Tuesday, January 20, 2015

‘சாதலின் இன்னாதது இல்லை’


எஸ்பொவின் மரணம் 
நண்பனாயும் இலக்கியவாதியாகவும் 
பெரிய இழப்பு
-தேவகாந்தன்

இம் மாதம் இருபத்தாறாம் தேதி மாலையில், வடமாகாணத்தைப் பிறப்பிடமாகவும் கிழக்குமாகாணத்தை வாழிடமாகவும் கொண்டிருந்து அவுஸ்ரேலிய குடிமகனாகியிருந்த எஸ்பொ என பரவலாகத் தெரியவந்திருந்த எஸ்.பொன்னுத்துரையின் மரணம் சிட்னி மருத்துவமனையில் நிகழ்ந்தது.

அவுஸ்திரேலியாவில் சிட்னி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்தபோதே அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததாக செய்திகள் வந்திருந்தன. அதனால் அவரது மரணம் ஒருவகையில் பேரதிர்ச்சியைத் தந்ததாய் இல்;லாவிடினும், ஒருபெரும் இழப்பை அது ஓங்கி அறைந்துகொண்டு நிற்கிறது. அதுவே ஒரு அதிர்ச்சியாகத்தான் தோன்றுகிறது.
1932இல் பிறந்த எஸ்.பொன்னுத்துரை ஆரம்பகாலத்தில் யாழ். புனித பற்றிக்ஸிலும், பின் பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியிலும் தனது கல்வியைத் தொடர்ந்து  பி.ஏ. படிப்பை முடித்தார். தொடர்ந்து அவர் ஆசிரிய நியமனம்பெற்று கடமையாற்றிய இடம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்கிளப்பு.
 
அதனால்தான் எனது ஆசிரியர் என்று காசிஆனந்தனிலிருந்து எஸ்.எல்.எம்.ஹனீபாவரை பலரும் போற்றுகின்ற நிலையை அவர் எய்தினார்.
அனுர, மித்ர, இந்ர, புத்ர என்று நான்கு ஆண் மக்களும் ஒருபெண்ணும் எஸ்பொவுக்கு. ஆண்களில் மித்ரவை இலங்கையில் போரிலும், புத்ரவை இந்தியாவில் ஒரு விபத்திலுமாய்ப் பறிகொடுத்தார். நைஜீரியாவில் வேலைபார்த்த பின் அவுஸ்திரேலியாவில் குடியேறி ஒரு சிறியகாலத்தின் பின் 1994 அளவில் பெரும்பாலும் தமிழ்நாட்டிலேயே அவர் வாழத் தொடங்கியிருந்தார். மித்ர பதிப்பகத்தை ஆரம்பித்ததும், தனதும் பிற ஈழ முதுபெரும் எழுத்தாளர்களதும் நூல்களை அச்சேற்றியதும் அக்காலப் பகுதியிலேதான்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் அவரது பிறப்பு வடமாகாணம் அளாவிய அறிமுகத்தையும், திருமணமும் ஆசிரியத் தொழிலும் உறைவிடவகையிலுமாய் அவருக்கு கிழக்கு மாகாணம் அளாவிய அறிமுகத்தையும், ‘இளம்பிறை’ ரகுமானுடனான தொடர்பு கொழும்பு தமிழ் இலக்கிய உலகத்தின் அறிமுகத்தையும் பெற்றுத் தந்திருந்தவேளையில், அவரது தமிழகத்து வாழ்வு தமிழகத்து அறிமுகத்தையும் கொடுத்து அவரைத் தமிழ் மண்கள் அளாவிய மனிதராக்கியது.

மிகச் சிறந்த எழுத்தாளர், சிறந்த விமர்சகர், சிறந்த பதிப்பாளர் என்றும் ‘காட்டா’னென்றும், ‘தன்னேரிலாத் தலைவன்’என்றும் அவரை வியந்தோதுகிறார்கள் பலரும் இன்று. ஆயினும் இந்நிலையினை அடைய அவர் கடந்துவந்த பாதை மிகமிகக் கடினமானது, வித்தியாசமானது.
‘வரலாற்றில் வாழ்தல்’ என்ற நூலை அவர் எழுதியகாலம் எனக்குத் தெரியும். அக்காலத்தில் நம் சந்திப்புகளின் பெரும்பகுதி அவரின் ஞாபக மீட்புக்களாகவே இருந்தன. அவரின் ஆரம்ப கால வாழ்க்கையிலிருந்து ஏறக்குறைய இரண்டாயிரமாம் ஆண்டுவரை சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் இரண்டு பாகங்களாய் தன்வரலாற்றை எழுதியிருக்கிறார் எஸ்பொ.
தீ, சடங்கு நாவல்களென்றும், வீ, ஆண்மை சிறுகதைத் தொகுதிகளென்றும், முறுவல், நனவிடைதோய்தல் என நாடக அனுபவப் பகிர்வுக்கானவையென்றும் அவருக்கு பரந்த படைப்புலகம். அதில் முதன்மையானவை அவரது ‘வரலாற்றில் வாழ்த’லும் ‘காப்பியச் சொற்பொழிவுகள்’ தொகுப்பும்தான்.

‘வரலாற்றில் வாழ்தல்’ எஸ்பொவின் அனுபவத்தை மட்டுமல்ல, அக்காலகட்டத்திய இலங்கையின் இலக்கிய வரலாற்று நிகழ்வுகளையுமே ஆவணப்படுத்துகின்றது. இந்த ஆவணப் பதிவாக்கமே என்னளவில் முக்கியம்.
கலாநிதி கா.சிவத்தம்பி, மற்றும் கலாநிதி க.கைலாசபதி மீதான எஸ்பொவின் காட்டம் வரலாற்றுப் பிரசித்தம். இந்தக் காட்டத்தை மேற்குறிப்பிட்ட இரண்டு கலாநிதிகளின் மறைவின் பின்னரும்கூட எஸ்பொ மாற்றிக்கொள்ளவில்லை. அந்த அடையாளம் அவரது மரணம்வரை அவரோடு ஒட்டிக்கொண்டிருந்தது.

‘தீ’ நாவலே அவரைப் பிரபலமாக்கியது. ஆயினும் காத்திரமான சிறுகதைகளைத் தந்துகொண்டிருந்தவர் என்ற பெயர் ஏற்கனவே நிலைத்திருந்தது. அவரது தேர், குளிர் போன்ற சிறுகதைகள் அற்புதமானவை.

 தீ நாவலை வாலிப வயதினர் வெளிவெளியாக வாசிக்கமுடியாத அளவுக்கு தசையுணர்ச்சிகள் அதிகமும் சார்ந்ததாய் இருந்தது. இன்பரசம், காமலீலைபோன்ற தமிழ்நாட்டின் குப்பை நூல்களைப் போலவே வாசிக்கப்பட்டிருப்பினும், அது தமிழ் இலக்கிய உலகில் ‘போர்னோ’ வகையான எழுத்துக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கச் செய்திருந்தது.
சடங்கு நாவல் தீ போன்றிருக்கவில்லை. எனினும் அது தாம்பத்திய வி~யங்களைப் பேசவே செய்தது. அது ‘சுதந்திரன்’ பத்திரிகையில் தொடராக வந்ததென்று ஞாபகம். அது தொடராக வந்ததாலேயே தன் சரஸ, சாஸ்திர அம்சங்களை விஸ்தாரமாகத் தொடாமலிருந்திருக்கலாம்.

இவ்வாண்டு (2014) ஆடி மாதத்தில் தமிழ்நாடு சென்றிருந்தபோது எஸ்பொவை மித்ர அலுவலகத்தில் நான் சந்தித்திருந்தேன். களைத்திருந்தார். பல வி~யங்களும் ஞாபகத்துக்கு வருகின்றதில்லை என்றார். அதனால் மொழிபெயர்ப்புகளையே அதிகமாகவும் செய்துகொண்டிருப்பதாகக் கூறினார்.
கூகி வாங் தியாங்கோவின் நாவலின் மொழிபெயர்ப்பான ‘தேம்பிஅழாதேபாப்பா’தான் அவரது முதல் மொழிபெயர்ப்பு நாவல். அதன் பின்னால் சுமார் பதினைந்து சிறந்த ஆபிரிக்க இலக்கியங்களை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அவையொன்றும் பெரிதாக வெளித்தெரிய வரவில்லை.

அவரது ஆழமான இலக்கியப் பங்களிப்பு அவற்றிலேயே இருக்கவும் கூடும்.
எஸ்பொவின் இழப்பை இப்போது உணரமுடிகிறது. ஆயினும், ‘வரலாற்றில் வாழ்பவன்’ மரணித்துவிடுவதில்லை. அவன் அமரத்துவம் பெற்றவன். எஸ்பொவும் அவ்வாறே. அமரன்!

0000

தாய்வீடு, ஜன. 2015

1 comment:

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...