Saturday, September 19, 2015

கலாபன் கதை:2-9


கடத்தல் கப்பல்


அதற்கொரு நீண்ட காலம் பிடித்திருந்தது. நினைப்பை மறக்க நினைக்கிறபோதே அது தீர்க்கமாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு மேலே மேலே வந்துகொண்டிருந்தது. இலங்கையில் இனக்கலவரம் நடந்து அப்போது எட்டு மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. வீடு போகிற எண்ணம் கலாபனின் மனத்துக்குள்ளிருந்து துடித்துக்கொண்டிருந்தது. புதிதாகக் கட்டி குடிபுகுந்திருந்த வீட்டைப்  பார்க்கக்கூட அவனுக்குப் போக இயலாதிருந்தது. பிள்ளைகளைப் பார்க்கிற தவனம் ஒருபக்கம். ஆனாலும் நாட்டைவிட்டு பெருவாரியான மக்கள் இந்தியாவுக்கும், ஜேர்மனிக்கும் பிரான்ஷுக்கும் தப்பி ஓடிக்கொண்டிருக்கையில், நிறைந்த வருமானமுள்ள ஒரு வேலையையும் விட்டுவிட்டு அந்த மண் பிறந்த மண்ணாகவே இருக்கும்போதிலும் திரும்பியோடிச் சென்றுவிட சுலபத்தில் மனம் உந்திவிடுவது இல்லை.

ஒவ்வொரு முறையும் பம்பாய் திரும்புகிற வேளைகளில்போலன்றி ஏனோ இப்போதெல்லாம் மனம் உவகையும், உடல் வீறும்கொள்ள பின்வாங்கிக்கொண்டிருந்தன. ஜெஸ்மினின் தொடர்பு ஒரு விலங்காக இறுகுவதற்கிருந்த கடைசி நிமி~ங்களில்தான் அதை அவனால் உணர முடிந்திருந்தது. அது அவளது எந்தத் திட்டமிடலில் விழுந்திருக்காதபோதும், அதை அவசரமாய்க் கழற்றிவிட்ட அவன் முடிவுசெய்தான். கடந்த இரண்டு மூன்று மாதங்களில் அதற்கான பூர்வாங்கங்களை அவன் இட்டிருந்தான்.

கப்பல் பம்பாய் வந்துசேர்ந்த அன்று மதியத்துக்குள்ளாகவே கப்பல் துறைமுகத்துள் சரக்கு ஏற்றியிறக்கும் மேடையில் கொண்டுவந்து கட்டப்பட்டுவிட்டது. கலாபன்  உடனடியாக அன்று வெளியே புறப்படவில்லை. போகவா, வேண்டாமாவென வெகுநேரம் யோசித்துக்கொண்டிருந்தான். பின் வி.ரி.ஸ்ரே~ன் பக்கமாக இல்லாமல் வேறெங்காவது செல்லலாமென எண்ணிக்கொண்டு புறப்பட்டு வந்தான். அந்தவகையில் அவனால் ஜெஸ்மினையும், நடாவையுமேகூட ஒதுக்கிவிட முடியும்.

அவன் இருள்விழ ஆரம்பித்த ஒரு பொழுதில் வெளியே வந்தபோது நடாவுடன் துறைமுக வாசலில் நின்றுகொண்டிருந்தாள் ஜெஸ்மின்.
கடந்த எட்டு மாதங்களில் ஓரிரு தடவைகள் அவள் அவ்வாறு வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் பேரானந்தமுற்று அவன் கொண்டாடிய கணங்களாயிருந்தன அவை. ஆனால் அன்று ஏனோ அவனுக்கு அது பிடிக்கவில்லை. ஆத்திரம் வந்தது. அவள் விலங்காக இறுகுவது உணர ஆரம்பித்திருந்தவனுக்கு வார்த்தைகள் அதற்குகந்ததாகவே சீறி வெளிவந்தன.

“ஜெஸ்மின், இந்தமாதிரி இங்கேயே வந்து வாடிக்கை பிடிக்கிற அளவுக்கு வந்துவிட்டாயா? கடந்த மூன்று மாதங்களாய் உன்னிலிருந்து விலக நான் ஒதுங்கி ஒதுங்கி ஓடிக்கொண்டிருப்பதை உன்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லையா? வாழ முடியாதென்று இலங்கைத் தமிழ்ச் சனம் வழி கண்ட நாடுகளுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மூன்று குழந்தைகளும் என் மனைவியும் எவ்வளவு மன உபாதைகள் அடைகிறார்களோவென்று நான் பகலிரவாய்த் துடித்துக்கொண்டு இருக்கிறேன். அம்மாவுடைய நினைவு வேறு. நீயோ நான் எல்லாவற்றையும் மறந்து இன்பப்பட்டே ஆகவேண்டுமென்பதுபோல் என்னை விடாப்பிடியாக கலைத்துக்கொண்டிருக்கிறாயே. எனக்கு இது உண்மையில் விளங்கவேயில்லை, ஜெஸ்மின். தயவுசெய்து என் மனநிலையைப் புரிந்துகொள். அப்ஸரஸ் வந்தால்கூட இந்த மனநிலையில் என்னால்
அவளோடு போய்ப் படுத்துவிட முடியாது. நீ இதை நம்பவேண்டும்’ என்றவன்,
அவள் சொல்ல வார்த்தையற்று வெட்கிநின்ற நிலை காணாமலே நடா பக்கம் திரும்பினான்: “அவளுக்குத்தான் தெரியாது, உனக்கென்ன வந்தது, நடா?
நீயேன் கப்பல் வாசல்மட்டும் அவளைக் கூட்டிக்கொண்டு திரியிறாய்?”
அவள் விம்மியது ஒருமுறை கேட்டிருந்தான். நடாவை ஏசிவிட்டு திரும்ப அவள் அங்கே இல்லை. சற்றுத் தள்ளியிருந்த பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பஸ்ஸில் அவள் ஏறிக்கொண்டிருந்தாள். தன்னைக் கடக்கும்போது பஸ்ஸை அவன் பார்த்தான். ‘நீயா, கலாபா, இது சொன்னாய்?’ என்று துடித்துக்கொண்டிருந்த அவளது இதயத்தை அவளது கண்களில் அப்போது கண்டான் அவன். உடனேயே அவள் வீட்டுக்கு ஓடிப்போய், ‘ஏதோ மன ஈறலில் இருந்தபடியால் அப்படிச் சொல்லிவிட்டேன். தப்பாக நினைக்காதே’ என்று சொல்லவேண்டும்போல் துடிப்பெழுந்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டான். கொடுமையாக இருந்திருப்பினும் அதை அவன் செய்தே ஆகவேண்டியிருந்தது. முடிக்கவேண்டுமென்றிருந்தது, முடிந்துவிட்டது, அவ்வளவுதான்.

அவனுக்கு அன்று போதையாகும்வரை குடிக்கவேண்டியிருந்தது. “நீ என்ன செய்யப்போறாய், நடா? இப்பிடியே அவளின்ர வீட்டை போப்போறியோ? இல்லாட்டி…”

“என்னண்ணை இது? உங்களைப் பாக்கப் போறனெண்டு சொல்லியிட்டு வர தானும் வாறனெண்டு கூடிக்கொண்டு வந்திட்டாள்… நானென்ன செய்யேலும்? வாருங்கோ போவம்.”

கலாபனும் நடாவும் ராக்ஸியில் போய்க்கொண்டிருந்தபோது நடா சொன்னான், “ நல்ல இடமாய்ப் போவமண்ணை. இண்டைக்கு என்ரை சிலவு” என்றான் நடா.

“என்ன நடந்தது, நடா?”

“சீமன் புத்தகம் வித்தது. ஒறிஜினல் புத்தகத்துக்கு நல்லவிலை போய்க்கொண்டிருக்கு இப்ப.”

கலாபன் ஒன்றும் சொல்லவில்லை.

குடித்துக்கொண்டிருக்கும்போது நடா வழக்கம்போல கலகலப்பாக இல்லையென்பது கண்டு கலாபன் காரணம் கேட்டான். அதற்கு, “ரண்டு மாசமாய் வீட்டிலை அம்மாவிட்டயிருந்து காயிதமில்லை, அண்ணை. யாழ்ப்பாணத்தில பெரிய பிரச்சினை எதுவுமில்லையெண்டாலும் மனம் அடங்கிக்கிடக்குதில்லை. நானும் இஞ்ச வந்து இப்ப நாலாவது வரியம் நடக்குது. இனி இஞ்சை நிண்டும் செய்ய ஒண்டுமில்லை. கடைசியாய் முயற்சி பண்ணி ஒரு ஐயாயிரம் ரூவாய் எடுத்திருக்கிறன். அதை வைச்சுக்கொண்டு கப்பலைப்பற்றி நான் நினைச்சுக்கூடப் பாக்கேலாது. மூண்டு தங்கச்சியளெனக்கு. கப்பலெடுத்து அதுகளைப் பாக்குமெண்டுதான் அம்மா தன்ர சங்கிலி காப்புகளை வித்துப்போட்டு காசு தந்தவா இஞ்சவர. எல்லாத்தயும் மறந்திட்டு பம்பாய் ஊர்ச் சாரத்தைக் குடிச்சுக்கொண்டு இனியும் நான் திரிஞ்சா அதுகளுக்குச் செய்த துரோகமாயிடும். எண்டாலும் என்ர நிலையை ஆர் நினைச்சாலும் இனி மாத்த ஏலாதெண்டுதான் தெரியுது. கடவுளும் கைவிட்ட ஜென்மமாய்த் வந்திட்டன். ஆனால்…  நீங்கள் நினைச்சா… அதை மாத்தேலும், அண்ணை.”

கலாபன் கடகடவெனச் சிரித்தான்: “நானென்னடா செய்யேலும்? என்ர குடும்ப நிலமை தெரியுமெல்லே உனக்கு? அதோட இப்பதான் வீடும் கட்டி முடிச்சிருக்கிறன்.”

“நீங்கள் நினைக்கிறமாதிரியில்லை, அண்ணை. உங்கட குடும்ப நிலமை எனக்குத் தெரியாதே? நான் கேக்கிறது அதில்லை. எனக்குத் தெரிஞ்ச சிநேகிதனொருதன் துபாயிலை ஒரு அமெரிக்கன் ரக்போர்ட் கம்பனியில வேலைசெய்யிறானண்ணை. எப்பிடியெண்டான்ன துபாயிலை வந்து இறங்கியிடு, அந்தக் கம்பனியிலயே வேலையெடுத்துத் தாறனெண்டு சொல்லியிருக்கிறான். இந்தமுறை கப்பல் போகேக்கை என்னையும் கொண்டுபோய் அங்க விட்டியளெண்டா சாகிறமட்டும் உங்களைக் கடவுளாய் நினைச்சுக் கும்பிட்டுக்கொண்டிருப்பனண்ணை.”

“விசர்கதை கதையாத, நடா. வெளியில தெரிஞ்சுதெண்டா என்ன நடக்கும் தெரியுமே? வேலை போறதெண்டாலும் பறவாயில்லை, ரண்டுபேரும்  துபாயில உள்ளுக்க போற நிலைதான் வரும். உதை விட்டிட்டு வேற எதாவது கதை.”

“உங்கட கப்பல்ல நடக்கிறது உங்களுக்கே தெரியாதண்ணை. போன முறைகூட உங்கட ஒயிலர் செல்வா ரெண்டுபேரைக் கொண்டுபோய் துபாயில இறக்கிவிட்டவன். ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் வேண்டிறான்.”
“அதுக்குத்தானாக்கும் நீயும் ஐயாயிரம் ரூபாய் சேத்து வைச்சிருக்கிறாய்? அப்பிடியெண்டா அவனிட்டயே கேளன்.”

“கேட்டிட்டனண்ணை. அடுத்த முறை கூட்டிக்கொண்டு போறதாய் போன மாசமே ரண்டு பேரிட்ட காசு வாங்கியிட்டனெண்டு சொல்லியிட்டான்.”
“அடுத்த முறை போ அப்ப.”

“இன்னும் ஒண்டரை மாசமிருக்கண்ணை. இந்த நிலமை இப்பிடியே எவ்வளவு காலம் நீடிக்குமெண்டு சொல்லேலாது. வசதி இருக்கேக்கை செய்திடவேணும்.”

பன்னிரண்டு மணியளவில் இருவரும் பாரிலிருந்து வெளிவரும்வரைகூட அந்த வி~யம்பற்றி நடாவுக்கு ஒரு முடிவைச் சொல்லவில்லை கலாபன். “எதுக்கும் நான் ஒருக்கா செல்வாவோட கதைக்கிறன்” என்று மட்டும் அவனை வி.ரி.சந்தியில் இறக்கிவிடும்போது சொன்னான்.

மறுநாள் பகல் செல்வாவிடம் அதுபற்றிக் கேட்டபோது செல்வா பதிலைச் சிரித்தான்.

“பயமில்லையேடா?”

“என்ன பயம்? இவங்கள கண்டதுகூட இல்லை. ஆருக்கும் தெரியாம ஸ்ரோஎவே வந்திட்டாங்களாக்கும், நாங்களென்ன செய்யிறதெண்டு சொல்லவேண்டியதுதான?”

அன்று மாலை நடா மீண்டும் சந்தித்து ஐயாயிரம் ரூபாயையும் கொடுத்து கும்பிட்டபடி நின்று கெஞ்சியபோது கலாபனால் மறுக்கமுடியவில்லை. ‘ஜெஸ்மினை அறுத்துவிட்டாச்சு, இதோட நடாவையும் அறுத்ததாய் இருக்கட்டு’மென்று நினைத்து சம்மதித்துவிட்டான். “ காசு எனக்கு வேண்டாம். இதை உனக்காயுமில்லை, உன்ர கொம்மாவுக்காயும் சகோதரங்களுக்காயும் செய்யிறதாய் வைச்சுக்கொள். கப்பல் நாளைக்கு ரண்டு மணிக்கு வெளிக்கிடுகுது. என்ர வேலைநேரம்தான். நான் கீழ நிக்கவேணும். உன்னை நேரத்தோட அறைக்குள்ள வைச்சுப் பூட்டியிட்டுத்தான் நான் போகவேணும். இருமிக் கிருமி, தும்மி உள்ள இருக்கிறதைக் காட்டியிடாத. நானில்லாத நேரத்தில சிகரட்டும் பத்தாத, கவனம்.”

பதினொரு மணிக்கு மதியச் சாப்பாட்டிற்கு கலாபன் போவதற்கு முன்பே நடா கப்பலுக்கு வந்துவிட்டான். யாரும் கவனிக்காத வேளையில் அவனை உள்ளே விட்டு அறையைப் பூட்டிவிட்டு கலாபன் சென்றான்.

மூன்று மணியாகிவிட்டது கப்பல் புறப்பட. வேலை முடிந்து வந்த கலாபன் அறைக்கு வர ஆறுமணி. அதன் பிறகுதான் பியரும் குடித்து சிகரெட்டும் புகைத்தான் நடா கொஞ்ச நிம்மதியோடு.

பயணத்தின் மூன்றாம் நாள் அது. அதிகாலை நான்கு மணிக்கு ஒரு ரீயும் இரண்டு பாண் துண்டுகளுடனும் வந்து கலாபன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். அப்படியே முகத்திலடித்தது ஒரு வல்லிய வீச்சம். வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. தானே இயல்பலாத நிலைமையைக் காட்டிவிடக்கூடாதென தன்னை அடக்கிக்கொண்டான். ஆத்திரத்தோடு நடாவைநோக்கித் திரும்பினான். கபின் லொக்கருக்கு பக்கத்தில் குறண்டிக்கொண்டு அமர்ந்திருந்த நடா அவனது பார்வையை நேரில் சந்தித்ததும் அழுதான். “அடக்கேலாமப் போச்சண்ணை” என்றான்.

கைகழுவும் பேசினுக்குள்ளிருந்து இன்னும் வீச்சமெழுந்துகொண்டிருந்தது. அராபியக் கடலில் பகலிலே சூடு குறைவாகவும் இரவில் குளிர் அதிகமும் அடிக்கிற காலப்பகுதி அது. கதவைச் சாத்திவிட்டு தண்ணீரைத் திறந்துவிட்டான் அதன் முழு வேகத்தில். இருந்தும்தான் வீச்சம் குறைந்தபாடாயில்லை. அதுவே கபினில் களவாக ஆளைக் கடத்திவருவதை வெளிப்படுத்திவிடக் கூடியது. பின்னால் போர்ட் ஹோலை விரியத் திறந்துவிட்டான். அமுங்கி வீசிய காற்று உள்ளே வரப் பஞ்சிப்பட்டது. அது போதாதென்று, வீட்டுக்குக் கொண்டுபோகவென வாங்கிவைத்திருந்த விலைகூடிய வாசனை ஸ்பிறேயை எடுத்து பேசின் வாய்க்குள் சீறவைத்து, அறைக்குள்ளும் நன்கு அடித்துவிட்டான்.

சொல்லவும் எதுவுமிருக்கவில்லைப்போல், செய்யவும் எதுவும் இருக்கவில்லை. கப்பல் துறைமுகத்தை அடைய இன்னும் சுமார் இருபத்து நான்கு மணி நேரங்கள் இருந்தன. ‘பாவம் பாத்துச் செய்தது. முருகா, நீதான் காப்பாத்த வேணும்’ என்ற பிரார்த்தனையோடு கலாபன் படுத்தான். அவன் கொடுத்த ரீயும் பாணும் வெகுநேரமாய் நடாவின் பக்கத்திலேயே இருந்துகொண்டிருந்தது.

மறுநாள் மாலை நான்கு மணிக்கு கப்பல் துறைமுகத்தை அடைந்தது. அறையைத் திறந்து வைத்துவிட்டுச் செல்வதாகவும், கதவை உள்ளே கொளுவி வைத்திருக்கும்படியும், கப்பல் துறைமுகத்தில் கட்டிமுடிந்து வெளியாட்கள்  வந்துபோய்க்கொண்டிருக்கும் ஆரவாரமான நேரத்தில் இறங்கிப் போய்விடும்படியும் நடாவிடம் சொல்லியிருந்தான் கலாபன். கப்பல் கட்டப்பட்டு நீண்டநேரம் துறைமுகத்தைப் பார்த்தபடி நின்று பொழுதைக் கழித்துவிட்டு கலாபன் அறைக்கு வந்தான். கதவைத் திறப்பதான ஒரு பாவனை காட்டிவிட்டு உள்ளே சென்றபோது நடா அங்கில்லை. கலாபனுக்கு அப்போதுதான் நிம்மதி வந்தது. அதற்கு மேலேதான் அவன் குளிக்கச் சென்றது.
அன்று இரவு படுத்தபோது சந்தோஷமும் ஜொனிவோக்கருமாய் இரண்டு போதைகள் கலாபனுக்கு. பத்து மணிக்கு மேலாகிற சமயம் படுக்கையில் சரிந்தான். உறக்கம் கண்களை அழுத்துகிற நேரம், நடைபாதையெங்கும் தொம்… தொம்மென அதிரடிகள் எழுந்ததில் திடுக்கிட்டு கண்திறந்தான்.

அதேவேளை கதவு படார்படாரெனத் தட்டப்பட்டது. அது கப்பலில் வேலைசெய்பவர்கள் யாரும் தட்டுகிற சத்தமில்லை. அதிகாரம் ஒலியில் கொடிகட்டியிருந்தது. கலாபனுக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுவிட்டது. ‘நடா பிடிபட்டிட்டான்’ என்றே எண்ணிவிட்டான். எழுந்து நடுங்குகிற கைகளினால் கதவைத் திறந்தான்.

வெளியே துபாய் பொலிஸ். கையில் நீண்ட கம்புடன் அராபிய உடையணிந்த துறைமுகப் பொலிஸ். அது சாதாரண பொலிஸ{ம் அல்ல, போதை வஸ்து கடத்தல் தடுப்பு இலாகா பொலிஸ்.

“நீ தனியத்தான் தங்கியிருக்கிறாயா?”

கலாபன் ஆமென்றான்.

“வெளியே வரக்கூடாது. வெளியிலிருந்து யாரையும் உள்ளே விடவும்கூடாது.”
பொலிஸ் அடுத்த கபினுக்குப் போனது.

கலாபன் சிகரெட் எடுத்துப் பற்றவைத்தான்.

கீழ்த் தளத்திலேதான் சந்தடி அதிகமாக இருந்தது.

அறைக்குள் இன்னுமே மெதுவாக இழைந்துகொண்டிருந்த மலநாற்றத்தை வந்த பொலிஸ் அறிந்திருக்குமா? நடா பிடிபட்டிருந்தாலும் கூட்டிவந்தது யாரென்று சொல்லாமலிருப்பானா? அவன் இயந்திர அறையில் தானாகவே ஒளிந்துவந்ததாகக்கூடச் சொல்லலாம். ஏதும் பிரச்னை ஏற்படுகிற சமயத்தில் அவ்வாறுதான் சொல்லவும் அவன் கூறியிருந்தான். நடா பொய்யை தீர்க்கமாய்ச் சொல்லுவானா? அல்லது துணைக்கு தெரிந்த ஒரு ஆள் வரட்டுமென்று உண்மையையே சொல்லுவானா?

நேரம் போய்க் கொண்டிருந்தது. இரண்டாம் பொறியாளரது அறைக்கு மெதுவாகச் சென்று பார்த்தான். அவர் ஜொனிவோக்கருடன் நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தார். “செகண்ட், என்ன நடந்தது? ஏன் பொலிஸ் வந்தது?” கலாபனது கேள்விக்கு இரண்டாவது பொறியாளரிடம் பதிலில்லை.
கீழே சென்று பார்த்துவருவதாகச் சொல்லிவிட்டு கலாபன் இறங்கினான். அப்போதுதான் கப்பலின் முன்னால் துறைமுக மேடையிலிருந்து  பொலிஸ் வாகனங்கள் சில உறுமியபடி புறப்பட்ட சத்தம் கேட்டது.

அந்தளவில் கீழ்த் தளத்திலும் கபினுகளிலிருந்து ஊழியர்கள் வெளியேவந்து ஒருவரோடொருவர் கதைத்துக்கொண்டு நின்றனர். நடாவின் பிரச்னைக்காக அந்தக் களேபரம் எழுந்திருக்கவில்லையென ஏதோவொன்று கலாபனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தது. கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.

அப்போது கப்ரினின் கபினிலிருந்து பொலிஸ் உயரதிகாரிபோல் தோன்றிய ஒரு அராபியர் கீழே வந்தார். சிறிதுநேரத்தில் அவரது வண்டியும் புறப்பட்ட சப்தம் எழுந்தது.

பின்னர்தான் கப்பரின்மூலமாக, இரண்டாவது பொறியாளருக்கும், பின்னர் றேடியோ அலுவலருக்கும் பின் சாதாரண ஊழியர்களுக்கும் பிரச்னையின் வேர் தெரியவந்தது. கப்பலில் கொண்டுவந்திருந்த கஞ்சாவை வெளியே யாரிடமோ கொடுக்கப் போய்க்கொண்டிருந்த செல்வா கைதுசெய்யப்பட்டிருந்தான். கேட்டு கலாபன் திகைத்துப்போனான்.
மெதுமெதுவாக எல்லாரும் படுக்கச் சென்றனர். கலாபனும் சென்று படுத்துக்கொண்டான்.

அது பிரச்னை ஓய்ந்திருந்ததின் அடையாளம்தான். ஆனால் தீரவில்லை. தீருகிற பிரச்னையுமல்ல அது. மறுநாள் காலையில் அதன் விஸ்வரூபம் தெரிந்தது.

கடத்தல் கப்பலென்று கப்பல் தடுத்துவைக்கப்பட்டதோடு, அனைவரும் ஒட்டுமோத்தமாக திருப்பியனுப்பப்படவிருந்தனர். இயந்திரங்களைப் பராமரிக்க கப்பலிலே தங்க முடியுமா என கம்பெனி கேட்டபோது கலாபன் தயங்காமல் சம்மதித்தான். கலாபனையும், மேல் தளத்தைப் பராமரிக்க, கலாபனுக்கு உதவியாகவென ஒருவரையும் தவிர இருபத்து நான்கு மணிநேரத்தில் அனைவரும் திருப்பியனுப்பப்பட்டனர்.  கப்பலும் தனியிடத்தில் இழுத்துச் சென்று கட்டப்பட்டது.

வெளிச்சமற்ற கப்பல் பேய் உறைந்த கப்பல்போல் பகலிலும் மௌனம்பூண்டிருந்தது. இரவு பயங்கரம் செய்தது. கடகடவென எப்போதும் ஒரு இரைச்சலைக்கொண்டிருந்த கப்பலில் தூங்கிய இருவருக்கும் கப்பலின் ஓரத்தை வந்து மோதிய சிறு அலைகளதும் பெருஞ்சத்தத்தில் தூக்கமும்வர மறுத்தது.

சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு துறைமுகத்துக்கு வந்தும் போயும்கொண்டிருந்த கப்பல்களைப் பார்த்தபடி மூன்று மாதங்களைக் கழித்தான் கலாபன்.

பதிதாக துறைமுகம் வரும் கப்பலெதிலாவது இலங்கைத் தமிழர் யாரேனும் வேலைசெய்கிறார்களா எனக் கவனிப்பதும், இருப்பதாகத் தெரிந்தால் அவர்களைச் சிநேகம்கொண்டு அவர்களோடு கப்பலுக்குச் சென்று குடிப்பதும், அங்கிருந்து பிளே போய், பென்ற் ஹவுஸ் போன்ற சஞ்சிகைகளை எடுத்துவந்து பகல் முழுதும் பார்த்தும் படித்தும் பொழுதைப் போக்காட்டுவதுமான அந்த வேலை நாளடைவில் கலாபனுக்கு அலுத்துப் போய்விட்டது.

அவன் கம்பெனிக்கு விலகல் கடிதம் எழுதினான். ஒரு மாதத்துக்குள் தன்னை தன் நாடு அனுப்புமாறு அதில் கேட்டிருந்தான்.

00000
 
தாய்வீடு, செப்.2015

No comments:

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...