அதை அதுவாக 1 (தேர்ந்த குறள்கள்)





திருக்குறளைச் சங்க மருவிய காலத்ததென்று தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் வரையறை செய்துள்ளார்கள். அதைச் சங்க காலத்தது என எண்ணியிருந்த சிறுவயதுக் காலத்திலிருந்தே அதன்மீது காரணமறியாப் பிடிப்பிருந்தது என்னிடத்தில். அதை நீதி நூலென்று அறிந்திருந்த போதும்தான் அப் பற்று. அதனால்தான் 1965இல் பண்டிதர் கா.பொ.இரத்தினத்தின் திருக்குறட் சங்கம் கிளிநொச்சியில் நடாத்திய திருக்குறள் மகாநாட்டுக்கு சாவகச்சேரியிலிருந்து முப்பது கல் தூரத்தைச் சைக்கிளில் சென்றுசேர்ந்து கண்டும் கேட்டும் மகிழமுடிந்திருந்தது.
அதை மேலும் வளர்ப்பதுபோல்தான் என் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு தமிழ்ப் பாடத் திட்டத்திலும் திருக்குறள் அறத்துப்பாலின் முப்பது அதிகாரங்கள் இடம்பெற்றிருக்க, அவற்றையும் விருப்பத்தோடு கற்றுத் தீர்த்தேன். அதனால் பரிமேலழகர், இளம்பூரணர் உரைகள் தொடங்கி, நாமக்கல் கவிஞர், மறைமலை அடிகள் உரைகள் ஈறாக, பின்னால் டாக்டர் மு.வரதராசன், சுஜாதா, சிற்பி, சாலமன் பாப்பையா உரைகள்வரை தேடிப் படிக்கும் பழக்கம் எனக்கு வசமாகிப்போனது.

இலக்கிய உலகில் திருக்குறள் இலக்கியமா, நீதி நூலா என்ற வாதப் பிரதிவாதங்கள் தீர்க்கப்படாதிருந்தபோதும், அதை இலக்கியமாக நான் நம்ப ஆரம்பித்தது அதன் விளைவானதுதான்.
பின்னால் எனக்குள்ளாகவே கேள்வி: உரைகாரர் சொல்லிய பொருளையே வள்ளுவனும் கருதியிருப்பானா? உரைகாரர் தெளிவுரைகாரர் இன்றி திருக்குறளைப் புரிய முடிந்த கணத்திலிருந்து இத் தாக்கம் ஏற்பட்டதாய்ச் சொல்ல முடியும். இவர்களின் பாதிப்பின்றி, ஒப்புக்கொள்ளப்பட்ட காலம், மறைப் புனித மரபுகள் போன்றனவற்றின் செல்வாக்கினுக்கு ஆட்படாதிருந்து அதனை அதுவாகவே பார்க்க முற்பட்ட முயற்சியின் விளைவே ‘உள்ளது உணர்ந்தபடி’ என்ற இக் குறள்த் தேர்வுத் தொகுப்பு.

என் மொழியில், என் பார்வையில் உரைகாரர், பண்டிதர்களை மறுத்தும் திருத்தியுமாய் திருக்குறளில் நான் விரும்பும் சில குறள்களுக்கு இங்கே நான் சொல்லப்போகும் விளக்கம் ஒருவகையில் இன்றைய இளைய சமுதாயத்துக்கான என் சமர்ப்பணமே. இருபது வயதில் ‘கலித்தொகைக் காட்சிகள்’ என்ற தொடர் கட்டுரையை நான் ஈழநாடு தமிழ்த் தேசிய இதழ் வாரமலரில் எழுதியதற்குப் பிறகு என் செவ்விலக்கியம் சார்ந்த எழுத்துப் பிரவேசம் மறுபடி இப்போதுதான் நிகழ்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னரே இம் முயற்சியை நான் தொடங்கியிருந்தாலும், இப்போதுதான் தீவிரமாய் இறங்க முடிந்திருக்கிறது. இதன் ஆரம்ப கட்ட முயற்சியின் சில குறள்கள் சென்னை.கொம் என்ற இணைய தளத்திலும், ‘வள்ளுவம்’ இதழிலும் வெளிவந்திருந்தன என்பதை இங்கே நான் குறிப்பிடுவது அவசியம். முன்னதற்காக நண்பர் திரு. சூரியசந்திரனுக்கும், பின்னதுக்காக திரு.பல்லடம் மாணிக்கத்துக்கும் என் நன்றி உரித்து.

நான் கனடா வந்தபிறகு வைகறையில், சிதைவும் கட்டமைப்பும்’ என்ற கட்டுரை முடிவுற்ற பின்னர் இருபத்திரண்டு அத்தியாயங்கள் எழுதினேன். ஏறக்குறைய அறுபது அல்லது எழுபது குறள்கள் வரலாம். மீதியான குறள்களுக்கு என் உணர்வை எழுதிய பக்கங்கள் இன்னும் என் கைவசம் உண்டு. முடிந்தால் அவற்றையும் இதில் சேர்ப்பேன்.



(1)

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

(பாயிரம், வான்சிறப்பு-7) குறள் 7
0

வானம் பெய்யாதுவிட்டால் பெருஞ்சமுத்திரமும் வற்றிப்போகும்.
00




கடல் குன்றுவதுமில்லை, மிகுவதுமில்லையென்பது அக்கால நம்பிக்கை.
‘கடல் கொளக் குறையாது, புனல் புக மிகாது இரங்கு முந்நீர்’ என்னும் சங்கப் பாடலொன்று.
மேகம் நீரை ஆவியாய்க் கொண்டாலும், மழையாய்க் கொட்டினாலும் கடலில் மாறுதல் நிகழ்வதில்லையென்பது இந்த அடிகளின் அர்த்தம்.
அப்படியிருந்தும் கடல்கூட அல்ல, பெருஞ்சமுத்திரமே தன் தன்மையை இழக்கும் என்கிறான் வள்ளுவன்.

நீர்மையென்பது இயல்பு.
கடலின் இயல்பாவது யாது? அழகும், அகற்சியும்.
பனிக்குக் குளிர், நெருப்புக்கு வெப்பம்…. இவைதான் நீர்மை.
அந்த நீர்மையே குன்றுமென்பது ஒருவகையில் ஒரு காலகட்டத்தில் விளங்கிய நம்பிக்கையது உடைப்பு.

கலைஞன் சமூகத்தோடு ஒட்டியுமிருப்பான், சமயங்களில் அறுத்துக்கொண்டு தனியாகவுமிருப்பான்.
தனியாக இருப்பதே படைப்புக் கணம்.
வுள்ளுவனின் படைப்புக் கதி இந்தப் பாடலில் இப்படி ஒரு உடைப்பைச் செய்கிறது.

கடல் நகர்கிறது முன்னோக்கியோ பின்னோக்கியோவாக.
நவீன விஞ்ஞானம் இதை எண்பிக்கிறது அளவைகளினூடாக.
இதையே வேறொரு புரிதலில் சொன்னால் கடல் பரக்கும் அல்லது சுருங்கும் என்றாகும்.
அது, கடல் குறைவுபடுமென்பதின் இன்னொரு மொழியே.
ஆழம் மாறாமல் அகலிக்கவோ சுருங்கவோ முடியாது.
அதுவே இந்த நம்பிக்கையுடைப்பின் ஆதாரம்.
000




(2)

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

(பாயிரம், நீத்தார் பெருமை – 9) குறள் 29
0

நல்ல பண்புகளாகிய மலையிலே ஏறிநிற்கும் குணவான்கள் ஒரு கணமே வெகுட்சியடைந்தாலும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் கடினமானது.
00



சினத்தை ‘சேர்ந்தாரைக் கொல்லி’ (குறள் 306) என்பான் வள்ளுவன்.
திருக்குறளில் சினம் எங்கெங்கும் கடிந்துரைக்கவே பட்டிருக்கிறது.
‘ஆறுவது சின’மென்று சொன்னது அவ்வை.
பாரதியோ ‘ரௌத்திரம் பழகு’ என்றான்.
இந்த பழமையினதும், நவீனத்துவத்தினதும் முரண்களால் சினமென்பது உண்மையில் நல்லதா கெட்டதா என்ற அய்யம் எவருக்கும் எழுதல் இயல்பு.

சினம் நல்லதல்லத்தான். அதேவேளை ரௌத்திரமும் பயில்வுக்குரியதே. அதெப்படி?

ஒருகாலகட்டத்தில் விளங்கும் ஒரு சொல் , இன்னொரு காலகட்டத்தில் பொருள் வேறுபட்டும் திரிந்தும் வழங்குதல் மொழியியல்பு.
காதலென்ற உணர்வைக் குறிக்க சங்க காலத்தில் வழக்கத்திலிருந்த காமம் என்ற சொல், இன்றைய காலத்தில் பொருள் இழிந்து விளங்குதல் இப் பொருள் வேறுபாட்டுக்கு நல்லதொரு உதாரணம்.

வள்ளுவன் சினமென்றும், வெகுளியென்றும் பலவிடங்களிலே குறிப்பிட்டிருக்கிறான்.
சினம் கெட்டதாகவும், வெகுளி பெரும்பாலும் ஏற்கக்கூடியதாகவுமே அர்த்தம் பெற்றிருக்கிறது குறள்களில்.
எண்வகை மெய்ப்பாடுகளில் வெகுளி ஒன்று என்கும் தொல்காப்பியம்.
சினம் மெய்ப்பாடாய் எண்ணப்படுவதில்லை.
சினத்தை இப்போதைய பொருளில் கோபம் என்றும், வெகுளியை ரௌத்திரம் என்றும் நாம் அர்த்தப்படுத்திக்கொண்டால் முரண் தோன்றாது.

000

(அடுத்த வாரம் தொடர்வேன்)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்