கலாபன் கதை: 10


கப்பல், சமுத்திரம், பெண்


எண்பதுகளின் ஆரம்பத்தை கப்பற்றொழில் படுமோசமாக வீழ்ச்சியடைந்த காலமாகச் சொல்லமுடியும். தானியம் ஏற்றிச் செல்வதற்கும், எண்ணெய் ஏற்றிச் செல்வதற்கும் உதிரிச் சாமான்களை கொன்டெயினர் எனப்படும் பெரும் உலோகப் பெட்டிகளில் போட்டு அவ்வாறான நூறு நூறு பெட்டிகளை ஏற்றிச் செல்வதற்குமான மிகப்பெரும் கப்பல்கள் கட்டப்பட்ட காலம் அது. புதிய கப்பலை பழைய கப்பலின் பாதித் தொகை மாலுமிகளோடேயே செலுத்த முடிந்திருந்தது. மட்டுமில்லை. கடற் பயண காலமும் முக்கால் பங்காகக் குறைந்தது. அதனால் கப்பல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பன்னூறு கப்பல்கள் தொழிலிழந்தன. பழைய கப்பல்கள் இரும்பு விலைக்கு விற்கப்பட்டன. நடுத்தரப் புதிதான கப்பல்களே ஏற்றிச் செல்ல சாமான்கள் இன்றி துறைமுகங்களுக்கு முன்னால் நங்கூரங்களில் தூங்கிக்கொண்டு கிடந்தன. ஒரு காலத்தில் கப்பற்றொழிலில் ஏக சக்கராதிபத்தியம் செலுத்திவந்த கிரேக்கம்கூட அதனால் ஆட்டம் கண்டது.

அக்காலப் பகுதியில் நடுத்தரப் புதிதான எம்.வி.எக்செலேன்ட் என்ற ஒரு கிரேக்கக் கப்பலில் வேலைசெய்து கொண்டிருந்தான் கலாபன். அதுவரையான கப்பற்றொழில் காலத்தில் கலாபன் அலுப்படைந்திருந்தது அந்தக் கப்பலில் சேர்ந்த ஆறு மாத காலத்தில்தான். ஒரு நாட்டை அடையவோ, அதன் பின் துறைமுகத்துள் நுழையவோ, நுழைந்த பின்னர் சாமான்களை இறக்கவோ, இறக்கிய பின் துறைமுகத்தை விட்டு விலகவோ அது அவசரமே காட்டியதில்லை. விலகிய பின் அடுத்துச் செல்ல வேண்டிய துறைமுகம் எதுவென அறியாமல் துறைமுகத்துக்கு வெளியே நங்கூரத்தில் கிழமைக்கணக்காகக் காத்துக் கிடக்கும் அது. அந்த ஆறு மாத காலத்தில் மொத்தம் நான்கு துறைமுகங்களையே கண்டிருந்தது கப்பல்.


அப்போது மூன்றாவது கிழமை. ஐக்கிய அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்துக்கு முன்னால் நங்கூரத்தில் நின்று அலைகளில் ஆடிக்கொண்டிருந்தது கப்பல் .

மாலுமிகள் உற்சாகம் இழந்திருந்ததோடு ஒருவகை ஏக்கமும் கொண்டிருந்தனர். கப்பலில் வேலைசெய்ய வேண்டிய ஓராண்டுப் பூர்த்தியின் முன்னரே தங்களை வீட்டுக்கு கொம்பனி அனுப்பிவிடுமோ என்ற ஏக்கம்தான். பாதிக்குப் பாதி பேர் கப்பல் முகவருக்குக் கட்டிய பணத்தில் பாதியைக்கூட உழைத்திருக்க முடியாது. ஏக்கம் அவரவர் முகத்தில் எழுதியிருந்தது.
கலாபனைப் பொறுத்தவரை அந்தக் கவலை இல்லை. ஆனாலும் சோர்வுதட்டிப்போனது. அடுத்த துறைமுகத்தை நோக்கிப் பயணப்படும்போதிருக்கும் உற்சாகம் பயணமேயின்றிக் காத்துக் கிடக்கையில் ஏற்படாதுதான்.

சியாட்டில் துறைமுகத்தை அடைந்த அன்றைய இரவில் மாலுமிகளின் கிளப்புக்கு சென்றுகொண்டிருக்கையில், அந்தக் கோடைபிறந்திருந்த அந்திவேளையில் அவசரமெல்லாம் அழிந்து நடக்கும் சுகமனுபவித்துக்கொண்டிருந்த கலாபனுக்கு, தானாகவே முன்வந்து தன் வாகனத்தில் இடமளித்து, முதலில் கிளப்புக்கும், பின்னர் ஒரு டிஸ்கொதே எனப்படும் நடனசாலைக்கும், பின் தன் வீட்டுக்குமாய் அழைத்துச்சென்று ஒரு காமோத்சவத்தை நடத்துவித்த வித்தகி மார்க்கரெட்டின் கொழுத்த உடல் வாசனை, ஸ்பரிச சுகங்கள் மறந்து நாளாகிவிட்டது. பெயரே பெரும்பாலும் மறதியில் நின்றுகொண்டிருந்தது. உடலில் ஊறும் தசைத் தினவு வெறியேறிய இரவுகளை இடைஞ்சல் செய்தது.

இரண்டாவது கப்பல் பொறியியலாளன் அலெக்ஸ் மனைவியோடு கப்பல் அதிகாரிகளின் தளத்துக்கும் மேலே, கப்பரினதும் முதன்மைப் பொறியாளரதும் அறைகளுக்குச் சமாந்திரமான ஒரு அறையில் தங்கியிருந்தான். தூங்குகிற நேரத்துக்குத் தவிர மற்ற நேரமெல்லாம் மாலுமிகளின் சாப்பாட்டறையிலும், அதிகாரிகள் சாப்பாட்டறையிலும், கப்பலைச் சுற்றியுள்ள நடைபாதையோரங்களிலுமே காணப்பட்டுக்கொண்டிருந்தாள் அவனது மனைவி. சரளமாகவே எல்லோருடனும் பழகினாள். எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் முகம் அவளுக்கு. ‘எல்ஸி…எல்ஸி’ என்று கத்தியழைத்தபடி சிலவேளை கணவன் அலெக்ஸ் கப்பலெங்கும் தேடித் திரிவான்.

சிலபோது ஒரு வேதனையோடு எல்ஸி சிகரெட் புகைத்தபடி வெளி நடைபாதையில் தன்னை மறந்த நிலையில் நின்றுகொண்டிருப்பதை கலாபன் கனதரம் கண்டிருக்கிறான். அழகான எல்ஸியின் முகம் அந்த நேரத்தில் அழகிழந்து சோகம், ஏமாற்றம், வேதனை, துயரம் என வரையறுப்புச் செய்ய முடியாத ஒரு வலைக்குள் அழுந்திக்கிடந்திருக்கும். அவளது சதா சிரிப்பும் கலகலப்பும்கொண்ட மேற்படைக்குள் கிடந்த உணர்வு அவ்வேளைகளிலெல்லாம் ஆச்சரியத்தையே விளைவித்தது கலாபனிடத்தில். விருப்பமில்லாதவளைக் கொண்டுவந்து அலெக்ஸ் கப்பலில் வைத்திருக்கிறானோ என்றுகூட அவன் யோசித்திருக்கிறான். அலெக்ஸைவிட அதிகமான வேளைகளிலும் அவள் பிறரோடு அல்லது தனியனாய்க் காணப்பட்டதை அவன் அவ்வாறுதான் விளங்கிக்கொண்டான். கப்பலில் மாலுமிகள் தரப்பில் அப்படித்தான் விளங்கிக்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களது உல்லாசவேளைப் பேச்சுக்களில் அது தெளிவாய் வெளிவந்தது.

தாளாமுடியாது ‘கலா’ என அழுதபடி தன்னைநோக்கி எல்ஸி கைகளை விரித்தபடி ஓடிவரும் காட்சிகள் கலாபன் கனவில் எழல் ஆரம்பமாயிற்று. அவனைத் தனிமையில் காணுகையில் ‘கலா’ என அவள் அழைக்கும்போது அவளது கண்களில் சுழிக்கும் குறும்பு அவனை கனவுலகத்துச் சஞ்சாரியாக்கியிருக்கலாம். ‘கலா’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு நல்லது என்று அர்த்தம். கலா என்பதை கேள்விபோல் தொனிக்கவைத்தால் நலமா? என அர்த்தமாகும். அப்போது மிகவும் நல்லது என்று அர்த்தமாகும் ‘பொலி கலா’ என்று பதிலிறுப்பார்கள் கிரேக்க மொழி தெரிந்தவர்கள். அவனைக் கண்டால், ‘கலா’ என்பாள் எல்ஸி. விளிப்பு அல்லது நலமாவெனும் விசாரிப்பு என்ற அர்த்தப் பிரிகை தெரியாது பேசி அவள் அவனோடு தாமா~; செய்பவள். அவளை அந்தளவுக்கு மேல் அவனால் நினைத்துவிடவும் முடியாது.
மாற்றான் மனைவியை இச்சைப்படக்கூடாதென்னும் பண்பாடுள்ள ஓரினத்தைச் சேர்ந்தவன் அவன். அந்தச் சிறிய சுக நினைப்பைத் தவிர்ந்த வேறு முயற்சியெதிலும் அவன் இறங்கிவிட மாட்டான்தான்.

குடியும் படுக்கையுமாகக் காலம் நகர்ந்துகொண்டிருந்தது.
ஒருநாள் காலை கப்பலில் ஏக தடல்புடல். கப்பல் கம்பெனியின் உரிமையாளரது மகனும், கம்பெனிப் பொறியியலாளரும் அன்று கப்பலுக்கு வந்திருந்தார்கள். கப்பற் பொறியியலாளர் கப்பல் முதன்மைப் பொறியாளரோடு எந்திர அறை சென்று எந்திரத்தின் நிலைபற்றி நன்கு பரிசீலித்தார். கூடநின்றிருந்த கலாபனுக்கு வி~யம் விளங்கிவிட்டது அவர்களது பேச்சிலிருந்து. கப்பல் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்குமிடையே ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்தப் பயணங்களை மேற்கொள்ளப்போகிறது.

பயணம் தொடங்கப்போகிறது என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், அந்தமாதிரியான ஒப்பந்தப் பயணம் அவனுக்குப் பிடித்தமாக இருக்கவில்லை. அதுபோல் ஒப்பந்தப் பயணம் மேற்கொண்ட கப்பல்களில் அவன் அதுவரை வேலைசெய்திருக்காவிட்டாலும், அந்தவகைப் பயணத்தின் பிரதிகூலங்களை அவன் நண்பர்கள்மூலம் அறிந்திருக்கிறான். ஒப்பந்தப் பயணமென்பது ஆங்கிலத்தில் வுiஅந ஊhயசவநச எனப்படும். சாமான்களை ஒரு துறைமுகத்தில் இன்ன நாளில் இன்ன நேரத்தில் ஏற்றவேண்டும் என்பதும், அதுபோல் அதை இறக்கும் துறைமுகத்தில் இன்ன நாளில் இன்ன நேரத்தில் இறக்கவேண்டும் என்பதும்தான் இதன் முக்கியமான சாரம்.
ஏற்றுமதிக்கான சாமான்களும், துறைமுக மேடையும் அந்தக் கப்பலுக்காகத் தயாராக இருக்கும் அந்தத் திகதியிலும், நேரத்திலும். அதுபோல் இறக்குமதிக்கான மேடையும், அதை இறக்கிச் செல்வதற்கான ஆயத்தங்களும் அடுத்த துறைமுகத்தில் தயாராகவிருக்கும். தவறும் ஒவ்வொரு நாளுக்கும் கப்பல் கம்பெனி நட்டஈடு கட்டியாகவேண்டும். ஆக, இத்தனை நாள் பயணப்பட்டு இன்ன திகதியில் ஒரு துறைமுகத்தை அடையவேண்டுமென்பது நிச்சயிக்கப்பட்டிருந்தால், அந்தத் திகதியில் காற்றானாலும், புயலானாலும், இயந்திரக் கோளாறு ஏற்பட்டாலும் கப்பல் அடைந்தேயாக வேண்டும். ஓர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டால் உணவு உறக்கமின்றி அதை கப்பல் பொறியியலாளர்கள் சரிசெய்தே ஆகவேண்டும். பயணத்தின்போதும் தங்கள் கடமை நேரங்களில் அதிகூடிய கவனத்தோடு அவர்கள் இருக்கவேண்டி ஏற்படும்.

எப்படியோ மறுநாள் காலை ஜப்பானின் நாகோயா துறைமுகம்நோக்கிய பயணம் என்பது நிச்சயமாயிற்று.

மாலுமிகள் முகத்தில் இழந்திருந்த களை மறுபடி நிறையலாயிற்று.
கலாபனுக்கும் மகிழ்ச்சிதான். ஆனாலும் உள்ளுள்ளாய் ஒரு மெல்லிய அச்சம். எப்படியென்று தெரியாதபடி மர்மமாய் அவனுள் அது நுழைந்திருந்தது.
அன்று அதிகாலை கப்பல் புறப்பட்டபோது, வேலை முடிந்து மேலே வந்த கலாபன் தூக்கம் வராமல் கப்பலின் பின் தளத்தில் நின்றுகொண்டிருந்தான். சாமான்கள் எதுவும் ஏற்றாத வெறும் கப்பல் தன் குறைந்தளவு அடிப்பாகத்தை தண்ணீருள் ஆழ்த்திவிட்டு மெல்ல ஆடியபடி நகர்ந்துகொண்டிருந்தது. மெல்ல மெல்ல அது வேகமதிகரித்து சீரான வேகத்தில் செல்ல ஆரம்பிக்க கலாபன் தன் அறைக்குத் திரும்பினான்.

முதலில் நாகோயா, பின்னர் ஒசாகா, அடுத்து யொக்கோகமா என்று மூன்று பயணங்களை அது நிறைவேற்றிவிட்டது.

இயந்திரம் இயங்கக்கூடிய ஆகக்கூடுதலான பதினெட்டு கடல்மைல் கதியைவிட சற்றுக்கூடுதலான வேகத்திலேயே விரட்டப்பட்டுக்கொண்டிருந்தது. ஒரு கோடையில் தொடங்கிய அந்த ஒப்பந்தப் பயணத்தின் முதல் புறப்பாட்டின்போதே எந்திர அறை கொண்டிருந்த சூட்டில் அது தன் இயல்புக்குமீறிய கதியில் செல்லவைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை கலாபன் உணர்ந்துகொண்டான். ஆனாலும் அவனால் எதுவும் செய்துவிட முடியாது.

ஏறக்குறைய இரண்டாயிரம் கார்களை ஒரு பயணத்தில் அது சுமந்துகொண்டு ஐக்கிய அமெரிக்கா வந்துகொண்டிருந்தது. அந்தக் கப்பல் கார் ஏற்றுவதற்கான நவீனவசதி பொருந்தியதல்ல. மட்டுமில்லை. அது உண்மையில் பின்னால் உருமாற்றி வடிவமைக்கப்பட்ட பலநோக்க கப்பல்தான்.
அதன் சாமான் ஏற்றும் ஐந்து தளங்களிலும் கார்களை கிறேன்மூலம் உள்ளே இறக்கி அவை நகர்ந்துவிடாதவாறு பிணைப்புகள் போட்டு தடுப்புகள் வைப்பார்கள். அது சாமான்களுக்குச் சேதத்தை ஒருபோது ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பினைக்;கொண்டிருந்தது. ஆனாலும் அதுமாதிரி அந்த மூன்று பயணங்களிலும் நடக்கவேயில்லை.

கப்பலில் விசே~மான ஓர் அம்சம் என்னவெனில், பிரதான எந்திரத்தைத் தவிர மற்ற எந்த எந்திரமும் மோட்டரும், ஒரு தயார்நிலையான இன்னொரு எந்திரத்தையோ மோட்டரையோ கொண்டிருக்கும். ஒரு மோட்டர் பழுதானால் அதன் இன்னொரு தயார்நிலை மோட்டரை இயக்கிவிட முடியும். ஆனால் அங்கேயுள்ள முக்கிய சங்கதி, அந்தப் பழுதான எந்திரம் உடனடியாகத் திருத்தப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டாக வேண்டும் என்பது. இரண்டாம் நிலைப் பொறியியலாளன் அலெக்ஸ் அது காரணமாய் அனேகமான பொழுதுகளையும் எந்திர அறையிலேயே கழிக்கவேண்டிய நிலையிலிருந்தான். கலாபனுக்கும் நாளொன்றுக்கு நான்கு அல்லது ஐந்து மணிநேர மேலதிக வேலை கிடைத்தது. கடலிலே மேலதிக வேலைக்கு இரண்டு மடங்கு பணம். அது காரணமாகவே யாரும் மறுதலிக்கிற நிலையிலில்லை மேலதிக நேர வேலையை.

வெளியில் தாராளமான செலவும், வீட்டுக்கு தாராளமான பணம் அனுப்புகையுமாக இருந்தது. செலவை அமெரிக்கத் துறைமுகத்திலேதான் செய்ய முடிந்திருந்தது. ஜப்பானில் வீட்டுக்கு, நண்பர்களுக்கு சாமான்களாக வாங்கிக்கொண்டார்கள். ஜப்பானில் விலைமாதர்களை அணுகிவிட முடியாது. ஆகக் குறைந்த தொகை மூவாயிரம் யென்னாக இருந்தது. ஆனால் ஒரு 2 in 1 சோனி அல்லது நா~னல் செற் இரண்டாயிரத்து அய்ந்நூறு யென்தான். யாருக்கு மனம் வரும், ஒரு சோனி செற்றை காமத்துக்காகச் செலவிட?
நான்காம் பயணம் நியூயார்க் நகருக்குக் கிட்டவுள்ள நியூவாக் என்ற துறைமுகத்திலிருந்து தொடங்கிய சமயத்தில், குளிர்காலம் ஆரம்பித்திருந்தது. முதல் பயணத்தில் வெறும் கப்பலாகப் புறப்பட்டதுபோலன்றி, மற்ற இரு பயணங்களிலும் பருத்திப்பொதிகளை ஏற்றிச் செல்வதற்கான வாய்ப்புக் கிடைத்திருந்தது கம்பெனிக்கு. அந்தப் பயணத்தின்போதும் வெறும் கப்பலாகவே செல்ல நேர்ந்துவிட்டது.

நியூவாக்கிலிருந்து புறப்பட்டபோதே (குரnநெட) கப்பலின் உச்சியில் முடிபோன்ற புகைபோக்கியிலிருந்து கரிய புகை போகத் தொடங்கியிருந்ததைக் கண்டுவிட்டு அலெக்ஸிடம் முறையிட்டிருந்தான் கலாபன்.

வலுத்த காற்று வடமேற்கு மூலையிலிருந்து வீசிக்கொண்டிருந்தது. மணிக்கு மணி காற்றின் உக்கிரம் வலுத்தது. சாமான்கள் கவிழ்ந்து விழுந்தன. தொலைக்காட்சிப் பெட்டிகள் சரிந்து நகர்ந்தோடி ஏதோவொன்றில் இடித்து உடைந்தன. சமையல் பகுதியில் சமைக்கவே முடியவில்லை. எல்லோருக்கும் பாணும், சூப்பும்தான் இரண்டு நாளாக உணவு. வேறு உணவானாலும் சாப்பிட்டிருக்க முடியாது. பல வரு~ அனுபவம் வாய்ந்த மாலுமிகளே கடல்வருத்தத்தில் வாந்தியெடுத்து அவஸ்தைப்பட்டனர்.
மேலும் ஒரு நாள் கடந்த பின்னர்தான் தெரிந்தது அவர்கள் திசையில் மிக்கவேகமான புயல் நகர்ந்து வந்துகொண்டிருப்பது.
எல்லோர் முகத்திலும் மறுபடி கலக்க ரேகைகள். பழகிப்போயிருந்தும் கலாபன் முகத்திலும் அந்தக் கலக்கம் பதியத் தவறவில்லை.

இன்னும் பன்னிரண்டு நாட்கள் இருந்தன கப்பல் நாகோயாவை அடைவதற்கு. முன்னர் ஒருபோது எம்.வி.சந்திரகுப்த என்ற இந்தியக் கப்பலுக்கு நேர்ந்த கதியை எண்ணுகையில் கலாபனுக்கு உடம்பே விறைத்துவந்தது.
துணிவை வரவழைக்கவே பலர் குடித்தனர். மரணத்தை எண்ணுவதிலிருந்து தப்பிக்க இன்னும் சிலர். ஏதேதோ பேச்சுக்களைப் பேசினர். ஒருபோது ஒரு மாலுமி சொன்னான், எல்ஸி கடந்த இரண்டு மூன்று தினங்களாகக் காணப்படாதிருப்பதாக. மெய்தான். அவளை யாரும் இரண்டு மூன்று தினங்களாகப் பார்த்திருக்கவில்லைத்தான். மார்க் என்ற முதன்மைச் சமையல்காரர் அப்போது வேடிக்கையாக மிகவும் முரட்டுத்தனமும் பெருத்த ஆகிருதியும் கொண்ட ஓர் ஆபிரிக்கனைக் கேட்டார், ‘ மோஸே, நீ அவளை இழுத்துக்கொண்டுபோய் கடலினுள் வீசவில்லையே?’ என்று.
எல்லோரும் சிரித்தனர். மோஸேயும் சிரித்தான். ஆனால் அவரது பேச்சில் ஏதோவோர் உண்மை இருப்பது அறிந்து கலாபன் அவரைத் தனியாகச் சந்தித்த ஒருவேளை கேட்டபோது, மார்க் சொன்ன தகவல் அவனை அப்படியே ஸ்தம்பித்துப்போகச் செய்துவிட்டது.
அவர் சொன்னார்: ‘மெய்தான், கலா. இதுபோல் பழைய காலத்திலே நடந்திருக்கிறது. கப்பலில் பெண்கள் செல்லும் வழக்கம் ஆரம்ப காலத்தில் இருந்ததில்லை. அது பாய்மரக் கப்பல்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்த காலம். அப்போது பெண்கள் கப்பலில் இருந்தால் கடல் கொந்தளிக்கும், கப்பலையே மூழ்கடித்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒருபோது கப்ரின் ஒருவன் மனைவியோடு கப்பலில் இருந்த சமயம் கடல் கொந்தளித்து ஆர்ப்பரிப்புச் செய்யத் தொடங்கிவிட்டதாம். கப்ரினின் மனைவி கப்பலில் இருப்பதாலேயே அந்த உயிராபத்தான நிலை தமக்கு ஏற்பட்டதென எண்ணிய மாலுமிகள் கப்ரின் உடனில்லாத வேளையில் அவனது அறைக்குச் சென்று அவன் மனைவியை இழுத்துப்போய் கடலினுள் வீசிவிட்டார்கள். அதன்பிறகு கடலின் சீற்றம் குறைந்து கப்பல் நிதானமாகப் பயணித்ததாம். இதுபோல பல கதைகளை நான் என் வாழ்நாளில் கேட்டிருக்கிறேன்.’

அதன் பின்னர் இரண்டு மூன்று நாளாக மோஸே என்ற பயங்கர ஆகிருதி எல்ஸியை கதறக் கதற இழுத்துப்போய் கடலினுள் வீசுவதான காட்சி கனவாகிக்கொண்டிருந்தது கலாபனுக்கு.

அதிகாலை நான்கு மணிக்கு தன் வேலையை முடித்து வெளியே வந்த கலாபன் சிகரட் எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு சாப்பாட்டுக் கூடத்திலேயே அமர்ந்திருந்தான். அப்போதுதான் அதன் கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியே நெருப்புப் பொறிகள் பறந்துகொண்டிருப்பதை அவன் கவனித்தது. அவன் உடனடியாக அறைக்குச் சென்று ஜொனி வோக்கரை குளிருக்கான துணையாக உள்ளிறக்கிக்கொண்டு பின்தளம் வந்தான். புகைபோக்கியிலிருந்து தீக் கங்குகள் பறந்துகொண்டிருந்தன. புகைபோக்கியின் வாயில் நெருப்பு கனிந்திருந்ததுபோலிருந்தது. அது சாதாரண நிலைமையில்லை. அவன் தாமதிக்காமல் முதன்மைப் பொறியாளரை எழுப்பி நிலைமையை விளக்கினான். முதன்மைப் பொறியாளர் பார்த்துவிட்டு வந்து கப்ரினை எழுப்பினார்.

அந்தளவிலேயே நிலைமை மோசம் என்பது கலாபனுக்குப் புரிந்தது. அது கப்பல் தீப்பிடிக்கும் அபாயத்தைக் கொண்டிருந்ததுதான். பிரதான எந்திரத்தின் பிஸ்டனின் அழுத்த வளையங்கள் உடைந்துபோயிருக்கின்றன. எந்திரம் உடனடியாகத் பழுது பார்க்கப்பட்டாக வேண்டும். ஆனால் நடுக்கடலில் அந்தப் புயலுக்குள் கப்பலை நிறுத்துவதும் சாத்தியமான வி~யமல்ல.
கப்பல் வேகம் குறைந்ததை உணர்ந்தான் கலாபன்.

அவன் படுத்து பத்து நிமிடம் ஆகியிருக்காது. அலெக்ஸ் வந்து கதவைத் தட்டி, ‘காலை எட்டு மணிக்கு எழுந்து எந்திர அறைக்கு வந்துவிடு’ என்று கூறிவிட்டுப் போனான்.

ஏழே முக்காலுக்கு அலாரத்தை வைத்துவிட்டு படுத்த கலாபன் காலையில் எழுந்தபோது கப்பல் மவுனத்தில் மூழ்கிப்போயிருந்தது. அதன் அதிர்வுகள் அடங்கிப்போயிருந்தன. பிரதான எந்திரம் நிறுத்தப்பட்டாயிற்று என்று தெரிந்தது. இனி பழுதுபார்க்கும் வேலை முடிகிறவரையில் தூக்கமுமில்லை, ஓய்வுமில்லை, உணவுமில்லை.

அன்று மாலை ஒரு மணியளவில் அமுக்க வளையங்கள் மாற்றப்பட்டு முடிந்தன. இனி பிஸ்டன் இறக்கப்படவேண்டியதுதான் பிரதான வேலை. மேலே சிலிண்டர் மூடியைப் பூட்டி எண்ணெய் இன்ஜெக்;;டர், மற்றும் அதைக் குளிரவைக்கும் கடல்நீர்க் குழாய்களைப் பொருத்திவிட்டால் வேலை முடிந்தது.

வேலைகள் மனித சக்தியைமீறிய கதியில் நடந்துகொண்டிருந்தன.
பத்து மணியளவில் கப்பல் புறப்படத் தயாராகிவிடும் என்று தெரிந்தது. எட்டு மணியளவில் கலாபனை விளித்த முதன்மைப் பொறியாளர் இரவு பன்னிரண்டு மணிக்கு அவன் வேலைக்கு வரவேண்டியிருப்பதால் சென்று ஓய்வெடுக்கும்படி அனுப்பினார்.

கலாபன் குளித்துவிட்டு அதுவரை உறங்காமல் விளித்திருந்த மாலைதீவு நண்பன் அகமத்துடன் சிறிது பேசிவிட்டு கீழே இன்னும் உறங்காமல் இருக்கக்கூடிய மாலுமி நண்பர்களோடு உரையாட கீழ்த்தளம் வர முயன்றபோது, மேலே ஏறிவந்துகொண்டிருந்தாள் எல்ஸி. படுக்கை உடுப்போடு இருந்தாள். அந்தநேரத்தில் எங்கிருந்து வருகிறாள் என யோசிப்பதற்குள், ‘கலா, மறுபடி வா~ர் மெசின் தொல்லை கொடுக்கிறது. நீ வந்தால்தான் சரியாகும், வா’ என்று கீழே மறுபடி இறங்கினாள்.

பின்தளத்து ஒரு மூலையிலிருந்தது சலவை செய்யும் அறை. அதிகாரி நிலையிலுள்ளவர்களுக்கானது. மாலுமிகளுக்கு வெளுத்த படுக்கைவிரிப்பு, தலையணை உறை, துவாய் கொடுப்பார்கள். உடைகளை அவர்களேதான் தோய்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தமாதிரி கப்பல் சுழன்றடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இவளுக்கு உடுப்புத் தோயல் கேட்டதா? என்று மனத்துள் சினந்தாலும், இயல்பான செயல்களைச் சந்திக்கையில் புயல் அபாயத்தின் பயங்கரத் தோற்றம் அவனுள்ளே மங்கத் தொடங்கியதால், பின்னர் அவளது அழைப்பை அவன் ஆனந்தமாகவே ஏற்க முடிந்திருந்தான்.

வா~ர் மெசினது பிழையை உடனடியாகவே கண்டுபிடித்து தீர்த்துவிட்டான் கலாபன். ஆனாலும் எல்ஸி, ‘நில், நானும் வருகிறேன்’ என்றுவிட்டு ஒரு தோயலில் காயப்போட்ட உருப்படிகளை எடுத்து மடிக்க ஆரம்பித்தாள்.

கப்பலாட்டம் அவளைச் சரிந்து சரிந்து வந்து அவன்மீது விழவைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பொன்முடிப் பெண்ணின் மோதல்களில் தான் உணர்ச்சிவசமாவது உணர்ந்து அவன் விலகிநிற்கவே முயன்றான். ஆனாலும் அந்தப் பாழும் கப்பல் அவனிருக்கும் இடத்தைநோக்கியே அவளைத் தள்ளிக்கொண்டிருந்தது.
ஒருபோது அவள் சொன்னாள், ‘சும்மா பார்த்துக்கொண்டிருக்கிறாயே, என்னைப் பிடித்துக்கொள், கலா’ என்று. அவன் அவளது தோட்பட்டைகளைப் பிடித்தான். ‘அப்படிப் பிடித்தால் நான் துணிகளை மடிப்பது எப்படி? கீழே பிடி’ என்றாள் எல்ஸி. அவன் இடுப்பை வளைத்துப் பிடித்தான். மெல்லமெல்ல பிடி இறுக்கமாவதை அவனே உணர்ந்தான். அந்த இதத்தை அவளும் அடைந்ததாகவே தெரிந்தது. பின் அணைத்துப் பிடித்தான். ஒற்றை மெல்லிய லாஸ்ரிக் கொண்டிருந்த இரவுடையின் அவளது கீழாடை நழுவியது.
அவர்கள் இருவருக்குமே தேவைகள் வெகுத்திருந்தன.

எல்ஸியும் கலாபனும் வெளியே வந்தனர். அவள் நீண்டநாள் இழந்திருந்த மலர்ச்சியை அப்போது முகத்தில் கொண்டிருந்தாள். கலகலப்பாய்ச் சிரித்துப் பேசியபடி வந்தாள். அவர்கள் மேல்தளம் செல்;ல படிக்கட்டருகே வந்தபோது எல்ஸியை முறைத்துப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தான் அலெக்ஸ்.
பார்வையா அது? கனல்! எரித்துவிடுகிற கனல்!
இருவரும் திகைத்தனர்.

அலெக்ஸ் கொண்டிருக்கக்;கூடியது நடந்திருக்கக்கூடியதின் ஊகம் மட்டுமே. அதையே தாங்கமுடியாமலிருந்தது கலாபனால்.
அப்படியே அவளைத் தறதறவென இழுத்துப் போய் கப்பலுக்கு வெளியே வீசிவிடுவானோ? மார்க் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நடந்ததாய்ச் சொன்னதுபோல, இந்தச் சந்தர்ப்பத்திலும் நடக்க பெருவாய்ப்பிருந்ததை கலாபன் கண்டான்.

கலாபன் சிரிக்க முனைந்தான். வரவில்லை.

ஒரு வார்த்தையில்லை அலெக்ஸிடமிருந்து.

கலாபன் மேற்றளம் வந்ததும், தனது அறைப் பக்கம் திரும்பி நடந்தான்.
அதுபோலவே எல்ஸியும் தனது தளத்துக்கு ஏறத் தொடங்கினாள்.

பத்து மணியளவில் கப்பல் மறுபடி புறப்பட்டது. அன்று காலை நான்கு மணிக்கு கலாபனுக்கு வேலை முடிந்தபோது வந்து பாரமேற்ற அலெக்ஸின் முகத்தில் வடுவின் கனதி தெரிந்தது. மேலே வந்தபிறகு கலாபன் நினைத்தான், இனி கனநாளைக்கு எல்ஸி அங்கே இருக்கமாட்டாள் என்று. ஒன்றில் அவளாகச் செல்ல நினைப்பாள், அல்லது அலெக்ஸே அவளை அனுப்பிவைத்துவிடுவான்.

அந்தக் கப்பல் இரண்டு வருடங்களாக அந்த ஒப்பந்தப் பயணத்தைத் தொடர்ந்தது. அலெக்ஸ் இடையே ஒரு முறை ஒரு மாதமளவான விடுமுறையில் கிரேக்கம் போய்வந்தான். எல்ஸி திரும்பிவரமாட்டாள் என்றுதான் நினைத்திருந்தான் கலாபன். ஆனால் தக்கமாச்சு என்ற ஜப்பானிய
தீவுத் துறைமுகத்தில் கப்பல் நின்றபோது அவசரமாக மேலே ஏறி ஓடிவந்தது முதலில் எல்ஸிதான்.

அலெக்ஸ_ம் எல்ஸியும் பயண ஒப்பந்தம் முடியும்வரை கப்பலில் இருந்தார்கள்.

கலாபனும்கூட.
000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்