‘மூன்றாம் சிலுவை’

ஒரு பாவி அறையப்படுவதிலிருந்து
விலகி ஓடிவிட்ட சிலுவை
‘மூன்றாம் சிலுவை’ நூல் குறித்து சில
விமர்சனக் குறிப்புகள்


நாவல் என்ற முத்திரையோடு வெளிவந்திருப்பினும் நாவல், குறுநாவல் என்ற எந்தவித வகைமைப்பாடுகளுக்குள்ளும் அடங்காது, சில சம்பவங்களின் சேர்த்தியான ஒரு நீண்ட கதையென்பதே சரியான இதன் அடையாளமாகும். ‘மூன்றாம் சிலுவை’ சொல்லுகின்ற செய்தி, அந்தச் செய்தியின் பின்னணியான நிகழ்வுகளைவிடவும், நூல் கொண்டிருக்கக்கூடிய கட்டமைப்பின் விஷயங்களே முக்கியமானவை.

இதன் கட்டமைப்பு பலஹீனமானது என்பதோடு, இதிலுள்ள கவிதைகளின் சேர்த்தியும், நாட்குறிப்பின் மூலமான நிகழ்வுகளின் தெரிவிப்பும்கூட எதுவித நன்மையையும் செய்துவிடவில்லை என்பது கவனிக்கத் தக்கது. இதை ஒரு நாவலாக்கும் அத்தனை முயற்சிகளும் இதில் தகர்ந்தே கிடக்கின்றன.

பாலியல் சார்ந்த விஷயங்களையும், பாலியல் நிகழ்வுகளையும் எழுதக்கூடாதென்பதில்லை. தமிழிலக்கியத்தின் இறுகிப்போயுள்ள மரபார்ந்த ஒவ்வொரு முறிப்பையும் கரகோஷத்தோடு வரவேற்க தீவிர வாசக உலகம் தயாராகவே இருக்கின்றது. எஸ்.பொ.வின் ‘தீ’ அப்படித்தான் வரவேற்புப் பெற்றது. ஆனால், அது ஒரு தேவையின் அளவுக்கே தொடர்ச்சியைக் கொண்டிருக்கும் என்பதிலும் அதற்கு நிறைந்த நம்பிக்கையுண்டு.

ஆனால், ‘மூன்றாம் சிலுவை’ ஒரு முறிப்பின் திட்டமிட்ட முனைப்பாகச் செயல்வடிவம் பெற்றிருப்பது தெளிவாகவே தெரிகின்றது. பெருந்திணை வகையான பொருந்தாக் காமமாக பிரபஞ்சன் தன் முன்னுரையில், இந்த மாதிரியான வயது இடைவெளி அதீதமாகவுள்ளவர்களிடையே தோன்றும் பாலியல் உறவுகளை அடையாளம் காண்பினும், இது பெருந்திணையை மீறிய வெறும் உடலுறவாகிவிடும் பெருங்காமம் வகைப்பட்டதுதான்.

வயது இடைவெளி அதிகமான உறவுகள் தமிழிலக்கியத்தில் பேசப்பட்டது இதுவே முதல் முறையும் அல்ல. ஜெயகாந்தனின் ‘கருணையினால் அல்ல’, ‘சமூகம் என்பது நாலு பேர்’ போன்ற குறுநாவல்கள் தொட்ட தூரத்தை இதுவரை தமிழில் வேறு எந்த இலக்கியவடிவத்திலும் இவ்விஷயம் தொட்டிருப்பதாக என் வாசிப்பு அனுபவம் எனக்குக் காட்டவில்லை. மார்க்வெய்ஸின்Memories of my Melancholy Whores ம், ஜே.எம்.கோட்ஸீயின் Disgrace ம் நாவல்களில் காட்டிநின்ற உடலுறவின்பாற்படும் காதலுறவின் விவகாரங்களை நாம் ரசித்து ரசித்து வாசிக்க முடியும். அத்தனைக்கு அவை இலக்கியமாக்கப்பட்ட அற்புதங்கள் அந்த நாவல்களில் இடம்பெற்றிருக்கும். ஆனால் ‘மூன்றாம் சிலுவை’ உள்ளடக்கக் கனதியற்ற வெறும் உடலுறவின் அதிதீவிர உணர்ச்சி விழைச்சலை மட்டுமே காட்டிநிற்கிறது.

ஐம்பத்திரண்டு வயதில் விஜயராகவனுக்கு, அவரைவிட இருபது வயது குறைவான மகளளவு வயதாகும் ஜுலிமேல் ஈடுபாடு வருகிறது. வாராவாரம் காமத்தை அவர்கள் மிக அழகாகவே அனுபவித்து எட்டாண்டுகளைக் கழிக்கிறார்கள். தன்னுடைய நிலைமையின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ஜுலியின் மனத்தில் விழுகிற முதற்கணத்தில், அவர்கள் தொடர்ந்தும் சந்தித்து உடல்ரீதியான வேட்கைகளைத் தீர்த்துவருகிறபோதிலும், ஓர் இடைவெளி விழுந்துவிடுகிறது என்பதுதான் உண்மை.

தனது பணத்துக்காகவா தன்னுடனான அவளது உறவு என்று விஜயராகவன் கேட்கிறபோது, அது அப்படியல்ல என்ற பதிலையே ஜுலி சொல்கிறாள். அதை எதுவிதமான மறுசிந்தனையுமின்றி தூக்கிப்பிடித்துக்கொண்டு அலைகிறார் விஜயராகவன். அதுமட்டுமல்ல, தனது முந்திய இரு திருமணங்களும் தோல்வியில் முடிந்ததான புலம்பல் வேறு. தானும் தன் மூன்று பிள்ளைகளோடு ஒட்டில்லை, பிள்ளைகளும் தன்னோடு ஒட்டில்லையென்ற ஒப்புமூலத்தையும் அவர் தருகிறார். ஆனால் அவை அப்படித்தானா என்று ஒரு வாசகனைச் சந்தேகப்பட வைத்துவிடுகிறது ஒரு நிகழ்வு.

ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலியில் வைத்து விஜயராகவன் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்படுகையில், ‘என்னுடைய மனைவி யசோதாவும், உறவுகாரப் பையன்கள் இருவரும் சக்கர நாற்காலியை ஒட்டியபடி வந்துகொண்டிருந்தார்கள். பயத்தையும் துயரத்தையும் மறைக்க யசோதா எவ்வளவுதான் முயற்சியெடுத்தபோதும் கண்கள் அவற்றை சாத்தியமில்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தன’ என்ற வரிகளில் யசோதாவின் அன்பின் நிஜத்தை யாரும் சந்தேகிக்க முடியாதிருக்கும்.

விஜயராகவனின் காமவெறிக்கு சரியான இணையாகக் கிடைத்தவள்தான் ஜுலி. அவள் தன் வெறியைத் தீர்க்க விஜயராகவனைப் பயன்படுத்திக்கொண்டாள் என்பதுதான் கதையிலுள்ள உண்மை. விஜயராகவனின் தன்னிலை வாயிலான கதைகூறலில் படைப்பு நகர்ந்திருப்பதால், ஜுலியின் எண்ணங்களையும் நியாயங்களையும் வாசகன் தானாகவேதான் ஊகம்கொள்ளவேண்டியதிருக்கிறது. விஜயராகவனின் கூற்றை வைத்துக்கொண்டு ஜுலியின் நியாயங்களை அவன் தூக்கியெறிந்துவிட முடியாது. ஜுலியின் நியாயங்கள் ஒரு பெண்ணாக வேறாகவே இருக்கமுடியும்.

இன்னொரு முக்கியமான விஷயம், தான் மூன்றாவது சிலுவையொன்றில் அறையப்படுவதாக விஜயராகவன் நினைப்பதிருக்கட்டும், முந்திய இரண்டு சிலுவைகளிலிருந்தும் அவர் எவ்வாறு தப்பினார் என்பது தெரிவிக்கப்படவே இல்லை நூலில்.

கதை முழுவதும் ஜுலி ஒருவகையான Sadistic காமவுணர்ச்சி கொண்டிருப்பதை மெல்லியதான அவளது சில விருப்பங்களின்மூலம் அறியமுடியும். இருவரும் நிர்வாணமாகிய நிலையில், ‘அவனைக் கட்டிலிலிருந்து இழுத்து கீழே இறக்குகிறாள் (ஜுலி). முதுகில் வைத்து என்னைச் சுமவுங்கள் என்கிறாள். அவன் இடுப்பைக் கால்களால் வளைத்து அவனுடைய முதுகுப்புறமாக நெஞ்சை அழுத்தியபடி ஏறி உட்கார்ந்துகொள்கிறாள். பித்தக் கொம்புகள் தலையில் முளைத்த இரண்டு கோமாளிக் குரங்குகளைப்போல அவர்கள் அறையைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அவள் கெக்கலித்துச் சிரிக்கின்றாள்’ என வரும் இடம் (நூல் பக்: 32) அவர்களது காமத்தின் வகைப்பாட்டினைச் சொல்லிவிடுகிறது.

இது தவிர வேறு சந்தர்ப்பங்களிலும் அவளை உப்புமூட்டைபோல் சுமந்துகொண்டே விஜயராகவன் படுக்கையறைக்குச் செல்வதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். விஜயராகவனிடமே ஒருவகைக் குரூர காம விழைச்சல் இருப்பதின் வெளிப்பாடுதான் இது. ஒருபோது அவளது விருப்பமில்லாமலே ஒருவகை வல்லுறவுப்பாணியில் அவளை அனுபவிக்கிறார் அவர். இத்தனைக்குப் பிறகும் காதலென்ற முகமூடியை விஜயராகவன் கழற்ற மறுப்பது ஏன்? ஜுலியின் துரோகமான புலம்பல் ஏன்?

தனது வயது ஒரு பிரக்ஞையில் அவரிடம் எப்போதும் இருந்துவந்திருக்கிறது. ஜுலியின் இளமை அதை அவ்வப்போது தூண்டிக்கொண்டே அல்லது சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்திருக்கிறது. அதனால்தான் எப்போதும் தனக்கு ஐம்பத்திரண்டு வயது, ஐம்பத்திரண்டு வயது என்று அவர் குழறிக்கொண்டிருக்கிறார். ‘எனக்கு ஐம்பத்திரண்டு வயது. போதுமாடா சாமி’ என்றே ஒரு தருணத்தில் கத்துகிறார். விஜயராகவன் நினைத்ததுபோல வயது காமத்துக்குச் சரி, காதலுக்குச் சரி ஒரு பொருட்டே இல்லை. ஐம்பத்திரண்டிலல்ல, அறுபத்திரண்டில்கூட இந்தமாதிரியாக இன்றும் நடந்துகொண்டு இருக்கின்றது.

இந்தமுறையான உடலுறவு விழைச்சல் தொடர்பில் ஒரு புள்ளி என்றோ விழத்தான் செய்யும். சேடிஸ்டிக் மனநிலையோடு குடும்பமான உறவை அனுபவித்துவிட முடியாது. இதிலிருந்து திரும்புதல் என்பது ஒரு நோயிலிருந்து குணமாதல் போல்தான். இந்த மனநிலையிலிருந்து ஜுலி விடுபட்டுவிட்டாள் எனக் கொண்டால், விஜயராகவன் விடுபடவில்லை என அர்த்தமாகிறது. தானுமே ஒருகாலம் படைப்பாளியாக, இன்னும் பல எழுத்தாளர்கள் கவிஞர்களை சமகாலத்தில் நண்பராகவும் பெற்றிருக்கும் விஜயராகவன், இந்த வகைப்பாடான உடலுறவு விவகாரத்தில் எப்படி புரிதலற்றும், இதையே காதலென்னும் மயக்கமும் கொண்டிருந்தார் என்பது அதிசயமானது. ஜுலி இதைப் புரிந்துகொண்டாளோ இல்லையோ, விடுபட்டுக்கொண்டாள் என்றுதான் வாசகனொருவனால் கொள்ளமுடியும்.

பாவிகளே சிலுவையில் அறையப்படுவார்கள். அதை விரும்பாத ஒரு சிலுவை என்றோ ஒருநாள் அதிலிருந்து தப்பி ஓடிவிடலாம். அதை அது தன் புனிதத்தைக் காப்பதற்காக எடுத்த செயற்பாடாகவே கொள்ளவேண்டும். ஜுலி விஷயத்தில் புனிதமென்று எதுவுமில்லை, ஆனால் தான் வாழவேண்டிய முறையைத் தீர்மானிப்பதற்கும், தன்னை வைப்பாட்டியாகவே காலம் முழுக்க வைத்திருக்கும் நினைப்பை நிராகரிப்பதற்குமான அவளது உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை.


00000


தூறல் இதழ்  &
காற்றுவெளி.காம்,

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்