இனப் படுகொலைகளும்

இனப் படுகொலைகளும்
உலக நாடுகளின் மவுனங்களும்

-தேவகாந்தன்-



யுத்த காலக் குற்றங்களுக்காக சிறீலங்கா அரசு, குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்கள் உட்பட சில அமைச்சரவை உறுப்பினர்களும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைப் படுத்தப்படலாம் என்ற நிலை ஏற்படுகின்ற தருணத்தில், யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் எந்த சர்வதேச அமைப்பின் முன்னரும் சாட்சியமளிக்கத் தயாராகவிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசினால் கைதுசெய்யப்பட்ட செய்தி புதியதில்லை. புதுமையானதும் இல்லை. இதுவும் இன்னும் இதுபோன்ற பலவும் எதிர்பார்க்கப்பட்டவைதான். ஏறக்குறைய சர்வாதிகார ஆட்சியின் நிலைமையை அடைந்திருக்கும் சிறீலங்காவுக்கெதிரான சர்வதேசத்தின் குரல் மவுனித்திருப்பதுதான் இதில் முக்கியமான விஷயம்.

ஆனாலும் இந்த உரைக்கட்டில் அதுபற்றி நான் அலசப்போவதில்லை. திட்டமிட்ட ஓர் இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருக்கும் சிறீலங்கா, சர்வதேசத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறதா என்பதுபற்றியும், உலகின் பல பாகங்களிலும், குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் இரு தசாப்த காலத்துள் நடந்துள்ள இனப்படுகொலைகளையும், அக்காலங்களில் இந்த சர்வதேச சமூகம் எவ்வாறு எதிர்கொண்டது என்பது பற்றியும், இதுவரை நடந்த இனப்படுகொலைகளின் இயங்குதள அறிவை எவ்வாறு சிறீலங்கா பூரணமாகப் பயன்படுத்திக்கொண்டது என்பதுபற்றியுமான ஒரு கண்ணோட்டமே இது.

கடந்த நூற்றாண்டின் இறுதிப் பத்தில் ருவாண்டாவில் நடைபெற்ற இனப் படுகொலைகள் இந்த விஷயத்தில் முக்கியமானவையும் முதன்மையானவையுமாகும்.

Hotel Ruwanda என்ற திரைப்படம் காட்டிய சம்பவங்கள் உண்மையானவை. எனினும் முழுமையானவையல்ல.

ருவாண்டாத் தலைநகர் கிகாலியில் உள்ள ஒரு ஹோட்டலின் மனேஜரான போல், அந்நாட்டுச் சர்வாதிகார அரசு துற்சி இனத்தையும் அதற்கு ஆதரவளிக்கும் துற்சி அல்லாத பிற இன மக்கள் கூட்டத்தையும் பூண்டோடு அழித்துவிடும் திட்டத்தை 1994இல் செயற்படுத்த ஆரம்பித்தபோது, சற்றொப்ப ஆயிரத்துக்கும் மேலான துற்சி இன மக்களை தனது சொந்த ஹுது இன கொலைகாரர்களிடமிருந்து எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே சினிமாவின் மய்யமாக இருந்தது.

ருவாண்டாவின் அரசியற் புலம் சினிமாவில் பெரிதாகக் காட்டப்படவில்லை. அது அந்தச் சினிமாவின் நோக்கத்துக்கும் தேவையாக இருக்கவில்லை. ஆனால் உலக அரங்கில் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகளில் முக்கியமான ஓர் இடத்தை வகிக்கிறது ருவாண்டா இனப் படுகொலைகள். 800,000 உயிர்கள் ஒரு நூறு நாள் எல்லையில் பறிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே உலக இனப்படுகொலை வரலாற்றில் மிகக் குறைந்த நாட்களில் செய்யப்பட்ட ஆகக் கூடுதலான உயிர்க்கொலையாகும்.

இவ்வளவு மோசமான உயிர்க்கொலை ருவாண்டாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தமை சர்வதேசத்தின் கண்களில் தெரியத்தான் செய்தது. அமெரிக்கர்கள் அதுபற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள்தான். ஆனாலும் ஓர் எதிர்ப்புக் குரல் அது குறித்து எழும்பவேயில்லை. அமெரிக்க அரசு கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளவேயில்லை.

அமெரிக்கா தனது நலங்களுக்காக அன்றி வேறு காரணங்களுக்காக எந்த நாட்டின் கோர நிகழ்வுகளுக்குமெதிராக இதுவரை குரல் கொடுத்ததில்லையென்பதை வரலாறு சொல்லிநிற்கிறது. முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் அமெரிக்கா என்ற நாடு பூகோளத்தில் இருந்தது. ஆனாலும் அது போரிலே பங்கெடுத்துக்கொள்ளவில்லை. இரண்டாம் உலகப் போரின்போதும் அதன் இறுதிக்கட்டத்திலேயே தலையீடு செய்தது. அதுவும் எம்டன் என்கிற ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க வர்த்தகக் கப்பல்களைத் தாக்கியதன் பின்னர்தான் என்ற உண்மைகளை உலக வரலாறு இதற்கான தெளிவுபட்ட ஆதாரங்களாக முன்வைக்கிறது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை சுடான் நாட்டு வடமேல் பகுதியான டார்பூரில் நடந்திருக்கிறது. இருந்தும் அமெரிக்காவின் எதிர்ப்பு என்பது வெறுமனே வாய்ப்பேச்சு அளவினதாகவே நின்றுவிட்டது. சுடான் நாடானது அமெரிக்காவைப் பொறுத்தவரை வேண்டியதொரு நாடாக இன்று ஆகியிருக்கின்றது என்பதுதான் அதன் உள்ளுள்ளாய் ஓடியிருக்கும் விவகாரம். சுடான் தலைநகர் கார்டூம் அரசியல் அதிகார வர்க்கம் அமெரிக்காவின் எதிர்பயங்கரவாத அமைப்பினருடன் ஒத்துழைத்துக்கொண்டிருக்கிறது. அல் கெய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் 1991-1996 காலகட்டத்தில் சுடானில் வசித்திருந்தார். அது தொடர்பாக அந்த அதிகார வர்க்கம் தரக்கூடிய தகவல்களுக்காக அமெரிக்காவுக்கு அந்த ஒத்துழைப்பு தேவையாக இருக்கின்றது. மட்டுமில்லை, சுடான் தேசம் தொண்ணூறுகளின் முன்பு சோவியத் ஆதரவுத் தேசமாக இருந்தது. இன்று அரசியல் நிலை மாற்றத்தில் அது தனக்குச் சார்பான நிலை எடுத்திருப்பதை அமெரிக்கா லேசுவில் உதாசீனப் படுத்திவிடமாட்டாது.

பொஸ்னியாவில் 1992-1995வரை நடைபெற்ற மனிதாயத அவலங்களை செய்திகளாக அறிந்துகொண்டிருந்தது மட்டுமின்றி காட்சிகளாகவும் இந்த உலகம் கண்டுகொண்டிருந்தது. ஆனாலும் போதுமான கவனம் செலுத்தப்படவேயில்லை. பொஸ்னிய ஊடகவியலாளர் சமந்தா பவர் A Problem from Hell: America and the Age of Genocide  என்ற நூலில் இனப்படுகொலைகள்பற்றிய தகவல்களைத் தரும்போது இதுபற்றியெல்லாம் விரிவாகப் பேசுவார். அது ஒரு முக்கியமான ஆவணத் தொகுப்பு நூல். இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டில் வெளிவந்த அந்த நூலுக்கு புலிற்சர் பரிசே கிடைத்தது.

டார்பூர் இனப்படுகொலையானது மிகமெதுவாக நடந்துகொண்டிருந்ததெனினும் ஒருவகையில் ருவாண்டா படுகொலைக்கு நிகரானதுதான் அது. சுமார் 400,000 பேர் மூன்றரையாண்டுக் காலத்தில் அங்கே அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் இருபத்தைந்து லட்சம் மக்கள் தங்குவதற்கு ஒரு புகலிடமற்ற ஏதிலிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் இன்னுமொரு உபதிட்டத்தில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். 2004இல் ஆரம்பித்த டார்பூர் இனப்படுகொலை இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஒரு பேரழிவின் நிறைந்த சாட்சியம்.

சுடானின் அரசியல் வரலாறானது மிக்க சோகங்களைக் கொண்டது. 1956இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற சுடானில் இன்றுவரை நிகழ்ந்திருக்கிற மனிதாயத அழிவுகள் சொல்லப்பட முடியாதவை. கார்டூம் மய்ய அதிகார வர்க்கம் சுடானின் வடக்கிலும் தெற்கிலும் ஆடிய அரசியல் தந்திரத்தின் கதையை மிக்க அசிங்கமானதாகவே ஓர் அரசியல் அவதானி கண்டுகொள்வான்.

ஜனநாயகம் கொன்றொழிக்கப்பட்டிருக்கிற ஒரு மண்ணில் அரசியல்ரீதியான மாற்றங்கள் சாத்தியமற்றிருக்கிற வேளையில் மக்கள் தம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள ஆயுதங்களைத் தூக்குவது தவிர்க்க முடியாததுதான். உலகின் எந்தப் பாகத்திலும் இது நடப்பதுபோலவே சுடானிலும் நடந்தது.

டார்பூர் என்பது அராபிய மொழியில் ‘பூர்களின் வீடு’ என்று அர்த்தமாகும். பூர்களின் தாயகத்து வளங்களையும் வாழ்க்கையையும் தக்கவைக்கும் போராட்டத்தை அழித்தொழிப்பதற்கான கார்டூம் அதிகார வர்க்கத்தின் வெறியாட்டமே டார்பூர் இனப்படுகொலைகள். இனம், மதம், மொழி சார்ந்த தூய்மைகளைப் பேணுவதற்கானது இந்த இனப்படுகொலைகள்.

பாலைவன வெளிகளில் டார்பூர் இளைஞர்களின் கொன்றுவீசப்பட்ட உடல்கள் 130 பாகை வெய்யில் உக்கிரத்தில் காய்ந்து கருவாடாகிக் கிடந்ததை பொறுப்புமிக்க சில ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பாலைவனத்தின் இடையிடையே உள்ள ஊர்களின் குடிநீர்க் கிணறுகளில் கொன்றுவீசப்பட்ட உடல்கள் எத்தனை! அதனால் குடிநீரும் விஷமாகி பேரவலம்பட்ட மக்கள் எத்தனை பேர்!

தம் மக்களையே கொன்றொழிக்கும் ஒரு தேசம் பிற மக்களை எல்லைகடந்து சென்றும் கொன்றொழிக்கப் பின்னிற்காது என்பதை வரலாறு சொல்லி நிற்கிறது. சுடான் அதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. சுடானின் மேற்குப் புற எல்லையிலுள்ள நாடு சாட் (Chad). சுடானிய ஆட்சியாளரின் படுகொலைக் கரங்களிலிருந்து தப்புவதற்காக சாட் சென்றவர்கள்கூட சுடானிய அரச படைகளால் எல்லைகடந்துசென்று அழித்தொழிக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள், பெண்கள், முதியோர் மட்டுமில்லை, சாட் நாட்டு மக்கள்கூட இந்தப் படுகொலைகளுக்கு இலக்காகியிருக்கிறார்கள் என்பது மிகக்கொடுமை.

சுடானிய பூர் இனவழிப்புகள் இலங்கையின் தமிழினப் படுகொலைகளோடு மிக அச்சொட்டாகப் பொருந்திப்போகிறவை. அரசுகளின் நடத்தை முறைகளும்கூட ஒன்றைப் பார்த்து ஒன்று செய்ததுபோன்ற ஒத்ததன்மைகள் கொண்டவை. சுடான் வேறு நாடுகளின் இனப்படுகொலைகளிலிருந்து வேண்டுமான அறிவைப் பெற்றிருக்க முடியும். அதுபோல் சுடானின் இனப்படுகொலைச் செயற்பாடுகள் சிறீலங்கா அரசுக்கு மிகுந்த தொழில்நுட்பரீதியான அறிவைக் கொடுத்திருக்க முடியும்.

அரசுகளுக்கான பொருள் வள, ஆயுதவள உதவிகளை அந்தந்ந நாடுகளில் தம் வியாபார மற்றும் நலவுரிமைகளை விரும்பிய நாடுகளே செய்திருக்கின்றன. சுடான் அரசுக்கு கொங்கோ, உகண்டா, எதியோப்பியா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் உதவிசெய்திருக்க, சிறீலங்கா அரசுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் உதவிசெய்தன.

1972இல் சுடான் அரசுக்கும் பிற ஆபிரிக்க தேசங்களுக்குத் தப்பியோடிவிட்ட எதிர்க்கட்சியின் போராட்டக் குழுக்களுக்குமிடையே ஓர் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது. அதுதான் எதியோப்பியாவின் அடி அபாபாஸ் நகரில் கையொப்பமிடப்பட்ட ‘அடி அபாபாஸ் சமாதான ஒப்பந்தம்’. இதுபோலவே இனயுத்தத்தின் மூர்க்கமறுக்க வடஅய்ரோப்பிய நாடுகள் எடுத்த முயற்சியினால் இலங்கை அரசுக்கும் போராளிக் குழுவுக்குமிடையே ஓர் ஒப்பந்தம் எட்டப்படுகிறது.

1983 ஜுன் மாதத்தில் அடி அபாபாஸ் ஒப்பந்தத்தை ரத்துசெய்கிறது சுடானிய அரசு. அதுபோல் எட்டப்பட்டிருந்த சமாதான உடன்படிக்கையைக் கிழித்தெறிந்துவிட்டு யுத்தத்தைத் தொடர்கிறது சிறீலங்கா அரசு.

Don Cheadle, John Prendrgast  ஆகியோர் எழுதிய NOT ON OUR  WARWATCH  என்ற நூல் ‘In it's  war with SPLA (Sudan People's Liberation  Army) the  government skillfully engineered  ethnic splits  within the rebels and encouraged a war within  war’ என்று சுடானிய நிலைமையை வர்ணித்தது. சிறீலங்கா அரசு இணைந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரித்து பிரதேசவாரியான பிரிவினைவாதத்துக்குத் தூபமிட்டது.

இவ்வாறு பல ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டே போகலாம். ஆனால் இங்கு சுட்டியுணர்த்தப்படவேண்டிய ஒரே விடயம், இனவழிப்பில் ஈடுபட்டிருக்கும் எந்த நாடும், அதை முன்னெடுத்திருந்த இன்னொரு நாட்டின் வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து தமது அழிப்பு அறுவடையை திறமையாகச் செய்கின்றது என்பதே.

இதற்கெதிரான ஒரு குரல் அவசியமானது மட்டுமில்லை, அவசரமானதும்.
போர்க் குற்றத்தைச் செய்தது மட்டுமில்லை, இனவழிப்பென்ற மாபெரும் குற்றத்தையே சிறீலங்கா அரசு நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இதன் ஆயுள் அரை நூற்றாண்டுக்கும் சற்று மேலேயே இருக்கும். எனினும் அதன் கொடுநகக் கரங்கள் தீவிரமாய் இறங்கியது இருபத்தோராம் நூற்றாண்டின் இறுதிப் பத்தின் கடைசிக் கட்டத்திலேதான். இந்த இனவழிப்பென்பது கொலைகள், வன்புணர்ச்சிகள் என்பவையோடு மட்டும் முடிந்துவிடுபவையல்ல. உடல் மன நிலைகளைப் பாதிக்கும் துயரங்களை ஏற்படுத்துதல், திட்டமுடன் வாழ்நிலை மாற்றங்களை உருவாக்கி முழுவதுமான இனத்தை அல்லது அதன் ஒரு பகுதியை அல்லலுறவைத்து அழித்தல், பலவந்தமாக சிறுவர்களை பெரும்கூட்டத்திலிருந்து பிரித்துத் தனிமைப் படுத்தல் போன்றவையும் இனவழிப்பாகவே கருதப்படுகிறது. Genocide என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த இனவழிப்பென்பது, மனிதாயதத்துக்கெதிரான குற்றங்களிலிருந்தும், மக்களினத்தின்மீதான வன்முறைக் குற்றம் என்பதிலிருந்தும்கூட வேறானது. ‘Genocide is an exceptional crime ’. அது சர்வதேசத்தின் சட்டப்படி மகத்தான குற்றம். ஆயினும் சர்வதேசமும் ஏதோ ஒருவகையில் இனப்படுகொலைகளின்மீதான மவுனத்தைக் காத்துநிற்கிறது.

இந்த மவுனம் உடைக்கப்படவேண்டும்.

இன்றைய அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா ஒருபோது செனட்டராயிருந்தவேளை செனட்டர் சாம் பிரவுண்பாக் என்பவருடன் சேர்ந்து எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டார், ‘Genocide is an exceptional crime. It will only  be overcome  if  'extraordinary and ordinary’ voices  unite to summon the world's leaders to action’ என்று. இதை நினைவுகொண்டு இந்த உரைக்கட்டை முடித்துக்கொள்ளலாம்.

00000

வைகறை, பிப்.2010

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்