அகம் தோய்தல் 7
ஞானக் கிறுக்கு
‘ஞானக் கிறுக்கு’வென தமிழில் சொல்லப்படுவதை என் சின்ன வயதில்
நான் கேட்டிருக்கிறேன். பெரிய வகுப்பு படித்த, படித்துவிட்டு வேலையில்லாமலிருந்த பல
அண்ணன்மார்கள் சிலவேளைகளில் அதுபற்றி சிரித்துச் சிரித்துப் பேசுவது இன்றுமெனக்கு ஞாபகம்.
பாரதியார் அவ்வாறானவர். வளர்ந்த பின்னால் அவரையே நான் ஞானக் கிறுக்காகக் கொண்டாடியதுமுண்டு.
இந்தத் தேர்ந்தெடுப்பு முக்கியமானவோரிடமாகும். ஏனெனில் வெறும்
கிறுக்குத்தனமும் ஞானவான் அல்லது ஞானக் கிறுக்கன்போல் தோற்றம் காட்டிவிடுவதுண்டு.
நான் இந்த இரண்டாவது வகையான கிறுக்கனாக இருந்தேனென்றுதான்
இப்போது நினைக்க எனக்குத் தோன்றுகிறது. வாழ்க்கையின் போக்கினைத் திசையெடுத்துச் செல்லும்
முக்கியமான தருணங்களில், நான் நிதானமாகச் சிந்தித்து எந்தவொரு முடிவினையும் எடுத்துவிடவில்லை.
‘வந்தால் வா, போனால் போ’ என்பதுபோலவோ, ஆசைவயப்பட்டோ எடுத்ததாகவே அந்த முடிவுகள் இருந்திருந்தன.
ஆனாலும் பெரும் சேதாரங்களின்றி வாழ்க்கையின் சில உயரங்களை
நான் அடைய முடிந்திருந்தேன்.
இன்று நானடைந்த இந்த அனுபவங்கள் ஞானங்களாகவே தேங்கியிருக்கின்றன.
பெரும்பாலும் இனி அவற்றால் பெரிதான நன்மைகள் எனக்கு விளைந்திடச் சாத்தியமில்லை. ஆனாலும் நான் இவற்றை என்னுள்ளேயே பொதிந்து வைத்து
என்னோடு அழிந்துபட விட்டிடக்கூடாது. நான் அவற்றை எழுத்தில் வெளிப்படுத்தியேயாகவேண்டும். அதனால் வேறுபேரேனும் பயன்பெறும் புண்ணியமாவது ஆகட்டும்
எனக்கு.
பள்ளியில் சேர்ந்து கற்கத் தொடங்குவதை நான் பள்ளியில் சேர்ந்த
காலமளவில் ஏடு தொடக்குதல் என்பார்கள். ‘அ’வென்ற அரிச்சுவடியின் முதலெழுத்தை மணலில்
எழுதினாலும், நெல்லில் எழுதினாலும், அரிசியில் எழுதினாலும் எழுத்துக்களை ஏட்டில் படிக்கச்
சொல்லிக்கொடுப்பதால் அதை ஏடு தொடக்குதல் என்றிருக்கலாம்.
ஆனாலும் அது ஏட்டில் எழுதிப் படிக்கிற காலமில்லை. சிலேற்றில்
கற்பென்சில்கொண்டு எழுதவும், புத்தகத்தில் படிக்கிறதுமான காலமாகவேயிருந்தது.
அந்தக் காலத்தில் என் வீட்டு உடுப்புப் பெட்டிக்குள் சிவப்புப்
பட்டு நூலால் கட்டப்பட்ட ஒரு ஓலைச் சுவடிக் கட்டொன்று அடிக்கடி என் கண்ணில் பட்டிருக்கிறது.
ஒருநாள் அதபற்றி என் தாயாரிடம் வினவியபோதுதான் அவர் அது தனது ஜாதகக் குறிப்பென்றார்.
அப்போது எனக்கு அதில் சிறிது ஆர்வமேற்பட்டது. அந்தச் சுவடிக்
கட்டை அவிழ்த்து அதிலுள்ள எழுத்துக்களில் எனக்குத் தெரிந்த எழுத்துக்கள் இருக்கின்றனவாவெனத்
தேடி, ஓரிரு எழுத்துக்களே இருப்பது கண்டு நான் விசனிக்க, அம்மா அக்கறையோடு காரணம் கேட்கையில்,
நான் எனக்குத் தெரிந்ததாய் சில எழுத்துக்களே அதில் இருப்பதாய்ச் சொன்னேன். அதற்கு அம்மா,
அதில் காணப்பட்ட எழுத்துக்களெல்லாம் எனக்குத் தெரிந்தவையே என்றார். எழுத்தாணியால் எழுதும்
வசதிக்காய் வளைத்தும் நெளித்தும் எழுவதாலும், புள்ளிகளிட்டால் ஓலை கிழிந்துவிடுமென்பதால்
மெய்யெழுத்துக்களுக்கு புள்ளிகளிடாது இருப்பதாலும்தான் எனக்கு எழுத்துக்கள் தெரியாமல்
போயிருக்கின்றனவெனச் சொல்லினார்.
மேற்கொண்டு கேள்விகள் கேட்க, எனக்கு விபரம் போதுமாயிருக்கவில்லை. ஆனால் அம்மாவிடம் ஒரு கேள்வி கேட்டேன். ‘உங்களுக்கு
இந்த எழுத்துக்களை வாசிக்க ஏலுமா?”
அம்மா, ஏலுமென்றார்.
ஏடுகளிலிருந்த தனிப்பாடல்களை தன் தாத்தாவிடம் கேட்டு பலவற்றைப்
பாடமாக்கி வைத்திருந்ததாகவும் கூட அவர் சொன்னார்.
‘உங்கட தாத்தாவுக்கு படிக்கத் தெரியுமோ?’
‘தாத்தாவுக்கு படிக்கவென்ன, எழுதவே தெரியும். அவரே பல பாட்டுக்களை
ஓலைச் சுவடிகளில எழுதி வைச்சிருப்பார். அதுகளை படிச்சாக்களிட்ட பாடிக் காட்டி சந்தோஷப்படுத்துவார்’
என மேலும் அம்மா சொன்னார்.
அவரது பெயரென்ன, அவர் பெயர் கல்வியாளர் மத்தியில் பிரபலமாகயிருந்ததா
என்ற பிற விபரங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம்
அப்போது மட்டுமல்ல, வளர்ந்த பின்னால் ஓலைச் சுவடிகள், பழந்தமிழ் இலக்கியம், அம்மாவின்
பாட்டனார்பற்றி நினைவெழும் தருணங்களில்கூட, ஆர்வம் நான் கொண்டிருக்கவில்லை.
அவ்வகையான எழுத்துக்களை நான் மதிக்காதது ஒரு காரணமாகயிருக்கலாம்.
இனி அவ்வாறான ஒரு நற்சமயம் அம்மாவோ அவரின் சகோதரங்களோ வேறு நெருங்கிய ஸஉறவினர்களோ இல்லாமல்போயிருக்கிற
நிலையில் எனக்கு வாய்க்கப்போவதில்லை. அது அதையும் அந்தந்தச் சமயங்களில் செய்து முடித்துவிட
வேண்டியதன் அவசியத்தை இன்று நான் எண்ணி வருந்துவதில் என்ன பயன் விளையக்கூடும்?
அப்படியானால், ஓரளவு இலக்கியத் தாகமெடுத்து நான் வாசிப்பில்
கவனம் குவித்தபோது, ஔவையாருடையவும் இரட்டைப் புலவர்களினதும் இன்னும் பெயர் தெரியாப்
புலவர்களின் தனிப்பாடல்களாகவே இருந்திருக்கின்றன. பாட விதானப்படியான புத்தகங்களின்,
குறிப்பாக இலக்கிய மஞ்சரி மற்றும் பாலபாடம் ஆகியவற்றின், பாடல்களிலும் புலவர்களது வாழ்க்கை
வரலாறுகளிலும்தான் நான் இலக்கியத்தைக் கண்டிருந்தேன்போலும்.
நான் அரிவரி வகுப்பில் சேர்ந்த அப் பள்ளியே காலமாகவாக என்னைப்போல்
வளர்ந்துகொண்டிருந்தது. புதிராக இருக்கிறதா? விளக்கமாகச் சொல்லுகிறேன்.
நான் அப் பள்ளியில் சேர்ந்தபோது அங்கே ஐந்தாம் வகுப்புவரை
மட்டுமே படிக்க வசதியிருந்தது. நான் ஐந்தாவது வருவதற்குள் அங்கே எட்டாம் வகுப்புவரை
படிப்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் எட்டாம் வகுப்பு வருவதற்குள் கல்விப் பொதுத்
தராதரப் பத்திர சாதாரண தரம்வரை வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. பின்னால் உயர்தரம்வரை
அங்கே படிப்பிக்க ஆரம்பித்துவிட்டிருந்தாலும் க.பொ.த. உயர்தரம் நான் அந்தப் பள்ளியில்
படிக்கவில்லை.
பன்னீராண்டுகள் அந்தப் பள்ளியிலே படித்தேன். மேற்கொண்டு பல்கலைக்
கழக புகுமுக வகுப்பையும் அங்கேயே நான் படித்திருக்கலாம். பின்னாளில் பல முறை இந்தக்
கேள்வியை நான் என்னுள் கேட்டுப்பார்த்திருக்கிறேன். அந்தப் பள்ளியில் க.பொ.த. சாதாரண
தரத்துக்கு எடுக்கக்கூடிய பாடங்களாக மரவேலை (தச்சுக் கலை), நெசவு, தோட்ட வேலை (தோட்டக்
கலை), சங்கீதம், வரைதல் கலை, மற்றும் மனையியலும் தையற்கலையும் மாணவிகளுக்காகவும் இருந்தன.
இவையெல்லாம் ஒரு கிராமத்தின் பழமைத்தனத்தைக் காட்டுவதாய் நான் எண்ணி அவ்வாறு செய்திருக்க
முடியுமா?
தெரியவில்லை. நான் எதையும் யோசிக்காமல் எடுத்தேன் / கவிழ்த்தேன்
என்ற போக்கில்தான் அவ்வாறு செய்திருப்பதாக இப்போது நினைக்கையிலும் தோன்றுகிறது.
எப்படியோ, அங்கே படித்தவரையில், இலக்கியமென்பது தனிப் பாடல்களென்றும்,
கம்பராமாயணம் சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களின் ரச விபரிப்பான கட்டுரைகளென்றும்,
சுருக்கமாக இலக்கண வழியில் மரபு மீறாத எழுத்துக்களென்றுமே
நான் கொண்டிருந்ததாய்த் தோற்றிற்று.
ஒரு சம்பவத்தை நான் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
அது 1965 ஆம் ஆண்டுவென ஞாபகம். தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர்
அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். முன்னரிருந்த அறிமுகத்தினாற்போலும்,
மட்டுவில் மகாவித்தியாலய அதிபர் வித்துவான் க.நடராசா அவர்களது வேண்டுதலில் அங்கே மாணவர்
முன் உரையாற்ற பேரா. அ.ச.ஞா. ஒப்புக்கொண்டார். அவர் வரவறிந்த நான் அந் நிகழ்வுக்குப்
போயிருந்தேன்.
பெயரளவில்தான் அ.ச.ஞா. என்ற பெயர் எனக்கு அறிமுகமாகியிருந்தது.
அவரது கம்பராமாயணக் கட்டுரைகள் சிலவற்றினை நான் வாசித்திருக்கிறேன். இருந்தும் அ.ச.ஞா.வின்
அந்த நிகழ்வை நான் தவறவிடாததற்கு, மரபார்ந்த, இலக்கண சுத்தமான இலக்கியத்தில் எனக்கிருந்த
ஆர்வமே காரணமென்பது தெரிகிறதல்லவா?
அன்று அந் நிகழ்வின் பின் நடந்த ஒரு சம்பவத்தையும் ஒரு தகவலுக்காக
இங்கே நான் குறிப்பிடலாம்.
பேரா. அ.ச.ஞா.வின் இலக்கியவுரை சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததென
நினைக்கிறேன். ‘கம்பராமாயண ரசனை’பற்றித்தான் பேசினார். நிகழ்வு முடிந்து நான் வெளியே
வர என்னைக் கண்டுகொண்ட அதிபர் வித்துவான் நடராசா அவர்கள் கைகாட்டி என்னை அழைத்து,
‘நீ நல்லாய்ப் படிப்பாய், அதில பிரச்சினையில்லை; குழப்படியைமட்டும் கொஞ்சம் குறைச்சுக்கொள்’
என்றார். நான் ஒப்புக்கொண்டதாய்ச் சிரித்து அவரிடம் விடைபெற்றேன்.
ட்றிபேர்க் கல்லூரியில் சேர்ந்த பின்னால் என்னில் ஒரு மாற்றம்
நேர்ந்தது உண்மையேயானாலும், அதன் காரணத்தை என்னால் புள்ளி வைத்த விதமாகக் குறிப்பிட
முடியவில்லை.
எனினும் கல்லூரியின் புதிய ஆசிரியர்களும், புதிய சூழ்நிலையும்,
நூலகத்தைப் பயன்படுத்தவிருந்த வசதியும், தீவிரமான வாசிப்பையுடைய சில இரண்டாம் ஆண்டு
மாணவர்களுமென சில காரணங்களைச் சொல்லமுடியும். பாட விதானத்திலிருந்த நூல்கள் முன்புபோலவே
சிறப்பாகயிருந்ததோடு, மறைமலை அடிகளாரின் ‘குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி’ என்ற நாவலையும்
கொண்டிருந்து என் பார்வையை விரிவாக்கியது.
புதுமைப்பித்தன், மௌனி, சு.ரா. போன்றவர்களின் படைப்புகளுள்
இப்போதுதான் பிரவேசிக்கும் தருணம் வாழ்வில் முதன்முறையாகக் கிடைக்கப்பெறுகிறேன். போலவே
தாமரை இதழும், அதன் முக்கியமான படைப்பாளிகள் கோ.கேசவனும் தொ.மு.சி.ரகுநாதனும் பொன்னீலனும்
அறிமுகமாகிறார்கள். இடதுசாரி இலக்கியம்பற்றிய ஆர்வம் என்னுள் தளிர்விடுகிறது.
வடமாகாணமே, ஏன் மொத்த
இலங்கையுமே மரபிலக்கியம்/ யதார்த்த இலக்கியமென இரண்டு முகாங்களாகியிருப்பதை நான் வெளிப்படையாகவே
காண்கிறேன்.
இந்த இரண்டில் எது எனக்கு ஒத்ததாக அல்லது ஒவ்வாததாக இருந்தது?
தெரியவில்லை.
இந்த நிலையில் ரகுநாதனின் ‘விமர்சனக் கலை’, அ.ச.ஞா.வின்
‘இலக்கியக் கலை’, எஸ்.வையாபுரிப்பிள்ளையின் ‘தமிழ்ச்சுடர் மணிகள்’ போன்றனவும், இலங்கையின்
கொழும்பு மற்றும் பேராதனைப் பல்கலைக் கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்களின் திறனாய்வுக்
கட்டுரைகள் பலவும் தினசரிப் பத்திரிகைகளின் ஞாயிற்றுக் கிழமைப் பதிப்பினூடாக எனக்கு
வாசிக்கக் கிடைக்கின்றன. என் தகுதிக்கு மேம்பட்டவையானாலும் சிரத்தையோடு வாசித்து புரிந்துகொள்ள
முயன்றுகொண்டிருக்கிறேன். எனினும் எனக்கு இந்த இரு திசை இலக்கியப் போராட்டம் முழுவதுமாக
விளங்கவில்லை. நான் ஒருபோது மரபிலக்கியத்திலும்,
ஒருபோது யதார்த்த இலக்கியத்திலுமாக இருந்துகொண்டிருக்கிறேன். ஒருபொழுதில் நான் இரண்டிலும்
இல்லாதவனாக, வெறும் இலக்கிய தர்சகனாய் மட்டுமே இருந்துகொண்டிருப்பதாகத் தோற்றுகிறத.
நான் இரண்டிலும் இல்லாதது என் இலக்கிய உலகின் இருப்பையே பின்னால்
கேள்விக்குள்ளாக்கியது.
இதன் அர்த்தம் நான் எந்த முகாமினாலும் கண்டுகொள்ளப்படவில்லை
என்பதும்தான்.
என் இலக்கியப் புறநிலை இவ்வாறிருக்க, என் அகத்து இலக்கிய
நிலை எவ்வாறிருந்தது என்பதை இனிக் காணவேண்டும்.
நான் தமிழ்த் தேசிய தினசரியான ‘ஈழநாடு’வில் ஆசிரிய குழு உறுப்பினனாகச்
சேர்ந்த ஆறு மாதங்களுள் என் முதலாவது சிறுகதையை நான் எழுதினேன்.
மரபிலக்கிய அழுத்தமும், யதார்த்த இலக்கிய ஈர்ப்புமுள்ள ஒருவன்
படைப்பிலக்கிய முயற்சியில் இறங்குகிறபோது அது எந்தளவு காத்திரத்தைப் பெற முடியும்?
சுமாராக இருக்கும்; அல்லது, கொஞ்சம் நல்லதாக இருக்கும்; அவ்வளவுதான்.
எனது படைப்புகளும் அவ்வாறானவையாகவே இருந்தன. விமர்சன ரீதியாக
பெரிய பாதிப்பெதனையும் அவை செய்யவில்லை.
எனக்கு அது பொருளுமில்லை.
ஆனால் நெருங்கிய நண்பர்களுக்கு அது பொருளாகயிருந்தது.
‘படைப்பிலக்கிய முயற்சியில் இறங்கும்போது விமர்சனத்தைப்பற்றிய
கரிசனையோ, பிழைகள் ஏற்படக்கூடுமென்ற பயமோ கொள்ளக்கூடாது. அப்படிப் பயந்தும் தயங்கியும்
நின்றால் உன்னால் எதையும் புதிதாகப் படைத்துவிட முடியா’தென ஓர் ஆங்கில விமர்சகர் சொல்லியிருந்தார்.
அது உண்மையெனத் தெரிய மேலும் சில காலம் எனக்குப் போகவேண்டியிருந்தது.
என் அகத்தை நானே காணுதல், பிறர்க்கு காட்டுதல் என்ற இந்த
முயற்சியில் எதையும் ஒழித்துவிடாதபடியும், மறதியிலும் தவிர்ந்துபோகாதபடியும் மிக அவதானமாகவே
என் படைப்புகள்பற்றிய சுயவிமர்சனத்தை நான் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்.
***
நன்றி: பதிவுகள்,கொம்
Comments