இலக்கியச் சந்திப்பு 3 ‘காலம்’ செல்வம் அருளானந்தம்
இலக்கியகாரனாக இருப்பது வரமா சாபமா என்று தெரியாமல் ஒரு விடயம் நடந்துகொண்டே இருக்கிறது எழுத்து: கௌசலா சந்திப்பும் வடிவமைப்பும்: தேவகாந்தன் 1. புலம்பெயர்வதற்கு முன்னால் ஈழத்தில் உங்கள் இலக்கிய ஆர்வங்கள், ஈடுபாடுகள் எவ்வாறு இருந்தன, இலக்கியம் தவிர்ந்து பிற கலையார்வங்களுக்குக் காரணமாயிருந்தவை எவை என்பதிலிருந்து இந்த நேர்காணலை நாம் ஆரம்பிக்கலாம். முதலாவது இந்த நேர்காணலில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. ஏனென்றால் இதுவரை நாம் எதைச் சாதித்திருக்கிறோம் என்ற கேள்வி முன்னால் வந்து ஒரு இடைவெளியாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் நட்பார்ந்த நிலையில் அதை மறுக்கவும் முடியாது. இதுதான் என்னுடைய முதலாவது நேர்காணலாக இருக்கிறது. ஈழத்தில் இருக்கும்போது நான் ஒரு வாசகன் மட்டும்தான். வாசகன் என்று சொல்லப்போனால் தீவிரமான வாசகன் என்றும் சொல்வதற்கில்லை. வாசிக்கும் சூழ்நிலை வீட்டில் இருந்தது. அம்மா ஒரு பெரிய வாசகி. அதனால் வழமைபோல கல்கி, சாண்டில்யன், அகிலன், குமுதம், ஆனந்தவிகடன், ஈழத்தில சுதந்திரன், சுடர், வீரகேசரி இப்படியான சஞ்சிகைகளை வாசிக்கும் ஒரு சராசரி வாசகனாகவே இருந்தேன். நான் ஒரு கத்தோ...