாதெண்டு முந்தியே சொல்லிவைச்சிருக்கிறன்.’

இல்லையென்ற சாந்தரூபிணியின் பதிலைக் கொண்டுவந்து மலரிடம் தெரிவித்துவிட்டு திரும்ப, ‘போன் எடுக்கப்போறியளோ உந்தாளுக்கு?’ என வெடித்தது மலரின் கேள்வி. ‘

‘எனக்கென்ன வில்லங்கம்?’ என நிதானமாய்ச் சொன்னார் சுந்தரம். ‘அவர் உங்கட சொந்தக்காறர். விரும்பினா எடுங்கோ, இல்லாட்டி விடுங்கோ. போன் நம்பர் இதில இருக்கு’ என துண்டை சின்ன மேசைமேல் எட்டி போட்டுவிட்டு படியேறி பின்முற்றம் வந்தார்.

வெள்ளி பூக்காத வானமாயினும் நிலாக்கீறு மரங்கள் அடர்ந்;திராத திசையில் ஒரு வீட்டின் கூரைமேல் நின்று ஒளி சிந்தியது.

சுந்தரம் அங்கிருந்த சலாகை வாங்கில் அமர்ந்தார். மயில்வாகனத்தின் பிரச்னை அந்தளவில் முடிந்துவிடவில்லை, இன்னும் தொடரவிருக்கிறது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அப்போது நடந்தது அதன் துவக்கம்.மட்டுமே.

மயில்வாகனத்தை சின்ன வயதிலிருந்தே தெரிந்தவர். தேவையானபோது பேசிக்கொண்ட சந்தர்ப்பங்களும் இருந்திருந்தன. ஆனாலும் நாடிகந்த பின்னால் சில சம்பவங்களின் ஞாபகங்களின்போது வேறு பேர்களுடன் சேர்த்து நினைக்க நேர்ந்திருக்கிறதே தவிர, அவர் குடும்ப நிலையென்ன, அவர் எந்த நாட்டில் வசிக்கிறாரென்ற விபரங்களேதும் சுந்தரத்திற்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிகின்ற ஆர்வமும் எழுந்ததில்லை.

மயில்வாகனத்தின் தமக்கை புவனேஸ்வரியோடிருந்த தொடர்பளவுகூட அவருடன் சுந்தரம் கொண்டிருந்ததில்லை. புவனேஸ்வரியிடத்திலிருந்த பழக்கத்தின் இதய சுத்தம் மயில்வாகனத்திடத்தில் இருந்திருக்கவில்லை என்பதை அவர் அறிந்தே இருந்தார்.

இந்த நிலையில் எவ்வளவோ காலத்தின் பின் தொலைபேசி எண் கிடைத்திருக்கிறது. உறவுமுறையை ஒதுக்கிக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருந்துகொண்டு, ஒரே ஊரவரும் அயலவருமான ஒருவருடன் ஓர் உரையாடலை நடத்துவதில் சுந்தரத்திற்குத் தடையில்லை. ஆனால் நெருங்கிய சொந்தக்காரியாயிருந்தும் திருமணப் பேச்சுக் காலத்தில் தன்னை மறுதலித்த காரணம்கொண்டு ஒரு கோபம் இன்னுமே இருப்பது சாத்தியமென்றாலும், அது அத்தனை காட்டமாக மலரிடத்தில் வெளிப்பட்டிருக்க வேண்டியதில்லை என்பதே சுந்தரத்தின் அபிப்பிராயமாக இருந்தது. அதனால் மலரின் பிரதிபலிப்பு அவருக்கு ஆச்சரியம் செய்தது. இன்னும் பல விஷயங்களை பூடகமாய்ச் சுற்றிப் படரும்படியான கூறுகளைக்கொண்டு அது இருந்ததாயும் அவரை நினைக்கவைத்தது.

மலரின் சுயம் மறந்த புலம்பல்களில் மயில்வாகனத்தின் பெயர் ஓரிருமுறை குறிப்பிடப்பட்டமையை அவதானித்திருந்தாலும், அவற்றைப் பொருளற்ற பிதற்றலாய் சுந்தரம் உதாசீனப்படுத்தியிருந்தார். ஆனால் மயில்வாகனத்தின் மேலான அன்றைய வெடிப்பு அவரை ஏதேதோ நினைக்க வைத்தது. மயில்வாகனம் குடும்பத்தாரின் திருமண மறுப்பின் காரணமாயன்றி வேறொரு காரணத்தைக் காண மனம் கைதுளாவி நின்றது.

அது என்னவாயிருக்கும்?

ஆறு நிமிடங்களில் தன் சிகரெட் புகைப்பை முடித்துக்கொண்டாலும் சுந்தரம் எழும்ப மனமின்றி அக் கேள்வியைச் சுற்றி தன் மனத்தை அலையவிட்டபடி அமர்ந்திருந்தார்.

 

 

 

தன் சிற்றப்பா சண்முகநாதனின்  பேர்த்தி திருமணத்திற்குச் செல்வதா வேண்டாமாவென்று  மலர் பிள்ளைகளுடன், சில நண்பர்களுடன் ஆலோசிக்கத்தான் செய்தார்.  யுத்த நிறுத்த காலத்தில், அதுவும் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெறவிருந்த கல்யாணத்திற்குப் போவதை யோசிக்கவேண்டியதில்லையென நடராஜசிவம்கூட சொன்னான். ஒரு வாரம் நிற்கக்கூடியமாதிரி தானும் வரப்போவதாகக் கூறி ‘கரவெட்டியில சந்திப்பம்… பை … பை…’ என்றாள் லண்டனிலிருந்த அபிநயவல்லி. பிறகுதான் தன் ஆரோக்கியமும் சீர்குலையாதிருந்த மலரும் புறப்படத் தீர்மானமெடுத்தார்.

ஆனால் கல்யாணம் முடிந்து, சந்திக்கத் திட்டமிட்டிருந்த உறவினர் நண்பர்களைச் சந்தித்து, அபிநயவல்லி லண்டன் போன பின்னாலும் ஒரு மாதம் நின்று வர மலர் திட்டமிட்டிருக்கையில் திடீரென யுத்த நிலைமைகள் கிழக்கில் மாறின.

குண்டுகள் மறுபடி வெடிக்கத் துவங்கின.

தீவையே நடுங்கச் செய்வதுமாதிரி விடுதலைப் புலிகளின் விமானப்படைப் பிரிவு தலைநகர் கொழும்பிலும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதும் அப்போதுதான்.

விளைவாக, கொழும்பில் பிற ஊர்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் வந்து தங்கி நின்றிருந்த இலங்கைத் தமிழர்கள் அச்சமெழும்வகையில் கண்காணிக்கப்பட்டார்கள். அத் தீவிரக் கண்காணிப்பு அவர்களது நண்பர் உறவினர்மீதும் தொடர்ந்தது.

இவ்வாறான கெடுபிடி தொடர்ந்துகொண்டிருக்கையில் பாதுகாப்புப் படையின் திடீர் உத்தரவில் ஹோட்டல்கள் லொட்ஜ்களில் தங்கியுள்ளோர் இருபத்து நான்கு மணி நேரத்தில் அறைகளைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அதன்படி 2007 ஜுன் 7ஆம் தேதி ஓர் அதிகாலை வேளையில், காலி வீதியோரம் எதிர்த்திசையின் சமுத்திரக் காற்று சேலையை உருவுகிறபடி சீறிக்கொண்டு வீசும் குளிரில், தன் ஒற்றைச் சூட்கேசுடன் வெளியேறும் முதலாவது ஆள்போல வந்துநின்றார் மலர்.

அவ்வாறு தங்க இடமேதுமின்றி தனியனாய், குடும்பமாய் தலைநகர்த் தெருக்களில் அந்தரித்தோர் தொகை ஆயிரத்தை அணுகுமென கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

கொழும்பிலிருந்த தமிழர்கள் நடுக்குறுத்தும் துயர் சூழ்ந்தவராய் ஆகிப்போனார்கள்.

வெள்ளவத்தை லொட்ஜைவிட்டு வெளியேறிய மலர்  சில நாட்கள் காணாமல் ஆகியிருந்ததாகவும் கொழும்பு நண்பர்களிடமிருந்து தகவல் கசிந்தது. அது அப்படியல்ல, லொட்ஜிலிருந்து வெளியேறிய மலர் கொழும்புப் புறநகரிலுள்ள தூரத்து உறவினர் ஒருவருடைய வீட்டில் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை புவனேஸ்வரி பின்னர் உறுதிப்படுத்தினார்.

அவ்விடர்க் காலத்தில் மயில்வாகனம் கொழும்பிலிருந்ததாய் சுந்தரம் அறிந்திருக்கவில்லை. அவரது முன்னாள் இயக்கத் தொடர்பு யுத்தம் முடியும்வரை அவரை இலங்கையை அணுகும் எண்ணத்தைக்கூட அவரிலிருந்து விரட்டியடிக்கும். பின்னர் போய் வந்தார்தான். அவர்போல் பல இயக்கத் தொடர்புடையோர் போய்வந்தார்கள். ஆனால் அது 2009க்கு முன்பாகயில்லை.

ஒருவேளை மயில்வாகனம் அவ்விடர்க் காலத்தில் கொழும்பில் நின்றிருந்தாலும், அவரால் நேரடியாக மலருக்கு ஏதும் கெடுதி விளைந்திருக்குமென சுந்தரம் நம்பவில்லை. அனர்த்தமேதாவதில் தொடர்புபட்டிருக்க முடியும். அவ்வாறான நரித்தனம் அவரிடமிருந்ததுதான்.

சுந்தரத்திற்கு ஓய்வூதியம் கிடைத்து, அவருக்கான ஸ்பொன்சர் விண்ணப்பத்தின் முடிவுக்காக அவர் வடமராட்சியில் காத்திருந்தவேளையில், புவனேஸ்வரி மூலமாகவும், அவருடைய நண்பர்கள் மூலமாகவும், அவர்போல் இங்கிலாந்திலுள்ள மனைவியின் ஸ்பொன்சர் விண்ணப்பத்தின் முடிவுக்காகக் காத்திருந்த ஆசிரிய நண்பர் சிவநாயகம் மூலமும் அவர் பலவும் அறிந்துகொண்டுதான் இருந்தார். பல இன்னல்களின் வடிவங்களை பயண நேரங்களில் அவரே நேரில் கண்டுமிருந்தார். அவையெல்லாம் மலர் கொழும்பில் தங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில் தாண்டியிருக்கக் கூடிய அல்லது அடைந்திருக்கக்கூடிய இன்னல்களின் பாரதூரத்தனத்தினை அவருக்கு போதுமானவளவிற்கு பயமுறுத்தும்படியே தெரிவித்திருந்தன.

மலர் கடந்திருக்கக்கூடிய துன்பங்களை எண்ணி எண்ணியே சுந்தரம் தூக்கமிழந்து நெஞ்சு வேகினார். மேலும் மலர் கொழும்பிலிருந்த காலத்தில் அவர்களுக்கிடையில் நிகழ்ந்த இரண்டு மூன்று உரையாடல்களில் வழக்கமாகத் தென்படும் அவரது இறுமாப்பின் மெல்லிய ரேகையினை சுந்தரத்தால் காணக்கூடவில்லை. மிக ஆரோக்கியமாகவும் அந்நியோன்யமாகவும் சிரிக்கச் சிரிக்க அமைந்த அவ்வுரையாடல்களால் வெகுகாலம் மனத்துள் அடங்கிக் கிடந்த காதல்பொறியும் அவர் ஊதப்பட்டுப் போனார்.

ஆனால் இலங்கையிலிருந்து வந்திறங்கிய அன்றைய இரவில் தூக்கத்திலே மலர் கத்திய விதமும், விடிந்ததும் தனக்கு தனியறை வேணுமென நடராஜசிவத்துக்கு போன் பண்ணியதும் சுந்தரத்தை பழையபடி சஞ்சலத்திற்கும் மனவுடைவுக்கும் சலிப்புக்கும் ஆளாக்கிவிட்டன. அவர் யோசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

நீண்ட காலம் கைவிட்டிருந்த புகைப் பழக்கம் அப்போதுதான்  துன்பங்களின் சரணாலயமாக அவருள்  மீள் பிரவேசம் செய்தது.

அவர் காதுகொடுக்கத் துவங்கினார். தான் இயல்பில்லாததெனக் கருதிய மலரது முணுமுணுப்புகளும் சுயசம்பாஷணைகளு.ம் உள்ளோடிய அல்லது வெளிப்படையான உண்மையின் கீறுகளைக் கொண்டிருக்கின்றனவெனக் கண்டடையும் ஓர் உளவில் தன்னைப் புகுத்தினார்.

இரவுகளில் அவள் தன் கதையைச் சொன்னாளென்று இல்லை. அலறிய குரலில் அரங்கேற்றினாள். சில கதைகளின் சப்த ரூபம் உக்கிரமாயிருந்தது. சில அச்சத்தை விளைத்தன. இன்னும் சில நியாயக் கேட்புகளாக இருந்தன. சில வெறும் சத்தங்களாய் சீணித்தன.

வௌிப்பாடொன்றும் சுகமான அனுபவமாயிருக்கவில்லை. அதில் மலர் படும் துடிப்பில் தன் நோக்கத்தையே பல சமயங்களில் அவர் கைநழுவிப் போகவிட்டார். பிரக்ஞையோடு.

 

 

மனங்கள் விலகி, உடல்களும் விலகியாயிற்று. அவருக்கு உடம்பில் உணர்ச்சி வெறி பீறிடவில்லை. மனத்தில் அது பீறிட்டது. மலரின் மனோரீதியான சித்திரவதையின் காரணம், அதன் தொடக்கப் புள்ளி அவருக்குத் தெரிந்தாகவேண்டும்.

அதற்கு மலரின் சுயம் மறந்த இரவுப் பிதற்றல்கள் திசைகாட்டியாக முடியும்.

அவர் தன் உளவில் காத்திருக்கிறார்.

உடல் நிலை கருதி மேலும் குளிரத் துவங்கும் அவ்விரவினைத் தப்ப எழுந்து உள்ளே நடந்தார்.

24

 

காலத்தின் சிறு துகள் மி கப் பிரமாண்டம் காட்டி விநாடிகளாய் உதிர்ந்துகொண்டிருந்தது. அதன் பெரும்பொழுதான மணத்தியாலத்தையே சிறு துகளாய்க் கழித்த காலங்கள் அவளுக்கு இருந்திருந்தன. இப்போது இல்லை. எல்லாம் ஓர் அந்திம தசையடைந்து இரண்டு வருஷங்கள். எனினும் உள வெடிப்பின் ரேகைகள் எதுவும் வௌித் தெரிவதில்லை. சேஷ்டைகள் இருந்தன; சிரிப்பு இருந்தது; புல்வெளி உலாவுகையும், கடைத் தெரு செல்லலும், சினிமா பார்த்தலுமென எல்லாம் இருந்தன. அவை இயல்பின் காட்சியாய் முன்னே துருத்திக்கொண்டு இருக்கையில், அடுத்த வீடுகூட உள்ளேயொரு முரணினை சந்தேகந்தானும் படுவதாயிருக்கவில்லை. அவர்கள் மகன் ரவிதாஸ்கூட மூன்று அறைகளும் மூன்று கட்டில்களும் இருக்கிற நிலையிலும் அவர்களது அந்நியோன்யத்தில் ஏது முரணையும் காணாதவனாகயிருந்தான்.

அவள் அதைத் தன் வசதியாகவே எடுத்துக்கொண்டாள். தன்  சுதந்திரத்தின் எல்லை விரிதலின் அறிகுறியாக அது அவளுக்குப் பட்டது. பெற்றார் செய்துவைத்த கல்யாணமாகயிருந்தும் ஏழு வயது மகனிருக்கையிலேயே காதல் அவளுக்குள் இருந்தது. ஒருபொழுது கண்ணில் அவனைக் காணாவிட்டால் தவிக்கிற மனமிருந்தது. ரவீந்திரநாதன் எல்லாவற்றினையும் போட்டுடைத்தான். திருந்திவிட்டேனென ஒருநாள் திரும்பிவந்து மன்றாடினான். ‘திருந்தியிருந்தா நல்லதுதான?’யென்றாள் அவள். அவ்வளவுதான் சொன்னாள்.

வேறொருநாள்,தாசுக்கு ஒன்பது வயதாகிறது, அந்த இடைவெளியே அதிகம், அவனுக்கு ஒரு சகோதரத்துக்கு இன்னும் ஜாதகத்தில் இடமிருக்கிறதாமென பேச்சுவாக்கில் பறைஞ்சான்.

ஒன்றே போதுமென்றுவிட்டாள் அவள். தன்னை மீண்டும் ஒரு பொறிக்குள் அடைத்துக்கொள்ள அவள் தயாராகயிருக்கவில்லை.

முன்பெல்லாம் அவளுக்கு ஒரு நாளிலே இருபத்துநான்கும், அவனுக்கு இருபத்துநான்கும், அதுபோல் தாசுக்கும் அதேயளவு மணி நேரங்கள் இருந்தன. ஆனால் மூவரின் காலத்தையும் ஒருமிக்கப் பார்த்தபோது மொத்தமாகவும் இருபத்;துநான்கு மணி நேரமே வந்தது. அது ஒருவர் வாழ்வை ஒரவர் வாழ்வதான, ஒருவருக்காக ஒருவர் இயங்குவதான  குடும்பமொன்றின் ஸ்திதியைக் காட்டியது.

ஆனால் என்று அவர்களது ஒற்றைப் பெரும் படுக்கையிலிருந்து ரவீந்திரநாதன் கழன்றுபோனானோ, அன்றே ரஸம் கழன்ற கண்ணாடியாக இருவர் வாழ்வும் ஆகிப்போனது.

சாந்தரூபிணிக்கு, தன் கல்லூரிக் கால சிநேகிதியொருத்தியை, அவள் கனடா லண்டனிலிருந்து மார்க்கம் வந்திருந்தபோது சந்திக்க முடிந்திருந்தது. சந்திக்க அத்தனை காலமெடுத்ததே தவிர, அவள் நினைவு மனப் பரப்பில் இவளுக்கு கலையாதே என்றும் இருந்திருந்தது.

அவளுக்கு கமலாசனியென்று பெயர். வகுப்பில் ஏற்கனவே ஒரு கமலா இருந்தவரையில் புதிதாக கட்டைப்பிராயிலிருந்து வந்தவளை சனியென கூப்பிடலாமென்று யாரோ சொன்னதை எல்லோரும் சில்லென்ற சிரிப்போடு ஏற்றுக்கொண்டார்கள். இவள்தான் சொன்னாள் அது சரிப்படாதென. சனி வாறாள் என்றால், சனியன் வருகிறதெனவும் அர்த்தமாகிவிடுமென மறுத்தாள். கமலாசனிதான், அதில் பாதகமில்லை, சனியென்றே கூப்பிடச் சொல்லிவிட்டாள். எந்த அவமானத்தையும் கிரீடமாய் எதிர்கொள்ளலில் இருந்த உறுதியில் இவளும், தன்னை தகுந்த சமயத்தில் காப்பாற்ற கைநீட்டிய இவளை அவளுமென நேசிக்குமளவு இருவரும் இதயம் நெருங்கிப்போனார்கள். அதன் பின்னர், த.கமலாசனிக்கு ஒரு வடமொழிச் சொல்லையிட்டு த.கமலாஸனியென மாற்றி, அதைப் பழக்கத்தில் கொண்டுவர வைத்து ஆசுவாசம்கொண்ட இவளின் அன்பில் கமலாஸனியும் கரைந்துபோனாள்.

நினைக்கிறபோதெல்லாம் சாந்தரூபிணிக்கு மனதை இளக்கி முறுவலைச் சிந்தவைப்பதாகயிருந்தது, அந்தக் கல்லூரிக் காலச் சம்பவம். மார்க்கம் வெளியில் ஒரு கனடாச் சுதந்திர தினத்திலன்றான வாண வேடிக்கை இரவில் சந்தித்தபோதும் இருவரும் அதை ஞாபகம் மீண்டு சிரித்தோய்ந்தார்கள்.

அன்றுதான் அவள் இவளுக்கு ஒரு வேலையின் அவசியத்தை, குடும்ப உட் பிளவுகள் தெரியாமலே, அறிவுறுத்திப்போனாள்.

சமீப காலத்தில் சாந்தரூபிணியின் சிந்தனையை ஆக்கிரமித்திருந்தது அந்த எண்ணம்தான். வெளியே முன்புறத்து நாற்காலியில்  அப்போதும் அதுபற்றி எண்ணியவளாகவே சாந்தரூபிணி அமர்ந்திருந்தாள். ரவிதாஸ் சமீபத்திலுள்ள அவனது பாடசாலைக்கு அந்தத் தெருவிலிருந்து அங்கே கற்கச் செல்லும் இரண்டொரு மாணவர்களுடன் சேர்ந்து போய்வரக்கூடிய சாத்தியத்தை தான் அத்தனை காலம் எண்ணாதிருந்ததை ஒரு வலியோடு அவள் நினைத்தாள்.

தடைகளென நினைத்திருந்தவை அகற்றப்படக் கூடியவையாய் இருந்தவகையில் இனி தான் வேலை தேட ஆரம்பிக்கலாமென்பது அவளின் தேர்வாக இறுதியில் வந்தது. முடிவை ரவீந்திரநாதனிடம் விரைவில் சொல்லிவிட தீர்மானமும் கொண்டாள்.

வாழ்க்கையை அவ்வண்ணம் கழிப்பதில் எந்தளவு பாதிப்பு வந்துவிடும்? காமத்தின் தவனம் தெப்பமாய்த் தேங்கும். அது வாழ்வின் தாங்கமுடியாத் துயராக அவளுக்குத் தோன்றவில்லை. தனிமனிதரின்  உடல் மன நிலைகளின் விசை அதன் அவசியமாகும் பங்கினைக் கணிக்கிறதென்பது அவளது அபிப்பிராயமாகயிருந்தது.

பொருளாதாரச் சிக்கலிலிருந்து ரவீந்திரநாதன் ஓரளவு மீண்டுகொண்டிருந்தாலும், இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை அடைந்துவிடவில்லையென்பதை அவனே அவளிடம் சொல்லியிருந்தான். அவன் சொன்னதுபோல் அதிலிருந்து விரைவில் அவன் மீளக்கூடும். மீண்டுவிடுவான். அவளுக்குச் சந்தேகமில்லை. அவளது முடிவில் குடும்பத்தின் பொருளாதார மந்தம் அல்லது செழிப்பு எதுவும் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டுப் போகவில்லை. தனித்துவமான, சுயாதீனமான வாழ்வின் ஆதார நாதமாயே அதை அவள் கண்டாள்.

கீழே குடியிருக்கும் சுந்தரம் அங்கிள்கூட, தன் நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு வீடு விற்பனை – வாங்குதல்களில் ரவீந்திரநாதனுக்கு சகாயம் செய்துகொண்டிருந்தார். அவரால் ஒரு வீட்டை விற்றுக்கொடுக்கவும் முடிந்திருந்தது. தனது பங்குக்கான வருமானத்தில் ஐயாயிரம் டொலரை அன்பளிப்பாக ரவீந்திரநாதன் அவருக்குக் கொடுக்க முன்வந்;தபோது அவர் அதுவோர் உதவியேயில்லையென பெருந்தன்மையோடு மறுத்துவிட்டமையில் ஏற்கனவே கலைஞர், ஆசிரியப் பணி புரிந்தவரென்ற தளங்களில்  வெகு கௌரவத்துடன் நினைத்திருந்தவள் மேலும் மதிப்பேறிப்போனாள்.

அன்றொருநாள் மயில்வாகனம் மொன்றியலிலிருந்து அவர்களைக் காண வந்த விபரம் தெரிவிக்க பாதி தூரம் படிக்கட்டு தாண்டிவந்து இடையில் நின்று  அங்கிள் எனக் கூப்பிட்டதும், அவர் கீழே வந்தபோது, தொலைபேசி எண் எழுதிய துண்டை தான் நகராமல் நின்று நீட்ட அவரே மூசிமூசி மேலே ஏறிவந்து வாங்கியதை எண்ணினாள். அது அவளை வருத்தத்தான் செய்தது. அவரையும் அது வருத்த நிச்சயம் செய்திருக்கும். அவர் எவ்வளவுதான் உலகியல் நடப்பு தெரிந்தவராயினும் தன் வயதுக்கு அளிக்கப்படாத மரியாதையின் மன வலியிலிருந்து அவர் தப்பியிருக்க முடியாது.

தன் காட்டமான நடவடிக்கைகளை தவிர்க்கவியலாமையின் விளைவுகளாய் அவரைப் பொறுத்துப்போகச் செய்யுமென்ற நம்பிக்கையில் அவள் மனம்  தணிந்தது. ‘உங்கட மனிசியின்ர கதையால உங்களையும் சிலவேளை  மரியாதைக் குறைவாய் நடத்திறதாய் ஆகியிடுது, என்னை மன்னிச்சிடுங்கோ.’

ரவீந்திரநாதன்கூட நடந்தது அவள் சொல்லக் கேட்டு, ‘அவையோட உமக்குச் சமாளிக்கிறது கஷ்ரமெண்டா, எழும்பச்சொல்லியிடுவம்’ என்றிருந்தான். அவள்தான் வேண்டாமென்றாள். ‘மனுஷியின்ர வாய்தான் பொல்லாதது. மற்றப்படி அங்கிள் நல்லவர்தான? அவருக்காண்டியாச்சும் நாங்கள் பொறுத்துத்தான் போகவேணும்.’

அப்போது ரவீந்திரநாதனின் பெரியப்பா வீடு வந்தார். சாந்தரூபிணியோடு  நீண்டநேரமாய் ஊர்க் கதைகள் பேசிக்கொண்டிருந்தார். தண்ணி போட்டா நல்லாய்க் கதைசொல்லும் மனிஷன். என்னவொன்று, எந்த நேரத்தில, என்ன தூஷணை வார்த்தை மனிஷன்ர வாயிலயிருந்து வருமெனக் கணிக்க முடியாது. திட்டமிட்டு அவர் எதையும் சொல்வதில்லை. அவரது சுபாவமே அதுதான். உணர்ச்சி வசப்படுகிறபோது ஊரில்போல் அது தானாக வந்துவிடுகிறது. கனடா வந்து பதினைந்து வருஷங்களுக்கு மேலே. இன்னும் அல்வாய்ப் பேச்சு மாறவில்லை.

ஆனாலும் ஒருநாள் அவர் ஒரு நல்ல கதை சொன்னார்.

உலை வைத்துச் சோறாக்கிறது எப்படி என்பதுபற்றிய கதை.

பிரான்ஸிலிருந்து வந்த ஒரு பதின்ம வயதுப் பிள்ளைக்கு அதுபற்றிய ராசாமணி ரீச்சரின் செய்முறை விளக்கமது.

அது கொஞ்சக் காலம் பிரான்ஸில் தமிழ்ப் பகுதி முழுக்கத் திரிந்தது சிறகெடுத்து. செய்முறை விளக்கம் ராசாமணி ரீச்சரிடம் கேட்ட தமிழ் பிள்ளையும் தன் வகுப்புப் பிரெஞ்சுப் பிள்ளைகளுக்குக் கூற, அவர்கள் தமது நண்பர்கள் பெற்றோர்களுக்குக் கூறவென ஏறக்குறைய பிரான்ஸின் குறிப்பிட்டளவு விஸ்தீரணத்தில் அந்தக் கதை இரண்டு மொழிகளிலும் உலவித் திரிந்து சிரிப்பலைகளை எழுப்பியது.

‘உலை வைக்கிறதென்டா என்ன, அம்மம்மா? சோறு காய்ச்சிறதுக்கு உலை ஏன் வைக்கவேணும்?’

தனது அம்மம்மாவுக்கும் இன்னொரு தமிழ்ப் பாட்டிக்குமிடையே, ஒருகாலத்தில் பல்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் மத்தியில் அடிபாடுகளும் துவக்குச் சூடுகளும் நடந்த றூ டி கல்வினோ தெருவில்  இடம்பெற்ற சம்பாஷணையைக் கிரகித்த அலீஸ் சின்னத்துரையென்ற பெண்பிள்ளை வீடு திரும்பியதும் கேட்ட கேள்விதான் அது.

தமிழ்ப் பிள்ளையும் அதன் பாட்டியும் அதற்கான பதிலை, புரிந்துகொள்ளவும் புரியவைக்கவும் பட்ட கஷ்டத்திலிருந்து உருவாகுகிறது நிகழ்வு.

 

 

உலை வைக்கிறதுபற்றி பேச்சில் அறிந்துகொண்ட அலீஸ் சின்னத்துரையென்ற தன் பேர்த்தியின் கேள்விகளுக்கு விளங்கும்படியான பதில் சொல்லமுடியாது போன அந்தப் பிள்ளையின் அம்மம்மாவான சாந்தம்மா தாவீது, அவளது மரபிலிருந்த ஆர்வத்தை   மழுங்கடிக்காது நாட்டிற்கே அழைத்துச் சென்று செய்முறை விளக்கத்தை நேரில் அளிக்கத் தீர்மானிக்கிறார். தேசத்திலும் யுத்தம் முடிவுக்கு வந்திருந்தமையால் ஒருமுறை ஊரைப் பார்த்துவருவதும் நல்லதென ஒரு 2010ஆம் ஆண்டு பிரான்ஸில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்டிருந்த காலப் பகுதியில் அலீஸ் சின்னத்துரையை அழைத்துக்கொண்டு ஒரு சுருங்கிய பயணத்தை இலங்கைக்கு மேற்கொள்கிறார்.

தன் நோக்கத்தை நிறைவேற்ற முதலில் கொழும்பிலிருந்த தம் உறவினரை அணுகியவர், உலை வைத்து சோறு சமைப்பதற்கான செய்முறை விளக்கமளிக்கிற வாய்ப்பு கொழும்பில் இல்லையென்ற அவர்களது பதிலில் திகைக்க நேர்ந்தது. அவர்கள் மேலும், அதற்கு யாழ்ப்பாணம் தோதான இடமாகலாமென்றும், அங்குகூட மண்ணெண்ணெய் அடுப்புப் போய் மின்சார அடுப்பும், எரிவாயு அடுப்பும் பிரஷர் குக்கரும் வந்துவிட்டதைச் சொல்லி கிராமப்புறம் ஏதாவதை அணுகிப் பார்க்கும்படியும் ஆலோசனை சொன்னார்கள்.

அதன்மேல் சாந்தம்மா தாவீது யாழ்நகர் வந்து, கரவெட்டியில் ஒரு நண்பரை நெருங்கி, அவர்மூலம் தனக்கு உதவக்கூடிய தும்பளையிலுள்ள ஓய்வுபெற்ற ஆசிரியையான ராசாமணி ரீச்சரைக் கண்டடைந்தார்.

சாந்தம்மா தாவீதின் விருப்பத்தைக் கேட்டு ராசாமணி ரீச்சர் அசந்துபோனாரென்றே சொல்லவேண்டும். என்றாலும் வெளிநாட்டில் பிறந்த தமிழ்ப் பிள்ளைக்கு தம் மரபார்ந்த விஷயங்களில் ஏற்பட்டிருக்கும் ஆர்வத்தை மதித்து அதற்குச் சம்மதித்தார்.

மறுநாள் பேர்த்தி அலீஸ் சின்னத்துரை சகிதம் சாந்தம்மா தாவீது ராசாமணி ரீச்சர் வீடு வந்தபோது அவரும் ஆயத்தமாகவே நின்றிருந்தார்.

உலை வைத்து சோறாக்கல் செய்முறை விளக்கத்தை அலீஸ் சின்னத்துரை வீடியோ படமாக்க முயற்சிக்க, அது அவருக்கு தயக்கமாகவும் கூச்சமாகவும் ஆகிப்போயிற்று. ஆயினும் ஆசிரியராயிருந்த அனுபவத்தால் சொற்கள் அவருக்கு மிக இலகுவாக வந்து கைகொடுத்தன. அது உண்மையில் அவரது பாட்டியின் மொழியேயாகும். அந்த மொழியிலுள்ள சில சொற்களுக்கு சாகாவரமளிக்கும் முயற்சியாக அந்த வீடியோப் பதிவினைக் கருத அவரது தயக்கம் முற்றாக அவரிடத்தில் அற்றுப்போனது.

தன் பாட்டியின் மொழியைக் கடனெடுத்து தன் செய்முறை விளக்கத்தை அளிக்கத் தொடங்கினார் ராசாமணி ரீச்சர்.

விளக்கச் செய்முறை முடிந்தபோது அரிசி புடைத்தல், கொழித்தல், அரிசி கிளைதல் போன்றவற்றை தன் கைபட சிறிதுநேரம் அலீஸ் சின்னத்துரை முயன்று பார்த்தாள். பின்னர் அது அப்போதைக்கு கைவராதென அம் முயற்சியைக் கைவிட்டாள். மற்ற விஷயங்கள் சுலபமானதாகையால் தான் பிரான்ஸ் போன பின் அங்கே செய்துபார்த்துக்கொள்வதாகக் கூறினாள்.

நாடு திரும்பியதும் உடனடியாக உலை வைத்து சோறு ஆக்குவதுபற்றிய செய்முறை விளக்கத்தை நோட்டுக் கொப்பியில் முதலில் பிரெஞ்சு மொழியிலும், பின் அம்மம்மாவின் உதவியோடு தமிழிலுமாய் எழுதிமுடித்தாள் அலீஸ் சின்னத்துரை.

                                                                                                                                          

-        உலை வைத்து சோறு ஆக்குவதற்குத் தேவையான மண் இயத்துக்களாகிய பானை, உலை மூடி, அரிக்கன் சட்டிகளையும் மற்றும் அகப்பையையும் கழுவி அட்டாளையில் நன்றாகக் காயவைக்கவேண்டும்.

-        பானையை எடுத்து தேவையான அளவு தண்ணீரை வார்த்து மூட்டிய அடுப்பிலே வைத்தலே உலைவைத்தல் எனப்படும்.

-        உலைவைத்தல் என்பதற்கு பேச்சுவழக்கில்  ஒரு நல்ல காரியத்தைக் கெடுக்கின்ற முயற்சி என்றொரு பொருளும் உண்டு.

-        இது இவ்வாறிருக்க, அடுத்த காரியமாக தேவையான அளவு அரிசியை

எடுத்து முதலில் அதை சுளகிலே போட்டுப் புடைத்து தூசு தும்புகளை அகற்றவேண்டும். பின் அரிசியிலுள்ள குறுணலை கொழித்தெடுக்கவேண்டும். அவ்வாறு கொழித்தெடுத்ததை வேறு தேவைகளுக்காக பத்திரப்படுத்தியும் வைக்கலாம். பலர் கோழிகளுக்கான தீவனமாக குறுணல் அரிசியைப் பாவிப்பார்கள். (புடைத்தல், கொழித்தல் காரியங்களை சுளகில் செய்து காட்டுகிறார் ராசாமணி ரீச்சர்).

-        அதன் பின்னர் அரிசியை நன்கு சிலாவிய அரிக்கன் சட்டியில் நீரெடுத்து நன்றாகக் கழுவவேண்டும். (அரிக்கன் சட்டியெனப்படுவது அரிசியிலிருக்கக்கூடிய மிகச் சிறு கற்களையும் அரித்தெடுக்கும் சட்டி வடிவிலுள்ள மட்பாண்டமாகும். அரித்தெடுக்கும் சட்டியானதால் அரிக்கன் சட்டி.)

-        கழுவிய அரிசியில் மேலும் நீர்விட்டு, கல்லைக் களைந்து அரிசியை எடுத்து நீர் கொதித்துள்ள உலையில் போடவேண்டும்.  (கல்லைக் களைவதை கிளைவதென பேச்சு வழக்கில் சொல்வார்கள்.)

-        கற்குறுணிகளிருந்தால் சட்டியின் அடியில் மீந்து வரும். (கிளைதல் எப்படியென செய்துகாட்டுகிறார் ராசாமணி ரீச்சர்).

-        உலையில் அரிசியைப் போட்டதும் உலைமூடியினால் மூடிவிடவேண்டும்.

-        அரிசி பதமாக அவிந்துவிட்டதை நீரும் ஆவியும் உலைமூடியை மிதத்திச் சீறிக்கொண்டு வெளிவருவதிலிருந்தும் ஓரளவு அறிந்துகொள்ளலாம். அகப்பையினால் ஒரு சோற்றினை எடுத்து நசித்துப் பார்ப்பதன் மூலமும் அரிசி பதத்திற்கு அவிந்துவிட்டதா இல்லையா என்பதை அறியமுடியும். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற பதம்’ என ஒரு பழமொழி அங்கே நிலவுகிறது.

-        சிலபேர் சோற்றுக்கு உப்பு போடுவார்கள். அவரவர் விருப்பத்தின்படி செய்யும் காரியம் அது.

-        அடுத்து முக்கியமான காரியம் கஞ்சி வடித்தலாகும். மிகவும் அவதானமாகச் செய்யவேண்டிய காரியமிது. கஞ்சியை உலையிலிருந்து வடித்தெடுப்பதற்கான பாத்திரத்தை முதலில் அடுப்பின் முன்னால் வைத்துவிடவேண்டும்.

-        பின் உலைமூடியினால் பானையின் வாயை கஞ்சி வடிவதற்கான சிறு இடைவெளியை வைத்துக்கொண்டு அழுத்தமாய்ப் பிடித்தபடி பானையை மெதுவாக முன்னோக்கிச் சரிக்கவேண்டும்.  

-        கஞ்சி முற்றாக வடிந்துவிட்டமை தெரிந்ததும் பானையை நிமிர்த்தி சிறிதுநேரம் மெல்லிய தணல் அடுப்பில் உணர்வதற்காக (உலர்வதற்காக என்பது எழுத்து மொழி) இருக்க விடுதல் நல்லது. பானையில் இப்போது சோறு அடைந்திருக்குமாதலால் பானையை உலுப்பிவிட வேண்டும். அதனால் சோற்று மணிகள் நன்கு பிரிந்து தனித்தனிச் சோறாக வரும்.

-        உலை வைத்து சோறு சமைக்கும் இச் செயற்பாடு பெரும்பாலும் இலங்கையில் மறைந்துவிட்டது. ஆனாலும் அபூர்வமாய் சில இடங்களில் பயில்வில் இருக்கின்றது. அதனால் அச் செயற்பாட்டை விளக்குவதற்கான சொற்களும் இன்னும் வாழ்ந்தபடி இருக்கின்றன.

-        இவ்வண்ணம் சோறாக்கும் மரபார்ந்த விதத்தை இனிமேலும் காப்பாற்றிவிட முடியு.மென நான் நம்பவில்லை. ரைஸ் குக்கர் பெருமளவில் பாவனைக்கு வந்துவிட்டது. இந்தியத் தயாரிப்புக் குக்கர்கள் அதிகமாய் விற்பனையாகின்றன. மேலும் அந்த கொழித்தல், புடைத்தல், சிலாவுதல், உணர்த்துதல், கிளைதல்போன்ற அகராதியில் இடம்பெறக்கூடிய தமிழ்ச் சொற்களை காப்பாற்றுவதற்கு இந்த வீடியோப் பதிவு உதவலாம்.

 

ஒருநாள் அலீஸ் சின்னத்துரை மேசையில் நோட்டுக் கொப்பியைத் திறந்தபடி வைத்துவிட்டு தூங்கப் போயிருக்கையில் அங்கே வந்த சாந்தம்மா தாவீது, அவள் தன்னைக் கேட்டுக் கேட்டு தமிழில் எழுதியதை முழுவதுமாக வாசித்துப் பார்த்தார்.

அதால் மெய், மனம் யாவும் ஒருங்கே சிலிர்த்துப் போனார். அலீஸ் சின்னத்துரையினது தமிழ் மொழிக்கு முக்கியமான இளந்தொண்டென குதூகலப்பட்டார்.

தான் தாயாயிருந்து வளர்த்த தாயைத் தின்னியான தன் பேர்த்தியின் வளர் திசை  வளப்பம் அவருக்குத் தெரிந்தது.

மறுபக்கத்தில் பிரெஞ்சில் எழுதியிருந்த எழுத்தையும் வாசித்து புரியமுனைந்தார்.

‘நான் அச் செய்முறை வழிகாட்டலின்படி முயன்றபோதெல்லாம் இன்றுவரை சோற்றை பதமாக வடித்தெடுத்ததில்லை. ஒருமுறை கஞ்சி வடிக்கையில் சுடுகஞ்சி கையில் ஊற்றுண்டு போனது; பானையும் விழுந்து  உடைந்துபோனது. இங்கே தமிழ்க் கடைகளில் பானை கிடைக்கலாம். கிடைக்காவிட்டால் இலங்கையிலிருந்துதான்  எடுப்பித்தாகவேண்டும். அதையும் அவசரமாகச் செய்யவேண்டியுள்ளது. அம்மம்மா அதற்கு என்ன சொல்வாரோ தெரியாது. தகுந்த வேளைக்காகக் காத்திருக்கிறேன்.’

முயற்சியையும் மீறி சாந்தம்மா தாவீதிடத்தில் சிரிப்பெழுந்தது.

அதுதான், அந்தச் சிரிப்புத்தான், கதையிலிருந்த பிரதானமான அம்சமாகி கதையையே பிரான்ஸ் முழுக்க, உலகம் முழுக்க காவிக்கொண்டு போயிருக்குமோ?

அலீஸ் சின்னத்துரை கண் விழித்து, ‘என்ன, அம்மம்மா?’ என்றாள்.

‘ஒண்டுமில்லை. நீ படு.’

 

 

ரவீந்திரநாதன் வீடு திரும்ப நேரமாகுமெனத் தெரிந்து பெரியப்பா கிளம்ப, அந்தக் கதையையும் சொற்களினூடே பின்னப்பட்ட அதன் நகைச்சுவை ஊற்றையும் மீண்டும் மீண்டும் நினைவுகொண்டு உள்ளே நகைத்தாள் சாந்தரூபிணி.

பின் கூடத்துள் சென்று கதவைச் சாத்தினாள். செய்ய எதுவுமிருக்கவில்லை. மேலே போய் அறையில் தாஸ் என்ன செய்கிறானென எட்டிப்பார்த்துவிட்டு கீழே வந்து சோபாவில் அமர்ந்ததும் சுந்தரத்தின் நினைவு மறுபடி வந்தது. கூட, அன்று சுந்தரத்தையும் அவரது மனைவியையும் தேடி மொன்றியலிலிருந்து வந்த மயில்வாகனமென்ற மனிதரையும்.

ஏனோ அந்த மனிதரின் பார்வையும் பேச்சும் அவளுக்குப் பிடித்திருக்கவில்லை. அந்த மனிதரின் வெளிச் சிரிப்புக்குள்ளே கங்குகள் பறப்பதை அவள் கண்டிருந்தாள். அவர்களுக்கு இடையேயிருந்த உறவை அல்லது பகையை  பெரியப்பாவைக் கேட்டு அறிந்துகொள்ள ஏனோ உள்ளத்துள் அவசியமான காரியம்போன்ற அவசம் அவளுக்குப் பிறந்தது.

 (தாய்வீடு, ஏப். 2023)

(தொடரும்)

 

 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்