சாம்பரில் திரண்ட சொற்கள் 15


 


வெய்யில் கொழுத்திய பதினொரு மணிப் பொழுதில் வீடு வந்துசேர்ந்தனர். சாய்வான பின்முற்றப் பாதையால் கீழிறங்கியிருந்தார் சிவயோகமலர். கூட வந்திருந்த செல்லத்தம்பு, சாந்தரூபிணி, சுந்தரமென யாரின் உதவியுமின்றி, வீட்டின் முன்புற கார் நிறுத்தத்கிலிருந்து தன்னறைவரையான சுமார் நூறு அடி தூரத்தை, நடந்து கடந்ததிலான ஒரு திருப்தி அவர் முகத்தில் ஜோதித்துக்கொண்டு இருந்தது. அதன் பிரதிபலிப்பு மற்றவர் முகங்களிலும் காணக் கிடந்தது.

மூன்று நாட்களுக்கு முந்தி இருள் சூழும் ஒருபொழுதில் அதே வழியில் தான் ஸ்ட்றெச்சரில் வைத்துக் காவிக்கொண்டு செல்லப்பட்டதையெண்ண அத் திருப்தியின் அலைகள் மகிழ்ச்சியாய்ப் பரிணமிக்கத் துவங்கின. உண்மையில் இன்னும் தன்னால் சிறிதுதூரம் யாரின் கைத் தாங்கலுமின்றி கைத்தடியுடன்மட்டும் நடந்துசெல்ல முடியும்போல் சிவயோகமலர்  உணர்ந்துகொண்டிருந்தார்.

முதல்நாள் மதியமளவில் மகேந்திரசிவம் அவரைப் பார்க்க ஒட்டாவாவிலிருந்து வந்;திருந்தான். தனியாகத்தான். ‘அங்கயிருந்து காரில தனியவே வந்தனீ?’ என்ற தாயின் கேள்வியில், தன் மனைவி பிள்ளைகளை அழைத்து க்வரவில்லையேயென்ற ஆதங்கம் பொதிந்திருந்தது அவன் கண்டான். அதை  உணர்ந்தாலும், ‘தனியத்தான்’ என்றான் நிர்விகற்பமாய்.

‘பிள்ளையளையாச்சும் கூட்டிவந்திருக்கலா’மென அவன் தன் மனநிலையைப் புரிந்துகொள்ளாத வருத்தமும் சேர அம்மா சொன்னார். ‘பாத்து எத்தினை வருஷமாச்சு!’

‘சரஸ்வதியை பிள்ளையிலகூட நீங்கள் பாக்கேல்ல. கிருஷ்ணாவைப் பாத்தும் பதினெட்டு வருஷம்.’ வருத்தம் தொனிப்பதுகூட அந்த எல்லைவைத்துக் கொள்ளும் உறவுக்கு அதிகமென்பதுபோல ஒரு சோர்வினை அவன் தன் குரலில் இழையவிட்டான்.

அவ்விரக்தியின் அளவிகந்த பாரத்தை அவரால் புரிந்துகொள்ள முடியும். அவை யாவும் கருதாப் பிழைகளின் அடையாளங்களாக அப்போது உருப்பெருத்து நிற்கின்றன.

பேச்சறுந்தது அவரிடத்தில். முக வெளிர்ப்பு சீணித்தது.

மகேந்திரசிவத்திற்கு, நோய்ப் படுக்கையிலிருப்பவரை துயர்ப்படுத்துகிறோமேயென்று வருத்தமாகியது. ‘ஏனம்மா எல்லாத்தையும் மறைச்சுவைச்சுக் கதைக்கிறியள்? வெளிவெளியாய்ச் சொல்லுறதுதான, பிள்ளையளையும் குயின்ஸியையும் கூட்டிக்கொண்டு வரச்சொல்லி.’

‘உனக்கு விளங்கிதுதான? அடுத்தமுறை கூட்டிக்கொண்டு வா.’

அது மகிழ்ச்சியான விஷயம். தன் பிடிவாதங்களுக்காய் தான் கொடுத்த விலை அதிகமென்பதை  உணரும்போது அம்மா இன்னும் வருந்துவாரென அவன் எண்ணினான். குயின்ஸியை சம்மதிக்கவைப்பதும்கூட மிகுந்த சிரமமாகவேயிருக்கும். ஆயினும் செய்துவிடலாம்.

எல்லாம் ஒரு நேருக்கு வந்தாயிற்று.

எல்லா மனவுணர்களும் இறுக்கம் தளர்ந்துபோயிருந்தன. சுந்தரம்கூட எங்கோ பராக்குப் பார்த்துக்கொண்டில்லாமல், அவர்களை மாறிமாறி நேராய்ப் பார்த்தபடி புன்னகைத்துக்கொண்டிருந்தார். அந்தச் சூழ்நிலை வேறொரு பிரபஞ்சத்தின் பிரவேசமாய்த் தோன்றியது சிவயோகமலருக்கு.

சாந்தரூபிணியும் செல்லத்தம்புவும் பிறகு வருவதாகச் சொல்லிக்கொண்டு சென்றனர்.

சுந்தரத்தின் முகம் மிகவும் தெளிந்துபோயிருந்தது. அதுவரை நிலவியிருந்த பிடுங்குப்பாடுகளுக்கு இனி வாய்ப்பில்;லையென எண்ணியதில் அதுவென சிவயோகமலர் புரிந்தார்.

இன்னொரு விஷயமும் அவருக்கு அப்போது ஞாபகமாயிற்று. ஆஸ்பத்திரியிலிருந்த அந்த மூன்று இரவுகளிலும் வீட்டில்போல் தான் சுயம் மறந்து உளறிக்கொட்டவில்லை என்பதேயது. அது சுந்தரத்திற்கு மகிழ்வளிப்பதாய் இருக்குமாவென அவரால் நிச்சயப்பட முடியாமலிருந்தது. தன் மனவேக்காட்டு வெடிப்புகள் எரிந்த சாம்பலிலிருந்து சொல்லாய்த் திரளும்  ரஸவாதத்தை மிக உன்னிப்புடன் அவதானிப்பவராய் அவர் இருப்பதை சிவயோகமலர் அறிந்தேயிருக்கிறார்.

வெளியின் அமைதியில் உள்ளும் அமைதி கண்டிருக்கலாம்.  புதிய இடத்தின் பிரக்ஞைகூட அவர் வாயை அடைத்துப்போட சந்தர்ப்பமமைத்திருக்கலாம். எப்படியோ அது நடந்திருக்கிறது; அதுதான் முக்கியம்.

அப்போது சுந்தரத்தின் போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. சிறிதுநேரம் உரையாடியவர் புவனேஸ்வரி பேச விரும்புவதாகச் சொல்லி, போனை தரவாவென்று சிவயோகமலரைக் கேட்டார். பேசுவதா வேண்டாமாவென யோசித்து தாமதித்தவர் பிறகு போனை வாங்கிக்கொண்டார். சிறிய சுக விசாரிப்போடு அந்த உரையாடல் முடிந்துபோயிற்று. இருவர் மனதின் விளிம்புகளும் ஏதோ தயக்கத்தில் ஓசையெழாமல் உரசுப்பட்டிருக்கவேண்டும்.

புவனேஸ்வரியை நினைக்கையில் அவரைத் தீயில்போல் சுட்டெரித்த 2007இன் மார்ச் 07ஆம் தேதிய சம்பவமும் ஞாபகமாகிவிடுகிறது. அந்த எரியாத பக்கங்களிலிருந்துதான் அவரது இருப்பு அடையாளமாகிக்கொண்டு இருக்கிறது.

உடல்நலமில்லையென கிடந்த அனுபவமேதும் அவருக்கு சின்ன வயதிலும் இருந்ததில்லை. அன்றைய நிலைமையில் அவருக்கு உயர் இரத்தவழுத்தம், வாதம், நாரி,ப் பிடிப்பு, இதய பலஹீனம், நுரையீரல் தொற்றுவெனவும், எல்லாவற்றிற்கும் மேலாக சிறுநீரகப் பாதிப்பெனவும் நூறு வருத்தங்கள்.

படுக்கையில் வீழ்த்தியது அந்த வருத்தங்களா, 2007 மார்ச் இலங்கையில் நடந்த சம்பவங்களாவென அவர் அடிக்கடி நினைப்பதுண்டு. பதில் கிடைக்காமல் கிடந்து தவிப்பதுண்டு. ஆனால் பதில் கிடைக்கும்போது தன் பங்குக்குபோல் மனநெருப்பில் தன்னை எரிப்பார். ஆம், அந்த வருத்தங்களை உண்டுபண்ணியதில் அந்த 2007 மார்ச் 07 சம்பவத்திற்கு பெரும் பங்குண்டு. அது புவனேஸ்வரியால் , அவளது கருணையின்மையால், விளைந்தது. அவளுக்கு குறையாத தீம்பு செய்தவன் அவளது தம்பி மயில்வாகனம். இருவரையுமே மன்னிக்க மாட்டாள். புவனேஸ்வரியை மன்னித்தாலும் மயில்வாகனத்தை என்றைக்கும் மன்னிக்கமாட்டாள்.

அன்றைக்கு உடம்பும் மனமுமிருந்த தெம்பில், இலங்கையிலிருந்து வந்த புவனேஸ்வரியின் போனுக்கு பிறகு, பத்தாண்டுகளுக்கு முன்பாய் நடந்த அந்த இலங்கை நிகழ்வுகளை எண்ணிப்பார்க்கும் தவனம் அவருக்குத் தோன்றியது. சில நிகழ்வுகளை அந்த மனநிலையில் ஆழமாக ஊடுருவி அடியுண்மைகளைத் தொடமுடியலாம்.

இரவில் கனவாக அவை மீட்சி பெற்றுவிடக்கூடாதென்ற பிரார்த்தனையுடன் மனத்தின் சுவருக்கு மெல்லிய உடைப்புவைத்தார்.

 

 

அன்றைய தினம் ஒரு புதன்கிழமையாகயிருந்தது. காலையிலேயே லொட்ஜைவிட்டு வெளியேறுவதென்பது முதல்நாளிரவே அவர் எடுத்த தீர்மானம்.

நேரடியாக யாழ்செல்லும் மினிபஸ்ஸில் அல்லது சி.ரி.பி. பஸ்ஸில், எது காரணத்தாலாவது பஸ்ஸோட்டம் தடைப்பட்டிருந்தால் ஒரு வாடகை வானை அமர்த்திக்கொண்டு, யாழ் நகர் போய்விடுவது அவரது திட்டமாகயிருந்தது.

இரவு லொட்ஜில் கசிந்த கதைகளிலிருந்து அன்றைய பயணம் இலகுவாகயிருக்குமென அவர் எண்ணியிருக்கவில்லை.  ஆனால் தமிழராயிருந்தாலும் ஒரு வெளிநாட்டுப் பிரஜைக்கு பெரிய ஆபத்தேதும் வந்துவிடாதென அவர் நம்பினார்.

காலையில் சூட்கேஸை இழுத்துக்கொண்டு காலி பிரதான வீதிக்கு வந்தபோது அதுவரை இருந்திருந்த மனத் தெம்பெல்லாம் அவரிடத்தில் உருகிக் கரைந்துவிட்டது. பத்தோடு பதினொன்றாக தன்னிலையும் இருக்குமென்;ற அவரது எண்ணத்தில் அடி விழுந்துவிட்டது. சூட்கேஸை  இழுத்துக்கொண்டு வந்து யாரும் தெருவில் நின்றிருக்கவில்லை.

பலமெல்லாம்   உறிஞ்சப்பட்டு விட்டாற்போல் கால்கள் இடுப்புக்குக் கீழே தளர்ந்து நடுங்கின. தலை சுற்றி, கண்ணில் பிம்பங்கள் நெளிந்து உருக்குலைந்தன.

அவ்வதிகாலைக் கடற்காற்று அவ்வளவு மூர்க்கமாய் அடித்துக்கொண்டிருந்ததில் அவருடம்பு குளிரெடுத்தது. அந்தநேரத்தில், பெரிய அறைகூட வேண்டாம், எங்காவதோரிடத்தில் ஒரு பாய் போடுகிற அளவு இடமிருந்தால்கூட போதும்போல் இருந்தது. ஒரு புகலிடம். பசி தூக்கங்கள் மறந்து அந்தப் புகலிடத்தில் அவர் ஒதுங்கிவிடுவார்.

ஆனால் யாருடையதேனும் புகலிடம் மட்டுமல்ல, தெரிந்த மனிதர்களின் முகங்கள்கூட அவ்வேளை அவருக்கு ஞாபகத்தில் வர மறுத்தன. மீறிவரும் முகங்கள் கைகளால் தம் முகம் மறைத்தன அல்லது அவள் வரவை கைவீசித் தடுத்தன.

ஒரு துண்டில் குறித்து கைப்பையில் வைத்திருந்த புவனேஸ்வரியின் போன் நம்பர் ஞாபகம் வந்தது. அந்த நெருங்கிய உறவுகளுக்கிடையில் என்றோ விழுந்த விலகலொன்று அன்றும் உயிர்கொண்டிருந்து ஒரு தடங்கலைச் செய்தது. புதிதாகவும் சில தடங்கல்கள். ஊரிலே ஒரு பெயரிருந்தது புவனேஸ்வரிமேல். அது அபாண்டமா, குற்றமாவென அவருக்குத் தெரியாது. ஆயினும் அந்த நிலையில் அணுகுவதிலும் தப்பில்லை. அவருக்கு வேறு புகல் இல்லை.

துண்டையெடுத்து செல்போனில் எண்களை அமுக்கினார்.

புவனேஸ்வரியே அழைப்புக்கு பதிலளித்தார். ‘இக்கட்டான இந்த நேரத்தில என்ன செய்விரோவெண்டு யோசித்துக்கொண்டு இருந்தன்.’

‘என்ன செய்யலாம், புவனேஸ்? போக இடமில்லாம நடுத்தெருவில நிக்கிறன்’ என்றார் சிவயோகமலர். அடக்கியிருந்தாலும் ஒரு விம்மல் துளி வெடித்துப் பறந்தது.

‘இந்த நேரத்தில ஆரால, என்ன செய்யேலும், மலர்? மூத்தவன் இல்லாமப்போன பிறகும், இயக்கத்திலயிருந்தானெண்டு இப்பவும் எங்களுக்குக் கஷ்ரம்தான் வந்துகொண்டிருக்கு. நட்ட நடு ராத்திரியில வீடு செக் பண்ண ஆமியும் பொலிசும் மாறி மாறி வாறாங்கள். இன்னொரு பக்கத்தால ஜே.வி.பி.யின்ர தொல்லை. இந்த நிலமையில என்னால என்ன செய்யேலும், யோசிச்சுப் பாரும்.’

‘எனக்கு விளங்கிது, புவனேஸ். எண்டாலும், தன்னந்தனியனாய் சூட்கேஸோட வந்து நடு றோட்டில நிண்டுகொண்டிருக்கிறன். லோங் ட்றிப் பஸ்களும் ஓடேல்லயெண்டு கதைக்கிறாங்கள், என்ர நிலமையையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரும்…’

மௌனம் ஓடிக் களைத்தது சிறிது நேரம்.  அதன் பின்னால் தொடர்ந்தது புவனேஸ்வரியின் பதில். ‘இப்பிடிச் சொல்லுறனேயெண்டு கோவிக்காதயும், மலர். என்ர ரண்டு இளந்தாரிப் பிள்ளையளயும் காப்பாத்திற பொறுப்பு, அவரும் இல்லாமப் போன பிறகு, முழுக்க முழுக்க என்ர தலையில ஏறியிருக்கு. அதால… இப்ப இஞ்ச வரவேண்டாமெண்டு சொல்லமாட்டன்… உம்மட அந்தரமான நிலைமையை நினைச்சுச் சொல்லுறன்… இண்டைக்குமட்டும்… இஞ்ச வந்து நிக்கலாம்; விடிய வெள்ளெண உம்மட  வழியைப் பாத்துக்கொண்டு போயிடவேணும். இதுக்கு மேல என்னால எதுவும் ஏலா, குறை நினைக்காதயும். என்ர விலாசமிருக்கெல்லே…?’

அவள் போனை வைத்துவிட்டாள்.

அது ஓர் அவமானம்.

வரச்சொல்லிவிட்டுச் செய்கிற அவமரியாதை.

ஒரு யுத்த காலம் அதற்குமேல் இழகாதென்பதை சிவயோகமலரும் யோசிக்கும் நிலைமையிலில்லை. தான் அந்தரித்து நின்ற சமயத்தில் ஆதரவு நல்கவில்லையென்பது பெருங்குறையாய், வளர்ந்து பெருங்கோபமாய், பின் அகங்கார வடிவெடுத்து உச்சமடந்தது.

அப்போது எங்கிருந்தென்று தெரியாவண்ணம் திடீரென வந்து அவர் அங்கே தோன்றினார்.

அவள் எதிர்பார்க்கவில்ல. ‘மாமா…!’ நாடிகந்து அலைந்துழலும் ஓர் அகதி புகலொன்று கண்ட ஆசுவாசம் அக் கணத்தில் வெடித்து அவரில் பொங்கியது. ‘நீங்கள் இஞ்சயெப்பிடி…?’

‘என்ர விஷயமிருக்கட்டும். நீயேன் இப்பிடி நடுறோட்டில…?’

‘லொச்சில வெளிக்கிடச் சொல்லியிட்டாங்கள். அதுதான் கரவெட்டி போக நிக்கிறன்.’

‘நானும் கரவெட்டிதான் போகவேணும்; ஆனா இண்டைக்குப் போகேலுமெண்டு நெக்கேல்லை ; நாளை நாளையிண்டைக்கும் கஷ்ரமாய்த்தான் இருக்கும்போல கிடக்;கு. நிலைமை சரியானோடன போவம்; அதுமட்டும்… இடம் பிரச்சினையெண்டா என்னோட தங்கலாம்’ என்றார்.

ஒருவேளை துரதிர்ஷ்டம் முந்தானையைப் பற்றிக்கொண்டு அவரைத் தொடராது இருந்திருந்தால், புவனேஸ்வரிக்கு போனெடுப்பதன் முன்னராக அந்தாளின் வருகை அங்கேயிருந்திருக்கும். அப்போது, சிவயோகமலரின் பதிலும் வேறாக இருக்க வாய்ப்பேற்பட்டிருக்கும். ஆனால் புவனேஸ்வரியின் பதிலில் சூடுபட்டுப்போயிருந்த சிவயோகமலருக்கு, அகங்காரத்தின் முன்மொழிவின்படி நடப்பதுதான் முடிந்திருந்தது.

‘சரி.’

‘சிங்கள றைவராயிருந்தாலும் தமிழ் தெரிஞ்சிருப்பாங்கள்; அதால ஓட்டோவில ஒண்டும் கதைக்கவேண்டாம்’ என்று அவள் காதில்  ஓர் எச்சரிக்கையை  முணுமுணுத்துவிட்டு பம்பலப்பிட்டியிலிருந்து வந்த ஓர் ஓட்டோவை நிறுத்தி சிவயோகமலரை ஏறச்சொன்னார். பின், தன் முதுமையின் இயலாமையையும் மீறி வேகமாய் உள்ளே பாய்ந்தார்.

சிவயோகமலர் பக்கப்பாட்டில் கடற்கரைவரை ஓடிய புவனேஸ்வரியின் வீடிருந்த தெருவை ஒருமுறை திரும்பிப்பார்த்தார்.

‘கொயித, மாத்தயா?’

‘பாணந்துற பஸ் ஸ்ராண்டக்க.’

ஓட்டோ பாணந்துறையை நோக்கிப் புறப்பட்டது.

அது சனியனின் திசையாக சிவயோகமலரறியாமலே ஆகிப்போயிற்று.

(அடுத்த இதழில் முடியும்)

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்