தேவகாந்தன் பக்கம் 2





தற்பாலியர்


கடந்த மாதம் (கார்த்திகை, 2010 ) 19ம் திகதி மாலையில் ஒரு வட்ட நண்பர்களாலும், அதற்கு அடுத்தடுத்த இரு நாள்களிலும் ‘பன்முக வெளி’யை நடாத்திய நண்பர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில், தன்பால் புணர்ச்சியாளர் குறித்த விவகாரம் விசாரிப்புச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களாதலால் செல்லுவதாக எனக்குத் திட்டமிருந்தது. கடைசியில் முடியாது போனது.

சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களான விபசாரர்கள், குற்றவாளிகள், தன்பால் புணர்ச்சியாளர், அரவாணிகள் மீதான விஷயங்களில் எனக்கு இயல்பாகவே ஈடுபாடு இருக்கிறது. அதனால் கூட்டத்துக்குச் செல்லமுடியாது போனமை எனக்கு வருத்தமே.
கூட்டங்கள்பற்றிய அறிவிப்புகள் தெரிந்ததுமே, அந்தப் பொருளைச் சுற்றியே மனம் அலைந்துகொண்டிருந்ததில், ‘தற்பாலியர்’பற்றிய விவகாரத்தையே மார்கழி மாத ‘தாய்வீ’ட்டுக்கு எழுவதற்கான விஷயமாக எடுத்துக்கொள்வதென்று எனக்குத் தீர்மானமாகியிருந்தது.

நான் எழுதக்கூடிய விஷயம் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதுவிதத்திலாவது முரணாகிவிடுமோ என ஆரம்பத்தில் எனக்கு எழுதத் தயக்கம். இது கருத்து மாறுபாடுகளை எதிர்கொள்வதற்கான கருத்துப் பலஹீனத்தின்பாற்பட்டதல்ல. மாறாக, கருத்தை வெளிப்படுத்துவதிலான சுயகட்டுப்பாடு, தார்மீகக் கடமைகளின்பாற்பட்டது மட்டுமே. ஆனால், கூட்டங்களுக்கே நான் செல்லாதிருந்ததால், அந்தத் தயக்கம் வெகுநேரம் நீடிக்கவில்லை. ஒன்றின் எதிர்வினையாக இது இல்லை. என் கருத்து சுயமானது. தற்செயலாக அங்கே தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிரானதாக இருப்பின் அது எதிர்பாராதவிதமானது.

இதுபற்றி, நான் எதையாவது எழுத ஆரம்பிக்கும் முன்னர் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிட விரும்புகிறேன். வாலைவிட்டு தும்பைப் பிடிக்கிற கதையாக எதுவும் வெடித்தெழுந்துவிடக்கூடாது என்பதால் நான் கொஞ்சம் இயல்பாகவே முன்யோசனைக்காரன். விளிம்புநிலை மக்களான இவர்கள்மீது என் சார்பும் அக்கறையும் நிச்சயமானது. தீவிரமானது. இவற்றை மீறி இவர்களில் சிலவகையானவர்களுடன் எனக்கு பல்வேறு தருணங்களில் பழகுவதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இவர்களது வாழ்நிலைமையின் நேரடித் தரிசனம் என்னை அதிரவே வைத்திருக்கிறது.

இந்த அதிர்வு என் இளமைக் காலம் முதல் என்னைத் தொடர்ந்து வந்திருப்பதாக வேறு எண்ணமெழுந்திருக்கிறது. ஜோன் லெனான் என்ற எனக்குப் பிடித்தமான ஒரு பொப் பாடகர் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த கணத்தில் ஏற்பட்டதைவிட, அவர் ஓர் இருபாற் புணர்ச்சியாளர் என்பதை அறிந்தபோது நான் அதிகமாக அதிர்ச்சியடைந்தேன். ஆனாலும் அவரது பாடல்கள்மீதான பிடித்தம் நாளடைவில் திரும்பவே என்னை வந்தடைந்திருக்கின்றன.
எனக்குப் பிடித்தமான பழைய ஆங்கிலப் பாடல்களில் ‘I love you more than Ican say’ என்ற லியோ சேயரின் பாடலும் ஒன்று. லியோ சேயர், காதலின் நுண்மையின் ரகசியக் கூறுகளை அந்த ஒரு பாடலிலேயே வெளிப்படுத்திவிட்டதாக நான் பரவசம் கொண்டிருந்தேன். அதனாலேயே லியோ சேயர் ஒரு கதாநாயகப் பாடகன் நிலைக்கும் உயர்ந்திருந்தார். ஆனால் அவர் ஒரு தற்பாற் புணர்ச்சியாளர் என அறிந்த கணமே நான் அளித்திருந்த அந்த உயர்ந்தபீடம் அரை நொடியில் சிதறிப்போனது.

ஆனால் இன்றைக்கும் எனக்குப் பிடித்த ஆங்கிலப் பாடல்களில் வெளிப்படுத்த முடியாத காதலின் வலியைச் சொல்லும் பாடலாக அதுவே நின்றுகொண்டிருக்கிறது. கெனி றோஜர்ஸ{க்கு ஈடாக லியோ சேயரும் என் மனத் தவிசில் இருந்துகொண்டிருக்கிறார்தான்.
இந்த அனுதாபங்களும் பிடித்தங்களும் என் கருத்துநிலை சார்ந்தவை என்றபோதிலும், இது தனிமனிதப் பிரச்சினை மட்டுமில்லை, சமூகப் பிரச்சினையும்தான் ஆகும் என்ற புரிதல் எனக்கு இருக்கிறது. அதனால் விபசாரர்கள், குற்றவாளிகள், அரவாணிகள்போல தற்பாற் புணர்ச்சியாளர்களை எளிதில் என்னால் வரவேற்றுவிட முடியாதிருக்கிறது. அது ஒரு தனி மனித பிரச்சினையே எனினும், அதையும் மீறி அது ஒரு தனிமனித வக்கிர நிலையை அடைந்து வருவதால், இது சமூகப் பிரச்சினையும்தான்; ஆகின்றது என்பதே என் திடமான கருத்து.

தனிமனிதனா, சமூகமா என்ற ஒரு கேள்வி வருகிறபோது என்னால் சமூகத்தின் சார்பாகவே பேச முடியும்.

ஒவ்வொரு சமூக மாற்றமும் அதன் முந்திய சமூக அமைப்பைவிட முற்போக்கானதுதான். நிலப்பிரபுத்துவ சமூகத்தைவிட முதலாளித்துவ சமூகம் முற்போக்கானதென்பதில் எள்ளளவும் ஐயமே இல்லை. ஆனாலும் முதலாளிய சமூகம் அதனளவில் தன் குறைகளையும் கொண்டேதான் இருக்கிறது. அதனுடைய மூச்சு தனிமனிதத்துவமாகும். அதிலிருந்தே தன் பிராணவாயுவை அது பெற்றுக்கொண்டிருக்கிறது. ரத்தம் சுத்திகரிப்பாகிறது. தீங்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

நிலப்பிரபுத்துவத்தின் அம்சமாக இருந்த கூட்டுக் குடும்ப வாழ்முறை முதலாளியத்தின் வருகையோடுதான் சிதறியது. அது நல்லது. முன்னேற்றமானதும்கூட. ஆனாலும் தனிக் குடும்ப வாழ்முறைக்கான அதி உச்சபட்ச விதிகளை வகுத்தது மேலைத் தேசம். இன்று தற்பாற் புணர்ச்சியையும் அது தனிமனித சுதந்திரமென்கிற திரையின் பின்னணியாகவே முன்மொழிகிறது.

தற்பாற் திருமணத்தை அங்கீகரித்த நாடுகளில் இரண்டாவதானது கனடா. அது நல்லது. அந்தளவுதான் அந்த விவகாரத்தில். சமூக அக்கறை அதை எதிர்க்கிற அளவு செல்லவேண்டியதில்லை. அதை தனி மனிதர்களின் விருப்புச் சார்ந்த ஒரு விஷயம்மட்டுமாக எடுத்துக்கொண்டு ஒதுக்கிவைப்பதுதான் விவேகம்.
ஆனால் அதை ஒரு வாழ்முறையின் அம்சமாகப் பிரச்சாரப்படுத்துவதுபோன்ற எந்த முயற்சியையும் எதிர்ப்பதைவிட இதில் ஒரு ஜனநாயக முற்போக்குவாதிக்கு வேறு வழியில்லை.

அது விபச்சாரம்போல் மிகப் புராதனமானது. சுயவின்பத் திருப்திப்படுதல்போல் உயிரின இயல்பானது. ஆனாலும் விபச்சாரத்தில் ஒரு சமூக அநீதியின் கூறு ஒட்டிக்கொண்டிருக்கும். சுயவின்பதாரியிடம் தேக, மன அடக்குதல்களின் விடுபடுதல் என்ற முத்திரை இருக்கும். தன்பாற் புணர்ச்சியாளரிடத்தில் மனோவிகாரத்தின் கூறுமட்டுமே காணக்கிடக்கும்.
வெற்றிலை, புகையிலை, கள்ளு வரைக்கும் விகல்பம். கஞ்சாவும் அபினும் இடைநிலை. மறுப்பதற்கும் ஒத்துக்கொள்வதற்குமான நிலை. அதுபோல் கொக்ஹெயினும், ஹெராயினும் கருதப்படுவதில்லை.

அடைக்கப்பட்ட, அடக்கப்பட்ட மனித இச்சையின் எறியத்தில் வளர்ந்து படர்வது சுயஇன்பமும், தன்பாற் புணர்ச்சியும். எனினும்தான் அதை அந்தளவில் வைத்து புரிதலை வளர்க்க மட்டுமே ஒரு சமூகவியலாளன் செய்ய முடியும். இதற்கு மேலே இச்சைகளின் கடும்கூத்தை, அதை இச்சிப்பதற்கான முயற்சிகளை வக்கரித்ததாய் நிராகரிக்க ஒரு பொதுஜனத்துக்கு எப்போதும் உரிமை உண்டு.
000

Comments

இந்தக் கட்டுரை குறித்த எனது கருத்துக்களை ஒரு எதிர்வினையாக எழுதி உள்ளேன்

http://solvathellamunmai.blogspot.com/2010/12/blog-post.html
ஒரு மூத்த மிக சிறந்த இலக்கியவாதியின் கட்டுரையாக உங்கள் கட்டுரை தோன்றவில்லை.
எந்த வகையிலும் இது சமூக அக்கறையை விட தனி மனித அனுமானங்களால் எழுதப்பட்ட கட்டுரை போலவே எனக்கு தோன்றுகிறது.
தனி மனித வக்கிரமாக தன்பால்விழைவை குறிப்பதற்க்கு முன்னால் அதன் உயிரியல்/மனோதத்துவ கூறுகளை கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள மெனக்கெட்டீர்களா?
பொதுப்படையாக அதிர்வான வாழ்க்கை முறை என முன்வைக்கும் போது அது என்ன என குறிப்பிடாமல் போவது எப்படி ஒரு நல்ல சமூகவியற் ஆய்வாகும்?
உங்கள் தனிப்பட்ட வாழ்வனுபவம் தன்பாலினரின் சில தவறான வாழ்க்கை முறையை கண்டு அமைந்திருக்கலாம். ஆனால் அதை சமூக சிந்தனையாக முன்வைக்கும் போது அதனை தீவிர ஆய்வுக்கு பின் தானே ஒரு பொறுப்பான இலக்கியவாதியாக முன் வைக்க வேண்டும். இப்படி பொத்தாம் பொதுவாக தீர்ப்பு வழங்கினால் எப்படி? உங்கள் கட்டுரை ஒரு நியாயமான விவாதத்திற்க்கு கூட இடமளிக்காமல் இறுதி முடிவாக முடிகிறது
உங்களுக்கு பிடித்த இசை கலைஞர்கள் தன்பாலினர் என தெரிந்த மாத்திரத்தில் உங்கள் மனமுடைகிறது என்றால் உங்களிடம் தனிப்பட்ட உளவியல் ஒவ்வாமை தன்பால் விழைவின் மேல் இருப்பது புரிகிறது. அப்படியிருக்க அதையே இக்கட்டுரையின் தனி மனித சார்பற்ற சமூக அக்கறைக்கான காரணமாக முன்வைப்பது அபத்தமாகவே தோன்றுகிறது.
இன்னும் இன்னும் என சொல்ல நிறைய உள்ளது. இக்கட்டுரை யாரோ ஒருவரால் எழுதப்பட்டிருந்தால் மற்றுமொரு கட்டுரை தான்.
ஆனால் நவீன இலக்கியத்தின் முக்கிய ஆளுமையிடமிருந்து வந்திருப்பது இக வருந்தத்தக்கது.
அத்தகு ஆளுமையை நான் விமர்சிக்கும் அளவு சங்கடமான நிலைமை இன்னும் உள்ளார்ந்த வருத்தமளிக்கிறது

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்