Saturday, September 19, 2015

உண்மையைத் தேடுதல்\ சாளரம்:3தேசாந்திரிபக்கத்து வீட்டிலிருந்து லீசாவோடு வெளியே வந்த ரோனி என் வீட்டுக்கு முன்னால் வந்ததும் லீசாவின் இழுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டு வழக்கம்போல் சற்றுநேரம் அதிலேயே தாமதித்து நின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நாய் என்னை நன்கு அறி
ந்திருந்தது. மாலையில் உலாத்துகைக்காக அழைத்துச் செல்லும்போது வந்து ஒரு முறை என் கால்களை மணந்து பார்த்தும், என் முகத்தில் முகர என்மீது தாவ முயன்றும், தன் காலை என் கையில் போட்டு குசலம் விசாரித்தும்விட்டு அப்பால் செல்லுகிற நாய் அது. லப்ராடர்  இனம். மஞ்சள் கலந்த தவிட்டு நிறத்தில் இரண்டடி உயரத்தில் மிக அழகாக இருந்த ஆண் நாய்.

சிலநாட்களுக்கு முன்னால் ஒரு மாலை நேரத்தில் உலாத்துகை வெளிக்கிட்ட ரோனி என் வீட்டுக்கு முன்னால் வந்ததும் நின்றது. சற்று இருட்டாக  இருந்ததால் என்னைக் காணாமல்தான் தேடுகிறதோவென நினைத்து அசைவைக் காட்டினேன்.

உள்ளுக்குள்ளாய் என்னோடு தன் நாய்க்கிருக்கும் நட்பை விரும்பாத லீசா முடிந்தவரை முயன்று ரோனியை அப்பால் இழுத்துச்செல்லவே அப்போதும் முயன்றுகொண்டிருந்தாள். ஆனால் என் அசைவைக் கண்டுகொண்ட நாய் வழக்கம்போல குழைந்துகொண்டு வில்லங்கமாக அன்றைக்கு முன்னுக்கு வரவில்லை. அப்படியே சிறிதுநேரம் நின்று என்னைக் கூர்ந்து பார்த்தது. பின் திடீரென பெருந்தொனி எழுப்பிக்கொண்டு லீசாவையும் ஒரு வெறியில்போல் இழுத்தபடி என் மீது பாய வந்துவிட்டது. நான் அலறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடி கதவைச் சாத்திக்கொண்டேன்.

‘சாரி’ சொல்லிவிட்டு லீசா நாயை இழுத்துக்கொண்டு அப்பால் சென்றாள். அதற்கும் எனக்குமுள்ள உறவு அன்றோடு முடிந்துவிட்டதில் லீசா மகிழ்ச்சியடைந்திருக்கக் கூடும். என் எதிர்ப்புறத்துக்கு முகத்தைத் திருப்பிக்கொண்டு அவள் சென்றது  தன் முகவிலாசத்தை மறைப்பதற்காகவே இருக்கலாம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கும் தனக்குமுள்ள உறவு உடைந்த பாரதி நோய்வாய்ப்பட்டதுபோல் எனக்கு ஆகவில்லையென்றாலும், ரோனியின் நட்புடைவு என்னை சிலநாட்களாக அந்த நேரத்திலென்றாலும் வருந்தவே வைத்தது. ஆனாலும் சில மனிதர்களைப்பற்றி யோசித்தபோது ரோனியின் திடீர் மனமாற்றமொன்றும் நீண்டகாலம் என்னைப் பாதித்ததாகச் சொல்லமுடியாது.

மனிதர்களும் அவ்வாறுதான். கூடிக்கூடிக் கதைக்கிறார்கள். குசலம் விசாரிக்கிறார்கள். நட்பொழுக சிரித்து காப்பியோ, மதுவோ சேர்ந்து அருந்துகிறார்கள். பின்னொருநாள் எங்கிருந்தோ அவர்களது உறுமலொலி கேட்க திகைத்துப்போக நேர்கிறது. சிலர் அந்த சூழ்நிலையிலிருந்து குரலும் கேட்காத தொலைவுக்குக் காணாமலே போய்விடுகிறார்கள். தொலைபேசி அழைப்புக்களும் இல்லை. அழைப்பவற்றுக்கு பதில்களும் இல்லை. இத்தனைக்கும் இவர்களுக்கு ஆறறிவு என்கிறது மனிதநூல் வேதம். ரோனியை நான் இலகுவாக மன்னிக்க முடியும்.

எங்கேயும் மனிதர்கள் இவ்வாறுதான் இருக்கிறார்களென்று நினைக்கத் தோன்றுகிறது. இதிலுள்ள விஷயம் என்னவென்றால் கூடும்போது பேசிய
பேச்சுக்களின், காட்டிய வீரங்களின் மறுதலையான நடத்தையே இவர்களின்
ஒளிவுக்குக் காரணமென்று பின்னால்தான் தெரியவருகிறது. உலகமே ஒரு
விரக்தி மண்ணடலமாய்த் தெரிகிறது. எங்காவது ஓடிவிடலாமென்று
தோன்றுகிறது. அவ்வாறுதான் பலதடவைகளிலும் என்னை நான்
தொலைத்திருக்கிறேன். தன்னைத் தொலைத்துவிட்டிருத்தல் என்பது ஓர் பரமானந்த விஷயம்.

பயணம் என்பதற்கு தொடங்குவதற்கிருப்பதுபோல் முடிவுமிருக்கும். எல்லை குறித்துத் தொடருவதே பயணம். பிரயாணி என்பதும், பயணி என்பதும் ஒன்று. ஆனால் தேசாந்திரி வேறு. தேசாந்திரியாகத் திரிபவனே ஒன்றைக் கண்டடைகிறான். அல்லது தேடலைச் சென்றடைகிறான். தன்னைத் தொலைத்தலென்பது ஏறக்குறைய தேசாந்திரித் தனமானதுதான். குறிப்பற்ற அலைதலும், சாத்தியமற்ற வெளி கடப்பும், அசாதாரணமான அனுபவங்களும் தேடியும் கிடைப்பதில்லை.

கையிலிருந்து நழுவியோடுகிறது ஒற்றைக் காசு. பாத்திருக்கிறான் உருட்டிவிட்டவன். கீழே கிடந்த குத்திக்காசை எடுப்பதற்குத்தான் மனிதர்களில் எத்தனை எச்சரிக்கைகள்! எத்தனை பாசாங்குகள், நடிப்புகள்! யாரோ ஒருவர் அதை எடுக்கவே செய்கிறார். பணத்தை உருட்டிவிட்டு தன்னை மறைத்திருக்கும் அவன் அதில் அடைவது ஞானம். சுத்த ஞானம்.

சித்தன் ஏன் வனமோடினான்? தேடலிலா, ஒதுங்கலிலா? இரண்டுக்குமாகவேதான். கயிற்றை பாம்பென்று நினைக்காமலிருக்க ஓடினான். பாம்பை பாம்பாகத் தரிசிக்கவும் அந்த ஓட்டம் தேவையாகவிருந்தது. அவன் ஒருமனப்பாடடைந்து அடைந்தால் ஞானம், இல்லையேல் அபவாதம் ஆகட்டுமென்றுதான் ஓடத் தொடங்குகிறான். ஞானம் அடையப் பெற்றிலனேல் மீண்டும் ஓடுகிறான். ஓட்டத்தில்தான் எத்தனை அனுபவங்களின் சித்தி! ‘பறத்தி போகம் வேறதோ?’ என்று கேட்க ஞானத்தால் முடியாது. போகியால் மட்டுமே முடியும். கேட்டால்தான் போகி யோகியாக மாறுகிறான். வாழ்க்கை இப்படித்தான் ஒரு சுழல்வில் இருக்கிறது. போகமும் யோகமும், ஞானமும் அஞ்ஞானமும்… ஒன்றையொன்றின் அடுத்த புறங்கள்.

நடப்பவனுக்கு தூரமே காலமாகித் தெரியும்போது, இருப்பவனுக்கு காலமே தூரமாகித் தெரியும். போகி நடக்கிறான். யோகி இருக்கிறான். இரண்டுக்குமே தமிழில் அடையாளங்களுண்டு. யோகியாக பிள்ளையாரையும், போகியாக ஒளவையையும் சொல்வார்கள். ஒன்றும் பேசாமலிருப்பவனை கல்லுப் பிள்ளையார் மாதிரி இருக்கிறான் என்கிறார்களே அதனால்தான். கல்லுப் பிள்ளையார் எப்போது பேசாமலிருந்தார்? அது பேசியது. ஆனால் புரியத்தான் அவர்களால் முடியவில்லை. கல்லுப் பிள்ளையார் யோகி. ஞானத்தின் வடிவம். இருந்தபடி எல்லாம் அறிந்த சொரூபம். ஒளவை ஞாலம் முழுக்க ஓடித் திரிந்தவள். பல அரசரிடையேயும் சந்து போனவள். போர்களைத் தவிர்த்தவள். ஞானத்தை தேசாந்திரியானதில் அடைந்தவள். கல்லுப் பிள்ளையாரின் மறுபுறம் ஒளவை. எதிரெதிரும்  ஒவ்வொன்றினதும் மறுபுறம். மறுபுறமே எதிர்ப்புறம்.

ரோனி நன்றாகவே இருந்தது. ஆனாலும் அதன் இருப்பு மறுபுறத்தில். நண்பர்களாயிருந்தவர்களும் நன்றாகவே இருந்தார்கள். ஆனாலும் என்னின் மறுபுறத்திலேயே அவர்களின் இருப்பு இருந்துவிட்டது. நண்பர்கள் செய்தது பயணமாகவே இருந்திருக்கிறது என்பது இப்போது புரிகிறது. ரயில் பயணத்துப் பயணிகளிடையே சந்திப்பு, சிரிப்பு, கதை பேச்சு எல்லாம் இருக்குமே, அதுபோன்ற ஒரு தொடர்பாடல். இலக்கு வந்தபோது பயணிகள் காணாமல் போனார்கள். தேசாந்திரி இலக்கற்றவன். அலைந்துகொண்டே இருக்கிறான். பயணிகளைத் தேடுவதுதான் அந்த நிலையில் அபத்தமாய் இருக்கிறது. தேடாமலிருப்பதே அந்த இடத்தில் விலகுதல்.

புரிகிறபோது ஞானம் வருவதுபோல் தெரிகிறதல்லவா?

‘ஒவ்வொரு நாளும் என் வாழ்வை வார்த்தைகளில் வடித்திடுவதற்கான முறைமையும், சூக்குமத் தன்மையுமே அவமானத்தையும், விரக்தியையும் நான் எதிர்கொள்ள உதவியுள்ளன’ என்ற கிரிகோரி டேவிட் ராபேர்ட்ஸின் வாசகமொன்று கொஞ்ச நாட்களாக என் மனத்தே ஓடிக்கொண்டிருந்தது. அவுஸ்ரேலிய சிறையிலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த ராபேர்ட்ஸ், அங்கேயும் ஒரு திருடனாக, பாதாள உலக காரியங்களைச் செய்பவனாக எண்பதுகளில் வாழ்ந்திருக்கிறான். அவன் எழுதியதே மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட நாவலாகிய ‘சாந்தாராம்’. இந்த ஞாபகம் வந்ததுமே ஒரு காலையின் முப்பது நிமிட நேரங்களில் முதல்நாளைய நிகழ்வுகளின், நினைவுகளின் பாதிப்பில் எழுகின்ற மனநிலையைப் பதிவுசெய்தால் எப்படியிருக்குமென்று பார்க்க விரும்பியதன் எழுத்துருவாக்கம்தான் இந்த மாதச் சாளரத்தினூடாக விரிந்திருக்கும் என் தரிசனம். எல்லோர் வாழ்வும் ஒருபோல் இல்லை. இது ஒரு பரீட்சார்த்தத்துக்குச் செய்ததுதான். ஆனாலும் அதில் விஷயம் மட்டுமில்லை, ஞானமுமே உண்டு. ஞானம் கிடைக்காவிட்டாலும் விரக்திக்கும் வாழ்வுக்குமிடையிலான தூரத்தை அது குறைக்குமாயிருந்தாலும் லாபம்தான்.

00000

இ-குருவி, செப்.2015
No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...